முன்னொரு காலத்தில் ஒரு சிறிய பிரதேசத்தை ஓர் அரசன் ஆட்சி செய்துவந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். அவர்களுடைய சின்னஞ்சிறிய அரண்மனையில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். அரண்மனையின் பின்பக்கம் அழகான தோட்டம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அங்கே அரசி தன் தோழிகளோடு ஆடிப் பாடி பேசி பொழுதுபோக்கி வந்தாள்.
நிர்வாகப் பணிகளில் அரசனுக்கு ஆலோசனை சொல்வதற்கும் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் ஓர் இளைஞனைத் துணையாக வைத்திருந்தான் அரசன். அவனும் அந்த அரண்மனையிலேயே ஓர் அறையில் தங்கியிருந்தான்.
அந்த ஊரில் சந்திரசேகர பட் என்னும் பண்டிதர் இருந்தார். வேதங்களில் தேர்ச்சியுள்ளவர். ஞானம் நிறைந்தவர். பழைய காலத்து சாஸ்திர நூல்களையெல்லாம் கற்றவர். அவர் தம் வீட்டுத் திண்ணையிலேயே ஒரு பள்ளிக்கூடம் நடத்திவந்தார். அந்த ஊரைச் சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்பதற்கான வயதை அடைந்ததும் அந்தத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று எழுத்தறிவையும் எண்கள் தொடர்பான அறிவையையும் வளர்த்துக்கொண்டார்கள்.
காலையில் தூக்கத்திலிருந்து விழித்ததும் சந்திரசேகர பட் காலைக்கடன்களை முடித்துவிட்டு குளத்தங்கரைக்குச் சென்று நீராடுவார். வீட்டுக்குத் திரும்பி உடைமாற்றிக்கொண்டு பூசையறைக்குச் சென்று வழிபாடுகளைச் செய்வார். அவருடைய மனைவி அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வார். பிறகு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை ஒரு தொன்னையில் வைத்து மூடி எடுத்துக்கொண்டு அரண்மனைக்குச் செல்வார். அரசனைப் பார்த்து வணங்கி அந்தப் பிரசாதத்தைக் கொடுப்பார். சிறிது நேரம் அவரிடம் உலகியல் பற்றியோ, தத்துவம் பற்றியோ உரையாடிக்கொண்டிருப்பார். அதற்குப் பின் வீட்டுக்குத் திரும்பிவிடுவார். பல ஆண்டு காலமாக அவர் அந்தப் பழக்கத்தைக் கடைபிடித்துவந்தார்.
அது அவருடைய அப்பா அவருக்குச் சொன்ன அறிவுரை. தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பதால் ஒருநாளும் அந்த அறிவுரையிலிருந்து அவர் பிறழ்ந்ததே இல்லை. வாழ்நாள் கட்டளையைப்போல அவர் அதை ஏற்று, அதன்படி நடந்துவந்தார்.
பண்டிதரின் மனைவி ஓர் ஆண்குழந்தையை ஈன்றெடுத்தாள். பண்டிதரும் அவர் மனைவியும் அக்குழந்தையை மிகுந்த பாசமுடன் வளர்த்தார்கள். அக்குழந்தைக்கு மல்லிகார்ஜுனன் என்று பெயரிட்டு, பெயர்சூட்டு விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். அன்று அத்தெருவில் வசித்துவந்த அனைவரும் அவர்களுடைய வீட்டுக்கு வந்து விருந்துண்டு சென்றார்கள்.
பள்ளிக்கூட வேலை முடிந்ததும் பண்டிதரும் அவர் மனைவியும் அக்குழந்தையோடு கொஞ்சி விளையாடி பொழுது போக்கினர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மல்லிகார்ஜுனன் வளர்ந்து பெரியவனானான்.
அவனுக்கு ஐந்து வயது நிறைவடையும் தருணத்தில் ஊரெங்கும் பரவிய ஒரு நச்சுக்காய்ச்சலின் விளைவாக எதிர்பாராத விதமான பண்டிதரின் மனைவி இறந்துவிட்டாள். மரணச்செய்தியைக் கேட்டு வருத்தமடைந்த அரசன் தன் பரிவாரங்களோடு சந்திரசேகர பட்டின் வீட்டுக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றான்.
மனைவி இல்லாத வீட்டில் வெறுமை சூழ்ந்திருப்பதை உணர்ந்தார் சந்திரசேகர் பட். தொடக்கத்தில் அவருக்கு அந்தத் தனிமை மிகுந்த மனபாரத்தை அளித்தது. மகனை வளர்க்க சிரமப்பட்டார். பிறகு, மெல்ல மெல்ல, தன் கவனத்தை பள்ளிக்கூடச் செயல்பாடுகள் மீது திசைதிருப்பி, மாணவர்களுக்குக் கற்பிப்பதில் அதிக நேரத்தைச் செலவழித்து அந்த வெறுமையிலிருந்து மீண்டுவந்தார்.
அவருடைய நண்பர்களும் உறவினர்களும் அவரை இன்னொரு திருமணம் செய்துகொள்ளும்படி ஆலோசனை சொன்னார்கள். அவருக்காக இல்லாவிட்டாலும், குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்காகவாவது அவர் மறுமணம் செய்துகொள்வது அவசியம் என்று அவர்கள் எடுத்துரைத்தனர். ஒருநாள் அரசனும் அவருக்கு அந்த ஆலோசனையை வேறொரு விதமாக சுற்றிவளைத்துக் கூறினான். ஆனால் சந்திரசேகர் பட்டின் மனம் அந்தத் திசையில் ஈடுபாடு கொள்ளவில்லை. மறுமணத்தின் மீது அவருக்கு ஆர்வம் பிறக்கவில்லை.
தன் மகன் மல்லிகார்ஜுனனுக்கு கதை சொல்வதிலும் அவனோடு விளையாடுவதிலும் அவர் தன் ஓய்வு நேரத்தைக் கழித்தார். ஆறு வயது நிறைவடையும் தருணத்தில் தன் திண்ணைப்பள்ளிக்கூடத்திலேயே அவனுக்கு எழுத்தறிவு புகட்ட முயற்சி செய்தார். துரதிருஷ்டவசமாக, அவன் மனம் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டிய அளவுக்கு கல்வியில் காட்டவில்லை. எந்த எழுத்தின் அமைப்பையும் அவனால் நினைவில் நிறுத்திக்கொள்ள இயலவில்லை. ஒருமுறை பார்த்த எழுத்தை மறுமுறை பார்க்கும்போது புதிய எழுத்தைப் பார்ப்பதுபோலவே விழித்து விழித்துப் பார்த்தான். ஒவ்வொரு எழுத்தும் அடையாளம் தெரியாத ஏதோ ஒரு பாறையைப்போல அவனுக்குக் காட்சியளித்தது. உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் கூட வரிசை பிறழாமல் படிக்கவோ, ஒப்பிக்கவோ, எழுதவோ அவனுக்குத் தெரியவில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் தன் பார்வையில் எழுத்து தோன்றியதுமே அவன் திகைக்கத் தொடங்கினான்.
ஏறத்தாழ பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. திண்ணைப்பள்ளிக்கூடத்தில் அவனோடு சேர்ந்து படித்த பிள்ளைகள் அனைவரும் நல்ல பயிற்சியைப் பெற்று ஒவ்வொரு ஆண்டும் வெளியேறிக்கொண்டே இருந்தனர். ஆயினும் சந்திரசேகர பட்டால் கடைசி வரைக்கும் தன் மகன் மல்லிகார்ஜுனனுக்கு படிப்பறிவையும் எழுத்தறிவையும் புகட்டவே முடியவில்லை. அதை அவர் தன் தனிப்பட்ட தோல்வியாகவே கருதி மனவேதனையில் மூழ்கினார். அந்தத் துக்கமே அவருக்கு நோயாக மாறி படுக்கையில் வீழ்த்திவிட்டது.
படுக்கையில் நோய்முற்றி படுத்திருந்த காலத்தில் கூட சந்திரசேகர பட் நீண்ட காலமாக பின்பற்றிவந்த தன் பழக்கவழக்கத்தைக் கைவிடவில்லை. அந்த நிலைமையிலும் காலையில் தட்டுத் தடுமாறி எழுந்து, குளத்தில் நீராடுவதையும் அதிகாலையில் பூஜை செய்வதையும் அரசனுக்கு நைவேத்திய பிரசாதம் எடுத்துச் சென்று கொடுப்பதையும் அவர் கைவிடவில்லை. உள்ளார்ந்த கடமையுணர்ச்சியோடு அப்பணிகளை அவர் தொடர்ந்து செய்துவந்தார்.
ஒருநாள் மாலை வேளையில் சந்திரசேகர பட் தன் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டதை ஏதோ உள்ளுணர்வால் உணர்ந்தார். அடுத்தநாள் காலையில் தாம் உயிருடன் இருக்கமாட்டோம் என்று அவருக்குத் தோன்றியது. உடனே தன் மகன் மல்லிகார்ஜுனனை அழைத்தார்.
திண்ணையிலேயே பிற பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்த மல்லிகார்ஜுனன் அப்பாவின் குரலைக் கேட்டு ஓடிவந்தான். அதை உணர்ந்ததும் சந்திரசேகர் பட் தன் பக்கத்தில் அமரும்படி சைகையாலேயே அவனிடம் தெரிவித்தார். மல்லிகார்ஜுனன் உட்கார்ந்து அவருடைய முகத்தையே பார்த்தான். ஒருசில கணங்கள் எதுவும் பேசாமல் அவரும் அவனையே சில கணங்கள் அமைதியாகப் பார்த்தபடி இருந்தார்.
பொங்கிவந்த இருமலைச் செருமி சரிப்படுத்திக்கொண்டு மல்லிகார்ஜுனனிடம் இன்னும் நெருங்கிவந்து அமரும்படி மெதுவாகச் சொன்னார். பிறகு அவன் தோள்மீது தன் வலது கையை வைத்தபடி ‘மல்லிகார்ஜுனா, எப்பாடு பட்டாவது உன்னை ஒரு நல்ல படிப்பாளியா ஆக்கணும்னு மனசார பாடுபட்டேன். என்னால அந்த முயற்சியில ஜெயிக்கமுடியலை. கடவுள் எனக்கும் அந்த பாக்கியத்தைக் கொடுக்கலை. உனக்கும் அந்தப் பாக்கியத்தை கொடுக்கலை. அதுதான் அந்த ஆண்டவனுடைய விருப்பம்னா நாம என்ன செய்யமுடியும்? அதை ஏத்துக்கறதைத் தவிர வேற வழி தெரியலை’ என்றார்.
அவருக்கு மூச்சு இறைத்தது. மீண்டும் இருமலும் வந்துவிட்டது. மல்லிகார்ஜுனனுக்கு வருத்தமாக இருந்தது. மெதுவாக அடங்கிய குரலில் ‘எல்லாத்தயும் இன்னிக்கே பேசணுமா என்ன? அப்புறமா ஒருநாள் சாவகாசமா பேசிக்கலாமேப்பா’ என்று சொன்னான். ‘அந்த அளவுக்கு என்கிட்ட நேரமில்லை மல்லிகார்ஜுனா. உன்கிட்ட சில விஷயங்கள் சொல்லணும். இப்ப சொல்லலைன்னா, அதை சொல்றதுக்கு வேறொரு சந்தர்ப்பம் வராமலேயே போயிடலாம் ‘ என்று துக்கம் படிந்த ஒரு புன்னகையைச் சிந்தினார் சந்திரசேகர பட்.
மல்லிகார்ஜுனன் பெருமூச்சுடன் அமைதியாக அவருடைய முகத்தையே பார்த்தபடி இருந்தான். மூச்சு சீரான நிலைக்குத் திரும்பியதும் சந்திரசேகர பட் மீண்டும் பேச்சைத் தொடங்கினார். ‘படிப்பு தொடர்பா, இனிமேல எதுவும் செய்யமுடியாத ஒரு நிலைக்கு நீ வந்துட்ட. அதனால எதிர்காலத்துல படிப்பறிவை மூலதனமா வச்சி வாழறதுக்கு வழி இல்லாம போயிடுச்சி. வாழ்க்கை உன்னை எந்த திசையில இழுத்துட்டு போவுதோ, அந்த திசையிலதான் இனிமேல நீ வாழ்ந்தாவணும். வாழற வாழ்க்கையை நல்லபடியா வாழறதுக்கு நான் உனக்கு ஒரு மூனு வழிகளைச் சொல்லிக் கொடுக்கறேன். எங்கப்பா எனக்குச் சொன்ன வழிகள் அது. அவருக்கு அவுங்கப்பா சொன்னது. பரம்பரைபரம்பரையா நம்ம குடும்பம் அந்த வழிகளின்படி நடந்து வருது. அந்த வழிகளை நீயும் கடைபிடிக்கணும். அது உன்னை என்னென்னைக்கும் காப்பாத்தும். நான் சொல்றபடி கேப்பியா?’ என்று சொல்லிவிட்டு மல்லிகார்ஜுனனின் முகத்தைப் பார்த்தார்.
‘சொல்லுங்கப்பா, நான் என்ன செய்யணும்? நீங்க சொல்றபடியே நான் நடக்கறேன்பா’ என்றான் மல்லிகார்ஜுனன்.
‘தினமும் காலையில எழுந்ததும் குளிச்சிட்டு பூஜை செய்யணும். நைவேத்தியம் செஞ்ச பிரசாதத்தை எடுத்தும் போய் அரசனைப் பார்த்து கொடுத்துட்டு வரணும். ஒரு பிரதேசத்துக்கு அரசன்ங்கறவன் கிட்டத்தட்ட பாதி கடவுளுக்குச் சமம். இந்த ஊருல எல்லாக் குடும்பங்களையும் காப்பாத்தறவன் அவன். ஒருநாள் கூட அதை நிறுத்தக்கூடாது. புரியுதா?’
‘புரியுதுப்பா. நிறுத்தமாட்டேன்பா. உங்க மனசுப்படியே நடந்துக்கறேன்பா. ரெண்டாவது வழி என்னப்பா, அதைச் சொல்லுங்க.’
‘உலகத்துல பாவம் செய்யறவங்களும் இருப்பாங்க. புண்ணியம் செய்யறவங்களும் இருப்பாங்க. ரெண்டும் கலந்ததுதான் இந்த உலகம். ஒருநாளும் நாம பாவச் செயல்கள்ல ஈடுபடக்கூடாது. அதைப்பத்தி கனவுலகூட நெனச்சிப் பார்க்கக்கூடாது. அதே சமயத்துல நம்ம சுத்தி ஏராளமான பாவங்கள் நடந்துட்டேதான் இருக்கும். அந்தப் பாவத்தை எதிர்க்கிற சக்தியும் நமக்குக் கிடையாது. கண்டிக்கிற சக்தியும் கிடையாது. நான் அதை பார்க்கவே இல்லைங்கறமாதிரி, அமைதியா அந்த மாதிரியான சம்பவங்களைப் பார்த்தும் பார்க்காத மாதிரி கடந்து போயிடணும். அதுதான் ரெண்டாவது வழி.’
‘புரியுதுப்பா, அதும்படியே நான் நடந்துக்கறேன்பா. மூணாவது வழி என்னப்பா?’
‘காலை நேரத்துல நீ வெளியே நடந்துபோற நேரத்துல யாராவது உன்னை கூப்பிட்டு, தம்பி, வீட்டுல படைச்சிருக்கோம். வந்து ஒருவாய் சாப்ட்டுட்டு போன்னு சொன்னா, அதை அந்த அன்னபூரணியே அழைச்சி சொல்றதா நினைச்சி, மனப்பூர்வமா அந்த வீட்டுல சாப்டுட்டுத்தான் போவணும். ஒருநாளும் எனக்கு வேணாம்னு சொல்லக்கூடாது. இப்ப வேலை இருக்குது, அப்புறமா வரேன்னு சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழிக்கவும் கூடாது.’
‘சரிப்பா. அப்படியே செய்யறேன்.’
‘கல்வி இல்லாத ஒரு சூழல்ல இந்த மூனு வழிகளும் உனக்கு உறுதுணையா இருக்கும் மல்லிகார்ஜுனா.’
‘சரிப்பா, நீங்க சொல்றபடியே நடந்துக்கறேன்பா.’
சொல்லவேண்டியதை மகனிடம் சொல்லிவிட்டோம் என்ற எண்ணத்துக்குப் பிறகுதான் அவர் முகம் சற்றே தெளிவடைந்தது. மகனை இன்னும் நெருங்கிவரச் சொல்லி, அவன் கைகளை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு, அவன் தலையை வருடி, நெற்றியில் முத்தமிட்டார். அவரையறியாமல் அவர் முகத்தில் ஒரு நிம்மதியுணர்வும் புன்னகையும் படர்ந்தன. அப்பாவின் நிலைமையைப் பார்த்து மல்லிகார்ஜுனனின் நெஞ்சம் நடுங்கியது. அவனை அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் திரண்டது. ஒருசில துளிகள் அவருடைய கன்னத்தின் மீது விழுந்து உருண்டன. அதைப் பார்த்த அவர் தன் கைவிரல்களால் அவன் கன்னத்தைத் தொட்டுத் தட்டிக் கொடுத்தார். மறுகணமே அவன் முகத்தைப் பார்த்த நிலையிலேயே அவர் விழிகள் நிலையாக நின்றுவிட்டன. அவர் உயிர் பிரிந்துவிட்டது.
சிறிது நேரம் அப்பாவின் உயிரற்ற உடலுக்கு அருகில் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதான் மல்லிகார்ஜுனன். பிறகு வீட்டைவிட்டு வெளியே வந்து பள்ளிக்கூடத்தில் இருந்தவர்களுக்கும் அக்கம்பக்கம் வசித்த குடும்பத்தினரிடமும் தகவலைத் தெரிவித்தான். ஒருசில நிமிடங்களிலேயே அவர் முன்னால் அந்த ஊர் மக்கள் திரண்டுவந்து நின்றார்கள். அரசன் தன் உதவியாளோடு வந்து வாசலில் கிடத்தப்பட்டிருந்த சந்திரசேகர பட்டுடைய உடல்மீது மாலையை வைத்து மரியாதை செலுத்திவிட்டுச் சென்றான்.
உறவு என சொல்லிக்கொள்ள யாருமில்லாத மல்லிகார்ஜுனனுக்கு அந்த ஊரைச் சேர்ந்த அனைவரும் துணையாக நின்று சந்திரசேகர பட்டுடைய இறுதிச் சடங்குகளுக்கும் இறுதி ஊர்வலத்துக்கும் தகனத்துக்கும் உதவி செய்தார்கள்.
தகனத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக பதினாறு நாட்கள் செய்யவேண்டிய சடங்குகள் அனைத்தையும் மல்லிகார்ஜுனன் செய்வதற்கு அக்கம்பக்கத்தினர் துணையாக இருந்தனர். அதுவரை அவன் வீட்டைவிட்டு எங்கும் செல்லவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தான். ஊரிலேயே இன்னொருவர் திண்ணைப் பள்ளிக்கூடத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
சடங்குகள் முடிவடைந்த பிறகு அப்பாவின் ஆலோசனைக்கு இணங்க, காலையில் எழுந்து குளத்துக்குச் சென்று குளித்துவிட்டு வந்து பூஜையை முடித்துவிட்டு, நைவேத்திய பிரசாதத்தை எடுத்துச் சென்று அரசனிடம் கொடுத்தான். அரசன் அவனிடம் ஆச்சரியத்தோடு ‘என்ன இது?’ என்று கேட்டான். மல்லிகார்ஜுனன் ‘இந்தப் பழக்கத்தை ஒருபோதும் நிறுத்தக்கூடாதுன்னு அப்பா சொல்லிட்டு போயிருக்காரு அரசே’ என்று பதில் சொன்னான். அரசன் புன்னகையோடும் பக்தியுணர்வோடும் அந்தப் பிரசாதத்தை வாங்கிக்கொண்டான்.
சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அவன் பிரசாதம் எடுத்துச் சென்ற சமயத்தில் அரசன் அரண்மனையில் இல்லை. அங்கிருந்த காவலர்கள் ‘ஒரு அவசர வேலையா அரசன் கோயிலுக்குப் போயிருக்காரு’ என்றனர். சிறிது நேரம் அரசனுக்காகக் காத்திருந்த மல்லிகார்ஜுனன், பிறகு கோவிலுக்குச் சென்று அங்கேயே அரசனைச் சந்தித்து பிரசாதத்தைக் கொடுத்துவிடுவதாகச் சொல்லிவிட்டு புறப்பட்டான்.
கோவில் ஊர் எல்லையில் இருந்தது. அங்கு நடந்து சென்ற மல்லிகார்ஜுனன் அரசனைச் சந்தித்து வணக்கம் சொல்லிவிட்டு பிரசாதத்தைக் கொடுத்தான். அதைப் பெற்றுக்கொண்டு, கோவில் திருப்பணி விவகாரங்களைப்பற்றி பேச வேண்டியதாக இருந்ததால் காலையிலேயே கோவிலுக்கு புறப்பட்டு வந்ததாக அரசன் சொன்னான்.
அப்போது மூச்சிரைக்க ஓடிவந்த ஒரு வீரன் கோவிலுக்குள் தடதடவென்று நுழைந்து அரசனுக்கு வணக்கம் சொன்னான். ஊர் எல்லையில் காவல் காக்கும் வீரன் அவன். ஏதோ விபரீதமான செய்தி என்பதைப் புரிந்துகொண்ட அரசன் அவனிடம் ‘என்ன செய்தி?’ என்று கேட்டான். ‘எல்லையில காவல்மாடத்துல காவல் காக்கிற ஆள் நான் அரசே. இன்னைக்கு காலையில பத்து பன்னிரண்டு பேர் கூட்டமாக ஆயுதங்களோடு நடந்து வர்ரதைப் பார்த்தேன். அவசரமா அந்தச் செய்தியைச் சொல்லறதுக்காக ஓடிவந்தேன்’ என்று மூச்சிறைக்கச் சொன்னான் அவன்.
உடனே எச்சரிக்கை அடைந்த அரசன் அவனைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும்படி சொல்லி அனுப்பி வைத்தான். பிறகு மல்லிகார்ஜுனன் பக்கம் திரும்பி ‘உன்னால எவ்வளவு சீக்கிரமா அரண்மனைக்குப் போகமுடியுமோ, அவ்வளவு சீக்கிரமா போ. நேரா என்னுடைய அறைக்குப் போ. அங்க என்னுடைய வாளும் கேடயமும் இருக்கும். ரெண்டையும் எடுத்துக்கோ. அரண்மனை முற்றத்தில காவலுக்கு நிக்கிற வீரர்கள்கிட்ட மட்டும் செய்தியை சுருக்கமா சொல்லி, அவுங்களையும் கையோடு அழைச்சிட்டு வேகமா வா’ என்றான். மல்லிகார்ஜுனன் புறப்பட்டுச் சென்றதும் அரசனும் பாதுகாப்பான ஒரு இடத்துக்குச் சென்று அங்கிருந்து தொலைவில் தெரியும் நடமாட்டத்தைக் கண்காணித்தான்.
ஒரு கணத்தைக் கூட வீணாக்காமல் வேகமாக ஓடிவந்த மல்லிகார்ஜுனன் அரண்மனை முற்றத்துக்கு வந்த பிறகுதான் நின்றான். வாசலில் நின்றிருந்த வீரர்களிடம் தகவலைச் சுருக்கமாகத் தெரிவித்தான். பிறகு ‘அரசர் தன்னுடைய வாளையும் கேடயத்தையும் எடுத்துட்டு வரச் சொல்லியிருக்காரு. நான் உள்ள போய் எடுத்துட்டு வரேன். நீங்க அதுக்குள்ள தயாரா இருங்க. நாம உடனே புறப்படணும்’ என்று சொல்லிவிட்டு அரசனின் அறையை நோக்கிச் சென்றான்.
அரசனின் அறைக்கதவு திறந்தே இருந்தது. அதனால் தட்ட வேண்டிய அவசியம் எதுவும் மல்லிகார்ஜுனனுக்கு ஏற்படவில்லை. வேகவேகமாக வாசலைக் கடந்து உள்ளே சென்றான். கூடத்தைக் கடந்து உள்ளே சென்றபோது பக்கவாட்டில் ஏதோ வித்தியாசமான சத்தத்தைக் கேட்டதும் ஒரு கணம் குழப்பத்தோடு நின்றான்.
வெளிச்சத்திலிருந்து அறைக்குள் வந்த காரணத்தால் எங்கெங்கும் இருள் நிறைந்திருப்பதுபோல இருந்தது. பார்வை குழம்பியது. மெல்ல மெல்ல பார்வைக்குழப்பம் மறைந்து பொருட்கள் துலக்கமாகத் தெரியத் தொடங்கின. சுவரோரமாக கட்டிலில் அரசனின் உதவியாளும் அரசியும் படுக்கையில் தழுவிய நிலையில் இருப்பது தெரிந்தது.
ஒரு கணம் ஐயோ, இது என்ன பாவம் என்று அவன் மனம் துடித்தது. மறுகணமே அவனுக்கு தன் தந்தை சொன்ன வழிகள் நினைவுக்கு வந்தன. பாவத்தைக் கண்டும் காணாமல் போவதுதான் சிறந்தது என்று அவனுக்கு அக்கணத்தில் புரிந்தது. உடனே அறைக்கு வந்த நோக்கத்தை நினைத்துக்கொண்டு , அரசனின் வாளும் கேடயமும் வைக்கபட்டிருந்த இடத்தைக் கண்டுபிடிக்க பார்வையை நாலாபக்கமும் சுழற்றினான். அதே அறையின் இன்னொரு மூலையில் ஒரு மேசை மீது அவை வைக்கப்பட்டிருந்தன. உடனே ஓட்டமாக ஓடிச் சென்று அவையிரண்டையும் எடுத்துக்கொண்டு மறுகணமே அறையை விட்டு வெளியேறினான்.
மல்லிகார்ஜுனனின் செய்கை அரசிக்கும் உதவியாளுக்கும் குழப்பமாக இருந்தது. அவன் தம்மைப் பார்த்தானா, இல்லையா என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
‘அவன் பார்த்திருக்க வாய்ப்பில்லை அரசி. கவலைப்படாதே. பகல் வெளிச்சத்துலேர்ந்து உள்ள வந்ததால அவனுக்கு நாம இங்க இருந்த விஷயமே தெரிஞ்சிருக்காது’ என்று தைரியம் சொன்னான் உதவியாள்.
‘ஆமாமாம். அவன் மூஞ்சியில எதையும் பார்த்தமாதிரியான அடையாளமே இல்லை. சாதாரணமாதான் இருந்தான்’ என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்வதுபோல சொல்லிக்கொண்டாள் அரசி.
சில நிமிடங்களுக்குப் பிறகு ‘நீ சொல்றமாதிரி இந்த விஷயத்தை சாதாரணமா எடுத்துக்க முடியாது. இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் அந்தப் பையன் ஏதாவது ஏடாகூடமா நம்மை பத்தி அரசன்கிட்ட தப்பா சொல்லிட்டா, நம்ம ரெண்டு பேருக்குமே ஆபத்து’ என்றாள்.
‘நான்தான் அவன் நம்மைப் பாக்கவே இல்லைன்னு சொல்றனே, நீ ஏன் நம்பமாட்டற?’ என்று கேட்டாள் அரசி.
‘அவன் பார்த்தானோ, பார்க்கலையோ, நாம முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இல்லையா?’
‘சரி, அந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன். நீ இங்கிருந்து கெளம்பு. அரசன் வர நேரமாயிடுச்சி.’
‘சின்னப் பையன்தானேன்னு அலட்சியமா இருக்காத.’
‘எந்தப் பிரச்சினையும் வராம நான் பார்த்துக்கறேன். நீ கெளம்பு.’
உதவியாள் அரசியைத் திரும்பிப் பார்த்தபடியே அறையைவிட்டு வெளியே கிளம்பிச் சென்றான்.
அவன் புறப்பட்டுச் சென்றதும் அரசி தனிமையில் உட்கார்ந்துகொண்டு நடந்தவை அனைத்தையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து அசைபோட்டாள். அப்போதுதான் உதவியாள் சொன்னதுபோல மல்லிகார்ஜுனனை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என அவளுக்கும் தோன்றத் தொடங்கியது.
உடனே அவள் தன் கைவளையல்களை உடைத்து, அறைமுழுதும் அங்கங்கே சிதறி விழுந்திருக்கும்படி செய்தாள். பிறகு புடைவையை அங்கங்கே கிழித்துக்கொண்டாள். பின்னலை அவிழ்த்து தலைவிரி கோலமாக மாறினாள். கன்னத்திலும் தோளிலும் கைகளிலும் ரத்தக் கோடுகள் தெரியும்படி கண்ணாடித் துண்டால் கிழித்து காயங்களை ஏற்படுத்திக்கொண்டாள். பிறகு தன் கட்டிலுக்குச் சென்று அலங்கோலமான நிலையில் உட்கார்ந்துகொண்டாள். அரசன் வந்ததும் என்ன சொல்லவேண்டும் என்பதை ஒவ்வொரு சொல்லாக யோசித்துத் திட்டமிடத் தொடங்கினாள்.
வாளையும் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு வேகமாக அரண்மனை வாசலுக்கு வந்த மல்லிகார்ஜுனன், வாசலில் ஆயுதங்களோடு தயாராகக் காத்திருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு கோவில் இருந்த திசையை நோக்கி ஓடினான். அனைவரும் அவனோடு சேர்ந்து ஓடினார்கள்.
அவர்கள் ஓடி வருவதைப் பார்த்த அரசன் தன் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு, மல்லிகார்ஜுனனிடமிருந்து தன் வாளையும் கேடயத்தையும் பெற்றுக்கொண்டான். பிற வீரர்களும் அரசனும் கோவிலுக்கு அருகிலிருந்த தோப்புக்குச் சென்று மரங்களுக்குப் பின்னால் மறைந்து நின்றனர்.
அவர்கள் அங்கிருப்பது தெரியாமலேயே ஆயுதங்களை ஏந்திய எதிரியின் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர்கள் தமக்குள் உற்சாகமாக உரையாடியபடியே நடந்து வந்தனர். குறுக்கு வழியில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களைத் தாக்கி கிடைத்த பொருட்களை சூறையாடிக்கொண்டு செல்வதுதான் அவர்களுடைய திட்டம்.
எதிரிநாட்டு வீரர்கள் கோவிலுக்கு அருகில் நெருங்கி வரும்வரை காத்திருந்த அரசனும் பிற வீரர்களும் ஓவென்ற கூச்சலோடு தோப்பின் மறைவிடத்திலிருந்து ஓடோடி வந்து சுற்றி நின்றுகொண்டு தாக்கத் தொடங்கினர். எதிர்பாராத தாக்குதலால் சில கணங்கள் நிலைதடுமாறியதால் அந்த வீரர்களால் ஊக்கத்தோடு சண்டையிட முடியவில்லை. தடுமாற்றத்தோடு சண்டையிட்டதால், அவர்களால் அரசனை எதிர்த்து நிற்கமுடியவில்லை. பிடிபடுவதைவிட தப்பித்து ஓடிவிடுவது நல்லது என்று அவர்களுக்குத் தோன்றியதால், அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர். சிறிது தொலைவு வரைக்கும் அவர்களை விரட்டிச் சென்ற வீரர்கள் அவர்களைப் பிடிக்காமலேயே திரும்பினர். அரசன் அனைவரோடும் உற்சாகமாக உரையாடியபடி அரண்மனைக்குத் திரும்பினான்.
வீரர்கள் அனைவரும் கலைந்து செல்ல, மல்லிகார்ஜுனன் அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் வீட்டுக்குச் சென்றான். அரசன் தன் அறையை நோக்கிச் சென்றான். தம் ஆயுதங்களை மேசை மீது வைத்துவிட்டு, வெற்றிச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்காக அரசியை அழைத்தான். எந்தப் பதிலும் வரவில்லை. அதனால் அவளை பெயர்சொல்லி அழைத்தபடி ஒவ்வொரு அறைக்கும் சென்று வந்தான்.
அப்போதுதான் படுக்கையறையில் அவள் முட்டிக்கால்களுக்கு நடுவில் முகத்தைப் புதைத்தபடி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அதைக் கண்டு பதற்றத்துடன் ‘என்ன அரசி, என்ன நடந்தது? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?’ என்று விசாரித்தான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் தலையை நிமிர்த்தாமலேயே தேம்பித் தேம்பி அழுதாள். அதைப் பார்த்த அரசன் மேலும் பதற்றம் கொண்டு அருகில் சென்று அவள் முகத்தை நிமிர்த்தினான். அவள் கண்கள் அழுது சிவந்திருந்தன. கன்னங்களில் நகக்கிழிசலின் அடையாளம் தெரிந்தது.
‘என்ன நடந்தது அரசி இங்க? முகமெல்லாம் ஏன் இப்படி இருக்குது?’ என்று பதற்றத்தோடு கேட்டான் அரசன்.
‘எல்லாத்துக்கும் காரணம் நீங்க அனுப்பின ஆள்தான்.’
‘என்ன சொல்ற நீ?’
‘உங்களுக்கு தெனமும் பிரசாதம் கொண்டுவரானே ஒரு பையன், அவனை நீங்கதான அனுப்பி வச்சீங்க?’
‘ஆமா. வாளையும் கேடயத்தையும் எடுத்துட்டு வான்னு நான்தான் அனுப்பி வச்சேன்.’
‘அவன்தான் இந்த அலங்கோலத்துக்குக் காரணம். என்னைப் புடிச்சி பலாத்காரம் செய்ய முயற்சி செஞ்சான். நான் அவனுடைய ஆசைக்கு உடன்படலைன்னு தெரிஞ்சதும், என் உடம்புல இப்படி அலங்கோலம் பண்ணி சிதைச்சிட்டு ஓடிட்டான்.’
அரசியின் சொற்களைக் கேட்டு ஒருகணம் பேச்செழாமல் திகைத்து நின்றான் அரசன். பிறகு ‘அவன் சின்னப் பையன் அரசி. அவன் மேல ஏன் பழி சுமத்தற? நீ சரியா பார்த்தியா? வேற யாரையாவது பார்த்துட்டு இவன்னு நெனச்சிட்டியா?’ என்று கேட்டான்.
‘என்னை பலாத்காரம் செஞ்சவன் மூஞ்சிய நான் எப்படிங்க மறக்கமுடியும். அவன்தாங்க. அவனேதான். அவனை ஏதாவது செய்ங்க. அவனை உயிரோடயே விடக்கூடாது. எனக்கு வந்த நிலைமை வேற எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. அவனுக்குக் கொடுக்கக்கூடிய தண்டனை மத்தவங்க எல்லாருக்கும் ஒரு பாடமா இருக்கணும்’ என்று கூவினாள் அரசி.
‘சரி சரி. அமைதியா இரு. நான் கவனிச்சிக்கறேன்’ என்று அரசியை அமைதிப்படுத்திவிட்டு அரசன் தடுமாற்றத்துடன் வெளியே வந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு தனிமையை நாடி தோட்டத்துக்குச் சென்றான்.
அவன் மனம் குழம்பியது. அரசி சொல்வதைக் கேட்டு மல்லிகார்ஜுனனை உடனடியாக தண்டிக்கலாமா, வேண்டாமா என்று நினைத்து நினைத்து குழம்பினான். இன்று எதிரிப்படையினரை விரட்டியடிக்க அவன் செய்த உதவி மறக்கமுடியாத ஒன்று. தக்க நேரத்தில் உதவி செய்த ஒருவனை, நன்றி மறந்து உடனடியாக தண்டிக்க அவன் மனம் இடம் தரவில்லை. அதே சமயத்தில் அரசியை அமைதிப்படுத்துவதும் முக்கியம் என அவன் நினைத்தான்.
உடனே அவன் தன் உதவியாளை அழைத்தான். தனியிடத்துக்கு அவனை அழைத்துச் சென்று, அரசி சொன்னதையெல்லாம் அவனிடம் ரகசியமாகத் தெரிவித்தான். ‘இந்தப் பிரச்சினைக்கு நாம உடனடியா ஒரு தீர்வைக் கண்டுபுடிக்கணும்’ என்று சொன்னான். அரசன் சொன்னதைக் கேட்டதும் உதவியாள் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியிருப்பதைப்போல நடித்தான். பிறகு அரசனிடம் திரும்பி ‘அவனைத் தண்டிக்காம விடவும் கூடாது. அதே சமயத்துல மத்தவங்க பார்வையில படற மாதிரி தண்டிக்கவும் கூடாது. அதுக்கு ஒரு வழி இருக்குது அரசே’ என்று ரகசியமான குரலில் சொன்னான்.
‘என்ன வழி?’ என்று கேட்டான் அரசன்.
‘மரண தண்டனைக் கைதிகளுக்காக ஊருக்கு வெளியில இருக்கிற தோப்புல ஒரு எண்ணெய்க்கொப்பரைக் கூடம் ஏற்படுத்தி வச்சிருக்கோமே, அந்த இடத்துக்கு இப்பவே நாலு பேரை அனுப்புவோம். நாளைக்கு காலையில ஒரு கைதிக்கு தண்டனை கொடுக்கணும்னு முடிவாயிருக்குது. அதுக்கு தேவையான ஏற்பாடுகளை போய் செய்யுங்க, நாளைக்கு காலையில அவன இங்க தனியாவே அனுப்பிவைப்போம். அவன் வந்து நின்னதும், அவன்கிட்ட எந்த பேச்சும் கொடுக்காம அவனை புடிச்சி எண்ணெய்க்கொப்பரையில தூக்கி போட்டு கொன்னுடுங்கன்னு சொல்லிவைப்போம். அதேபோல அவுங்க கொப்பரை ஏற்பாடுகளை கவனிச்சிக்குவாங்க.’
‘அதன் மூலம் நம்ம பிரச்சினைக்கு எப்படி தீர்வு கிடைக்கும்?’
‘கிடைக்கும் அரசே. கிடைக்கும். சொல்றதை பொறுமையா கேளுங்க. நாளைக்கு காலையில வழக்கம்போல மல்லிகார்ஜுனன் பிரசாதத்தை எடுத்துகிட்டு முதல்ல இங்கதான் வருவான். அவன்கிட்ட அரசர் தோப்பு வேலையை மேற்பார்வை பார்க்க போயிருக்காருன்னு நான் சொல்லி அனுப்பிவைக்கறேன். அவன் உங்களைத் தேடி தானாவே அங்க போவான். அங்க போனதும் அவன் கதை முடிஞ்சிடும். அவனைத் தண்டிச்சது மாதிரியும் ஆயிடும். நம்ம அரசிக்கு நேர்ந்த விஷயத்தை வெளியே தெரியாம காப்பாத்துனமாதிரியும் ஆயிடும்.’
உதவியாளின் ஆலோசனை அந்தத் தருணத்துக்குப் பொருத்தமான ஒன்றாகவே தோன்றியது. ‘சரி, நல்ல யோசனைதான். அதுக்கு தேவையான ஏற்பாடுகளை நீ இப்பவே ஆரம்பிச்சிடு’ என்று சொல்லி அனுப்பி வைத்தான் அரசன். அதற்குப் பிறகுதான் அவன் மனம் லேசானது.
உதவியாள் தன் திட்டம் பலித்துவிட்டதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அரசி விரும்பிய விதமாக அவள் நினைத்த செயலை வெற்றிகரமாகச் செய்துமுடித்துவிட்டால், அவள் மனத்தில் இன்னும் ஆழமாக இடம் பிடித்துவிடலாம் என அவன் மனம் திட்டமிட்டது.
அரண்மனையைவிட்டு வெளியேறுவதற்கு முன்பாக சந்தடி இல்லாத தருணத்தில் அரசியைச் சந்தித்து தன் ஏற்பாடு விவரங்களைச் சுருக்கமாகத் தெரிவித்தான். ‘நீ எதுக்கும் பயப்படாம நிம்மதியா இரு அரசி. எல்லாத்தயும் நான் பார்த்து முடிச்சி வைக்கறேன்’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டான்.
எண்ணெய்க்கொப்பரை வேலைகளை வழக்கமாகக் கவனித்துக்கொள்ளும் ஆட்களுக்குத் தகவல் அனுப்பி அவர்கள் தோப்புக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி அரண்மனை முக்கியஸ்தரிடம் கூறினான். அவன் ஒரு தூதுவனை அழைத்து விவரங்களை ஒரு சுவடியில் எழுதி கொப்பரையைக் கண்காணிக்கும் வேலைகளைச் செய்யும் நபரிடம் கொடுத்துவிட்டு வருமாறு சொன்னான். அந்தத் தூதுவன் அரண்மனையிலிருந்து சில மைல்கள் தொலைவில் இருக்கும் கண்காணிப்பாளனின் வீட்டுக்குச் சென்று சுவடியைக் கொடுத்துவிட்டு சுருக்கமாக தகவலையும் சொல்லிவிட்டு வந்தான். அந்தக் கண்காணிப்பாளன் உடனடியாக நாலைந்து ஊழியர்களை அழைத்து விஷயத்தைச் சொல்லி, அப்பொதே அவர்களை கொப்பரைத்தோப்புக்குச் செல்லும்படி கட்டளையிட்டான். ‘சரிங்க ஐயா’ என்று சொல்லிவிட்டு அவர்களும் புறப்பட்டுச் சென்றார்கள்.
அடுத்தநாள் காலையில் வழக்கம்போல மல்லிகார்ஜுனன் பூசையை முடித்துக்கொண்டு பிரசாதத்தோடு அரசனைச் சந்திப்பதற்குக் கிளம்பினான். அரண்மனையில் வழக்கமாக அரசனைச் சந்திக்கும் இடத்தில் அரசனைக் காணவில்லை. அங்கே பக்கத்திலேயே ஏதோ வேலையில் மூழ்கியிருந்த உதவியாளிடம் சென்று வணங்கிவிட்டு ‘பிரசாதம் கொண்டுவந்திருக்கேன். அரசரைக் காணோமே, எங்கே போனார்?’ என்று கேட்டான்.
ஏதோ ஆராய்ச்சி செய்பவன்போல மல்லிகார்ஜுனனின் முகத்தையே ஆழமாகப் பார்த்தான் உதவியாள். நேற்று தனியறையில் அரசியோடு தன்னைப் பார்த்ததற்கான எந்த வெளிப்பாடும் அவன் கண்களில் தெரியவில்லை. மனசுக்குள் ரகசியத்தைச் சுமந்திருப்பவனுக்கு உரிய அடையாளமே அவன் முகத்தில் தென்படவில்லை. அப்பாவி போலவே அவன் முகம் தோற்றமளித்தது. ஒருகணம் அவன்மீது பரிதாப உணர்வும் எழுந்தது. ஆயினும் சந்தேகத்துக்கு உரிய ஆளை உயிருடன் விட்டுவைப்பது எப்போதும் ஆபத்தையே கொண்டுவரும் என்கிற அரசியின் எண்ணம் நினைவுக்கு வந்ததுமே, இரக்க உணர்வு பறந்தோடிவிட்டது.
உடனே செருமி தொண்டையைச் சரிப்படுத்தியபடி ‘இவ்வளவு நேரம் இங்க உனக்காகத்தான் காத்திட்டிருந்தாரு. இப்பதான் எண்ணெய்க்கொப்பரைத் தோப்புக்குக் கெளம்பிப் போனாரு. அங்க வேலை செய்யற ஆளுங்ககிட்ட ஏதோ விஷயத்தைத் தெரிவிக்கணும்னு சொல்லிட்டு போனாரு. நீ வந்தா, உன்ன அங்க வந்து சந்திக்கச் சொல்லுன்னு சொல்லிட்டு போனாரு’ என்றான்.
‘சரி, நான் தோப்புக்கே போய் அரசரைச் சந்திச்சி பிரசாதத்தைக் கொடுத்துட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டான்.
அவன் அரண்மனையைவிட்டு வெளியேறி சாலையில் நடந்து செல்வதை பின்னால் நின்று வெகுநேரம் பார்த்தான் உதவியாள். ‘இவன் கதை இதோடு முடிஞ்சது’ என்று நினைத்துக்கொண்டான். அரசியோடு மகிழ்ச்சியாக இருக்கப் போகும் கணத்துக்காக அவன் மனம் அப்போதே ஏங்கத் தொடங்கியது. அரசியை நினைத்ததுமே அவன் முகம் அவனை அறியாமல் பரவசத்தில் மலர்ந்தது.
வேறொரு தனியறையில் காத்திருந்த அரசனைச் சந்திப்பதற்காக வேகமாகச் சென்றான் உதவியாள். மல்லிகார்ஜுனனைத் தோப்புக்குச் செல்லுமாறு அனுப்பிவைத்துவிட்ட தகவலைத் தெரியப்படுத்தினான். பிறகு ‘இன்னும் அரைமணி நேரமோ, ஒரு மணி நேரமோ. அவன் கதை முடிஞ்சிடும் அரசே. நீங்க கவலை இல்லாம இருங்க’ என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
அரசனுக்கு அந்தச் செய்தியை உடனடியாக அரசியிடம் தெரிவிக்கவேண்டும் என்று தோன்றியது. அதனால் உதவியாளை அனுப்பிவைத்துவிட்டு அரசியைச் சந்திப்பதற்காக அவளுடைய அறைக்குச் சென்றான். மல்லிகார்ஜுனனைத் தண்டிப்பதற்காக தான் செய்திருக்கும் ஏற்பாடுகளைப்பற்றி அவளிடம் எடுத்துரைத்தான். அவளும் அதை முதன்முறையாகக் கேட்பதுபோல அரசன் சொல்லச்சொல்ல ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டாள். ‘இப்பதாங்க என் மனசுக்கு நிம்மதியா இருக்குது. அரசி மேல கையை வச்சா என்ன ஆகும்னு சாகற நேரத்துல அவனுக்கு தானா புரியும்’ என்று சொன்னாள்.
அரண்மனையிலிருந்து நடக்கத் தொடங்கிய மல்லிகார்ஜுனன் எந்த இடத்திலும் நிற்காமல் தோப்பை நோக்கி தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தான். மூன்று தெருக்களைக் கடந்து நான்காவது தெருவில் நடந்துகொண்டிருந்தபோது ‘தம்பி, தம்பி’ என்று யாரோ தன்னை அழைப்பதைக் கேட்டதும் நின்றான். தெருவில் யாரும் தென்படவில்லை. யார் தன்னை அழைத்திருக்கக்கூடும் என்ற குழப்பத்தோடு அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தபோது, ‘தம்பி, தம்பி, நான்தான் உன்னைக் கூப்பிட்டேன். ஒரு நிமிஷம் நில்லுப்பா’ என்றபடி அருகிலிருந்த வீட்டிலிருந்து ஒரு பாட்டி மெதுவாகப் படியிறங்கி வருவதைப் பார்த்தான். உடனே அவள் நின்றிருந்த இடத்துக்கு அவனே நடந்து சென்றான். ‘என்ன பாட்டி? எதுக்காக என்னை கூப்பிடறீங்க?’ என்று கேட்டான்.
‘எங்கயோ அவசரமா போறமாதிரி இருக்குது.’
‘ஆமாம் பாட்டி, அரசரைப் பார்த்து பிரசாதம் கொடுக்கணும். அதுக்காகப் போயிட்டுருக்கேன்.’
‘தம்பி, இன்னைக்கு என் மகனுடைய நினைவுநாள். உன்ன மாதிரி இருக்கும்போது பாம்பு கடிச்சி செத்துட்டான். நாப்பது வருஷத்துக்கு மேல ஆவுது. ஆனா அவன் ஞாபகம் மனசை விட்டு போவமாட்டுது. உன்னைப் பார்த்தா அவனை மாதிரியே இருக்குது. அந்தக் கடவுளே உன்னை இங்க அனுப்பிவச்ச மாதிரி தோணுது. காலையில அவனுக்குப் புடிச்ச பலகாரங்களை செஞ்சிவச்சி அந்த சிவனுக்கு படைச்சேன். இப்பதான் காக்காய்க்கு வச்சிட்டு வரேன். நீ வீட்டுக்குள்ள வந்து ஒரு வாய் சாப்ட்டுட்டு போவணும்.’
பாட்டியின் வேண்டுகோள் அவனுக்குப் புதுமையாக இருந்தது. ஆனாலும் தான் ஒரு நோக்கத்துக்காகச் சென்றுகொண்டிருக்கும்போது, இடையில் நின்று இப்படி நேரத்தைச் செலவு செய்ய அவனுக்கு விருப்பமில்லை. ‘பாட்டி, அரசரைப் பாக்கறதுக்காக அவசரமா நான் போயிட்டிருக்கேன். இந்த நேரத்துல நான் எப்படி பாட்டி வரமுடியும். தப்பா நெனச்சிக்காதீங்க. நான் கெளம்பறேன்’ என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினான்.
பத்து பதினைந்து அடி தொலைவு நடந்தபிறகு, மரணமடைவதற்கு முன்பாக தன் அப்பா சொன்ன ஆலோசனைகள் திடீரென நினைவுக்கு வந்தன. ‘சாப்பிடறதுக்கு யார் அழைச்சாலும் அந்த அன்னபூரணியே அழைக்கறதா நினைச்சி, மனப்பூர்வமா அந்த வீட்டுல சாப்டுட்டுத்தான் போவணும்’ என்று சொன்ன அவர் சொற்கள் நெஞ்சில் ஒலித்தன. அக்கணமே தோப்பை நோக்கி நடப்பதை நிறுத்தி மீண்டும் பாட்டியின் வீட்டுக்குத் திரும்பி வந்து நின்றான்.
பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன் ‘என்ன தம்பி?’ என்று கேட்டாள்.
‘வா பாட்டி, வந்து பரிமாறுங்க. நான் சாப்ட்டுட்டே போறேன். வாங்க’ என்றான் மல்லிகார்ஜுனன்.
நேரமில்லை என்று சில கணங்களுக்கு முன்னால் சொன்னவன் மனம் மாறி சாப்பிடுவதற்கு ஒப்புக்கொண்டு வந்திருக்கும் செயல் அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. எல்லாம் கடவுள் செயல் என்று நினைத்துக்கொண்டாள். உடனே மகிழ்ச்சியோடு அவனை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்குச் சென்றாள். வாசலிலேயே அண்டாவில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் அவன் கைகால்களைத் தூய்மை செய்துகொண்டு வீட்டுக்குள் சென்றான். பாட்டி நீட்டிய திருநீறு தட்டைத் தொட்டு வணங்கிவிட்டு, திருநீறை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டான்.
கூடத்தில் இலைவிரித்து அவனுக்கு பலகாரங்களைப் பரிமாறினாள் பாட்டி. இலையில் எதையும் மிச்சம் வைக்காமல் பாட்டி பரிமாறிய அனைத்தையும் ருசித்துச் சாப்பிட்டான் மல்லிகார்ஜுனன்.
பாட்டியின் வீட்டில் மல்லிகார்ஜுனன் சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அரண்மனையில் அரசனும் உதவியாளும் நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தனர். தன் அறையின் ஜன்னல் வழியாக அவர்களைக் கண்காணித்தபடியே இருந்த அரசியும் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தாள்.
‘இந்நேரம் அவன் அங்க போயிருப்பான் இல்லையா?’ என்று ஆவலோடு மீண்டும் மீண்டும் கேட்டபடி இருந்தான் அரசன்.
‘போயிருப்பான் அரசே. நம்ம ஆளுங்க அவன் கதையையும் முடிச்சிருப்பாங்க. எண்ணெய்க்கொப்பரையிலயே அவன் வெந்து கொழகொழன்னு ஆயிருப்பான்.’
உதவியாளின் முகத்தில் ஒரு வஞ்சப்புன்னகை தோன்றி மறைந்தது.
‘உண்மையாவா சொல்ற?’
‘ஆமாம் அரசே. அதுல சந்தேகமே வேணாம்.’
சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் அதே கேள்வியை தன் உதவியாளிடம் கேட்டான் அரசன். அவனும் முதலில் சொன்ன பதிலையே மீண்டும் சொன்னான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு அரசன் ‘எதுக்கும் நீ ஒரு முறை கொப்பரைத்தோப்புக்கு போய் திட்டமிட்டபடி எல்லாம் நடந்திருக்குதான்னு நேருக்கு நேரா பார்த்துட்டு வந்து சொல்லு. அப்பதான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கும்’ என்றான்.
அப்போதும் அரசனின் பதற்றம் குறையவில்லை. ‘பார்க்கறதுக்கு பொடிப்பையனா இருக்கறான். ஆனா அவன் செஞ்சிருக்கிற காரியத்தை நினைச்சாலே எனக்கு உடம்புலாம் எரியற மாதிரி இருக்குது’ என்று வெடித்தான். அவன் முகம் சிவந்தது.
அந்த இடத்திலேயே தொடர்ந்து நின்றிருந்தால், அரசனின் புலம்பலுக்கு காதுகொடுத்தபடி இருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டான் உதவியாள். அதிலிருந்து தப்பிப்பதற்கு அந்த இடத்திலிருந்து புறப்படுவதுதான் ஒரே வழி என்று அவன் நினைத்தான். ‘சரி அரசே, நீங்க சொன்னபடி நானே நேருல போய் விசாரிச்சிட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு அவசரமாக அங்கிருந்து புறப்பட்டான்.
மல்லிகார்ஜுனன் புறப்பட்டுப் போய் வெகுநேரமாகிவிட்ட காரணத்தால், காவலர்கள் இந்நேரத்துக்கு அவனை கொதிக்கும் எண்ணெய்க்கொப்பரையில் தள்ளி கதையை முடித்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டான். அவனை அழித்துவிட்ட செய்தியைக் கேட்டதும் அரசிக்கு ஏற்படக்கூடிய மகிழ்ச்சியையும் அதன் மூலம் தம் இருவருக்கும் இடையே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கத்தையும் நினைத்து நினைத்து கற்பனையில் மூழ்கியபடி நடந்தான்.
கொப்பரைத்தோப்பை அடைந்ததும் மூடியிருந்த கதவுகளைத் தட்டி ஓசையெழுப்பினான் உதவியாள். உட்பக்கத்திலிருந்து யாரோ இருவர் கதவை நோக்கி நடந்துவரும் சத்தம் கேட்டது. சில கணங்களுக்குப் பிறகு கதவுகள் திறக்கப்பட்டன. ஆஜானுபாகுவான இரண்டு காவலர்கள் அங்கே நின்றிருந்தனர். அவர்கள் யார் என்று உதவியாளுக்குத் தெரியாது. உதவியாள் யாரென்று அந்தக் காவலர்களுக்குத் தெரியாது. அவர்களுடைய முகங்களை உதவியாள் அமைதியாக ஒருகணம் ஏறிட்டுப் பார்த்தான். அதே கணத்தில் யார், என்ன, ஏது என எந்தக் கேள்வியும் கேட்காமல் இரண்டு காவலர்களும் அவனை ஒரு மூட்டையைத் தூக்கிக்கொண்டு செல்வதுபோல தூக்கிக்கொண்டு ஓடினர்.
‘ஐயோ, என்னை விடுங்க, என்னை விடுங்க. நான் அரசனுடைய உதவியாள். என்னை எங்க தூக்கிட்டு போறீங்க? ஐயோ, நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க. என்னை விடுங்க’ என்று கதறியபடி கைகளையும் கால்களையும் உதறினான். ஆனாலும் காவலர்களின் பிடி உடும்புப்பிடியாக இருந்தது. அந்தப் பிடியிலிருந்து அவனால் தப்பிக்கவே முடியவில்லை. ஒரு கோழியை அழுத்திப் பிடித்துத் தூக்கிக்கொண்டு செல்வதுபோல அவனைத் தூக்கிச் சென்று கொதிக்கவைத்து தயாராக இருந்த எண்ணெய்க்கொப்பரைக்குள் வீசிவிட்டனர்.
‘ஐயோ, ஐயோ, நான் இல்ல, நான் இல்ல’ என்று கதறியபடியே அவன் அந்தக் கொப்பரைக்குள் விழுந்தான். சில நொடிகளிலேயே துடித்துத்துடித்து அவன் உயிர் பிரிந்துவிட்டது. அவன் உயிர் அடங்கியதை உறுதிசெய்த பிறகு, காவலர்கள் பிணமான உடலோடு எண்ணெய்க்கொப்பரையைத் தூக்கிக்கொண்டு சென்றனர். சிறிது தொலைவில் ஏற்கனவே வெட்டி தயாராக வைத்திருந்த குழிக்குள் அந்த உடலைத் தள்ளி மண்ணைப் போட்டு மூடினர். பிறகு எல்லாச் சாமான்களையும் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு, மற்ற வேலைகளைக் கவனிப்பதற்காகச் சென்றுவிட்டனர்.
பாட்டியின் உபசரிப்பில் வயிறு நிறைய விருந்துண்ட மல்லிகார்ஜுனன் கைகளைக் கழுவிக்கொண்டு திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்தான். வெற்றிலை பாக்கு தட்டோடு பாட்டியும் திண்ணைக்கு வந்து உட்கார்ந்தாள். பாட்டியின் மனவாட்டத்தைப் போக்கும் வகையில் அவளுடைய மறைந்த மகனைப்பற்றி சில விவரங்களைக் கேட்டான் மல்லிகார்ஜுனன். அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பாட்டி மிகுந்த ஆர்வத்துடன் பதில் சொன்னாள். அந்த உரையாடல் அவளுடைய மனபாரத்தைக் குறைத்தது.
தாம்பூலம் முடிந்ததும் பாட்டியிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான் மல்லிகார்ஜுனன். ‘இன்னைக்கு என் மனசு நிறைஞ்சிபோச்சி தம்பி. நீ எங்க இருந்தாலும் தீர்க்காயுசோட நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்திய பாட்டி, தட்சிணையாக அவனுக்குச் சில நாணயங்களை அளித்தாள். பாட்டியை தலைதாழ்த்தி வணங்கி அதைப் பெற்றுக்கொண்டு நடக்கத் தொடங்கினான் மல்லிகார்ஜுனன்.
நீண்ட நேரம் நடந்துசென்று எண்ணெய்க்கொப்பரை இருக்கும் தோப்பை அடைந்தான். அந்தப் பாதையில் நடமாட்டமே இல்லை. காலை நேரமாக இருந்தாலும் அந்தப் பாதையே வெறிச்சோடி இருந்தது. ஒரு ஆள் கூட தென்படவில்லை.
சுற்றுவேலி இடப்பட்டிருந்த அத்தோப்பின் முகப்புக்கதவுகள் மூடியிருந்தன. கதவு வரைக்கும் சென்ற மல்லிகார்ஜுனன் எந்த நடமாட்டமும் இல்லாததால் கதவைத் தட்டினான். ‘யாராவது உள்ள இருக்கீங்களா?. ஒரு நிமிஷம் வெளியே வாங்க’ என்று கூவினான். இரண்டு மூன்றுமுறை சத்தமெழுப்பிய பிறகு, கதவைத் திறந்துகொண்டு ஒரு காவலர் ‘யாரு வேணும்?’ என்று கேட்டபடி வெளியே வந்தார்.
‘என் பேரு மல்லிகார்ஜுனன். தினமும் காலையில அரண்மனைக்கு பிரசாதத்தை எடுத்துட்டு போய் அரசருக்குக் கொடுக்கற ஆளு. இன்னைக்கு காலையில வழக்கமா அரண்மனைக்கு போயிருந்த சமயத்துல, அவரு காலையிலயே இங்க தோப்புப்பக்கமா புறப்பட்டு போயிட்டதா சொன்னாங்க. அதனாலதான் அவரை பார்க்க இங்க வந்தேன். ஒரு நிமிஷம் அவரை நீங்க அழைச்சீங்கன்னா, நான் அவரைப் பார்த்து இந்தப் பிரசாதத்தைக் கொடுத்துட்டு போயிடுவேன்.’
‘அரசரா? அவரு இங்க வரலையே. யாரோ உங்களுக்கு தப்பா சொல்லியிருப்பாங்க. இன்னொரு தரம் போய் விளக்கமா தெரிஞ்சிகிட்டு வாங்க’ என்று சொல்லிவிட்டு தட்டென்ற ஓசையுடன் கதவைச் சாத்திக்கொண்டு சென்றுவிட்டார் காவலர்.
ஒருகணம் குழப்பத்தோடு அந்தக் கதவையே பார்த்தபடி அங்கு நின்றான் மல்லிகார்ஜுனன். காலையில் தன்னிடம் தகவல் சொன்னவர் சரியாகச் சொல்லவில்லையோ என அவனுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஒருவேளை அவர் சொன்ன தகவலை அவசரத்தில் தான் தப்பாகப் புரிந்துகொண்டோமோ என்றும் அவனுக்குத் தோன்றியது. அரசன் தோப்புக்கு வரவில்லை என்றால், பிறகு எங்கே சென்றிருப்பார் என்றொரு கேள்வி அவனுக்குள் எழுந்தது. எல்லாப் பிரச்சினைக்கும் இன்னொருமுறை அரண்மனைக்கே நேரிடையாகச் சென்று கேட்பதுதான் ஒரே தீர்வு என்று தோன்றியது. உடனே அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
தண்டனை நிறைவேறியதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியாமல் அரசன் அரண்மனையில் தவியாய்த் தவித்தான். உதவியாளின் வருகைக்காக வழிமேல் விழிவைத்தபடி நீண்ட நேரம் காத்திருந்தான். அப்போதுதான் தொலைவில் ஓர் உருவம் அரண்மனையை நோக்கி நடந்துவருவதைப் பார்த்தான். உதவியாளாகத்தான் இருக்கவேண்டும் என நினைத்து ஒருகணம் அவன் மனம் நிம்மதியடைந்தது. அடுத்த சில கணங்களிலேயே வந்துகொண்டிருக்கும் ஆள் மல்லிகார்ஜுனன் என்பதைப் புரிந்துகொண்டு குழப்பத்தில் மூழ்கினான். என்ன நடக்கிறது என்பது புரியாமல் தவியாய்த் தவித்தான்.
அரசனை நெருங்கி வந்ததும் மல்லிகார்ஜுனன் தலையைத் தாழ்த்தி இருகரம் கூப்பி வணக்கம் சொன்னான். அன்று அப்போதுதான் முதன்முதலாகப் பார்ப்பதுபோல தன்னிடமிருந்த நைவேத்தியப் பிரசாதத்தை எடுத்து அரசனிடம் கொடுத்தான். அந்தச் செயலை அவன் என்றும்போல மிக இயல்பாகவே செய்தான். செயற்கையோ, பதற்றமோ எதுவும் இல்லை. அவரும் அதை வாங்கி, வழக்கம்போல தொட்டு வணங்கிவிட்டு உட்கொண்டார்.
அவனிடம் பேச்சை வளர்த்து எப்படியாவது விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்த அரசன் ‘வழக்கத்தைவிட இன்னைக்கு ஏன் தாமதம் மல்லிகார்ஜுனா?’ என்று ஒரு கேள்வியை சாதாரணமாகக் கேட்பதுபோல கேட்டான்.
‘நான் வழக்கம்போல சரியான நேரத்துக்கு அரண்மனைக்கு வந்துட்டேன் அரசே. இங்க இருந்த உங்க உதவியாள் நீங்க ஏதோ வேலையா கொப்பரைத்தோப்பு பக்கம் போயிருக்கீங்கன்னு சொன்னாரு. சரி, தோப்புக்கே போய் உங்கள பார்த்து பிரசாதத்தை கொடுக்கலாம்ன்னு நெனச்சி கெளம்பிட்டேன்.’
‘தோப்புக்கு போனியா?’ என்று அவசரமாகக் கேட்டான் அரசன்.
‘ஆமாம். போயிருந்தேன் அரசே. கதவ பூட்டி வச்சிருந்தாங்க. நாலஞ்சி தரம் தட்டின பிறகு உயரமா ஒரு ஆள் வந்து கதவைத் திறந்தாரு. உங்களைப் பத்தி விசாரிச்சேன். அவரு நீங்க அந்தப் பக்கம் வரவே இல்லைன்னு ஒரேடியா சாதிச்சாரு. ஒருவேளை பாதி வழியில திடீர்னு திரும்பி வேற வேலையா கெளம்பிப் போயிருப்பீங்கன்னு ஒரு எண்ணம் வந்தது, அதனால, மறுபடியும் அரண்மனைக்கே போய் சந்திச்சி கொடுக்கலாம்ன்னு திரும்பி இங்கயே வந்துட்டேன். நல்ல வேளையா உங்களைப் பார்க்கவும் முடிஞ்சது.’
மல்லிகார்ஜுனனோடு உரையாடிக்கொண்டு இருந்தாலும் அவருடைய ஒரு பார்வை தெருவின் மீது பதிந்தே இருந்தது. உதவியாளின் வருகைக்காக நொடிக்கொரு தரம் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி இருந்தான்.
‘அது சரி மல்லிகார்ஜுனா, எனக்கு ஒரு சந்தேகம். காலையிலேயே அரண்மனைக்கு வந்தேன்னு சொல்ற. இங்க இருந்த காவலர் அரசர் தோப்புக்குக் கெளம்பிப் போயிட்டதா சொன்னதும் நீயும் தோப்புக்குப் புறப்பட்டுப் போனதா சொல்ற. ஆனா தோப்புக்குப் போய் திரும்பி வர உனக்கு ஏன் இந்த அளவுக்கு நேரம் புடிச்சது? நடுவுல வேற எங்கயாவது போயிருந்தியா?’ என்று கேட்டான் அரசன்.
‘ஆமா அரசே. ஒரு பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். அதனால தோப்புக்கு தாமதமாத்தான் போய் சேர்ந்தேன். நேரத்தோடு வந்திருந்தா, அங்கயே உங்கள பார்த்து பிரசாதத்தைக் கொடுத்திருப்பேன். நானும் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு நேரத்தோடு திரும்பிப் போயிருப்பேன்.’
‘சொந்தப் பாட்டியா?’
‘இல்லை அரசே. யாரோ ஒரு பாட்டி. முன்னபின்ன அறிமுகம் கிடையாது. அப்பதான் முதமுதலா பார்த்தேன்.’
‘அந்தப் பாட்டி வீட்டுல என்ன வேலை?’
‘தோப்புக்குப் போற அவசரத்துல நான் தெருவுல வேகவேகமா நடந்துகிட்டே இருந்தேன். திடீர்னு அந்தப் பாட்டி என்னை கூப்ட்டு நிறுத்தி வந்து சாப்ட்டுட்டு போப்பான்னு சொன்னாங்க. அவுங்க பிள்ளை செத்து நாப்பது வருஷமாவுதான். அந்தப் புள்ளைக்கு படைச்ச சாப்பாடு இருக்குது, நீ சாப்ட்டுட்டு போப்பான்னு சொன்னாங்க.’
‘அதனால அந்தப் பாட்டி மேல இரக்கப்பட்டு உடனே சாப்புட உக்காந்துட்டியா?’
‘அதுமட்டும் காரணமில்லை அரசே. காலை நேரத்துல சாப்ட்டுட்டு போ தம்பின்னு யார் கூப்பிட்டாலும் அது அன்னலட்சுமியே உன்ன கூப்பிடற மாதிரின்னு நெனச்சி, அவுங்க கொடுக்கிற சாப்பாட்டை கட்டாயமா சாப்பிடணும்ங்கறது எங்க அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த மூனு வழிகள்ல ஒரு வழி அரசே. முதல்ல அந்தப் பாட்டி என்ன சாப்புட அழைச்ச சமயத்துல நானும் உங்களுக்குப் பிரசாதம் கொடுக்கிற அவசரத்துல வேணாம் பாட்டின்னு சொல்லிட்டு கெளம்பிட்டேன். ஒரு பத்து பதினஞ்சடி நடந்து போனப்பறம்தான் அப்பா சொன்ன வழி ஞாபகத்துக்கு வந்தது. உடனே மறுபடியும் திரும்பி பாட்டி சொன்னதை கேக்கறதுக்காக அவுங்க வீட்டுக்குள்ள போயிட்டேன்.’
மல்லிகார்ஜுனன் சொன்ன பதிலில் ஏதோ ஒரு சுவாரசியத்தை அடைந்தான் அரசன். உடனே ஆவலோடு அவனைப் பார்த்து ‘அது என்ன மூனு வழிகள்? என்ன சொன்னாரு உங்க அப்பா?’ என்று கேட்டான்.
‘அரசே. சின்ன வயசிலேர்ந்து எனக்கு எழுத்து கத்துக் கொடுக்கறதுக்கு எங்க அப்பா எவ்வளவோ முயற்சி செஞ்சி பார்த்தாரு. ஆனா ஒரு எழுத்து கூட எனக்கு புடிபடலை. எந்த எழுத்தைப் பார்த்தாலும் ஏதோ ஒரு உருவம் எழுந்து ஆடறமாதிரிதான் இருக்கும். அதனால அப்பா சாகற சமயத்துல படிப்புதான் உனக்கு ஏறாம போயிடுச்சி. உனக்கு நான் ஒரு மூனு வழிகளைச் சொல்லிக் கொடுக்கறேன். அதும்படி நட. ஒருநாளும் அதை மீறி நடக்காத. உன்னுடைய வாழ்க்கை நல்லபடியா இருக்கும்னு சொல்லிட்டு செத்துட்டாரு.’
‘பரவாயில்லை. உருப்படியான ஒரு யோசனையைத்தான் உனக்கு அவரு சொல்லிக் கொடுத்திருக்காரு. அது சரி, சாப்ட்டுப் போன்னு யார் சொன்னாலும் அன்னலட்சுமியே கூப்ட்டு சாப்புடச் சொல்றான்னு நெனச்சி சாப்பிடணும்ங்கறது ஒரு வழி. மிச்சமிருக்கிற ரெண்டு வழிகள் என்னென்ன?’
மல்லிகார்ஜுனன் ஒருகணம் எதுவும் பேசாமல் அரசனின் முகத்தையே பார்த்தபடி நின்றான்.
‘ஏன் என்னையே பார்க்கற? ஞாபகம் இல்லையா?’
‘இல்லை அரசே. ஞாபகம் இருக்குது.’
‘அப்ப சொல்லு.’
தொண்டையைச் செருமிக்கொண்டு ‘ஒவ்வொரு நாளும் காலையில எழுந்து குளிச்சிட்டு பூஜை செஞ்சி, நைவேத்தியம் செஞ்ச பிரசாதத்தை எடுத்துட்டுப் போய் அரசனைப் பார்த்து வணக்கம் சொல்லிட்டு குடுக்கணும்ங்கறது ஒரு வழி’ என்றான்.
‘ஓ. அந்த எண்ணம் இருக்கறதாலதான் உங்க அப்பா காலத்துலேர்ந்து இந்தப் பழக்கம் தொடர்ந்து வருதா?’
‘ஆமாம் அரசே.’
‘சரி. அடுத்த வழி?’
அவன் ஒருகணம் அமைதியாக அரசனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். ‘ஏன் தயங்கற? சொல்லு’ என்று அவனை ஊக்கப்படுத்தினார் அரசன்.
‘கண்ணு முன்னால தெரிஞ்சோ தெரியாமலோ ஏதாவது ஒரு பாவச்செயல் நடக்கறதைப் பார்க்கிறமாதிரி ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சிட்டா, நாம எதையுமே நம்ம கண்ணால பார்க்கலைங்கற மாதிரி கண்டும் காணாம போயிடணும்ங்கறது ரெண்டாவது வழி.’
அரசன் தன் புருவங்களை உயர்த்தி தன் வியப்பை வெளிப்படுத்தினான். ‘ஆச்சரியமா இருக்குது உங்க அப்பா சொன்ன வழி. கண்ணு முன்னால ஒரு அநியாயத்தைக் கண்டா, உடனே அதை எதிர்த்து தட்டி கேக்கணும்னு சொல்ற உலகத்துல கண்டும் காணாம போன்னு ஒருத்தர் ஒரு வழியைச் சொல்லிக் கொடுத்திருக்காருன்னா, நிச்சயமா அதுல நம்மால புரிஞ்சிக்க முடியாத ஒரு சூட்சுமம் இருக்கணும்’ என்றான்.
சிறிது நேரம் கழித்து ‘அது சரி மல்லிகார்ஜுனா, உங்க அப்பா செத்து பல மாசங்கள் ஆயிடுச்சி. அவர் சொன்ன மூனு வழிமுறைகளை நீயும் மீறாம இதுவரைக்கும் கடைபிடிச்சிட்டு வந்திருக்க. இல்லையா?’ என்று கேட்டான் அரசன்.
‘ஆமாம் அரசே’ என்று பணிவோடு பதில் சொன்னான் மல்லிகார்ஜுனன்.
‘இந்த இடைப்பட்ட காலத்துல, என்னைக்காவது நீ நேருக்கு நேர் எந்தப் பாவத்தையாவது கண்ணால கண்ட பிறகும் கூட, கண்டும் காணாம நடந்துபோற மாதிரியான சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்குதா?’ என்று கேட்டான் அரசன்.
இப்படி ஒரு சிக்கலாம கேள்வியை அரசன் கேட்பான் என மல்லிகார்ஜுனன் எதிர்பார்க்கவில்லை. எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் ஒருகணம் குழம்பினான்.
‘சொல்லு மல்லிகார்ஜுனா, எப்பவாவது அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சிருக்குதா?’
நீண்டநேரம் யோசனைக்குப் பிறகு அரசனின் கண்களைப் பார்த்தபடி ‘ஆமாம் அரசே. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஒரே ஒரு முறை அமைஞ்சிருக்குது’ என்றான்.
‘அப்படியா? எந்த மாதிரியான சந்தர்ப்பம் அது? எப்ப பார்த்த? எதைப் பார்த்த?’
பதில் சொல்லாமல் ஒரு பெருமூச்சு வாங்கினான் மல்லிகார்ஜுனன். அதற்குள் அவசரம் கொண்ட அரசன் ‘சொல்லு மல்லிகார்ஜுனா’ என்று தூண்டினான்.
‘நேத்துதான் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சது அரசே.’
‘என்ன பார்த்த? விளக்கமா சொல்லு மல்லிகார்ஜுனா.’
மல்லிகார்ஜுனன் அரசன் மீது வைத்திருந்த பார்வையை விலக்கி ஜன்னல் பக்கமாக காற்றிலசையும் திரைச்சீலையைப் பார்த்தபடி, முதல்நாள் கோவிலில் இருந்தபோது வாளையும் கேடயத்தையும் எடுத்து வருமாறு அரசன் சொன்னதையும் அரசனின் கட்டளைப்படி அரண்மனை அறைக்கு வந்ததையும் அந்தத் தனியறையுல் அரசியும் உதவியாளும் யாரும் பார்க்கக்கூடாத கோலத்தில் ஒன்றாக உருண்டு கிடந்ததையும் வெகு அருகிலேயே அவர்கள் படுக்கையில் இருந்தபோதிலும் அவர்களைப் பார்க்கவே இல்லை எனபதுபோல அந்த இடத்திலிருந்து விலகி வாளையும் கேடயத்தையும் தேடி எடுத்துக்கொண்டு கோவிலுக்கு ஓடிவந்து கொடுத்ததையும் விரிவாக ஒவ்வொரு காட்சியாக எடுத்துரைத்தான்.
மல்லிகார்ஜுனன் சொன்னதைக் கேட்டு இடிந்து உட்கார்ந்தான் அரசன். ஒரு சில நிமிடங்கள் அவனால் எதையும் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. அரசியின் விவரணை, உதவியாளின் ஆலோசனை அனைத்தையும் அவர் இன்னொருமுறை நினைத்துப் பார்த்தான். இருவரும் திட்டமிட்டு அந்தச் சிறுவனை அழிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்பதை அவனால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ஏதோ இறைவனின் அருளும் அவன் அப்பாவின் ஆசிர்வாதமும் அவனைக் காப்பாற்றிவிட்டன.
அரசனாக இருப்பவன் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்கக்கூடாது என்பதையும் எதையும் தீர விசாரித்த பிறகே எடுக்கவேண்டும் என்பதையும் அவன் புரிந்துகொண்டான். உதவியாளின் ஆலோசனையைக் கேட்டு மல்லிகார்ஜுனன் விஷயத்தில் முடிவெடுத்ததை நினைத்து உண்மையிலேயே வருத்தம் கொண்டான். இனியாவது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என மனத்துக்குள் உறுதி பூண்டான். தன் மனைவியான அரசியின் விஷயத்திலிருந்தே அதை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.
அருகில் நின்றிருந்த வேலைக்காரனை அழைத்து ‘உடனே அரசியை அழைத்து வா’ என்று சொல்லி அனுப்பினான். அரசனின் முகத்தில் தெரிந்த உறுதியைப் பார்த்து மல்லிகார்ஜுனன் சற்றே அச்சம் கொண்டான். ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான்.
சிறிது நேரத்தில் வேலைக்காரன் அரசியை அழைத்துவந்தான். அரசனுக்கு அருகில் மல்லிகார்ஜுனன் நின்றிருப்பதைப் பார்த்ததுமே அவள் முகம் வெளுத்துவிட்டது. அவள் உடல் மெல்ல நடுங்கத் தொடங்கியது.
‘அரசி, நான் கேக்கிற கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்லணும்.’
‘கேளுங்க அரசே.’
‘உனக்கும் நம்ம உதவியாளுக்கும் தொடர்பு இருப்பது உண்மையா?’
அரசியின் தலை கவிழ்ந்தது. அவள் உடல் நடுங்கியது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. ‘ஆமாம்’ என்பதன் அடையாளமாக அவள் தலையை அசைத்தாள்.
அடுத்து ‘நீங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்த சமயத்துல இந்தப் பையன் பார்த்தது உண்மையா?’ என்று கேட்டான். அந்தக் கேள்விக்கும் ‘ஆமாம்’ என்பதன் அடையாளமாக அவள் தலையை அசைத்தாள்.
‘இந்தப் பிரதேசத்துடைய குடிமக்களா இருந்தாலும் சரி, அரசகுடும்பத்தைச் சேர்ந்தவங்களா இருந்தாலும் சரி, என் மண்ணுல எல்லோருக்கும் ஒரே நீதிதான். உப்பு தின்னவங்க தண்ணி குடிச்சித்தான் ஆவணும். தப்பு செஞ்சவங்க தண்டனை அனுபவிச்சித்தான் ஆவணும்’ என்றான் அரசன்.
எல்லோருமே அவன் அடுத்து சொல்லவிருக்கும் தண்டனைக்குறிப்புக்காக அவன் முகத்தையே பார்த்திருந்தனர்.
‘நம்ம பிரதேசத்துல எண்ணெய்க்கொப்பரைத் தண்டனைதான் அதிகபட்ச தண்டனை. நாளைக்கு காலை சூரியன் உதிக்கிற நேரத்துல அரசிக்கு அந்தத் தண்டனை வழங்கப்படும். இதுதான் என் தீர்ப்பு. இப்பவே கொப்பரைத் தோப்புக்கு ஆளுங்களை அனுப்பி அதுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லுங்க. அதுவரைக்கும் அரசியை அறைக்குள்ளேயே வீட்டுக்கைதியா பாதுகாப்பா பாத்துக்குங்க.’
அரசன் தன் தீர்ப்பைச் சொல்லிமுடித்ததும், அரசனின் முகத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு பெருமூச்சுடன் அமைதியாக தன் அறையை நோக்கி நடந்தாள் அரசி. அவளைச் சுற்றி காவலர்களும் நடந்தனர். அடுத்த கணமே, இன்னொரு காவலன் கொப்பரைத் தோப்புக்குச் செய்தியை எடுத்துக்கொண்டு சென்றான்.
மல்லிகார்ஜுனன் எதுவும் புரியாமல் நின்ற இடத்திலேயே தயங்கித்தயங்கி நின்றான். அந்த இடத்தைவிட்டு போகலாமா, வேண்டாமா என அவனால் முடிவெடுக்கமுடியவில்லை.
சில கணங்களுக்குப் பிறகு மெல்லிய நிதானமான குரலில் ‘மல்லிகார்ஜுனா’ என்று அழைத்தான் அரசன். ‘அரசே’ என்றபடி அவன் நெருங்கிச் சென்றான்.
‘உங்க அப்பா உனக்குச் சொன்ன மூனு வழிகள் ஒரு கவசம் மாதிரி உனக்கு எப்பவும் துணையா இருக்கும். அதிலிருந்து ஒருநாள் கூட நீ விலகி நடக்காதே.’
‘சரி அரசே.’
‘அத்துடன் நீ இன்னொரு வேலையையும் எனக்காகச் செய்யணும்.’
‘என்ன அரசே?’
‘இந்த அரண்மனையில எனக்கு ஒரு நம்பிக்கையான உதவியாள் தேவைப்படுது. நீ எனக்கு உதவியாளா இருக்கணும். முடியுமா?’
‘சரி அரசே.’
அடுத்த நாளிலிருந்து மல்லிகார்ஜுனன் அரசனின் உதவியாளாக அந்த அரண்மனையில் வலம்வந்தான். அடுத்து சில மாதங்களுக்குப் பிறகு வேறொரு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அரசன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.
0