Skip to content
Home » முப்பத்தாறு ரத்தினங்கள் #23 – இரு தட்டுகள்

முப்பத்தாறு ரத்தினங்கள் #23 – இரு தட்டுகள்

எழுத்தாளர் து.ராமமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்குடியில் பிறந்தவர். அவரும் அவருடைய மனைவி சரோஜாவும் காந்தியக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தார்கள். சுதந்திரப் போராட்ட காலத்தில் பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றனர். இருவரும் காந்தியடிகளின் வார்தா ஆசிரமத்தில் சிறிது காலம் வசித்துள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னர் கிராம நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டனர்.

தொடக்கத்தில் து.ராமமூர்த்தி ‘அசோகா’ என்னும் இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அந்த இதழ் நின்றுபோனதும் கல்கி இதழின் துணையாசிரியராக பல காலம் பணியாற்றினார்.

சக்தி, கல்கி, ஆனந்த விகடன், கணையாழி போன்ற இதழ்களில் து. ராமமூர்த்தி எழுதிய சிறுகதைகள் வெளிவந்தன. 1944இல் அவருடைய முதல் தொகுதி வெளிவந்தது. விடுதலைக்குப் பிறகு உதவிக்கணக்காளராக அவருக்கு அரசு வேலை கிடைத்தது. அதனால் அவருடைய இலக்கியப் பணிகள் நின்றுவிட்டன. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகே அவர் மீண்டும் எழுத்து முயற்சியில் இறங்கினார். அதற்குப் பிறகு அவர் எழுதிய சிறுகதைகள் 1967ஆம் ஆண்டில் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச்சங்கம் வழியாக ‘கதம்பம் சிரித்தது’ என்னும் தலைப்பில் வெளிவந்தது. மற்றொரு தொகுதியும் அந்த அமைப்பின் வழியாகவே ‘சறுக்குமரம்’ என்னும் தலைப்பில் 1988இல் வெளிவந்தது.

சிறுகதைகள் மட்டுமன்றி ‘குடிசை’ என்றொரு நாவலையும் அவர் எழுதினார். அது கணையாழியில் முதலில் பிரசுரமானது. சிறிது காலத்துக்குப் பிறகு சென்னையைச் சேர்ந்த பாலாஜி பிரசுரம் 1976இல் அந்த நாவலை வெளியிட்டது. அவருடைய மகனும் திரைப்பட இயக்குநருமான ஜெயபாரதி அந்த நாவலைத் திரைப்படமாக எடுத்து 1979இல் வெளியிட்டார்.

0

எட்டாண்டு கால இடைவெளியில் ஒரு குடும்பத்தில் நடைபெறும் இருவேறு வகையான சித்திரங்களின் தொகுப்பையே நாவலாக எழுதியிருக்கிறார் ராமமூர்த்தி. சின்னம்மா என்னும் பெண்தான் குடிசை நாவலின் மையப்பாத்திரம். அவளும் அவள் கணவனும் ஊரிலிருந்து வெகுதொலைவு தள்ளி புறம்போக்கு நிலத்தில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு தம் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து வளர்கின்றன.

சின்னம்மாவின் கணவன் ஊருக்கு வெளியே உருவான கம்பெனியில் வாட்ச்மேன் வேலைக்குச் செல்கிறான். நாளுக்கு நாள் குடும்பத் தேவைகள் பெருகிக்கொண்டே போகின்றன. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சம்பாதிப்பதில் முனைப்பாக இருக்க வேண்டிய அவன், சலிப்பில் குடிபோதைக்கு அடிமையாகிறான். வந்துகொண்டிருந்த வருமானத்தில் பாதியை குடிப்பதற்கே செலவு செய்யத் தொடங்குகிறான்.

போதை அவனை வேறு திசையில் அழைத்துச் செல்கிறது. நீண்ட காலம் பொறுமை காத்த நிர்வாகம் ஒரு கட்டத்தில் வேலை நேரத்தில் குடிபோதையில் இருந்ததாகச் சொல்லி அவனை வேலையிலிருந்து நீக்கிவிடுகிறது. ஆனால் வருமானத்துக்கான வழியை இழந்துவிட்டோமே என்கிற வருத்தமோ, இன்னொரு புதிய வேலையை எப்படியாவது தேடிக்கொள்ள வேண்டுமே என்கிற பதற்றமோ எதுவுமின்றி எப்போதும்போல குடிப்பதிலேயே பொழுதைக் கழிக்கிறான் அவன்.

இனி கணவனை நம்பிப் பயனில்லை என்று நினைத்த சின்னம்மா குடும்பப் பொறுப்பை தன் தோளில் ஏற்றி வைத்துக்கொள்கிறாள். எருமுட்டை தட்டி விற்பனை செய்கிறாள். எருமை வளர்த்து பால் வியாபாரம் செய்கிறாள். வீட்டுவேலைக்குச் செல்கிறாள். எருமைக்காக அறுத்துவரும் புல்லுக்கட்டில் மிச்சம் பிடித்து குதிரை வண்டிக்காரனுக்கு விற்று சில்லறை வாங்குகிறாள். ஆனால் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க வழியில்லாத அவள் கணவன் குடிப்பதற்காகவும் ஓட்டலில் வக்கணையாகச் சிற்றுண்டி சாப்பிடுவதற்காகவும் அவள் பாடுபட்டுச் சேர்த்துவைத்திருக்கும் பணத்திலிருந்து வெட்கமில்லாமல் பங்கு கேட்டு கைநீட்டுகிறான்.

அவளுக்குப் பெற்றோர் இல்லை. அவளைவிட வயதில் மூத்த சகோதரன் மட்டுமே அதே ஊரில் வேறொரு பகுதியில் இருக்கிறான். அவன்தான் அவ்விருவருக்கும் திருமணம் செய்துவைத்தான். குடும்பத்தில் வேலைச்சுமை பெருகியதாலும் அடிக்கடி உடல் களைத்துவிடுவதாலும், உதவிக்காக அண்ணன் வீட்டில் இருக்கும் தன் தங்கை ஆண்டாளை அழைத்து வந்து வீட்டோடு வைத்துக்கொள்கிறாள் சின்னம்மா. அவளுடைய இளமையான உடற்கட்டையும் நடமாட்டத்தையும் பார்த்துப் பார்த்து ஆசையை வளர்த்துக்கொள்கிறான் சின்னம்மாவின் கணவன். அவன் வார்த்தைகளைக் கேட்டுத் தடுமாறிய ஆண்டாளும் அவன் விருப்பத்துக்கு இடம்கொடுக்கிறாள். தொடக்கத்தில் ஒருவருக்கும் தெரியாமல் இருந்த அந்த ரகசிய உறவு நாளடைவில் சின்னம்மாவுக்குத் தெரிந்துவிடுகிறது.

முறையில்லாத அந்த உறவு தன் குடும்ப வாழ்க்கையைச் சீர்குலைத்துவிடும் என அஞ்சிய சின்னம்மா அடுத்த நாளே தன் தங்கையை அழைத்துச் சென்று சகோதரன் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிடுகிறாள். வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாலும் ஒருவரும் அறியாத வகையில் இரவு கவிழ்ந்த நேரத்தில் இருவரும் தோப்புகளிலும் வேலியோரங்களிலும் சந்தித்து உறவை வளர்த்துக்கொள்கிறார்கள். ஊர் முழுக்க அதுவே பேச்சாகிறது. சகோதரன் தீவிரமாக முயற்சி செய்து தொலைவிலிருக்கும் இரும்பூரில் வசிக்கும் ஒரு விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு ஆண்டாளைத் திருமணம் செய்துவைக்கிறான்.

பழைய தொடர்புகளை மறந்து அந்த ஊரில் ஆண்டாளாலும் இருக்கமுடியவில்லை, இந்த ஊரில் சின்னம்மாவின் கணவனாலும் இருக்கமுடியவில்லை. ஒருசில வாரங்களுக்குப் பிறகு ஒருவரும் அறியாமல் வண்டி ஏறிச் சென்று புகுந்த வீட்டிலிருந்து ஓர் இரவுப்பொழுதில் ஆண்டாளை அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறான். எதிர்ப்பு தெரிவித்த மனைவியிடம் ‘உனக்கு இஷ்டமில்லைன்னா நாங்க தனியா போய் குடிசை போட்டுக்கறம்’ என்று அலட்சியமாகத் தெரிவிக்கிறான்.

வளர்ந்துவரும் பிள்ளைகளுக்கு ஓர் அரணாக அப்பா என ஒருவன் இருக்கவேண்டுமே என்கிற எண்ணத்தில் எல்லாக் கசப்புகளையும் விழுங்கிக்கொள்கிறாள் சின்னம்மா. கூடுதல் செலவீனங்களைச் சமாளிக்க புறாக்களையும் கோழிகளையும் வளர்க்கத் தொடங்குகிறாள். இன்னொரு பசுவை வாங்கி வளர்க்கலாம் என்னும் திட்டத்தில் ஐநூறு ரூபாய்க்கான ஒரு மாசச்சீட்டு கட்டுகிறாள். அது எல்லாம் கூடிவரும் நேரத்தில் சீட்டுப் பிடித்த ஆள் கடையை மூடிக்கொண்டு ஊரைவிட்டே ஓடிவிடுகிறான். சின்னம்மாவுக்கு மனக்கஷ்டத்தோடு பண நஷ்டமும் ஏற்படுகிறது.

சில மாதங்களுக்கு பிறகு சில பெரிய மனிதர்களோடு வந்து பஞ்சாயத்து கூட்டிப் பேசிய இரும்பூர்க்காரர்கள் ஆண்டாளை மறுபடியும் தம்மோடு அழைத்துச் சென்று மகனோடு சேர்ந்து வாழவைக்கிறார்கள். சொந்த அக்காவுக்குத் துன்பமளிக்கும் வாழ்க்கையை வாழ வேண்டாம் எனக் கருதி ஆண்டாளும் அவர்களோடு புறப்பட்டுச் சென்றுவிடுகிறாள். அவள் பிரிவு சின்னம்மாவின் கணவன் தன் குடியைத் தொடர்வதற்கு மற்றுமொரு காரணமாக அமைகிறது.

இரும்பூருக்குச் சென்ற ஆண்டாள் இரண்டாண்டு இடைவெளியில் ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள். அடுத்த ஆண்டே அவளுடைய கணவன் எதிர்பாராதவிதமாக மரணமடைந்துவிடுகிறான். விதவையானாலும் அக்குடும்பம் அவளைத் தாங்கி ஆதரவாக நிற்கிறது. எந்தச் சபலத்துக்கும் இடமளிக்காமல் அந்தக் கொழுகொம்பை அவளும் உறுதியாகப் பற்றிக்கொள்கிறாள்.

தன் உழைப்பாலும் வருமானத்தாலும் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சின்னம்மாவின் கணவன் குடித்துக் குடித்தே பொழுதைக் கழிக்கிறான். ஏற்கனவே இருந்த மூன்று பிள்ளைகளோடு மேலும் இரு பிள்ளைகள் பிறக்கின்றன. அனைவரையும் ஒழுங்காக வளர்ப்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்ட சின்னம்மா மேலுமொரு எருமையையும் பசுவையும் வாங்கி வளர்க்கிறாள். பால்வணிகம் வழியாகக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு குடும்பச்செலவைச் சமாளிக்கிறாள். ஓய்வில்லாத கடுமையான உழைப்பாலும் அடுத்தடுத்த பிரசவங்களாலும் அவள் உடல்நிலை மேன்மேலும் நலியத் தொடங்குகிறது. காசநோயின் காரணமாக அவள் நிலை மோசமடைகிறது. மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள் பயனளிக்கவில்லை.

ஒருநாள் மரணம் தன்னை நெருங்கிவிட்டதைத் தன் உள்ளுணர்வால் உணர்ந்துகொள்கிறாள் சின்னம்மா. பழைய விஷயங்களையெல்லாம் மறந்து தன் தங்கை ஆண்டாளைப் பார்க்க விரும்புகிறாள். சின்னஞ்சிறிசுகளாக இருக்கும் தம் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை அவளிடம் ஒப்படைக்க அவள் மனம் விரும்புகிறது. உடனடியாகச் சென்று ஆண்டாளை அழைத்துவருமாறு கணவனிடம் கேட்டுக்கொள்கிறாள் அவள்.

ஆண்டாளின் பெயரைக் கேட்டதுமே அவன் மனம் சிலிர்க்கிறது. தன் கனவு தானாக நிறைவேறும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறான் அவன். கணவன் இல்லாமல் தனிமையில் மாமியார் வீட்டில் வாழும் அவள் அழைத்த உடனே கிளம்பி வந்துவிடுவாள் என, கற்பனைக்கோட்டை கட்டியபடி அவளுடைய வீட்டுக்குச் செல்கிறான்.

அக்காவின் நிலையை அறிந்ததும் அவள் மனம் துயரத்தில் மூழ்கிவிடுகிறது. ‘சின்னம்மாவைப் பார்க்க வருவேன். ஆனா அங்க இருக்கமாட்டேன்’ என்று உறுதியான குரலில் அவனிடம் தெரிவிக்கிறாள். அவள் பேச்சிலும் நடத்தையிலும் வெளிப்படும் முதிர்ச்சியையும் உறுதியையும் பார்த்து அவன் வியப்பில் ஆழ்கிறான். அவள் வேறொருத்தியாக மாறிவிட்டதாகவே அவனுக்குத் தோன்றுகிறது.

சின்னம்மாவின் உடல்நிலை பற்றிய செய்தியைக் கேட்ட மாமியாரும் உடனே சென்று வருமாறு சொல்கிறாள். பக்கத்தில் நின்றிருந்த கொழுந்தன் அப்பயணத்துக்குத் தோதாக உடனடியாக மாடுகளை வண்டியில் பூட்டித் தயாராக நிற்கிறான்.

இரும்பூரிலிருந்து சின்னம்மாவின் ஊருக்கு வண்டி செல்கிறது. அக்காவைப் பார்த்ததும் திரும்பவேண்டும் என்கிற எண்ணமே அவள் மனத்தில் ஓங்கியிருக்கிறது. ‘சாய்ங்காலம் இருட்னதும் வண்டி கட்டிடு. ராத்திரிக்குள்ளார நாம திரும்ப ஊருக்குப் போயிடணும்’ என்று வண்டிக்காரனிடம் உறுதியாக குரலில் சொல்கிறாள் ஆண்டாள்.

அவர்கள் குடிசையை நெருங்கும் சமயத்தில் அழுகுரல் கேட்கிறது. சின்னம்மாவின் மரணச்செய்தியோடு ஓரிருவர் வாசலில் நிற்கிறார்கள். ஆண்டாள் தலைகவிழ்ந்து உடல்குலுங்க அழுகிறாள்.

அந்தக் கணத்தோடு நாவலை நிறைவு செய்துவிடுகிறார் ராமமூர்த்தி. ஆண்டாள் என்ன முடிவெடுத்தாள் என்பது மெளனமாகவே விடப்பட்டிருக்கிறது. தாயின்றி தவிக்கும் பிள்ளைகளுக்காகப் பாவம் பார்த்து அந்த ஊரிலேயே தங்கப் போகிறாளா அல்லது அக்காவின் முகம் பார்த்த பிறகு தயாராக நிற்கும் வண்டியில் ஏறி இரும்பூருக்கே திரும்பப் போகிறாளா என்பது புரியாத புதிர்.

0

து.ராமமூர்த்தி இந்த நாவலுக்காக எழுதிய முன்னுரையை ‘இது ஒரு குடும்பத்தின் கதை’ என்ற வரியோடுதான் தொடங்குகிறார். அந்தக் குடும்பம் குடிசைக்குள் வசிக்கிறது. நான்கு பக்கங்களிலும் மண்சுவர்கள். பனை ஓலைகளால் வேயப்பட்ட கூரை. அதுதான் அந்தக் குடிசையின் தோற்றம். ஒரு கதவு கூட இல்லை. குளிர்க்காற்று உள்ளே நுழைந்துவிடாதபடி தடுப்பதற்காக சாக்குகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு திரை மட்டுமே உள்ளது.

குடிசையாக இருந்தாலும் சரி, மாளிகையாக இருந்தாலும் சரி, ஒரு வீடு என்பது குடும்பமாகச் சேர்ந்து வசிப்பதற்கு மனிதர்கள் செய்துகொள்ளும் ஒரு ஏற்பாடு. அவ்வளவுதான். அந்த வாழ்க்கையை மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழ, அங்கு வசிக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நிலவும் அன்பும் புரிதலும்தான் மிகமிக முக்கியமானவை. வசதிகள் என்பது இரண்டாம் பட்சமே. மன நிறைவான வாழ்க்கையைக் குடிசையிலும் வாழலாம். மாளிகையிலும் வாழமுடியும்.

குடும்ப வாழ்க்கைக்கு இரு பக்கங்கள் உண்டு. ஒருபக்கம் அது மிகப்பெரிய பொறுப்பு. கிட்டத்தட்ட அதை ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதுபோல கவனமாகவும் மன உறுதியோடும் கட்டுக்கோப்பாகவும் நிர்வகிக்கவேண்டும். இன்னொரு பக்கம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் அது ஒரு இன்பக்களஞ்சியம்.

குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும் ஆணும் பெண்ணும் இரு பக்கங்களையும் சமநிலையில் பேணிவரவேண்டும். ஒரு பக்கத்தை மட்டுமே பெரிதாக நினைக்கத் தொடங்கி, மறுபக்கத்தைப் புறக்கணிக்கத் தொடங்குபவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அந்தக் குடும்ப வாழ்க்கை தோல்வியிலேயே முடிவடையும்.

சமநிலையைப் பேணாதவர்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிய வேகத்திலேயே அந்தத் தோல்வியை எதிர்கொள்வார்கள். ஒருசிலருக்கு அத்தோல்வி தாமதமாக வந்து சேரும். கால அளவு மட்டுமே வேறுபடும். ஆனால் அந்தத் தோல்வியை ஒருபோதும் யாராலும் தடுக்கமுடியாது.

குடிசை நாவலில் திருமணமான புதிதில் கணவனும் மனைவியும் சேர்ந்து, தாம் சேர்ந்து வாழ்வதற்கான குடிசையை இணைந்து கட்டியெழுப்பும் சித்திரத்தை நாவலில் பதிவு செய்திருக்கிறார் ராமமூர்த்தி. அப்போது அவனே ஏரியிலிருந்து களிமண்ணை எடுத்து வண்டியில் நிரப்பி எடுத்துவருகிறான். அவனும் அவன் மனைவி சின்னம்மாவும் அந்த மண்ணைப் பிசைந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சுவர் எழுப்புகிறார்கள். உலர உலர, பலமுறை அச்சுவர்களுக்கு மண் பூசி அப்பி உறுதியாக நிற்கவைக்கிறார்கள். மேல்கூரை போடும்போதுதான் கூலி கொடுத்து ஆட்களை அமர்த்துகிறார்கள். பிறகு அவனே குடிசைத் தரையைத் திமுசுக்கட்டையால் தட்டித்தட்டிச் சமப்படுத்துகிறான். சின்னம்மா அத்தரையின் மீது சாணம் பூசி மெழுகி மெழுகி வழவழப்பாக்குகிறாள்.

வாழ்வதற்கு ஒரு நிலையான இருப்பிடம் வேண்டும் என்கிற தேவையை நிறைவேற்ற இருவரும் சேர்ந்து பொறுப்புணர்ச்சியோடு அக்குடிசையை உருவாக்குகிறார்கள். அக்குடிசையில் நடத்திய இன்பவாழ்க்கையின் பயனாக அவர்களுக்குக் குழந்தைகளும் பிறந்தன.

கெடுவாய்ப்பாக, அவனுடைய குடிப்பழக்கம் அவன் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து ஒவ்வொரு படியாக கீழே உருட்டிக்கொண்டே வந்து தரையில் வீழ்த்திவிடுகிறது. தான் வீழ்ந்துவிட்டோம் என்ற எண்ணம் கூட அவனுக்குள் தோன்றாத அளவுக்கு அவனுடைய குடிபோதை தடுத்துவிடுகிறது.

குடிபோதையின் காரணமாக அவன் அதுவரை செய்துவந்த வேலையிலிருந்து நீக்கப்படுகிறான். வேலையற்றவனாகி, சோம்பலோடு வீட்டிலேயே படுத்துப்படுத்து எழுந்திருக்கிறான். பிறகு மனைவியின் சுடுசொல்லுக்கு அஞ்சி எங்கெங்கோ கிடைத்த வேலைக்குச் செல்கிறான். ஆனால் எங்கும் அவனால் நிரந்தரமாக இருக்கமுடியவில்லை. ஒரு கட்டத்தில் வேலை செய்யும் நாட்களைவிட வேலை செய்யாத நாட்களே அதிகரிக்கத் தொடங்குகின்றன.

வருமானம் இல்லாத சூழலில் வருமானத்துக்கான வழியாக சின்னம்மா பால் வியாபாரம் செய்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஒவ்வொரு நாளும் பிடுங்கிச் சென்று குடித்துவிட்டு வந்து நிற்கிறான் அவன். சின்னம்மாவுக்குத் துணையாக குடிசையில் தங்கியிருக்கும் மனைவியின் தங்கையோடு தகாத உறவை ஏற்படுத்திக்கொண்டு எல்லோருடைய கசப்புக்கும் இலக்காகிறான். கடுமையான காச நோயின் காரணமாக சின்னம்மா மரணமடைந்ததும் எந்தப் பொறுப்பையும் செய்ய இயலாதவனாக அவனே உருவாக்கிய குடும்பத்தில் ஒரு சுமையாக மட்டுமே எஞ்சுகிறான்.

0

கருவுற வைப்பதற்காக பொலிகாளையை வளர்ப்பவரின் இருப்பிடத்தைத் தேடி சின்னம்மா தன் எருமையை ஓட்டிக்கொண்டு செல்லும் முதல் காட்சியோடுதான் நாவலைத் தொடங்குகிறார் ராமமூர்த்தி. பொலிகாளையை எருமையோடு ஒருமுறை சேரவைப்பதற்குக் கட்டணமாக மூன்று ரூபாய் வசூலிக்கிறார் காளைக்குச் சொந்தக்காரர். வேறொரு இடத்தில் ஒருவர் இரண்டு ரூபாய் வசூலிக்கிறார். இன்னொரு இடத்தில் பிறிதொருவர் ஐந்து ரூபாய் கேட்கிறார். காளைகளின் தரத்துக்கேற்ப அந்தக் கட்டணம் மாறுபடுகிறது. ஊரில் அது ஒரு தொழிலாகவே கருதப்படுகிறது. அந்த நடைமுறையில் நெறி என எதுவுமில்லை. எந்த எருமையையும் எந்தக் காளையோடும் சேரவைக்கலாம். பலன் ஒன்றே அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் சமூகத்தில் மானுட வாழ்வில் ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் குடும்ப அமைப்புக்குப் பொதுவான ஒரு நெறி வகுத்துவைக்கப்பட்டிருக்கிறது. அந்த நெறியோடு வாழும் குடும்பங்களே சமூகத்தில் மதிக்கப்படுகின்றன. நெறி பிறழ்ந்தவர்கள் சமூகத்தின் இகழ்ச்சிக்கு ஆளாகிறார்கள்.

சின்னம்மாவின் கணவன் தொடக்கத்தில் சின்னம்மாவோடு மகிழ்ச்சியாக இல்வாழ்க்கையைத் தொடங்கியிருந்தபோதும், அவன் மனத்தில் ஏற்படும் தடுமாற்றம் அவனை நெறிபிறழ வைத்துவிடுகிறது. உதவிக்காகத் தன் வீட்டில் வந்து தங்கிய மனைவியுடைய தங்கையின் மனத்தை மயக்கி தனக்கு இசைவாக வசப்படுத்தி முறையில்லாத இன்பத்தில் மிதக்கிறான். ஆரம்பத்தில் ஒருவரும் அறியாததாக இருந்த அவர்களுடைய நெருக்கம் சின்னம்மாவுக்குத் தெரிய வந்த பிறகு பெருகுகிறதே தவிர குறையவில்லை. அவசரம் அவசரமாகத் திருமணம் செய்துவைக்கப்பட்டு அவள் வெளியூருக்கு அனுப்பிவைக்கப்பட்ட போதும் அந்த ஊருக்கே சென்று அவளை அக்குடும்பத்திலிருந்து பிரித்து தன்னோடு அழைத்துவந்து பகிரங்கமாக அவளை வைத்துக்கொள்கிற அளவுக்குக் காமம் அவன் கண்களை மறைக்கிறது.

அவனுடைய முதல் சரிவு அங்கிருந்தே தொடங்குகிறது. அப்புள்ளியிலிருந்து அவனால் மேலெழ முடியவில்லை. தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கிறான்.

0

குடிசையில் வாழ்கிறவர்களாக இருந்தாலும் சரி, மாளிகையில் வாழ்கிறவர்களாக இருந்தாலும் சரி, எல்லாத் தரப்பினருக்கும் பொறுப்பும் இன்பமும் ஒரு தராசின் இரு தட்டுகள் போன்றவை. எந்தத் தட்டின் எடை குறைந்தாலும் தராசு நிலைகுலைந்துவிடும். குடிசையை ஒரு படிமமாக முன்னிறுத்தி எழுதிய தன் நாவலில் இந்த உண்மையைப் பதியவைக்கிறார் ராமமூர்த்தி.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *