Skip to content
Home » நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #13 – தலையெழுத்து

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #13 – தலையெழுத்து

ஒரு கிராமத்தில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு சத்தியசீலன் என்னும் இளைஞர் பாடம் சொல்லிக் கொடுத்துவந்தார். அங்கு படிக்கவரும் பிள்ளைகளுக்கு எண்ணும் எழுத்துகளும் சொல்லிக் கொடுப்பதுதான் அவருடைய முதன்மையான வேலை. அவை அனைத்தும் மனப்பாடமாகப் பழகிய பிறகு ஓலைச் சுவடிகளில் உள்ள பாடல்களைப் பதம் பிரித்து படிக்கும் முறையைக் கற்பித்தார். கிராமத்தின் சார்பாக அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மாதச்சம்பளமாகக் கிடைத்துவந்தது.

சத்தியசீலனோடு அவருடைய தாய் மட்டும் வசித்துவந்தார். அவர்களுக்குச் சொந்தம் என சொல்லிக்கொள்ள வேறு யாரும் இல்லை. அவருடைய அப்பா எப்போதோ இறந்துவிட்டார்.

சத்தியசீலனும் அவருடைய தாயும் வசிப்பதற்காக ஊர்க்காரர்கள் ஊரிலேயே ஒரு வீட்டை ஒதுக்கிக் கொடுத்திருந்தனர். அந்த வீடு காற்றோட்டமுடன் நல்ல வசதியாக இருந்தது. பள்ளிக்கூடப் பிள்ளைகள் பல சமயங்களில் அவருடைய வீட்டுக்கும் வந்து பாடம் படித்துவிட்டுச் செல்வார்கள்.

சத்தியசீலன் எல்லோரோடும் அன்போடு பழகி வந்தார். பிள்ளைகள் வீட்டில் இருக்கிற நேரங்களிலெல்லாம் பாட்டுச்சத்தமும் விளையாடும் சத்தமும் ஓங்கி ஒலித்தபடி இருக்கும். சிற்சில சமயங்களில் சத்தியசீலன் அந்தப் பிள்ளைகளுக்கு கதைகளைச் சொல்லிக்கொண்டிருப்பார். சிற்சில சமயங்களில் பிள்ளைகளே எழுந்து நின்று கதை சொல்லும் வகையில் பயிற்சியளிப்பார். சத்தியசீலனுக்கு எல்லாப் பிள்ளைகளையும் பிடிக்கும். எல்லோரோடும் அவர் அன்போடு பழகிவந்தார்.

சத்தியசீலனின் அம்மாவுக்கு ஒரு மனக்குறை இருந்தது. சத்தியசீலனுக்கு ஒரு திருமணம் செய்து பார்க்கவேண்டும் என அவர் பெரிதும் விரும்பினார். தன் காலத்துக்குப் பிறகு சத்தியசீலனின் வாழ்க்கைக்கு அந்தத் துணை பெரிதும் உதவியாக இருக்கும் என அவர் கருதினார். ஆனால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை.

சத்தியசீலன் பெரிய படிப்பாளி. நல்ல ஒழுக்கமுள்ளவர். ஊராரின் மதிப்பைப் பெற்றவர். பழகுவதற்கு இனிமையானவர். இப்படி அவரைப்பற்றி உயர்வாகச் சொல்ல எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. ஆனால் அவருக்குச் சொந்தமாக வீடு, நிலம், சொத்து என எதுவும் இல்லை. ஊரார் ஒதுக்கிக் கொடுத்த வீட்டில்தான் அவர் தன் தாயாரோடு வசித்துவந்தார். ஊராரின் பார்வையில் கல்வியைவிடச் சொத்துதான் முக்கியமான விஷயமாகத் தெரிந்தது. அதனால் அவருக்குப் பெண் கொடுக்க அந்த ஊரில் ஒருவரும் தயாராக இல்லை.

ஆயினும் தன் முயற்சியில் மனம் தளராத சத்தியசீலனுடைய தாயார் தம் கிராமத்தைச் சுற்றியிருக்கும் வேறு வேறு ஊர்களுக்குச் சென்று எங்காவது பெண் கிடைக்காதா என விசாரிக்கத் தொடங்கினார். துரதிருஷ்டவசமாக, அவர் விரும்பியவகையில் எந்த ஊரிலும் ஒரு பெண் கூட கிடைக்கவில்லை.

அந்த மாதிரியான நேரங்களில் ‘எல்லாம் நம்ம தலையெழுத்து. எங்க போய் நின்னாலும் அது வந்து குறுக்குல நிக்குது. என்ன செய்யமுடியும்?’ என்று சொல்லி சோர்வில் மூழ்கிவிடுவார். எல்லாமே நாலைந்து நாட்களுக்குத்தான். அதற்குப் பிறகு தன் மகனுக்குப் பொருத்தமான பெண் எந்த ஊரில் இருக்கிறாள் என தேடத் தொடங்கிவிடுவாள்.

‘என்னம்மா, எப்படி இருக்கிறீங்க?’ என்று யாராவது அவரிடம் கேட்டால் ‘என்னத்த நல்லா இருக்கறது போ’ என்று சலிப்போடு பதில் சொல்வார். ‘ஏம்மா இப்படி சலிச்சிக்கிறீங்க?’ என்று கேட்டால், ‘நான் இருக்கற நிலைமையில சலிச்சிக்காம என்ன செய்யறது சொல்லு. என்னை அந்தக் கடவுள் ரொம்ப நல்லவிதமா வச்சிருக்கான். எனக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனா என் வாழ்க்கையில ரெண்டு விஷயங்கள் நடக்கணும்னு ஆசைப்பட்டேன். அது நடக்கலை. அதுதான் என் மனசை அறுக்குது. ஒன்னு என் மகனுடைய கல்யாணம். இன்னொன்னு, நான் உயிரோடு இருக்கும்போதே ஒருமுறை காசிக்குப் போய் அந்த விசாலாட்சியையும் விஸ்வநாத்தையும் கண்ணுக்கும் மனசுக்கும் நிறைவா பார்த்துட்டு வரணும். நான் வாங்கிவந்த வரமோ என்னமோ, அந்த ரெண்டுமே நடக்கமாட்டுது. எல்லாம் எங்க தலையெழுத்து’ என்று அவர் பதில் சொல்லிவிட்டு பெருமூச்சு விடுவார்.

ஒரு நாள் வழக்கம்போல ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டுத் திரும்பி பூஜையையெல்லாம் முடித்துவிட்டு சாப்பிட்டார். திடீரென மாலை நெருங்கும் நேரத்தில் குளிர்காய்ச்சல் வந்துவிட்டது. ஊர் வைத்தியரை அழைத்துவந்து காட்டினார் சத்தியசீலன். அவர் லேகியமும் கஷாயமும் கொடுத்துவிட்டுச் சென்றார். மூன்று நாட்கள் வலி தாளாமல் தொடர்ச்சியாக முனகிக்கொண்டே இருந்தார். உடல்நிலையில் கொஞ்சம்கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. ‘நாடித்துடிப்பு அடங்கிட்டே வருது. எல்லாம் ஆண்டவனுடைய சித்தம். மருந்து கொடுத்து இனிமேல பொழைக்கவைக்க முடியாது’ என்று கைவிரித்துவிட்டார் வைத்தியர்.

நாலாவது நாள் காலையில் சத்தியசீலனுடைய தாயார் இறந்துவிட்டார். அவருடைய இறுதி ஊர்வலத்துக்கு அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் திரண்டுவந்து கலந்துகொண்டனர்.

அம்மாவின் மரணம் சத்தியசீலனை நிலைகுலைய வைத்துவிட்டது. கல்யாணத்தைப்பற்றிய கவலையோடு அலைந்து திரிந்துகொண்டிருந்தவரை ஒருமுறையாவது காசிக்கு அழைத்துச் சென்று காட்டியிருக்கக்கூடிய வாய்ப்பை தவறவிட்டதாகவே அவர் நினைத்தார். அதைப்பற்றிய பேச்சை எடுக்கும்போதெல்லாம் ‘முதல்ல உன் கல்யாணம் நடக்கட்டும். ஆசை தீரப் பார்த்துட்டு அதுக்கப்புறம் காசிக்குப் புறப்படுவேன்’ என்று அம்மாதான் ஒத்திப் போட்டபடி இருந்தார். எதிர்பாராமல் நிகழ்ந்த அவருடைய மரணம் அந்தப் பேச்சுக்கே இனி இடமில்லாமல் ஆக்கிவிட்டது.

வாழ்நாளில் ஒருமுறையாவது காசியையும் கங்கையையும் பார்ப்பதற்கு ஆசைப்பட்டவருடைய சாம்பலை எடுத்துச் சென்று காசியில் கரைத்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்தார் சத்தியசீலன். அந்தச் செயலின் வழியாக தன் அம்மாவின் ஆசையை ஓரளவாவது நிறைவேற்றலாம் என்று அவருக்குத் தோன்றியது. அதனால் இறுதிச் சடங்குக்குப் பிறகு தகனமேடையிலிருந்து சிறிதளவு சாம்பலை ஒரு செம்பில் சேகரித்து தனியாக வைத்துக்கொண்டார்.

வீட்டில் நடத்தவேண்டிய சடங்கு சம்பிரதாயங்களையெல்லாம் நடத்தி முடித்த பிறகு ஊர்ப் பெரியவர்களிடம் தன் விருப்பத்தைச் சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டார் சத்தியசீலன். ஒருநாள் அதிகாலையில் வீட்டில் செய்யவேண்டிய பூஜைகளையெல்லாம் செய்துவிட்டு பயபக்தியோடு சாம்பலை நிறைத்து வைத்திருக்கும் செம்பை தன் பயணப்பைக்குள் பாதுகாப்பாக வைத்துக்கொண்டார். அக்கம்பக்கத்தில் வசிக்கும் கிராமத்து நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு காசியை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

பகல்முழுக்க அவர் நடந்துகொண்டே இருந்தார். களைப்பாக இருக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினார். இரவு நேரத்தில் வழியில் சத்திரங்கள் தென்படும் இடங்களில் தங்கினார்.

கர்நாடக ராஜ்ஜியத்தின் கடைசி கிராமத்தைக் கடக்கும்போது இருட்டத் தொடங்கிவிட்டது. அவர் நடந்துவந்த பாதையில் சத்திரம் எதுவும் தென்படவில்லை. வேறு எங்காவது இருக்கக்கூடும் என்று அவருக்குத் தோன்றியது. இருட்டு முற்றிலுமாகக் கவிவதற்குள் ஓர் இடத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று அவர் நினைத்தார். அதனால் தனக்கு முன்னால் நடந்துபோய்க்கொண்டிருந்த ஒரு பெரியவரை அணுகி விசாரித்தார். அவர் சிறிது தொலைவில் மரங்கள் சூழ நடுவிலிருந்த ஒரு பெரிய வீட்டைச் சுட்டிக்காட்டி ‘அங்க போய் விசாரிச்சி பாருங்க’ என்று சொன்னார்.

சத்தியசீலன் அந்த வீட்டை நெருங்கினார். திண்ணையில் ஒருவர் உட்கார்ந்திருக்க, அவருடைய இரு தோள்களையும் பற்றியபடி இரு பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். புதியவர் ஒருவர் தன்னை நோக்கி நெருங்கிவருவதைப் பார்த்ததும் எழுந்து ‘வாங்க வாங்க’ என்று வரவேற்று வணக்கம் சொன்னார் அவர். சத்தியசீலன் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு தன்னுடைய தேவையைத் தெரிவித்தார்.

‘சத்திரத்துக்கு போக இன்னும் ரொம்ப தூரம் நடந்து போகணும். நீங்க அவ்வளவு தூரத்துக்கு நடந்துபோய் கஷ்டப்பட வேணாம். நம்ம வீட்டுலயே நீங்க தங்கிக்கலாம். அதுக்குத் தேவையான ஏற்பாடுகளை நான் செய்யறேன்.’

புன்னகையோடு சொன்னார் அவர். சத்தியசீலனுக்கு அந்த உபசரிப்பை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. அதனால் ‘சரி’ என்று சொன்னார் சத்தியசீலன்.

அந்தப் பெரியவர் மதிலோரமாக இருந்த தண்ணீர்த்தொட்டிக்கு அருகில் சத்தியசீலனை அழைத்துச் சென்று ‘நீங்க முதல்ல குளிச்சிட்டு வாங்க. மத்ததையெல்லாம் அப்புறம் பேசலாம்’ என்று சொன்னார்.

சத்தியசீலன் தன் பயணப்பையை திண்ணையில் வைத்துவிட்டு குளித்து உடைமாற்றிக்கொண்டு வந்தார். திண்ணையில் அந்தப் பெரியவர் அப்போதும் தன் பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்தார். சத்தியசீலன் அவருக்கு அருகில் உட்கார்ந்து தன்னைப்பற்றிய விவரங்களையும் தன் பயண நோக்கத்தையும் சுருக்கமாகச் சொன்னார். அதைக் கேட்ட பிறகு அந்தப் பெரியவரும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

‘என் பேரு ஈஷ்வரப்பா. இவுங்க ரெண்டு பேரும் என்னுடைய பிள்ளைங்க. இவன் பெரியவன் ருத்ரப்பா. அவன் சின்னவன் மல்லப்பா. நான் சந்தையில எண்ணெய் வியாபாரம் செய்யறேன். வாங்கி விக்கற வேலைதான். போதுமான லாபத்தோடு வியாபாரம் நல்லபடியா நடக்குது’ என்றார்.

அப்போது வீட்டுக்குள்ளிருந்து அவருடைய மனைவி வெளியே வந்து ‘சாப்பாடு தயாரா இருக்குது. சாப்பிட வரலாம்’ என்று அழைத்தார். இன்னொரு பிள்ளை வெகுவிரைவில் பிறக்கப் போகிறது என்று பார்த்தாலேயே தெரியும் அளவுக்கு மேடிட்ட வயிறோடு அவர் காட்சியளித்தார். சத்தியசீலன் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொன்னார். ‘என் மனைவி. பார்வதி. இன்னும் சில மாதங்கள்ல இன்னொரு பொண்ணோ பையனோ எங்களுக்கு பொறக்கப் போவுது’ என்று அவரை அறிமுகப்படுத்தினார் ஈஷ்வரப்பா. ‘நீங்க ஆசைப்படறதை அந்த ஆண்டவன் கொடுப்பான். கவலைப்படாதீங்க’ என்றார் சத்தியசீலன்.

வீட்டுக்குள் சென்று அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டனர். பிள்ளைகளோடு கதை பேசியபடி சாப்பிட்டார் சத்தியசீலன். கதை சுவாரசியத்தின் காரணமாக ருத்ரப்பாவும் மல்லப்பாவும் சத்தியசீலனோடு ஒட்டிக் கொண்டனர். சாப்பிட்டு முடித்து மீண்டும் திண்ணைக்குத் திரும்பிய பிறகும் அவர்களுடைய கதை புராணம் முடிவடையவில்லை. அவர் சொன்ன குள்ள ராட்சசன் கதையைக் கேட்டு அவர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். அந்தக் கதை முடிந்ததுமே அவர்கள் ‘இன்னொரு கதை, இன்னொரு கதை’ என்று கேட்கத் தொடங்கினர்.

ஈஷ்வரப்பா குறுக்கிட்டு ‘அவர் ரொம்ப தூரம் நடந்தே வந்திருக்காரு. நாளைக்கும் ரொம்ப தூரம் நடந்து போகணும். அவர் நல்லா தூங்கி ஓய்வெடுக்கட்டும். நீங்களும் வந்து தூங்குங்க. நாளைக்கு பேசிக்கலாம்’ என்று இரண்டு பிள்ளைகளையும் வீட்டுக்குள் அனுப்பிவைத்தார். பிறகு வெற்றிலைபாக்கு நிறைந்த பெட்டியைத் திறந்து தன் பங்குக்கு தேவையானவற்றை எடுத்து மடித்து வாய்க்குள் வைத்துக்கொண்டு பெட்டியை சத்தியசீலனுக்கு அருகில் வைத்தார். சத்தியசீலன் புன்னகைத்தபடி ‘எனக்கு வெற்றிலை பழக்கம் கிடையாது’ என்று சொன்னபடி பெட்டியை மீண்டும் ஈஷ்வரப்பாவின் பக்கமே தள்ளிவைத்தார்.

சிறிது நேரம் இருவரும் ஊர் விவரங்களையெல்லாம் பேசிப் பகிர்ந்துகொண்டனர். சத்தியசீலன் தன் காசிப்பயணத்தைப்பற்றியும் தன் தாயாரைப்பற்றியும் அவருடைய மனக்குறையைப்பற்றியும் அவருடைய ஆசைகளை நிறைவேற்றிவைக்க முடியாத தன் துரதிருஷ்டத்தைப்பற்றியும் ஈஷ்வரப்பாவிடம் எடுத்துரைத்தார்.

‘நீங்க என்னைவிட வயசுல சின்னவரா இருந்தாலும், பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற ஒரு குரு. உங்களுக்கு நான் எடுத்துச் சொல்ற தேவையே இல்லை. கால நேரம் கூடி வரும்போது எல்லாம் நல்லபடியாவே நடக்கும். நடக்கறதெல்லாம் நல்லதுக்குத்தான் நடக்குதுன்னு நெனச்சிகிட்டு போயிட்டே இருங்க. அப்பதான் நிம்மதியா வாழ்க்கையை வாழமுடியும்’ என்றார் ஈஷ்வரப்பா.

வெகுநேரம் வரைக்கும் உரையாடிக்கொண்டிருந்த பிறகு சத்தியசீலனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குள் சென்றார் ஈஷ்வரப்பா. திண்ணையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் சத்தியசீலனும் படுத்துக்கொண்டார்.

மறுநாள் அதிகாலையில் எழுந்து அந்த ஊர்க்கோடியில் இருந்த குளத்தங்கரைக்குச் சென்று காலைக்கடன்களை முடித்தார் சத்தியசீலன். அப்படியே குளியலையும் முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவந்தார். அதற்குள் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்துவிட்டிருந்தனர். ஈஷ்வரப்பாவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டார் சத்தியசீலன்.

பார்வதி துணியால் சுற்றப்பட்ட ரொட்டி மூட்டையைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். ‘இதுல ரொட்டி இருக்குது. ரெண்டு மூனு நாளைக்கு சாப்புடலாம். வச்சிக்குங்க. கங்கையில முழுகும்போது எங்க மூதாதையர்களையும் ஒரு நொடி நினைச்சி முழுக்கு போடுங்க. உங்களுக்கு புண்ணியமா இருக்கும்’ என்றார்.

‘கண்டிப்பா செய்றேன்.’

அப்பாவோடு ஒட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த ருத்ரப்பா, மல்லப்பா ஆகியோரின் கன்னங்களைத் தொட்டு தட்டிக் கொடுத்துவிட்டு புன்னகைத்தபடி புறப்பட்டார் சத்தியசீலன்.

கர்நாடக ராஜ்ஜியத்தைக் கடந்ததுமே புதிய மொழி, புதிய மனிதர்கள் நிறைந்த புதிய பிரதேசங்கள் வரத் தொடங்கின. எல்லா இடங்களிலும் அவருக்குத் தங்கிச் செல்ல சத்திரங்கள் கிடைத்தன. சத்திரங்கள் இல்லாத இடங்களில் ஆதரிக்கும் மனிதர்கள் கிடைத்தார்கள். ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் வழியாக பலவிதமான பிரதேசங்களைக் கடந்து சத்தியசீலன் நடந்துகொண்டே இருந்தார்.

முதலில் திரிவேணிசங்கமத்தை அடைந்தார் சத்தியசீலன். அங்கு சங்கமத்தில் மூழ்கி வழிபட்ட பிறகு காசியை நோக்கி நடக்கத் தொடங்கினார். நாலைந்து நாட்கள் பயணத்துக்குப் பிறகு காசியை அடைந்தார்.

காசியில் கங்கை பெருக்கெடுத்தோடும் காட்சியைக் கண்டார். கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்கு அதன் வேகம் இருந்தது. அதன் கரையோரமாகவே உயிர்நீத்தவர்களின் உடல்களை எரிக்கும் தகன மேடைகள் இருந்தன. தகன மேடைகளிலிருந்து எழும் தீ உயர்ந்து எரிந்தது. தீ எரியும் காட்சி கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒருவர் உக்கிரமாக நடனமிடுவதுபோல இருந்தது. கங்கைக்கரைக் காட்சிகள் ஒவ்வொன்றும் அவருக்கு விசித்திரமாகத் தோன்றியது.

கங்கைக்கரையில் சத்தியசீலனுக்கு சடங்குகளைச் செய்ய உதவும் வகையில் ஒரு சாஸ்திரியின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய வழிகாட்டுதலோடு சத்தியசீலன் தன் தாய்க்குச் செய்யவேண்டிய சடங்குகளையெல்லாம் செய்தார். பாய்ந்தோடும் கங்கையில் சாம்பலையும் கரைத்தார். தன் தாயையும் எப்போதோ மறைந்துபோன தன் தந்தையையும் ஒருபோதும் பார்த்திராத தன் மூதாதையரையும் நினைத்துக்கொண்டு கங்கையில் மூழ்கியெழுந்தார். திடீரென அவருக்கு ஈஷ்வரப்பா, பார்வதி தம்பதியினரின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. அவர்களுடைய மூதாதையர்களையும் நினைத்துக்கொண்டு இன்னொரு முழுக்கு போட்டார். எல்லாம் முடிந்த தருணத்தில் அவர் மனபாரம் குறைந்ததுபோல இருந்தது. ஒருகணம் அம்மாவை மனமுருக நினைத்துக்கொண்டார்.

ஒரு வாரம் காசியிலேயே தங்கி சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்தார். ஆலயங்களுக்குச் சென்றுவந்தார். விசாலாட்சியையும் விஸ்வநாத்தையும் பார்த்து மனமுருக பிரார்த்தனை செய்துகொண்டார்.

கோவில் வளாகத்தில் கங்கைநீர் அடைத்த சிறுசிறு செம்புகளை ஒரு பாட்டி விற்பனை செய்துகொண்டிருந்தார். அவற்றைப் பார்த்ததும் தன் காசி யாத்திரையின் அடையாளமாக தமக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கலாம் என நினைத்து பத்து செம்புகளை வாங்கி தன் மூட்டையில் வைத்துக்கொண்டார் சத்தியசீலன்.

ஒரு வார காசி வாசத்துக்குப் பிறகு வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கினார். அதே வழி. அதே ஊர்கள். அதே சத்திரங்கள். அதே மரத்தடிகள். அதே குளக்கரைகள். அங்கங்கே தங்கித் தங்கி ஓய்வெடுத்தபடி நடந்தபடியே இருந்தார்.

பல வாரங்களுக்குப் பிறகு கர்நாடக ராஜ்ஜியத்தின் எல்லைக்குள் கடைசியாக வந்து சேர்ந்தார் சத்தியசீலன். அந்த எல்லையைத் தொட்டபோது சொந்த ஊருக்கே வந்துவிட்டதுபோல அவருக்குள் ஒரு மகிழ்ச்சி பரவியது.

போகும்போது தன் வீட்டுத் திண்ணையில் தங்க இடம் கொடுத்த ஈஷ்வரப்பாவைச் சந்தித்து கங்கைநீர் நிறைந்த ஒரு செம்பைக் கொடுக்கவேண்டும் என அவர் மனம் திட்டமிட்டது. ரொட்டிகள் அடங்கிய மூட்டையைக் கொடுத்த பார்வதி அம்மாவின் முகம் அவருக்கு ஞாபகம் வந்தது. இந்நேரத்துக்கு அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த மூன்றாவது குழந்தை பிறந்திருக்குமா என்று தெரிந்துகொள்ள அவர் மனம் ஆவலுற்றது. அதனால் பகல் முழுக்க ஓய்வில்லாமல் நடந்து அந்தி கவியும் நேரத்தில் ஈஷ்வரப்பாவின் வீட்டை அடைந்தார்.

வாசலில் ருத்ரப்பாவும் மல்லப்பாவும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை பெயர் சொல்லி அழைத்தபடி வாசலில் நின்றார் சத்தியசீலன். தாடி மீசை கோலத்தோடு நிற்பவரைப் பார்த்து அவர்கள் இருவரும் ஒருகணம் எதுவும் புரியாமல் தடுமாறினர். ‘என்னங்கடா, அடையாளம் தெரியலையா? ஒருநாள் ராத்திரி உங்களுக்கு குள்ள ராட்சசன் கதையைச் சொன்னேனே, ஞாபகம் இருக்குதா? நீங்கள்லாம் விழுந்துவிழுந்து சிரிச்சீங்களே’ என்று நினைவூட்டினார் சத்தியசீலன். அக்கணமே அவர்களுக்கு ஞாபகம் வந்துவிட்டது. ‘மாமா, நீங்களா? வாங்க. வாங்க. தாடிமீசை கோலத்துல அடையாளமே தெரியலை’ என்றபடி ஓடிவந்து பக்கத்தில் நின்றனர்.

அதற்குள் பேச்சுக்குரல் கேட்டு ஈஷ்வரப்பாவே வெளியே வந்தார். அவரும் ஒருகணம் முதலில் தடுமாறி நின்றார். ஆயினும் குரலை வைத்து அடையாளம் கண்டுபிடித்துவிட்டார். ‘வாங்க வாங்க. வந்து இப்படி உக்காருங்க. எப்படி இருந்தது காசிப்பயணம்?’ என்று விசாரித்தார்.

‘எல்லாம் நல்லபடியா நடந்தது. நீங்களும் ஒருமுறை காசிக்குப் போய்வாங்க. வாழ்க்கையில எல்லாருமே ஒரு தரம் காசிக்குப் போய் அந்த கங்கையைப் பார்த்துட்டு வரணும்’ என்றார் சத்தியசீலன்.

திண்ணையில் உட்கார்ந்ததும் மூட்டையைத் திறந்து கங்கைத்தீர்த்தம் நிறைந்த ஒரு செம்பை எடுத்து ஈஷ்வரப்பாவிடம் கொடுத்தார். ‘கங்காதீர்த்தமா? ஒரு நிமிஷம் இருங்க. வீட்டம்மாவை கூப்புடறேன். அவுங்க கையில நீங்களே கொடுங்க’ என்று சொல்லிவிட்டு வீட்டின் உட்பக்கத்தில் கேட்கும் வகையில் மனைவியின் பெயரைச் சத்தமாகச் சொல்லி அழைத்தார்.

‘என்ன விஷயம்?’ என்றபடி மெதுவாக வந்து நின்றார் பார்வதி. அவருடைய மேடிட்டு நிறைந்த வயிறு மேலும் பெரிதாகியிருந்தது. மூச்சு வாங்கியபடிதான் நடந்துவந்தார். ‘இந்தாங்கம்மா. காசிதீர்த்தம்’ என்றபடி அவரிடம் செம்பைக் கொடுத்தார் சத்தியசீலன். அவர் புன்னகையோடு அதை வாங்கிக்கொண்டார். ‘கங்கையில முழுக்கு போடும்போது நீங்க சொன்னவங்க எல்லாரையும் நினைச்சி முழுக்கு போட்டேன்’ என்றார் சத்தியசீலன்.

அதைக் கேட்டு பார்வதியின் கண்கள் கலங்கிவிட்டன. முந்தானையை உயர்த்தி துடைத்தபடியே புன்னகைத்தார். உடனடியாகப் பேச்சை மாற்றுகிற விதத்தில் ‘குழந்தை பிறந்திருக்கும்னு நினைச்சிட்டு வந்தேன்….’ என்றார் சத்தியசீலன். ஈஷ்வரப்பா ‘வைத்தியரம்மா இன்னைக்கு ராத்திரி பிரசவமாயிடும்னு சொல்லியிருக்காங்க’ என்று சொன்னார். தொடர்ந்து ‘இங்கயே தங்கி குழந்தையைப் பார்த்து நீங்க ஆசீர்வாதம் பண்ணணும். குழந்தைக்கு ஒரு நல்ல பேரா வைக்கணும்’ என்று சொன்னார். சத்தியசீலன் அதற்கு ஒப்புக்கொண்டார்.

அன்று முன்னிரவிலேயே வைத்தியரம்மா அந்த வீட்டுக்கு வந்துவிட்டார். அனைவரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிட்டனர். சாப்பாட்டுக்குப் பிறகு ஈஷ்வரப்பா பிள்ளைகளை உறங்கவைப்பதற்காக அவர்களுடைய அறைக்குச் சென்றுவிட்டார். வைத்தியரம்மா பார்வதியை அழைத்துக்கொண்டு அவருடைய அறைக்குச் சென்றுவிட்டார். சத்தியசீலன் திண்ணைக்குத் திரும்பிவந்து உட்கார்ந்து அமைதியடைந்த தெருவைப் பார்த்தபடி யோசனையில் மூழ்கினார்.

நேரம் நள்ளிரவைக் கடந்துகொண்டிருந்தது. வானத்தில் அரைநிலவும் மேகங்களும் மிதந்தபடி இருந்தன. ஏராளமான நட்சத்திரங்கள் சின்னச்சின்ன புள்ளிகளாக காட்சியளித்தன. உடல் களைத்திருந்தபோதும் அவருக்கு உறக்கம் வரவில்லை. தொலைவில் கரிய நிழல்போலக் காட்சியளித்த மரங்களையும் கூரைகளையும் மாறிமாறிப் பார்த்தபடி பொழுதைக் கழித்தார். வீட்டின் உட்புறத்திலிருந்து பார்வதி அம்மாவின் அழுகுரலும் அவரை அமைதிப்படுத்தும் வைத்தியரம்மாவின் மெல்லிய குரலும் கேட்டன. ஏதோ வேதனை தன்னைத் தாக்குவதுபோல சத்தியசீலன் உணர்ந்தார். எல்லாமே அவருக்குப் புதுமையாக இருந்தது.

ஒரு கரிய நிழல் சிறிது தொலைவில் மெல்ல மெல்ல அசைவது தெரிந்தது. உடனே அவர் புலன்கள் விழித்துக்கொண்டன. அதே திசையில் கவனமாக உற்றுப் பார்த்தார் சத்தியசீலன். முதலில் அவர் ஏதோ மரத்தின் அசைவு என்றுதான் நினைத்தார். ஆனால் அந்த உருவம் அந்த வீட்டை நோக்கி நெருங்கி வருவதுபோல தோன்றவே சட்டென எழுந்து உட்கார்ந்தார். அவரவர்கள் அவரவர் வேலைகளில் மூழ்கியிருக்கும்போது சந்தடியில்லாமல் கிடைத்ததைத் திருடிக்கொண்டு ஓடிவிடலாம் என யாரோ திட்டமிட்டிருப்பதாக அவருக்குத் தோன்றியது. தனக்கு நன்மை செய்த வீட்டிற்குள் தன் கண் முன்னாலேயே ஒரு திருடன் நுழைவதை எப்பாடு பட்டாவது தடுக்கவேண்டும் என அவர் முடிவெடுத்தார்.

இருட்டிலேயே மெல்ல நகர்ந்துசென்று திண்ணையிலிருந்து இறங்கி வாசலுக்குக் குறுக்கே வந்து அந்த உருவம் நெருங்கிவருவதற்காகக் காத்திருந்தார் சத்தியசீலன். சரியாக அதே நேரத்தில் அந்த உருவமும் வீட்டு வாசலை நெருங்கி அடியெடுத்துவைத்து கதவருகே வந்தது. சத்தியசீலன் உடனே துணிச்சலோடு அந்த உருவத்தின் தோளை அழுத்தமாகப் பற்றினார். தொட்ட பிறகுதான் அது நிழலல்ல என்பதையும் யாரோ ஒரு மனித உருவம் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். ‘நில்லு. யாரு நீ?’ என்று அதட்டலோடு நிறுத்தி கேள்வி கேட்டார். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் ‘நான் அவசரமா போவணும். என்னை விடுப்பா’ என்று பதில் சொன்னது அந்த உருவம். ‘யாருன்னு சொல்லாம சாத்தியிருக்கிற வீட்டுக்குள்ள போகணும்ன்னு துடிக்கறியே? இது என்ன நியாயம்?’ என்று கேட்டார் சத்தியசீலன்.

‘புரியாத ஆளா இருக்கியே. முதல்ல எனக்கு வழிய விடு. உள்ள எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்குது’ என்று சொன்னது உருவம்.

‘என்ன வேலை அது? அதைச் சொல்லிட்டு போ’ என்று பிடிவாதமாக இருந்தார் சத்தியசீலன்.

அந்த உருவம் சத்தியசீலனின் பக்கமாகத் திரும்பியது. அடர்த்தியாக இருள் சூழ்ந்திருந்ததால் அந்த உருவத்தின் முகத்தை அவரால் பார்க்கமுடியவில்லை. ஆனால் அது பேசும் குரல் கேட்டது.

‘இங்க பாரு. உள்ள குழந்தை பிறக்கிற நேரம் நெருங்கிடுச்சி. சீக்கிரமா போய் அந்தக் குழந்தையுடைய தலையில அதனுடைய எதிர்காலம் எப்படி இருக்கணும்ன்னு நான் உடனடியா எழுதியாவணும். என்னை விடு.’

‘அதனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்ன்னு எழுதறதுக்கு நீ யாரு? நீ என்ன, கடவுளா?’

அந்த உருவம் ஒருகணம் சத்தியசீலனைப் பார்த்தது. ‘ஆமாம். நான் கடவுள்தான். பிரும்மா. எல்லாருடைய தலையெழுத்தையும் எழுதறவன். போதுமா?’ என்று அதட்டலாகக் கேட்டது.

‘என்ன, பிரும்மாவா?’

‘ஆமாம்.’

இவ்வளவு நேரம் பிரும்மாவோடு பேசிக்கொண்டிருந்தோம் என்பதையே அவரால் நம்பமுடியவில்லை. ‘சரி, தாராளமா போய் எழுதுங்க. அதுக்கு முன்னால நீங்க எனக்கு ஒரு வாக்கு கொடுக்கணும். அந்தக் குழந்தையுடைய தலையில என்ன எழுதினீங்கன்னு எங்கிட்ட சொல்லிட்டுத்தான் இந்த இடத்தைவிட்டு போவணும். சரியா?’ என்று கேட்டார். அப்போது முற்றிலுமாக அவரைவிட்டு பயம் போய்விட்டது. யாரோ பெரியப்பா சித்தப்பாவிடம் பேசுவதுபோலவே நெருக்கமான குரலில் பேசினார்.

‘சரி. சொல்றேன். இப்ப என்னை உள்ள போக விடு’ என்று அவசரப்பட்டார் பிரும்மா.

அடுத்த கணமே வழியைவிட்டு விலகி நின்றார் சத்தியசீலன். வில்லிலிருந்து அம்பு பாய்ந்து புறப்படுவதுபோல பிரும்மா வீட்டுக்குள் பாய்ந்து சென்றார். இந்த இருட்டுக்குள் அவருக்கு எப்படித்தான் வழி தெரிகிறதோ என்று நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கினார் சத்தியசீலன்.

உள்ளே போன இரண்டு மூன்று நொடிகளிலேயே திரும்பி வந்தார் பிரும்மா. அதே நேரத்தில் அறையிலிருந்து குழந்தை வீறிட்டழும் சத்தம் கேட்டது. குழந்தை பிறந்துவிட்டது என்பதன் அடையாளமாக அந்தச் சத்தம் இருந்தது. ‘பெண் குழந்தை, பெண் குழந்தை’ என்று வைத்தியரம்மா சத்தமாகச் சொல்வதும் கேட்டது.

பிரும்மாவின் வருகைக்காகக் காத்திருந்த சத்தியசீலன் அவர் சொல்லப்போகும் வார்த்தைக்காக ஆவலோடு காத்திருந்தார். அவரோ எதுவும் பேசாமல் வேறு ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தார்.

‘எழுதிட்டீங்களா?’

‘ம். எல்லாம் முடிஞ்சது.’

‘அப்புறம் என்ன யோசிக்கிறீங்க?’ என்று கேட்டார் சத்தியசீலன்.

‘அடுத்ததா பொறக்கப்போற குழந்தையுடைய வீட்டுக்கு எப்படி போனா சீக்கிரமா போகலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்.’

‘சரிசரி. அதெல்லாம் இருக்கட்டும். அந்தக் குழந்தையுடைய தலையில என்ன எழுதனீங்க? அதை முதல்ல சொல்லுங்க.’

‘அதெல்லாம் எதுக்கு உனக்கு? பேசாம வழியை விடு.’

‘உள்ள போகறதுக்கு முன்னால திரும்பி வந்து சொல்றேன்னு வாக்கு கொடுத்திட்டு போயிருக்கீங்க, ஞாபகம் இருக்குதில்ல? இப்ப சொல்லமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? ஒரு கடவுளே இப்படி சொன்ன வார்த்தையை மீறி நடக்கலாமா?’

‘சொல்றதால எனக்கு ஒன்னும் கஷ்டமில்லை. ஆனா அதைத் தெரிஞ்சிகிட்டு நீ என்ன செய்யப்போற?’ என்று பிரும்மா நிதானமாக குரலில் அவரிடம் கேட்டார்.

‘ஏதோ ஒரு ஆர்வம். அவ்வளவுதான்.’

‘அப்படியா?’ என்று ஒரு பெருமூச்சு விட்டார் பிரும்மா. பிறகு ‘சரி, சொல்றேன். கேட்டுக்கோ. ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கும். ஆனா எதிர்காலத்துல அவளுக்கு உடலை வித்து வாழற வாழ்க்கைதான் அமையும்னு எழுதியிருக்கேன்’ என்றார்.

அதைக் கேட்டு சத்தியசீலன் பதறினார். ‘என்ன இது கடவுளே? ஒரு பொண்ணோட தலையில இப்படி எழுதலாமா? எழுதறதுக்கு முன்னால கொஞ்சம் யோசிக்க வேணாமா?’ என்று சங்கடத்தோடு கேட்டார்.

பிரும்மா ஒருகணம் அமைதியாக நின்றிருந்தார். ‘இங்க பாரு. இதுல உணர்ச்சிவசப்படறதுல ஒரு அர்த்தமும் இல்லை. ஒரு நாளைக்கு ஆயிரம் குழந்தைங்க பிறக்குது. அந்த ஆயிரம் பேருடைய தலையிலயும் நான் எதையாவது எழுதியாவணும். நான் எதையும் திட்டம் போட்டு செய்யறதில்லை. பக்கத்துல போகும்போது என் கைக்கு என்ன வருதோ அதை எழுதிட்டு வந்துருவேன்’ என்றார்.

‘சரி, அது எப்படியாவது இருந்துட்டு போகட்டும். இப்ப, எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?’ என்று கேட்டார் சத்தியசீலன்.

‘உனக்கா? உனக்கு என்ன உதவி?’

‘இப்ப அந்தக் குழந்தை தலையில எழுதிட்டு வந்தேன்னு சொன்னிங்களே, தயவுசெஞ்சி அதை உடனடியா மாத்தி ஏதாவது நல்ல விதமா எழுதுங்க.’

‘ஐயையோ. அதெல்லாம் நடக்காது. ஒரு தரம் எழுதனத மாத்தி எழுதக்கூடிய அதிகாரம்லாம் எனக்கு இல்லை.’

‘அதனால என்ன? முதல்முறையா ஒரு முயற்சி செஞ்சி பாருங்க. நல்லபடியா மாறினா நல்லதுதான?’

‘அதெல்லாம் நடக்கவே நடக்காது. குழந்தை தலையில எழுதினது எழுதினதுதான். அதுதான் அதன் தலையெழுத்து.’

சத்தியசீலன் எதுவும் பேசாமல் பிரும்மாவையே ஒருகணம் பார்த்தார்.

‘அந்தக் குழந்தையுடைய தலையிலதான் அப்படி எழுதிட்டிங்க. சரி, அது போகட்டும். ஏற்கனவே ரெண்டு பசங்க பொறந்து வளர்ந்திருக்கானுங்களே, அவனுங்க தலையில என்ன எழுதியிருக்கீங்க? அதையாவது நல்லவிதமா எழுதியிருக்கிங்களா? இல்லை, அதையும் இப்படி கோணல்மாணலா எழுதியிருக்கிங்களா?’ என்று கேட்டார் சத்தியசீலன்.

பிரும்மா ஒரு பதிலும் சொல்லாமல் சத்தியசீலனையே பார்த்தபடி சிலை போல நின்றார்.

‘என்ன, நான் கேட்டுட்டே இருக்கேன். நீங்க ஒரு பதிலும் சொல்லாம ஏன் நிக்கறீங்க?’

‘சொல்லிக்கற மாதிரி இல்லை. அதனாலதான் அமைதியா இருக்கேன்.’

அதைக் கேட்டதும் சத்தியசீலன் ஒருகணம் உறைந்ததுபோல ஆனார்.

‘பெரியவன் தலையெழுத்து என்ன?’

‘அவன் எதிர்காலத்துல மாட்டுவண்டி ஓட்டித்தான் பொழைக்கணும்.’

‘சின்னவன் தலையெழுத்து?’

‘கூடையில காய்கறியும் கீரையும் தூக்கி எடுத்தும்போய் தெருத்தெருவா அலைஞ்சி திரிஞ்சி வித்து பொழைக்கணும்.’

‘இது என்ன நியாயம் கடவுளே? எல்லாருடைய தலையெழுத்தையும் இப்படி ஏடாகூடமா எழுதி, நல்லா இருக்கற குடும்பத்தை நாசமாக்கிட்டிங்களே?’

மனவேதனையோடு கேட்டார் சத்தியசீலன். பிரும்மா ஒரு பதிலும் சொல்லாமல் எங்கோ பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தார். இனிமேல் அவரிடம் பேசி எந்தப் பயனும் இல்லை என்பதை சத்தியசீலன் புரிந்துகொண்டார். அதனால் அமைதியோடு ஒருபுறமாக நகர்ந்து அவர் செல்வதற்கான வழியை விட்டார். பிரும்மா அங்கிருந்து வேகவேகமாக நடக்கத் தொடங்கினார்.

ஏதோ நினைவுக்கு வந்தவராக ‘ஒரு நிமிஷம்’ என்று பிரும்மாவை நிறுத்தினார் சத்தியசீலன். பிரும்மா நின்று அவரைத் திரும்பிப் பார்த்தார்.

‘ஒரு காலம் வரும். இப்படி எழுதிட்டமேன்னு அன்னைக்கு நீங்க வருத்தப்படுவீங்க. போய் வாங்க’ என்றார் சத்தியசீலன்.

‘என்ன சொல்றே நீ?’ என்று குழப்பத்துடன் கேட்டார் பிரும்மா. ‘இப்ப இருக்கற நிலைமையில உங்ககிட்ட எது சொன்னாலும் புரியாது. எதிர்காலத்துல நடக்கும்போது தானா நீங்க புரிஞ்சிக்குவீங்க. போய்வாங்க’ என்றார் சத்தியசீலன்.

பிரும்மாவுக்கு சத்தியசீலன் குறிப்பிடும் அம்சம் புரியவில்லை. அங்கேயே நின்று சத்தியசீலனிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள அவருக்கு நேரமும் இல்லை. அடுத்த குழந்தையை நோக்கிச் செல்ல வேண்டிய அவசரம் அவரை உந்தித் தள்ளியது. ‘சரி, நான் கெளம்பறேன்’ என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.

மீண்டும் இருள் சூழ்ந்த திண்ணைக்குத் திரும்பி வந்து உட்கார்ந்தார் சத்தியசீலன். அவருக்கு உறக்கமே வரவில்லை. தன்னால் தடுத்து நிறுத்தமுடியாதபடி, தன் கண்முன்னாலேயே இப்படி ஒரு செயல் நடந்துவிட்டதே என பொங்கிக்கொண்டே இருந்தது அவர் மனம்,

அதிகாலை நேரத்தில் எழுந்து சென்று குளக்கரையில் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு நீராடிவிட்டு வீட்டுக்குத் திரும்பிவந்தார் சத்தியசீலன். ஈஷ்வரப்பா அவருக்கு சாப்பிடுவதற்கு தட்டில் ரொட்டிகளை வைத்து எடுத்துக்கொண்டு வந்து தந்தார். குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, இன்னொரு தட்டில் சூடான போளியை வைத்து எடுத்துவந்தார்.

அவர் சாப்பிட்டு முடித்ததும், வழியில் சாப்பிடுவதற்காக ரொட்டிகளை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி எடுத்துவந்து கொடுத்தார்.

‘குழந்தைக்கு உங்க வாயால ஒரு நல்ல பேர் சொல்லணும். உங்க ஞாபகமா அதையே வச்சிடறேன்’ என்றார் ஈஷ்வரப்பா. அதைக் கேட்டு சத்தியசீலன் சிறிது நேரம் யோசித்தார். பிறகு ‘மல்லின்னு வைங்க. நல்ல பேரு’ என்றார். ‘மல்லி மல்லி’ என்று இரண்டு மூன்று தரம் மனத்துக்குள்ளேயே அழைத்துப் பார்த்துவிட்டு ‘ரொம்ப நல்லா இருக்குது. போயிட்டு வாங்க. நன்றி’ என்று விடை கொடுத்தார்.

‘குழந்தையை நல்லபடியா பார்த்துக்குங்க’ என்று சொல்லிவிட்டு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சொந்த ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினார் சத்தியசீலன்.

திரும்பிவந்த சத்தியசீலனை ஊரே கூடி வரவேற்றது. வயதில் சிறியவர்கள் அவருடைய காலில் விழுந்து வணங்கினார்கள். சத்தியசீலன் அனைவருக்கும் ஆசி வழங்கினார். கங்கைநீர் அடங்கிய செம்புகளை அவரோடு நெருங்கிப் பழகும் குடும்பங்களுக்குக் கொடுத்தார். திண்ணைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் அவருடைய பிரயாண அனுபவங்களைச் சொல்லும்படி கேட்டுக்கொண்டனர். எவ்வளவு முறை சொன்னாலும் அலுக்கவே அலுக்காத அனுபவக்கதைகளை அவர் அந்தப் பிள்ளைகளுக்குச் சொன்னார்.

அடுத்த நாளே பள்ளிக்கூடம் தொடங்கிவிட்டது. மாதக்கணக்கில் நின்று போயிருந்த பாடங்களை அவர் மீண்டும் நடத்தினார்.

அம்மா இல்லாத வீடு தொடக்கத்தில் சத்தியசீலனுக்கு வெறுமையும் தனிமையும் சூழ்ந்த ஒன்றாக இருந்தது. அம்மா நினைவுகள் அவரை வாட்டியெடுத்தன. நாளடைவில் அவை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட, அந்தத் தனிமையும் அவருக்குப் பழகிவிட்டது.

அடுத்த ஆண்டில் இன்னொரு முறை காசிக்குப் போய்வந்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. எதிர்பாராத விதமாக, அவர் ஏரிக்கரையிலிருந்து திரும்பிவரும் சமயத்தில் ஒரு மாடு ஓடிவந்து அவரை பின்பக்கமாக தாக்கி வீழ்த்திவிட்டது. காயம் காரணமாக அவர் படுக்கையிலேயே இரண்டு மாதங்கள் கழிக்க வேண்டியிருந்ததால், அவரால் கிராமத்தைவிட்டு எங்கேயும் நகரமுடியாமல் போய்விட்டது.

அதற்கு அடுத்த ஆண்டில் பள்ளிக்கூடத்தின் கூரையை புதிதாக மாற்றும் வேலை வந்துவிட்டது. பழைய விழலையும் கீற்றுகளையும் எடுத்துவிட்டு, முற்றிலும் புதிதாக கீற்றுகளைப் பரப்பி விழலடிக்க வேண்டியிருந்தது. அந்த வேலையின் காரணமாக அந்த ஆண்டின் விடுப்புக்காலம் கழிந்துவிட்டது. அவருடைய காசித்திட்டம் நடைபெற வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இப்படி சில சில்லறைக்காரணங்களால் அவருடைய பயணம் நிகழாமலேயே போனது. குறைந்தபட்சம் கர்நாடக ராஜ்ஜியத்தின் எல்லை வரைக்கும் சென்று ஈஷ்வரப்பாவைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று சிற்சில சமயங்களில் நினைத்தார். ஆனால் அதற்குக்கூட வாய்ப்பில்லாதபடி சூழல் அமைந்திருந்தது.

பல இரவுகளில் கனவுகளில் அக்குழந்தைகளின் முகங்களைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்துவிடுவார் சத்தியசீலன். அந்தக் குடும்பம் எப்படி இருக்கிறதோ, அந்தப் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்களோ, அந்தப் பெண் குழந்தை எப்படி இருக்கிறதோ, பிரும்மன் எழுதிய தலையெழுத்துப்படி நடந்து அந்தக் குடும்பநிலை சரிந்திருக்குமோ என்றெல்லாம் எதைஎதையோ நினைத்துக் குழம்புவார். தூக்கம் வராமல் புரண்டுகொண்டே இருப்பார். பிறகு ஏதோ ஒரு தருணத்தில் தன்னை மீறிய களைப்பில் தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்.

ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. அவருடைய பயணத்திட்டம் ஆழ்மனத்திலேயே ஒடுங்கிவிட்டது.

சத்தியசீலனுக்கு வயதாவதை முன்னிட்டு, அவருக்கு உதவியாக ஊர் நிர்வாகம் அந்தப் பள்ளிக்கு ஒரு புதிய இளைஞரை ஆசிரியராக நியமித்தது. பல வேலைகளை அந்தப் புதிய இளைஞர் சத்தியசீலனோடு பகிர்ந்துகொண்டார்.

அந்த ஆண்டு இறுதியில் கர்நாடக ராஜ்ஜியத்தின் எல்லையோர கிராமம் வரைக்கும் சென்று ஈஷ்வரப்பாவைச் சந்தித்துவிட்டு வரவேண்டும் என அவர் நினைத்தார். எல்லாப் பொறுப்புகளையும் அந்தப் புதிய இளைஞர் ஏற்றுக்கொண்டு ‘எந்தக் கவலையும் இல்லாம நீங்க போய் பார்த்துட்டு வாங்க. பள்ளிக்கூடத்தை நான் பார்த்துக்கறேன்’ என்று பதில் சொன்னார். அந்தப் பதில் சத்தியசீலனுக்கு பெரிய ஆறுதலாகவும் தைரியமாகவும் இருந்தது.

அடுத்த வாரமே மாற்று உடுப்புகளைக் கொண்ட பயண மூட்டையோடு அந்த ஊரிலிருந்து புறப்பட்டார் சத்தியசீலன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்றது போலவே, வழியில் தென்பட்ட சத்திரங்களில் தங்கி, கிடைத்த உணவைச் சாப்பிட்டு நடந்துகொண்டே இருந்தார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு சத்தியசீலன் ஈஷ்வரப்பாவின் கிராமத்தை அடைந்தார். ஊரின் அமைப்பு வெகுவாக மாறியிருந்தது. ஈஷ்வரப்பாவின் வீடு இருந்த இடத்தை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஈஷ்வரப்பா என்னும் பெயரே பலருக்குத் தெரியவில்லை. அவர் எண்ணெய் வியாபாரி என்பது நினைவுக்கு வந்ததும் கடைத்தெருவில் அந்த அடையாளத்தைச் சொல்லி விசாரித்தார். முதலில் இரண்டு மூன்று பேர்கள் தமக்குத் தெரியாது என்பதன் அடையாளமாக உதட்டைப் பிதுக்கினர்.

மரத்தடியில் உட்கார்ந்தபடி சத்தியசீலனுடைய விசாரிப்புகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் கையைத் தட்டி ஓசையெழுப்பி அருகில் வருமாறு சொன்னார். ‘நீங்க யாரு? ஈஷ்வரப்பாவைப் பத்தி நீங்க ஏன் விசாரிக்கறீங்க?’ என்று கேட்டார். ‘இருபது வருஷத்துக்கு முன்னால நான் இந்த ஊருக்கு வந்த சமயத்துல அவரு வீட்டுலதான் நான் தங்கியிருந்தேன். அதுக்கப்புறம் இப்பதான் எனக்கு இந்த ஊருக்கு வரக்கூடிய வாய்ப்பு கிடைச்சது. பார்த்து பேசிட்டு போகலாம்ங்கற ஆசையிலதான் கேட்டேன்’ என்று பதில் சொன்னார் சத்தியசீலன்.

அந்தப் பெரியவர் சத்தியசீலனை தனக்கு அருகில் வந்து உட்காரச் சொன்னார். பிறகு நாக்கு சப்புக்கொட்டியபடி ஈஷ்வரப்பாவைப்பற்றி சொல்லத் தொடங்கினார். ‘நல்லா இருந்த குடும்பம் அது. கண்ணுமுன்னாலயே ஒரு கோபுரம் சரிஞ்சி விழறமாதிரி விழுந்து மண்ணோடு மண்ணா போயிட்டுது. ஒரு விபத்துல எண்ணெய் பீப்பாய்ங்களை ஏத்திட்டு போன வண்டிங்க கவுந்து எல்லாம் மண்ணோடு மண்ணா போச்சி. மாடுங்களும் செத்துடுச்சி. வண்டிங்களும் சுக்குநூறா நொறுங்கி போயிடுச்சி. வீட்டை வித்து வியாபாரிங்களுக்கு அரைகுறையா கொடுத்து கடனை அடைச்சாரு ஈஷ்வரப்பா. அதுக்கப்புறம் ஊரைவிட்டு வெளியே போயி குடிசை போட்டுகிட்டு வாழ்ந்தாரு’ என்றார்.

‘ஐயோ.’

‘என்ன சொல்ல? பட்ட கால்லயே படும், கெட்ட குடியே கெடும்னு எந்தப் புண்ணியவான் சொன்னானோ, அந்த வார்த்தை நூத்துக்கு நூறு சத்தியம். அவர் தலையெழுத்து அப்படி. அதுக்கப்புறம் அவரு குடும்பம் தலைநிமுந்து வர முடியலை. அவரும் தவறிட்டாரு. அவரு பொஞ்சாதியும் போயிட்டாங்க. குடும்பமே சின்னாபின்னமாயிடுச்சி.’

‘பிள்ளைங்க?’

‘அவருக்கு ரெண்டு பசங்க. ஒரு பொண்ணு. பெரிய பையன் சந்தையில மாட்டுவண்டி ஓட்டறான். இந்த ஊரு சரக்கை அந்த ஊருக்கு கொண்டுபோய் கொடுக்கறது. அந்த ஊரு சரக்கை இந்த ஊருக்கு எடுத்துட்டு வரது. அதான் அவன் வேலை. என்னமோ அவன் வாய்க்கும் வயித்துக்கும் சம்பாதிச்சிக்கிறான்.’

‘சின்னவன்?’

‘அவன் கதை இன்னும் மோசம். கூடையில காய்கறிகளை சுமந்து எடுத்துட்டு போய் தெருத்தெருவா காய் வாங்கலையோ காய் வாங்கலையோன்னும் கூவி வித்துட்டு வருவான்.’

கேட்கக்கேட்க சத்தியசீலனின் மனம் பதறியது.

‘பொண்ணு?’ என்று தயக்கத்தோடு கேட்டார்.

‘அதைப்பத்தி சொல்றதுக்கே எனக்கு மனசு கூசுது. நீங்க கேக்கறிங்களேன்னு சொல்றேன். இந்த ஆம்பளைப் பசங்களாவது ஏதோ தனக்குத் தெரிஞ்ச சின்னச்சின்ன வேலைகளை செஞ்சி பொழைக்கறானுங்க. இந்தப் பொண்ணும் அதே மாதிரி ஏதாவது ஒரு சின்ன வேலை செஞ்சி பொழைக்கலாம் இல்லையா? ஆனா அந்தப் பொண்ணுக்கு உடம்பு வளைஞ்சி வேலை செய்யறதுல விருப்பம் இல்லை. தினந்தினமும் உடம்பை வித்து சம்பாதிச்சி சாப்புடுது. எல்லாம் தலையெழுத்து.’

மேற்கொண்டு எதுவும் கேட்கத் தோன்றாமல் தலைகவிழ்ந்த நிலையில் அமர்ந்திருந்தார் சத்தியசீலன்.

‘நல்ல வேளை. எண்ணெய் வியாபாரி இந்த அலங்கோலத்தையெல்லாம் பார்க்காம சீக்கிரமா போய் சேர்ந்துட்டாரு. அவரு செஞ்ச அதிர்ஷ்டம் அது.’

அவர் சொன்ன சொற்கள் காதில் விழுந்தாலும் காதில் விழாததுபோலவே இருந்தார் சத்தியசீலன். சிறிது நேரத்துக்குப் பிறகு ‘அவுங்க வீட்டுக்கு எப்படி போகணும்? வழி சொல்றீங்களா? இவ்ளோ தொலைவு வந்துட்டேன், ஒருமுறை பார்த்துட்டு போறேன்’ என்றார். அந்தப் பெரியவரும் ஊரைவிட்டு வெகுதொலைவு தள்ளியிருக்கும் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லும் வழியை விளக்கமாகச் சொன்னார். உடனே சத்தியசீலன் அந்தப் பெரியவரிடம் நன்றி சொல்லிவிட்டு அந்த வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

அவர் போய்ச் சேர்ந்த நேரத்தில் வீடு திறந்திருந்தது. ஆறேழு பிள்ளைகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர். இரு பெண்மணிகள் வாசலில் உட்கார்ந்து அரிசி புடைத்துக்கொண்டிருந்தனர். சத்தியசீலன் அவர்களிடம் தன்னைப்பற்றி சொல்லிவிட்டு, ருத்ரப்பா, மல்லப்பா இருவரைப்பற்றியும் விசாரித்தார். ‘ரெண்டு பேரும் சந்தைக்குப் போயிருக்காங்க. ராத்திரி நேரத்துலதான் வருவாங்க’ என்றனர் அவர்கள்.

‘நீங்க?’ என்று கேட்டார் சத்தியசீலன்.

‘நான் பெரியவருடைய மனைவி. அவ சின்னவருடைய மனைவி. அவுங்க எல்லாரும் எங்க புள்ளைங்க.’

சத்தியசீலன் அவர்களிடம் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டார். பிறகு அங்கேயே மரத்தடியில் அமர்ந்து அவர்களுடன் பழைய கதைகளைப் பேசத் தொடங்கினார்.

இரவு கவிழ்ந்து வெகு நேரத்துக்குப் பிறகு ருத்ரப்பா வண்டியை ஓட்டிக்கொண்டு நிறுத்திவிட்டு மாடுகளை அவிழ்த்து முளைக்குச்சியில் கட்டிவிட்டு வந்தான். அவனைத் தொடர்ந்து விற்பனையாகாத காய்கறிகளையும் கீரைக்கட்டுகளையும் கூடையில் சுமந்தபடி வீட்டுக்கு வந்தான் மல்லப்பா.

இருவரும் களைப்பாக இருந்தனர். வீட்டை நெருங்கியதும்தான் தம் குடிசையின் வாசலில் ஒரு பெரியவர் உட்கார்ந்து உரையாடிக்கொண்டிருப்பதை அவர்கள் கவனித்தனர். ‘யாரா இருக்கும்?’ என்று யோசனையில் மூழ்கியபடியே வேகமாக வந்தனர்.

அவர்கள் நெருங்கி வந்ததும் ‘என்ன ருத்ரப்பா, மல்லப்பா? ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?’ என்று பெயர் சொல்லி விசாரித்தார் சத்தியசீலன். ஆனால் அவர்களால் சத்தியசீலனை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு சத்தியசீலனே அவர்கள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்ததையும் அவர் வந்த அன்றுதான் அவர்களுக்கு ஒரு தங்கை பிறந்ததையும் சொல்லி நினைவூட்டினார். தங்கை பிறந்த சமயம் என்றதும் அவர்களுக்கு நினைவு வந்துவிட்டது.

‘இப்ப ஞாபகம் வந்துட்டுது. நீங்கதான கங்காதீர்த்தம் கொண்டுவந்து கொடுத்தீங்க?’ என்று கேட்டார் ருத்ரப்பா.

அதைக் கேட்டு வியப்பில் மூழ்கினார் சத்தியசீலன். ‘அது மட்டும் எப்படி உனக்கு சரியா ஞாபகம் இருக்குது?’ என்று கேட்டார்.

‘எங்க அம்மாவும் அப்பாவும் அதை தங்கம் போல கடைசிவரைக்கும் பாதுகாப்பா வச்சிருந்தாங்க. அவுங்க சாகற நேரத்துல அந்த செம்பிலேர்ந்துதான் தீர்த்தம் எடுத்து நான் அவுங்களுக்குக் கொடுத்தேன்.’

‘சரி, உன் தங்கச்சி எங்க? நான் அவளைப் பாக்கணும்.’

‘அவ எங்க கூட இல்லை. அவ வேற மாதிரி தொழில் செய்யறா. அதனால அவ வேற ஒரு இடத்துல இருக்கா’ என்றான் ருத்ரப்பா.

‘எந்தத் தொழிலா இருந்தா என்ன, உங்களைப் பார்த்து பேசினமாதிரி நான் அவளையும் பார்த்துப் பேசணும்’ என்றார் சத்தியசீலன்.

‘சரி வாங்க’ என்றபடி ருத்ரப்பாவும் மல்லப்பாவும் அவரை அழைத்துக்கொண்டு அவளுடைய வீட்டுக்குச் சென்றார்கள். இரண்டு தெரு தள்ளி இன்னும் ஒதுக்குப்புறமான இடத்தில் அவளுடைய வீடு இருந்தது.

அவர்கள் போய்ச் சேர்ந்த நேரத்தில் மல்லி வீடு சாத்தியிருந்தது. சிறிது நேர தயக்கத்துக்குப் பிறகு கதவைத் தட்டினான் ருத்ரப்பா. சில நொடிகளுக்குப் பிறகு ஓர் இளம்பெண் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். ருத்ரப்பாவையும் மல்லப்பாவையும் பார்த்ததும் ‘ஆகா, வாங்க வாங்க. ரெண்டு அண்ணன்களும் ஒன்னா வந்திருக்கீங்க? என்ன விசேஷம்? ஏன் அங்கயே நின்னுட்டீங்க?’ என்று வரவேற்றாள். அவர்கள் இருவரும் சிரித்துக்கொண்டே சத்தியசீலனை அவளுக்கு அறிமுகப்படுத்தினார்கள். மல்லி அவருக்கு வணக்கம் சொன்னாள்.

அந்த வீட்டுக்கூடத்தில் நடமாட்டம் எதுவும் இல்லை. எல்லோரும் நீண்ட நேரம் நினைவுக்கு வந்த பழைய கதைகளைப் பேசினார்கள்.

‘நான் ஒரு முக்கியமான விஷயத்தை உங்க எல்லோருகிட்டயும் பேசணும். நீங்க மூனு பேரும் இப்படி கஷ்டப்படறதை என்னால பார்க்கமுடியலை. நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன். நான் சொல்றபடி நீங்க கேக்கணும். ஒரு நாள் இல்லை, ரெண்டு நாள் இல்லை. நானே திரும்பி வந்து உங்ககிட்ட சொல்றவரைக்கும் அந்த வார்த்தையை மீறாம நடந்துக்கணும். அப்படி செஞ்சீங்கன்னா, உங்க நிலைமை தானா மாறும்.’

ஒரு கணம் பேச்சை நிறுத்திவிட்டு அவர்களுடைய முகங்களில் தெரிந்த வெளிப்பாடுகளைக் கவனித்தார் சத்தியசீலன். அவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டதும் தொடர்ந்து சொல்லத் தொடங்கினார்.

‘ருத்ரப்பா, முதல்ல நீ கேளு. நாளைக்கு சந்தைக்குப் போனதும், வேலையையெல்லாம் முடிச்சிட்டு, வண்டியையும் மாட்டையும் நல்ல விலைக்கு அங்கயே யாருகிட்டயாவது வித்துட்டு பணத்தோடு வீட்டுக்கு வந்துடணும்.’

‘ஐயோ, இது என்ன பைத்தியக்காரத்தனமா இருக்குது. வண்டியும் மாடும் இல்லைன்னா நான் எப்படி பொழைக்கமுடியும்? புதுசா ஒரு வண்டிக்கும் மாட்டுக்கும் எங்க போவேன்?’ என்று பதறினான் ருத்ரப்பா.

‘பதறாம நான் சொல்றத கேளு ருத்ரப்பா. ஒன்னும் ஆகாது. ஏதாவது ஆச்சின்னா, என்கிட்ட பணம் இருக்குது. உனக்கு புதுசா ஒரு வண்டி இல்லை, ரெண்டு வண்டி வாங்கிக் கொடுப்பேன், போதுமா? என் மேல நம்பிக்கை வச்சி நான் சொல்றபடி செய்.’

‘சரி’ என்று ஏற்றுக்கொண்டான் ருத்ரப்பா.

பிறகு சத்தியசீலன் இரண்டாவது பிள்ளையான மல்லப்பாவின் பக்கம் திரும்பி ‘இங்க பாரு, நீயும் நாளைக்கு வியாபாரத்தை முடிச்சிட்டு திரும்பி வரும்போது மிச்சம் எதையும் எடுத்துட்டு வராத. நஷ்டமானாலும் பரவாயில்லைன்னு, யாருக்காவது கூடையோடு வந்த விலைக்கு வித்துட்டு பணத்தை மட்டும் எடுத்துகிட்டு வந்துடு’ என்றார்.

‘ஐயோ, இப்படி சொன்னா எப்படி? கூடைதான எல்லாத்துக்கும் ஆதாரம்? அது இல்லைன்னா அடுத்தநாள் வியாபாரத்தை எப்படி கவனிக்கிறது?’

‘கவலைப்படாம நான் சொல்றபடி செய். ஒன்னும் ஆகாது. ஏதாவது ஆச்சின்னா, என்கிட்ட பணம் இருக்குது. உனக்கு புதுசா ஒரு கூடை இல்லை, ரெண்டு கூடை வாங்கிக் கொடுப்பேன், போதுமா? என் மேல நம்பிக்கை வச்சி நான் சொல்றபடி செய்’ என்றான் சத்தியசீலன்.

‘சரி’ என்று சம்மதத்துக்கு அடையாளமாக தலையை அசைத்து ஏற்றுக்கொண்டான் மல்லப்பா.

கடைசியாக மல்லியின் பக்கம் திரும்பினார் சத்தியசீலன். ‘இங்க பாரு மல்லி. நான் கேக்கற கேள்விக்கு வெளிப்படையா பதில் சொல்லணும். புரியுதா? உன்கிட்ட வரக்கூடிய ஆளு உனக்கு என்ன கொடுப்பான்?’ என்று கேட்டார்.

மல்லி ஒருகணம் தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தாள். பிறகு ஒரு பெருமூச்சோடு ‘சில பேரு பத்துவெள்ளி இருபது வெள்ளி கொடுப்பாங்க. இல்லாதவன் அஞ்சி வெள்ளி கூட கொடுத்துட்டு போவான். எல்லாமே நேரத்தைப் பொறுத்தது’ என்று தயங்கித் தயங்கிச் சொல்லிமுடித்தாள்.

‘இங்க பாரு மல்லி. இதுல தயக்கமே வேணாம். நீ பகிரங்கமாவே சொல்லு. ஒரு ஆளுக்கு நூறு வெள்ளின்னு சொல்லு. அதான் உன் விலை. அந்த விலையைக் கொடுக்க தயாரா இருக்கறவன் நிச்சயம் வருவான்’ என்றார் சத்தியசீலன்.

‘என்ன சொல்றீங்க? நூறு வெள்ளியா? இந்த ஊருல யாரு கொடுப்பாங்க?’

‘நீயே வாயப் பொளந்தா எப்படி மல்லி.’

‘அப்படி சொன்னா, வழக்கமா வர ஆளுங்ககூட வராம போயிட்டா?’

‘அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது. என் பேச்சை நம்பு. இன்றுமுதல் நூறு வெள்ளின்னு கதவுல எழுதி வச்சிடலாம். யாரா இருந்தாலும் நூறு வெள்ளியை எண்ணி வச்சிட்டுத்தான் உள்ள வரணும். அப்படி ஒரு ஏற்பாட்ட நீ இந்த நிமிஷத்துல இருந்தே செய்யணும்.’

‘ஏதாவது ஏடாகூடமா ஆயிடுச்சின்னா?’

‘எதுவும் ஆகாது. என் பேச்சை நம்பு. நான் இந்த ஊருலயே சத்திரத்துல பத்து நாள் தங்கியிருப்பேன். நிலைமை எப்படி மாறுதுன்னு பார்த்துட்டுத்தான் என் சொந்த ஊருக்குத் திரும்புவேன்.’

‘சரி.’

‘இன்னொரு முக்கியமான விஷயம். கையில பணம் பொரள ஆரம்பிச்சதும் உங்க குணம் மாறிடக் கூடாது. குருவி மாதிரி சேர்த்துவைக்கணும். உங்க அப்பா வித்த வீட்டை நீங்க வாங்கணும். இல்லைன்னா, அதேபோல ஒரு வீட்டை கட்டணும். அதுதான் உங்க லட்சியமா இருக்கணும். வேற எந்த எண்ணமும் உங்க மனசுல வரக்கூடாது. புரியுதா?’

‘சரி.’

அதற்குப் பிறகு ருத்ரப்பாவும் மல்லப்பாவும் தம் குடிசைக்குத் திரும்பினார்கள். சத்தியசீலன் சத்திரத்துக்குத் திரும்பினார்.

எல்லோரும் புறப்பட்டுச் சென்றதும் மல்லி தனிமையில் உட்கார்ந்திருந்தாள். அவள் மனம் சத்தியசீலனின் சொற்களைக் கேட்பதா, வேண்டாமா என்று குழம்பித் தவித்தது. சத்தியசீலனின் பேச்சைக் கேட்டு வழக்கமான வாடிக்கையாளர்களை இழந்துவிடக் கூடாது என ஒருகணம் தோன்றியது. அடுத்த கணமே தம் குடும்பத்தின் மீது அக்கறையோடு ஒருவர் சொல்லும் ஆலோசனையைப் புறக்கணிக்கக்கூடாது என்றும் தோன்றியது. ஒரு நிலையான முடிவுக்கு வரமுடியாமல் எதைஎதையோ கற்பனையாக நினைத்துக் குழம்பினாள்.

கடைசியில் எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ‘நூறு வெள்ளிப்பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் உள்ளே வரலாம்’ என்று ஒரு பலகையில் எழுதி கதவில் தொங்கவிட்டாள். பிறகு கதவைச் சாத்திக்கொண்டு வீட்டுக்குள் சென்று, யாராவது வரக்கூடும் என்று காத்திருக்கத் தொடங்கினாள்.

நள்ளிரவு வரைக்கும் ஒருவரும் வரவில்லை. அதற்குப் பிறகு யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. துணிச்சலை வரவழைத்துக்கொண்டு மல்லி உறுதியான குரலில் ‘நூறு வெள்ளிப்பணம்’ என்று சொன்னாள். மறுகணமே ‘கொண்டு வந்திருக்கேன். கதவைத் திற’ என்ற பதில் வந்தது. அவள் எழுந்து சென்று கதவைத் திறந்து கையை நீட்டினாள். அவன் நூறு வெள்ளி அடங்கிய துணிமுடிச்சை அவளிடம் நீட்டினான். அவள் அந்த முடிச்சைத் திறந்து பார்த்து அது வெள்ளிதான் என்பதை உறுதிசெய்துகொண்டாள். பிறகு ‘வாங்க, வாங்க’ என்று நேசமான புன்னகையோடு உள்ளே அழைத்துச் சென்றாள்.

அடுத்தநாள் காலையில் ருத்ரப்பா வண்டியை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் சென்றான். பக்கத்து கிராமங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் வேலை கிடைத்தது. எல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் நேரத்தில் வண்டியையும் மாடுகளையும் ஒரு வியாபாரியிடம் நல்ல விலைக்கு விற்றுவிட்டுத் திரும்பினான். அவனைப்போலவே மல்லப்பாவும் வியாபாரத்தையெல்லாம் முடித்துக்கொண்டு காய்கறிகளோடு கூடையையும் விற்றுவிட்டுத் திரும்பினான். இருவரும் தாம் கொண்டுவந்த பணத்தை மனைவியிடம் கொடுத்து பாதுகாப்பாக வைக்கச் சொன்னார்கள். அடுத்தநாள் காலையில் என்ன செய்வது என்று புரியாமல் பதற்றத்தோடு உறங்கச் சென்றனர்.

விடிந்ததும் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தபோது இருவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. புதிதாக ஒரு வண்டியும் ஒரு ஜோடி எருதுகளும் நின்றிருந்தன. அந்த வண்டியில் ஒரு கூடையும் இருந்தது. இவை எப்படி இங்கே வந்தன என்று அவர்களுக்குப் புரியவில்லை. ஆனாலும் அவற்றைப் பார்த்த பிறகுதான் அவர்கள் நிம்மதியாக உணர்ந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் அந்த மாயம் தொடர்ந்தது. அதைக் கண்டு மூன்று பேரும் பரவசமடைந்தார்கள். சத்திரத்தில் காத்திருக்கும் சத்தியசீலனைச் சந்தித்து அச்செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட பிறகுதான் சத்தியசீலன் நிம்மதியாக உணர்ந்தார்.

ஒருநாள் மூவரும் சேர்ந்து சத்தியசீலனுக்கு விருந்து வைத்தனர். தன் திட்டங்கள் எல்லாம் நினைத்த திசையில் சரியாகச் செல்கிறது என்கிற திருப்தியோடு அவர் அந்த விருந்தில் கலந்துகொண்டார்.

‘ஒருநாளும் பணத்தை வீண்செலவு செய்யாதீங்க. அப்பா காலத்துல இழந்ததை எப்படியாவது நீங்க மறுபடியும் சம்பாதிக்கணும். அது ஒன்னுதான் தற்சமயத்துக்கு உங்க நோக்கமா இருக்கணும். வேற எந்த சிந்தனைக்கும் உங்க மனத்துல இடம் கொடுக்கக்கூடாது.’

விருந்து முடிந்ததும் அவர்கள் பின்பற்றவேண்டிய விஷயங்களை மட்டும் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டு, அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினார் சத்தியசீலன். வரும்போது தங்கிய சத்திரங்களிலேயே தங்கி ஓய்வெடுத்தபடி இரு வாரங்களில் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். ஈஷ்வரப்பாவின் குடும்பம் இனி தலைநிமிர்ந்து நின்றுவிடும் என அவர் மனம் உறுதியாக நம்பியது.

சத்தியசீலனும் இளைய ஆசிரியரும் இணைந்து பாடம் நடத்தும் விதத்தைக் கேள்விப்பட்ட அடுத்தடுத்த கிராமத்தினரும் தம் பிள்ளைகளை கல்வி கற்பதற்காக அந்தப் பள்ளியில் கொண்டுவந்து சேர்த்தனர். இதனால் அந்தப் பள்ளிக்கூடத்தின் பெருமை எங்கெங்கும் பரவத் தொடங்கியது. பள்ளிக்காக இன்னொரு கொட்டகை கட்டியெழுப்பப்பட்டது.

ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. கோடைக்காலம் என்பதால் இரவு நேரத்தில்கூட வீட்டுக்குள் வெப்பம் அதிகமாக இருந்தது. அதனால் கயிற்றுக்கட்டிலை எடுத்துவந்து வாசலில் போட்டுவிட்டு, அதிலேயே படுத்து உறங்குவதை வழக்கமாக வைத்துக்கொண்டார் சத்தியசீலன். வானத்து நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்தபடியே எப்போது உறங்கினோம் என்பது தெரியாமலேயே ஏதோ ஒரு கணத்தில் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.

ஏதோ ஒரு உருவம் தன் காலடிக்கு அருகில் நின்றுகொண்டு தன்னையே உற்றுப் பார்ப்பதுபோல ஓர் எண்ணம் எழுந்ததும், அவருடைய உறக்கம் கலைந்தது. சட்டென எழுந்து உட்கார்ந்தார். சுற்றியும் இருள் அடர்ந்திருந்தது. ஒவ்வொரு இடமாக உற்று உற்றுப் பார்த்தபடி தன் பார்வையை எங்கெங்கும் படரவிட்டார். அவர் சந்தேகப்பட்டபடி ஒரு இடத்தில் கருமையாகவும் அடர்த்தியாகவும் ஒரு நிழல் அசைவது தெரிந்தது. சத்தியசீலன் சட்டென குரலை உயர்த்தி ‘அங்கேயே நில்லுங்க. யார் அது? என்ன வேணும்? எப்படி வந்தீங்க இங்க?’ என்று கேள்விகளை அடுக்கினார்.

அந்த உருவம் பதில் எதுவும் சொல்லவில்லை. பேசாமலேயே அவரை நோக்கி நெருங்கிவந்து அமைதியாக நின்றது. ‘இப்படி பேசாம வந்து நின்னா என்ன அர்த்தம்? யாரு நீங்க, சொல்லுங்க’ என்று மீண்டும் சத்தமாகக் கேட்டார் சத்தியசீலன். அதே கணத்தில் அந்த உருவ அமைப்பு அவர் யார் என்பதை அவர் ஆழ்மனம் கண்டுபிடித்துவிட்டது.

அக்கணமே பணிவோடு எழுந்து நின்றபடி ‘பிரும்மாவா? என்ன இது? இந்த நடுநேரத்துல? இந்த கிராமத்துல யாருக்காவது குழந்தை பிறக்கப்போவுதா? தலையெழுத்து எழுதறதுக்காக வந்தீங்களா?’ என்று அடுத்தடுத்து பல கேள்விகளைக் கேட்டார் சத்தியசீலன். பிரும்மா ஒரு பதிலையும் சொல்லாமல் மெளனமாக பெருமூச்சு விட்டபடி சத்தியசீலன் படுத்திருந்த கட்டிலில் வந்து உட்கார்ந்தார்.

‘சொல்லுங்க பிரும்மா. என்ன பிரச்சினை?’ என்று அமைதியாகக் கேட்டார் சத்தியசீலன்.

‘எல்லாத்துக்கும் நீதான் பிரச்சினை. செய்யறதையெல்லாம் செஞ்சிட்டு இப்படி ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி கேக்கறியே. இது உனக்கே நல்லா இருக்குதா?’

‘நீங்க எதைப்பத்தி சொல்றீங்க, புரியலையே பிரும்மா?’

‘அந்த ஈஷ்வரப்பா குடும்பத்து பிள்ளைங்களை பத்திதான் பேசிட்டிருக்கேன். அன்னைக்கு ஏதோ ஒரு வேகத்துலயும் பெருமையிலயும் அவுங்க தலையில என்ன எழுதியிருக்குதுன்னு உன்கிட்ட சொன்னது ரொம்ப தப்பா போயிடுச்சி. முன்னபின்ன தெரியாதவங்கள பத்தி உனக்கு என்ன அவ்வளவு அக்கறை?’

‘தெரியாதவங்களா? என்னை அன்பா உபசரிச்சி எனக்கு ஒரு வேளை சாப்பாடு போட்டவங்க அவுங்க. அப்புறம் எப்படி தெரியாதவங்களா ஆவாங்க?’

‘அதுக்காக?’

‘நான் அன்னைக்கே உங்ககிட்ட தலையெழுத்த மாத்திடுங்க மாத்திடுங்கன்னு கெஞ்சி கெஞ்சி கேட்டேன். நீங்கதான் முடியவே முடியாதுன்னு போயிட்டீங்க.’

‘அதுக்காக நீ இப்படியா இத்தனை வருஷம் கழிச்சி பழி வாங்குவ?’

‘நான் பழி வாங்கலை பிரும்மா. எனக்குத் தேவைப்பட்ட ஒரு குடும்பம் நல்லபடியா வாழணும்ங்கறதுக்காக ஒரு திட்டத்தை சொல்லிட்டுவந்தேன். அவ்வளவுதான்.’

‘நீ என்னமோ சாதாரணமா சொல்லிட்டு வந்துட்ட. ஆனால் ஒவ்வொருநாளும் நான் படற பாடு நாய்ப்பாடா இருக்குது, தெரியுமா? ஒவ்வொரு நாளும் ஒருத்தனுக்கு புதுசா வண்டிமாடுங்கள வாங்கிட்டு போய் வாசல்ல நிறுத்தணும். இன்னொருத்தனுக்கு கூடை வாங்கி வைக்கணும். அந்தப் பொண்ணுக்கு ஒவ்வொரு நாளும் நூறு வெள்ளி கொடுக்கிற ஆளா ஏற்பாடு செய்யணும். என்னுடைய ஆற்றல் இதுலயே அழிஞ்சிடும் போல இருக்குது. தினந்தினமும் நான் செய்யவேண்டிய வேலையே ஆயிரம் இருக்குது. அதோடு சேர்த்துன் நான் இந்த வேலையையும் பார்க்கவேண்டியதா இருக்குது.’

சத்தியசீலன் உண்மையிலேயே மிகவும் வருந்தினார். ‘தப்பா நினைச்சிக்காதீங்க பிரும்மா. இந்தத் திட்டத்தால உங்களுக்கு இவ்வளவு சங்கடம் சேரும்னு எனக்குத் தோணலை. நல்லா வாழ்ந்த குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துட்டுதே, அதை எப்படியாவது மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டுவரணும்ங்கற எண்ணத்தால நான் அப்படி செஞ்சேன்.’

‘உன் எண்ணமெல்லாம் சரி. நான் அதைக் குறை சொல்லலை. இந்த ஆறு மாசத்துல அவுங்களுக்கு போதும்ங்கற செல்வம் சேர்ந்துடிச்சி. அவுங்க புத்திசாலித்தனமா பொழைச்சாங்கன்னா, இன்னும் ரெண்டு தலைமுறைக்கு ஒரு பிரச்சினையும் இல்லாம வாழலாம். எப்படியாவது இந்த தினசரி கவலையிலேர்ந்து எனக்கு விடுதலை கிடைக்கிறமாதிரி செய்.’

‘இந்த ஒரு வார்த்தை போதும் பிரும்மா. நீங்க புறப்படுங்க. நான் நாளைக்கே கெளம்பிப் போய் தேவையான ஏற்பாடுகளைச் செய்யறேன். உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராம நான் பார்த்துக்கறேன்.’

பிரும்மாவைப் பார்த்து சத்தியசீலன் கைகுவித்து வணங்கினார். ஒருசில நொடிகள் சத்தியசீலனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டு நின்ற பிரும்மா ‘சரி, நான் வரேன்’ என்று புறப்படத் தயாரானார். அப்போது ‘பிரும்மா’ என்று நாக்கு தழுதழுக்க அழைத்தார் சத்தியசீலன். ‘என்ன?’ என்பதுபோல பிரும்மா திரும்பிப் பார்த்தார்.

‘என்னை ஆசீர்வாதம் செய்யுங்க பிரும்மா’ என்று அவர் முன்னிலையில் தலை குனிந்து வணங்கினார். அவருடைய தலைமீது பிரும்மாவின் கை படிந்தது. ‘தீர்க்காயுசா இரு’ என்று சொல்லிவிட்டு பிரும்மா நகர்ந்தார். அடுத்த கணமே அந்த உருவம் பார்வையிலிருந்து மறைந்தது.

மறுநாளே இளம் ஆசிரியரிடம் பள்ளிப்பொறுப்பைக் கொடுத்துவிட்டு, சத்தியசீலன் மீண்டும் ராஜ்ஜியத்தின் எல்லையோர கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். இரு வார பயணத்துக்குப் பிறகு அந்தக் கிராமத்தை அடைந்தார். அன்று இரவே ருத்ரப்பா, மல்லப்பா, மல்லி மூன்று பேரையும் சந்தித்தார்.

‘ருத்ரப்பா, நாளைக்கு சந்தையிலிருந்து திரும்பி வரும்போது நீ வண்டிய விக்கவேணாம். வீட்டுக்கே ஓட்டிகிட்டு வந்துடு. மல்லப்பா, நீயும் கூடையை விக்கவேணாம். வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடு. மல்லி, நீ நாளையிலேர்ந்து வீட்டுக்கு வெளியே அறிவிப்புப் பலகையை வைக்கவேணாம்.’

‘வேற என்ன செய்யறது?’

‘நீ இப்பவும் சின்ன பொண்ணுதான். உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சி உன்ன கட்டிக்க தயாரா இருக்கிற பையனைத் தேடிப் பார்த்து கல்யாணம் செஞ்சிக்க. இதுவரைக்கும் இந்த மாதிரி வாழ்ந்த வாழ்க்கை போதும். இனிமேல புது வாழ்க்கையைத் தொடங்கு.’

‘அப்ப பலகை?’

‘அதை உன் படுக்கை அறைக்குள்ள வச்சிக்கோ. திருஷ்டிப் பூசணிக்காய் மாதிரி அது ஒரு அடையாளமா அப்படியே இருக்கட்டும். புரியுதா?’

‘சரி. நீங்க சொல்றபடியே செய்யறோம்’ என்று மூன்று பேரும் சொன்னார்கள்.

‘நீங்க சேர்த்து வச்சிருக்கிற பணத்துல உங்க அப்பா வாழ்ந்த வீடு விலைக்கு கிடைச்சா வாங்குங்க, இல்லைன்னா அது போல இன்னொரு வீடு கட்டுங்க. ஒத்துமையா வாழுங்க. ஒருநாளும் பேராசைக்கு இடம் கொடுக்காதீங்க. வண்டி ஓட்டறது, காய் விக்கறது எல்லாத்தயும் தொடர்ந்து செஞ்சிகிட்டே இருங்க. அது ஒரு தொழிலா இருக்கட்டும்.’

சத்தியசீலன் சொன்ன சொற்களை அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டனர். அடுத்தநாள் காலையிலேயே சத்தியசீலன் அங்கிருந்து தன் கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர். ஒரு கணம் அவர் மனம் மறைந்துபோன ஈஷ்வரப்பாவை நினைத்துக்கொண்டது. அடுத்த கணம் பிரும்மாவையும் நினைத்துக்கொண்டது. அனைவரையும் நினைக்க நினைக்க அவர் நெஞ்சில் நன்றியுணர்ச்சி பெருகியது. எல்லா நினைவுகளையும் அசைபோட்டபடி உற்சாகமாக நடக்கத் தொடங்கினார்.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *