Skip to content
Home » முப்பத்தாறு ரத்தினங்கள் #7 – மாபெரும் புதிர்

முப்பத்தாறு ரத்தினங்கள் #7 – மாபெரும் புதிர்

கடந்த நூற்றாண்டில் காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழியிலேயே தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட எண்ணற்ற இந்தியக் குடும்பங்களில் எழுத்தாளர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுடைய குடும்பமும் ஒன்று. அவர் தந்தையாரான சீதாராமையா காந்தியத்தொண்டராக மட்டுமன்றி எழுத்தாளராகவும் வாழ்ந்தவர். ‘கரட்டூர் ராமு’ என்னும் தலைப்பில் அவர் ஒரு நாவலை எழுதியுள்ளார். கல்யாணசுந்தரத்தின் மூத்த சகோதரர் ஆண்டிப்பட்டியில் காந்திய ஆசிரமத்தை நடத்தி கதருக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் ஆதரவாகச் செயல்பட்டவர். வாழ்நாள் முழுதும் எளிய மக்களுக்குத் தொண்டாற்றியவர்.

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் இளநிலை பட்டப்படிப்பை முடித்து கொடைக்கானலில் செயல்பட்டு வந்த இயற்பியல் ஆய்வகத்தில் ஆரம்பக்காலத்தில் உதவியாளராக வேலை செய்தார். பிறகு ஆக்ராவில் தபால் தந்தித்துறையில் பணியாற்றி பதவி உயர்வு பெற்று பஞ்சாபில் பொறியியல் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்தார். ஏதோ ஒரு தருணத்தில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறிவிப்பை அறிந்துகொண்டதும், அதுவரை செய்துவந்த அரசு வேலையைத் துறந்து சபர்மதிக்குச் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார்.

கல்யாணசுந்தரத்துடைய கல்வித்தகுதியைக் கேட்டறிந்த காந்தியடிகள் மக்களுக்குச் சேவை செய்யவும் இந்தி மொழியைக் கற்பிக்கவும் கேட்டுக்கொண்டார். அச்சொற்களையே தன் வாழ்வின் இலட்சியமாக எடுத்துக்கொண்ட எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அன்றுமுதல் மக்கள் சேவைக்காகவே தம் வாழ்நாளைச் செலவழித்தார். கிராமப்பகுதிகளில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பிற நோயாளிகளுக்கும் சேவை செய்தார். திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்நாள் முழுதும் மக்கள் சேவையையே தன் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார்.

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எழுத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். 1934இல் அவர் எழுதிய சிறுகதை ஆனந்த விகடன் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றது. இருபத்தாறு ஆண்டுகள் கழித்து அச்சிறுகதையை சி.சு.செல்லப்பா தன் எழுத்து இதழில் ஒரு சிறப்புக்குறிப்போடு வெளியிட்டார். கல்யாணசுந்தரம் அவ்வப்போது எழுதுகிறவராக இருந்தாரே அன்றி, தொடர்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. எழுதியவற்றைத் தொகுத்து நூலாக்கும் எண்ணமும் அவரிடம் வெளிப்பட்டதில்லை.

‘பொன்மணல்’ என்னும் தலைப்பில் ஒரே ஒரு சிறுகதைத் தொகுதி மட்டுமே வெளிவந்தது. அதேபோல ‘இருபது வருஷங்கள்’ என்னும் தலைப்பில் ஒரே ஒரு நாவலை மட்டுமே எழுதி வெளியிட்டார். 1965இல் அந்த நாவலைத் தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டது. அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய நூல்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் பாதுகாத்து வைத்திருந்த எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் நூற்றாண்டையொட்டி 2001இல் தமிழினி பதிப்பகம் வழியாக அவற்றையெல்லாம் நூல்களாக வெளியிட்டார்.

0

‘இருபது வருஷங்கள்’ நாவலின் களம் பெரியகுளம் என்னும் ஊரிலிருந்து தொடங்குகிறது. நாவலின் முக்கியமான பாத்திரம் கேசவராவ். அவர் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு தனிப்பட்ட முறையில் சிறியதொரு மருத்துவச் சாலையை பெரியகுளத்திலேயே நடத்திவருகிறார். சாரணர் இயக்கத்தின் செயல்பாடுகள் மீதும் அவருக்கு அளவற்ற ஈடுபாடு இருக்கிறது. பள்ளிக்கூடக் காலத்தில் உருவாகி அவரோடு ஒட்டிக்கொண்ட ஈடுபாடு அது. அந்த ஆர்வத்தின் காரணமாகவே பெரியகுளத்தில் சாரணர் மாகாண மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். பல ஆங்கிலேய அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்துப் பாராட்டுகிற அளவுக்கு அம்மாநாடு மிகவும் சிறப்பாக நடந்து முடிகிறது.

மாநாட்டு வேலை நடைபெற்றுவரும் சமயத்தில்தான் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தோடு இணைந்து பணிபுரிய வருமாறு நாட்டுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார். காந்தியடிகளின் சொற்களால் கேசவராவ் ஈர்க்கப்படுகிறார். அக்கணம் அவர் மனம் காந்தியடிகளின் வழியில் நாட்டுக்குத் தொண்டாற்ற விழைகிறது. சாரணர் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளரான ஆங்கிலேய அதிகாரியிடம் உண்மையைத் தெரிவித்துவிட்டு, மாநாட்டுக்காக வசூல் செய்த தொகைக்கணக்கையும் செலவு செய்த தொகைக்கணக்கையும் எழுதி அவரிடம் ஒப்படைத்துவிட்டு அப்பொறுப்பிலிருந்து விலகிவிடுகிறார்.

கேசவராவின் பெற்றோர், மனைவி, உறவினர் அனைவருமே அவர் எடுத்திருக்கும் முடிவை விரும்பவில்லை. ஆனால் கேசவராவைத் தடுத்து நிறுத்த ஒருவராலும் இயலவில்லை. காந்தியடிகளின் வழியில் அவர் அந்த ஊர்ப் பொதுமக்களைத் திரட்டிக்கொண்டு அயல்நாட்டுத் துணிகளை விற்பனை செய்யும் கடைகள், கள்ளுக்கடைகள் ஆகியவற்றின் முன்னால் நின்று எதிர்ப்பு முழக்கங்களை முழங்கத் தொடங்குகிறார். அவரும் அவருடைய நண்பர்களும் கடைகளுக்குள்ளே செல்ல முனைகிறவர்களிடம் செல்லவேண்டாம் என மன்றாடும் குரலில் வேண்டுகோள்களை முன்வைக்கின்றனர்.

கடைக்குள் வரவிருக்கும் வாடிக்கையாளர்கள் தடுக்கப்படுவதைப் பார்த்து கடைக்காரர்கள் வெகுண்டெழுகிறார்கள். உடனே காவல்துறையினருக்குச் செய்தி அனுப்பி கடைக்குப் பாதுகாப்பாக வரவழைக்கின்றனர். காவலர்கள் முதலில் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் தொண்டர்கள் கடைவாசலிலிருந்து விலகாமல் அப்படியே நிற்கிறார்கள். அதைக் கண்டு சினமுற்ற காவலர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். விசாரணைக்குப் பிறகு நீதிபதி அனைவருக்கும் ஓராண்டு சிறைத்தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கிறார். கேசவராவ் உட்பட அனைவரும் வேலூர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ராஜாஜி, சத்தியமூர்த்தி, வைத்தியநாத ஐயர் உள்ளிட்ட தலைவர்கள் அடைபட்டிருந்த அச்சிறையில் பெரியகுளத்தைச் சேர்ந்தவர்களும் அடைபட்டுத் தண்டனை அனுபவிக்கிறார்கள்.

0

தண்டனைக்காலம் முடிவடைந்து கேசவராவ் பெரியகுளத்துக்குத் திரும்பிவருகிறார். ஊரார் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். ஆனால் அவர் தொடங்கிவைத்த அரசியல் செயல்பாடுகள் எதுவும் தொடர்ந்து நடக்கவில்லை. எல்லாக் கிளர்ச்சிகளும் அடங்கிவிட்டதைக் கண்டு திகைத்துவிடுகிறார். ஒவ்வொரு வீட்டிலும் இராட்டைகள் பரண்மேல் கிடக்கின்றன. கதர் வளர்ச்சி வேலைகள் எதுவும் நிகழவில்லை. கள்ளுக்கடைகளில் எப்போதும்போல மனித நடமாட்டத்தைப் பார்க்க முடிகிறது. அந்தப் புறக்காட்சிகள் சற்றே அவரைக் கலங்க வைத்தாலும், அவர் அத்தடுமாற்றத்திலிருந்து விரைவிலேயே விடுபட்டுவிடுகிறார். தண்டனையைக் கண்டு அஞ்சி மக்கள் தம் எதிர்ப்பு எண்ணத்தைக் கைவிட்டிருக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறார்.

அதற்குப் பிறகு தம் மனத்தை அவர் மக்கள் சேவையின் பக்கம் திசைதிருப்புகிறார். தன் வீட்டின் முற்பகுதியில் இருந்த கூடத்தையே மருத்துவம் பார்க்கும் இடமாக மாற்றுகிறார். அங்கிருந்தபடியே மக்களுக்கான மருத்துவச்சேவையைத் தொடர்கிறார். அவர் மருத்துவச் சாலைப் பணியைத் தொடங்கிவிட்டார் என்பதை அறிந்த அக்கம்பக்கத்துக் கிராமத்தினர் அனைவரும் அவரிடம் வரத் தொடங்குகின்றனர். பணம் கொடுக்க வசதியிருப்பவர்களிடம் பணத்தைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார். பணமில்லாத ஏழைகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்க்கிறார்.

தற்செயலாக கேசவராவ் குடும்பத்துக்குத் தூரத்துச் சொந்தமான உறவுக்குடும்பத்தைச் சேர்ந்த சாவித்திரி என்னும் இளம்பெண் அவரைச் சந்திப்பதற்காக வருகிறாள். அவள் மதுரையிலேயே முறையாக நர்சிங் படிப்பைப் படித்துமுடித்துவிட்டு ஒரு மருத்துவமனையில் நான்கைந்து ஆண்டு அனுபவம் பெற்றிருக்கிறாள். கேசவராவின் தொண்டுள்ளத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரோடு சேர்ந்து பணிபுரிய விரும்பி பெரியகுளத்துக்கு வந்து சேர்கிறாள். அவள்தான் அந்தக் கூடத்தை நான்கு படுக்கைகள் கொண்ட சிறு மருத்துவமனையாக மாற்றும் யோசனையை அவருக்குத் தெரிவிக்கிறாள். ஏற்கனவே கேசவராவ் பின்பற்றி வந்த வழக்கமான, வசதியுள்ளவர்களுக்குக் கட்டண மருத்துவம் வசதியற்றவர்களுக்கு இலவச மருத்துவம் என்னும் நடைமுறையையே அங்கும் தொடரலாம் என்ற எண்ணத்தை விதைக்கிறாள்.

அவள் சொற்களால் ஊக்கம் பெற்ற கேசவராவ் பழைய விசையோடும் வேகத்தோடும் பணிபுரியத் தொடங்குகிறார். எண்ணற்ற நோயாளிகள் அங்கு வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கிறார்கள். அந்தக் கூடம் மெல்ல மெல்ல விரிவாகி சிறிய மருத்துவக்கூடமாக உருமாறுகிறது.

அதே நேரத்தில் கேசவராவின் மனைவியுடைய தங்கை ஜானகியும் அங்கு வந்து சேர்கிறாள். இயல்பிலேயே சுறுசுறுப்பான அவள் மருத்துவமனையின் உதவியாளராக வலம்வருகிறாள். எதிர்பாராத இத்தகு உதவிகளால் அவருடைய மருத்துவமனை மிகவிரைவில் ஊராரிடையில் நல்ல பெயரை ஈட்டுகிறது.

கேசவராவ் தன் வீட்டு முகப்பிலேயே உருவாக்கிய மருத்துவமனையைத் தவிர, பெரியகுளத்திலேயே தொழுநோயாளிகளுக்காக புதியதொரு மருத்துவ மனையையும் உருவாக்குகிறார். தோட்டத்தோடு கூடிய ஒரு பங்களாவை விலைக்கு வாங்கி, அறுபது படுக்கைகள் கொண்ட இன்னொரு மருத்துவமனையை உருவாக்குகிறார். உள்ளூரிலேயே வசிக்கும் இரு மருத்துவர்களை அங்கு பணிபுரிய ஏற்பாடு செய்கிறார். மேலும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் பணம் திரட்டி காசநோயாளிகளுக்கென ஒரு தனி மருத்துவமனையையும் உருவாக்குகிறார்.

ஒருமுறை பெரியகுளத்திலேயே நடைபெற்ற திருமணத்தில் இசைக் கச்சேரிக்காக ஒரு பாடகர் வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தார். அத்திருமணத்துக்கு கேசவராவும் சென்றிருந்தார். கச்சேரி முடிந்து உரையாடிக்கொண்டிருந்தபோது, பணம் கொடுக்கும் ரசிகர்களை ஓர் அரங்கில் திரட்டமுடிந்தால் அவர்கள் முன்னிலையில் பாடுவதற்குத் தயாராக இருப்பதாக அப்பாடகர் கேசவராவிடம் தெரிவித்தார். கேசவராவ் அடுத்த நாளே அவ்விதமாக ஒரு கட்டணக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தார். மக்கள் திரண்டு வந்ததால் கட்டணமாக ஏராளமான தொகை கிடைத்தது. அதைப் பெற்றுக்கொண்ட பாடகர், அத்தொகையை அப்படியே ஏதேனும் மக்கள் சேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேசவராவிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்.

அத்தொகையை மூலதனமாகக் கொண்டு, கேசவராவ் ஆதரவில்லாத ஏழைகள் தங்குவதற்கான விடுதி ஒன்றை பெரியகுளத்திலேயே கட்டுகிறார். இவ்விதமாக, நன்கொடையாகக் கிடைக்கும் தொகையைச் சேர்த்து, வசதியற்ற பிள்ளைகள் படிப்பதற்காக ஒரு பள்ளி, அவர்கள் தங்குவதற்கு ஏதுவாக ஒரு விடுதி, முதியோர் ஆசிரமம் என பலவற்றையும் பெரியகுளத்தைச் சுற்றி உருவாக்குகிறார் கேசவராவ்.

அத்தருணத்தில்தான் காந்தியடிகள் ஹரிஜன சேவா சங்கத்தை உருவாக்குகிறார். நாடெங்கும் அதன் கிளைகளை உருவாக்கி காங்கிரஸ் தொண்டர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். காந்தியடிகளின் கோரிக்கையை ஏற்று கேசவராவ் பெரியகுளத்தில் ஹரிஜன சேவா சங்கத்தின் கிளையை உருவாக்கி, அதன் வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறார். ஊரூராகச் சென்று நிதி திரட்டி தாழ்த்தப்பட்டவர்களுக்காக பல நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறார்.

ஹரிஜன நல நிதி திரட்டும் நோக்கத்துடன் சென்னை மாகாணத்துக்கு காந்தியடிகள் வரவிருக்கிறார் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டதும் அப்பயணத்தின்போது தம்முடைய கிராமமான பெரியகுளத்துக்கும் வருகை தந்து அங்கு நடைபெற்றுவரும் நலத்திட்டங்களைப் பார்த்துவிட்டுச் செல்லவேண்டும் என காந்தியடிகளுக்குக் கடிதம் எழுதித் தெரிவிக்கிறார் கேசவராவ். காந்தியடிகள் அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார். பெரியகுளத்தையும் உள்ளடக்கியதாக தன் பயணத்திட்டத்தை அமைத்துக்கொள்கிறார் காந்தியடிகள்.

காந்தியடிகள் பெரியகுளத்துக்கு வந்ததும் கேசவராவ் அவரை வரவேற்று ஹரிஜன நல நிதிக்காகத் திரட்டியிருந்த தொகையை அவரிடம் ஒப்படைக்கிறார். கேசவராவ் பெரியகுளத்தைச் சுற்றி ஏற்படுத்தியிருந்த மருத்துவச்சேவை மையங்களையும் பிற இடங்களையும் காந்தியடிகள் சுற்றிப் பார்த்துவிட்டு அவரைப் பாராட்டிவிட்டுச் செல்கிறார். அதற்கிடையில் மருத்துவமனையிலேயே பணிபுரிந்த ஜானகிக்குத் திருமணம் நிகழ்கிறது. அவரை மணந்துகொள்பவர் வணிகவியல் படித்து பலருக்கும் வருமானவரி ஆலோசகராக இருப்பவர். கேசவராவின் நண்பர். அவர் பெயர் கிருஷ்ணாராவ். திருமணத்துக்குப் பிறகு அவர்கள் வேறொரு வீட்டில் வசிக்கத் தொடங்குகிறார்கள். சாவித்திரியும் திருமணம் செய்துகொண்டு தன் கணவரோடு வடக்குப்பக்கம் சென்றுவிடுகிறார்.

பெரியகுளத்தைச் சுற்றி அவர் உருவாக்கிய சேவை மையங்கள் சிறப்பான முறையில் செயல்படுகின்றன. பெரியகுளமே அவரை கெளரவத்துக்குரிய மனிதராகப் பார்க்கிறது. ஆயினும் இனம்புரியாத மனச்சோர்வு கேசவராவை ஆட்கொண்டு தளர்ச்சியடைய வைக்கிறது. அத்தளர்ச்சிக்கான காரணம் அவருக்கே புரியாத புதிராக இருக்கிறது. எதிர்த்து நிற்க ஆட்டக்காரன் கிடைக்காத பயில்வான் போல அவர் தளர்ந்துவிடுகிறார். காரணமே இல்லாமல் சுற்றியிருப்பவர்களிடம் சிடுசிடுப்போடு பேசத் தொடங்குகிறார்.

0

அந்த ஆண்டில்தான் இரண்டாம் உலகப்போர் தொடங்குகிறது. இந்தியாவின் சம்மதமில்லாமலேயே இங்கிலாந்து அரசு தனக்குத் துணையாக இந்தியா நிற்கும் என்று அறிவிக்கிறது. அது உண்மையில்லை என்கிற வகையில் காந்தியடிகள் ஓர் அறிக்கையை வெளியிடுகிறார். நாடெங்கும் மாகாணங்களில் ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் கட்சி ஆட்சிப்பொறுப்பைத் துறந்து சட்டசபையை விட்டு வெளியேறி, போருக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்குகிறது. பெரியகுளத்தைவிட்டு எங்கேயாவது வெளியேறிச் சென்றால்தான் தன் மனத்தைச் சூழ்ந்த வெறுமையை வெல்லமுடியும் என நினைத்த கேசவராவ் இங்கிலாந்து ராணுவ வைத்தியப்படையில் சேர்ந்துவிடுகிறார்.

அவர் அத்தருணத்தில் எடுத்த முடிவு அவர் பின்பற்றிய காந்தியக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதை அவர் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார். ஆயினும் ‘மருத்துவர்களின் கடமை புனிதமானது. சிப்பாயின் கடமையிலிருந்து வேறுபட்டது. அதர்மக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட போர்களிலும் மருத்துவர்கள் பாரபட்சமின்றி கடமையாற்றுவது மிகமுக்கியமானது’ என எப்போதோ ஒரு காலத்தில் காந்தியடிகள் குறிப்பிட்ட வாசகத்தை நினைவுக்குக் கொண்டுவந்து, தன் செயலுக்கு தானே ஒரு நியாயத்தைக் கற்பித்துக்கொள்கிறார் கேசவராவ்.

முதலில் அவர் இந்திய எல்லைப்படையில் சிறிது காலம் பணிபுரிகிறார். ஜப்பானியர் யுத்த தர்ம எச்சரிக்கையை மீறி அமெரிக்காவுக்குச் சொந்தமான பேர்ல் ஹார்பர் என்னும் துறைமுகத்தை வெடிகுண்டு வீசி அழிக்கிறார்கள். உடனே அமெரிக்கா நடுநிலை குலைந்து போரைத் தொடங்குகிறது. சிங்கப்பூரைக் காத்து நின்ற ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸ் என்னும் பிரிட்டிஷ் கப்பலைத் தாக்குகிறது. உடனே இந்திய எல்லையில் இருந்த படைகள் சிங்கப்பூரை நோக்கிச் செல்கின்றன. கேசவராவும் அப்படையுடன் செல்கிறார். மோசமான போர்ச்சூழலில் சிக்கி அவர் பல இடங்களில் அலைகிறார். ஒரு தீவில் போர்க்கைதிகளின் கூட்டத்தில் ஒருவராக அவரும் அகப்பட்டுத் தவிக்கிறார். போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, அமெரிக்கா ஜப்பானைச் சேர்ந்த ஹிரோஷிமா நகரின்மீது முதன்முறையாக அணுகுண்டை வீசித் தாக்குகிறது. பல நூறு மைல்கள் சுற்றளவில் அந்த நகரம் தரைமட்டமாகிறது. ஹிட்லர் தொடங்கிய போர் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வருகிறது. ஹிட்லரும் மறைந்துவிடுகிறார். இந்தியாவுக்குத் திரும்பும் படைவீரர்களோடு கேசவராவும் தாய்நாட்டுக்குத் திரும்பி வருகிறார்.

பெரியகுளத்தில் அவர் தொடங்கிவைத்த நிறுவனங்கள் எல்லாம் சிறப்பான வகையில் செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் அவருடைய குடும்பம் நிலைகுலைந்து காணப்படுகிறது. அவருடைய பெற்றோர் இருவரும் உயிருக்குப் போராடியபடி படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகியிருக்கிறார்கள். மனைவி சோர்ந்து துவண்டு காணப்படுகிறாள். பழைய ஊக்கத்தை இழந்த கேசவராவ் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் மூழ்கித் தவிக்கிறார்.

அத்தருணத்தில் ஒரு விசாரணைக்காக உடனடியாக டில்லிக்குப் புறப்பட்டு வருமாறு அவருக்கு ஒரு தந்தி வருகிறது. ஒரு மாத காலம் தினந்தோறும் அந்த விசாரணை நடைபெறுகிறது. எதிரிநாட்டுக் கைதியைப்போல அரசு அவரை நடத்துகிறது. அவமானத்தில் அவர் மனம் குன்றிவிடுகிறார். ‘நான் போர் நடைபெற்ற காலம் முழுதும் பிரிட்டன் அரசுக்கு விசுவாசமாகவே இருந்தேன். அதனால் ஜப்பானிய ராணுவம் அவர்களுடன் நான் ஒத்துழைக்கவில்லை என என்னை ஒரு தீவில் கைதியாக வைத்திருந்தனர். இப்போது நீங்களும் என்னை துரோகியாகக் கருதி விசாரணை நடத்துகிறீர்களே, இது என்ன நியாயம்?’ என்று மனமுடைந்து கேள்வி கேட்கிறார். ஆயினும் அவர் குரல் விசாரணைக்குழுவில் இருந்தவர்களின் காதுகளை எட்டவில்லை. விசாரணையில் திருப்தி அடையாத அதிகாரிகள் கேசவராவைச் சிறையில் அடைத்துவைக்கின்றனர். வேறு வழியில்லாமல் அதிகாரிகள் சொன்னவாறு ‘நான் தெரிந்தோ தெரியாமலோ சந்தர்ப்பக் கேட்டாலோ செய்த பிழைக்காக வருந்துகிறேன்’ என்று எழுதிக் கொடுத்த பிறகு அவரை விடுதலை செய்கிறார்கள். அதற்குப் பிறகே அவர் பெரியகுளத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்.

பெரியகுளத்துக்கு அவர் திரும்பி வந்த சில நாட்களிலேயே அவருடைய பெற்றோர் அடுத்தடுத்து இயற்கையெய்திவிடுகிறார்கள். அவருடைய மகன் பொதுவுடைமைக்கட்சியில் இணைந்து பம்பாய் பக்கம் புறப்பட்டுச் சென்றுவிடுகிறான். அவர் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. மன அமைதிக்காக அவரும் பல ஊர்களுக்கும் கோடை வாசத்தலங்களுக்கும் சென்று தங்கிவிட்டுத் திரும்புகிறார். எந்த இடத்திலும் அவருக்கு, அவர் தேடிய அமைதி கிடைக்கவில்லை. ஒருநாள் வெளியூரில் அவர் தங்கியிருந்த வீட்டில் உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துவிடுகிறது. ஒரு காலத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த கேசவராவ் இன்னொரு காலத்தில் செயலற்ற நிலையில் மறைந்துவிடுகிறார்.

0

மக்களுக்கு ஆத்மார்த்தமாக சேவை புரிந்துவந்த கேசவராவ் திடீரென எதிர்பாராத கணத்தில் அனைத்தையும் துறந்து போர்முனையில் தொண்டாற்றுவதற்குச் செல்லும் முடிவை ஏன் எடுத்தார் என்பது மிகப்பெரிய புதிர். அந்தப் புதிருக்கான விடையைக் கண்டறிவது எளிய செயலல்ல.

கேசவராவின் அகம் தீவிரம் கொண்டிருந்த காலத்தில் திரும்பும் திசையிலெல்லாம் தொண்டு நிறுவனங்களை உருவாக்கும் வேகத்துடன் செயல்படுகிறார். அந்த வேகமே அவரைச் சாரணர் இயக்கச் செயல்பாடுகளிலிருந்து விடுபட்டு நிற்கவைக்கிறது. அவர் தொடங்கிய எல்லா அமைப்புகளும் அவர் நினைத்திருந்த விதமாகவே மக்களுக்குத் தொண்டாற்றுவதில் முனைப்போடு செயல்பட்டு குறுகிய காலத்திலேயே மக்களிடையில் அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் ஈட்டிக்கொடுக்கின்றன. ஒவ்வொரு அமைப்புக்கும் அவருக்கு இணையான தொண்டுள்ளம் கொண்ட தோழமை உள்ளங்களே நல்ல நிர்வாகிகளாக அமைகிறார்கள். அடுத்தடுத்த வெற்றிகள், அதுவரை அவர் ஆற்றிய வேலைகள் அனைத்தையும் எளியவையாகக் கருத வைக்கின்றன. அதனால் உருவான வெறுமையையும் சலிப்பையும்தான் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தோன்றுகிறது.

நீச்சலறிந்தவன் முழங்கால் அளவுக்கே ஓடும் நீர்ப்பரப்பில் நிற்க நேர்ந்ததைப்போல கேசவராவ் தவிக்கத் தொடங்குகிறார். அத்தவிப்பின் காரணமாக, இன்னும் கடினமான சவாலைத் தேடிப் பற்றிக்கொள்ள அவர் மனம் விரும்புகிறது. அதனாலேயே அவர் உலகப்போரில் சேவை செய்யப் புறப்பட்டுச் செல்கிறார் என்று தோன்றுகிறது. முதலில் சாரணர் இயக்கத்திலிருந்து காந்திய இயக்கத்துக்கும், பிறகு அங்கிருந்து உலகப்போர் சேவைக்கும் என இடம் மாறிச் செல்வதற்கும் இதுதான் காரணமாக இருக்குமோ என்று எண்ணவைக்கிறது.

0

செயலூக்கம் ஒருவருடைய நெஞ்சில் எந்த அளவுக்கு ஒரு மனித மனத்தில் தீவிரம் கொள்கின்றது என்பதைக் கண்டறியும் பயணமாகவே இந்த நாவலைக் கல்யாணசுந்தரம் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மனிதனின் மனத்துக்குள் ஊடுருவிச் செல்லும் முயற்சியாகவே இந்த நாவலைக் கருதலாம். சிறைப்பட நேர்ந்து சொல்லொணாத் துயரத்தைத் துய்க்க நேர்ந்த தருணத்தில்கூட கேசவராவின் மனம் இருளில் மூழ்கிவிடவில்லை என்பதையும் எவர்மீதும் கசப்பை வெளிப்படுத்தவில்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். தன்னியல்பாகவே அவர் வெளிச்சத்தை நோக்கி எழுந்துவருகிறார்.

கேசவராவின் வாழ்க்கை நான்கு பகுதிகளாக இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிறது. முதல் பகுதியில் அவர் சாரணர் இயக்கத் தொண்டர். மிகப்பெரிய மாகாண அளவிலான ஒரு மாநாட்டை நடத்திமுடித்ததோடு அது நிறைவடைகிறது. இரண்டாவது பகுதியில் காந்தியடிகளின் வழியில் ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் அடுத்தடுத்து தொண்டு நிறுவனங்களை உருவாக்கும் முனைப்பு சித்தரிக்கப்படுகிறது. அடுத்த மூன்றாவது பகுதியில், அவர் உலகப்போர் நிகழும் இடங்களுக்குச் சென்று இடர்ப்படும் வீரர்களுக்கு மருத்துவச்சேவை ஆற்றுவதும், அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக அந்நிய நாட்டின் தீவொன்றில் சில ஆண்டுகள் சிறைப்பட்டு துன்பத்தில் உழல்வதும் சித்தரிக்கப்படுகிறது. நான்காவது பகுதியில் விடுதலை பெற்று அவர் தன் சொந்த கிராமத்துக்கே திரும்பிவருவதும் எச்செயலிலும் முனைப்போடு ஈடுபடமுடியாத ஒரு தவிப்போடு வாழ்ந்து மறைவதும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

0

சமூக கெளரவம் நிறைந்த முதல் பகுதி வாழ்க்கையையே அவர் தொடர்ந்திருக்கலாம் என்று முதல் வாசிப்பில் ஒரு வாசகருக்குத் தோன்றக்கூடும். ஆனால் இயல்பிலேயே தொண்டுள்ளம் கொண்ட கேசவராவால் அவ்விதமாக வாழ்வது சாத்தியமில்லை. இரண்டாவது பகுதி வழியில் அவர் நிறைவுற்று நல்லவிதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால், விரித்துரைக்கமுடியாத ஏதோ ஒரு வெறுமையும் சலிப்பும் அவரை மூன்றாவது பகுதியை நோக்கி இழுத்துச் சென்றுவிடுகிறது. வெவ்வேறு விதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் மூன்று விதமான வாழ்க்கைமுறையிலும் சிக்கியதால், அவருடைய நான்காவது பகுதி வாழ்க்கை குழப்பமும் அமைதியின்மையும் ஒருங்கே அமைந்த ஒன்றாகச் சுருங்கி மரணத்துக்கு வழிவகுத்து விடுகிறது.

வாழ்க்கைப்பாதை என்பது எப்போதும் முன்னோக்கிச் சென்றுகொண்டே இருக்கக்கூடிய ஒரு பாதைதானே தவிர, ஒருபோதும் அதன் வழியாகத் திரும்பிவருவது சாத்தியமில்லை என்பது திகைக்கவைக்கும் உண்மை. ‘எண்ணித் துணிக கருமம்’ என வள்ளுவர் அழுத்தம் கொடுத்துச் சொல்வதற்கு அதுதான் காரணம். சக்கரவியூகத்தில் காலடி எடுத்துவைக்கிற அபிமன்யுவைப்போல, திரும்பிவர முடியாத பாதையில்தான் ஒவ்வொருவரும் நடக்கவேண்டும் என்பதுதான் இந்த வாழ்க்கையின் விதி.

இப்படி நான்கு பகுதிகளாகப் பிரிந்துவிட்ட ஒரு மனித வாழ்வைச் சித்தரிக்கும் போக்கில் மனித மனத்தில் காரணமேயில்லாமல் வெறுமையும் சலிப்பும் ஏன் தோன்றுகின்றன என்னும் மானுடரின் புரிதலுக்கு அப்பாற்பட்ட புதிரான புள்ளியை கல்யாணசுந்தரம் அடையாளம் காட்டுகிறார். இந்தப் புதிரான அம்சமே, இருபது வருஷங்கள் நாவலுக்கு நல்லதொரு இலக்கியப்படைப்பு என்னும் தகுதியை அளிக்கிறது.

நாவலின் தொடக்கத்தில் கேசவராவுக்கும் சாவித்திரிக்கும் இடையில் நடைபெறும் உரையாடலில் ஒருவர் இன்னொருவரைப் பார்த்து பேச்சோடு பேச்சாக ‘சமையல் அடுப்பில் இரும்பு இளகாது. இரும்புக்கூழ் உருக்கும் உலையில் கம்பங்கூழ் காய்ச்சமுடியாது’ என்றொரு சொலவடையை நகைச்சுவையோடு பகிர்ந்துகொள்வதாக ஒரு குறிப்பு உள்ளது. நாவலை வாசித்துமுடிக்கும் தருணத்தில் அப்பழமொழி நினைவில் மிதந்தெழுகிறது.

கல்யாணசுந்தரம் சுட்டிக்காட்ட விரும்பும் புதிரான அம்சத்துக்கு இந்தப் பழமொழி பொருத்தமான விடையாக இருக்குமோ என நினைத்து ஒருகணம் மனம் மலர்கிறது. ஆயினும் அது தோற்றம்தானே தவிர, உண்மையல்ல என்பது ஓரிரு கணங்களிலேயே புரியத் தொடங்குகிறது. தான் ஒரு சமையல் அடுப்பா அல்லது உருக்கும் உலையா என தான் வாழும் காலத்திலேயே தன்னைப்பற்றிய ஓர் உறுதியான மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்ள ஒருவராலும் முடிவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இந்த உலகத்தில் புதிருக்கான விடை என்பதும் ஒரு புதிராகவே இருப்பது மாபெரும் புதிர்.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *