Skip to content
Home » முப்பத்தாறு ரத்தினங்கள் #6 – சுதந்திர தாகம்

முப்பத்தாறு ரத்தினங்கள் #6 – சுதந்திர தாகம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்திய ஆளுமைகளுள் டி.எஸ். சொக்கலிங்கமும் ஒருவர். அவர் ரெளலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி மறுப்பு எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். பேனா மன்னர் என்றும் தென்காசிச் சிங்கம் என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட அவர் தென்காசியைச் சேர்ந்தவர். ஜனயுகம், பாரதம், தமிழ்நாடு, தேசபக்தன், நவசக்தி உள்ளிட்ட பல இதழ்களில் பணியாற்றி, தன் மொழியாளுமையை வளர்த்துக்கொண்டார்.

தமிழில் தினமணி இதழ் தொடங்கப்பட்டபோது, அதன் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அவ்விதழிலிருந்து வெளியேறிய பிறகு தினசரி என்னும் பெயரில் சொந்தமாகவே ஒரு பத்திரிகையைத் தொடங்கி நீண்ட காலம் நடத்தினார். குறைந்த விலையில் நல்ல தரத்துடன் புத்தகங்களை வெளியிடும் நோக்கத்துடன் நவயுகப் பிரசுராலயம் என்னும் பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். நேரு, நேதாஜி, காமராஜர் ஆகிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். காந்தி என்னும் இதழை நீண்ட காலத்துக்கு நடத்திவந்தார். பிறகு மணிக்கொடி தொடங்கப்பட்ட காலகட்டத்தில் அவ்விதழோடு காந்தி இதழையும் இணைத்துவிட்டார்.

காந்தியடிகள், இராஜாஜி, பாரதியார், காமராஜர் ஆகியோரை முதன்முதலாகச் சந்தித்துப் பேசிய அனுபவங்களை எழுதித் தொகுத்து வெளியிட்ட அவருடைய ‘எனது முதல் சந்திப்பு’ தமிழில் படிக்கவேண்டிய மிகமுக்கியமான புத்தகங்களில் ஒன்று. மேலும் லியோ டால்ஸ்டாய் எழுதிய மூன்று தொகுதிகளைக் கொண்ட ‘போரும் வாழ்வும்’ நாவலை ஆங்கிலம் வழியாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். மொழிபெயர்ப்பு வரிசையில் அது ஒரு சாதனை முயற்சி.

மொழிபெயர்ப்பு மட்டுமன்றி, நேரிடையாகவே சிறுகதைகளையும் நாவலையும் எழுதி வெளியிட்டார் சொக்கலிங்கம். ‘அல்லி விஜயம்’ அவருடைய சிறுகதைத் தொகுதி. அவர் எழுதிய ஒரே நாவல் ‘பாய் பரமானந்தன்’. ஆனால் அது எந்த ஆண்டில் எழுதப்பட்டது, எப்போது முதன்முதலாக வெளிவந்தது என்னும் விவரங்களைக் கண்டறிய முடியவில்லை. (நாற்பதுகளில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது என் ஊகம்) அதன் இரண்டாவது பதிப்பை பழனியப்பா ப்ரதர்ஸ் நிறுவனம் 1963இல் வெளியிட்டது.

0

தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால நாவல்களில் பெரும்பாலும் தனிமனித அனுபவங்களும் தேடல்களும் குடும்பத் தொல்லைகளும் பெண்களின் துயரங்களும் கருப்பொருளாக எழுதப்பட்டு வந்த காலத்தில் டி.எஸ். சொக்கலிங்கம் தன்னுடைய ‘பாய் பரமானந்தன்’ நாவலை முற்றிலும் புதிய பின்னணியில் எழுதியிருக்கிறார். அந்தப் புதிய பாய்ச்சலே இந்நாவலை முக்கியமாகக் கருதுவதற்கான காரணம்.

இந்த நாவலின் களம் அரசியல். சுதந்திரப் போராட்டமே அதன் மையம். ஆனால் எந்த இடத்திலும் ஆங்கிலேயரின் பிடியிலிருந்து விடுதலை அடைய போராடிக் கொண்டிருந்த இந்தியாவை சொக்கலிங்கம் நேரிடையாகக் காட்சிப்படுத்தவில்லை. அதே சமயத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடித்ததும் ஆங்கிலேயரின் ஆட்சியை நினைத்துக்கொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார். தன்னுடைய முதல் நாவலிலேயே உருவகமாக கதை சொல்லும் வழிமுறையை சொக்கலிங்கம் வெற்றிகரமாகப் பின்பற்றியிருக்கிறார்.

பாஞ்சாலம், காஷ்மீர் இரண்டும் அடுத்தடுத்த நாடுகள். இரு நாடுகளிலும் எண்ணிக்கையில் மிகுதியான நெசவாளர்கள் வசித்து வருகிறார்கள். மக்களைக் கவரும் விதத்தில் பல நிறங்களில் விதம் விதமான சால்வைகளை நெய்வதுதான் அவர்களுடைய முக்கியமான தொழில். சால்வை விற்பனைதான் அந்த நாடுகளின் வருமானத்தைத் தேடித் தரும் முக்கியமான தொழில். அந்தச் சால்வைகளுக்குள்ள மதிப்பின் காரணமாக எல்லா நகரத்து வியாபாரிகளும் அந்த ஊர்க்கு வந்து அவற்றை வாங்கிச் சென்று விற்கிறார்கள். சால்வை வணிகத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி என்கிற பெயரில் வசூல் செய்கிறது அரசு. நெசவாளர்களும் அதைச் சுமையாகக் கருதுவதில்லை. சால்வை விற்பனை வழியாக வந்து சேரும் வரித்தொகையே அரசின் முக்கிய வருமானமாகவும் அந்த விற்பனை வழியாகக் கிடைக்கும் தொகையே பொதுமக்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.

பாஞ்சாலத்தின் அரசர் ஜெயவீரன். காஷ்மீரத்தின் அரசன் ரஞ்சித் சிங். ஜெயவீரனின் அவையில் அமைச்சராக இருப்பவர் கிருஷ்ணலால். ரஞ்சித் சிங்கின் அவையில் அமைச்சராக இருப்பவர் மணிசங்கர். ஒப்பீட்டு நோக்கில் பார்க்கும்போது காஷ்மீரத்தைவிட பாஞ்சாலத்தில் தனிநபர் வருமானம் மிகுதியாக இருக்கிறது. அதற்குக் காரணம் பாஞ்சாலத்துச் சால்வைகளுக்கு உள்ள சந்தை மதிப்பு. நிலையான வருமானத்தின் காரணமாக மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். பாஞ்சாலத்தைச் சேர்ந்த நெசவாளர்களுடைய அர்ப்பணிப்பு மிக்க கடுமையான உழைப்பு, சமூகத்தில் அவர்களுக்கு நல்ல மதிப்பையும் போதுமான செல்வத்தையும் வழங்கியிருக்கிறது. பொதுவாக பாஞ்சாலத்தில் வாழும் மக்கள் ஒற்றுமையையும் அமைதியையும் விரும்புகிறவர்களாக உள்ளனர்.

பிற நாடுகளில் இல்லாத வகையில் பாஞ்சாலத்தின் அரசர் ஜெயவீரன் தன் ஆட்சிமுறையில் ஒரு புதுமையைச் செய்கிறார். மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்கி, அவர்களுடைய ஆலோசனைகளின் அடிப்படையில் ஆட்சி புரிகிறார். ஜனநாயகத்தன்மை கொண்ட அந்த அமைப்பு நாட்டில் உள்ள எல்லாப் பிரிவினர்களுக்கும் நன்மை கிட்டும் வகையில் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துகிறது.
அரசரை அடுத்து பாஞ்சாலத்தில் அனைவருடைய மதிப்புக்கும் உரியவராக இருப்பவர் ஒரு சுவாமிஜி. அவர் பெயர் சத்யதேவ். ஜீலம் நதிக்கரையில் ஹரன்பூர் என்னும் இடத்தில் வசிஷ்ட குருகுலம் என்னும் பெயரில் ஒரு பள்ளியை நிர்வகித்து வருகிறார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்விப்பயிற்சி மட்டுமன்றி, தொழிற்பயிற்சி, படைப்பயிற்சி என அனைத்தும் முறையான ஆசிரியர்கள் வழியாக அப்பள்ளியில் கற்பிக்கப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக தேசபக்தி சார்ந்த உரையாடல்களுக்கு அது களமாகவும் விளங்குகிறது, பாய் பரமானந்தன் அந்தப் பள்ளியில் பயிற்சி பெற்ற வீரன். அதே பள்ளிக்கு அருகில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண் கமலினி. பரந்தாமனும் கமலினியும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள்.

காஷ்மீரத்தின் அரசர் ரஞ்சித் சிங் பொறாமையும் பேராசையும் உள்ளவர். சால்வை விற்பனை வழியாக அரசுக்குக் கிடைத்துவரும் வருமானம் பெருகவேண்டும் என அவர் பேராசை கொள்கிறார். பாஞ்சாலத்துச் சால்வைகளைவிட எல்லா இடங்களிலும் காஷ்மீரத்துச் சால்வைகளே முதல் நிலையில் நீக்கமற நிறைந்திருக்கவேண்டும் என்பது அவர் பேராசைகளில் ஒன்று. அதற்காக பாஞ்சாலத்தையே அழிப்பதற்குக்கூட அவர் மனம் தயாராக இருக்கிறது.

முதல் கட்டமாக அவர் வரியின் சதவீதத்தை உயர்த்துகிறார். கூடுதல் வரியைச் செலுத்துவதற்காகவும் தனிநபர் வருமானம் பாதிக்காதபடி தற்காத்துக்கொள்ளும் முயற்சியாகவும், சால்வையின் விலையை உயர்த்துகிறார்கள் நெசவாளர்கள். அந்தச் செயலின் விளைவாக சால்வை விற்பனை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது. வருமானமும் குறைகிறது. கூடுதல் வரியின் காரணமாக காஷ்மீரத்துச் சால்வைகள் பிற நாடுகளின் சந்தையை எட்டமுடியவில்லை. அதன் காரணமாக காஷ்மீர் சால்வையின் சந்தை மதிப்பு முற்றிலுமாகச் சரிகிறது. அதை அரசர் ரஞ்சித் சிங்கால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில், காஷ்மீர் சால்வைகள் பாஞ்சாலத்திலும் பாஞ்சாலத்து சால்வைகள் காஷ்மீரத்திலும் விற்பனையாகி வந்தன. இரு தரப்பு நெசவாளர்களுமே அதனால் பயனடைந்து வந்தனர். பொதுமக்களும் தமக்கு விருப்பமான சால்வையைத் தேர்ந்தெடுத்து வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் காஷ்மீர் அரசின் பிழையான வரிவிதிப்பு முறையால் காஷ்மீர் சால்வை விற்பனை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்குகிறது. திடீரென ஏற்பட்ட இந்த மாற்றத்துக்குத் தன்னுடைய அணுகுமுறையே காரணம் என்பதைப் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு அரசரின் அதிகார மமதை தடுக்கிறது. அமைச்சரின் பிழையான ஆலோசனையும் வழிகாட்டு நெறிகளும் அவருடைய கண்களை முற்றிலும் குருடாக்கிவிடுகின்றன.

சொந்த நாடாக இருந்தாலும் சரி, அடுத்த நாடாக இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலும் காஷ்மீர் சால்வை மட்டுமே விற்கும் விதமான நிலை உருவானால், பொருளாதாரத்தின் சரிவைச் சரியாக்கிவிட முடியும் என அரசர் நினைக்கிறார். பாஞ்சாலத்தின்மீது போர் தொடுத்து அடிமைப்படுத்திக்கொண்டால், தன் கனவை நனவாக்கிக் கொள்ளலாம் எனவும் அவர் மனம் திட்டமிடுகிறது. அவருடைய அமைச்சர் மணிசங்கர் அதற்கு ஏதுவாக திட்டம் தீட்டி அளிக்கிறார்.

பாஞ்சால நாட்டில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் விளைவாக அதிருப்தியில் இருந்த அந்நாட்டின் அமைச்சரான கிருஷ்ணலாலிடம் தந்திரமாகப் பேசி, அவரைத் தனது வலையில் விழவைக்கிறார் காஷ்மீரத்து அமைச்சர் மணிசங்கர். பாஞ்சாலத்து படைமுகாம் ரகசியங்களை அவரிடம் பகிர்ந்துகொள்கிறார் கிருஷ்ணலால். அதற்கு ஈடாக ஒரு வருஷத்துச் சம்பளத்தை அவருக்கு அன்பளிப்பாக அளிக்கிறது காஷ்மீர் அரசு. ஒரு கட்டத்தில் பகிரங்கமாகவே பாஞ்சால நாட்டைவிட்டு வெளியேறி காஷ்மீரத்தில் குடியேறுகிறார் கிருஷ்ணலால். அவருக்குக் கெளரவம் மிக்க புதியதொரு பொறுப்பை அளித்து அவரை வரவேற்று ஏற்றுக்கொள்கிறது காஷ்மீர் அரசு.

சில நாட்களுக்குப் பிறகு பாஞ்சாலத்துடன் மோதி அழிப்பதற்காக காஷ்மீர் படை அணிவகுத்து வருகிறது. பாஞ்சாலத்தின் பலவீனமான இடங்கள் எவை என்பதை கிருஷ்ணலால் அவர்களுக்குத் தெரிவித்து உதவுகிறார். அப்போரில் பாஞ்சாலத்தின் பல வீரர்களும் குடிமக்களும் உயிரிழக்கின்றனர். அரசர் ஜெயவீரனும் அவருடைய குடும்பமும் மக்கள் பிரதிநிதிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் சிறையில் வைக்கப்படுகிறார்கள். பாஞ்சாலத்தைக் கைப்பற்றிய ரஞ்சித் சிங் அதன் ஆட்சியை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருகிறார். காஷ்மீரத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் நிரந்தரமாக பாஞ்சாலத்து அரண்மனையிலேயே தங்கிவிடுகிறார். அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் அவருக்குத் தந்திரமாக உதவிய கிருஷ்ணலால் மீது பொய்ப்புகார் சுமத்தப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது.

ரஞ்சித் சிங் ஒவ்வொரு நாளும் வரி விதிக்கும் ஒரு புதிய சட்டத்தை அறிவிக்கிறார். புதிய வரிகளின் சுமை மக்களின் வருமான எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. பாஞ்சாலத்து நெசவுத்தொழிலையே அழிக்கும் விதமாக, சந்தையில் எந்த இடத்திலும் பாஞ்சாலத்துச் சால்வைகள் விற்பனை செய்யப்படக்கூடாது என அறிவிக்கிறார். எல்லா இடங்களிலும் காஷ்மீரத்துச் சால்வைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கிறார். இரு நாடுகளும் இப்போது காஷ்மீரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இரு நாடுகளின் சந்தைகளிலும் காஷ்மீரத்துச் சால்வைகள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்படவேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்துகிறார். அதுவே தேசபக்தியின் அடையாளம் என்றும் அறிவிக்கிறார். எந்த இடத்திலும் பாஞ்சாலத்துச் சால்வை என்கிற பேச்சுக்கே இடமிருக்கக்கூடாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிடுகிறார்.

ஒவ்வொரு நாளும் அரசு வெளியிடும் அறிவிப்புகள் பாஞ்சாலத்து நெசவாளர்களை நிலைகுலைய வைக்கின்றன. விற்பனை செய்யமுடியாத சால்வைகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகின்றன. அரசின் ஆணையை மீறி விற்பனை செய்பவர்களை தேசத்துரோகம் செய்த குற்றத்துக்காக கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள் அதிகாரிகள். அதற்காகவே அவர்கள் நகரை வலம்வந்து கண்காணித்தபடி இருக்கிறார்கள். நாடெங்கும் மெல்ல மெல்ல வறுமை சூழ்கிறது. பாஞ்சாலத்து நெசவுத்தொழிலை அழித்து அவர்களை அடிமைகளாக வைத்திருக்கும் கனவை காஷ்மீரத்து அரசர் ஒருசில ஆண்டுகளிலேயே சாத்தியப்படுத்திக்கொள்கிறார். தன் கைத்தொழிலை இழந்ததால் பாஞ்சாலம் முழுக்க முழுக்க அடிமைப்பட்ட நாடாகிவிடுகிறது.

அந்த நிலை நீண்ட காலம் நீடிக்கவில்லை. பத்து பதினைந்து ஆண்டுகளில் ஒரு புதிய தலைமுறை உருவாகி வருகிறது. அவர்களிடையில் உருவாகும் சுதந்திர எழுச்சி ஒவ்வொரு இடத்திலும் பரவிச் செல்கிறது. பரமானந்தன் போன்ற இளைஞர்கள் எங்கெங்கும் சுதந்திரக் கனலை மூட்டுகிறார்கள். சுதந்திரப் போராட்டத்தை முளையிலேயே கிள்ளியெறிய விரும்பிய அரசர் ரஞ்சித் சிங்கும் அமைச்சர் மணிசங்கரும் சந்தேகத்துக்கிடமான பலரைக் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அவர்களுடைய ஒற்றர் படை இருபத்துநான்கு மணி நேரமும் தீவிரமாகப் பணியாற்றி நாட்டில் வசிக்கும் பலரை அடையாளம் காட்டி சிக்கவைக்கிறது.

அரசின் மோசமான அணுகுமுறையே சுதந்திரப் போராட்டத்தின் வேகத்தை அதிகரிக்கவைக்கிறது. சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரரான கன்யாலால் என்பவர் ஒருநாள் அடித்துக் கொல்லப்பட்டு விடுகிறார். அதை இயற்கை மரணம் என அரசு அறிவித்து சமாளிக்கப் பார்க்கிறது. மக்களின் அன்புக்குரிய அத்தலைவரின் மரணம் மக்களைக் கொந்தளிக்க வைத்துவிடுகிறது. இயற்கையாகவே உருவான அந்த வேகத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பரமானந்தன் போன்ற சுதந்திர அணியினரும் முயற்சி செய்கின்றனர். அதுவே சுதந்திரப் போராட்ட எழுச்சியின் முதற்புள்ளி.

0

ஒரு கிராமத்தில் ஒரு நெசவாளி தன் வீட்டுக்குள் இரவும் பகலும் பாடுபட்டு நெய்துவைத்த நூற்றைம்பது சால்வைகளைக் குவியலாகக் கட்டிவைத்திருக்கிறான். ஆனால் அவற்றைச் சந்தைக்கு எடுத்துச் செல்லமுடியாமலும் விற்கமுடியாமலும் தடுமாறுகிறான். அவனுடைய குடும்பமே பட்டினியில் தவிக்கிறது. மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுக்க உணவுக்கு வழியில்லாத நிலையில் அவன் மனம் குமுறுகிறது.

ஒருநாள் காலையில் எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் துணிந்து ஒரே ஒரு சால்வையை மட்டும் தோள்மீது சுமந்துகொண்டு விலைகூறிக் கூவிக்கொண்டே ஒவ்வொரு தெருவாகக் கடந்துசெல்கிறான். அவன் எடுத்துச் செல்வது பாஞ்சாலத்துச் சால்வை என்பதைத் தெரிந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் ஒதுங்கிச் செல்கிறார்கள். யாரும் அவனை நிறுத்தி விலை கேட்கவும் இல்லை. வாங்கவும் இல்லை. பலர் அவனை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் ஓரமாக ஒதுங்கிச் செல்கின்றனர். ஆயினும் அவன் நம்பிக்கையோடு தொடர்ந்து நடந்துசெல்கிறான். அப்போது யாரோ ஒரு வழிப்போக்கர் அவனை நிறுத்தி சால்வையின் விலையை விசாரிக்கிறார். பிறகு அச்சால்வையை வாங்கிக்கொண்டு அவன் கேட்டதைவிட கூடுதலாகவே பணம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

அதுவரை அந்த நெசவாளியைப் பின்தொடர்ந்து வந்த ஒற்றனொருவன் அவனை அரசு ஆணையை மீறி பாஞ்சாலத்துச் சால்வையை விற்பனை செய்த குற்றத்துக்காகக் கைது செய்து விசாரணைக்காக அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறான். காஷ்மீரத்துச் சால்வை மட்டுமே விற்கப்பட வேண்டிய ஒரு தேசத்தில் தன் சால்வையைக் கூவி விற்றது மன்னிக்கமுடியாத குற்றம் என்றும் தேசத்துக்குத் துரோகமிழைக்கும் செயல் என்றும் அவனைப் பழித்துரைக்கிறார் அரசர். தமக்குச் சொந்தமான மண்ணில் தாம் நெய்த சால்வையை விற்க வழியில்லாமல் செய்த செயலே மிகப்பெரிய குற்றம் என அரசரை எதிர்த்து வாதாடுகிறான் அந்த நெசவாளி.

அவனைக் குற்றவாளி என அறிவித்து சிறையில் அடைக்க ஆணையிடுகிறார் அரசர். உடனடியாக அவனுடைய வீட்டுக்குச் சென்று அவன் மறைத்துவைத்திருக்கும் பிற சால்வைகளை பறிமுதல் செய்துவருமாறு ஆட்களை அனுப்பிவைக்கிறார் அரசர். அந்த ஆட்கள் அவனுடைய வீட்டுக்குச் சென்று சால்வைகளைப் பறிமுதல் செய்கின்றனர். அவர்களைத் தடுத்த அவனுடைய மனைவியை அரண்மனைக்கு அழைத்துவருகின்றனர். அரசரை நேருக்கு நேர் பார்த்து கருணையில்லாதவன் என குற்றம் சாட்டி ஆத்திரத்துடன் சாபமிடுகிறாள் அவள். பிறகு அரண்மனையைவிட்டு வெளியேறி குழந்தைகளை அழைத்துச் சென்று ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறாள். அந்தக் குடும்பத்தின் சரிவும் தற்கொலையும் சுதந்திர எழுச்சியின் மற்றொரு புள்ளி. இப்படி பல புள்ளிகளால் விசைகொண்ட சுதந்திரப் போராட்டம் தீயென நாடெங்கும் வேகவேகமாகப் பரவத் தொடங்குகிறது.

இப்படி ஒரு தொடக்கத்துடன் சொக்கலிங்கம் தன் நாவலைக் கட்டமைத்திருக்கிறார். எழுச்சி உருவானதும் கிராமங்களிலும் நகரங்களிலும் அதன் வேகமும் வளர்ச்சியும் எப்படி இருந்தது என்பதையும் அவற்றை எப்படியெல்லாம் முறியடிக்க அரசரின் ஒற்றர் படையினர் முயற்சி செய்கின்றனர் என்பதையும் ஒற்றர்களின் ஒவ்வொரு முயற்சியையும் முறியடித்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் முயற்சி எப்படி வென்றது என்பதையும் அடுத்தடுத்த காட்சிகளில் சுவாரசியமாகச் சித்தரிக்கிறார் சொக்கலிங்கம். சோர்வில்லாமல் படிக்கும் வகையில் ஒவ்வொரு அத்தியாயமும் எழுதப்பட்டிருக்கிறது.

0

இவ்விரண்டு தரப்பினரின் செயல்பாடுகளை விவரிக்கும் போக்கிலேயே, கதைப்போக்குக்குப் பாதகம் ஏற்படாத வகையில் ஒருசில முக்கியமான பாத்திரங்களை தம் நாவலில் உலவவிட்டிருக்கிறார் சொக்கலிங்கம். அவர்களில் ஒருவன் குரூர சிங். அவன் அரசுத்தரப்பைச் சார்ந்தவனும் அல்லன். விடுதலைப்போராட்டத் தரப்பைச் சார்ந்தவனும் அல்லன். அவன் ஒரு குற்றவாளி. ஏற்கனவே செய்த ஒரு கொலைக்குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருப்பவன். சிறையிலேயே எட்டாண்டு காலத்தைக் கழித்தவன். கைதிகளில் மூத்தவனை வார்டராக நியமித்து கைதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பை அளிக்கும் வழக்கத்தையொட்டி, சிறை வார்டர் பொறுப்பை ஏற்றிருக்கிறான்.

அச்சமயத்தில்தான் நாடெங்கும் சுதந்திர எழுச்சி பரவத் தொடங்கியது. பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். காஷ்மீரத்தின் அமைச்சர் மணிசங்கர் வார்டர் பொறுப்பிலிருக்கும் குரூர சிங்கைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளைக் கவனிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார். ஏதேனும் ஒரு குற்றம் குறையைக் கண்டுபிடித்து, அவர்கள்மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நிகழ்த்தச் சொல்கிறார். அதனால் தனக்கு என்ன லாபம் என்று கேட்கிறான் குரூர சிங். ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி அவனை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளிக்கிறார் அமைச்சர் மணிசங்கர். குரூர சிங் தனக்கு மட்டுமன்றி, தன்னுடன் சிறைக்கு வந்த ஏழெட்டுக் கூட்டாளிகளுக்கும் விடுதலையளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறான். அதற்கும் சம்மதிக்கிறார் மணிசங்கர்.

மணிசங்கர் ஒப்புதல் அளித்த சில நாட்களிலேயே சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட மூத்த வீரர் கன்யாலாலை அற்பமானதொரு காரணத்துக்காக அடித்துக் கொன்றுவிடுகிறான் குரூரசிங். அதை இயற்கை மரணமென அனைவரையும் நம்பவைப்பதிலும் அவனுக்கு வெற்றி கிடைத்துவிடுகிறது. உடல்நலம் குன்றி மரணமடைந்துவிட்டதாக ஊருக்கு அறிவித்துவிடுகிறது அரசு. அரசின் அறிவிப்பைக் கேட்டுத் திகைக்கும் பொதுமக்கள் மனத்துக்குள் குமுறுகிறார்களே தவிர, அவர்களால் வெளிப்படையாக அரசுக்கு எதிராக எந்த எதிர்ப்பையும் காட்டமுடியவில்லை.

கன்யாலாலைக் கொன்றதைத் தன் சாதனையாக நினைத்துக்கொள்கிறான் குரூர சிங். சிறைக்குள் வரும் புதிய கைதிகளிடம் ‘கன்யாலால் என் கையால்தான் அடிபட்டு இறந்தான். அதுபோல நீயும் அடிபட்டு இறந்துபோகாதே’ என்று கூறி மிரட்டத் தொடங்குகிறான். அந்தச் செய்தி முதலில் கைதிகளிடையில் பரவி, பிறகு கைதிகளைச் சந்திக்கவரும் அவர்களுடைய உறவினர்களின் வழியே வெளியுலகத்துக்கும் பரவத் தொடங்கிவிடுகிறது. இத்தனை காலமும் அரசு மறைத்துவைத்த உண்மை உலகத்துக்கே தெரிந்துவிடுகிறது. ரகசியமாக இருக்கவேண்டிய ஒரு செய்தி இப்படி வெளிப்படையாக உலகத்துக்கே தெரிந்துவிட்டதே என சினம் கொண்ட அமைச்சர் குரூர சிங்கை அழைத்துக் கண்டிக்கிறார். தன் செயலுக்காக தன்னை விடுதலை செய்யவேண்டிய அமைச்சர் காரணமின்றி தன்னை இப்படி கண்டித்துப் பேசுவதை அவனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. முணுமுணுத்தபடி சிறைக்கூடத்துக்கே திரும்பிவிடுகிறான்.

குரூர சிங்கைப்போல பிரபல சிங், கொத்தவால், மேதாப் சிங், ஜெயசீலன், ஆனந்த சிங் என எண்ணற்றோர் நாவலெங்கும் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் ஒருவரும் இன்னொருவரைப்போல இல்லை என்பதும் சுதந்திர எழுச்சியின் வேகத்தை வெவ்வேறு வகையில் உணர்த்துகிறவர்களாக அவர்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதும் சொக்கலிங்கத்தின் எழுத்தாளுமைக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.

இறுதியில் மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த, தன் சொந்த நாடான காஷ்மீரத்து சேனையை ரகசியமாக வரவழைக்க முயற்சி செய்கிறார் ரஞ்சித்சிங். அந்த ரகசியத்திட்டத்தை அறிந்துகொள்ளும் பரமானந்தன் தன் நண்பர்களுடன் இணைந்து அவ்வீரர்கள் பாஞ்சாலத்தின் எல்லைக்குள் காலடி எடுத்து வைத்த கணத்திலேயே தடுத்து நிறுத்தி வெற்றி காண்கிறான். இறுதியில் அரசர் ரஞ்சித் சிங்குக்குச் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை.

ரஞ்சித் சிங்கின் வழிமுறையைப் பின்பற்றி அவரைக் கைது செய்து அப்போதே சிறையில் அடைத்திருக்கலாம். ஆனால் பரமானந்தனின் தலைமையில் இயங்கும் சுதந்திர அணி அப்படிச் செய்யவில்லை. அவரை மன்னித்து சுதந்திரத்தின் பெருமையைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது.

கடைசியில் பாஞ்சாலத்தில் சுதந்திர சமூகம் மலர்கிறது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். நீண்ட காலம் சிறையில் வாடிய அரசர் ஜெயவீரனை அழைத்து வந்து மீண்டும் அவரிடமே அரசுப் பொறுப்பை ஏற்கவைக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. அடிமைப்பட்ட பாஞ்சாலம் இழந்த சுதந்திரத்தை சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அடையும் காட்சியோடு சொக்கலிங்கம் தன் நாவலை நிறைவு செய்திருக்கிறார்.

தொய்வில்லாதபடியும் சோர்வளிக்காதபடியும் ஒவ்வொரு காட்சியையும் கச்சிதமாக எழுதியிருக்கிறார் சொக்கலிங்கம். தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு கட்டமைப்பில் இந்த நாவலை அவர் எழுதியிருப்பது அவருடைய படைப்பாற்றலுக்குச் சான்று.
சுதந்திர பாஞ்சாலத்தில், சால்வை உற்பத்தி மீண்டும் கோலாகலமாகத் தொடங்குகிறது. கைத்தொழிலைப் பின்பற்றியபடி நெசவாளர்களின் சமூகம் நிலைத்திருக்க வழிசெய்யப்படுகிறது. அதே சமயத்தில் அக்கம்பக்கத்து நாட்டினரின் சால்வைகளும் சந்தையில் இடம்பெறுவதற்கும் வழிவகுக்கிறது. கைத்தொழிலான நெசவுத்தொழிலின் பெருமை நிலைநாட்டப்படுகிறது. போராட்டக் காலத்தில் போராட்டத்துக்கு வழிகாட்டியாகத் துணைநின்ற சுவாமிஜி மீண்டும் தன் குருகுலத்துக்குத் திரும்பி மாணவர்களுக்குக் கல்விப்பயிற்சியை அளிக்கிறார்.

0

சொக்கலிங்கம் தம் புதிய நாவலுக்கு பாய் பரமானந்தன் என்று பெயரிட்டதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி பல நாட்களாகவே என் நெஞ்சில் பதிந்திருந்தது. சமீபகாலத்தில் இந்திய சுதந்திரப்போராட்டம் குறித்த பல நூல்களைப் படித்துக்கொண்டிருந்தபோது லாகூர் சதிவழக்கு தொடர்பான ஒரு செய்தியைப் படித்தபோது, அச்செய்திக்குறிப்பில் பாய் பரமானந்த் என்னும் பெயரைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்துவிட்டேன். பாய் பரமானந்தன் என்பது கற்பனைப் பெயரல்ல என்பதையும் உண்மையிலேயே பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த ஒரு சுதந்திரப்போராட்ட வீரரின் பெயரே என்பதையும் அப்போது புரிந்துகொண்டேன்.

பாஞ்சாலம், காஷ்மீரம் என வடநாட்டுப் பகுதிகளையே தன் நாவலுக்குக் களமாகத் தேர்ந்தெடுத்த சொக்கலிங்கம், அதே பகுதியில் உண்மையாகவே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரையே தன் பாத்திரத்துக்கும் சூட்டியிருக்கலாம் என்று புரிந்தது. ஒரு பொருத்தம் கருதி அவர் அந்த முடிவை எடுத்திருக்கலாம். அதைத் தவிர, வேறெந்த விதத்திலும் வரலாற்றில் வாழ்ந்த பரமானந்தருக்கும் சொக்கலிங்கம் உருவாக்கிய பரமானந்தருக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. (பரமானந்த் என்னும் பெயரோடு இணைந்திருக்கும் பாய் என்னும் முன்னொட்டு வட இந்தியப் பகுதியில் பொதுவாக சகோதரர் என்னும் பொருளில் செல்லமாகக் குறிப்பிடப்படும் விளிச்சொல்).

பஞ்சாபில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான பாய் பரமானந்த் தொடக்க காலத்தில் கதர் இயக்கத்தில் மிகவும் ஈடுபாட்டோடு இயங்கிவந்தவர். எதிர்பாராத விதமாக 1915ஆம் ஆண்டில், லாகூர் சதி வழக்கு தொடர்பாக ஆங்கிலேய அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

விசாரணையின் போது நடைபெற்ற சதிக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. பிறகு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு அவர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்தாம் பேரரசர் ஜார்ஜ் பொது மன்னிப்பு வழங்கியதை ஒட்டி விடுதலை பெற்று இந்தியாவுக்குத் திரும்பினார்.

அதற்குப் பிறகு இந்து மகா சபை, இந்தியப் பிரிவினை என அவருடைய செயல்பாடுகள் வேறொரு திசையில் திரும்பிவிட்டன. இந்தியா விடுதலையடைந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு உடல்நலம் குன்றி மரணமடைந்தார்.

சொக்கலிங்கம் உருவாக்கிய பரமானந்தன் சொக்கத் தங்கமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். மனத்தில் எவ்விதமான வேறுபாடுகளுக்கும் இடமளிக்காமல், மக்கள் அனைவரையும் அவன் நேசிக்கிறான். தமக்குத் தேவையான உதவிகளை பாகுபாடு கருதாது அவர்களிடமிருந்து பெறுபவனாகவும் இருக்கிறான். தொடக்கத்தில் தன்னைக் கொல்வதையே வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு அல்லும் பகலும் பின்தொடர்ந்து வந்த புருஷோத்தமனையும் மன்னிக்கும் அருளுள்ளம் கொண்டவனாகவும் இருக்கிறான்.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *