எழுத்தாளர் தி.சா.ராஜு திருவையாற்றை அடுத்த தில்லைஸ்தானம் என்னும் ஊரில் பிறந்தவர். அவருடைய தந்தையார் சாம்பசிவ ஐயர் சுதந்திரப்போராட்ட வீரர். தந்தையைப்போலவே மகன் ராஜுவும் சுதந்திர ஆர்வமும் தாய்நாட்டுப்பற்றும் கொண்டிருந்தார். இளமைப்பருவத்தில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் பாரதியாரின் பாடல்களைப் பாடியபடி செல்லும் ஊர்வலங்களில் தந்தையாரோடு ராஜுவும் கலந்துகொண்டார். பள்ளிக்கல்வியைத் தொடர்ந்து இயந்திரவியலில் பொறியியல் படிப்பை முடித்ததும் ராணுவத்தில் மேஜராகச் சேர்ந்து பணியாற்றினார்.
பணிக்காலம் முழுவதும் வட இந்தியாவில் எல்லையோரப் பகுதிகளிலேயே ராஜு பணிபுரிந்தார். அப்பகுதிகளில் தனக்குக் கிடைத்த அனுபவங்களைச் சிறுசிறு கட்டுரைகளாக முதலில் எழுதத் தொடங்கி, பிறகு எண்ணற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வாசகர்களின் ஆதரவைப் பெற்றார். ஆர்வத்தின் காரணமாக சொந்த முயற்சியில் பஞ்சாபி மொழியைக் கற்றுக்கொண்டு பஞ்சாபி சிறுகதைகளையும் நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்தார். பஞ்சாபில் வாழ்ந்த மேஜர் ஜெனரல் ஆலுவாலியாவின் தன்வரலாற்றை ‘மன்னும் இமயமலை’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். வாசகர் வட்டம் அந்நூலை வெளியிட்டது. பஞ்சாப் நாவலாசிரியர் குர்தயாள் சிங் எழுதிய ‘ஆத் சனானி ராட்’ என்னும் நாவலை ‘மங்கியதோர் நிலவினிலே’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தார். நேஷனல் புக் டிரஸ்ட் அந்த நாவலை வெளியிட்டது.
ஹோமியோபதி மருத்துவமுறையிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனால் முறையாகவே அதைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். பிறகு உடல்நிலை குன்றித் தவிக்கும் ராணுவ வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவம் பார்த்து குணப்படுத்தினார்.
ஒருமுறை மூத்த எழுத்தாளர் வ.ரா. ஓர் உரையாடலில் தனித்தனி துறைசார்ந்த படைப்புகள் கவனிக்கத்தக்க அளவில் தமிழில் எழுதப்படவில்லை என்றும் தமிழ்ப்படைப்புலகம் சுவடு விழுந்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் சென்றுகொண்டிருக்கிறது என்றும் புதிய பாதையில் செல்லத் தயங்குகிறது என்றும் குறிப்பிட்டதைக் கேட்டதும், அவருடைய சொற்களால் தன் ராணுவ அனுபவங்களை எழுதுவதற்கான ஊக்கம் பெற்றதாக ராஜு குறிப்பிட்டிருக்கிறார். ராணுவப்பின்னணியில் அவர் எழுதிய சிறுகதைகள் பட்டாளக்காரன் என்னும் தலைப்பில் புத்தகமாக வந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
1961, 1962 காலகட்டங்களில் போர்த்துகீசியர்களின் பிடியிலிருந்து கோவாவை விடுவிக்கும் போரையும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற சீனப் போரையும் பின்னணியாகக் கொண்டு தி.சா.ராஜு ‘லெஃப்டினென்ட் கோவிந்தன்’ என்னும் நாவலை எழுதினார். கலைமகள் காரியாலயம் 1972இல் அந்நாவலை வெளியிட்டது.
0
கோவா விடுதலைப்போரும் சீனப்போரும் ஏன் நிகழ்ந்தன என்பது இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றை அறிந்துகொள்ளும் ஆவலை வாசகர்களிடையில் தூண்டும் வகையில் தி.சா.ராஜு எழுதிய ‘லெப்டினென்ட் கோவிந்தன்’ நாவல் அமைந்திருக்கிறது.
இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் ஏறத்தாழ 565 சமஸ்தானங்களில் மன்னராட்சி நடைபெற்று வந்தது. துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த வல்லபபாய் படேல் எல்லா சமஸ்தானங்களையும் பேச்சுவார்த்தை வழியாகவும் சிற்சில சமயங்களில் கடுமையான நடவடிக்கைகள் வழியாகவும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார்.
புதுச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரான்ஸ் 01 நவம்பர் 1954 அன்று இந்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறியது.
கோவா, டையு, டாமன் ஆகிய பகுதிகளைத் தம்மிடம் வைத்திருந்த போர்ச்சுகலும் அப்படியே நடந்துகொள்ளும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்பிரதேசங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க போர்ச்சுகல் மறுத்துவிட்டது. தாம் வெளியேறிவிட்டால் அங்கு வசிக்கும் கத்தோலிக்கர்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று கூறியது.
போர்ச்சுகல் அரசின் பிடிவாதப்போக்கின் காரணமாக கோவாவின் விடுதலைக்காக பலரும் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். 1955ஆம் ஆண்டில் சத்தியாகிரகிகள் கோவாவில் நுழைந்தபோது போர்த்துகீசிய ராணுவம் இரக்கமின்றிச் சுட்டதில் இருபது பேர் உயிரிழந்தனர். அதுவரை அமைதி காத்த மத்திய அரசு கோவா மீது பொருளாதாரத்தடை விதித்தது. மக்களுடைய எழுச்சியும் உலகநாடுகளின் நெருக்குதலும் போர்த்துகீசியர்களை வெளியேற்றிவிடும் என அப்போதும் அரசு நம்பியது.
ஆனால் உலகநாடுகளின் கேள்விக்கு போர்த்துகீசிய அரசு எவ்விதமான பதிலையும் அளிக்காமல் மெளனம் காத்தது. 1961இல் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்த கோவா பகுதி கிராமவாசிகள் மீது தாக்குதல் நிகழ்த்தி ராணுவத்தினரைக் கொண்டு தன்னிச்சையாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இனியும் பொறுத்திருப்பதில் பொருளில்லை எனக் கருதிய மத்திய அரசு இந்திய ராணுவத்தை உடனடியாகக் கோவாவுக்கு அனுப்பிவைத்தது. நீண்ட மோதலுக்கும் உயிரிழப்புக்கும் பிறகு போர்த்துகீசியப் படைகள் சரணடைந்தன. 19 டிசம்பர் 1961 அன்று கோவா விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
1959இல் திபெத்திய எழுச்சிக்குப் பிறகு சீனாவைவிட்டு வெளியேறிய தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்தது. அதையடுத்து சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அடிக்கடி சிறுசிறு மோதல்கள் வெடித்தபடி இருந்தன. அடிக்கடி எல்லை மோதல்கள் எழுந்தன. பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில்லை. 1962இல் ஒருவரும் எதிர்பாராத சமயத்தில் எல்லையோரப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சீனா ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. உயரமான மலைப்பகுதிகளில் மோதல் நிகழ்ந்ததால் போர் முற்றிலும் தரையிலேயே நடைபெற்றது. இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்த இரு போர்களிலும் நேரிடையாகவே பங்கேற்றவர் தி.சா.ராஜு. அந்த அனுபவங்களை முன்வைப்பதற்காகவே அவர் தன் நாவலை எழுதினார்.
படைவீரர்களின் தியாகங்களையும் அவர்கள் தம் உத்தியோகப் பிரிவுகளை மறந்து தமக்குள் நட்பு பாராட்டிய விதங்களையும் கதைகள் வழியாக பொதுமக்கள் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்பதும் அவருடைய விருப்பமாக இருந்தது. அதற்குப் பொருந்திவரக்கூடிய வகையில் அவ்வீரர்களுக்கென சில தனிப்பட்ட குடும்பக் கதைகளை எழுதி ஆங்காங்கே இணைத்துக்கொண்டார். ராணுவ அனுபவங்களை உடலாகவும், குடும்பச் சித்திரங்களை அவ்வுடலுக்கேற்ற ஆடைகளாகவும் ராஜுவின் படைப்புகள் கொண்டிருக்கின்றன. தமிழ் நாவல்களில் ராணுவ வாழ்க்கை ஒரு துறையாக உருவாகி வளரவேண்டும் என்கிற அவருடைய கனவை ஏந்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய படைப்பாளிகளின் வரிசை உருவாகி வளரவில்லை என்பது கசப்பான உண்மை.
0
நாவலின் மையப்பாத்திரம் கோவிந்தன் என்கிற கோவிந்தராஜன். ஆயினும் தி.சா.ராஜு இந்த நாவலில் கோவிந்தனைப்பற்றிய நிகழ்ச்சிகளை மட்டும் அடுக்கிச் செல்லவில்லை. அவனைச் சுற்றி வாழும் எண்ணற்ற மனிதர்களுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் தொகுத்து முன்வைத்திருக்கிறார். ஒவ்வொரு சிறிய பாத்திரத்தையும் அதற்கே உரிய முக்கியத்துவத்தோடு படைத்திருக்கிறார். ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு பாத்திரமும் இன்னொரு பாத்திரத்தோடு இணைந்திருக்கிறது. மனித உறவு ஒரு சங்கிலியைப்போல எல்லோரையும் பிணைத்திருக்கிறது. இவர்கள் இப்படித்தான் என எளிதில் வகுத்துச் சொல்லமுடியாதபடி ஒவ்வொருவரும் இயல்பான வகையில் பல குணங்களும் பொருந்தியவர்களாகக் காணப்படுகிறார்கள். அவர்களிடம் குறைகளும் உள்ளன. நிறைகளும் உள்ளன.
தேவராஜன் என்பவர் முன்னாள் ராணுவ வீரராக நாவலில் இடம்பெற்றிருக்கிறார். தஞ்சாவூரை அடுத்திருக்கும் கருப்பூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் அவர். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் பணிபுரிந்தவர். குறிப்பிட்ட காலம் பணிபுரிந்த பிறகு ஓய்வு பெற்றுக்கொண்டு ஊருக்குத் திரும்பிவிடுகிறார். அவருடைய ராணுவச்சேவையின் பின்புலத்தில் அவருக்கு அன்றைய சென்னை மாகாணத்தின் பகுதியாக இருந்த விஜயநகரத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. குடும்பத்தைப் பராமரிக்க அந்த வேலையில் கிட்டும் சம்பளமும் ராணுவ ஓய்வூதியமும் போதுமானதாக இருக்கிறது.
அவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் சரஸ்வதி. இளமைக்காலத்தில் அவருடைய பெற்றோரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் சரஸ்வதியோடு அவர் நீண்ட காலம் சேர்ந்து வாழவில்லை. அவருக்குப் பிடித்தவகையில் சரஸ்வதியிடம் எந்த அம்சமும் இல்லை என்பதால் ஒருசில ஆண்டுகளிலேயே அவரைவிட்டு விலகிவிடுகிறார். சென்னையில் அடையாறு பகுதியில் சரஸ்வதி தனிமையில் வசித்துவருகிறார். அவருடைய பள்ளியாசிரியர் தொழில் அவரைக் காப்பாற்றுகிறது.
இரண்டாவது மனைவியின் பெயர் ரஞ்சனா. தேவதாசி பின்னணி உடையவர். இசையிலும் நடனத்திலும் ஆர்வம் கொண்டிருந்த தேவராஜன் ரஞ்சனாவை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்கிறார். ரஞ்சனாவுக்கும் குடும்பவாழ்க்கை என்னும் வட்டத்துக்குள் வந்துவிடவேண்டும் என்பதில் ஆர்வமிருந்தது. அதனால் இருவரும் திருமணம் செய்துகொண்டு விஜயநகரத்துக்குச் சென்று வசிக்கத் தொடங்குகிறார்கள். அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் நாதகோபாலன். அடுத்து இரட்டையராகப் பிறந்த இரு பெண்கள். ஒருத்தியின் பெயர் லட்சுமி. இன்னொருத்தியின் பெயர் சரஸ்வதி.
விஜயநகரத்திலேயே பள்ளிப்படிப்பை முடித்த நாதகோபாலன் பட்டப்படிப்புக்காக சென்னையில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்குகிறான். லட்சுமியும் சரஸ்வதியும் விஜயநகரத்திலேயே படிக்கிறார்கள். சரஸ்வதி பள்ளியிறுதி வகுப்பை முடிக்கிறாள். அம்மாவைப்போலவே லட்சுமிக்கு நடனக்கலையில் விருப்பம் இருப்பதால் கல்வியோடு நடனப்பயிற்சியையும் மேற்கொள்கிறாள்.
முதல் மனைவியின் உறவைத்தான் முற்றிலுமாக தேவராஜன் உதறினாரே தவிர, பிற உறவினர்களோடு நல்ல விதமாகவே பழகி அவர்களுடைய தொடர்புகளையும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். ஆந்திரவாசத்தின் காரணமாக அவர் எதையும் சுருக்கிக்கொள்ளவில்லை. அவருடைய சகோதரர்களின் பிள்ளைகளும் தம்பி முறை உடையவர்களுமான ராஜரத்தினமும் பாலுவும் அவ்வப்போது விஜயநகரத்துக்கு வந்து செல்கிறவர்களாகவே இருக்கின்றனர். அந்த உறவுகளை தேவராஜனும் நல்ல விதமாகவே பேணி வருகிறார்.
0
பட்டப்படிப்புக்காக சென்னைக்கு வந்து விடுதியில் தங்கிப் படித்துவருகிறான் நாதகோபாலன். ஓய்வுப் பொழுதில் அடையாறில் வசிக்கும் பெரியம்மாவின் வீட்டுக்குச் சென்று சந்தித்து உரையாடிவிட்டு வருகிறான். மூன்றாண்டு கால படிப்பு முடிந்ததும் பெரியம்மாவிடம் விடைபெற்றுக்கொண்டு விஜயநகரத்துக்குத் திரும்பிச் செல்கிறான். ரயில் நிலையத்தை அடைந்ததும், வழக்கமாக ஸ்டேஷனுக்கு வந்து காத்திருந்து அழைத்துச் செல்லும் அப்பா தேவராஜனை அவன் கண்கள் தேடுகின்றன. அவரை எங்கும் காணவில்லை. சிறிது நேரம் காத்திருந்த பிறகு ஏமாற்றத்துடன் தனியாகவே வாடகை வண்டியில் வீட்டுக்குத் திரும்புகிறான்.
வீட்டில் அவன் அம்மாவும் சகோதரிகளும் மட்டுமே இருக்கிறார்கள். அப்பாவைக் காணவில்லை. இருபது நாட்களுக்கு முன்னால் அவர் இறந்துவிட்ட செய்தியை அவன் அம்மா அப்போதுதான் அவனிடம் தெரிவிக்கிறாள். தேர்வுச்சமயத்தில் அச்செய்தி அவனைத் தடுமாறவைத்துவிடக்கூடும் என்று கருதி அந்தத் தகவலை அவனுக்குத் தெரிவிக்கவில்லை என்று அவள் சொல்கிறாள். ஆனால் அம்மாவின் கூற்றை ஏற்றுக்கொள்ள அவன் மனம் மறுக்கிறது. அப்பாவின் மரணச் செய்தியை பெரியம்மா உட்பட உறவினர் எவருக்கும் தெரிவிக்க விரும்பாத அளவுக்கு அம்மாவை எது தடுத்தது என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. தீராத ஒரு கசப்பு அவன் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது.
நாதகோபாலனின் சித்தப்பா ராஜரத்தினம் ராணுவத்தில் பணிபுரிகிறார். ஒருபோதும் தவறான உத்தரவுகளைப் பிறப்பிக்கக்கூடாது, தவறான உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியவும் கூடாது, தேசமெங்கும் பல தலைவர்களின் தியாகத்தால் கிடைத்த சுதந்தரத்துக்குக் களங்கம் உருவாகும் வகையில் ஒரு செயலையும் செய்யக்கூடாது போன்ற பல நிலைபாடுகளில் அவர் உறுதியாக நின்று எதற்கும் வளைந்துகொடுக்க விரும்பாதவராக இருந்ததால் பதினெட்டு ஆண்டு காலமாக ஒரே பதவியில் நீடித்திருக்கிறார். பதவி உயர்வு கிட்டாததை ஒட்டி எந்த வருத்தமும் இல்லாமல் தன் பணியை நாட்டுக்கு ஆற்றும் சேவையாக நினைத்துப் பாடுபடுபவராக இருக்கிறார் அவர்.
கோவிந்தன் அவரிடம் சிப்பாயாக வேலை செய்கிறான். மெட்ரிக் படிப்பில் தோல்வியுற்றதை அடுத்து ராணுவத்தில் சேர்ந்தவன் அவன். அவனுடைய சொந்த ஊர் பிள்ளையார்பட்டி. வயது வித்தியாசங்களைக் கடந்து இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. ஒரே சமயத்தில் விடுப்பு கிடைத்ததால், இருவரும் ஒன்றாகவே ரயிலில் பயணம் செய்து ஊருக்குத் திரும்புகிறார்கள்.
வழியில் விஜயநகரத்தில் இறங்கி அண்ணனின் குடும்பத்தாரைப் பார்த்துவிட்டுச் செல்ல நினைக்கிறார் ராஜரத்தினம். கோவிந்தனும் அவரோடு சேர்ந்துகொள்கிறான்.
இருவரும் தேவராஜன் வீட்டுக்குச் செல்கிறார். வீட்டை அடைந்ததும் தேவராஜனின் மரணச்செய்தி அவரைத் திகைப்பில் ஆழ்த்துகிறது. ஒன்றிரண்டு நாட்கள் அந்த வீட்டில் கழித்துவிட்டு சென்னைக்குத் திரும்பிவிடுகிறார். அடையாறுக்குச் சென்று பெரிய அண்ணியைச் சந்தித்து தனக்குத் தெரிந்த செய்தியைத் தெரிவித்துவிட்டு ஊருக்குப் புறப்பட்டுச் செல்கிறார். கணவரின் மரணச்செய்தியை அறிந்து அவர் துயரத்தில் மூழ்குகிறார். முதல் மனைவி என்கிற முறையில் தனக்கு தன் கணவரின் மரணச்செய்தி முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என்பதில் அவரும் வருத்தப்படுகிறார்.
ராஜரத்தினமும் கோவிந்தனும் விஜயநகரத்திலிருந்து சென்னைக்கு வந்து, பிறகு அங்கிருந்து தஞ்சாவூருக்கு வந்து சேர்கிறார்கள். ராஜரத்தினத்தை கருப்பூர் செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, வேறொரு பேருந்தில் ஏறி தன் சொந்த ஊரான பிள்ளையார்பட்டிக்கு வருகிறான் கோவிந்தன். சமூகத்தில் அடித்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். அப்பா இல்லை. அம்மா மட்டும் இருக்கிறார். அவர் பெயர் காமாட்சி. கோவிந்தன் வீட்டுக்குச் சென்ற சமயத்தில் அம்மாவுக்குப் பேச்சுத்துணையாக ஒரு பெண் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறான். அவள் பெயர் விஜயம். மேல்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதைப் பார்த்தமாத்திரத்திலேயே அவன் புரிந்துகொள்கிறான். ஆனால் அந்தப் பெண்ணின் பார்வையில் எந்த வித்தியாசத்தையும் அவனால் கண்டறிய முடியவில்லை.
அதே தெருவில் நாலைந்து வீடுகள் தள்ளி ஒரு வீட்டில் குடியிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவள். அவளுடைய அப்பா குலசேகரன் சுதந்திரப்போராட்டத் தியாகி. அதை அறிந்ததும் மரியாதை நிமித்தமாக அவரைச் சந்திக்கச் செல்கிறான் கோவிந்தன். அவர் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார். ராணுவமுகாமில் ஓமியோபதி மருத்துவத்தைப் பயிற்சி வழியாகப் பயின்றவன் அவன். அந்த அனுபவத்தில் கோவிந்தன் பெரியவருக்குச் சில மருந்துகளைக் கொடுத்து உட்கொள்ளச் செய்கிறான். அடுத்த நாளே அவர் குணமடைந்துவிடுகிறார்.
அந்த வார இறுதியில் அடுத்த ஊரில் நடைபெற்ற ஒரு நாடகத்தைப் பார்ப்பதற்காக குலசேகரனும் விஜயமும் மாட்டுவண்டியில் செல்கின்றனர். நாடகம் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் அச்சாணி கழன்றுவிட வண்டி குடைசாய்ந்து சரிந்துவிடுகிறது. கீழே விழுந்து அடிபட்டதில் குலசேகரன் மரணமடைந்துவிடுகிறார். அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு அதே வழியில் தனிமையில் திரும்பிக்கொண்டிருந்த கோவிந்தன் கீழே விழுந்து கிடந்த அச்சாணியை கையில் எடுத்துக்கொண்டு வண்டி சென்ற பாதையிலேயே ஓடி வருகிறான். அவன் கையில் அச்சாணி இருந்ததால் அவனே குலசேகரனின் மரணத்தைத் திட்டமிட்டு நிகழ்த்தியிருக்கவேண்டும் என விசாரணை நடத்த வந்த இன்ஸ்பெக்டர் சந்தேகப்படுகிறார். ஆனால் அடுத்தடுத்த விசாரணைகளுக்குப் பிறகு இன்ஸ்பெக்டரும் உண்மையைப் புரிந்துகொள்கிறார். கோவிந்தன் உதவியோடு குலசேகரனுடைய இறுதிச் சடங்கு நல்லமுறையில் நடைபெற்று முடிகிறது.
விஜயமும் கோவிந்தனும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். ஆனால் இருவருமே தம் விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தயங்கி அமைதியாக இருக்கின்றனர். நாளை, நாளை என நாட்கள் கடந்து செல்கின்றன. எதிர்பாராத விதமாக எல்லைப்புறத்திலிருந்து உடனே புறப்பட்டு வருமாறு கோவிந்தனுக்கு உத்தரவுச்செய்தி வருகிறது. அதனால் கோவிந்தன் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு தன் ராணுவப்பிரிவுக்குத் திரும்புகிறான். அந்தச் செய்தி ராஜரத்தினத்துக்கும் செல்கிறது. அவரும் முகாமுக்குத் திரும்பிவிடுகின்றார். அதுவரை குடும்பங்களின் கிளைக்கதைகளை விவரித்த நாவல், அதற்குப் பிறகு ராணுவ வாழ்க்கையை விவரிக்கத் தொடங்குகிறது.
ஒருசில நாட்களிலேயே அந்த முகாமிலிருந்து கோவிந்தனை விடுவித்து, பதற்றத்தில் இருக்கும் கோவாவின் எல்லைப் பகுதிக்குப் புறப்படும் குழுவினரோடு சேர்ந்து செல்லுமாறு உத்தரவு வழங்கப்படுகிறது. வேறு வழியின்றி ராஜரத்தினத்திடம் விடைபெற்றுக்கொண்டு கோவிந்தன் கோவாவுக்குப் புறப்படுகிறான்.
பேச்சுவார்த்தை வழியாகவே கோவா அரசைப் பணியவைக்க வேண்டும் என்று மத்திய அரசு பதினான்கு ஆண்டுகாலமாகக் காத்திருந்த போதும், இந்திய அரசின் பொறுமையைப் பிழையாகப் புரிந்துகொண்ட போர்ச்சுகீசிய அரசு, சுதந்திரத்துக்காகக் குரல்கொடுத்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திக் கொன்றுவிடுகிறது. இனி பொறுமை காப்பதில் பொருளில்லை என உணர்ந்துகொண்ட அரசு, ராணுவத்தை உடனடியாக அனுப்பிவைக்கிறது. கோவாவைச் சுற்றிவளைத்த ராணுவச் சிப்பாய்களில் கோவிந்தனும் இருக்கிறான். பல நாட்கள் நீடித்த அப்போரில் இந்திய ராணுவம் வெற்றியடைகிறது. போர்த்துகீசிய அரசு கோவாவை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறது. போரில் வீர மரணம் அடைந்த சிப்பாய்களுக்கு அனைவரும் கூடி இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.
இறந்துவிட்ட இந்தியச் சிப்பாய்களின் பெயர்ப்பட்டியலில் கோவிந்தராஜன் என்னும் பெயர் இடம் பெற்றிருக்கிறது. அவன் வேறொரு பிரிவைச் சேர்ந்தவன். நிர்வாகக்குழு அந்த மரணச்செய்தியையும் அவன் உடைமைகளையும் தவறுதலாகப் பிள்ளையார்பட்டிக்கு அனுப்பிவிடுகிறது. தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிழை தொடர்பாக எதுவும் தெரியாத கோவிந்தன் வழக்கம்போல ராணுவ வேலைகளில் மூழ்கியிருக்கிறான்.
அதே சமயத்தில் படுத்த படுக்கையாக இருந்த கோவிந்தனுடைய தாயின் உடல்நலம் மேலும் பலவீனமடைகிறது. தன் உடல்நிலை மோசமடைவது குறித்து கோவிந்தனுக்குக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டு அவன் வரவுக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறாள். மரணத்துக்கு முன் தன் மகனின் முகத்தைக் காண அவள் முகம் ஏங்குகிறது.
ஏக்கத்தில் வாட்டமடைந்திருந்த அம்மாவை ராணுவத்திலிருந்து வந்த செய்தி நிலைகுலைய வைக்கிறது. அத்துயரை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மகனை நினைத்து அவள் உயிர் பிரிந்துவிடுகிறது. விஜயமும் அவள் தாயாரும் முன்னின்று அவளுக்கு இறுதிச்சடங்கைச் செய்துமுடிக்கின்றனர். விஜயத்தின் தாய் விஜயத்துக்கு வேறொரு மாப்பிள்ளையைப் பார்த்து திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குகிறாள்.
கோவா வெற்றியைத் தொடர்ந்து சிப்பாயாகப் பணிபுரிந்த கோவிந்தனுக்குப் பதவி உயர்வு கிடைக்கிறது. சிப்பாய் கோவிந்தன் லெப்டினென்ட் கோவிந்தனாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். அசெய்தியைத் தெரிவிப்பதற்காக தன் பழைய முகாமுக்குச் சென்று ராஜரத்தினத்துக்குத் தெரிவிக்கிறான். அவர் அவனை வாழ்த்துகிறார். அப்போதுதான், சில நாட்களுக்கு முன்பு அவனுக்கு வந்த கடிதத்தை வாங்கிவைத்திருப்பதாகச் சொல்லி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுக்கிறார். அவன் தாய் படுத்த படுக்கையாக இருக்கும் செய்தி அதில் எழுதப்பட்டிருக்கிறது. அவனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுகிறார் ராஜரத்தினம்.
தலைமையிடம் உண்மைத்தகவலை எடுத்துரைத்து குறுகிய கால விடுப்பெடுத்துக்கொண்டு தன் அம்மாவைப் பார்ப்பதற்காக உடனடியாகப் புறப்படுகிறான் கோவிந்தன். பிள்ளையார் பட்டி வரைக்கும் நீண்ட பயணத்தில் அவன் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. வீட்டை அடைந்தபோது அவன் வீடு பூட்டியிருப்பதைப் பார்த்து அவன் திகைப்பில் மூழ்குகிறான்.
கோவிந்தன் வந்திருப்பதை அறிந்து விஜயத்தின் தாய் ஓடோடி வருகிறாள். அவன் யுத்தத்தில் மறைந்துவிட்டதாக ராணுவமுகாமிலிருந்து வந்த செய்தியைப் படித்த அதிர்ச்சியில் அவனுடைய அம்மா உயிரிழந்துவிட்ட செய்தியைத் தெரிவிக்கிறாள். கோவிந்தன் தன் தாயின் முகத்தைப் பார்க்கமுடியாத வேதனையில் மனமுடைந்து அழுகிறான். விஜயத்தின் தாய் அவனைத் தேற்றி ஆறுதல் சொல்கிறாள்.
கோவிந்தன் ராணுவமுகாமுக்குத் திரும்பி வருகிறான். சீனப்போர் தொடங்கிவிட்டதால் அவனை லே, லடாக் பகுதிக்குச் செல்லுமாறு அனுப்பிவைக்கிறார்கள் அதிகாரிகள். அவன் தன் சிப்பாய்களின் அணியுடன் உடனடியாக சீன எல்லைக்குப் புறப்படுகிறான். அதுவரை உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து செயலாற்றியவனுக்கு, உத்தரவுக்குக் காத்திருக்கும் அணியினரோடு சேர்ந்து பணிபுரியும் அனுபவம் புதிதாக இருக்கிறது. பிற சிப்பாய்களை அவன் மதிப்புடன் நடத்துகிறான். அவனுடைய அணுகுமுறையால் எல்லாச் சிப்பாய்களும் அவனை விரும்பத் தொடங்குகின்றனர். வடகிழக்குப் பகுதிகளில் இந்திய ராணுவத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டாலும் லே, லடாக், பாராஹோத்தி பகுதிகளில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கிறது. பின்வாங்காமல் போரிட்டு சீனப்படையினரை விரட்டிவிடுகின்றனர். சீன வீரர்களின் பிடியில் இருந்த ஏழு காவல் சாவடிகளை கோவிந்தன் தலைமையிலான குழு மீட்டெடுக்கிறது.
இறுதிகட்டப் போரின்போது பல இந்திய வீரர்கள் சீன வீரர்களின் குண்டுக்கு இரையாகின்றனர். முன்னேறிச் செல்லும் வழியில் இறந்துகிடந்த ஒரு சிப்பாயின் உடலைப் பார்க்கிறான் கோவிந்தன். அக்கணம் அவன் நெஞ்சில் ஒரு திட்டம் உதிக்கிறது. உடனடியாக ஒரு போலிக் கடிதத்தை எழுதி இறந்துபோனவனின் சட்டைப்பையில் வைத்துவிட்டுச் செல்கின்றான். அன்றைய இரவில் இந்திய ரெஜிமெண்ட் கிழக்கு செக்டரில் தாக்குதல் நடத்த இருப்பதாக ஒரு செய்தியைச் சுருக்கமாக அக்கடிதத்தில் குறிப்பிடுகிறான். அந்த உடலை அங்கேயே விட்டுவிட்டு கோவிந்தன் பிற வீரர்களுடன் வெளியேறிவிடுகிறான்.
அவர்களைப் பின்தொடர்ந்துவந்த சீன வீரர்கள் பாதையோரமாக குண்டடிபட்டு விழுந்து கிடக்கும் உடலையும் அவன் பையில் இருந்த கடிதத்தையும் பார்க்கிறார்கள். அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்த தகவலை உண்மை என நம்பிய அவர்கள் உடனடியாகத் தன் மேலிடத்துக்கு அந்தச் செய்தியைத் தெரிவிக்கின்றனர். அதையடுத்து மேலிடம் பிறப்பித்த உத்தரவுப்படி அவர்களுடைய முன்னணிப்படை அங்கிருந்து பதினேழு மைல் தொலைவில் இருக்கும் கீழ் செக்டருக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுகிறது.
தக்க சமயம் பார்த்து மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் கோவிந்தன் குழு சீனர்களின் பிடியில் இருந்த சோதனைச் சாவடிகளை ஒவ்வொன்றாக மீட்டெடுக்கிறது. அப்போரில் பலர் குண்டடிப்படுகின்றனர். லெப்டினெண்ட் கோவிந்தன் விலாவில் குண்டு பாய்ந்துவிட, அந்த இடத்திலேயே மயங்கிச் சரிகிறான். காயம்பட்ட வீரர்கள் அனைவரும் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
0
எல்லையைக் காத்து நிற்கும் ராணுவத்தினருக்கு உற்சாகமூட்டவும் பாராட்டுவதற்காகவும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கலைக்குழுக்கள் எல்லைப்பகுதிக்குச் சென்று தங்கி, ஒவ்வொரு நாளும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்குகின்றன. தமிழ்நாட்டிலிருந்தும் ஒரு பெரிய குழு புறப்பட்டுச் செல்கிறது.
குண்டடிப்பட்ட காயத்திலிருந்து கோவிந்தன் மெல்ல மெல்ல மீண்டுவந்த சமயத்தில்தான் தமிழ்நாட்டுக் கலைக்குழு ஸ்ரீநகர் எல்லையை அடைகிறது. கலைக்குழுவின் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வீரர்களை அழைத்துச் செல்லும் வாகனம் வருகிறது. கோவிந்தனும் பிற வீரர்களும் இணைந்து அந்த நிகழ்ச்சியைக் காண்பதற்காகச் செல்கின்றனர்.
ராணுவக்குழுவின் கோர்கமாண்டர் அந்நிகழ்ச்சிக்கு வந்து காயம் பட்ட வீரர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து நலம் விசாரிக்கிறார். கோவிந்தனின் சாதுர்யத்தைப் பாராட்டிய அவர் அவனுடைய பெயரை பரம்வீர் சக்ர விருதுக்குப் பரிந்துரைக்கப் போவதாகத் தெரிவிக்கிறார். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறான் கோவிந்தன்.
கலைநிகழ்ச்சியில் ஒரு பாடகர் தாய்நாட்டின் பெருமையை உணர்த்தும் வகையில் ஒரு பாடலைப் பாடத் தொடங்குகிறார். அதைக் கேட்டு மெய்மறந்து, அவரைப் பாராட்டுவதற்காக மெல்ல மெல்ல மேடையை நோக்கி அடியெடுத்துவைத்து நடக்கிறான் கோவிந்தன்.
0
ஒரு கோணத்தில் ராஜு எழுதியிருக்கும் நாவல் சமத்துவத்தின் குரலாக ஒலிக்கிறது என்றும் குறிப்பிடலாம். தேசத்தைக் காக்கும் ஒரே குறிக்கோளுடன் மழை, பனி, வெயில் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனிப்பட்ட துயரங்களை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு உள்ளார்ந்த விசையுடன் போரிடுபவர்கள் ராணுவ வீரர்கள். அனைவரும் இந்தியர் என்னும் ஒரே எண்ணத்தைத் தவிர வேறெந்த எண்ணத்துக்கும் அவர்கள் மனத்தில் இடம் இருப்பதில்லை. இயல்பாகவே அவர்களுடைய நினைவுகளிலும் செயல்பாடுகளிலும் சமத்துவப்பார்வை நிறைந்திருக்கிறது.
ஓர் ஆண்டில் பெரும்பாலான காலத்தை எல்லைப்பகுதிகளில் கழிக்கும் அவர்கள் விடுப்பில் சொந்த ஊர்களுக்கு வரும்போது, அங்கு நிலவும் சாதி, மத வேறுபாடுகள் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. தன் சமத்துவப்பார்வையை தத்தம் ஊர்களில் விதைப்பதற்கும் பரப்புவதற்கும் அவர்கள் தம்மால் முடிந்தவரை முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சிகளில் சில சமயங்களில் தமக்கு நேரும் பின்னடைவுகளைப்பற்றி அவர்கள் பொருட்படுத்துவதில்லை. தன் கடன் பணி செய்துகிடப்பதே என்பதுபோல சமத்துவத்தைப் பரப்புவதையே தன் வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்.
0
மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்சி பெறமுடியாமல் தோல்வியடைந்து ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்கிற கோவிந்தன் தன் திறமையாலும் தியாக உணர்வாலும் பல ஆண்டுகள் எல்லைப்பகுதிகளில் உழைத்து, உயிரைப் பொருட்படுத்தாமல் தேசத்துக்காகப் போராடியதன் பலனாக லெப்டினென்ட்டாக பதவி உயர்வு பெறுகிறான். அவனைப்போலவே தியாக உணர்வோடு ராணுவத்தில் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து சேவையாற்றுகிறார்கள். இவர்களை ஒருபக்கமாக நிறுத்திக்காட்டும் தி.சா.ராஜு, இன்னொரு பக்கத்தில் இவர்களோடு தொடர்புடைய குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் ஊராரும் வாழும் வாழ்க்கையையும் சித்தரித்திருக்கிறார்.
ஒரு பகுதியினர் தியாகம், நாட்டுப்பற்று, நம்பிக்கை, நட்பு, நல்லிணக்கப்பார்வை என உயர்ந்த குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இன்னொரு பகுதியினர் பேராசை, தன்னலம், போலிப்பெருமிதம், அகங்காரம், சாதிப்பித்து, அதிகாரப்பித்து கொண்டவர்களாக இருக்கின்றனர். தி.சா.ராஜு நினைத்திருந்தால் அனைவரையும் தியாகிகளாகவோ அல்லது மோசடிக்காரர்களாகவோ காட்டியிருக்கலாம். ஆனால் ராஜுவின் படைப்பு மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மிகையற்ற எதார்த்த நிலையைச் சித்தரிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இருவேறு வகையான சித்திரங்களையும் தம் நாவலில் வைத்திருப்பதற்கான நோக்கத்தை தி.சா.ராஜு எங்கும் ஒரு சொல்கூட சொல்லவில்லை. ஆனால் அவர் எழுதிச் செல்லும் காட்சிகள் வழியாக அவர் சொல்ல வருவதென்ன என்பதை உணர்த்தியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. சிற்சில இடங்களில் ராஜு உருவாக்கியிருக்கும் செயற்கையான திருப்பங்கள் நாவலின் கட்டமைப்பிற்கு உகந்தவையாக இல்லை. ஆயினும் அவருடைய நோக்கம் அவற்றையெல்லாம் பொருட்படுத்தத் தேவையற்றதாக ஒதுக்கிவிடுகிறது.
‘நமக்காக நம் முகம் அறியாத ஒரு பெருங்கூட்டம் எந்த வேறுபாடும் பாராட்டாமல் இரவும் பகலும் நம் எல்லையைக் காப்பாற்றும் பணிகளில் மூழ்கியிருக்கிறது. அந்த அருமை பெருமை தெரியாமல் நமக்குள் இன்னும் சாதி, மதம், இனம் என பிரிவினை பாராட்டி மோதல் போக்கோடு திரிகிறோமே. இது எந்த வகையில் நியாயம்?’ என்னும் கேள்வியைத்தான் நம் முன் எழுப்பியிருக்கிறார்.
0

