Skip to content
Home » குறுநிலத் தலைவர்கள் #12 – கோசர்

குறுநிலத் தலைவர்கள் #12 – கோசர்

பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு 

தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய 

நாலூர்க் கோசர் நன்மொழி போல 

வாயா கின்றே தோழி யாய்கழற் 

சேயிலை வெள்வேல் விடலையொடு 

தொகுவளை முன்கை மடந்தை நட்பே

இந்தக் குறுந்தொகை பாடலின் வாயிலாக கோசர்கள் ஊரின் பொது மன்றத்தில் தங்குவது தெரிய வருகிறது. இக்குடியினர் வரிவசூல் செய்யவும், பிறர் இழைத்த குற்றங்களுக்குத் தண்டனை வழங்கவும் இம்மன்றங்களில் தங்கியிருந்தமை தெரிய வருகிறது. இம்மரபினர் பல இடங்களில் புலவர்களால் சிறப்பித்துக் கூறப்படுகின்றனர். இக்கோசர்களின் பூர்வீகம் கொங்கானம் என்றும், துளு நாட்டினர் என்றும் அறிஞர் பூங்குன்றன் கருதுகிறார்.

எம் வெங் காமம் இயைவது ஆயின்,

மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்

கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த

பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்

தோகைக் காவின் துளுநாட்டு அன்ன . . . .

எனும் மேற்கண்ட அகநானூற்றுப் பாடல் வரி கோசர்கள் வசிக்கும் இடத்தைக் கூறும்போது, துளு நாட்டினரின் பசுமையை விளக்குவதும் நோக்கத்தக்கது. மேலும் சோழநாட்டில் இக்கோசர்களின் ஆதிக்கம் பெருகி வருவதைத் தாங்காத கிள்ளிவளவன், இக்கோசர்கள் படையைத் துவம்சம் செய்ததை அகநானூற்று 205ஆம் பாடல் கூறுகிறது.

அகுதி, திதியன், குறும்பியன், ஆதனெழினி, தழும்பன் முதலியோர் கோசர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். முதுகோசர், இளம் கோசர், நான்மொழிக் கோசர், வாய்மொழிக் கோசர், செம்மற் கோசர், நீள்மொழிக் கோசர், ஒன்றுமொழிக் கோசர் என கோசர்கள் புலவர்களால் குறிப்பிடப்படுகின்றனர்.

கோசர் நடுகல்

கோசர்களின் வஞ்சினம்:

சங்கபாடல் வாயிலாக நன்னன் என்ற பெயரில் பல வேளிர் இருந்ததை அறியலாம். அதில் கொங்கு பகுதியை ஆண்ட நன்னன் என்ற ஒருவன் இருந்துள்ளான். அக்காலத்தில் தம் வீரத்திற்கு அடையாளமாகவும், பகை மன்னர்களிடம் மானம் பாராட்டவும் அடையாளமாய் காவல் மரத்தை (ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு மரம் இருந்தது) போற்றி பாதுகாத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கோசர்குடியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருத்தி தன் மசக்கை ஆசையால் இதில் நன்னனின் காவல்மரமான மாமரத்திலிருந்து மாங்கனியைத் தின்ன, பெருங்கோவம் அடைகிறான் நன்னன். இத்துணைக்கும் கோசரும், நன்னரும் பகைகுடியினர் அல்ல. தன் காவல்மரத்தில் கைவைத்தது நன்னனுக்கு மானப்பிரச்சினை ஆகிறது. அவள் கர்ப்பிணி என்பதையும் அவன் மனம் நினைக்கவில்லை,

கோசர்கள் ஒன்றுகூடி அப்பெண்ணின் தவறுக்கு ஈடாய் 99 யானைகள், அவளது எடைக்கு எடை பொன் தருவதாய் கூறி மன்னிப்பு கேட்டும், நன்னன் அப்பெண்ணை இரக்கமில்லாது கொல்கிறான்.

இந்நிகழ்வை குறுந்தொகை பாடல் 292இல் பரணர் ஆவணப்படுத்தியுள்ளார்.

மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை

புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்

கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை

பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்

பெண்கொலை புரிந்த நன்னன் போல

வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை

ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்

பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே.

 இப்பாடல் வழியே நன்னனை ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என வசைபாடியுமுள்ளார் பரணர்.

தன் இனப் பெண்ணைக் கொலை புரிந்ததற்காக நன்னனைப் பழிவாங்க ஒரு சூழ்ச்சியைச் செய்தனர் கோசர்கள். சில பாடல் மகளிரை அஃதை என்ற மன்னனிடம் அனுப்புகின்றனர். அவர்களுக்கு அம்மன்னன் நிறைய யானைகளையும், பரிசுப் பொருள்களையும் தருகின்றான். அவ்வாறு புறப்பட்ட யானைகளைக் கோசர்கள் நன்னனின் காவல் மரமான மாமரத்தில் கட்டி வைக்க ஏற்பாடு செய்கின்றனர். இவ்யானைகள் அந்த மாமரத்தை வேரொடு சாய்த்து விடுகின்றன. இதனால் கோபமுற்ற நன்னன் உடனே கோசர்  மீது போர் தொடுக்க, அப்போரில் நன்னன் உயிர் விடுகின்றான்.

கோசர் சூழ்ச்சி செய்து நன்னனைக் கொன்றதை குறுந்தொகை 73இல் பரணர் குறிப்பிடுகிறார்.

மகிழ்நன் மார்பே வெய்யை யானீ

அழியல் வாழி தோழி நன்னன்

நறுமா கொன்று நாட்டிற் போக்கிய

ஒன்று மொழிக் கோசர் போல

வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே

கோசர்கள் சொன்ன சொல்லை மீறாதவர்கள், தம் இனப்பெண்ணைக் கொன்ற நன்னனை, சூழ்ச்சி செய்து வஞ்சினத்தை நிறைவேற்றினர். அதேபோல், தலைவனை இனி சந்திக்க முடியாது என்று கூறி, உறுதியுடன் சொன்ன சொல்லைக் காப்பாற்றினால், தலைவன் திருமணத்திற்குத் தேவையான முயற்சிகளைச் செய்வான் என்று தோழி தலைவியிடம் தெரிவிப்பதாய் இப்பாடல் உள்ளது.

இந்நிகழ்வு வரலாற்றில் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.

அசோகர் அல்லது அவரது தந்தை காலத்தில் மௌரியரின் படையெடுப்பு தென்னகம் நோக்கி நகர்கிறது. தமிழக அரசுகளைக் கைப்பற்ற விரும்பிய மௌரியர்கள், தனது சாம்ராஜ்ஜியத்தில் மேற்குத் தக்காணத்தின் எல்லைப் பகுதியில் வாழ்ந்த கோசர்களைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். கோசரும் தம் இனப்பெண்னைக் கொன்ற நன்னனைப் பழிவாங்க இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருக்கக்கூடும். கோசர்கள் முதலில் தமிழகத்தின் வடமேற்கு எல்லை வழியாக நுழைந்து நன்னனை வென்று, அவனது பட்டத்து யானையைக் கொன்று, அவனது காவல் மிகுந்த பாழி நகரை வென்று துளு நாட்டைக் கைப்பற்றினர்.

நன்னனை வென்ற கோசர்கள், சேரன் தானைத் தலைவனும், முதிரமலைத் தலைவனுமான பிட்டங் கொற்றனைத் தாக்கினர். இதன்பிறகு கோசர்கள் சோழ நாட்டை அடைந்து அழுந்தூர் வேள் திதியனைத் தாக்கினர். திதியனோ கடும்போர் புரிந்து பகைவரைப் புறங்காட்டச் செய்தான். பின்னர் அக்கோசர்கள் மோகூரைத் தாக்கினர். மோகூர் பணியமறுத்தது.

வம்பவடுகரான வம்பமௌரியர்கள் பெரும்படையுடன் வந்து துளு நாட்டில் அமைந்துள்ள பாழி நகர் கோட்டையில் தங்கியிருந்து தமிழகத்தின் மீது படையெடுக்கத் தயாராகின்றனர். தமிழகத்திற்கு வந்த ஆபத்தினை உணர்ந்த இளஞ்சேட்சென்னி, வம்பவடுகரான வம்பமௌரியர்களைத் தமிழக எல்லையில் இருந்து விரட்டியடிக்க போரில் களமிறங்கினர்.

 எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்

விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி

குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்

செம்ப்புறழ் புரிசைப் பாழி நூறி

வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்

கொன்ற யானைக்….

என்ற அகநானூற்றுப்பாடல் வாயிலாக இதை உணரலாம்.

 இதன்பிறகு வம்பவடுகரான வம்பமௌரியர்கள் துளு நாட்டில் அமைந்துள்ள காவல் மிகுந்த பாழி நகர் கோட்டைக்கு பின்வாங்கினர்.

சோழன் இளஞ்சேட்சென்னி, பாழி நகர் வரை பகைவரைத் தொடர்ந்து சென்று, வம்பவடுகர் தங்கி இருந்த பாழி கோட்டையை தகர்த்து எறிந்து, வம்பவடுகர்களை  அழித்தான்.

காவல் மிகுந்த ‘பாழி’யை வென்ற காரணத்தினால் இச்சோழன் ‘செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி’ எனப்பட்டான்.

ஒரு கர்ப்பிணி பெண் மசக்கையால் உண்ட மாம்பழத்தினால், இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்திருக்குமெனக் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.

மோகூர்

மோகூர்

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊர் மோகூர். இவ்வூரின் தொன்மையான பெயர் கூட மோகூர் என சங்க இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. அன்று இவ்வூர் மோகூர் நாடு என்று அழைக்கப்பட்டது. இந்நாடு அன்று மேற்கே நொய்யல் ஆற்றங்கரை வரையிலும், காங்கேயம் வரையிலும் பரவியிருந்தது. இந்நாட்டை பழையன் என்பவர் ஆண்டு வந்தார். 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும் இப்பகுதியை மோகூர் கூற்றம் என்றே அழைக்கிறது.

‘மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்’

என்றழைக்கப்பட்டது இவ்வூர். இந்த மோகூரை கோசர்கள் தாக்கியதை முன்னர் கண்டோம். அம்மோகூருக்கு அருகே கல் சிறுநாகலூர் எனும் இடத்தில் ஒரு நடுகல் கிடைத்தது. இந்நடுகல்லில் கோசர் பற்றிய ஒரு குறிப்பிடுகிறது. சங்ககால வரலாற்றில் பெரும்பங்காற்றிய கோசர்கள் குறித்து, பிற்காலக் கல்வெட்டுகளில் எங்கும் தகவல்கள் இல்லை. அவ்வினம் சங்ககாலம் பின்பு எங்கே சென்றனர் என்ற தகவலும் இல்லை. முதன்முதலாக இக்கல்வெட்டிலேயே கோசர் குறித்த தகவல் ஒன்று கிடைக்கிறது.

கல்வெட்டில் கோசர்

 கள்ளக்குறிச்சி மாவட்டம் கல் சிறுநாகலூர் எனும் ஊரில் பழம் நடுகல் ஒன்று காணப்படுகிறது. எழுத்தமைதி கொண்டு இதனை 7ஆம் நூற்றாண்டு எனப் பதிவு செய்துள்ளனர். இந்நடுகல்லின் எழுத்தமைதி இன்னும் சற்றுப் பழமையாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. விழுப்புரம் மாவட்ட கோழிநடுகற்கள் எழுத்தமைதியை இவ்வெழுத்துகள் ஒத்துள்ளன. முழுமையான வட்டெழுத்து எழுத்து வளர்ச்சியடையும் காலத்திற்கு முந்தைய (தமிழி-வட்டெழுத்து) காலமாய் இருக்கலாம் என, அதாவது 5ஆஅம் நூற்றாண்டாய் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. இந்நடுகல் மிகச் சிறப்பான ஒரு தகவலைத் தருகிறது. சங்ககாலத்தில் புகழ்பெற்ற தொன்மக்குடியான கோசரையும், மழவரையும் இந்நடுகல் அடையாளப்படுத்துகிறது. பல்லவர்களின் ஆதிக்கம் இப்பகுதியில் நிலைபெரும் முன் இந்நடுகல் எழுப்பப்பட்டுள்ளது, இதன் பழமைக்கு ஒரு சான்று. இந்த இரு பெரும் சங்ககாலக் குடியினர்.பெரும்படையுடன் ஊரன் இருக்கை (இன்றைய கல் சிறுநாகலூர்) என்ற ஊரில் புகுந்து போரிட, திருக்கோவிலூரை சேர்ந்த குமரன் என்ற வீரன் எதிர்சமர் புரிந்து இறந்துபட அவருக்கு எழுப்பிய நடுகல்லே இது.

ஒருவேளை இந்நடுகல் சங்ககாலத்தில் நிகழ்ந்த கோசரின் படையெழுச்சி குறிப்பிடுகிறதோ, என்ற ஐயமும் எழுகிறது. வீரர்களுக்கு நடுகல் எழுப்பும் மரபு தமிழர்களிடையே சங்ககாலத்தில் இருந்ததற்கு இங்கே, பல சான்றுகள் உண்டு. அவ்வாறு, சங்ககாலத்தில் கோசர் படையெடுப்பில் இறந்த வீரனுக்கு நடுகல் எழுப்பியிருக்கக்கூடும். அந்நடுகல் காலப்போக்கில் அழிந்துபட, இறந்த அவ்வீரரின் வழியினர் மீண்டும் புது நடுகல்லை எழுப்பியிருக்கவும் இடமுள்ளது. ஏனெனில் இந்நடுகல் காலமான 5-6ஆம் நூற்றாண்டில் கோசர்களைப் பற்றி எந்தவித இலக்கியக் குறிப்போ, கல்வெட்டுக் குறிப்புகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நடுகல் குறிப்பிற்குப் பின் கோசர்கள் குறித்து வேறு தகவல்கள் இதுவரையிலும் கிடைத்தில.

(தொடரும்)

 

 

 

 

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *