Skip to content
Home » முப்பத்தாறு ரத்தினங்கள் #19 – அநீதியும் நீதியும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #19 – அநீதியும் நீதியும்

கு.ராஜவேலு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர். சேலத்தில் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப்பாடத்தில் இளங்கலை படிப்பைப் படிப்பதற்குச் சென்றார். அது 1942ஆம் ஆண்டு. அப்போதுதான் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். அடுத்த நாளே அவர் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியும் தடைசெய்யப்பட்டது.

காந்தியடிகளின் கைதை எதிர்த்து திருவையாறு அரசர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ராஜவேலுவும் அவர்களில் ஒருவர். அதற்கு முன்னரே 1940இல் தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்ற அனுபவம் அவருக்கு இருந்தது. எதிர்பாராத விதமாக மாணவர்கள் அமர்ந்திருந்த பந்தல் தீக்கிரையானது. அடுத்த நாள் முதல் திருவையாறு நகரெங்கும் கடையடைப்புக்கு ஆதரவு திரட்டியபடி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

எதிர்பாராத விதமாக ஊர்வலத்தின் முன்னால் வந்து இறங்கிய காவலர்கள் தடியடி நடத்தி மாணவர்கள் கூட்டத்தை விரட்டியடித்தனர். அப்போது ராஜவேலு வெள்ளமெனப் பெருகியோடிய காவிரியில் குதித்து நீரோட்டத்தோடு நீந்திச் சென்று திருப்பழனம் என்னும் ஊரில் கரையேறினார். அன்று மாலையில் திருவையாறுக்குத் திரும்பிவந்த அவரைக் கைது செய்தனர் காவலர்கள். அவரோடு மேலும் 42 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அனைவருக்கும் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலைக்குப் பிறகு சென்னை பச்சையப்பா கல்லூரியில் முதுகலை முடித்த ராஜவேலு கல்லூரி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

14 வயதிலேயே சிறுகதை எழுதத் தொடங்கியவர் ராஜவேலு. கல்லூரி மாணவராக இருக்கும்போது அவர் எழுதிய  ‘காதல் தூங்குகிறது’ என்னும் நாவல் கலைமகள் நடத்திய நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. சிறையில் கழித்த காலத்தில் கொடுமையே வடிவமெடுத்து வந்ததுபோல ஆர்ப்பாட்டம் செய்து நியாயமற்ற வழிகளில் நடந்துகொண்ட ஆங்கிலேய அதிகாரிகளைக் கண்டு சொல்லொணா வேதனையுற்றார் ராஜவேலு. அந்நிய ஆட்சியாளர்களுடைய அடக்குமுறைக்கு இலக்காகி எளிய மக்கள் அனுபவித்த துயரங்களை நேருறக் கண்டு மனம் கலங்கினார். மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை என்றாவது ஒருநாள் வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் தீப்பொறியாக அவர் நெஞ்சில் அன்றுமுதல் கனன்றுகொண்டே இருந்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையடைந்து வெளியே வந்தார். சிறையின் கொடுமைகளையெல்லாம் உடனே வெளிப்படுத்தவேண்டும் என மனம் துடித்தது. ஆயினும் அவர்மீது நிலையாக நீடித்திருந்த காவல்துறையினரின் கண்காணிப்பு அவரைச் செயல்படவிடாமல் தடுத்தது. கட்டுரை வடிவத்தில் எழுதினால் அது உடனடியாக ஓர் ஆவணமாகக் கருதப்பட்டு மீண்டும் ஆபத்து நெருங்கிவரும் என உணர்ந்த அவர் தான் சொல்ல நினைத்தவற்றையெல்லாம் ஒரு கற்பனைக் கதைக்கு நடுவில் ஊடுபாவாக வைத்து எழுதினார். அதுவே 1942 என்னும் தலைப்பில் ஒரு நாவலாக வடிவெடுத்தது.

தன் மனச்சுமையை இறக்கிவைக்கும் விதமாக அந்த நாவலை ராஜவேலு எழுதினாலும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அதை வெளியிட அவர் விரும்பவில்லை. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தபிறகே வெளியிட்டார். நாவலின் முதல் பதிப்பை, முன்னாள் முதல்வர் குமாரசாமி ராஜாவின் முன்னுரையோடு 1950இல் இன்பநிலையம் வெளியிட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு 1956இல் பாரிநிலையம் இரண்டாவது பதிப்பை வெளியிட்டது.

1942 நாவலை எழுதிய ராஜவேலு பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். சுதந்திரப்போராட்ட வீரர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து அவர் எழுதிய நூல் ‘வைகறை வான்மீன்கள்’ என்னும் தலைப்பில் வெளிவந்தது.

0

1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கி வைத்த காந்தியடிகளையும் பிற முக்கியத் தலைவர்களையும் ஆங்கிலேய அரசு அடுத்த நாளே கைது செய்து விசாரணையின்றி சிறையில் அடைத்தது. வழிகாட்டுவதற்குத் தலைவர்களற்ற சூழலில் குழம்பி நின்ற சிற்சில தொண்டர்கள் தமக்கு உசிதமெனத் தோன்றிய வழிகளில் செயல்படத் தொடங்கினர். விடுதலை பெற ஆயுதமேந்திய போராட்டமே உகந்த வழியென நினைத்த சிறு குழுவினர் திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த அத்தொண்டர்களின் ஆதரவைத் திரட்டினர்.

கோவையை மையமாகக் கொண்டு இயங்கிவந்த அத்தகு குழுவொன்று ரகசியமாகச் செயல்பட்டு ராணுவத் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு ரயிலைக் கவிழ்த்தது. மேலும், சூலூர் ராணுவ விமான நிலையத்துக்குள் நுழைந்து அங்கு நின்றிருந்த சரக்கு வாகனங்களையும் கொட்டகைகளையும் தீக்கிரையாக்கிவிட்டு விமான நிலையத்துக்கும் தீ வைத்துவிட்டுத் தப்பியது. அடுத்து சில நாட்களிலேயே அச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களையும் தொடர்பே இல்லாத அப்பாவிகளையும் கணக்குவழக்கில்லாமல் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.

இதே நேரத்தில் கோவையைச் சுற்றி இயங்கிய பஞ்சாலைகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட தொழிற்சங்கங்களின் காரணமாக முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் வெடித்தபடி இருந்தன. காவல்துறையினரோடு நெருங்கி உறவாடிய முதலாளிகள் தமக்குப் பிடிக்காத தொழிலாளிகளையெல்லாம் விமான நிலைய எரிப்போடு தொடர்புபடுத்தி கைது செய்யவைத்தனர். அவர்கள் அச்செயலில் ஈடுபட்டதை நேருக்குநேர் பார்த்ததாக விசாரணை நடக்கும் சமயத்தில் பொய்ச்சாட்சி சொல்வதற்கும் அந்த முதலாளிகள் ஆட்களை அனுப்பி வைத்தனர். செய்யாத குற்றத்துக்காக அந்த அப்பாவிகள் சிறையில் வாடினர். பிரச்சினை அளிக்கும் தொழிலாளர்களை இந்த முறையில் வெளியேற்றிவிட்டால் பஞ்சாலையை நடத்துவதில் பிரச்சினை வராது என்பது முதலாளிகளின் எண்ணமாக இருந்தது. 1942இல் கோயம்புத்தூர் நகரில் உண்மையாகவே நிலவிவந்த இத்தகு சூழலின் பின்னணியில் ராஜவேலு தன் நாவலை எழுதியிருக்கிறார்.

0

கோவையில் இயங்கிவரும் பஞ்சாலைகளில் ஒன்று அனுராதா ஆலை. அதன் முதலாளி சுவாமிநாதன். பெரிய பணக்காரர். மக்கள் ஆதரவுக்காக காங்கிரஸில் இணைந்து கதராடை உடுத்தியிருப்பவர். அதே நேரத்தில் கைப்பணத்தைச் செலவு செய்து காவல்துறையினரின் நட்பையும் சம்பாதித்து வைத்திருப்பவர். சரியான சந்தர்ப்பவாதி. ஆலையில் தொழிலாளர் பிரச்சினை வெடிக்கும்போதெல்லாம் அப்பிரச்சினையைக் கிளப்பும் தொழிலாளர்களை ஏதேனும் பொய்வழக்கில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்பிவைக்கிறார் சுவாமிநாதன். அவருடைய ஒரே மகள் விஜயா என்கிற விஜயலட்சுமி. இன்ட்டர் வரையில் படித்திருப்பவள். வெளியூருக்கு அனுப்பிப் படிக்க வைக்க வசதி இருந்தும், அவர் அனுப்பவில்லை. கல்வியைத் தொடர்வதில் அவளுக்கும் ஆர்வம் இல்லை. சுவாமிநாதனுடைய சகோதரி மகன் வடிவேலன். சென்னையில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். பிறகு கோவைக்கே திரும்பிவந்துவிடுகிறான். விஜயாவை அவனுக்குத் திருமணம் செய்துகொடுக்கவேண்டும் என்பது அவருடைய திட்டமாக இருக்கிறது.

இன்ட்டர் படிக்கும்போது விஜயாவோடு படித்தவன் கண்ணப்பன். வறுமைப் பின்னணியிலிருந்து வந்தவன். வயதான பெற்றோர், ஒரு தங்கை அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. விஜயலட்சுமியின் கனிவான உரையாடலையும் உண்மையான அன்போடு அனைவரோடும் எளிதில் கலந்து விடுகிற பழக்கத்தையும் கண்டு அவள்மீது அவனுக்கு ஓர் ஈடுபாடு பிறக்கிறது. அவளுக்கும் அவன்மீது ஒரு நாட்டம் தோன்றுகிறது. இருவரும் ஒருவரிடமொருவர் தம் எண்ணத்தை வெளிப்படுத்தாமல் பழகுகிறார்கள். ஓய்வு நேரங்களில் எல்லாம் இருவரும் உரையாடி மகிழ்கிறார்கள். படிப்பை முடிக்கும் தருணத்தில்தான் அவள் துணிச்சலாக கண்ணப்பனிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறாள். ஆனால் வறுமையில் சிக்கி இருக்கும் தன்னைப்போன்ற ஓர் எளியவனுக்கு காதல் என்பது எட்டாக்கனி என்கிற எண்ணத்துடன் கண்ணப்பன் தன் ஆசையை வெளிப்படுத்தாமல் தன் நெஞ்சிலேயே புதைத்துக்கொள்கிறான்.

இன்ட்டர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் கண்ணப்பனால் படிப்பைத் தொடரமுடியவில்லை. குடும்பச்சூழல் காரணமாக அவன் வேலைக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. அவன் கல்விக்குத் தகுந்த வேலை கிடைக்கவில்லை. கோவையிலேயே பெற்றோருக்கு அருகில் இருக்கவேண்டியிருந்ததால் சுவாமிநாதனின் அனுராதா ஆலையில் ஒரு தொழிலாளியாக வேலைக்குச் சேர்கிறான். அந்த வருமானத்தில்தான் குடும்பம் நடைபெறுகிறது.

0

ஆலையில் நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் அடிக்கடி சின்னச்சின்ன பிரச்சினைகள் உருவாகின்றன. அப்போதெல்லாம் கண்ணப்பன் அதற்காகக் குரல் கொடுத்துத் தீர்த்துவைக்கிறான். அவன் நல்ல தொழிலாளியாக வேலை செய்தாலும், இந்தக் காரணத்துக்காக நிர்வாகத்துக்கும் முதலாளிக்கும் பிடிக்காதவனாக இருக்கிறான்.

கண்ணப்பனின் அப்பா உடல்நலக்குறைவின் காரணமாக திடீரென படுத்த படுக்கையாகிவிடுகிறார். அவருக்கு அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததால் விடுப்பெடுத்துக்கொள்கிறான் கண்ணப்பன். ஒருநாள் அவருடைய உடல்நிலை கைமீறிப் போய்விடுகிறது. அவன் உடனடியாக ஓடோடி அவரைச் சோதிப்பதற்காக ஒரு மருத்துவரை அழைத்து வருகிறான். மருத்துவர் படுக்கையில் இருக்கும் அவன் அப்பாவைப் பரிசோதிக்க முற்படுகிறார்.

அந்த நேரத்தில் நாலைந்து காவலர்கள் திபுதிபுவென்று அவனுடைய வீட்டுக்குள் நுழைகிறார்கள். ராணுவத்தளத்தைத் தாக்கிய கூட்டத்தோடு தொடர்புகொண்டவன் என்று கண்ணப்பன்மீது குற்றம் சுமத்தி அவனைக் கைது செய்ய வந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர். தனக்குப் பிடிக்காத அவனை, ஆலையிலிருந்து அப்புறப்படுத்த சுவாமிநாதன் போட்ட திட்டத்தின் விளைவு அது. கண்ணப்பனின் கெஞ்சுதல்கள் காவலர்கள் முன் எடுபடவில்லை. அந்நேரத்தில் அவனுடைய அப்பாவின் நாடியைப் பரிசோதித்த மருத்துவர் அவருடைய உயிர் பிரிந்துவிட்ட செய்தியைத் தெரிவிக்கிறார். அதைப்பற்றிக் கவலைப்படாமல் கண்ணப்பனைக் கைது செய்து அழைத்துச் செல்வதிலேயே காவலர்கள் குறியாக இருக்கின்றனர்.

ஒரு தந்தைக்கு மகன் செய்யவேண்டிய இறுதி மரியாதையைச் செய்ய அவனை அனுமதிக்குமாறு மருத்துவர் காவலர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். மருத்துவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு காவலர்கள் காத்திருக்கச் சம்மதிக்கின்றனர். இரவு கவிந்த நேரம் என்றாலும் வேகவேகமாக இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. உறவினர்களும் நண்பர்களும் இறந்தவருடைய உடலைச் சுடுகாட்டுக்குச் சுமந்துசெல்கின்றனர். வேகவேகமாக சிதை தயாராகிறது. கண்ணப்பன் சிதைக்குத் தீ மூட்டுகிறான். அதுவரை காத்திருந்த காவலர்கள் அவனை உடனடியாகக் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள்.

0

ஆறுமுகம் என்பவர் கோவையில் புண்ணாக்கு விற்கும் கடை நடத்திவருகிறார். வெளியுலகத்துக்குத்தான் அந்தத் தோற்றமே தவிர, திரைமறைவில் திருட்டு வணிகம் செய்து பணம் சம்பாதிக்கிறார். கள்ளமார்க்கெட்தான் அவர் புழங்கும் உலகம். உள்ளூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் பிற காவலர்களுக்கும் சீரான இடைவெளியில் அவர் பணத்தை விநியோகித்துவிடுவதால் எச்சிக்கலிலும் அகப்படாமல் தப்பிவிடுகிறார். எப்போதாவது பிரச்சினையின் தீவிரம் அதிகமாகிவிடும் சமயத்தில் கவர்னரை நேரில் சந்தித்து அவருக்கு உரிய பங்கை ரகசியமாகக் கொடுத்து, அந்தத் தீவிரத்தைக் காணாமல் போகச் செய்துவிடுவார்.

சுவாமிநாதனுக்கு எப்படியோ ஆறுமுகத்தின் தொடர்பு கிடைத்துவிடுகிறது. அவருடைய வெண்ணெய்போன்ற வழவழப்பான பேச்சில் சுவாமிநாதன் மயங்கிவிடுகிறார். செல்வம் சேர்க்கும் ஆசையில் ஆறுமுகத்தோடு சேர்ந்து கள்ள வணிகத்தில் ஈடுபடுகிறார். பணம் சேரச்சேர அந்த ஆசை பெருகியபடி இருக்கிறது.

0

கண்ணப்பன் சிறையில் இருக்கும் சமயத்தில் அவனுடைய தாயாரையும் தங்கையையும் அடிக்கடி சந்தித்து ஆறுதலாகப் பேசிக்கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாள் விஜயா. அவனுடைய வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரத்திலெல்லாம் விஜயாவே அவ்விருவரையும் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்கிறாள். காவலர்களின் அனுமதியோடு கண்ணப்பனைச் சந்தித்து உரையாடுவதற்கு வழி செய்கிறாள். அந்தச் சிறு மகிழ்ச்சி அவர்களுக்கு உயிர் வாழ்வதற்கான ஆற்றலை வழங்குகிறது.

விசாரணையின்போது கண்ணப்பன் அளிக்கும் வாக்குமூலம் அந்த வளாகத்தில் பெரியதொரு பேசுபொருளாக மாறிவிடுகிறது. அந்த விசாரணையே காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து நடத்தும் நாடகம் என நேரிடையாகக் குற்றம் சுமத்துகிறான் கண்ணப்பன். செய்யாத குற்றத்துக்காக அப்பாவிகளுக்குத் தண்டனை வழங்குவது பண்பாடற்ற செயல் என்று கண்டனம் செய்கிறான்.

சில நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு கண்ணப்பனுடைய வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு நாளன்று அவன் குடும்பத்தினரும் விஜயாவும் நண்பர்களும் நீதிமன்றத்துக்கு வருகின்றனர். விசாரணை முடிவுற்ற ஒவ்வொருவரையும் கூண்டில் நிற்கவைத்து, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தீர்ப்பைப் படித்துவிட்டுச் செல்கிறார் நீதிபதி. தனக்கு என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது என்றே பல இளைஞர்களுக்குத் தெரியவில்லை. நீதிமன்றத்துக்கு வெளியே அவர்களை அழைத்துவரும் பத்திரிகையாளர்கள் தீர்ப்பின் சாராம்சத்தை அவர்களுக்குத் தமிழில் எடுத்துச்சொல்லிப் புரியவைக்கின்றனர்.

கண்ணப்பனுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. அதைக் கேட்டு அவன் தாயார் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிடுகிறார். விஜயாவும் பிறரும் அவரைத் தாங்கி நின்று மயக்கம் தெளிய உதவி செய்கின்றனர். காவலர்கள் கண்ணப்பனை அழைத்துச் செல்ல அவசரப்படுகின்றனர். ஒரு சில நிமிடங்கள் தன் தாயிடமும் தங்கையிடமும் விஜயாவிடமும் நண்பர்களிடமும் பேசுவதற்கு அனுமதி பெறுகிறான் கண்ணப்பன். தண்டனைக்காலத்தை முடித்துவிட்டு விரைவில் திரும்பிவிடுவதாகவும் தைரியமாக இருக்குமாறும் தன் தாயாரிடம் தெரிவிக்கிறான். அவரை நல்லபடி கவனித்துக்கொள்ளுமாறு தன் தங்கை கனகாவிடமும் விஜயாவிடமும் கேட்டுக்கொள்கிறான். அதற்குள் அவசரப்படுத்தும் காவலர்கள் அவனை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுவிடுகின்றனர். அன்று இரவே கண்ணப்பனையும் தண்டனை பெற்ற பிறரையும் ரயிலில் ஏற்றி பெல்லாரிக்கு அழைத்துச் செல்கின்றனர். பெல்லாரியில் அலிப்புரம் சிறையில் அனைவரும் அடைக்கப்படுகின்றனர்.

0

ஏறத்தாழ ஓராண்டு கழிந்துவிடுகிறது. கண்ணப்பனின் நண்பர்களான வடிவேலனும் சுந்தரமூர்த்தியும் அவன் தாயாரையும் தங்கையையும் பொறுப்பாகக் கவனித்துக்கொள்கின்றனர். விஜயாவும் அடிக்கடி அவர்களுடைய வீட்டுக்கு வந்து ஆறுதல் அளிக்கும் வகையில் உரையாடிவிட்டுச் செல்கின்றாள்.

நாளுக்கு நாள் அம்மாவின் உடல்நிலை மோசமடையத் தொடங்குகிறது. உயிர் பிழைக்கமாட்டோம் என்பதை எப்படியோ தன் உள்ளுணர்வால் உணர்ந்துகொண்ட அம்மா கடைசி முறையாக கண்ணப்பனைப் பார்க்க விரும்புகிறாள். அவள் உடல்நிலையைப் பரிசோதிக்க வந்த மருத்துவர் அவருக்கு ஊசி வழியாக மருந்தைச் செலுத்துகிறார். அந்த மருந்தின் ஆற்றலால் ஒரு வார அளவுக்கு அவருடைய ஆயுட்காலத்தை நீட்டிக்கமுடியும் என்று தெரிவித்துவிட்டுச் செல்கிறார். அந்தக் குறுகிய காலத்துக்குள் எப்படியாவது கண்ணப்பனை வரவழைக்க சுந்தரமூர்த்தியும் வடிவேலனும் திட்டமிடுகின்றனர்.

வெளியிலிருந்து அஞ்சல் வழியாக அனுப்பப்படும் எந்தக் கடிதத்தையும் சிறை நிர்வாகம் கைதிகளுக்குக் கொடுப்பதில்லை. கடிதம் எழுதும் வாய்ப்பை கைதிகளுக்கும் கொடுப்பதில்லை. அதனால் அம்மாவின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவிக்க நேரில் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று வடிவேலனும் சுந்தரமூர்த்தியும் பேசிக்கொள்கிறார்கள். அதனால் அன்று இரவே இருவரும் ரயிலில் பெல்லாரிக்குப் புறப்படுகிறார்கள்.

பெல்லாரியில் சிறைக்கு வெளியே தெருவில் சுதந்திரப்போராட்ட வீரனைப்போல கொடியேந்தி விடுதலை முழக்கமிட்டு நடந்த சுந்தரமூர்த்தியை காவலர்கள் அக்கணமே கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சக கைதிகள் வழியாக கண்ணப்பன் அடைபட்டிருக்கும் இடத்தை எப்படியோ கண்டறிந்து அவனிடம் அம்மாவின் உடல்நிலை பற்றிய செய்தியைத் தெரிவிக்கிறான். அதைக் கேட்டு மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுகிறான் கண்ணப்பன். சட்டத்தில் இடமிருந்தாலும், இரும்பு இதயம் கொண்ட சிறை நிர்வாகத்திடம் இருந்து வெளியே செல்ல அனுமதி பெறுவது இயலாத செயல் என்பதை அவன் புரிந்துகொள்கிறான். அந்த இயலாமையே அவனுடைய துயரத்தைப் பலமடங்காகப் பெருக்கிவிடுகிறது. நீண்ட நேரம் தனிமையில் யோசித்த அவன் அன்றிரவே சிறையிலிருந்து தப்பிக்க முடிவெடுக்கிறான். இரவு உணவுண்ணச் செல்லும் வேளையில் தன் திட்டத்தை நண்பனிடம் தெரிவித்துவிட்டு திட்டத்தைச் செயல்படுத்தும் வழிமுறைகளைப்பற்றி சிந்திக்கத் தொடங்குகிறான். நள்ளிரவில் ஒருவரும் அறியாத வகையில் சிறையிலிருந்து தப்பித்துவிடுகிறான்.

நேர்வழியில் பயணம் செய்யாமல் ஊரூராக மாறிமாறிப் பயணம் செய்து ஒரு நள்ளிரவு நேரத்தில் கோவைக்கு வந்து சேர்கிறான் கண்ணப்பன். அவன் வீட்டை அடைந்தபோது, அவன் தாய் மகனுடைய பெயரைச் சொல்லிப் புலம்பியபடி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். கண்ணப்பன் சட்டென அவர் முன்னால் தோன்றி அம்மாவை வாய்விட்டு அழைக்கிறான். மகன் முகத்தைப் பார்த்த நிறைவில் ஒன்றிரண்டு சொற்கள் பேசிய பிறகு அவருடைய மூச்சு அடங்கிவிடுகிறது. அவன் வருகையை நினைத்து மகிழ்வதா, தாயின் மறைவை நினைத்து துயரத்தில் மூழ்குவதா என எதுவும் புரியாமல் கனகாவும் விஜயாவும் தடுமாறுகின்றனர்.

அம்மாவின் மறைவுச்செய்தியைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருகின்றனர். அந்த இடத்தில் கண்ணப்பனைப் பார்த்ததும் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை ஊகித்துக்கொண்ட அவர்கள் உடனடியாக இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அந்த நள்ளிரவு நேரத்திலேயே அம்மாவின் உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கண்ணப்பன் எல்லாச் சடங்குகளையும் செய்து அம்மாவின் சிதைக்குத் தீ முட்டுகிறான். கனகாவைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை விஜயாவிடம் ஒப்படைத்துவிட்டு, அன்றிரவே அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் சரணடைவதற்குச் செல்கிறான் கண்ணப்பன். அப்பாவின் இறுதிச்சடங்கிலிருந்து தொடங்கும் அவனுடைய கதை அம்மாவின் இறுதிச்சடங்கில் முடிவடைகிறது.

0

காவல்துறையில் நிகழ்ந்த மாற்றத்தின் விளைவாக, புதிதாக வந்த காவலர்கள் ஆறுமுகத்தோடு இணைந்து சுவாமிநாதன் செய்த கள்ள வணிகத்தைக் கண்டுபிடித்துவிடுகின்றனர். புதிய அலுவலர்களை வழிக்குக் கொண்டுவர முடியாமல் ஆறுமுகமும் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றார். அவரைக் காப்பாற்ற பழைய கவர்னரும் இல்லை. பொறுப்பேற்றிருக்கும் புதிய கவர்னரை அவரால் நெருங்க முடியவில்லை. கைது செய்து சிறையில் அடைப்பதற்காக காவலர்கள் எத்தருணத்தில் வேண்டுமானாலும் வீட்டுக்கு வரக்கூடும் என்று அஞ்சி அஞ்சி வேதனையில் மூழ்குகிறார் சுவாமிநாதன். ஆறுமுகம் சொல்லும் ஆறுதல் சொற்களை ஏற்க அவர் மனம் இடம்கொடுக்கவில்லை. பணத்தின் மீதான பேராசையின் விளைவாக தவறான வழியில் இறங்கியதை நினைத்து அவமானத்தில் வேதனைப்படுகிறார். பிறர் பேசும் ஏளனச்சொற்கள் தன் காதில் விழும் முன்னர் இந்த உலகத்தைத் துறந்துவிடவேண்டும் என்கிற எண்ணத்தில் தன் அறைக்குச் சென்று தற்கொலை செய்துகொள்கிறார்.

0

கதையில் இடம்பெற்றிருப்பவர்கள் அனைவரும் கற்பனை மாந்தர்கள் என்றபோதும் கதைச்சூழலும் கதை நிகழும் பின்னணியும் உண்மையானவை. அவற்றை வாசகர்களிடம் பகிர்ந்துகொள்வதற்காகவே இந்த நாவலை எழுதியதாகத் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ராஜவேலு. ஒருசில அத்தியாயங்களில் அவர் எழுதியிருக்கும் சிறைச்சித்திரங்கள் மனத்தை நடுங்கவைக்கின்றன.

இருவேறு சிறைகளில் நிகழ்ந்த காட்சிகள் இந்தப் படைப்பில் விரவியிருக்கின்றன. ஒன்று, கண்ணப்பன் விசாரணைக்கைதியாக இருந்த காலத்தில் அடைபட்டிருந்த கோவைச் சிறைச்சாலை. இன்னொன்று, அதே கண்ணப்பன் தண்டனைக்கைதியாக அடைபட்டிருந்த அலிப்புரம் சிறைச்சாலை. கைதிகளாக சிறையில் அடைபட்டிருக்கும் பலருக்கும் சுதந்திரப்போராட்டத்துக்கும் தொடர்பே இல்லை என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கிறது. காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து கண்களை மூடிக்கொண்டு நிகழ்த்திய கொடுங்கோல் ஆட்சியின் விளைவாக தேசபக்தர்களுக்கு இணையாக அப்பாவி மக்கள் அனுபவித்த துன்பத்துக்கு அளவே இல்லை என்னும் உண்மையையே இந்த நாவல் முன்வைக்கிறது. அந்தக் கூடுதல் விவரணைகளால் நாவலின் கலைத்தன்மைக்கு ஏற்பட்டிருக்கும் குறையை அவர் பொருட்படுத்தவில்லை.

விசாரணைக்கைதியாக இருந்த காலத்தில் கோவை சிறையில் வெவ்வேறு அறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளைப்பற்றி அளிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் மனம் நடுங்கவைக்கின்றன. பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிக்கிறார் ஒரு பெண்மணி. உண்மையில் அவர் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகப் பணிபுரிபவர். அந்தப் பள்ளியின் நிர்வாகி அந்த ஆசிரியை மிரட்டிப் பணியவைத்து அவரோடு அடிக்கடி உறவு கொள்கிறார். அந்த உறவின் விளைவாக அவள் கருவுற்றதும், அவர் அவளை அங்கிருந்து விரட்டியடித்துவிடுகிறார். வேலையும் பறிபோய்விடுகிறது. வயிற்றுப்பாட்டுக்கு வழியில்லாத அவள் தன் உடலையே விற்றுப் பிழைக்கத் தொடங்குகிறாள். அத்தொழிலில் ஈடுபட்டிருந்த சமயத்தில் ஒருநாள் அவள் காவலர்களின் பார்வையில் பட்டுவிடுகிறாள். காவலர்கள் அவளைக் கைது செய்து சிறையில் அடைத்துவிடுகின்றனர்.

இன்னொரு அறையில் அடைபட்டிருந்த ஒரு பட்டதாரியின் கைதுக்குப் பின்னாலும் இப்படி ஒரு கதை இருக்கிறது. பட்டம் பெற்றிருந்தபோதும் அவனுடைய படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கவில்லை. எல்லா இடங்களிலும் அவனை அவமானப்படுத்தி விரட்டியடிக்கிறார்கள். அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவன் ஒருநாள் இந்த உலகத்தைவிட்டே போய்விடும் முடிவோடு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்கிறான். துரதிருஷ்டவசமாக காவலர்கள் பார்வையில் சிக்கி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைக்கு வந்து விடுகிறான்.

சாப்பிட ஒன்றுமில்லாமல் தெருத்தெருவாக அலைந்த ஒருவன் ஏதோ ஒரு வீட்டுக்கு வெளியே வீசப்பட்டிருந்த எச்சில் இலையில் எஞ்சியிருந்த சோற்றைச் சாப்பிடுகிறான். அப்போது ஒரு குட்டிநாய் அவனைப் பார்த்துக் குரைக்கிறது. எவ்வளவு அதட்டினாலும் அது அங்கிருந்து செல்லவில்லை. குரைத்தபடியே இருந்த நாயை அகற்றுவதற்காக ஒரு கல்லை எடுத்து அதை நோக்கி வீசுகிறான். அது படாத இடத்தில் பட்டு அந்தக் குட்டி இறந்துவிடுகிறது. அந்தக் குட்டிநாய்க்குச் சொந்தக்காரன் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்துவிடுகின்றனர்.

விசாரணைக்கைதியாக அடைபட்டிருந்த கோவை சிறைச்சாலையின் சித்திரங்களைப்போலவே தண்டனைக்கைதியாக அடைபட்டிருந்த அலிப்புரம் சிறைச்சாலைச் சித்திரங்களும் அமைந்துள்ளன. தேசபக்தர்களைச் சிறையில் அடைப்பதற்காகவே அந்த இடத்தில் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த கிரிமினல் குற்றவாளிகளை சிறை நிர்வாகம் விடுதலை செய்து அறைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கின்றன. கொலைகாரர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் நாட்டில் நடமாடுவதற்கு இருக்கும் சுதந்திரம் தேசபக்தர்களுக்கு இருக்கக்கூடாது என நினைக்கிறது அரசாங்கம். தேசபக்தர்களுக்கும் மக்களுக்கும் இடையில் எவ்விதமான உறவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை அரசாங்கம் குறிக்கோளாகவே வைத்திருக்கிறது.

0

அநீதியே நீதியாக வேடம் பூண்டு உலா வந்த சமூகத்தில் என்னென்ன நடந்தன என்பதை வெளிப்படுத்துவதுதான் ராஜவேலு இந்த நாவலை எழுதியதன் முதன்மை நோக்கம். அந்நிய ஆதிக்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்துவதில் நாட்டம் செலுத்தி இந்த நாவலை எழுதியதாக அவரே இந்த நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

கரையாளர் எழுதிய ‘திருச்சி சிறை’, கல்கி எழுதிய ‘மூன்றுமாதக் கடுங்காவல்’ வரிசையில் ராஜவேலுவின் நாவலையும் நாம் வாசிக்கவேண்டும்.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *