Skip to content
Home » நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்

ஓர் ஊரில் ஒரு குருவும் சீடனும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாடோடிகள் போல ஊரூராகத் திரிந்துகொண்டே இருந்தார்கள். ஒருநாள் இரவில் தங்கிய ஊரில் அடுத்தநாள் தங்கமாட்டார்கள். உடனே பக்கத்து ஊருக்குச் சென்றுவிடுவார்கள்.

புதிய ஊருக்குச் சென்றதும் முதலில் அந்த ஊரைச் சுற்றிவந்து அதன் அமைப்பைப் புரிந்துகொள்வார்கள். பிறகு அங்கு நடமாடும் மனிதர்களிடன் பேச்சுக் கொடுத்து அவர்களுடைய எண்ணப்போக்கைப் புரிந்துகொள்வார்கள். அதன் அடிப்படையில் சூழலுக்குத் தகுந்தபடி பேசத் தொடங்குவார்கள்.

காதுகொடுத்துக் கேட்கிறவர்கள் மயங்கிப் போகிற அளவுக்கு இருவரும் இனிமையாகப் பேசி நெருக்கத்தை உருவாக்கிக்கொள்வார்கள். அதுவரை ஊர்சுற்றி ஈட்டிய அனுபவங்களின் அடிப்படையில் அந்தச் சமயத்தில் நினைவுக்கு வருகிற ஒன்றிரண்டு பழைய சம்பவங்களை அழகாக விவரித்து அவர்களுடைய மனத்தில் எளிதாக இடம்பிடித்துவிடுவார்கள். அதற்குப் பிறகு அந்த ஊரில் அவர்களுக்கு ராஜ உபசாரம் நடக்கும். வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு, ஏதேனும் மரத்தடியிலோ அல்லது குளக்கரையிலோ அல்லது சத்திரத்திலோ உறங்கிவிடுவார்கள்.

விடிந்ததும் எழுந்து குளத்தில் குளித்துவிட்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு அடுத்த ஊருக்கு நடக்கத் தொடங்கிவிடுவார்கள். ஊரில் இருப்பவர்களின் ஒருசிலர் அவர்களை நெருங்கி ‘ஐயா, இன்னும் ரெண்டுநாள் எங்க ஊருல தங்கிட்டுப் போகலாமே. ஏன் இவ்வளவு அவசரமா புறப்படறீங்க? நீங்க தங்கினா, உங்க புண்ணியத்துல நாங்களும் நாலு நல்ல விஷயங்களைக் கத்துக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பா இருக்கும்” என்று கேட்பார்கள். குருவும் சீடனும் புன்னகைத்தபடி அவர்களுடைய கோரிக்கையை மறுத்துவிடுவார்கள். ‘ஒருநாள் தங்கின ஊருல இன்னொரு நாள் தங்கக்கூடாதுங்கறது கடவுள் முன்னால நாங்க எடுத்துகிட்ட சபதம். தயவுசெஞ்சி எங்களைத் தடுக்கவேணாம்’ என்று நயமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிடுவார்கள்.

எந்த ஊருக்குப் போனாலும் அவர்களுடைய கதைகளைக் கேட்பதற்கு பத்து பேர் கூடிவிடுவார்கள். வயிற்றுப்பசியைத் தணித்துக்கொள்ள நல்ல சாப்பாடு கிடைத்துவிடும். அதனால் தினசரிக்கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் அவர்கள் ஆண்டுக்கணக்கில் நாடோடிகளாகத் திரிந்தார்கள்.

வழக்கம்போல ஒருநாள் காலை வேளையில் ஓர் ஊரிலிருந்து புறப்பட்டு மாலை வேளையில் இன்னொரு ஊரை அடைந்தார்கள். அந்த ஊரில் அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஊர் எல்லையைத் தொட்ட சமயத்திலிருந்து ஒருவர் கூட அவர்கள் பார்வையில் தட்டுப்படவில்லை. வழக்கமாக தெருவில் தென்படும் சின்னஞ்சிறு பிள்ளைகளின் விளையாட்டுக்காட்சிகள் கூட அந்த ஊரில் தென்படவில்லை. ஊரே நடமாட்டமின்றி ஏதோ பாழடைந்த ஊரைப்போல அமைதியில் மூழ்கிக் காட்சியளித்தது. கடைத்தெரு வெறிச்சென்றிருந்தது. குளத்தங்கரையும் கிணற்றங்கரையும் வெறிச்சென்று இருந்தன. கோவில் வாசல் கூட வெறிச்சோடி இருந்தது.

இது என்னடா விசித்திரம் என நினைத்துக்கொண்டு ஆச்சரியத்தில் மூழ்கியபடி குருவும் சீடனும் ஒவ்வொரு தெருவாக நடந்து பார்த்தார்கள். எல்லா வீடுகளின் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. ஒரு வீட்டில் கூட ஜன்னல் இல்லை. திண்ணைகள் வெற்றிடங்களாக இருந்தன. வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதையே தெரிந்துகொள்ள முடியவில்லை.

வீட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகள் கால்மடக்கி அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. வைக்கோல் போரின் ஓரமாக கோழிகள் கதகதப்பாக சுருண்டுப் படுத்திருந்தன. மரத்தடிகளில் நாய்கள் படுத்திருந்தன. புதருக்கடியில் பூனைகள் ஒடுங்கி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன, அவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு வரும்போது பூட்டிய வீடுகளுக்குள் மனிதர்களும் உறங்குகிறார்களோ என்று அவர்களுக்குச் சந்தேகம் வந்தது. ஒட்டுமொத்த ஊரே ஏன் இப்படி உறக்கத்தில் மூழ்கியிருக்கிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

‘நாம இந்த ஊரைவிட்டு உடனடியா புறப்பட்டுப் போயிடறதுதான் நல்லது. யாருமே தென்படாத இந்த ஊருல யாரோடு நாம உரையாடமுடியும்? நமக்கு யார் சாப்பாடு போடுவாங்க?’ என்று சீடனிடம் சொன்னார் குரு.

சீடன் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவனைப்போல தலையை அசைத்தான். ‘குருவே, என்னால் இனிமேல் ஒரு அடிகூட நடக்கமுடியாது. கால்கள் வலியெடுத்துவிட்டன. பசி வேறு வயிற்றைக் கிள்ளுகிறது. சிறுகுடலை பெருங்குடல் தின்றுவிடும்போல உள்ளது’ என்று சொல்லிக்கொண்டே ஒரு மரத்தடியில் சோர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

‘இங்கேயே உட்கார்ந்துடறதால நம்ம பிரச்சினை தீராது. நமக்கு சாப்பாடு கிடைக்க வழியே இல்லை. நான் சொல்றதைக் கேளு. மெதுவா நாம அடுத்த ஊரைப் பார்த்துப் போயிடலாம்’ என்று குரு மறுபடியும் சீடனிடம் எடுத்துரைத்தார்.

‘மன்னிச்சிக்குங்க குருவே. என் உடம்புல கொஞ்சம் கூட சக்தியே இல்லை’ என்றான் சீடன்.

என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்துடன் இருளத் தொடங்கிய வானத்தின் பக்கம் பார்த்தபடி யோசனையில் மூழ்கினார் குரு. அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு சேவல் கூவும் குரல் கேட்டது. அதைக் கேட்டதும் குரு ஒருகணம் திகைத்து எல்லாத் திசைகளிலும் திரும்பிப் பார்த்தார். என்ன நடக்கிறது என்பதே அவருக்குப் புரியவில்லை. அப்போது இருள் முழுமையாகக் கவியத் தொடங்கியது.

அந்த நேரத்தில் எல்லா வீடுகளிலிருந்தும் கதவுகளைத் திறந்துகொண்டு மனிதர்கள் வெளிப்படத் தொடங்கினார்கள். வாசல் தெளித்து கோலம் போட்டார்கள். தெருவில் மெல்ல மெல்ல நடமாட்டம் பெருகியது.

அதைப் பார்த்ததும் சீடன் உற்சாகத்தோடு எழுந்து நின்றான். ‘பாருங்க, பாருங்க. நம்ம நம்பிக்கை வீண்போகலை. சுடுகாடு மாதிரி தெரிஞ்ச இந்த ஊருல மனிதர்கள் நடமாட ஆரம்பிச்சிட்டாங்க. உலகத்துக்கெல்லாம் பகலா இருக்கும்போது இந்த ஊருல இரவா இருக்கும்போல. மத்த இடங்கள்ல ராத்திரியாகத் தொடங்கற சமயத்துல இந்த ஊருல விடியத் தொடங்கும்போல. விசித்திரமா இருக்குது’ என்று நடமாட்டத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினான்.

எல்லாவற்றையும் பார்த்து குரு குழப்பத்தில் ஆழ்ந்தார். ஆனால் மக்கள் நடமாட்டத்தைப் பார்த்ததும் சீடன் உற்சாகமடைந்துவிட்டான். களைப்பைப் பொருட்படுத்தாமல் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான். அவனுக்குப் பின்னால் நடந்துசெல்வதைத் தவிர, குருவுக்கு வேறு வழி தெரியவில்லை.

மனிதர்களைச் சந்தித்து, நம்பிக்கையைச் சம்பாதித்து, அதற்குப் பிறகு உணவு கிடைப்பதற்காகக் காத்திருக்கும் அளவுக்கு அவர்களால் பசியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடனடியாக எதையாவது சாப்பிட்டு தெம்பை வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில் இருவரும் இருந்தார்கள். அதனால் ஏதேனும் உணவுக்கடைக்குச் சென்று எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என நினைத்து கடைத்தெருவை நாடி நடக்கத் தொடங்கினார்கள்.

ஓர் உணவுக்கடையிலிருந்து வந்த மணம் அவர்களைத் தடுத்து நிறுத்தியது. சீடன் வேகமாக அந்தக் கடைக்குச் சென்றான். ஏராளமான தட்டுகளில் பலவிதமான உணவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்க்கப்பார்க்க சீடனின் நாவில் எச்சில் ஊறியது. முதல் பார்வையில் தென்பட்ட ஓர் உணவைச் சுட்டிக்காட்டி கடைக்காரரிடம் ‘இது என்ன விலை?’ என்று கேட்டான். கடைக்காரர் ‘ஒரு பித்தளை காசு’ என்றார். சீடன் உடனே அதற்குப் பக்கத்தில் இருந்த தட்டில் வைக்கப்பட்டிருந்த வேறொரு சிற்றுண்டி வகையைக் காட்டி ‘இது என்ன விலை?’ என்று கேட்டான். கடைக்காரர் ‘அதுவும் ஒரு பித்தளை காசு’ என்று சொன்னார். உடனே சீடன் இன்னொரு சிற்றுண்டி வகையைச் சுட்டிக்காட்டி ‘இது என்ன விலை?’ என்று விசாரித்தான். கடைக்காரர் ‘அதன் விலையும் ஒரு பித்தளைக்காசுதான்’ என்று புன்னகைத்துக்கொண்டே சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு நம்பமுடியாமல் திகைத்து நின்றான் சீடன். அதைப் பார்த்த கடைக்காரர் அவனிடம் பொறுமையான குரலில் ‘இந்த ஊருல எதை எடுத்தாலும் ஒரே விலைதான். எல்லாமே ஒரு பித்தளை காசுதான்’ என்று சொன்னார்.

அதைக் கேட்டு குழப்பத்தில் ஆழ்ந்தான் சீடன். ‘எல்லாத்துக்கும் ஒரே விலையா? அது எப்படி? ஆச்சரியமா இருக்குதே’ என்று வாயைப் பிளந்தான்.

‘எல்லாம் எங்க ராஜாவுடைய கட்டளை. இந்த ஊருல எந்தப் பொருளை வித்தாலும் ஒரே விலைதான்.’

‘சாப்பாட்டுக்கடையில மட்டும்தான் அந்த வழிமுறையா? இல்ல, எல்லாக் கடைகளிலும் இதே வழிமுறைதானா?’ என்று மென்று விழுங்கியபடி கேட்டான்.

‘எந்தக் கடையில எதைக் காட்டி விலை கேட்டாலும் ஒரே விலைதான் சொல்வாங்க. ஒரு பெரிய கடப்பாறையை நீங்க வாங்கப் போனாலும் அதனுடைய விலையும் ஒரு பித்தளைக் காசாதான் இருக்கும். ஒரு படி நெல்லு வாங்கப்போனாலும் அதனுடைய விலையும் ஒரு பித்தளைக் காசாதான் இருக்கும். ராஜாவுடைய கட்டளையை மீறினா கடுமையான தண்டனை உண்டு.’

ஆளுக்கொரு பித்தளைக் காசைக் கொடுத்து சிற்றுண்டி வாங்கிச் சாப்பிட்டனர். வயிறு நிறைந்ததும் களைப்பின் காரணமாக அவர்கள் கால்கள் தள்ளாடத் தொடங்கின. படுத்துறங்க உடல் கெஞ்சியது. அப்போதுதான் தெருக்களில் கொஞ்சம் கொஞ்சமாக நடமாட்டம் பெருகத் தொடங்கியது. இருட்டை பகல்போல நினைத்துக்கொண்டு நடமாடும் மனிதர்களைப் பார்க்க அவர்களுக்கு விசித்திரமாக இருந்தது. வழக்கமாக ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியைத் தேடி நடக்கும் பழக்கமுள்ள அவர்கள் முதல்முறையாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியைத் தேடி அலைந்தார்கள். சிறிது தூரம் நடந்த பிறகு ஒரு பாழடைந்த மண்டபம் தெரிந்தது. அனைவராலும் கைவிடப்பட்ட அந்த மண்டபத்தில் நாலைந்து நாய்களைத் தவிர வேறெந்த நடமாட்டமும் இல்லை. உடனே குருவும் சீடனும் அங்கேயே மறைவாக ஓரிடத்தில் படுத்து உறங்கத் தொடங்கினர்.

பொழுது விடியும் சமயத்தில்தான் அவர்களுக்கு விழிப்பு வந்தது. எழுந்து உட்கார்ந்து வானத்தில் சூரியன் உதித்து கொஞ்சம் கொஞ்சமாக மேலேறுவதையே சிறிது நேரம் பார்த்தனர். பிறகு குளம் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று நீராடி முடித்தனர். அதே நேரத்தில் கொஞ்சம்கொஞ்சமாக ஊர் அடங்கத் தொடங்கியது.

‘இப்பவே நாம இந்த ஊரிலிருந்து கெளம்பிடலாம். இந்த ஊர் நமக்கு ஒத்துவராது’ என்று சீடனிடம் சொன்னார் குரு.

‘குருவே, நான் சொல்றதைக் கேளுங்க. இதைவிட நல்ல ஊர் உலகத்துலயே இருக்கமுடியாது. ஒரே ஒரு பித்தளைக்காசு செலவு செஞ்சா போதும். வயிறாரச் சாப்பிட்டு காலத்தைக் கழிக்கலாம். சாப்பாட்டுக்காக நாம ஊரூரா அலையவேணாம்.’

‘அந்த கோணத்துல யோசிச்சா நமக்கு வசதிதான். இல்லைன்னு சொல்லலை. ஆனா, ஊரு தூங்கற நேரத்துல நாம விழிச்சிருக்கறதும், நாம விழிச்சிருக்கிற நேரத்துல ஊரே தூங்கறதும் எனக்கு என்னமோ நல்லதா படலை. அதனாலதான் இந்த இடத்தைவிட்டு போயிடலாம்னு சொல்றேன்.’

‘நாலு நாள் பழகிட்டா தூக்கம், முழிப்பு எல்லாம் பழகிடும் குருவே. நீங்க கவலைப்படாதீங்க.’

‘இந்த ஊருல இருக்கறவங்க எல்லாருமே முட்டாளா இருக்கறாங்க. இவுங்களுக்கு ராஜாவா இருக்கறவன் எல்லாரைவிடவும் பெரிய முட்டாளாதான் இருப்பான். கடப்பாறையையும் நெல்லையும் ஒரே விலையில விக்கணும்னு கட்டளை போடற ராஜா நல்லவனா இருக்க வாய்ப்பே இல்லை. இவுங்களுக்கு நடுவுல நாம வாழறது ரொம்ப கஷ்டம். இவுங்களோடு பழகிப்பழகி கடைசியில நாமளும் முட்டாளா மாறிடுவோம். அதைப்பத்தியும் நீ கொஞ்சம் யோசிக்கணும்.’

‘யாரு முட்டாளா இருந்தா நமக்கென்ன குருவே. இது சொர்க்கம் குருவே, சொர்க்கம். நம்ம வாழ்க்கை குறையில்லாம நடந்தா போதாதா? நீங்க ஏன் நடக்காததையெல்லாம் கற்பனை செஞ்சி குழப்பிக்கறீங்க? அமைதியா இருங்க. எல்லாத்தயும் நான் பார்த்துக்கறேன்.’

குரு எடுத்துச்சொன்ன எந்தக் கருத்தையும் சீடன் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. குருவுக்கும் சீடனைவிட்டுத் தனியாகச் செல்ல மனமில்லை. வேறு வழியில்லாமல், சீடன் சொல்லுக்கு குரு கட்டுப்பட்டார். இருவரும் அந்த ஊரிலேயே காலத்தைக் கழிக்கத் தொடங்கினர்.

நாட்கள் வாரங்களாகின. வாரங்கள் மாதங்களாகின. ஒரு மாற்றமும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் கழிந்தது. ஒவ்வொரு பொழுதும் நல்லபடியாகக் கழிந்தாலும் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் எவ்விதமான உறவும் உருவாகிவரவில்லை. ஒருவரும் அவர்களிடம் நின்று பேசவில்லை. நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், ஏன் இங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று கூட கேட்கவில்லை. அவரவர்களும் அவரவர்கள் வேலையைப் பார்த்தபடி இருந்தார்கள்.

நாள் முழுக்க நடந்து நடந்தே பழக்கப்பட்ட இருவரும் நடையே இல்லாமல் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கியதில் இருவரும் பார்ப்பதற்கு அடையாளமே தெரியாதபடி பருத்துவிட்டனர்.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு திருடன் வந்தான். மற்ற ஊர்களைப்போல அந்த ஊர்க்காரர்கள் பகலில் விழித்திருந்து இரவில் உறங்கும் பழக்கம் உள்ளவர்கள் அல்ல என்பதையும் இரவில் விழித்து பகலில் உறங்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதையும் அவன் தெரிந்துகொண்டே வந்திருந்தான். பகல் வெளிச்சம் தன் தொழிலுக்கு உதவும் என அவன் நினைத்தான்.

அந்த ஊரில் ஒரு நகை வியாபாரி வசித்துவந்தார். ஊரிலேயே அவருடைய வீடுதான் பெரிய வீடு. அவர்தான் ஊரிலேயே பெரிய பணக்காரர். இரண்டுமூன்று நாட்கள் அந்த ஊரிலேயே தங்கி தெருத்தெருவாக அலைந்து நோட்டமிட்ட பிறகு அந்த வீட்டில் திருடுவதற்கு முடிவெடுத்தான் திருடன். அந்த வீட்டுக்குள் புகுந்தால் ஒரே திருட்டில், தேவையான அளவுக்குத் திருடிச் செல்லலாம் என்றும் அதற்குப் பிறகு இரண்டுமூன்று மாதங்கள் சந்தோஷமாகச் சுற்றித் திரியலாம் என்றும் அவன் திட்டமிட்டான்.

ஒருநாள் உச்சிப்பகல் வேளையில் அந்த ஊரே உறக்கத்தில் மூழ்கியிருந்தது. அந்த நேரத்தில் வியாபாரியின் வீட்டுக்குள் நுழைவதற்காக, பொருத்தமான இடத்தைத் தேடி வீட்டையே ஒருமுறை சுற்றி வந்தான் திருடன். உயரமான வெளிப்புறச்சுவரில் வாகான ஓர் இடத்தைத் தேடிக் கண்டடைந்தான். தன் மூட்டைக்குள் வைத்திருந்த கூர்மையான சின்னஞ்சிறு ஆயுதத்தால் குத்திக் குத்தி ஓட்டையிட்டான். ஓர் ஆள் தடையின்றி நுழைந்து செல்வதற்குப் போதுமான அளவுக்கு ஓட்டையிட்ட பிறகு, முதலில் தலையை நுழைத்து வீட்டுக்குள் ஏதேனும் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்த்தான். யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு கைகளை மட்டும் நீட்டி தரையைத் தொட்டு ஊன்றிக்கொண்டான். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக உடலை உட்பக்கமாக இழுத்தான். வயிறுவரைக்கும் உள்ளே வந்துவிட்டது. இன்னும் கால்களை மட்டுமே உள்ளே இழுக்கவேண்டும் என்கிற நிலையில், அந்தச் சுவர் திடீரென இடிந்து அந்தத் திருடன் மீது விழுந்தது.

வலி தாங்காமல் திருடன் போட்ட சத்தத்தைக் கேட்டு வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் விழித்தெழுந்துவிட்டனர். திருடனைப் பார்த்ததும் கூக்குரலிட்டனர். அதைக் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக எழுந்து வெளியே வந்தனர். வியாபாரியின் வீட்டு வாசலில் பெரிய கூட்டமே கூடிவிட்டது.

வீட்டுக்குள் பாதி உடலும் வெளியே பாதி உடலுமாக இருந்த திருடன் தப்பித்துச் செல்ல முடியாத நிலையில் அந்தக் கூட்டத்தில் சிக்கிக்கொண்டான். திருடனின் தலையைப் பிடித்து இழுத்து நிற்கவைத்த கூட்டத்தினர், அவனை முதலில் நையப் புடைத்தனர். பிறகு அவன் கைகளைப் பின்புறமாகக் கட்டி இழுத்துச் சென்று ராஜாவின் முன்னால் நிறுத்தினார்கள்.

அகாலத்தில் உறக்கத்திலிருந்து எழுந்துவந்த ராஜா அவர்களைப் பார்த்து ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார். வியாபாரி நடந்த விவரங்களைச் சுருக்கமாக ராஜாவிடம் தெரிவித்தார்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ராஜா, திருடனைப் பார்த்து ‘உனக்கு ஏதாச்சும் சொல்லணும்னு தோணிச்சின்னா தாராளமா சொல்லலாம். உன் மீது சுமத்தப்பட்டிருக்கிற குற்றங்கள் எல்லாம் உண்மைதானா?’ என்று கேட்டார். தொடர்ந்து ‘ரெண்டுபேர் சொல்றதையும் கேட்ட பிறகுதான் நான் ஒரு முடிவுக்கு வரமுடியும்’ என்றார்.

பேசுவதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை நினைத்த திருடன் மகிழ்ச்சியடைந்தான். அதற்காக ராஜாவின் முன் தலைகுனிந்து வணங்கி நன்றி சொன்னான்.

‘திருட்டு என் குலத்தொழில் ராஜா. எல்லாரும் அவுங்கவுங்க குலத்தொழிலைச் செய்யறமாதிரி நானும் என் குலத்தொழிலைச் செய்யறேன். அது ஒன்னும் எனக்கு பெரிய தப்பா தெரியலை ராஜா.’

‘சரி, மேல சொல்லு’

‘திருடணும்ங்கற நோக்கத்தோடு அந்த வியாபாரி வீட்டுக்குத் திருடப் போனது உண்மைதான் ராஜா. ஆனா, நான் எதையும் திருடவே இல்லை. வீட்டுக்குள்ள போகறதுக்கு முன்னாலயே நான் பிடிபட்டுட்டேன்.’

ராஜா அந்தத் திருடனின் பேச்சைக் கேட்டு குழம்பினார். ‘திருட்டே நடக்கலைன்னா, அப்புறம் எதுக்கு இந்த வழக்கு?’ என்று முணுமுணுத்தார். பிறகு வியாபாரியின் பக்கம் திரும்பி ‘உன் வீட்டிலேர்ந்து ஏதாவது திருடு போயிருக்குதா?’ என்று கேட்டார். அந்த வியாபாரி ‘எதுவும் திருடு போகலை ராஜா’ என்று சொல்லிவிட்டு தலையை அசைத்தார். தொடர்ந்து ‘அவன் வீட்டுக்குள்ள பூந்து திருடறதுக்கு முன்னாலயே அவனைப் பிடிச்சிட்டோம் ராஜா’ என்றார்.

திருட்டே நடக்காத வழக்கில் எப்படி தீர்ப்பு கொடுப்பது என்று புரியாமல் குழம்பினார் ராஜா. அவருடைய தூக்கக்கலக்கம் அவரை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

அந்த நேரம் பார்த்து திருடன் ‘உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ராஜா’ என்று சொன்னான்.

‘என்ன?’ என்பதுபோல அவன் பக்கம் பார்த்தார் ராஜா.

‘வியாபாரியுடைய வீட்டுச் சுவர் கட்டுமானம் சரியில்லை ராஜா. அது உறுதியா இல்லாததாலதான் அது என் மேல உடைஞ்சி விழுந்தது. ஒரு சாதாரண ஓட்டைக்குக் கூட தாக்குப் பிடிக்காத அளவுக்கு ஒரு வீட்டுடைய சுவரைக் கட்டறது குற்றமில்லையா ராஜா? அந்தச் சுவரால ஒரு வீட்டுக்கு எப்படி பாதுகாப்பைக் கொடுக்கமுடியும் ராஜா?’ திருடனாக இருந்தாலும் அவன் நியாயத்தைச் சுட்டிக் காட்டுகிறான் என்று நினைத்தார் ராஜா.

ராஜாவுடைய அமைதியைப் பயன்படுத்திக்கொண்டு திருடன் இன்னும் ஒரு படி முன்னேறி ‘இடிஞ்ச சுவர் என் மேல விழுந்ததால என் உடம்பெல்லாம் காயமா இருக்குது ராஜா. முதுகெலும்புல நல்ல அடி. நின்னாலும் வலிக்குது. உட்கார்ந்தாலும் வலிக்குது. ஒருவேளை அந்த அடியில என் உயிரே போயிருந்தா என் குடும்பத்துடைய கதி என்ன ஆயிருக்குமோ, தெரியலை’ என்று பணிவுடன் உடலை வளைத்து குனிந்தவாக்கிலேயே சொன்னான்.

‘அவ்வளவு பலவீனமா சுவரைக் கட்டிய வியாபாரியை விசாரிச்சி தண்டிக்கணும் ராஜா. அப்பதான் இதுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் ராஜா.’

திருடனின் யோசனை ராஜாவுக்குப் பிடித்துவிட்டது. அவர் உடனே வியாபாரியின் பக்கம் திரும்பினார். ராஜாவின் பார்வையைப் பார்த்ததுமே வியாபாரிக்கு உடல் வேர்வையில் நனைந்துவிட்டது.

‘என்ன சொல்ற நீ? உனக்குத் தண்டனை கொடுக்கட்டுமா?’ என்று கேட்டார் ராஜா. வியாபாரி ஒருகணம் யோசித்தார். எப்படியாவது இந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்கவேண்டும் என்று அவர் மனம் திட்டமிட்டது.

பணிவாகப் பேசுவதுபோல உடலை வளைத்து வணங்கியபடி ‘எனக்குச் சொந்தமான வீட்டுடைய சுவர்தான் ராஜா அது. அதுல ஒன்னும் சந்தேகம் இல்லை. ஆனா, நான் சுயமா அந்தச் சுவரைக் கட்டலை. கட்டடவேலை செய்யற ஆளுங்கதான் அந்தச் சுவரைக் கட்டினாங்க. நான் அந்த வேலைக்கு அவுங்களுக்கு சம்பளம் கொடுத்தேன். அவ்வளவுதான். அவுங்கதான் ஏதோ தில்லுமுல்லு செஞ்சிருக்காங்க’ என்று நிதானமான குரலில் சொன்னார்.

வியாபாரியின் கூற்றைக் கேட்டுவிட்டு ராஜா ஒருசில கணங்கள் யோசனையில் மூழ்கினார். வியாபாரியின் பேச்சில் ஒரு நியாயம் அடங்கியிருப்பதாக அவருக்குத் தோன்றியது.

பிறகு தொண்டையைச் செருமியபடி அவையில் நின்றிருந்த ஆட்களிடம் ‘வியாபாரியின் வீட்டில் கட்டடவேலை செய்த ஆளைக் கண்டுபிடிச்சி உடனே அழைச்சிட்டு வாங்க’ என்று ஆணையிட்டார்.

வேகவேகமாக அவையைவிட்டு வெளியேறிய ஆட்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் கட்டடவேலை செய்த ஆளைக் கண்டுபிடித்து இழுத்துவந்து ராஜாவின் முன்னால் நிறுத்தினர். வரும் வழியிலேயே அரண்மனை ஆட்கள் அந்த ஆளிடம் அவனை அழைத்துச்செல்வதற்கான காரணத்தை விளக்கியிருந்தனர். அதனால் ராஜாவின் முன்னால் நின்றதும் முதலில் குனிந்து வணக்கம் சொன்னான். பிறகு ‘ராஜா, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கவனிச்சி கேளுங்க. என் கட்டட வேலையில எந்தக் குத்தமும் இல்லைங்க ராஜா. இதே ஊருல நான் எவ்வளவோ பேருக்கு வீடுங்க கட்டிக் கொடுத்திருக்கேன். இந்த வியாபாரி வீட்டைக் கட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயும் கட்டியிருக்கேன். பின்னாலயும் கட்டியிருக்கேன். அந்த வீடுங்க எல்லாம் பத்திரமாதான இருக்குது. ஊருக்குள்ள நீங்க வேணும்ன்னா விசாரிச்சித் தெரிஞ்சிக்கலாம். இவருடைய வீட்டுல மட்டும் ஒரு பிரச்சினை வந்திருக்குதுன்னா, அதுக்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும் ராஜா?’ என்று முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கேட்டார்.

ராஜாவும் ஒன்றும் புரியாமல் குழப்பத்தோடு ‘சுவர் இடிஞ்சி விழறதுக்கு நீ பொறுப்பில்லைன்னா, வேற யாரு பொறுப்பா இருக்கமுடியும்?’ என்று அவனிடமே அப்பாவித்தனமான குரலில் கேட்டார்.

‘ராஜா, நீங்க கோவப்பட மாட்டீங்கன்னா, நான் ஒரு விஷயம் சொல்றேன்’ என்று இன்னும் கூடுதலான பணிவோடு சொன்னான் கட்டட வேலை செய்பவன்.

‘என்ன, சீக்கிரம் சொல்லு’ என்று அவசரப்படுத்தினார் ராஜா.

‘எந்த வீடா இருந்தாலும் கட்டற வேலை மட்டும்தான் என்னை மாதிரியான ஆட்களுடையது. கட்டறதுக்கு முக்கியத் தேவையான செங்கல் எல்லாம் வேற ஒரு ஆளு சூளையில சுட்டு கொண்டுவரக்கூடிய பொருட்கள்தான். அந்தச் செங்கல்லுலதான் ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கணும் ராஜா’ என்று சொல்லிவிட்டு நிறுத்தினான் கட்டடவேலை செய்பவன்.

அவன் கூற்றில் ஒரு நுட்பமான பொருள் இருப்பதாக ராஜாவுக்குத் தோன்றியது. ‘ஆமாம், ஆமாம், நீ சொல்றது உண்மைதான்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். உடனே ஆட்களை அழைத்து ‘உடனே போய் அந்தச் செங்கல் சூளைக்காரனை அழைச்சிட்டு வாங்க’ என்று அனுப்பினார்.

வேலைக்காரர்கள் பல இடங்களில் தேடி அலைந்து கடைசியில் ஒரு வழியாக செங்கல் சூளை வைத்திருப்பவனைக் கண்டுபிடித்து விஷயத்தையெல்லாம் சொல்லி அழைத்துவந்து ராஜாவின் முன்னால் நிறுத்தினர்.

‘நீதான் இந்த வியாபாரி கட்டின வீட்டுக்கு செங்கல் கொடுத்தியா?’ என்று நேரிடையாக விஷயத்துக்கு வந்தார் ராஜா. அவன் ‘ஆமாம் ராஜா’ என்று பணிவோடு தலையசைத்தான்.

‘அப்ப வியாபாரியுடைய வீடு இடிஞ்சி விழறதுக்கு நீதான் மூலப்பொறுப்பு. உனக்குத்தான் தண்டனை கொடுக்கணும்’ என்று அவசரமாகச் சொன்னார் ராஜா.

‘நீங்க தண்டனை கொடுத்தா தாராளமா ஏத்துக்கறேன் ராஜா. அதுக்கு முன்னால நான் சொல்ற வார்த்தையை கேக்கணும்.’ என்று ராஜாவின் முகத்தைப் பார்த்தான் சூளைக்காரன்.

‘என்ன சொல்லப் போற நீ?’ என்று அதட்டலாகக் கேட்டார் ராஜா.

‘வியாபாரியுடைய வீட்டுக்கு செங்கல் கொடுக்கறதுக்குத்தான் புதுசா ஒரு சூளையை போட்டேன். அதுக்குத் தேவையான செங்கல்லுக்காக, களிமண்ணை கொழைச்சி கல் அறுத்துட்டிருந்த சமயத்துல பக்கத்து வீட்டுல நாட்டியக்கச்சேரிக்கு ஒரு இளவயசுப்பொண்ணு சலங்கைகட்டி ஆடி பயிற்சி எடுத்துட்டிருந்தா. ராஜா, அந்தச் சலங்கைச்சத்தம் எல்லாரையும் ஒரு மாதிரி பைத்தியம் புடிக்கிறமாதிரி வைச்சிடுச்சி. அடிக்கடி ஆளுங்க அந்தப் பொண்ணு மூஞ்சிய பாக்கறதுக்காக திரும்பித்திரும்பி பார்த்துகிட்டே வேலை செஞ்சாங்க. அதனால செங்கல் தயாரிப்புல முறைதவறி ஏதோ கோளாறு ஏற்பட்டுச்சி. எல்லாத்துக்கும் காரணம் அந்த நாட்டியக்காரிதான் ராஜா’ என்றான் சூளைக்காரன்.

அவனுடைய விவரிப்பில் ஒரு உண்மை இருப்பதாக ராஜாவுக்குத் தோன்றியது. உடனே ஆட்களை அழைத்து ‘சீக்கிரமா போய் அந்த நாட்டியக்காரியை அழைச்சிட்டு வாங்க’ என்று அனுப்பினார்.

உடனே வேலைக்காரர்கள் வெளியேறி நாட்டியக்காரி இருக்கும் இடத்தைத் தேடி அலைந்தனர். பலரிடம் விசாரித்து அவளுடைய வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து, தேடிவந்ததன் காரணத்தையும் சுருக்கமாக விவரித்துவிட்டு, தம்மோடு அழைத்துவந்தனர்.

‘இந்த சூளைக்காரங்க செங்கல் அறுத்திட்டிருந்த சமயத்துல நீ சலங்கை கட்டி நாட்டியப்பயிற்சி செஞ்சிட்டிருந்தியா?’ என்று நேரிடையாகக் கேள்வி கேட்டார் ராஜா. நாட்டியக்காரி உடனே ‘ஆமாம் ராஜா’ என்று பணிவோடு சொன்னாள்.

‘உன்னுடைய சலங்கைச்சத்தத்தால என்னென்ன விபரீதம்லாம் நடந்திருக்குது தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு ஒவ்வொன்றாக அவளிடம் நிறுத்தி நிதானமாக அடுக்கினார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்பதுபோல தலைவணங்கி நின்றிருந்தாள் நாட்டியக்காரி. ஆனால் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து எப்படி தப்பிப்பது என்று அவளுடைய ஆழ்மனம் திட்டமிட்டபடி இருந்தது. சட்டென மின்னல்போல ஓர் எண்ணம் அவள் நெஞ்சில் உதித்தது. அடுத்து ‘ராஜா, நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?’ என்று பணிவோடு கேட்டாள்.

‘என்ன? சீக்கிரம் சொல்’ என்றார் ராஜா.

‘அன்னைக்கு நான் சலங்கை கட்டி ஆடினது உண்மைதான் ராஜா. அதை நான் மறுக்கலை. ஆனா, அதுக்கு ஒரு காரணம் இருக்குது ராஜா.’

‘என்ன காரணம்?’

‘கால்ல போடற சலங்கைக்குப் பொருத்தமா கையிலயும் வளையல் போட்டு ஆடறதுதான் ஒரு நாட்டியக்காரிக்கு அழகு ராஜா. அப்படித்தான் எல்லா நாட்டியக்காரிகளும் ஆசைப்படுவாங்க. நானும் அப்படித்தான் ஆசைப்பட்டேன். என் சலங்கைக்கு பொருத்தமா ஒரு டஜன் வளையல் வேணும்னு அந்த நகைவியாபாரிகிட்ட ரொம்ப நாள் முன்னாலயே சொல்லி வச்சிருந்தேன். கை அளவு கூட கொடுத்து முன்பணம் கூட கொடுத்து வச்சிருந்தேன். சொல்லிவச்சி நாளுங்கதான் ஓடிச்சே தவிர, அவரு வளையலைச் செஞ்சி குடுக்கிற வழியாவே தெரியலை. எப்ப போய் கேட்டாலும் நாளைக்கு நாளைக்குன்னு சாக்குப்போக்கு சொல்லி அனுப்பிவச்சிடுவாரு. அவர் மட்டும் சொன்ன நேரத்துக்கு ஒழுங்கா வளையல்களை செஞ்சி குடுத்திருந்தாருன்னா, நான் வளையலை மட்டும் போட்டுகிட்டு பயிற்சி செஞ்சி பார்த்திருப்பேன். அப்ப சத்தம் பெரிசா கேட்டிருக்காது. ஆனா அவரு வளையலைக் கொடுக்காததால வேற வழியில்லாம சலங்கையை மட்டும் போட்டுகிட்டு பயிற்சி செஞ்சேன். அந்த சத்தம் இவ்வளவு விபரீதத்தை ஏற்படுத்தும்னு நான் கனவுல கூட நினைச்சிப் பார்த்ததில்லை. இதுல என் தப்பு எதுவும் இல்லை ராஜா. எல்லாமே இந்த வியாபாரியுடைய தப்பு.’

நாட்டியக்காரி சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்ட ராஜாவுக்கு அந்தப் பெண்ணின்மீது கருணை பிறந்தது. எல்லாக் குற்றங்களுக்கும் மூல காரணம் அந்த வியாபாரியே என்று அவர் முடிவு கட்டினார். தண்டனையை அறிவிக்கும் எண்ணத்துடன் அந்த வியாபாரியின் பக்கம் திரும்பினார். ‘உன் தப்பை மறைப்பதற்காக மத்தவங்க மீது பழி சுமத்திடலாம்னு நெனைச்சிட்டியா?’ என்று கேட்டார்.

‘அப்படியெல்லாம் நெனைக்காதீங்க ராஜா. என் மேல ஒரு தப்பும் இல்லை. நாட்டியக்காரி செஞ்சி கொடுக்கச் சொன்ன வளையல்களை எங்க தச்சாசாரிங்க எப்பவோ செஞ்சி முடிச்சிட்டாங்க. தங்கம் சம்பந்தமான பொருள்ங்கறதால, அதை நல்ல சகுனத்துலதான் எடுக்கணும், கொடுக்கணும்ங்கறது ஒரு சம்பிரதாயம் உண்டு ராஜா. காலையில விழிப்பு வர்ர வேளைதான் ஒரு நாள்ல நல்ல முகூர்த்தம் ராஜா. ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்ததும் குளிச்சிட்டு அந்த நேரத்துல அந்த வளையல்களை வாங்கிட்டு வரதுக்காக தச்சாசாரிங்க வீட்டுக்கு கெளம்புவேன். ஆனா, வீட்டு வாசலைத் தாண்டி நடக்கற சமயத்துல மொட்டை அடிச்சிகிட்டு, உடம்பு பூரா சாம்பலால பட்டையை போட்டுகிட்டு யானை மாதிரி தடியா ஒரு ஆளு எதுத்தாப்புல வந்துடுவான். அவன் இந்த ஊரே இல்லை. ஏதோ வெளியூருகாரன். இங்க வந்து மண்டபத்துல படுத்துங்கெடக்கறான். அவனைப் பார்த்தாவே வெளங்காமூஞ்சியா இருக்கும். அப்படி ஒரு மூஞ்சிய பார்த்துட்டு போனா, போற காரியம் விளங்குமான்னு எனக்கு மனசுக்குள்ள தோணும். சரி, விடு, நாளைக்குப் போயிக்கலாம்னு வீட்டுக்கே திரும்பிடுவேன். ஒரு நாள் இல்ல, ரெண்டு நாள் இல்ல, ஆறேழு மாசமா இதே கதைதான் நடக்குது. நாட்டியக்காரிக்கு சொன்ன தேதியில வளையலை கொடுக்கமுடியாததுக்கு இதுதான் காரணம் ராஜா.’

இரக்கத்தைத் தூண்டும் விதமாக வியாபாரி விவரித்த கதையைக் கேட்டு ராஜாவுக்கும் சங்கடமாக இருந்தது. ஆயினும் குரலில் கடுமையை வரவழைத்துக்கொண்டு ‘நீ சொல்ற விஷயம் மட்டும் பொய்யா இருந்தா, உனக்குத் தூக்குதண்டனை நிச்சயம்’ என்று எச்சரித்தார். பிறகு வேலையாட்களை அழைத்து முதலில் தச்சாசாரிகள் வசிக்கும் குடியிருப்புக்கு அனுப்பி, வியாபாரி சொன்ன விஷயம் உண்மைதானா என்று அறிந்துகொண்டு வருமாறு அனுப்பிவைத்தார்.

சிறிது நேரத்தில் வேலையாட்கள் திரும்பிவந்து ஆசாரிமார்களிடம் விசாரித்ததாகவும் வளையல்கள் தொடர்பான விஷயம் உண்மைதான் என்றும் தெரிவித்தனர். அதைக் கேட்டதும் ராஜா மெளனமாக வியாபாரியின் பக்கம் பார்த்தார். தான் தெரிவித்த உண்மையை ராஜா உணர்ந்துகொண்டார் என்ற நிம்மதி உணர்வு வியாபாரியின் முகத்தில் படிந்திருந்தது.

ஒருகணம் யோசனையில் மூழ்கிய ராஜா ஒவ்வொரு நாள் காலையிலும் அவலட்சணமான முகத்துடன் மண்டபத்தில் ஒதுங்கியிருக்கும் ஆண்டியைக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு சொன்னார். உடனே ஆட்கள் புறப்பட்டுச் சென்றனர். ஊரில் புதிதாக நடமாடுகிறவர்கள் யார் என்கிற கேள்விக்கு எல்லோருமே குரு-சீடன் தங்கியிருக்கும் மண்டபத்தின் பக்கம் கையைக் காட்டினர். உடனே ஆட்கள் குளத்தங்கரைக்குச் சென்றனர். அங்கே குரு ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து கண்மூடி தியானத்தில் மூழ்கியிருக்க, சீடன் மட்டும் பரபரப்போடு அங்குமிங்கும் பார்த்தபடி நடமாடிக்கொண்டிருந்தான். அவன் முகத்தைப் பார்த்ததுமே தான் தேடிவந்த ஆள் அவனே என்று வேலையாட்கள் உறுதியாக நம்பினர். உடனே அவனை ‘வா. உன்னை ராஜா கூப்பிடுறார்’ என்று சொல்லி அழைத்துச் சென்றனர். அவர்கள் எழுப்பிய சத்தத்தைக் கேட்ட பிறகு மெல்ல கண்விழித்த குரு என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஒருகணம் குழப்பமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். பிறகு அவர்களுக்குப் பின்னாலேயே சென்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்னும் எண்ணத்தோடு நடக்கத் தொடங்கினார்.

ராஜாவின் முன்னால் சீடன் நிறுத்தப்பட்டதுமே, ராஜா வியாபாரியின் பக்கம் திரும்பி ‘நீ சொன்ன ஆள் இவன்தானா?’ என்று கேட்டார். மொட்டைத்தலையுடன் உடல்பருத்து காணப்பட்ட அவனைப் பார்த்ததுமே வியாபாரி ‘இவனேதான் ராஜா, இவனேதான்’ என்று குதித்தார். தொடர்ந்து ‘நீங்களே ஒருமுறை இவனை உற்றுப் பாருங்க ராஜா. இந்த அவலட்சணமான மூஞ்சியைப் பார்த்துட்டுப் போனா, போகிற காரியம் உருப்படுமா? நீங்களே ஒருமுறை பார்த்துட்டு சொல்லுங்க ராஜா’ என்றார்.

சீடனை ஒருமுறை ஏற இறங்க கவனமுடன் பார்த்தார் ராஜா. தான் எதற்காக அவைக்கு அழைத்துவரப் பட்டிருக்கிறோம் என்பதைப் பற்றி எதுவும் தெரியாத சீடன் குழப்பத்தோடு ‘ராஜா, நான் ஒரு தப்பும் செய்யலையே. என்னை எதுக்காக இங்க இழுத்து வந்திருக்காங்க?’ என்று கேட்டான்.

‘நீ நேரிடையா ஒரு தப்பும் செய்யலை. ஆனா மறைமுகமா பல தப்புகள் இந்த ஊருல நடக்கறதுக்கு நீ காரணமா இருந்திருக்க’ என்றார் ராஜா.

சீடன் குழப்பத்துடன் ராஜாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். ராஜா ஒவ்வொன்றாக விஷயத்தை அடுக்கடுக்காகத் தெரிவித்தார். இறுதியாக, அவன் செய்த குற்றத்துக்காக அவனுக்குத் தூக்குத்தண்டனை விதிப்பதாக அறிவித்தார். அடுத்தநாள் காலையில் ஊரெல்லையில் உள்ள தூக்குமேடையில் அவன் தூக்கிலிடப்படுவான் என்று தண்டனையையும் அறிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

தண்டனையின் அறிவிப்பைக் கேட்டு சீடன் துயரத்தில் மூழ்கினான். எதற்காக இந்த ஊரில் தங்கினோம் என்று தன்னையே நொந்துகொண்டான். இந்த ஊரைவிட்டுச் சென்றுவிடலாம் என ஏதோ உள்ளுணர்வின் தூண்டுதலால் தன்னை எச்சரித்த குருவின் பேச்சைக் கேட்காதது குறித்தும் அவரைத் தன் சாமர்த்தியத்தால் அமைதிப்படுத்தி அதே ஊரில் தங்கியிருக்கும் முடிவை எடுத்தது குறித்தும் வருந்தினான்.

சீடனின் பின்னாலேயே சென்ற குரு அந்தச் சபையின் ஓரமாக ஒதுங்கி நின்று, அங்கு நடைபெற்ற விசாரணையையெல்லாம் பார்த்தார். தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவனை வேலையாட்கள் அழைத்துச் சென்றதையும் பார்த்தார். எங்கும் குறுக்கிட்டுத் தடுக்கமுடியாத தன் நிலையை எண்ணி வருத்தமடைந்தார். தன் சீடனை எப்படி காப்பாற்றுவது என அன்று முழுநாளும் யோசித்தபடி இருந்தார்.

அடுத்தநாள் பொழுது விடிந்ததும் அவர் சீடன் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தைப்பற்றி விசாரித்துக்கொண்டு சென்றார். யாரோ ஒன்றிரண்டு பேர் வழியைச் சொல்ல, அதே வழியில் சென்று அந்தப் பெரிய கட்டடத்தின் முன் நின்றார்.

வெளியே நின்றிருந்த காவல்காரனிடம் ஒரு நிமிடம் தன் சீடனிடம் பேசுவதற்கு அனுமதி கேட்டார். ‘நாளைக்கு காலையில தூக்குல போடவேண்டிய ஆளு. பத்திரமா வச்சிருக்கறோம். பக்கத்துல போவாதீங்க. எட்டி நின்னு சீக்கிரமா பேசிட்டு வந்துடுங்க’ என்று எச்சரித்துவிட்டு, அவரை உள்ளே அனுப்பிவைத்தான் காவல்காரன்.

உள்ளே சென்ற குரு சீடன் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே நின்று சீடனை அழைத்தார். சுவரோடு ஒட்டியவனாக உள்ளே அமர்ந்திருந்த அவன் ஒரே பாய்ச்சலில் கதவுக்கு அருகில் வந்துவிட்டான்.

‘என்னை மன்னிச்சிக்குங்க குருவே. அன்னைக்கு நீங்க சொன்னபடி நான் கேட்டிருந்தா நாம ஏதாவது ஒரு இடத்துல ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கலாம். இப்படி ஒரு சிக்கல்ல சிக்கியிருக்கமாட்டேன். நான் செஞ்ச ஒரு தப்பால இப்படி முட்டாளுங்க நடுவுல சிக்கி என்னுடைய உயிரே போவப்போவுது’ என்று அழுதான் சீடன்.

சீடனின் கண்ணீரைப் பார்த்ததும் குருவின் மனம் உருகியது. ‘கவலைப்படாதே, உனக்கு உதவி செய்யறதுக்காகத்தான் நான் வந்திருக்கேன். நாளைக்கு காலையில ஊரு எல்லையில உன்னை தூக்குமரத்துல ஏத்தற சமயத்துக்கு சரியா நான் அங்க வந்து சேருவேன். இப்ப நான் ஒரு விஷயம் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. அதுமாதிரி செஞ்சா நீ பிழைச்சிக்கலாம். நாம ரெண்டு பேரும் இந்த ஊருலேர்ந்து தப்பிச்சிடலாம்’ என்றார் குரு.

‘என்ன குருவே?’ என்று கேட்டான் சீடன்.

சீடனின் அருகில் சென்ற குரு, அவன் காதோடு ஒரு ரகசியத்தைச் சொன்னார். சீடன் அதைக் கேட்டு தலையசைத்துக்கொண்டான். அவன் அதுவரையில் உணராத ஒரு நிம்மதியை அக்கணத்தில் உணர்ந்தான். அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. பிறகு குரு அவனிடமிருந்து விடைபெற்று அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்.

அடுத்தநாள் காலையில் ஊர் எல்லையில் மக்கள் அனைவரும் கூடியிருந்தனர். ராஜாவும் வந்திருந்தார். அவர் அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு பெரிய ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில் உட்கார்ந்துகொண்டு ராஜா ‘ம், தண்டனைக்கைதியை கொண்டுவாங்க. சீக்கிரம் தண்டனை முடியட்டும்’ என்று அவசரப்படுத்தினார்.

சீடனை அழைத்துவந்த ஆட்கள் அவனை தூக்குமேடையில் நிற்கவைத்தனர். அவன் முகத்தில் எவ்விதமான கலக்கமும் இல்லை. பதற்றமில்லாமல் அமைதியாக இருந்தான். அவன் முகத்தை மூடுவதற்காக ஒரு பெரிய கருப்புத்துணியோடு அவனுக்கு அருகில் ஒரு வேலைக்காரன் சென்றான்.

அந்த நேரத்துக்குச் சரியாக, கூட்டத்துக்கு நடுவில் நின்றிருந்த குரு ‘மன்னிக்கவும் ராஜா. உங்ககூட ஒரே ஒரு நிமிடம் பேசணும்’ என்று அனைவரையும் விலக்கிக்கொண்டு ராஜாவின் இருக்கைக்கு முன்னால் வந்து நின்றார்.

‘எதுவா இருந்தாலும் தண்டனை முடியட்டும். அதுக்கப்புறம் பேசிக்கலாம்’ என்றார் ராஜா.

‘தண்டனையைப்பற்றித்தான் உங்ககூட பேசணும் ராஜா. ஒரே ஒரு நிமிடம் போதும்’ என்று கெஞ்சினார் குரு.

ராஜா குருவை ஒருகணம் உற்றுப் பார்த்தார் ‘முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க. அதுக்கப்புறமா நீங்க என்ன நினைக்கறீங்களோ அதைச் சொல்லுங்க’ என்றார்.

‘இதோ, தூக்குமேடையில நிக்கிறானே, இவனுடைய குரு நான். இவன் என்னுடைய சீடன்.’

‘ஓஹோ’

‘இவ்வளவு காலமும் என்கூட இருந்தும் கூட, இவனை நல்லபடியா ஆளாக்கமுடியாம போயிடுச்சி. அதுவே எனக்குப் பெரிய குற்ற உணர்வா இருக்குது. இவனை நல்லவிதமா ஆளாக்காம இருந்தது என்னுடைய முதல் குற்றம். நான் இவனை ஒழுங்கா கவனிச்சிருந்தா, இவன் இந்த நிலைமைக்கு வந்திருக்கமாட்டான். அதனால இவனுக்குத் தரவேண்டிய தூக்குத்தண்டனையை எனக்குக் கொடுங்க. நான் முழுமனசோட அந்தத் தண்டனையை ஏத்துக்கறேன்’ என்று சொல்லிக்கொண்டே தூக்குமேடையில் ஏறி சீடனுக்குப் பக்கத்தில் சென்று நின்றுவிட்டார்.

ராஜா அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது என்ன புது குழப்பம் என்று சிந்தனையில் மூழ்கினார்.

‘எங்க குரு சொல்றத கேக்காதீங்க ராஜா. வாய்ப்பிருந்தும் நல்ல விஷயங்களைக் கத்துக்காம இருந்தது என் தப்புத்தான். இதுல குருவுடைய தப்பு எதுவும் இல்லை. தூக்குத்தண்டனை எனக்குரியதாவே இருக்கட்டும்’ என்றான் சீடன்.

‘ராஜா, வயசுல நான் பெரியவன். நான் சொல்றத தயவுசெஞ்சி கேளுங்க. தூக்குத்தண்டனை எனக்குரியதாவே இருக்கட்டும்’ என்று வாதாடினார் குரு.

‘இல்லை இல்லை. எனக்கு அளிக்கப்பட்ட தண்டனை எனக்கு உரியதாவே இருக்கட்டும். அதை மாத்தவேணாம்’ என்றான் சீடன்.

குரு, சீடன் இருவருக்குமிடையில் நடைபெற்ற விவாதத்தைக் கேட்டு சுற்றி நின்றிருந்தவர்கள் குழப்பத்தில் மூழ்கினர். முடிவு என்னவாக இருக்கப் போகிறது என்று தெரிந்துகொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது.

ராஜாவுக்கு என்ன முடிவெடுப்பது என்பதைப்பற்றி ஒரு தெளிவும் பிறக்கவில்லை. ‘இது என்ன புது குழப்பமா இருக்குது? இதுவரைக்கும் இப்படி நடந்ததில்லை’ என்று முணுமுணுத்தார்.

‘நான் ஒரு முன்மாதிரியா இருக்கணும்னு நினைக்கறேன் ராஜா’ என்றார் குரு.

அப்போது சீடன் குறுக்கிட்டு, ‘ராஜா, வேணும்ன்னா குருவையும் நீங்க தூக்குல போடுங்க. ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனா, என்னை முதல்ல தூக்குல போட்டுட்டு, அதுக்கப்புறம் அவரை போடுங்க’ என்றான்.

‘இல்லை. இல்லை. என்னைத்தான் முதல்ல போடணும். அதுக்கப்புறம் அவனுக்கு தண்டனை கொடுத்தாலும் சரி, கொடுக்காட்டாலும் சரி, உங்க விருப்பம்’ என்றார் குரு.

ராஜாவுக்கு மனம் குழம்பியது. ‘சாகறதுக்கு ஏன் நீங்க ரெண்டு பேரும் நான் நான்னு முன்னால வரீங்க, எனக்கு ஒன்னுமே புரியலையே’ என்றார்.

‘ராஜா, என்னை முதல்ல தூக்குல போடச் சொல்லுங்க’ என்றார் சீடன்.

‘நான் இவனுடைய குரு. நான் சொல்றதை கேளுங்க. என்னை முதல்ல தூக்குல போடச் சொல்லுங்க’ என்றார் குரு.

‘இங்க பாருங்க. விசாரணைப்படி அவன்தான் குற்றவாளின்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கோம். அதை மாத்தமுடியாது. அதனால அவனைத்தான் முதல்ல தூக்குல போடணும்’ என்று முடிவாக அறிவித்தார் ராஜா.

அதைக் கேட்டு சீடனின் முகம் மலர்ந்தது. குருவின் முகம் வாட்டமடைந்தது. அதைப் பார்த்த ராஜாவுக்கும் சற்றே வருத்தமாக இருந்தது. ‘என்ன விஷயம், ரெண்டு பேரும் உண்மையைச் சொல்லுங்க. தூக்குல தொங்கறதுக்கு ஆளாளுக்கு ஏன் முந்திக்கறீங்க?’ என்று குருவிடம் கேட்டார். குரு ஒருகணம் அமைதியாக நின்றிருந்தார். பிறகு ராஜாவை நோக்கி இரண்டடி தொலைவு நெருங்கிச் சென்று நின்றார். அடங்கிய குரலில் ‘அதுல ஒரு சின்ன ரகசியம் இருக்குது ராஜா’ என்று சொன்னார்.

‘ரகசியமா, என்ன ரகசியம்?’ என்று கேட்டார் ராஜா. குரு ஒருகணம் தன்னையே கவனித்தபடி நின்றிருக்கும் கூட்டத்தைப் பார்த்தார். பிறகு ‘என்னுடைய ஞானக்கண்ணால நான் ஒரு காட்சியைப் பார்த்தேன் ராஜா. அதுதான் முக்கியமான காரணம்’ என்று ராஜாவுக்கு மட்டும் கேட்கிறவகையில் ரகசியமான குரலில் சொன்னார். அது என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் ராஜாவும் குரலை மட்டுப்படுத்தி ‘அது என்ன ரகசியம், கிட்ட வந்து சொல்லுங்க’ என்றார்.

குரு இன்னும் சில அடிகள் நடந்து ராஜாவுக்கு அருகில் சென்றார். அவர் காதருகில் குனிந்து ‘இன்னைய முகூர்த்தத்துல யார் முதல்ல தூக்குல தொங்கி உயிர் விடறாங்களோ, அவுங்களுக்கு அடுத்தடுத்த ஏழு பிறப்புகள்லயும் ஏதோ ஒரு ராஜ்ஜியத்துக்கு ராஜாவா இருக்கக்கூடிய அதிர்ஷ்டம் கிடைக்கப்போவுது. அதுதான் நான் பார்த்த காட்சி’ என்று முணுமுணுத்தார்.

அதைக் கேட்டு ராஜா தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று துள்ளிக் குதித்தார். ‘உண்மையாகவா சொல்றீங்க?’ என்று கண்கள் மின்ன கேட்டார்.

‘ஆமாம் ராஜா. சத்தியமா நான் அந்தக் காட்சியைப் பார்த்தேன்’ என்றார் குரு.

‘ஏழு பிறவியிலயும் ராஜாவா?’ என்று மீண்டும் கேட்டார் ராஜா.

‘ஆமாம் ராஜா. இது ஒரு அபூர்வமான முகூர்த்தம்’ என்றார் குரு.

அதைக் கேட்டு ராஜா தண்டனையை நிறைவேற்ற தூக்கு மேடையில் காத்திருக்கும் ஊழியர்களை அழைத்தார். சீடனை விடுவிக்கும்படி ஆணையிட்டார். ‘இந்தக் கணமே என்னைத் தூக்கிலிடுங்கள். இது என் கட்டளை’ என்று சொன்னபடி தூக்கு மேடையில் ஏறி நின்றார். சீடனும் குருவும் திகைத்த முகத்துடன் ஒதுங்கி நின்றனர். மேடையைச் சுற்றி வேடிக்கை பார்க்க நின்றிருந்த பொதுமக்கள் எதுவும் புரியாமல் குழப்பத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

ராஜா என்ன சொல்கிறார் என்பதை முற்றிலும் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாற்றத்தோடு நின்றிருந்தனர் ஊழியர்கள்.

‘முட்டாள்களே, நான் சொல்வது புரியலையா? உங்க ராஜாவுடைய கட்டளை இது. என்னைத் தூக்கிலிடுங்க’ என்று சத்தம் போட்டு சொன்னார் ராஜா.

வேறு வழியில்லாத ஊழியர்கள் அக்கணமே கருப்புத்துணியால் அவருடைய முகத்தை மூடி கயிற்றில் சுருக்கிட்ட கயிற்றை மாட்டிவிட்டு தூக்குமேடையில் நிறுத்தினர். அடுத்த கணமே இன்னொரு ஊழியர் காலுக்குக் கீழே இருந்த பலகையை இழுத்துவிட்டார். சிறிது நேரத்தில் ராஜாவின் உயிர் பிரிந்துவிட்டது.

‘என்ன இது?’ ‘ஏன் இப்படி?’ என்று குழப்பத்துடன் ஆளாளுக்கு ஒரு கேள்வியைக் கேட்டபடி அங்கேயே கூட்டமாக நின்று அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். குருவையும் சீடனையும் ஒருவரும் கவனிக்கவில்லை. அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு அந்தக் கூட்டத்தைவிட்டு வேகவேகமாக வெளியேறினர். பிறகு அந்த ஊரைவிட்டே வெளியேறினர்.

0

பகிர: