ஒரு கிராமத்தில் ஓர் இளைஞன் வசித்துவந்தான். அவன் பெயர் நஞ்சப்பா. அவன் சிறுவனாக இருந்தபோதே அவனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்துபோய்விட்டார்கள்.
நஞ்சப்பாவோடு பிறந்தவர்கள் என யாரும் இல்லை. ஆயினும் அந்த கிராமத்திலேயே அவனுடைய சித்தப்பாவும் பெரியப்பாவும் அத்தைமார்களும் வசித்துவந்தார்கள். அதனால் அவர்கள் வீட்டுக்குச் சென்று அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்துவிட்டு, அவர்கள் கொடுப்பதை வாங்கிச் சாப்பிட்டு பொழுதுகளைக் கழித்தபடி வாழ்ந்தான்.
இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன. சிறுவனாக இருந்த நஞ்சப்பா, வாட்டசாட்டமான இளைஞனாக வளர்ந்துவிட்டான். இளைஞனான பிறகு, ஒரு சிறுவனைப்போல ஒருவரை அண்டி வாழும் வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. ஊரைவிட்டு வெளியேறி, எங்கேயாவது போய் சுயமாக ஏதாவது வேலை செய்து பிழைக்கவேண்டும் என்று நினைத்தான்.
ஆனாலும் ஏதோ ஒரு தடுமாற்றத்தின் காரணமாக அந்த ஊரைவிட்டுச் செல்லும் முடிவை ஒவ்வொரு நாளும் ஒத்திப் போட்டபடி வந்தான் நஞ்சப்பா. தன் அம்மாவும் அப்பாவும் இல்லையென்றாலும் அந்த ஊரில் தங்கியிருப்பது தன் பெற்றோருடன் இருப்பதுபோன்ற எண்ணத்தை நஞ்சப்பாவுக்குக் கொடுத்தது. அது அவனுக்கு ஒருவகையான ஆறுதலாக இருந்தது. அந்த ஆறுதலின் மயக்கத்துக்காகவே நஞ்சப்பா எந்த முடிவையும் எடுப்பதற்குத் தயங்கியபடி இருந்தான்.
ஒருநாள் இனிமேலும் முடிவெடுக்காமல் இருப்பது சரியில்லை என்ற எண்ணம் திடீரென அவனுக்குத் தோன்றியது. இனி தாமதிக்கக்கூடாது என நினைத்து, அன்றே அவன் அந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுவிட்டான்.
அந்தி சாயும் வரைக்கும் எங்கும் ஓய்வெடுக்கவில்லை. கால் போன போக்கில் தொடர்ச்சியாக நடந்தபடியே இருந்தான் நஞ்சப்பா. வழியில் மரங்களிலும் செடிகளிலும் காய்த்துத் தொங்கும் காய்களையும் கனிகளையும் பறித்து உண்டு பசியாறியபடி நடந்தான். பொழுது சாய்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழத் தொடங்கியது. அதற்கு மேல் நடக்கமுடியாது என்ற நிலைமை வந்தபோது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து மூச்சு வாங்கினான்.
இருள் சூழ்ந்த அந்தப் புதிய ஊரை ஒருமுறை பார்த்தான். களைப்பின் காரணமாக எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே விரைவில் தூங்கத் தொடங்கினான் நஞ்சப்பா.
நள்ளிரவைக் கடந்த நேரத்தில் யாரோ நான்கு திருடர்கள் தம் மூட்டைகளோடு வந்து அந்த மரத்தடியில் ஒரு பக்கமாக உட்கார்ந்தார்கள். தம் மூட்டைகளை அவிழ்த்து திருடிவந்த பொருட்களைக் குவித்து பங்கு பிரித்தார்கள்.
எங்கெங்கும் இருள் சூழ்ந்திருந்ததால் அவர்களுக்கு அருகிலேயே அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த இளைஞனை ஒருவரும் கவனிக்கவில்லை.
பங்கு பிரித்த திருடன், திருடிவந்த ஆபரணங்கள், பொருட்கள், பணம் எல்லாவற்றையும் சம அளவில் நான்கு பங்குகளாகப் பிரித்தான். அப்போது அவர்களில் ஒருவன் “நல்லா கேட்டுக்குங்க. திருடறதுக்குப் பொருத்தமான இடம்னு நான்தான் அந்த வீட்டை உங்களுக்கெல்லாம் அடையாளம் காட்டினேன். அதனால மத்தவங்களைவிட எனக்கு பெரிய பங்கு வேணும்” என்று சொன்னான்.
“நீ வேணும்னா அடையாளம் காட்டியிருக்கலாம். உள்ள போவறதுக்கும் பாதுகாப்பா வெளியே வரதுக்கும் வழியை கண்டுபிடிச்சி கொடுத்தது நான். அதை மறந்துட்டு பேசாதே. நியாயப்படி எனக்குத்தான் பெரிய பங்கு வரணும்” என்றான் இன்னொருவன்.
உடனே மூன்றாவது திருடன் கடுமையான குரலில் “இங்க பாரு. அடையாளம் காட்டினது, வழி சொன்னது வேணும்னா நீங்களா இருக்கலாம். ஆனா நீங்க உள்ள போய் திருடிட்டு திரும்பற வரைக்கும் யாரு கண்லயும் படாதபடி காவல் காத்தது நானு. அத மறந்துடாதீங்க. அதனால மத்தவங்களைவிட எனக்குத்தான் பெரிய பங்கு வரணும்” என்றான்.
அதைக் கேட்டதும் நான்காவது திருடன் “இன்னைக்குத் திருடறதுக்கு பொருத்தமான நாள்னு முடிவெடுத்த சமயத்துல நீங்க எல்லாருமே பக்கத்து ஊருக்குத்தா போவணும்னு சொன்னீங்க. ஞாபகம் இருக்குதா? நான்தான் உங்க எல்லாரையும் இந்த ஊருக்குத் திருடறதுக்கு அழைச்சிட்டு வந்தேன். அதனால ஒழுங்கு மரியாதையா பெரிய பங்கை எனக்கு ஒதுக்கிக் கொடுங்க” என்று மிரட்டும் குரலில் சொன்னான்.
அவர்களுடைய கோபமான பேச்சுச் சத்தத்தின் காரணமாக தூக்கம் கலைந்து எழுந்த நஞ்சப்பா தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உடனே புரிந்துகொண்டான். உடனே படுத்திருந்த இடத்திலிருந்தே “உங்களையெல்லாம் நான் ஒரு ஆள் கண்காணிச்சிட்டிருக்கேங்கறத மறந்துடாதீங்க. நீங்கதான் திருடனுங்கன்னு ஊருக்குள்ள போய் சொன்னா, உங்க நிலைமை என்னாவும்ன்னு ஒரு நொடி யோசிச்சி பாருங்க. எல்லாருக்குக் கிடைக்கறதைவிட பெரிய பங்கு எனக்குத்தான் கிடைக்கணும். புரிஞ்சிக்குங்க” என்றான்.
திடீரென எழுந்த புதிய குரலைக் கேட்டதும் நடுங்கிவிட்ட திருடர்கள் திருடிவந்த பொருட்களையெல்லாம் அங்கேயே விட்டுவிட்டு, உயிர் பிழைத்தால் போதும் என்னும் எண்ணத்தோடு ஒரே ஓட்டமாக அங்கிருந்து ஓடி தப்பித்தார்கள்.
அவர்கள் ஓடிச் சென்றதும் எழுந்துவந்த இளைஞன் நான்கு பங்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்த திருட்டுப் பொருட்களையெல்லாம் மீண்டும் ஒன்றாகத் திரட்டி மூட்டையாகக் கட்டினான். ஓட்டமெடுத்த திருடர்கள் இனி திரும்பமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அந்த மூட்டையையே தலையணையாக வைத்துக்கொண்டு அந்த மரத்தடியிலேயே தூங்கத் தொடங்கினான்.
தூக்கம் கலைந்து எழுந்தபோது நன்றாக விடிந்திருந்தது. பக்கத்தில் ஒரு குளம் இருந்தது. அங்கேயே பல்துலக்கி முகம் கழுவிக்கொண்டான். களைப்பின் காரணமாக காலை வேளையிலேயே பசித்தது. குளத்தையொட்டி இருந்த வெள்ளரித்தோட்டத்தில் இறங்கி நாலைந்து வெள்ளரிப்பிஞ்சுகளைக் கிள்ளியெடுத்துக்கொண்டு மரத்தடியில் உட்கார்ந்து மெதுவாகச் சாப்பிட்டுமுடித்தான். மீண்டும் குளத்தங்கரைக்குச் சென்று தண்ணீர் அருந்திவிட்டு வந்தான்.
ஆபரண மூட்டையைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு அங்கிருந்து ஏதோ ஒரு திசையில் மனம் போன போக்கில் நடக்கத் தொடங்கினான் நஞ்சப்பா. அப்போது, கிடைத்திருக்கும் செல்வத்தில் ஏதேனும் ஒரு ஊரில் எங்காவது நிலம் கிடைத்தால் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
அவன் நடந்த வழியில் சின்னச்சின்ன ஊர்கள் பல தென்பட்டன. அவை அனைத்தும் பத்து பதினைந்து குடும்பங்கள் மட்டுமே வசிக்கக்கூடிய ஊர்கள். எந்த இடத்திலும் விவசாயம் நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லை. அதனால் அவன் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தான். வழியில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு கொய்யா மரம் இருந்தது. நாலைந்து காய்களைப் பறித்து உண்டு பசியைத் தணித்துக்கொண்டான்.
பொழுது சாயும் நேரம் வரைக்கும் நடந்துகொண்டே இருந்தான். அவன் எதிர்பார்த்ததுபோல எந்த இடமும் அமையவில்லை. இருட்டத் தொடங்கியதும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். பக்கத்திலேயே ஒரு குளம் இருந்தது. அங்கு சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வயிறு நிறைய தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்தான். ஆபரண மூட்டையின் மீது சாய்ந்து படுத்த நிலையில் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி யோசனையில் மூழ்கியிருந்தான். நட்சத்திரங்களையும் மேகங்களையும் பார்த்தபடி இருக்கும்போதே களைப்பின் காரணமாக சிறிது நேரத்திலேயே உறக்கத்தில் மூழ்கிவிட்டான்.
நள்ளிரவில் யாரோ ஒரு திருடன் அந்த மரத்தடிக்கு வந்தான். யாரோ அசலூர்க்காரன் தலையடியில் ஒரு மூட்டையை வைத்துக்கொண்டு உறங்குவதைப் பார்த்து, அடிமேல் அடிவைத்து நெருங்கிவந்து நின்றான். படுத்திருந்த இளைஞன் ஆழ்ந்து உறங்குவதையும் அவன் உடலில் எந்த அசைவும் இல்லை என்பதையும் திருடன் கவனித்தான். உடனே தன்னோடு இருந்த சாக்குப்பையில் அருகிலிருந்த செடிகொடிகளைப் பிடுங்கி நிரப்பி அடைத்து மெத்துமெத்தென்று ஆக்கி, அதை அவனுடைய தலைக்கு அடியில் சத்தமில்லாமல் வைத்துவிட்டு, ஆபரண மூட்டையை மெல்ல இழுத்துக்கொண்டான். பிறகு சத்தமில்லாமல் அதைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு அங்கிருந்து வேகவேகமாக நடந்தான்.
காலையில் விடிந்ததும் உறக்கத்திலிருந்து விழித்த இளைஞன் குளத்துக்குச் சென்று முகம் கழுவிக்கொண்டு மரத்தடிக்குத் திரும்பி வந்தான். அங்கிருந்து புறப்படுவதற்காக மூட்டையை எடுத்தபோதுதான், அது தான் எடுத்துவந்த மூட்டையல்ல என்பதை அவன் புரிந்துகொண்டான். அவசரம் அவசரமாக அதைப் பிரித்துப் பார்த்தபோது செடியும் கொடியும் நிறைந்திருப்பதைக் கண்டு திகைப்பில் மூழ்கிவிட்டான். ஆபரணங்களும் பணமும் வைத்திருந்த தன் மூட்டையை தன்னிடமிருந்து யாரோ திருடிக்கொண்டு சென்றுவிட்டார்கள் என்பதை அவன் தாமதமாகவே புரிந்துகொண்டான்.
ஏதோ தெய்வத்தின் அருளால் தனக்குக் கிடைத்த செல்வம் ஒருநாள் கூட நிலைக்கவில்லை என்பதை நினைத்து அவன் மனம் சிறிது நேரம் வருத்தத்தில் மூழ்கியது. பிறகு தானாக வந்த செல்வம் தானாகவே போய்விட்டது என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அமைதியைத் தேடிக்கொண்டான். பிறகு அந்த மரத்தடியைவிட்டு புறப்பட்டு மீண்டும் மனம்போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.
நண்பகல் வேளையில் ஓர் ஊர் தெரிந்தது. ஊர் எல்லையிலேயே ஒரு பாழடைந்த கோவில் இருந்தது. சுற்றிலும் ஏராளமான மரங்கள் சூழ்ந்திருந்தன. நிழலை நாடி அந்த இடத்தில் சிறிது நேரம் நின்றான். களைப்பு நீங்கிய பிறகு, கோவிலுக்குள் சென்றான். கருவறைக்குள் வழிபாடு எதுவும் இல்லாத சிவலிங்கம் கன்னங்கரேலென்று இருட்டில் காணப்பட்டது. அவன் அதற்கு அருகில் சென்று தொட்டு வணங்கினான். பிறகு வெளியே வந்து பக்கத்தில் இருந்த அரசமரத்தடியில் உட்கார்ந்தான்.
அரசமரத்துக்கு அருகிலேயே ஒரு முருங்கைமரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு வேதாளம் உட்கார்ந்தபடி அவனையே கவனித்தபடி இருந்தது. தன்னைத் தேடி தானாகவே ஒரு விருந்து வந்திருக்கிறது என அது நினைத்தது. அவனைத் தாக்கி வீழ்த்தி உணவாக உட்கொள்ள வேண்டும் என்று அது உடனடியாகத் தன் மனத்தில் திட்டமிட்டது.
அவனோடு ஓர் உரையாடலை வளர்க்கும் பொருட்டு கைதட்டி சத்தமெழுப்பி நஞ்சப்பாவை அருகில் அழைத்தது. “யாரு நீ?” என்று அதட்டலாக கேள்வி கேட்டது. அந்தக் கேள்வியைக் கேட்டதும் அவன் நடுங்கிவிடுவான் என அது எதிர்பார்த்தது. ஆனால் அவன் ஒரு கணம் முருங்கை மரத்தின் பக்கம் திரும்பி அந்த வேதாளத்தை உற்றுப் பார்த்தான். களைப்பில் மூழ்கியிருந்த அவனுக்கு அந்த வேதாளத்தின் கேள்வி எரிச்சலையே மூட்டியது. அதனால் அந்த வேதாளத்தைப் பார்த்து ”நீ யாரு?” என்று கேட்டான். அந்த வேதாளம் அச்சுறுத்தும் குரலில் “நான் மனிதர்களைப் பிடிச்சி அடிச்சி சாப்பிடற வேதாளம்” என்று பதில் சொன்னது.
வேதாளத்தின் பதிலைக் கேட்டதும் நஞ்சப்பாவுடைய ஆழ்மனத்தில் சிறிதளவு அச்சம் எழுந்து நடுங்க வைத்தது. அப்போது அவன் சிறுவனாக இருந்தபோது அவனுடைய அப்பாவும் அம்மாவும் சொன்ன ஒரு வார்த்தை நினைவுக்கு வந்தது. “இங்க பாரு. இந்த உலகத்துல யாரைக் கண்டும் எதுக்காகவும் பயப்படக்கூடாது. பயந்தா வாழ முடியாது. எது நடந்தாலும் தைரியமா இருக்கணும். மனுஷனுக்கு தைரியம்தான் பெரிய ஆயுதம்” என்பதுதான் அவர்கள் சொன்ன வாசகம்.
அந்த வாசகத்தை நினைத்துக்கொண்டதும் நஞ்சப்பாவின் மனத்தில் தோன்றிய அச்சம் மறைந்துவிட்டது. எது நடந்தாலும் இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என நினைத்துக்கொண்டான். அதனால் உறுதியான குரலில் வேதாளத்தைப் பார்த்து ”நீ சொல்றது எதுவுமே சரியா காதுல விழலை. அதனால எனக்காக மரத்தைவிட்டு இறங்கி இங்க பக்கத்துல வந்து சொல்லு” என்று சொன்னான் நஞ்சப்பா.
உடனே வேதாளம் முருங்கைமரத்திலிருந்து இறங்கி நஞ்சப்பாவுக்கு அருகில் வந்து நின்றது. அவனை அச்சுறுத்தும் குரலில் “நான் மனிதர்களைப் பிடிச்சி அடிச்சி சாப்பிடற வேதாளம்” என்று தெளிவாகச் சொன்னது. அது சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் கையை நீட்டி அந்த வேதாளத்தின் தலைக்குடுமியைப் பிடித்துக்கொண்டான். பிறகு பிடியை இறுக்கியபடியே அந்த வேதாளத்தை தரதரவென்று சுற்றவைத்தான்.
எதிர்பாராத அத்தாக்குதலால் வேதாளம் நிலைகுலைந்துவிட்டது. அந்த இளைஞன் பிறரைப்போல சாதாரண மனிதனல்லன் என்று நினைத்துக்கொண்டு “ஐயோ, என்னை விடு. என்னை விடு. நான் இந்த இடத்தைவிட்டே ஓடிடறேன்” என்று கெஞ்சத் தொடங்கியது. அப்போதும் அவன் தன் பிடியை விடவில்லை. மெல்ல மெல்ல இறுக்கியபடியே இருந்தான். “ஐயோ, என்னை விடு தம்பி. நான் உன்னை சாப்பிடமாட்டேன். நான் இந்த இடத்தைவிட்டே போயிடறேன்” என்று மன்றாடியது.
“நான் சொல்றபடி கேட்டு நடந்தா நான் உன்னை விட்டுடறேன். நான் எப்ப உன்னை கூப்ட்டாலும் நீ உடனே வரணும். எனக்கு வேணுங்கற வேலையை செஞ்சி கொடுக்கணும். அப்பதான் உன்னை விடுவேன்.”
“சரி, நீ எப்ப கூப்ட்டாலும் வரேன். என்ன வேலை கொடுத்தாலும் செய்யறேன். போதுமா? இப்பவாவது என் தலைமுடியை விடு.”
“சொன்னா போதாது. சத்தியம் செய்.”
“சத்தியமா நீ சொல்றபடி செய்றேன். போதுமா. இப்பவாவது விடு” என்று கெஞ்சியது வேதாளம்.
“சத்தியம் செஞ்சிருக்க. ஞாபகம் இருக்கட்டும். மீறினா, உனக்குத்தான் ஆபத்து. புரியுதா?”
“சத்தியமா மறக்கமாட்டேன். போதுமா?”
“சரி.”
வேதாளத்தின் தலைமுடியை இறுக்கிப் பிடித்திருந்த தன் பிடியை விட்டு கையை எடுத்துக்கொண்டான் இளைஞன். வேதனையிலிருந்து விடுபட்ட வேதாளம் நிம்மதியாக மூச்சு வாங்கியது. பிறகு அவன் சொல்லும் கட்டளைக்காக பக்கத்திலேயே காத்திருந்தது.
“ரொம்ப பசிக்குது. முதல் வேலையா சாப்பிட ஏதாவது நல்ல இடம் காட்டு” என்றான் இளைஞன். வேதாளம் அவனை அருகிலிருந்த ஒரு வாழைத்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றது. அந்தத் தோட்டத்தில் குலைகுலையாகப் பழங்கள் பழுத்துத் தொங்கின. அவன் ஒரு குலையிலிருந்து நான்கு பழங்களை மட்டும் பறித்தான். “இது போதுமா? இன்னும் கொஞ்சம் பறிச்சிக்கோ” என்றது வேதாளம். “வேணாம். என் பசிக்கு நாலு பழம் போதும். உனக்கு வேணும்ங்கற அளவுக்கு நீ எடுத்துக்கோ” என்ற இளைஞன் பழங்களை உரித்து சாப்பிடத் தொடங்கினான். “என் பசிக்கு ஒன்னு ரெண்டு பழம்லாம் போதாது. ஒரு குலையே வேணும்” என்று சொன்னபடி நன்றாகப் பழுத்துத் தொங்கிய பழங்களைக் கொண்ட குலையைப் பறித்துத் தின்னத் தொடங்கியது. அந்த நேரத்தில் அவன் அருகிலிருந்த வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரை அள்ளிக் குடித்தான்.
பிறகு இருவரும் எங்காவது ஊர் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள். வேதாளம் நஞ்சப்பாவுக்கு அருகிலேயே பறந்தபடி வந்தது. அதன் இருப்பு அவன் கண்களுக்கு மட்டுமே தெரிந்தது. அதனால் பார்ப்பவர் கண்களுக்கு அவன் தனிமையில் நடந்து செல்வதுபோல தெரிந்தது.
“நீ யாரு? எந்த ஊரு? உன்னைப் பார்த்தா பாவமா இருக்குது” என்று நஞ்சப்பாவிடம் கேட்டது வேதாளம். நஞ்சப்பா தன் வாழ்க்கைக்கதையையெல்லாம் வேதாளத்திடம் விவரமாகச் சொன்னான். எல்லாக் கதைகளையும் கேட்டு முடித்ததும் “உன் கதையைக் கேட்டா பாவமா இருக்குது. இனிமேல நீ கவலைப்பட வேணாம். உனக்குத் துணையா எப்பவும் நான் இருப்பேன்” என்றது. நஞ்சப்பா வேதாளத்தின் பக்கம் திரும்பி நட்போடு புன்னகைத்தான்.
நீண்ட நேரத்துக்குப் பிறகு ஒரு ஊர் எதிர்ப்பட்டது. வீடுகளும் தோப்புகளும் தொலைவிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தன. நஞ்சப்பா அந்த ஊரை அடைந்து இளைப்பாறுவதற்காக எல்லையோரத்தில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்தான்.
அதே ஆலமரத்தின் மற்றொரு பக்கத்தில் ஆறேழு பேர் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் நஞ்சப்பாவிடம் “யாருப்பா நீ? எந்த ஊரு? என்ன விஷயமா இந்த ஊருக்கு வந்திருக்க?” என்று விசாரித்தனர். நஞ்சப்பா “நான் ஒரு அனாதை. பொழைக்கறதுக்கு ஏதாவது வழி கிடைக்குமான்னு ஊரூரா அலைஞ்சிகிட்டிருக்கேன்” என்று பதில் சொன்னான். தொடர்ந்து “நீங்க எல்லாரும் யாரு? எங்க வேலை செய்றீங்க?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் மிடுக்கோடு ”நாங்க எல்லாரும் இந்த ஊருடைய காவல் படையைச் சேர்ந்தவங்க. ரெண்டுநாள் முன்னால இந்த ஊரைச் சேர்ந்த ஒரு பணக்காரருடைய வீட்டுல ஒரு திருட்டு நடந்துபோச்சி. ஊருல செல்வாக்கான முக்கியமான குடும்பம் அது. யாரு திருடியிருப்பாங்கன்னு கண்டுபிடிக்க முடியலை. திருடினவங்க உள்ளூரு ஆளுங்க கிடையாது. வெளியூரு ஆளுங்கதான். திருடனுங்கள கண்டுபிடிக்கத்தான் நாங்க போயிட்டிருக்கோம்” என்றனர்.
நஞ்சப்பா இரு தினங்கள் முன்னால் பங்கு பிரிக்கும் போட்டியில் தமக்குள்ளேயே மோதிக்கொண்டு, தன்னைக் கண்டு அஞ்சி ஓட்டமெடுத்த திருடர்களை ஒருகணம் நினைத்துக்கொண்டான். இவர்கள் குறிப்பிடும் பணக்காரருடைய வீட்டில்தான் அவர்கள் திருடியிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.
ஒருவேளை அந்த மூட்டையோடு தன்னை அவர்கள் பார்த்திருந்தால் தனக்குத் தண்டனை நிச்சயமாகக் கிடைத்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. வழியில் அந்த மூட்டையை இன்னொருவரிடம் பறிகொடுத்ததுகூட ஒருவகையில் நல்லதற்கே என்று நினைத்துக்கொண்டான் அவன். நடப்பதெல்லாம் நல்லதற்கே என நினைத்து மனத்துக்குள் பெருமூச்சு விட்டுக்கொண்டான். தற்சமயம் தனக்கு உதவும் வகையில் வேதாளத்தின் துணை இருப்பதால் ஆபரண மூட்டையோடு ஓடிப் போன திருடனைக் கண்டுபிடிப்பது எளிதான விஷயமென்று அவனுக்குத் தோன்றியது.
களவுபோன பொருட்களைக் கண்டுபிடிக்க உதவி செய்வதால் தனக்கு நிச்சயமாக ஏதேனும் ஒரு பெரிய வெகுமதி கிடைக்கும் என்றும் அதன் வழியாக எதிர்காலத்தில் ஒரு நல்ல வாழ்க்கையை வாழலாம் என்றும் நஞ்சப்பாவின் மனம் திட்டமிட்டது. ஆகவே அந்தக் காவலர்களிடம் “திருடர்களைப் பிடிக்க நான் ஒரு நல்ல ஆலோசனை சொல்றேன். எனக்கு என்ன வெகுமதி கொடுப்பீங்க?” என்று கேட்டான்.
காவலர்கள் அனைவரும் அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தனர். அவர்களுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது. திருடனே அவன்தானோ என்றும் அவனே திருடி வைத்துக்கொண்டு அவனே திருடர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றுகிறானோ என்றும் அவர்கள் நினைத்தார்கள். அவனை அழைத்துச் சென்று ஆபரணங்களைப் பறிகொடுத்துவிட்டு நிற்கும் பணக்காரன் முன்னிலையில் ஒப்படைத்துவிட்டு தேடியலையும் வேலையிலிருந்து முதலில் விடுபடவேண்டும் என அவர்கள் மனம் திட்டமிட்டது.
அதனால் நஞ்சப்பாவை உற்சாகப்படுத்தும் விதமாக “ஆகா. உன்னை மாதிரியான ஒரு ஆள் எங்களுக்கு உதவி செய்ய வந்ததுல எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. வாங்க, போவலாம். எங்க ஊரு பணக்காரரைப் பார்க்கலாம். நீங்க கொடுக்கிற துப்புப்படி திருடன் கிடைச்சிட்டா, பணக்காரர் கொடுக்கிற வெகுமதி எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்கலாம்” என்று சொன்னார்கள்.
காவலர்கள் சொன்ன சொற்களை நஞ்சப்பா முழுமையாக நம்பினான். அவர்கள் நெஞ்சில் உதித்திருக்கும் திட்டத்தைப்பற்றி அறியாமலேயே அவர்களோடு சேர்ந்து அந்தப் பணக்காரன் வீட்டுக்குச் சென்றான்.
சிறிது தொலைவு நடந்தபிறகு அனைவரும் பணக்காரருடைய வீட்டை அடைந்தனர். அந்தப் பணக்காரர் பதற்றத்தோடு வாசலிலேயே அலைந்துகொண்டிருந்தார். காவலர்களோடு புதிதாக ஒருவன் வருவதை அவர் உற்றுப் பார்த்தார். நெருங்கி வந்ததும் “இது யாரு? புது ஆளு?” என்று விசாரித்தான்.
காவலர்கள் அதுவரைக்கும் நஞ்சப்பாவிடம் பேசிக்கொண்டு வந்த விதத்துக்கு நேர்மாறான குரலில் “இவன்தான் திருடன் ஐயா. ஊரைவிட்டு தப்பிச்சி போகறதுக்காக எல்லையில உட்கார்ந்திருந்தான். வளைச்சி புடிச்சி இழுத்தாந்துட்டோம்” என்று சொன்னார்கள். நஞ்சப்பாவை பணக்காரன் முன்னிலையில் சென்று விழும் வகையில் தள்ளிவிட்டனர்.
நஞ்சப்பாவால் நடப்பது எதையும் நம்பமுடியவில்லை. ஒரே கணத்தில் அவன் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதையும் காவலர்கள் தம் இனிமையான குரல் வழியாக தம் வஞ்சகவலையில் வீழ்த்திவிட்டார்கள் என்பதையும் அவன் புரிந்துகொண்டான்.
“இவன்தான் திருடன்னு சொல்றீங்க. ஆனா இவன் கையில திருடிட்டு போன பொருள் எதுவும் இல்லையே?” என்று கேட்டார் பணக்காரர்.
“எங்கேயாவது மறைச்சி வச்சிட்டு சும்மா வேவு பார்க்கறதுக்கு ஊருக்குள்ள வந்திருக்கான் ஐயா. விசாரிச்சா, உண்மையை சொல்லிடுவான்” என்றனர் காவலர்கள்.
“சரி, கேக்கிற வகையில கேட்டு, நகைகளை திருப்பி வாங்கற வழியைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு அங்கேயே உட்கார்ந்தார் பணக்காரர். காவலர்கள் அனைவரும் நஞ்சப்பாவைச் சுற்றி நின்றுகொண்டு தாக்கத் தொடங்கினார்கள். நஞ்சப்பா அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தபதபவென்று பல அடிகள் அவன் மீது விழுந்துவிட்டன. உடனே அவன் வேதாளத்தை மனத்துக்குள் நினைத்துக்கொண்டு “வா. வந்து உதவி செய்” என்று முணுமுணுத்தான்.
அடுத்த கணமே வேதாளம் அங்கே வந்துவிட்டது. காவலர்கள் முதுகில் தொம்தொம் என்று அடிகள் விழுந்தன. யார் அடிக்கிறார்கள் என்பது புரியாமலேயே காவலர்கள் வலி பொறுக்கமுடியாமல் அந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வந்தனர். அவர்களில் ஒருவன் “இவனுக்கு எதோ மந்திரசக்தி இருக்குதுன்னு நெனைக்கறேன். எல்லா அடியும் நம்ம மேலயே விழுது. நாம அடிக்கிற அடியில ஒரு அடி கூட அவன் மேல விழமாட்டுது. என்ன நடந்ததுங்கற உண்மையை நாம உள்ளது உள்ளபடி பணக்காரர்கிட்ட சொல்லிடலாம். அப்பதான் இந்த அடிகள்லேர்ந்து தப்பிக்கமுடியும்” என்று மற்றவர்களிடம் சொன்னான். அவர்களும் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
முதுகில் பட்பட்டென்று அடிவிழுந்தபடி இருந்த நிலையிலும் அவர்கள் ஓட்டமாக ஓடி பணக்காரர் காலில் விழுந்தனர். “ஐயா, நாங்க ஒரு உண்மையை மறைச்சிட்டோம். நாங்க திருடனைத் தேடி போன சமயத்துல இவன் ஊரு எல்லையில உட்கார்ந்திருந்தான். திருடனை புடிக்கறதுக்கு நல்ல ஆலோசனையைச் சொல்றேன்னு. இவன்தான் திருடன்னு சொல்லிட்டா, அலையுற வேலை மிச்சமாவும்ன்னு நெனச்சி இவன் மேலயே பழியை சுமத்தி பொய் சொல்லிட்டோம். மன்னிச்சிக்குங்க” என்று சொன்னார்கள். அக்கணமே அவர்கள் மீது விழுந்த அடிகள் நின்றுவிட்டன. பணக்காரரும் அதைக் கேட்டு ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார்.
காவலர்களை விலகச் சொல்லிவிட்டு, நஞ்சப்பாவை அருகில் அழைத்தார் பணக்காரர். “சரியா விசாரிக்காம அவுங்க சொன்னதையே உண்மைன்னு எடுத்துகிட்டது என் தப்புதான். தயவுசெஞ்சி என்ன தப்பா எடுத்துக்காத தம்பி. நீ என்ன ஆலோசனையை சொல்லணும்னு நெனைக்கறியோ, இப்ப நீ தாராளமா என்கிட்டயே நேரிடையா சொல்லலாம்” என்றார்.
“திருடுபோன நகைகளும் செல்வமும் இப்ப யாரு கையில இருக்குதோ, அவுங்களை புடிக்க நான் உதவி செய்யறேன். அதுக்குப் பதிலா எனக்கு நீங்க என்ன கொடுப்பீங்க?” என்று கேட்டான் நஞ்சப்பா.
“பணம், நகைகள் எல்லாத்துலயும் பத்துல ஒரு பங்கு தரேன். போதுமா?” என்று சொன்னார் பணக்காரர்.
“போதும். இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள திருடனோடு வரேன்” என்று அங்கிருந்து புறப்பட்டான் நஞ்சப்பா. காவலர்கள் அவனைப் பின்தொடர்ந்து நடக்கத் தொடங்கினர். “நீங்க யாரும் எனக்குப் பின்னால வரவேணாம்” என்று அவர்களைத் தடுத்துவிட்டான் அவன். தனியாகவே ஊர் எல்லையை நோக்கிச் சென்றான்.
ஊர் எல்லையில் ஆலமரத்துக்கு அருகில் சென்றதும் ஒரு கணம் நின்றான். மனத்துக்குள் வேதாளத்தை நினைத்தான். வேதாளம் உடனே அவன் அருகில் தோன்றியது. பணக்காரருக்குச் சொந்தமான நகைகளை இப்போது வைத்திருக்கும் ஆட்களை அடித்து இழுத்து வருமாறு சொன்னான். ”அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு வேதாளம் பறந்து சென்றது. நஞ்சப்பா ஆலமரத்தின் பக்கம் சென்று உட்கார்ந்தான்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு ஆறு திருடர்களை கையைக் கட்டி இழுத்துவந்த வேதாளம் நஞ்சப்பாவின் முன்னால் நிறுத்தியது. அவர்களில் ஒருவனுடைய தலையில் ஆபரணங்களின் மூட்டை இருந்தது. அதைப் பார்த்ததுமே, மரத்தடியில் உறங்கும் சமயத்தில் தன்னிடமிருந்து களவாடிச் சென்ற ஆபரணமூட்டைதான் அது என்பதைப் புரிந்துகொண்டான் நஞ்சப்பா. அந்த மூட்டை தன்னிடமிருந்து களவாடப்பட்டதுகூட ஒருவகையில் நல்லதுதான் என்று நஞ்சப்பா மனத்துக்குள் நினைத்துக்கொண்டான்.
திருடர்களை அழைத்துக்கொண்டு பணக்காரர் வீட்டுக்குச் சென்றான் நஞ்சப்பா. வீட்டு வாசலில் காத்திருந்த பணக்காரர் நஞ்சப்பாவின் வருகையைக் கண்டு உற்சாகமாக எழுந்து நின்றார். திருடர்களின் தலையில் இருந்த ஆபரணமூட்டையை இறக்கி, பணக்காரரிடம் கொடுத்தான் நஞ்சப்பா. பணக்காரர் உடனே வீட்டிலிருந்த தன் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்தார். அந்த மூட்டையை வாங்கி அவர்களிடம் கொடுத்தார். அவர்கள் அதை ஆவலோடு வாங்கி பிரித்து எல்லா ஆபரணங்களையும் சரிபார்த்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு ”எல்லாம் சரியா இருக்குது” என்று பணக்காரரிடம் தெரிவித்தனர்.
உடனே பணக்காரர் காவலர்களை அழைத்தார். ஆறு திருடர்களையும் அவர்களிடம் ஒப்படைத்தார். காவலர்கள் அவர்களைத் தலையாரியிடம் அழைத்துச் சென்றனர்.
பணக்காரர் நஞ்சப்பாவை வீட்டுக்குள் அழைத்துச் சென்று வயிறார உணவளித்தார். சாப்பிட்டு முடித்த பிறகு, ஏற்கனவே வாக்களித்தபடி பத்தில் ஒரு பங்கு ஆபரணங்களையும் பணத்தையும் தனியாக ஒரு சிறிய மூட்டையாகக் கட்டி நஞ்சப்பாவிடம் அளித்தார். “நல்ல நேரத்துல வந்து நீ செஞ்ச உதவியை நான் எப்பவும் மறக்கமாட்டேன்” என்று சொல்லி அனுப்பிவைத்தார். அவர் கொடுத்த வெகுமதியைப் பெற்றுக்கொண்டு அந்த ஊரைவிட்டு சொந்த ஊரை நோக்கிப் புறப்பட்டான் நஞ்சப்பா.
ஊர் எல்லையில் அவனுக்காக வேதாளம் காத்திருந்தது. பணக்காரர் அளித்த வெகுமதியை அவன் வேதாளத்திடம் காட்டினான். “உன் உதவி கிடைக்காம போயிருந்தால், இந்த வெகுமதி எனக்குக் கிடைச்சிருக்காது. உனக்குத்தான் நான் நன்றி சொல்லணும்” என்று நெகிழ்ச்சியோடு சொன்னான் நஞ்சப்பா. ”ஆரம்பத்துல என் குடுமியைப் புடிச்சி இழுத்து மிரட்டுன சமயத்துல சரியான முரடன்கிட்ட மாட்டிகிட்டோம்னு நெனச்சி வேதனையா இருந்தது. ஆனா உன் கூட பழகி பேச ஆரம்பிச்சதும் நீ ரொம்ப ரொம்ப நல்லவன்னு புரிஞ்சிகிட்டேன்” என்று வேதாளமும் நெகிழ்ச்சியோடு சொன்னது.
“நீ எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கணும்” என்று வேதாளத்திடம் கேட்டான் நஞ்சப்பா.
“என்ன வாக்குறுதி?”
’என்னைவிட்டு நீ எப்பவும் பிரியக்கூடாது. எப்பவும் என் கூடவே இருக்கணும்.”
வேதாளம் பதில் சொல்லாமல் அவனையே உற்றுப் பார்த்தபடி இருந்தது.
”இங்க பாரு. எனக்கு அம்மா அப்பா கிடையாது. என்னோடு கூடப் பொறந்தவங்கன்னு சொல்லிக்கவும் யாரும் கிடையாது. நான் ஒரு தனிக்கட்டை. ஒரு அண்ணன் மாதிரி நீ எப்பவும் என்கூட இருந்தா, எனக்கு தைரியமா இருக்கும்” என்று மறுபடியும் வலியுறுத்திச் சொன்னான் நஞ்சப்பா. அப்போது அவன் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுத்தது.
வேதாளம் அவன் தோள்மீது உட்கார்ந்து அவனைத் தட்டிக் கொடுத்தது. சம்மதத்தின் அடையாளமாக “சரி” என்றபடி அவனைப் பார்த்து புன்னகைத்தது. தொடர்ந்து “அடுத்து, எங்க பயணம்?” என்று கேட்டது. “நேரா, சொந்த ஊருக்கே போகலாம். இந்தப் பணத்தை வச்சி வீடு, தோட்டம், நிலம் எல்லாம் வாங்கி உழைச்சி வாழலாம்” என்று சொன்னான் நஞ்சப்பா.
“நான் எங்கே தங்குவேன்?”
வேதாளத்தின் திடீர் கேள்வி அவனை ஒருகணம் யோசனையில் ஆழ்த்தியது. அடுத்த கணமே அவன் புன்னகைத்தபடி ”கவலைப்படாதே. முருங்கைமரம் இருக்கிற வீடா தேடிப் பார்த்து வாங்கிட்டா, நம்ம ரெண்டு பேருக்குமே வசதியா இருக்கும்” என்றான். வேதாளம் அதற்கு சரி என்பதுபோல தலையசைத்தது. நஞ்சப்பா தொடர்ந்து “அதுவரைக்கும் நீ எங்க ஊரு கோயில் தோட்டத்துல இருக்கற முருங்கைமரத்துல இருக்க ஏற்பாடு செய்றேன், போதுமா?” என்று கேட்டான். வேதாளம் அதற்கும் சரி என்பதுபோல தலையசைத்தது. இருவரும் உரையாடியபடியே ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
0