Skip to content
Home » யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்

ஜெயமோகன்

அன்பிற்கினிய தருமராஜ்,

வணக்கம். தங்களின் கிராமத்தானைக் கொல் கட்டுரையைப் பலமுறை வாசித்த பின்பே எழுதுகிறேன். நீங்கள், ஒரு நாட்டுப்புற ஆய்வாளர். நாட்டுப்புற ஆய்வியலைக் கள அரசியலாகப் பார்ப்பதை அல்லது கள அரசியலாக்குவதை விரும்புபவர். அவ்வகையில், நாட்டுப்புறக் களச்செயல்பாட்டாளரும் கூட. நாட்டுப்புறவியல் ஆய்வை ஒட்டி மேல் நகர்ந்திருக்க வேண்டிய கட்டுரை ஏனோ தமிழிலக்கிய ஆளுமைகளைத் தட்டையாகப் பதம் பார்த்துத் தன் தரத்தில் இருந்து கொஞ்சம் சறுக்கி விட்டதோ என ஊகிக்கிறேன்.

பண்பாட்டுப் பின்புலத்தில் தொன்மங்களை வியக்கும் ஒருவர் சாதி அல்லது மதப்பெருமிதங்களுக்குச் சென்று சேர்கிறார் என்பதான தங்களின் வாதம் ஒருகோணத்தில் ஏற்புடையதே. என்றாலும், அடிப்படைவாதிகளைப் போல ஜெயமோகன், சாரு, எஸ்.ரா, கோணங்கி போன்றோரைச் சித்தரித்திருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. அவர்கள் கலைஞர்கள் எனும் வகையில் அழகியலைத் தங்கள் அரசியலாகவும், கலைச்செயல்பாடாகவும் கொண்டிருக்கிறார்கள் எனக்கொள்ளலாம் அல்லவா?

இந்தியப் பாமரத்தனம் என்பதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் அரசியல் இந்துத்துவாவுக்கு எதிர்நிலையாகவே தான் ’புரிந்து கொண்ட இந்துமதத்தை’ அறிமுகம் செய்து வைக்கிறார் ஜெயமோகன். அவரின் இந்துமத வியாக்கியானங்களை உள்வாங்கும் ஒருவர் அரசியல் இந்துவாக அல்லது அரைவேக்காடு இந்துவாக ஒருபோதும் நடைமுறையில் ‘மரபுப்பெருமிதம்’ கொள்ள வாய்ப்பே இல்லை. ஒருவர் இந்து எனச் சொல்லிக்கொண்டாலே அவரை அரசியல் இந்துவாகப் புரிந்துகொள்ளுதலை அடிப்படைவாதிகள் செய்யலாம். நம்மைப் போன்றோரே அப்படிச் செய்யலாமா?

இந்துமதத் தொன்மங்கள் தொடர்பான ஜெ, சாரு,எஸ்.ரா உள்ளிட்ட ஆளுமைகளின் கலை ஆக்கங்களை உங்களின் வழி நின்று நீங்கள் விசாரியுங்கள். ஏன், தர்க்க நிலையில் அவர்களைக் காலியே செய்யுங்கள். நான் முழுமனதோடு வரவேற்கிறேன். ஆனால், அவர்களைப் போகிறபோக்கில் ’மடாதிபதிகள்’ முத்திரை குத்திச் சுருக்கி விடுவது சரியான அறிவியல் ஆய்வாகவும் தெரியவில்லை; தேர்ந்த நவீனமாகவும் புலப்படவில்லை.

நவீனத்துவத்தை நோக்கி நகரும் வாசகர்களைப் பாமரத்தனத் தீட்சை அளித்துக் குறுக்கி விடுகிறார்கள் ஜெ, சாரு போன்றோர். இது உங்களின் குற்றச்சாட்டு. நீங்கள் குறிப்பிடும் இலக்கியவாதிகளின் படைப்பாக்கங்களில் பெரும்பாலானவற்றை வாசித்தவன் எனும் முறையில் சொல்கிறேன். எங்கும் அவர்கள் மரபின் வரலாற்றுக் கீழ்மைகளுக்கு வக்காலத்து வாங்கியதாகத் தெரியவில்லை. அதேநேரம், மரபின் வரலாற்றுப் பன்மையைப் புரிந்து கொள்ளத் தூண்டியபடியே இருந்திருக்கின்றனர். இந்துஞானம் எனும் பெயரில் ஒற்றை உண்மையையோ, அதிகார நிறுவனத்தையோ வலியத் திணித்ததில்லை என அறுதியிட்டுச் சொல்ல முடியும்.

ஜெ.,சாரு போன்றோர் தங்களை ஒரு நிறுவனத் தலைவராகவோ, கொள்கைச் சான்றோனாகவோ காட்டிக் கொள்ள எத்தனித்ததில்லை. நீங்கள் அறியாதது அல்ல இது. என்னைக் காட்டிலும் அவர்களை அதிகம் அறிந்தவர் நீங்கள். அரசியல் செயல்பாட்டாளர்கள் முன்வைத்த பொம்மை தாசரை விட, நீங்கள் கண்டுசொன்ன மெய்மை தாசரால் பயன்பெற்றவன் நான். ஆகுதல், மாறுதல் போன்ற தமிழ்ச்சொற்களை முன்னமே அறிந்தவன் என்றாலும் அவற்றின் இலட்சணத்தை உங்களின் தாசர் வழியாகவே உணர்ந்து கொண்டிருக்கிறேன். இன்றும் உங்களையும் ஜெ., சாரு போன்றோரையும் வாசிப்பது என்பது வெறும் வாசிப்பின்பத்திற்காக அல்ல என்பதையும் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

ஓர் அடிப்படைவாத அரசியல்வாதியைப் போல நீங்கள் அவர்களை அணுகி விட்டீர்களோ என ஐயுறுகிறேன். அதனாலேயே, உங்களுக்கு எழுதிக் கொண்டும் இருக்கிறேன். ஜெ, சாரு போன்றோர் முன்வைக்கும் மரபைக் குறித்த விளக்கங்களையும், அவை எவ்வாறு அவர்களால் நவீனமாக முன்வைக்கப்படுகிறது என்பது பற்றியும் நீங்கள் வரும் கட்டுரைகளில் எழுதினால் நன்றாக இருக்கும்.

முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.

9

அன்புள்ள முருகவேலன்,

தமிழிலக்கியச் சூழலில் ஒரு வெகுஜன ஊடுருவல் நிகழ்ந்ததை, நிகழ்வதை நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. ஊடகங்களின் பெருக்கத்திற்குப் பின் இது நிகழ்ந்ததாகச் சொல்லலாம்.

இலக்கியத்தில், வெகுஜனம் என்ற வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் இலக்கிய வாசகப் பரப்பு விசாலமாகியிருக்கிறது என்று நம்பித் தொலைய வேண்டாம். அதனால் தான் வெகுஜனப் பரவல் என்று சொல்லாமல் வெகுஜன ஊடுருவல் என்று குறிப்பிடுகின்றேன்.

இந்த ஊடுருவல், இலக்கியப் பனுவலிலோ அல்லது வாசகப் பரப்பிலோ நிகழ்வதற்குப் பதில், இலக்கியத்தைப் புழங்கும் வழிமுறைகளில் நடந்தது. புழங்குதல் என்று சொல்லும்போது, இலக்கியத்திற்கு அறிமுகமாதல், பயிலுதல், படைத்தல் என்ற மூன்றையும் குறிப்பிடுகின்றேன்.

பல தசாப்தங்களாக இந்த வேலைகளை, நூலகங்களும், சின்னச் சின்ன கூட்டங்களும், எழுத்தாளர்களோடு மேற்கொள்ளும் உரையாடல்களுமே செய்து வந்தன. அன்றைக்கெல்லாம், ஒழுங்கின்மையும் தற்செயலுமே இலக்கியப் புழக்கத்தின் ஆதாரம்.

ஜெயமோகன் பிரஸ்தாபிக்கும் பிறழ்வு நிலை, அதீதம் போன்றவை படைப்பாளிகளின் நுண்ணியல்புகளாக அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன. ஏனென்றால், அவர்கள் எல்லாவகையான நிறுவனச் செயல்பாடுகளுக்கும் எதிராக நின்றார்கள். அத்தகைய கலைஞர்களை நீங்கள் கணிக்கவோ அல்லது அறுதியிடவோ முடியாமல் இருந்தது. அவர்கள் எந்த நேரம், என்ன செய்வார்கள் என்பதை யாரும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அவர்கள் தற்செயலாய் வருவார்கள், தற்செயலாய் எதையாவது செய்வார்கள், தற்செயலாய் காணாமல் போவார்கள். அவர்கள் எழுதுவதும் பேசுவதும் அறுதியிட முடியாத மயக்கத்தைத் தந்தததற்கான காரணம், அவர்கள் தனிநபர்கள் என்பதால்தான்; சில நேரங்களில் அவர்கள் தனியன்கள் தானா என்பதுகூட சந்தேகம்.

இலக்கியத்தில் நடந்ததாகச் சொல்லும் வெகுஜன ஊடுருவல், படைப்பாளிகளை நிறுவனங்களாக மாற்றுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. தமிழில், சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி மற்றும் ஜெயமோகனிடமே இது வெற்றிகரமாக நிகழ்ந்தது. இவர்களின் நோக்கம் இலக்கியப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது. அதன்மூலம் ஒரு நிறுவனத்தைக் கட்டமுடியும் என்று கனவு கண்டவர்கள், இவர்கள். அந்த வகையில், முதலாளித்துவமே அவர்களது முன்மாதிரி. எஸ். ரா. கட்டியெழுப்ப விரும்பும் நிறுவனம், இலக்கணச் சுத்தமான தொழிற்சாலையைப் போன்றது. ஜெயமோகன், பழங்குடித் தன்மை கொண்ட முதலாளித்துவத்தைக் கனவு காண்கிறார். சாருவின் எதிர்பார்ப்போ போலியானவொரு முதலாளியம். கோணங்கிக்கு மனச்சிதைவை அங்கீகரிக்கும் பின்னை முதலாளியம் போதும்.

இதே போன்ற நிறுவனத் தன்மையைத் தமிழில் ஏற்கனவே சிலர் உருவாக்கியிருந்தனர். உதாரணமாக, ஜெயகாந்தன், பாலகுமாரன், சுஜாதா போன்றோரைச் சொல்ல முடியும். அவர்களுக்கும், இவர்களுக்குமான வேறுபாடு எது இலக்கியம் என்ற வரையறையில் இருந்தது. தங்களை நிறுவனமாகக் கருதிய மேற்கூறிய மூவரும், தீவிர இலக்கியம் என்பது தங்களுக்கு வெளியே இருப்பதைக் கண்டு கொண்டவர்கள்; அதையே அங்கீகரித்தவர்கள்; அதற்கான எந்தச் சலுகைகளையும் கோராதவர்கள். அவர்கள் தங்களை வெகுஜன எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படாதவர்கள். ஆனால், இந்த நால்வரிடமும் நடப்பது வெகுஜன ஊடுருவல் என்று சொல்வதற்கானக் காரணம், இவர்கள் வெகுஜன அந்தஸ்தையும் இலக்கிய அந்தஸ்தையும் ஒரு சேரக் கோருகிறார்கள் என்பதால்தான்.

ஒரு பக்கம், படைப்பாளியின் அநிறுவன ஒழுங்கின்மைக்கான சலுகைகளும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இன்னொரு பக்கம் நிறுவனத்தின் லாபங்களும் தேவைப்படுகிறது. இதனாலேயே இவர்களின் அமைப்புகளை தொழுவு என்று அழைக்க விரும்புகிறேன்.

இத்தொழுவங்கள் இலக்கியப் புழக்கத்தை நிர்வகிப்பதையே தனது கவலையாகக் கொண்டுள்ளது. இதனால், கலையின் தான்தோன்றித்தனமும் தற்செயல் தன்மையும் அசாத்தியமும் காணாமல் போகிறது. கலையின் நவீனத்துவத்தை அழிக்கும் காரியத்தை, என்னதென்று அறியாமலேயே இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றபடி, நீங்கள் கோருவது போல, அவர்களிடம் மரபு அல்லது நவீனம் பற்றிய விளக்கங்களோ அல்லது தெளிவுகளோ இருப்பது போல எனக்குத் தெரியவில்லை. என் விமர்சனமெல்லாம் அவர்களது எழுத்து குறித்தது அல்ல; எழுத்து குறித்த அவர்களது நடவடிக்கை பற்றியது.

டி. தருமராஜ்

பகிர:
டி. தருமராஜ்

டி. தருமராஜ்

மானுடவியல், நாட்டார் வழக்கியல், பண்பாடு, வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் இயங்கி வருபவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர். சமீபத்தில், தேர்வாணையாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’, ‘அயோத்திதாசர் : பார்ப்பனர் முதல் பறையர்வரை’, ‘இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?‘ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு : tdharmaraj67@gmail.comView Author posts

1 thought on “யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்”

  1. மெய்யறிவன்

    சமீபத்தில் படித்த ஆகச் செழுமையான இலக்கியப் பார்வை

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *