இலங்கை எழுத்தாளர் நந்தியின் இயற்பெயர் செ.சிவஞானசுந்தரம். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். கொழும்பு மருத்துவக்கல்லூரியில் படித்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். மூன்றாண்டு காலம் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பிறகு இலண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து நான்காண்டுகள் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் இலங்கைக்குத் திரும்பி வந்து பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியபடி சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதினார். அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் அவர் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்தார்.
நந்தி எழுதிய முதல் சிறுகதை ‘சஞ்சலமும் சந்தோசமும்’ 1947இல் வீரகேசரி இதழில் வெளிவந்து வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் பல சிறுகதைகளை எழுதிவந்தாலும், அவருடைய முதல் தொகுதி ‘ஊர் நம்புமா?’ என்னும் தலைப்பில் 1966இல்தான் வெளிவந்தது. அதற்கு முன்பாகவே அவர் எழுதிய ‘மலைக்கொழுந்து’ நாவல் வெளிவந்து அவருக்குப் புகழைத் தேடித் தந்தது. அந்நாவல் 1964ஆம் ஆண்டுக்குரிய இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசைப் பெற்று வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. அந்த நாவலை தமிழ்நாட்டில் 1982இல் நர்மதா பதிப்பகம் மறுபிரசுரமாக வெளியிட்டது.
1993இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ விஞ்ஞானக் கலாநிதி பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. பல்கலைக்கழக வளாகத்திலும் வெளியுலகிலும் அனைவரோடும் நட்புணர்வோடு நெருங்கிப் பழகிய அவர் 2005இல் மறைந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவநூல்களையும் சில சிறார் நூல்களையும் அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். படைப்பிலக்கியங்களாக மூன்று நாவல்களும் மூன்று சிறுகதைத்தொகுதிகளும் வெளிவந்துள்ளன.
0
தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் அவலநிலைகளும் நெருக்கடிகளும்தாம் மலைக்கொழுந்து நாவலின் மையம். ஒரு நாடு தன் மலைப்பகுதிகளில் வளரும் தேயிலைச்செடிகள் மீது காட்டும் கரிசனத்தில் கால்பங்குகூட அத்தேயிலையை வளர்க்கும் தொழிலாளர்கள் மீது காட்ட மறுக்கும் சூழலில் அவர்களுடைய வாழ்வு துன்பத்தில் மூழ்கித் தத்தளிப்பதை நாவலாசிரியர் நந்தி பல்வேறு காட்சிச்சித்திரங்கள் வழியாக உணர்த்துகிறார்.
தேயிலை இலங்கை மண்ணில் உருவான பயிரில்லை. அசாமிலிருந்தும் சீனாவிலிருந்தும் கொண்டுசெல்லப்பட்ட தேயிலைச்செடிகளே ஆரம்பத்தில் மலைப்பகுதிகளில் தோட்டங்கள் உருவாகக் காரணமாக இருந்தன. நாளடைவில் அது ‘சிலோன் டீ’ என்ற தனி அடையாளத்துடன் உலகச்சந்தையில் விற்பினைப்பொருளாக வலம்வரத் தொடங்கியது. ஆனால் அதே தேயிலைச்செடிகளை நட்டு பராமரித்து திரும்பிய திசையெங்கும் பச்சைப்பசேலென்ற தோட்டங்களாக உருமாற்றிய தொழிலாளர்களுக்கு சிலோன் அடையாளம் கிடைக்கவில்லை. அவர்கள் சமூகத்தின் பார்வையில் தொடர்ந்து இந்தியர்களாகவே காட்சியளிக்கிறார்கள். சமூக மனத்தின் ஆழத்தில் பதிந்துவிட்ட இந்த வேற்றுமைப்பார்வையை ‘மலைக்கொழுந்து’ நாவல் வழியாக வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவருகிறார் நந்தி.
இலங்கையின் தேசிய வருமானத்தில் அறுபது விழுக்காடு தோட்டத் தொழிலாளிகளின் உழைப்பால் உருவாகிறது. ஆனால் அவர்களுடைய வாழ்வில் கல்வி வாய்ப்போ, சுகாதாரமான வீட்டு வசதியோ, தோட்ட முதலாளிகளிடம் நியாயத்துக்காக குரல் கொடுக்கும் உரிமையோ எதுவுமே இல்லை. தொழிலாளர்களை மிருகத்தைப்போல வேட்டையாடும் காவல்துறையினரின் அத்துமீறலைத் தடுக்க ஒரு சட்டமும் இல்லை. இப்படியெல்லாம் நிலவிய ஒரு வரலாற்றுச்சித்திரத்தை கண்முன் நிகழ்த்திக் காட்டுகிறார் நந்தி
0
மலைப்பகுதியில் ஏராளமான தேயிலைத்தோட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தோட்டத்துக்கும் முதலாளியாக இருப்பவர் ஓர் ஆங்கிலேயர். அவர் எங்கோ அயலூரில் ஒரு பங்களாவில் வசித்திருக்க, தேயிலைத் தோட்டத்தை ஒட்டி இருக்கிற பங்களாவில் வசிக்கும் மேலாளரே எல்லா வேலைகளையும் நிர்வகிக்கிறார். அவர் தன் நம்பிக்கைக்குரிய ஓரிருவரைத் தன் உதவியாட்களாக வைத்துக்கொண்டிருக்கிறார். தொழிலாளர்கள் அனைவரும் தோட்டத்தின் அடிவாரத்தில் லயன் வீடு என அழைக்கப்படுகிற ஓரறைக் கொட்டடியில் குடும்பத்துடன் வசிக்கிறார்கள்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கொட்டடி. அதிகாலையில் விழித்ததும் தேயிலைக் கொழுந்து கிள்ளுவதற்கு மலையேறிச் சென்றால் பொழுது சாய்ந்த பிறகே கொட்டடிக்குத் திரும்பமுடியும். பெண்கள் ஒருபுறத்திலும் ஆண்கள் ஒருபுறத்திலும் கொழுந்து கிள்ளுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 23 ராத்தல் கொழுந்து கிள்ளவேண்டும் என்பது விதி. குறைந்தால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.
ஒரு குடும்பத்தில் வசிக்கும் இளைய வயதினர், முதிய வயதினர் என எந்த வேறுபாடுமின்றி அனைவரும் கட்டாயமாக மலையேறி கொழுந்து கிள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும் வருகைப்பதிவு செய்யப்படும். அவர்களைக் கண்காணிப்பதற்காக ஒரு கங்காணி இருக்கிறார். அவரை ஒருவரும் ஏமாற்ற முடியாது. வயதில் சிறியவர்கள் மட்டுமே கொட்டடியில் இருக்கலாம். கைக்குழந்தை பராமரிப்புக்கு என தனியே ஒரு கொட்டடி இருக்கிறது. ஒரு பாட்டியின் மேற்பார்வையில் அது இயங்கிவருகிறது. கைக்குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் அக்குழந்தைகளை அந்தப் பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் செல்கிறார்கள்.
எங்கோ ஒரு சில தோட்டங்களில் மட்டும் ஆரம்பப்பள்ளிகள் இருக்கின்றன. ஐந்தாம் வகுப்பு வரை அங்கு நடக்கின்றன. அதற்கு மேல் படிக்கும் வசதி இல்லை. சுகாதார நிலையங்களும் ஒரு சில தோட்டங்களில் மட்டுமே இருக்கின்றன. பெரும்பாலான தோட்டங்களில் பள்ளி வசதியோ, மருத்துவ வசதியோ இருப்பதில்லை. எண்ணற்ற சிறார்கள் கல்வியறிவில்லாமலேயே வளர்கிறார்கள். அவசரமான மருத்துவ வசதி வேண்டுமென்றால், தொலைதூரத்தில் இருக்கும் ஏதோ ஒரு மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும். தோட்டத்தொழிலாளர்கள் தோட்டத்தைவிட்டு வெளியே செல்லமுடியாது. பொது இடங்களில் அவர்களைக் காண்பவர்கள், நாக்கூசாமல் கள்ளத்தோணி என அடைமொழி வைத்து அழைத்துப் பழிக்கிறார்கள்.
மலையகம் இப்படி இருந்த ஒரு காலகட்டத்தைத்தான் நந்தி தன் நாவலுக்கான களமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கதை நிகழுமிடம் மாணிக்கமலைத் தோட்டம். சின்னதுரை மகாராஜன் என்பவர் அந்தத் தோட்டத்தின் மேலாளர். அவர் தமிழரே என்றபோதும் தோட்டத்தில் வேலை செய்யும் தமிழர்களை அவர் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அவருடைய அப்பா தலவாக்கொல்லை எலிசபெத் எஸ்டேட்டில் கணக்குப்பிள்ளையாக இருந்தவர். சின்னதுரைக்கு மருத்துவம் படிப்பதில் ஆர்வம் இருந்தாலும் ஐ.சி.ஏ. தேர்வில் பலமுறை தோற்றதால் அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. அதனால் அவர் தந்தை தன் முதலாளியிடம் சொல்லி மாணிக்கமலைத் தோட்டத்தின் மேலாளர் பொறுப்பை வாங்கிக் கொடுத்து மாணிக்கமலைத் தோட்டத்துக்கு அனுப்பிவைத்தார்.
தோட்டத்தில் சின்னதுரைக்கு உதவியாக ஒரு டீ மேக்கர், டிஸ்பென்ஸர், கண்டக்டர், சில வேலையாட்கள் இருக்கிறார்கள். அனைவரும் தமிழர்களே என்றபோதும், அவர்கள் தொழிலாளர்களிடம் எவ்விதமான நட்புணர்வும் பாராட்டுவதில்லை. குறைந்தபட்சமாக அவர்களுக்கு ஒரு தொழிலாளி என்கிற கெளரவத்தைக்கூடக் கொடுப்பதில்லை. அவர்களை அடிமைகளாக நடத்துகிறார்கள். மேலாளருக்கு விருப்பப்பட்டபடி நடந்து, தனக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக்கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். அறமில்லாத வேலைகளில் ஈடுபடுவது பற்றி எவ்விதமான குற்ற உணர்வும் அவர்களிடம் இருப்பதில்லை. ஆறேழு தோட்டங்களுக்கு ஒன்றென இயங்கும் காவல்நிலையத்தில் பணிபுரிகிறவர்களும் மேலாளருக்கு உதவி செய்கிறவர்களாகவே இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் முன்னிரவு வேளைகளில் மேலாளரின் பங்களாவில் நடைபெறும் மதுவிருந்தில் அனைவரும் உற்சாகத்தோடு கலந்துகொள்கிறார்கள். மனத்தடை இல்லாமல் உரையாட அதை ஒரு நல்வாய்ப்பாக அனைவரும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
0
நாவலின் முக்கியப் பாத்திரம் ரங்கசாமி என்னும் தொழிலாளி. அவனுடைய மகள் வீராயி. தாயை இழந்தவள். அவர்களுடைய அடுத்த கொட்டடியில் வசிப்பவன் சிதம்பரம் என்னும் தொழிலாளி. அவன் மனைவியின் பெயர் பொட்டு. அவர்களுடைய மகள் வள்ளி. வள்ளியும் வீராயியும் பதினாறு வயது நிறைந்த பருவப்பெண்கள். இருவரும் தோழிகள். அனைவரும் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் உட்பட அத்தோட்டத்தில் பணிபுரியும் அனைவரும் கல்வி கற்க வாய்ப்பில்லாதவர்கள்.
ரங்கசாமியின் அக்காவுடைய குடும்பம் வேறொரு தோட்டத்தில் வேலை செய்தனர். அவர்களுடைய மகன் மலையப்பன். அதிர்ஷ்டவசமாக அத்தோட்டத்தில் ஓர் ஆரம்பப்பள்ளி செயல்பட்டது. அதன் விளைவாக அவன் ஐந்தாம் வகுப்பு வரை படித்தான். அதற்குள் அந்தத் தோட்ட நிர்வாகம் அப்பள்ளியை மூடி மாட்டுத்தொழுவமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. பெற்றோரோடு அவனும் சேர்ந்து கொழுந்து கிள்ளச் சென்றான். எதிர்பாராத வகையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் மலையப்பனின் பெற்றோர் இறந்துவிடுகிறார்கள். ஆதரவில்லாமல் நின்ற அவனைத் தன் தோட்டத்துக்கு அழைத்துவந்து தொழிலாளியாகச் சேர்த்துவிடுகிறான் ரங்கசாமி.
ரங்கசாமியின் படிப்பறிவு புற உலகத்தைப்பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கிறது. விடுமுறைப் பொழுதில் அருகிலிருக்கும் தோட்டங்களுக்குச் சென்று அங்கிருக்கும் நிலைமையை அறிந்துகொள்கிறான். தொழிலாளர்கள் எவ்விதமான உரிமையுமின்றி, வசதியுமின்றி, அடையாளமுமின்றி வாழும் வாழ்க்கையைப் பார்க்கப்பார்க்க அவனுக்கு வேதனையாக இருக்கிறது. தோட்டத்தொழிலாளர்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் தொழிற்சங்கத்தில் இணைகிறான். அவர்கள் நடத்தும் வகுப்புகளுக்குச் சென்று பல புதிய சமூகச்செய்திகளை எல்லாம் அறிந்துகொள்கிறான். அதன் வழியாக தேயிலைத் தோட்டத்தில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்பதைப்பற்றி அவனுக்கு ஒரு தெளிவு பிறக்கிறது. வயதில் இளைஞனாக இருந்தாலும் எல்லாத் தொழிலாளர்களிடமும் பேசி புரியவைத்து, அனைவரையும் தொழிற்சங்கத்தில் சேரவைக்கிறான்.
ஓய்வு கிட்டும்போதெல்லாம் மாணிக்கமலைத் தோட்டத்துக்கு அருகிலிருக்கும் பிற தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடி, அவர்களையெல்லாம் தொழிற்சங்கத்தில் இணையவைக்கிறான் மலையப்பன். அனைவரும் ஒரே சங்கத்தின்கீழ் திரண்டுவரும் வேளையில் அவனுடைய சொந்தத் தாய்மாமனான ரங்கசாமி அவனுக்கு எதிரானவனாக மாறிவிடுகிறான். மது அவனை மாற்றிவிடுகிறது.
ஏதோ ஒரு நாளில் இருமலுக்கு மருந்து வாங்குவதற்காக வந்த ரங்கசாமிக்கு, டிஸ்பன்சர் பதி மருந்தோடு கொஞ்சமாக மதுவையும் சேர்த்து அவனுக்கு அளிக்கிறான். அடுத்தடுத்த நாட்களில் மதுவின் அளவு கூடிய மருந்தைக் கொடுக்கிறான். நோய் குணமான பிறகும் அந்த மருந்துக்காக மீண்டும் மீண்டும் அவன் டிஸ்பன்சரை அணுகுகிறான். அப்போது அவன் நேரிடையாகவே அவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுக்கிறான். இப்படித்தான் கொஞ்சம்கொஞ்சமாக மதுப்பழக்கத்துக்கு அடிமையாகிறான். மதுவுக்காக எதையும் செய்யும் மனநிலைக்கு ஆளானதும், டிஸ்பன்சர் பதி தன்னுடைய கையாளாக அவனை மாற்றிக்கொள்கிறான். மது அவனை வழிமாறி நடக்கச் செய்கிறது. மலையப்பனின் தொழிற்சங்கத்தில் பங்கேற்றிருக்கும் ஒருசிலரை அவனே அழைத்து வந்து டிஸ்பன்சரிடமிருது மதுவை வாங்கிக் கொடுக்கிறான். மதுப்பழக்கம் அவர்கள் அனைவரையும் அறிவிழக்கச் செய்கிறது. இதன் விளைவாக தொழிற்சங்கம் இரண்டாக உடைகிறது.
மலையப்பனும் வீராயியும் உயிருக்குயிராகக் காதலிக்கிறார்கள். ஆனால் மது அடிமையாகிவிட்ட ரங்கசாமி தன் மகளிடம் இனிமேல் மலையப்பனோடு பழகக்கூடாது என கண்டித்து அவர்களைப் பிரித்துவைக்கிறான்.
0
ரங்கசாமியை மது அடிமையாக மாற்றும் முயற்சியில் பதி ஆர்வம் காட்டுவதற்குப் பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. மேலாளர் சின்னதுரை மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தவனாக இருந்தாலும், அவனுடைய நண்பர்கள் பலர் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு நகரத்தில் டாக்டர்களாகப் பணிபுரிந்துவருகிறார்கள். நகரத்துக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்போதெல்லாம் சின்னதுரை அவர்களோடு தங்கி மது அருந்தி, பழங்கதைகள் பேசி பொழுதுபோக்கிவிட்டு வருகிறான்.
ஒருமுறை நகரத்திலிருந்து அவர்கள் அனைவரையும் வரவழைத்து, தோட்டத்து பங்களாவில் விருந்துண்ண ஏற்பாடு செய்கிறான் சின்னதுரை. அவர்களுக்குத் தோட்டத்தைச் சுற்றிக்காட்டியபோது, அவர்கள் பார்வையில் வீராயி பட்டுவிடுகிறாள். வீராயியின் அழகு அவர்களைச் சலனப்படவைக்கிறது. அதைப் புரிந்துகொண்ட சின்னதுரை அவர்களுக்கு வீராயியை விருந்தாகப் படைக்க நினைக்கிறான். எப்படியாவது வீராயியை பங்களாவுக்கு அழைத்துவரும் பொறுப்பை பதியிடம் ஒப்படைக்கிறான். வீராயியிடம் நேரில் பேச விரும்பாத பதி, அடுத்த கொட்டடியில் வசிக்கும் சிதம்பரத்தின் அது தொடர்பாகப் பேசி உதவி செய்யும்படி கேட்கிறான். அவன் சொன்னதைக் கேட்ட சிதம்பரம் வெகுண்டெழுந்து அவனைத் திட்டி அனுப்பிவைக்கிறான். அன்றைய விருந்து சுவையின்றி சப்பென்று முடிவடைகிறது.
விருந்தாளிகளாக வந்த டாக்டர்கள் அனைவரும் விடிந்ததும் வெளியேறிவிடுகிறார்கள். பதி தனக்கு ஏற்பட்ட தோல்வியை நினைத்து நினைத்து மனத்துக்குள் குமைகிறான். வீராயியை வளைத்துப்போடுவதற்கான வழியைக் கண்டறியும் யோசனையிலேயே அவன் மனம் மூழ்கிக் கிடக்கிறது. அப்போதுதான் அவன் மனத்தில் ரங்கசாமியையே மதுவினால் வீழ்த்தி, அவன் வழியாகவே வீராயியை வழிக்குக் கொண்டுவரும் திட்டம் உதிக்கிறது. அந்தப் பின்னணியைப்பற்றி எதுவும் தெரியாத ரங்கசாமி, பதி விரித்த வலையில் விழுந்துவிடுகிறான்.
0
இன்னும் ஒருசில நாட்களில் அருகிலிருக்கும் நகரத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி இரவும் பகலும் பாடுபடுகிறான் மலையப்பன். இரவு வேளைகளில் அக்கம்பக்கத்தில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களையெல்லாம் ஒருங்கிணைத்து அனைவரும் அம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்திவிட்டு வருகிறான். மாநாட்டுக்கான ஆதரவு எல்லாத் தோட்டங்களிலும் பெருகிவருகிறது. மதுபோதைக்கு அடிமையான தொழிலாளர்களைச் சேர்த்துவைத்திருக்கும் ரங்கசாமியின் அணி மட்டுமே மாநாட்டுக்கு எதிராகப் பேசுகின்றனர்.
ஒருநாள் இரவு வேறொரு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சந்திப்பதற்காக மலையப்பன் தனிமையில் சென்றுகொண்டிருந்தபோது, ரங்கசாமி அவன் மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு மறைந்துவிடுகிறான். மலையப்பனின் தலையில் அடிபட்டு ரத்தம் பெருக்கெடுக்கிறது. சிதம்பரமும் பொட்டும் அவனைக் கைத்தாங்கலாக தன் கொட்டடிக்கு அழைத்துவந்து முதலுதவி செய்து ரத்தப்பெருக்கை நிறுத்த முயற்சி செய்கின்றனர். அவர்கள் முயற்சி தோல்வியடைந்து விடுவதால், சிதம்பரம் கைத்தாங்கலாக மலையப்பனை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு அருகிலிருக்கும் டிக்கலோயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு மருத்துவர் அவனுடைய காயத்துக்கு தையல் போடுகிறார்.
படுக்கையில் இருக்கும்போது மலையப்பனுக்குத் தன் நண்பரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுருட்டுத் தொழிலாளர்கள் சங்கத்தலைவருமான மயில்வாகனம் என்பவருடைய நினைவு வருகிறது. தோட்டத்தொழிலாளர்கள் வாழ்க்கையை ஒரு நாவலாக எழுதும்படி அடிக்கடி அவர் முன்வைக்கும் கோரிக்கையும் நினைவுக்கு வருகிறது. அக்கணத்தில் அவன் எழுதவேண்டிய நாவலைப்பற்றிய ஒரு கோட்டுச்சித்திரம் அவன் மனத்தில் உருவாகி, அவன் மனத்தை மலரச் செய்கிறது. தையலிட்ட வேதனையையும் மறக்கச் செய்கிறது.
நடந்த விஷயத்தை அறிந்துகொண்ட சின்னதுரையும் பதியும் சேர்ந்து காவலர்களுக்குத் தொலைபேசி செய்து, தம் தோட்டத்தில் வேலைசெய்யும் ஒரு தொழிலாளியை ரங்கசாமி என்னும் இன்னொரு தொழிலாளி கல்லால் அடித்து காயப்படுத்திவிட்டதாக புகார் அளிக்கிறார்கள். அதைக் கேட்டு உடனடியாக ஹட்டன் நிலையத்திலிருந்து புறப்பட்டு வரும் காவலர்கள் கொட்டடியில் அடைந்து கிடந்த ரங்கசாமியைக் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். சின்னதுரையின் உத்தரவுப்படி ரத்தக்காயங்கள் ஏற்படும்படி அடித்துவிட்டு, மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். பிறகு மலையப்பனே அவன் மீது புகார் கொடுத்தவன் என பொய்யாய் ஒரு வதந்தியையும் பரப்புகிறார்கள்.
ரங்கசாமியும் வீராயியும் அந்த வதந்தியை நம்புகிறார்கள். மலைச்சாமி குறித்து வீராயியின் மனத்தில் ஒரு வருத்தம் படர்கிறது. அவனிடமே நேரிடையாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்கும் வழியில்லை. மருத்துவமனையிலிருந்து வெளியேறிய மலையப்பன் மயில்வாகனத்தைச் சந்திப்பதற்காக யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவிடுகிறான். பிறகு அங்கிருந்து அப்படியே மாநாடு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக சென்றுவிடுகிறான்.
வீராயியின் தோழி வள்ளிக்கு மலையப்பன் எழுதியதுபோல ஒரு காதல் கடிதத்தை எழுதி யாரோ ஒருவர் வழியாக அனுப்பி அவள் கையில் கிடைக்குமாறு செய்கிறான் பதி. அக்கடிதத்தைப் படித்ததும், அண்ணன் என வாய்நிறைய அழைத்துப் பழகிய வள்ளி மலையப்பன் மீதான எண்ணத்தை மாற்றிக்கொள்கிறாள் வள்ளி. மலையப்பன் மீது மதிப்பு கொண்டிருந்த வள்ளியும் வீராயியும் பதியின் தந்திரத்துக்கு இரையாகி மலையப்பனுக்கு எதிரானவர்களாக மாறிவிடுகின்றனர
நாவலப்பிட்டியில் தோட்டத்தொழிலாளர் மாநாடு சிறப்பான முறையில் நடந்துமுடிகிறது. மலையகத்தைச் சேர்ந்த எல்லாத் தோட்டங்களிலிருந்தும் தொழிலாளர்கள் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு தோட்டத்திலிருந்தும் வந்து கலந்துகொண்ட பிரதிநிதிகள் தத்தம் தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகளைத் தொகுத்துக் கூறுகிறார்கள். அனைத்தும் பதிவு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மலையப்பனின் உணர்ச்சிகரமான உரையை அனைவரும் பாராட்டுகின்றனர். மாநாடு வெற்றிகரமாக நடந்துமுடிந்ததும் தொழிலாளர்கள் தத்தம் தோட்டங்களுக்குத் திரும்புகின்றனர்.
இரவு நேரம் என்றும் பார்க்காமல் மாணிக்கமலைத் தோட்டத்தின் தொழிலாளிகள் உற்சாகத்தோடு கொட்டடிக்குத் திரும்புகிறார்கள். பதியின் யோசனைப்படி வளைவுகளில் இருட்டில் அடையாளம் தெரியாதபடி பதுங்கியிருந்த ஆட்கள் தொழிலாளர்கள் வந்த வாகனங்களின் மீதும் கொட்டடிகள் மீதும் கற்களை வீசித் தாக்குகிறார்கள். உடனே வாகனங்கள் அந்த இடத்திலேயே எல்லாத் தொழிலாளர்களையும் இறக்கிவிட்டு வந்தவழியே திரும்பிவிடுகின்றன.
தொடந்து நடந்த கல்வீச்சில் தொழிலாளர்கள் தலை உடைந்து அடிபட்டு ரத்தம் சொட்ட கீழே விழுகிறார்கள். எதிர்த்திசையிலிருந்து வீசப்பட்ட ஒரு கல் சின்னதுரையின் பங்களா கண்ணாடியை உடைத்து நொறுக்குகிறது. இதற்காகவே காத்திருந்த பதி உடனடியாக காவல்நிலையத்தைத் தொடர்புகொண்டு தொழிலாளர்களின் இரு அணிகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் அளிக்கிறார். பதியின் தந்திரத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு கல்வீச்சு ஒரு பெரிய பிரிவினையையே உண்டாக்கிவிடுகிறது.
வாகனத்தில் விரைந்துவரும் காவலர்கள் கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். தொழிலாளர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள திசைக்கொருவராக ஓடி மறைகிறார்கள். விசையோடு வந்த ஒரு துப்பாக்கிக்குண்டு வள்ளியின் வலது மார்பைத் தாக்கி அவளை வீழ்த்திவிடுகிறது. ஒருசிலர் அவளைச் சுமந்துகொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள்.
அடிபட்ட தொழிலாளர்களைக் காண்பதற்கு மருத்துவமனைக்கு ஓடோடி வருகிறான் மலையப்பன். வள்ளியின் நெஞ்சில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்திருக்கும் செய்தியைக் கேட்டு துடியாய்த் துடிக்கிறான். அவளுக்கு உடனடியாக ரத்தம் ஏற்றவேண்டிய சூழலை எப்படிச் சமாளிப்பது என்று மருத்துவர் குழம்பி நிற்கும்போது மலையப்பன் தானாகவே முன்வந்து ரத்தமளிக்கிறான். ஆனால் மலையப்பன் மீது தீராத கசப்புணர்வோடு இருக்கும் வள்ளி அந்த ரத்தத்தை ஏற்க மறுத்து உயிர்துறக்கிறாள். அவளுக்குக் கிடைத்த கடிதத்துக்கும் தனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கக்கூட மலையப்பனுக்கு வாய்ப்பு கிட்டாதபடி அவள் மரணம் நிகழ்ந்துவிடுகிறது. மலையப்பன் மனச்சுமையோடு நாவலப்பிட்டிக்குத் திரும்பிவிடுகிறான்.
இரு பிரிவினரிடையில் நடந்த மோதலை காவல்துறையினர் வெற்றிகரமாகச் சமாளித்ததற்காக நீதிபதி அனைவரையும் பாராட்டுகிறார். அரசு ஒருசிலருக்கு பதவி உயர்வு அளித்து பெருமைப்படுத்துகிறது.
0
மாநாட்டின் முடிவில் மலையப்பனுக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பு அவனை ஓய்வற்றவனாக மாற்றிவிடுகிறது. இதற்கிடையில் தொழிலாளர் நலனுக்காக ‘மலை ஓசை’ என்னும் பெயரில் ஒரு புதிய பத்திரிகையைத் தொடங்குகிறான் அவன். அதை மக்களிடையில் பரவலாக்கும் முயற்சியிலும் அவன் இறங்கவேண்டியிருக்கிறது. அதற்கான ஏராளமான எழுத்துவேலைகளுக்கும் அவன் நேரம் ஒதுக்கவேண்டியிருக்கிறது. மேலும் தோட்ட மேலாளர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளால் வேலையிழந்த தோட்டத்தொழிலாளிகளுக்கு மீண்டும் வேலையைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எரிந்து பழுதாகி நிற்கும் கொட்டடிகளைப் புதிதாகக் கட்டுவதற்கான முயற்சியிலும் ஈடுபடவேண்டியிருக்கிறது. இத்தகு பணிச்சுமைகளுக்கு நடுவில், ஒருமுறை தோட்டத்துக்குச் சென்று வீராயியைச் சந்தித்துவிட்டு வரவேண்டும் என்னும் எண்ணம் கைகூடாத ஒன்றாகவே தள்ளித்தள்ளிப் போகிறது.
0
இடைப்பட்ட நாட்களில் ரங்கசாமியை முழு குடிகாரனாகவே மாற்றிவிடும் பதி அவனுடைய மகள் வீராயிக்கும் சின்னதுரைக்கும் திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறான். அவள் மீது முழு உரிமை கொள்ள அது ஒன்றே வழி என்பதால் சின்னதுரையும் அத்திருமணத்துக்கு இசைவு தெரிவிக்கிறான். இருவருக்கும் சண்முகநாதன் கோவிலில் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
திருமணச்செய்தியை அறிந்த மலையப்பன் அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறான். திருமணத்துக்கு முன் வீராயியை எப்படியாவது சந்திக்கவும் தன் மீது அவள் கொண்டிருக்கும் கசப்புணர்வை அகற்றவும் அவன் மனம் துடிக்கிறது. அவளைச் சந்திக்கும் விருப்பத்தோடு அவளைத் தேடி வருகிறான். அதற்கு முன்பு, அத்திருமணத்தில் விருப்பமில்லாத வீராயி வீட்டைவிட்டு தப்பித்துச் சென்றுவிடுகிறாள்.
எங்கே சென்றாள் என்று தெரியாமல் அனைவரும் அவளைத் தேடிச் செல்கிறார்கள். மலையப்பனும் அச்செய்தியை அறிந்து வேறொரு புறத்தில் தன் தேடுதல் வேட்டையை நடத்துகிறான். வட்டவளை மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஒரு பெண் உயிரிழந்து கிடக்கிறாள் என்கிற செய்தி அவனை வந்தடைகிறது. ஒருவேளை அவள் வீராயியாக இருப்பாளோ என்கிற எண்ணத்தோடு மருத்துவமனைக்கு விரைகிறான் மலையப்பன்.
அவள் வீராயிதான் என்பதை அறிந்ததும் மலையப்பன் திகைத்து கல்லென உறைந்துவிடுகிறான். அவள் அடையாளமற்றவள் அல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக, கடைத்தெருக்கு ஓடோடிச் சென்று அவளுக்காக ஒரு தாலிக்கொடியும் சவப்பெட்டியும் வாங்கிக்கொண்டு வருகிறான்.
0
மலையப்பனுக்கும் ஒரு பிச்சைக்காரனுக்கும் இடையில் நிகழும் சந்திப்பை முன்வைத்து நந்தி ஓர் அத்தியாயத்தையே எழுதியிருக்கிறார். ஒரு பொதுப்பார்வையில் மலையப்பனின் செயல்பாடுகள் எப்படி மதிக்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும் வகையில் அந்த அத்தியாயம் அமைந்திருக்கிறது. சமூகம் என்பதன் பிரதிநிதியாக அப்பிச்சைக்காரனை நந்தி உருவகித்திருக்கிறார் என நாம் கருதலாம்.
மாநாடு நடைபெறவிருக்கும் நாவலப்பிட்டிக்கு மலையப்பன் வந்து தங்கியிருக்கும் சமயத்தில்தான் அச்சந்திப்பு நிகழ்கிறது. நாவலப்பிட்டியில் பேருந்து நிலையத்துக்கும் தொலஸ்பாகே சாலைக்கும் இடையில் ஒரு ரயில்பாதை இருக்கிறது. அதை எளிதாகக் கடந்துசெல்லும் வகையில் அமைந்திருக்கும் மேம்பாலத்தில் ஓரமாக நின்று அந்தப் பக்கமாக போகிறவர்களிடமும் வருகிறவர்களிடமும் கையேந்தி யாசிக்கிறவன்தான் அந்தப் பிச்சைக்காரன். அவன் பெயர் பண்டாரி. பார்வையில்லாத அவனுக்கு ஒரு நாய் வழிகாட்டுகிறது. நாயின் கழுத்தோடு பிணைக்கப்பட்ட சங்கிலியை அவன் எப்போதும் தன் கையில் பிடித்திருக்கிறான். அந்த நாய்தான் அவனுக்கு வழிகாட்டி.
ஒருநாள் அவன் தன் நாயுடன் பாலத்திலிருந்து மெதுவாக இறங்கிக்கொண்டிருந்தான். நாய் திடீரென நின்றதால் அவனும் நின்றுவிடுகிறான். அது ஏன் நின்றது என அவனுக்குப் புரியவில்லை. அதனால் நாயிடம், ‘என்னடா யோசிக்கிறாய் மலையப்பா? தடுமாறாமல் போடா வழிகாட்டி’ என்று சொல்கிறான். பாலத்தின் கீழே தெருநாய்கள் அவனைப் பார்த்துக் குரைக்கின்றன. வழிகாட்டி நாயும் வள்ளென்று குரைத்து எச்சரிக்கை செய்கிறது. அதைக் கேட்டதும் ‘சீ, இதற்காகவா நிற்கிறாய் என் ராஜா. குலைக்கிறவங்க கடிக்க மாட்டாங்கடா. நீ உன் வழியில போயிட்டே இருடா மலையப்பா’ என்று சொல்கிறான் பண்டாரி.
பாலத்தடியில் ஓரமாக நின்று பண்டாரியின் சொற்களையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டபடி நின்றிருந்த மலையப்பனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பார்வையற்ற ஒரு பிச்சைக்காரன் ஒரு நாய்க்கு தன் பெயரைச் சூட்டி உரையாடும் காட்சியை அவனால் நம்பவே முடியவில்லை. நீண்ட நேரம் அவனுடைய உரையாடலைக் கேட்டபடி பின்தொடர்ந்து செல்கிறான் மலையப்பன். ஒரு கட்டத்தில் அவனை நிறுத்தி ‘நீங்கள் மலையப்பன், மலையப்பன் என்று அழைக்கிறீர்களே, அது யார்?’ என்று கேட்கிறான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாவலப்பிட்டியில் ஒரு மாநாடு நடந்ததென்றும் அப்போது மலையப்பன் என்றொரு இளைஞன் தொழிலாளர் பிரச்சினைகளைப்பற்றி உயிர்ப்போடும் உண்மையாகவும் பேசினான் என்றும் அவன் குரலில் அனைவருக்கும் வழிகாட்டி அழைத்துச் செல்லும் ஒரு வேகத்தை உணர்ந்ததாகவும் தெரிவிக்கிறான். அச்சமயத்தில்தான் அந்த ஊரைவிட்டு வெளியேறிய ஒரு துரை அந்த நாய்க்குட்டியைத் தன்னிடம் கொடுத்ததாகவும் அதன் உண்மையான பெயர் டைகர் என்றும் பார்வையில்லாத தனக்கு எங்கு சென்றாலும் அந்த நாய் வழிகாட்டி அழைத்துச் செல்வதால் அந்த வழிகாட்டியான மலையப்பனின் பெயரைச் சூட்டியதாகவும் கூறுகிறான்.
அதைக் கேட்டு மலையப்பன் நெகிழ்ந்துபோகிறான். இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கிற மாநாட்டிலும் அவன் பேச இருக்கிறான் என்பதை ஒரு தகவலாக மட்டும் தெரிவித்துவிட்டு அங்கிருந்து அகன்றுவிடுகிறான். அவன் சிந்தனையும் செயல்பாடும் சரியான திசையிலேயே இயங்குகின்றன ஒரு பொதுப்பார்வையாளனாக பார்வையற்ற பிச்சைக்காரனை முன்னிறுத்தி உணர்த்துகிறது அந்த அத்தியாயம். நீண்ட காலமாகவே பிறருக்குத் தொண்டாற்றும் எண்ணத்தோடுதான் வாழ்ந்து வருகிறான் என்பதை உணர்த்துவதற்கும் இந்த உத்தி பயன்பட்டிருக்கிறது.
0
ஒருபக்கம் எவ்விதமான உரிமைகளும் இன்றி, கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் இன்றி, கொட்டடிகளில் கட்டுண்ட அடிமைகளைப்போல வாழ்கின்ற தொழிலாளர்கள். இன்னொருபக்கம் சொந்தச் சகோதர தொழிலாளர்களையே எதிரிகளாக உருவகித்துக்கொண்டு பகைமை பாராட்டும் தொழிலாளர்கள். இவர்களை ஓரணியில் திரட்டுவது என்பது எளிதான வேலையல்ல. ஆனால் அனைவரையும் ஒன்றிணைக்கும் உயர்ந்த நோக்கம் கொண்ட தொழிற்சங்கம் அந்த முயற்சியில் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டே இருக்கிறது. தொழிற்சங்கத்தின் பாதையில் மேடுகளும் உண்டு. பள்ளங்களும் உண்டு. ஆனால் எல்லா இடர்களையும் இழப்புகளையும் வேதனைகளையும் எதிர்கொண்டு தொழிற்சங்கம் சீராக முன்னேறிக்கொண்டே இருக்கிறது.
தொழிலாளர்களின் வாழ்வில் பின்னடைவுகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் முதலாளிகள். தொழிலாளர்களை சக உயிர்களாக நினைக்காமல் தமக்கு லாபமீட்டிக் கொடுக்கும் அடிமைகளாக மட்டுமே நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தை உடைத்து அனைவரும் சமமென உணர்த்துவதையே தன் இறுதி இலக்காகக் கொண்டு ஒவ்வொரு தொழிற்சங்கமும் இயங்குகின்றது.
ஒவ்வொரு தேயிலைத் தோட்டத்திலும் தமிழரே மேலாளராக இருக்கிறார். அவருக்குத் துணையாக நிர்வாக வேலைகளைச் செய்பவர்களும் தமிழர்களே. கொட்டடிகளில் அடைந்து கிடந்து, சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து மறையும் நேரம் வரைக்கும் தேயிலைக்கொழுந்து கிள்ளும் தொழிலாளர்களும் தமிழர்களே. ஆனால் நிர்வாகத்தில் இருக்கும் தமிழர்கள் தொழிலாளிகளாக இருக்கும் தமிழர்களைத் தமிழர்கள் என்றே மதிப்பதில்லை. மனிதர்கள் என்றும் மதிப்பதில்லை. தொழிலாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் தம் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படவேண்டிய அடிமைகள் என்கிற எண்ணமே அவர்களுடைய நெஞ்சில் மேலோங்கியிருக்கிறது. இச்செய்திகள் அனைத்தும் நந்தியுடைய மலைக்கொழுந்து நாவலில் சுருக்கமான கூறுகளாக ஆங்காங்கே வெளிப்பட்டிருக்கின்றன.
தொழிலாளர்களை ஒருங்கிணைத்து ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவது என்பது எளிதான பணியல்ல. அனைவருடைய நம்பிக்கையையும் ஈட்டுவது என்பது முதல் படி. நம்பியவர்களை ஓரணியில் திரட்டுவது என்பது இரண்டாவது படி. திரண்டு வந்தவர்களுக்கு எதிர்க்க வேண்டிய பிரச்சினைகளின் தீவிரத்தைப் புரியவைப்பது என்பது மூன்றாவது படி. ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் நிர்வாகத் தரப்பினர் வகுக்கும் தந்திரங்களை எதிர்கொள்வது என்பது நான்காவது படி. சங்கத்தின் மீது அனைவரும் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் பொய்க்காரணங்களைச் சொல்லி அணியை உடைத்துக்கொண்டு செல்லும் மாற்று அணியினரின் பழிச்சொற்களை எதிர்கொள்வது என்பது ஐந்தாவது படி.
இப்படி ஐந்து படி ஏறி ஒரு சாதனையைச் செய்துமுடிக்கும் தருணத்தில் திடீரென சந்தர்ப்பச்சூழல்களால் உருவாகும் திருப்பங்களின் விசை நான்கு அடி கீழே இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கும். எல்லாத் தேசங்களிலும் இப்படி ஐந்து படி ஏறி நான்கு படி இறங்கினாலும் அயர்வின்றி உழைப்பவர்களே தொழிற்சங்கத்தை உருவாக்குகிறார்கள். ஒரு தொழிற்சங்கத்தின் செயல்பாடு என்பது எப்போதும் சோதனைகளும் சாதனைகளும் இணைந்ததாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் ஒரு வெற்றி நமக்காகக் காத்திருக்கிறது என்கிற நம்பிக்கை மட்டுமே இழப்புகளைப் பொருட்படுத்தாமல் ஒரு தொழிற்சங்கவாதியை இயக்கும் விசை. அத்தகு விசைகொண்ட தொழிற்சங்கவாதியாக மலையப்பன் உருவான வரலாற்றையே நாவலாக எழுதியிருக்கிறார் நந்தி.
0

