ஓர் ஊரில் ஒரு விதவைப்பெண்மணி வசித்துவந்தாள். அவளுடைய பெயர் கங்கம்மா. அவளுடைய கணவர் நோய்வாய்ப்பட்டு நாலைந்து மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்து இறந்துவிட்டார். அவருக்குச் சொந்தமாக ஊருக்கு வெளியே ஒரு துண்டு நிலம் இருந்தது. அது மானாவாரிப் பிரதேசம். மழை பொழியும் காலத்தில் மட்டுமே விவசாயம் செய்யமுடியும். அந்த நிலத்தில் விதைத்து அறுவடை செய்யும் தானியங்களையே அந்தக் குடும்பம் உண்டு உயிர்வாழ்ந்தது.
கங்கம்மாவுக்கு வாலிப வயதையடைந்த இரண்டு பிள்ளைகள் இருந்தனர். மூத்தவன் பெயர் தொட்டராஜு. இளையவன் பெயர் சிக்கராஜு.
பத்து நாட்களாக அந்த ஊரில் தொடர்ந்து மழை பொழிந்தது. அதனால் நிலத்தில் ஈரம் நன்றாக ஊறியிருந்தது. சோளம் விதைக்க அது சரியான நேரம் என்று நினைத்தாள் கங்கம்மா.
இரவு நேரத்தில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு தூங்கப் போவதற்கு முன்னால் தொட்டராஜுவிடம் ‘சோளம் விதைக்க இதுதான் நல்ல நேரம். நாளைக்கு காலையிலேயே நீ நம்ம மாடுகளை ஓட்டிட்டுப் போய் ஏரோட்டற வேலையைத் தொடங்கு. ரெண்டுநாள்ல உழுது முடிச்சிட்டா விதைக்கறதுக்கு சுலபமா இருக்கும்’ என்றாள்.
‘சரிம்மா’ என்றான் தொட்டராஜு.
‘நானும் சிக்கராஜுவும் பரண்லேர்ந்து விதைசோளத்தை எடுத்து சுத்தப்படுத்தி உலர வைக்கறோம். அப்பதான் உழுவற வேலை முடிஞ்சதும் விதைக்கறதுக்கு சரியா இருக்கும்’ என்று மீண்டும் சொன்னாள் கங்கம்மா.
‘சரிம்மா. நான் காலையிலயே கெளம்பிப் போறேன்’ என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டான் தொட்டராஜு.
அவன் வயதையொத்த பல இளைஞர்கள் அந்தத் தெருவில் அவனுக்கு நண்பர்களாக இருந்தனர். அவர்களும் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. ஆயினும் அவர்களில் ஒருவர் கூட வயல்வெளி பக்கம் எட்டிக்கூடப் பார்த்ததில்லை. காலையில் சாப்பிட்டுவிட்டு பளிச்சென்று உடை உடுத்திக்கொண்டு நகரத்துக்குச் சென்றுவிடுவார்கள். அங்கேயே சாப்பாட்டுக்கடைகளில் விற்கும் சுவைசுவையான உணவுகளை உண்டு பல இடங்களில் திரிந்து பொழுதுபோக்கிவிட்டு இரவு கவியத் தொடங்கும் சமயத்தில் ஊருக்குத் திரும்பி வருவார்கள். அரசமரத்தடியில் உட்கார்ந்து நகரத்துக்குப் போய்வந்த கதையை விவரணைகளோடு சொல்வார்கள். வயல்வேலைகளை முடித்துக்கொண்டு சோர்வோடு அந்த மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் தொட்டராஜுவைப் போன்ற இளைஞர்கள் அக்கதைகளைக் கேட்டு ஏக்கத்தோடு பெருமூச்சு விடுவார்கள்.
அந்த இளைஞர்களின் சுகவாழ்க்கையின் கதைகளைக் கேட்டுக்கேட்டு அவர்களைப் போன்ற வாழ்க்கை தனக்கு ஏன் அமையவில்லை என்று வேதனையோடு நினைத்து வருத்தத்தில் மூழ்குவான் தொட்டராஜு. அந்த வருத்தத்தை வெல்வதற்காக, அவர்களிடம் புழங்குவதுபோல தன் கையிலும் பணம் புழங்கினால் என்னென்ன செய்யலாம் என்று திட்டம் வகுத்து கற்பனையில் மிதக்கத் தொடங்குவான்.
அந்தக் கற்பனை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனை மகிழ்ச்சியுள்ளவனாக மாற்றியது. அந்த மகிழ்ச்சியில் திளைத்தவனாக வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு படுக்கச் சென்றுவிடுவான்.
காலையில் எழுந்ததுமே நிலத்தை உழுவதற்காகச் செல்லவேண்டும் என்று அம்மா கூறிய சொற்கள் அவனுடைய கற்பனை மகிழ்ச்சியைக் கலைத்துவிட்டன. ஏராளமான செல்வத்தோடும் வசதிகளோடும் எங்கோ ஓரிடத்தில் பிறந்து கொண்டாட்டத்தோடு வளர்ந்திருக்கவேண்டியவன் விதிவசத்தால் இந்தச் சின்ன கிராமத்தில் இப்படிப்பட்ட வறுமைச்சூழல் கொண்ட குடும்பத்தில் பிறந்து எல்லாப் பொறுப்புகளையும் சுமந்துகொண்டு வேதனையோடு வாழும் வாழ்க்கையை வாழும்படி அமைந்துவிட்டது என நினைத்து நினைத்து மனம் குமைந்தான். எப்போது தூங்கினோம் என்பது தெரியாமலேயே ஏதோ ஒரு கட்டத்தில் தூங்கிவிட்டான்.
பொழுது புலர்ந்ததும் தொட்டராஜுவை எழுப்பினாள் கங்கம்மா. அவன் விருப்பமில்லாமலேயே எழுந்து நிலத்துக்குச் செல்ல தயாரானான். தொழுவத்துக்குச் சென்று மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்தினான். பிறகு பின்கட்டுக்குச் சென்று சுவரோரமாக சாய்த்துவைத்திருந்த கலப்பையையும் மண்வெட்டியையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
‘இந்தா தொட்டராஜு. இதுல கஞ்சி வச்சிருக்கேன். பசிக்கும்போது குடி. மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடு’ என்றபடி துணிப்பொதிக்குள் வைத்துக் கட்டிய கஞ்சிக்கலயத்தைக் கொடுத்தாள் கங்கவ்வா.
மெளனமாக கையை நீட்டி கலயத்தை வாங்கிக்கொண்டான் தொட்டராஜு. பிறகு ‘சரி, நான் வரேன்’ என்றபடி மாடுகளை ஓட்டியபடி நிலத்தை நோக்கிச் சென்றான்.
ஊரைக் கடந்ததும் வயல்வெளி தொடங்கியது. பல வயல்களில் உழவுவேலை நடந்துகொண்டிருந்தது. சில பணக்கார விவசாயிகள் தம் நிலங்களில் சொந்தமாகக் கிணறு தோண்டிவைத்திருந்தனர். மழையின் காரணமாக அக்கிணறுகளில் நீர் நிறைந்திருந்தது. அவர்கள் ஏற்றம் வழியாக நிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்தபடி தம் நிலத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தான் தொட்டராஜு. ஒரு கணம் ஏற்றத்தில் நின்று தண்ணீர் இறைப்பவனாக அவன் தன்னை நினைத்துக்கொண்டான். ஒரு கிணறும் ஏற்றமும் பல வேலைகளை எளிதாக்கிவிடும் என்று அவனுக்குத் தோன்றியது.
அவர்களுடைய நிலத்துக்கு அருகிலேயே வரப்போரத்தில் ஒரு வேலமரம் நின்றிருந்தது. அதன் கிளையில் தான் கொண்டுவந்திருந்த கஞ்சிக்கலயத்தை முதலில் கட்டித் தொங்கவிட்டான் தொட்டராஜு. பிறகு மாடுகளின் கழுத்தில் கலப்பையைப் பொருத்தி ஏரோட்டத் தொடங்கினான். ஈரம் படிந்த மண்ணாக இருந்ததால், அவன் கொடுத்த அழுத்தத்துக்கு கலப்பை ஆழமாக இறங்கி மண்ணைப் புரட்டிப் போட்டது. குளிர்ந்த இளங்காலைக்காற்று இதமாக இருந்தது. அவன் மெல்ல மெல்ல வேலையில் மூழ்கியதும், வழக்கமான அவனுடைய மனக்குறைகள் அவனைவிட்டு அகன்றிருந்தன.
வானத்தில் சூரியன் மெல்ல மெல்ல மேலேறி வந்து சுட்டெரிக்கத் தொடங்கியது. அவன் வயிறு பசியை உணர்ந்தது. உடனே அவன் மாடுகளை ஓட்டிவந்து நிழலோரமாக நிறுத்திவிட்டு கலயத்தைத் திறந்து கஞ்சியைக் குடித்தான். வயிற்றில் உணவு நிறைந்ததும் அவன் களைப்பு மறைந்தது.
மீண்டும் அவன் ஏரோட்டத் தொடங்கினான். தன்னிடம் ஏராளமான செல்வம் இருந்தால் என்னென்ன செய்து வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்ளலாம் என்பதையொட்டி அவன் நெஞ்சில் எண்ணற்ற கனவுகள் இருந்தன. அந்தப் பகல்கனவுகளில் திளைத்தபடி வேலையில் ஈடுபட்டதால் அவன் மனம் களைப்பை உணரவில்லை.
‘என்னப்பா தொட்டராஜு. சாப்புடப் போகலையா? பொழுது உச்சிவேளை ஆயிடுச்சே. வெயில் உறைக்கறதுகூடவா தெரியலை?’
அடுத்த ஊரிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு பெரியவர் அவனை அழைத்துக் கேட்டார். அப்போதுதான் அவன் கனவு கலைந்தது. அசட்டுச் சிரிப்போடு அந்தப் பெரியவரிடம் ‘இதோ, இந்தச் சுத்து முடிச்சிட்டு கெளம்பிடுவேன் பெரியப்பா’ என்று பதில் சொன்னான். ‘சீக்கிரம் போ. பசியோடு வேலை செஞ்சா, இந்த வெயிலுக்கு மயக்கம் வரும்’ என்று சொல்லிக்கொண்டே சென்றார் அந்தப் பெரியவர்.
தன் கனவின் விசை பசியைக்கூட மறக்கச் செய்துவிட்டதை நினைத்து அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே அவனுக்கு அப்போது கடுமையாகப் பசித்தது. கஞ்சியைக் கொடுத்தமாதிரி இந்த அம்மா சாப்பாட்டையும் கொடுத்திருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. சாப்பாட்டுக்காக வீட்டுக்குச் சென்று திரும்புவதை நினைத்தாலே சலிப்பாக இருந்தது. சலித்துக்கொண்டாலும் வேறு வழியில்லை. அரைகுறையாக இருக்கும் வட்டத்தை முடித்துவிட்டுப் புறப்படலாம் என நினைத்தபடி கலப்பையை அழுத்தி ஓட்டினான்.
ஒரு பத்தடி தொலைவிலேயே மண்ணுக்குள் அழுத்திய கலப்பையின் நுனி ஏதோ ஒரு பொருளுடன் மோதியதுபோல நங்கென்று ஒரு சத்தம் கேட்டது. ஒருகணம் அவன் எதுவும் புரியாமல் திகைத்து நின்றுவிட்டான். உண்மையிலேயே அந்தச் சத்தம் பூமியிலிருந்து வந்ததா அல்லது தன் கற்பனையா என அவனுக்கு ஒருகணம் சந்தேகமாக இருந்தது. கலப்பையை மெல்ல பின்வாங்கி இழுத்து மீண்டும் அழுத்தி ஓட்டினான். ஏதோ உலோகப்பொருளில் மோதியதைப்போல மீண்டும் நங்கென்று சத்தம் கேட்டது.
மாடுகளை ஓரமாக இழுத்து நிறுத்திவிட்டு அந்தச் சத்தம் வந்த இடத்துக்குச் சென்று குனிந்து பார்த்தான். மேலோட்டமான பார்வைக்கு எதுவும் தென்படவில்லை. குத்துக்காலிட்டு உட்கார்ந்து கலப்பையின் அழுத்தத்தில் குழிவான அந்த இடத்திலிருந்து மண்ணை அப்புறப்படுத்தினான். விரல்களாலேயே கிளறிக் கிளறி அந்த இடத்தை ஆழமாகத் தோண்டினான். அப்போது ஓரிடத்தில் ஏதோ உலோகப் பொருளின் மீது அவன் விரல்கள் மோதிவிட்டுத் திரும்புவதை உணர்ந்தான். உடனே உற்சாகம் கொண்டு வேகவேகமாக அதே இடத்தில் ஆழமாகத் தோண்டி மண்ணை வெளியே இழுத்தான். அங்கே ஒரு உலோகக்குடம் இருந்தது.
தொட்டராஜு அந்த உலோகக்குடத்தை ஆவலோடு எடுத்து, அதன் மீது ஒட்டியிருந்த மண்ணையெல்லாம் அப்புறப்படுத்தினான். குடத்திற்குள் மண் நிறைந்திருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்குச் சற்றே ஏமாற்றமாக இருந்தது. ஆனால் குடத்தை இழுக்கும்போதும் உருட்டும்போதும் குலுக்கும்போதும் வினோதமான ஒரு சத்தம் எழுந்ததைக் கேட்டதும் அவனுக்குள் மீண்டும் ஆவல் துளிர்த்தது.
ஒருகணம் தான் செய்துவந்த வேலையை நிறுத்திவிட்டு அக்கம்பக்கம் திரும்பி பார்வையைச் சுழற்றினான். எங்கும் ஆள்நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்ட பிறகு குடத்தைக் கவிழ்த்து உள்ளேயிருந்த மண்ணையெல்லாம் கிளறி வெளியே எடுத்தான். மண்ணுக்குக் கீழே வட்டமான அமைப்பில் ஏராளமான நாணயங்கள் இருந்தன. ஏற்கனவே பானையைக் குலுக்கியபோது எழுந்த சத்தத்துக்குக் காரணம் அந்த நாணயங்களே என்பதை அவன் புரிந்துகொண்டான்.
குடத்திலிருந்து ஒரு நாணயத்தை எடுத்து அதன் மீது ஒட்டியிருந்த மண்ணையெல்லாம் சுத்தமாகத் துடைத்துவிட்டு உள்ளங்கையில் வைத்துப் பார்த்தான். சுடர்விட்ட வெயிலில் அந்த நாணயம் மின்னியது. முதல் பார்வையிலேயே அவை அனைத்தும் சுத்தமான தங்கம் என்பதை அவன் உணர்ந்துகொண்டான், குடத்துக்குள் கையைவிட்டு அந்த நாணயங்களை கை கொள்ளும் அளவுக்கு எடுத்துப் பார்த்தான். பார்க்கப்பார்க்க அவனுக்கு பரவசமாகவும் மயக்கமாகவும் இருந்தது. தன் கனவுகள் அனைத்தும் நிகழும் காலம் உதயமாகிவிட்டது என நினைத்துக்கொண்டான். பசியை மறந்து மின்னும் தங்க நாணயங்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
ஒரு கட்டத்தில் பசி பொறுக்கமுடியாத புள்ளியைத் தொட்டுவிட்டது. சரி, வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு வரலாம் என முடிவெடுத்தான். அவன் தான் கண்டெடுத்த தங்க நாணயக்குடத்தை வேறு யாரும் பார்த்துவிடக்கூடாது என நினைத்தான். தான் கண்டெடுத்த குடம் தனக்குமட்டுமே சொந்தம் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அந்த நாணயங்களிலிருந்து ஒரே ஒரு நாணயத்தைக்கூட பிறரோடு பங்கிட்டுக்கொள்ள அவன் மனம் தயாராக இல்லை. அவனுடைய அம்மாவுக்கும் தம்பிக்கும் கூட அதைத் தெரிவிக்கக்கூடாது என்று அவன் மனம் திட்டமிட்டது. யாருக்கும் தெரியாமல் அந்த ஊரைவிட்டு வெளியேறி புதியதொரு ஊரில் புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கி ஆனந்தமாக வாழவேண்டும் என்று நினைத்தான்.
அக்கணமே, ஒருவருக்கும் தெரியாமல் அந்த நாணயங்களை வைத்திருந்து எப்படிச் செலவு செய்து எப்படிப் பெரிய மனிதனாக உலவுவது என்னும் கேள்வி அவன் நெஞ்சில் எழுந்தது. அந்தக் கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடியாமல் அவன் தடுமாறினான். முதலில் சாப்பிட்டுவிட்டு வருவோம், மற்றவற்றையெல்லாம் பிறகு யோசித்துக்கொள்ளலாம் என கடைசியாக முடிவெடுத்தான்.
உடனே அந்தக் குடத்தை அதைக் கண்டுபிடித்த இடத்திலேயே இன்னும் ஆழமாகப் பள்ளத்தைத் தோண்டி அதற்குள் வைத்துவிட்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டான். வயலிலிருந்து நாலைந்து அடி தொலைவுக்கு அப்பால் அவனால் நடக்கமுடியவில்லை. அவனுடைய எண்ணம் முழுதும் அந்த நாணயக்குடத்தின் மீதே பதிந்திருந்தது. அதைவிட்டு வேறு எதையும் அவனால் சிந்திக்கமுடியவில்லை. அதனால், மீண்டும் திரும்பி வந்து குடத்தைப் புதைத்த இடத்துக்கு அருகிலேயே வந்து உட்கார்ந்துகொண்டான்.
சிறிது நேரத்துக்குப் பிறகு நடமாட்டமே இல்லாத அந்தப் பாதையில் அவனை நோக்கி அவனுடைய தம்பி சிக்கராஜு நடந்துவருவதைப் பார்த்தான் தொட்டராஜு. ‘இவன் ஏன் இந்த நேரத்துல இங்க வரான்? இவன் இந்த நாணயங்களைப் பார்த்தா, இவனுக்கும் பாதிப் பங்கு தரணுமே’ என்று அவனுக்குத் தோன்றியது. சிக்கராஜு அருகில் நெருங்கிவரும் வரை தொட்டராஜு ஒன்றும் புரியாமல் குழப்பத்துடனே நின்றிருந்தான்.
அருகில் வந்து நின்ற தம்பியிடம் ‘எதுக்குடா இந்த வெயில்ல வந்த?’ என்று கேட்டான்.
‘அம்மாதாண்ணே அனுப்பி வச்சாங்க’ என்றான் சிக்கராஜு.
‘ஏன்?’
‘நீ சாப்பிட வருவேன்னு அம்மா ரொம்ப நேரமா காத்திருந்தாங்கண்ணே. நீ வராததால, ஏரோட்ட நிறுத்த மனசில்லாம பசியோடு ஓட்டிட்டிருக்கன்னு நெனச்சிட்டாங்க. அதனாலதான் ஒரு தூக்குவாளியில சாப்பாட்டை போட்டு கொண்டுபோய் கொடுத்துட்டு வான்னு சொல்லி அனுப்பிவச்சாங்க. வாண்ணே, கை கழுவிட்டு வந்து சாப்புடுண்ணே.’
சிக்கராஜுவின் சொற்கள் எதுவுமே தொட்டராஜுவின் காதில் விழவில்லை. அவன் பார்வை நாணயக்குடம் இருக்குமிடத்தின் மீது பதிந்துவிடக்கூடாது என்பதைப்பற்றிய பதற்றத்திலேயே மூழ்கியிருந்தான். சிக்கராஜுவை அங்கிருந்து விலக்குவது எப்படி என பல கோணங்களில் அவன் மனம் திட்டமிட்டது.
‘எனக்குப் பசிக்கலைடா. எனக்கு சாப்பாடு வேணாம். எடுத்தும் போயி அம்மாகிட்டயே கொடுத்துடு. சாயங்காலமா வந்து சாப்ட்டுக்கறேன்னு சொல்லு. போ’ என்று சிக்கராஜுவைப் புறப்படச் சொன்னான்.
‘பசியை எப்படிண்ணே தாங்குவ? இந்த வெயிலுக்கு மயக்கம் வந்துடும். கொஞ்சமாச்சிம் சாப்ட்டுப் போண்ணே’ என்று தொட்டராஜுவை அழைத்தான் சிக்கராஜு.
‘வேணாம்டா, சொன்னா கேளு. போடா’ என்று சலிப்பாகச் சொன்னான் தொட்டராஜு.
அந்த நேரத்தில் சிக்கராஜுவின் பார்வை குடத்தைப் புதைத்து மூடிவைத்த மேட்டின் மீது படிந்தது. உடனே ஆர்வத்துடன் ‘அங்க என்னண்ணே, எதையோ புதைச்சிவைச்ச மேடு மாதிரி இருக்குது? என்று கேட்டுக்கொண்டே வேகமாக அந்த இடத்தை நோக்கி நடந்துவந்தான்.
‘அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, நீ மொதல்ல கெளம்பு’ என்று குறுக்கில் நின்று அவனைத் தடுத்தான் தொட்டராஜு. ஒருவேளை அவன் நாணயக்குடத்தைக் கண்டுபிடித்தால் அவனுக்கும் பங்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணமே அவன் மனத்தில் மீண்டும் மீண்டும் எழுந்தது. தனக்குக் கிடைத்த செல்வத்தை மற்றவர்களோடு பங்கிட்டுக்கொள்ள அவன் மனம் கொஞ்சம்கூட இடம்தரவில்லை. மொத்த செல்வத்தையும் தானே வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவன் மனம் நினைத்தது.
அவன் தடுக்கத்தடுக்க ‘என்னமோ இருக்கறமாதிரி தோணுதுண்ணே. ஒரு நிமிஷம் இந்தப் பக்கமா நவுந்து நில்லுண்ணே. நானே பார்க்கறேன்’ என்றபடி முன்னால் வந்தான் சிக்கராஜு.
அதை எதிர்பார்க்காத தொட்டராஜு ‘இவ்ளோ சொல்றேன். என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? போடா இங்கேர்ந்து’ என்று அவனை வேகமாகத் தள்ளிவிட்டான்.
சிக்கராஜு அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தடுமாறி கீழே விழுந்தான். ‘நான் என்ன உன்னையா தோண்டிக் காட்டுன்னு சொல்றேன். நானே தோண்டிப் பார்த்துட்டு போறேன். அதுக்கு ஏண்ணே நீ இந்த அளவுக்குக் கோபமா பேசற?’ என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் அதே இடத்தை நோக்கி வந்தான்.
அவனுடைய செய்கை தொட்டராஜுவைச் சீற்றம் கொள்ளவைத்தது. ஆத்திரத்தோடு அருகிலிருந்த மண்வெட்டியை எடுத்து சிக்கராஜுவின் தலையில் ஓங்கி அடித்தான். என்ன நடந்தது என்று புரிந்துகொள்வதற்கு முன்பேயே அவன் தலைமீது நாலைந்து அடிகள் விழுந்துவிட்டன. தலை உடைந்து ரத்தம் பொங்கிவந்தது. நிலைதடுமாறி ‘அம்மா’ என்று அலறியபடி தரையில் விழுந்தான். அக்கணமே சிக்கராஜுவின் உயிர் பிரிந்தது.
சிறிது நேரத்துக்குப் பிறகுதான் நடந்தது என்ன என்பதை தொட்டராஜுவின் மனம் முழுமையாக உணர்ந்துகொண்டது. அப்போதும் தம்பியைக் கொன்றுவிட்டோம் என்கிற உணர்வைவிட, தம்பியிடமிருந்து புதையலைக் காப்பாற்றிவிட்டோம் என்னும் உணர்வே அவனுக்குள் மேலோங்கியிருந்தது. சிக்கராஜுவுடைய உடலை இழுத்துச் சென்று அருகிலிருந்த ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டான்.
அதற்குப் பிறகு அவனால் உழவு வேலையைத் தொடரமுடியவில்லை. அந்த நாணயக்குடத்தை எடுத்துக்கொண்டு எந்த ஊருக்குச் செல்வது, தன் புதிய வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது என்பதைப்பற்றிய யோசனைகளிலேயே அவன் மூழ்கியிருந்தான்.
‘சாப்ட்டியா தொட்டராஜு’ என்னும் குரலைக் கேட்ட பிறகுதான் அவன் தன் சுயநினைவை அடைந்தான். தன் அம்மா தனக்கு எதிரில் நின்றிருப்பதைப் பார்த்து வியப்பில் மூழ்கினான். அவள் வருகையைக் கவனிக்காத அளவுக்கு சிந்தனையில் மூழ்கியிருந்ததை நினைத்து வெட்கப்பட்டான். அவளுக்குப் பதில் சொல்ல வார்த்தை எழாதவனாகத் தடுமாற்றத்தில் நின்றான்.
‘நீ வருவ வருவன்னு ரொம்ப நேரமா பார்த்துட்டிருந்தேன். நீ பசி தாங்கமாட்டியேன்னு அதுக்கப்புறமாதான் தம்பிகிட்ட சாப்பாடு கொடுத்தனுப்பினேன். அவனும் திரும்பி வரலைன்னதும் எனக்கு ஒரே குழப்பமா போயிடுச்சி. உனக்கு சாப்பாடு கிடைச்சிதா, நீ சாப்ட்டியாங்கற கவலையே எனக்கு பெரிய கவலையா இருந்திச்சி. எதுக்கும் ஒரு எட்டு நடந்துபோய் பார்த்துட்டு வந்துடலாம்ன்னுதான் நானே கெளம்பி வந்தேன்’ என்றபடி கங்கவ்வா தொட்டராஜுவைப் பார்த்தாள். அவன் பதில் எதுவும் சொல்லாமல் கீழே இருந்த தூக்குவாளியைப் பார்த்தபடி நின்றிருந்தான். கங்கம்மாவும் அப்போதுதான் தூக்குவாளியைப் பார்த்தாள்.
‘ஓ, சாப்ட்டு முடிச்சிட்டியா? சாப்ட்டுட்டுதான் உக்காந்திருக்கியா? அது சரி, தம்பி எங்க?’ என்றபடி அவள் குனிந்து தூக்குவாளியை எடுத்தாள்.
தூக்குவாளியின் எடையைப் பார்த்து சந்தேகத்தோடு வேகமாகத் திறந்து பார்த்தாள் கங்கம்மா. சாப்பாடு அப்படியே இருப்பதைப் பார்த்து அவள் குழம்பினாள். ‘ஏன்டா இன்னும் சாப்புடாம இருக்க? இந்த வெயில்ல இப்படி பட்டினியோடு வேலை செஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆவும்?’ என்று கேட்டாள்.
‘பசிக்கலைம்மா. அதனாலதான் சாப்புடலை’ என்று ஆர்வமில்லாமல் பதில் சொன்னான் தொட்டராஜு.
கங்கம்மா சில கணங்கள் குழப்பத்தோடு அவன் முகத்தைப் பார்த்தாள். ‘சரி, தம்பி எங்க?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
முதலில் ஒரு வேகத்தில் ‘அவன் அப்பவே கெளம்பிப் போயிட்டானே’ என்று பதில் சொன்னான் தொட்டராஜு. ‘போயிட்டானா? நான் இதே வழியிலதான வந்தேன். என் கண்ணுல படவே இல்லையே’ என்றாள் கங்கம்மா.
‘ஊருக்குள்ள போக இது ஒன்னுதான் வழியா? வேற வழியா போயிருப்பான்’ என்று அவசரமாக சிடுசிடுத்த குரலில் பதில் சொன்னான் தொட்டராஜு. அவன் குரலில் தென்பட்ட எரிச்சலைக் கண்டு அமைதியிழந்தாள் கங்கம்மா. ஏதோ ஒன்று பிழையாக நடப்பதுபோல அவள் மனம் உணர்ந்தது. ‘சரி, நானே போய் தேடிப் பார்க்கறேன். நீ சீக்கிரமா சாப்ட்டுட்டு ஏரோட்டற வேலையைப் பாரு’ என்று புறப்படுவதற்காகத் திரும்பினாள்.
‘சின்ன பையனா அவன்? எங்கனா போயிருப்பான். அவனா வீட்டுக்கு வருவான். நீ எங்கயும் சுத்தி அலையாம நேரா வீட்டுக்குப் போ’ என்றான் தொட்டராஜு. அப்போதுதான் அவன் குரல் ஓரளவு இயல்புநிலைக்குத் திரும்பியது. கங்கம்மா அந்தச் சொற்களைக் காதில் வாங்கியதாகவே காட்டிக்கொள்ளவில்லை.
திரும்பிய நேரத்தில் ‘அங்க என்ன? அந்த இடத்துல மட்டும் என்னமோ மேடா இருக்குது’ என்று குடம் புதைக்கப்பட்டிருந்த மண்மேட்டைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள் கங்கம்மா. கேட்டுக்கொண்டே அந்த மேட்டுக்கு அருகில் சென்றாள்.
‘அங்க எல்லாம் எதுக்கும்மா போற? மண்ணுக்கு அடியில ஏதாவது மரத்துடைய வேரா இருக்கும்’ என்று வேகமாக குறுக்கில் நின்று தடுத்தான்.
அவனுடைய வேகம் கங்கம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘ஒங்க அப்பா காலத்துலேர்ந்து நான் இந்த நிலத்தைப் பார்த்துட்டிருக்கேன். இங்க எந்த மரமும் எந்தக் காலத்துலயும் இருந்ததில்லை’ என்று அலட்சியமாகச் சொல்லிக்கொண்டே அந்த மேட்டை நெருங்கினாள்.
‘அம்மா, போவாதம்மா, நில்லும்மா. சொல்றதை கேளும்மா’ என்றபடி இரண்டடி முன்னால் சென்று கங்கம்மாவின் கையைப் பிடித்து இழுத்தான். கங்கம்மா அவன் கைகளை உதறிவிட்டு அந்த மேட்டை நோக்கி நடந்தாள்.
அதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத தொட்டராஜு ஒரே கணத்தில் குனிந்து மண்வெட்டியை எடுத்து அவள் தலையின் மீது ஓங்கியடித்தான், திகைத்த பார்வையுடன் அவள் திரும்பிப் பார்ப்பதற்குள் மீண்டும் மீண்டும் அவள் தலையிலேயே தாக்கினான். அவள் தலை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தாள்.
தன் தாயைத் தானே கொன்றுவிட்டோம் என்பதை அவன் தாமதமாகவே உணர்ந்தான். முதலில் அவனுக்குத் தன் மீதே வெறுப்பும் குற்ற உணர்வும் எழுந்தன. அக்கணமே தனக்குக் கிடைத்திருக்கும் விலைமதிக்கமுடியாத புதையலை வைத்துக்கொண்டு மேலான வாழ்க்கையை நோக்கிச் செல்லக்கூடிய பாதையைப்பற்றிய கற்பனை அவன் நெஞ்சில் விரிந்தது. அந்தக் கற்பனையை வளர்த்து வளர்த்து, தன் குற்ற உணர்விலிருந்து அவன் மீண்டு வந்தான்.
தன் காலடியில் இறந்து விழுந்திருந்த தன் அம்மாவின் உடலைப் பார்த்தபோது அவனுக்கு எந்த உணர்வும் எழவில்லை. ஒரு மரக்கட்டை அல்லது கற்பாறையைப் பார்ப்பதுபோலவே பார்த்தான். பிறகு அந்த உடலை மெதுவாக இழுத்துச் சென்று தம்பியின் உடலை உருட்டிவிட்ட அதே பள்ளத்தில் தள்ளிவிட்டான்.
இருள் கவியும் நேரம் வரைக்கும் காத்திருந்த தொட்டராஜு நாணயக்குடத்தைப் புதைத்துவைத்திருந்த இடத்திலிருந்து வெளியே எடுத்தான். மாடுகளை வீடு வரைக்கும் ஓட்டிச் சென்றான். அவற்றைத் தொழுவத்தில் கட்டிவிட்டு கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து உடல்மீது ஒட்டியிருக்கும் புழுதியும் அழுக்கும் போக நன்றாகக் குளித்தான். வீட்டுக்குள் சென்று துணிமாற்றிக்கொண்டான். நாணயக்குடத்தை ஒரு வேட்டியில் சுற்றி, அதை ஒரு கூடைக்குள் வைத்தான். இரவில் ஆள்நடமாட்டம் குறைந்ததும் ஊரைவிட்டு வெளியேறினான்.
நாலைந்து ஊர்களைக் கடந்த பிறகு அவனுடைய நடுக்கம் கொஞ்சம்கொஞ்சமாக அடங்கியது. தன் தாயையும் தம்பியையும் தன் கைகளாலேயே கொன்றுவிட்டோம் என்ற எண்ணம் முற்றிலுமாக அவன் மனத்திலிருந்து அகன்றுவிட்டது. அந்தச் செயல்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுபோல அவன் நடந்துகொண்டே இருந்தான். கிடைத்திருக்கும் செல்வத்தை வைத்துக்கொண்டு தன் எதிர்காலத்தை எப்படி வளமோடு வகுத்துக்கொள்வது என்று திட்டமிடுவதிலேயே அவன் மனம் மூழ்கியிருந்தது.
வழியில் தென்பட்ட சத்திரங்களில் தங்கி இரவைக் கழித்தான். கிடைத்த இடத்தில் உணவுண்டு நடந்துகொண்டே இருந்தான். விசாரிப்பவர்களிடம் தொலைவில் இருக்கும் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வதாக மட்டும் சொன்னான்.
ஒருநாள் பொழுது சாயும் நேரம் வரைக்கும் நடந்தபோதும் அவன் கண்ணுக்கு ஊர் எதுவும் தென்படவில்லை. அது ஒரு காட்டுப்பாதை. அது போய்க்கொண்டே இருந்ததே தவிர, அது எங்கே போய் முடியும் என்பதை அவனால் அறிந்துகொள்ளவே முடியவில்லை. ஒருபக்கம் பசியால் விளைந்த களைப்பு. இன்னொரு பக்கம் நடந்ததால் விளைந்த உடற்களைப்பு. சோர்வின் உச்சத்தில் எங்காவது படுத்து ஓய்வெடுக்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றிய சமயத்தில் ஒரு பாழடைந்த கோவிலைப் பார்த்தான். பெருமூச்சு வாங்கியபடி அந்தக் கோவிலுக்குள் சென்று ஒரு கல் தூணுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான்.
உள்ளே சிறியதொரு கருவறையும் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு சிலையும் இருந்தன. ஆனால் வழிபாடு எதுவும் நடந்ததற்கான அடையாளமே இல்லை. ஓய்வெடுக்க நல்ல இடம் என நினைத்து கீழே படுத்தான். அவன் சுமந்துவந்த கூடை அவனுக்குப் பக்கத்திலேயே இருந்தது. களைப்பின் காரணமாக அவன் படுத்ததுமே உறங்கிவிட்டான்.
அந்த நேரத்தில் நான்கு திருடர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அன்றைய இரவு அடுத்த ஊருக்குள் சென்று திருடுவதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்தனர். பாழடைந்த கோவிலை அந்த வழியில் பார்த்ததும் இரவு வரைக்கும் அங்கேயே தங்கி ஓய்வெடுக்கலாம் என்று அவர்கள் நினைத்தனர்.
கூடத்துக்குள் அடர்ந்திருந்த இருள் பழகியதும் ஒரு திருடனின் கண்களுக்கு, தூணுக்கு அருகில் சுருண்டு படுத்திருக்கும் தொட்டராஜுயின் உருவம் தெரிந்தது. உடனே அவன் ‘அண்ணே, அங்க யாரோ படுத்து தூங்கறாங்கண்ணே’ என்று சுட்டிக் காட்டினான். பிற திருடர்களும் அவனைப் பார்த்தனர். களைப்பின் காரணமாக உறங்கிக்கொண்டிருந்த தொட்டராஜுவின் காதில் அவன் குரல்கள் எதுவும் விழவில்லை.
‘யாராவது வியாபாரியா இருப்பான். இல்லைன்னா சந்தைக்கு வந்துபோற ஆளா இருப்பான். விடுடா’ என்றான் ஒரு திருடன்.
‘பக்கத்துல ஒரு கூடை வச்சிருக்காண்ணே. அதுக்குள்ள ஏதோ ஒரு மூட்டையை வச்சிருக்காண்ணே’ என்றான் இன்னொரு திருடன்.
‘இருக்கட்டும் உடுடா. குடும்பத்துக்குத் தேவையானது எதையாவது வாங்கிட்டு போறானோ என்னமோ’ என்று பெரிய திருடன் எல்லோரையும் அடக்கினான். ‘அவன் விஷயத்தை விடுங்க. நாம எந்த ஊட்டுக்குத் திருடப்போறோம், யார்யார் உள்ள போவணும், யார்யார் வெளியில காவலுக்கு நிக்கணும், யார்யார் ஆயுதம் வச்சிருக்கணும், அதைப்பத்தி பேசலாம்’ என்றான்.
எல்லாவற்றையும் பேசி முடிக்கும் வரைக்கும் அனைவரும் அமைதியாக இருந்தாலும், திருடும் திட்டங்களையெல்லாம் வகுத்துக்கொண்டதும், முதல் திருடன் ‘ரொம்ப பசிக்குதுண்ணே. அவன் கூடையில ஏதாச்சிம் சாப்புட வச்சிருந்தா எடுத்துச் சாப்புடலாம்ண்ணே’ என்றான்.
‘சரியான சாப்பாட்டு ராமன்டா நீ. எப்படியாவது செய். போ’ என்று சிரித்தான் பெரிய திருடன்.
பெரிய திருடனின் அனுமதி கிடைத்ததுமே ஒரு திருடன் தொட்டராஜிக்கு அருகில் சென்று அவன் தன்னோடு அணைத்திருந்த கூடையை இழுத்தான். கூடை இழுக்கப்படுவதை உணர்ந்ததுமே தொட்டராஜி சட்டென தூக்கத்திலிருந்து எழுந்தான். அவன் வாய் தன்னிச்சையாக ‘திருடன் திருடன்’ என்று குழறியது. பதற்றத்தோடு எழுந்து கூடையை எடுத்துக்கொண்டு வெளியேற முயற்சி செய்தான்.
நான்கு திருடர்களும் அவனைச் செல்லவிடாதபடி வழியை மறித்துக்கொண்டு நின்றார்கள். ‘இங்க பாரு. நாங்க திருடங்கதான். அதுல ஒனக்கு எந்த சந்தேகமும் வேணாம். அந்தக் கூடையில என்ன வச்சிருக்க, அதைச் சொல்லு. எங்களுக்குப் பசிக்குது. சாப்புடற பொருள் ஏதாவது வச்சிருக்கியா?’ என்று கேட்டான் ஒரு திருடன்.
‘கோயிலுக்குப் பாதயாத்திரை போறேன். எல்லா அபிஷேகப்பொருளுங்களயும் எடுத்துட்டு போறேன். சாப்புடற பொருள் எதுவும் இல்லை.’
‘அப்படியா? எங்க பிரிச்சி காட்டு பார்ப்போம்.’
‘அபிஷேகப்பொருளுங்கள்ல பார்க்கறதுக்கு என்ன இருக்குது?’
‘அதை நீ எங்களுக்குச் சொல்லித் தரவேணாம். அபிஷேகம்னு சொன்னா ஏதாச்சிம் வெல்லம் பொரியாவது வச்சிருப்பே இல்லயா? அதை எடுத்துக் கொடு.’
‘அதெல்லாம் இல்லை.’
‘அது இருக்குதா இல்லையான்னு நாங்க பார்த்துக்கறோம். நீ மொதல்ல தெறந்து காட்டு.’
நீண்ட நேரம் அவர்களுக்குள் விவாதம் நடைபெற்றபடி இருந்தது. முதலில் வாய்வார்த்தையாகத் தொடங்கிய விவாதம் பிறகு கைகலப்பாக மாறியது. தொட்டராஜு மறுக்கமறுக்க அத்திருடர்களின் சந்தேகம் வலுப்பெற்றுக்கொண்டே சென்றது. உடனே ஒரு திருடன் ஆத்திரத்தில் தொட்டராஜியின் கன்னத்தில் மாறிமாறி ஒங்கி அறைந்தான். இன்னொரு திருடன் தன் கையிலிருந்த இரும்புத்தடியால் அவன் தலையில் பின்பக்கமாக ஓங்கி அடித்தான். ஒரே அடியில் தொட்டராஜு நிலைகுலைந்து விழுந்தான். அக்கணமே அவன் உயிர் பிரிந்தது.
‘தெறந்து காட்டுடான்னா பெரிய வீரனாட்டம் நம்மகிட்டயே சண்டைக்கு வரான்’ என்று அவன் உடலை எட்டி உதைத்தபடி அவனுக்கு அருகில் கிடந்த கூடையை எடுத்து கீழே கவிழ்த்தான். நங்கென்ற ஓசையுடன் ஒரு குடம் கீழே விழுந்தது. அவர்கள் ஆர்வத்தோடு அந்தக் குடத்தை எடுத்தனர். அதைச் சுற்றியிருந்த துணியைப் பிடுங்கி வீசிவிட்டு அதைத் திறந்து கையைவிட்டு அள்ளினர். எல்லாமே தங்க நாணயங்கள்.
‘அண்ணே, தங்கம்ண்ணே. தங்கம். நாம தேடிப் போன செல்வத்தை தெய்வமே தேடிவந்து நமக்குக் கொடுத்திருக்குண்ணே.’
ஒவ்வொரு திருடனாக அந்தக் குடத்துக்குள் கையைவிட்டு தங்க நாணயங்களை அள்ளி அள்ளி கைக்குள் வைத்துப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.
‘இப்படி ஒரு செல்வத்தை நம்ம வாழ்நாள்லயே பார்த்ததில்லைண்ணே. இதை பங்கு பிரிச்சாவே ஒவ்வொருத்தவங்களுக்கும் ஏராளமா கிடைக்கும். இந்தப் பிறவிக்கு இது ஒன்னே போதும்ண்ணே.’
நான்கு திருடர்களும் அந்தச் செல்வத்தைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். உற்சாக மிகுதியில் ஏதேதோ பேசிக்கொண்டனர்.
நீண்ட நேரத்துக்குப் பிறகு பெரிய திருடன் ‘நீங்க சொல்றது உண்மைதான்டா. இதப் பங்கு பிரிச்சி கிடைக்கறத வச்சிகிட்டா வீடு வாசல் நிலம்னு வாழ்க்கையை நல்லபடியா ஓட்டிடலாம். இனிமேல திருட வேண்டிய அவசியமே இல்லை. போதும் போதும்ங்கற அளவுக்கு கடவுள் நமக்குக் கொடுத்திட்டாரு’ என்றான்.
‘ஆமாம்ண்ணே’ என்று அனைவரும் உற்சாகத்தோடு பதில் சொன்னார்கள்.
‘சரி, பங்கு பிரிக்கிற வேலையை அப்புறமா வச்சிக்கலாம். நம்ம பசிக்கு முதல்ல ஏதாவது சாப்புடணும். நீங்க ரெண்டு பேரும் ஊருக்குள்ள போய் சாப்புட ஏதாவது வாங்கிட்டு வாங்கடா. நாங்க ரெண்டு பேரும் இங்க காவலுக்கு நிக்கறோம்’ என்று பணத்தை எடுத்துக் கொடுத்தான் பெரிய திருடன்.
பெரிய திருடனின் சொற்களைத் தட்டமுடியவில்லை. இரண்டு திருடர்கள் அப்பணத்தைப் பெற்றுக்கொண்டு ஊர்ப்பக்கம் நடந்தார்கள்.
ஊரில் பெரிய சாப்பாட்டுக்கடைக்குள் நுழைந்து விதவிதமான உணவுகளை வாங்கி வயிறு நிறைய சாப்பிட்டார்கள். பிறகு, கோவிலுக்குள் புதையலுக்குக் காவலிருக்கும் இருவருக்கும் தேவையான சாப்பாடு வகைகளைப் பொட்டலமாகக் கட்டி வாங்கிக்கொண்டனர். எல்லாவற்றுக்கும் உரிய பணத்தைக் கொடுத்துவிட்டு பாழடைந்த கோவிலை நோக்கி நடந்தனர்.
கடைத்தெருவின் வழியாக நடக்கும்போது ஒரு திருடன் அடுத்த திருடனிடம் ‘இப்ப பங்கு பிரிச்சா, ஒவ்வொரு ஆளுக்கும் எவ்வளவு கிடைக்கும்? என்று கேட்டான்.
‘நம்ம ஆயுள் முழுக்க உட்கார்ந்து சாப்புடற அளவுக்கு தாராளமா கிடைக்கும். கவலைப்படாதே’ என்றான் அடுத்த திருடன்.
‘நம்ம ஆயுள் வரைக்கும் போதும்ங்கற அளவுக்குக் கிடைக்கறது நல்ல விஷயம்தான். ஒரு குடும்பம்னு சொன்னா, நாம நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் ஏதாச்சிம் சேர்த்துவச்சிட்டு போவணும் இல்லையா? அதுதான நம்ம கடமை?’
‘அதுக்காக?’
‘ஒரு ஆயுளுக்கு மட்டும் இல்லை, ரெண்டு ஆயுளுக்கு தேவையான அளவுக்கு நமக்கு பங்கு வரணும். அப்படி ஒரு பங்கு வந்தா, அது தானா அடுத்த தலைமுறைக்குப் போயிடும், புரியுதா?’
‘நீ சொல்ற கணக்கு சரிதான். ஆனா அது எப்படி நடக்கும். கிடைக்கறதை நாலு பங்கா பிரிச்சி எடுத்துக்கறதுதான நம்ம வழக்கம்.’
‘அதுதான் நம்ம வழக்கம். இல்லைன்னு சொல்லலை. நாலு பங்கை ரெண்டு பங்கா சுருக்கிட்டா, நான் சொல்ற கணக்குப்படி அடுத்த தலைமுறைக்கும் போகும் இல்லையா?’
‘போகும். ஆனா நாலு பங்கை ரெண்டு பங்கா எப்படி சுருக்கமுடியும்? அது எல்லாம் நடக்கற கதையா? நாம ரெண்டு பேர் மட்டும் எடுத்துகிட்டா, அடுத்த ரெண்டு பேரும் பார்த்துகிட்டு சும்மா இருப்பாங்களா? இல்ல, அவுங்க ரெண்டு பேரு மட்டும் எடுத்துகிட்டா, நாம ரெண்டுபேரும் சும்மா இருப்பமா?’
‘ஐயோ, மொதல்ல நான் சொல்றத தெளிவா புரிஞ்சிகிட்டு பேசு. அவுங்க இருந்தாதான பாக்கறதுக்கு? நாமளே அவுங்களை இல்லாமயே ஆக்கிட்டா?’
‘என்ன சொல்ற நீ? புரியலையே.’
‘அவுங்க கதையை முடிச்சிடுவோம். இவ்ளோ தூரம் இழுத்து இழுத்து சொல்றேன். புரிஞ்சிக்கவே மாட்டறியே.’
அவன் திகைத்துப்போய் இவனுடைய முகத்தையே பார்த்தபடி நின்றான்.
‘இதோ பாரு, இப்ப அவுங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு போறமே, அதுல கொஞ்சம் எலி பாஷாணத்தை வாங்கி கலந்து எடுத்துட்டு போவோம். நாம போனதும் பொட்டலத்தை வாங்கி பசியில வேகவேகமா சாப்புடுவாங்க. விஷம் உடம்புல எறங்கியதும் செத்துடுவாங்க. அப்ப எல்லாப் பங்கும் நம்ம ரெண்டு பேருக்குத்தான். புரியுதா?’
‘என்னமோ எதிர்காலம் எதிர்காலம்னு சொல்லி ஆசையை மூட்டற? சரி, செஞ்சிடுவோம்.’
கடைத்தெருவிலேயே ஒரு கடைக்குச் சென்று தோட்டத்தில் எலித்தொல்லையை ஒழிக்க எலிமருந்து வேண்டுமெனச் சொல்லி வாங்கி எடுத்துக்கொண்டனர். ஊரைவிட்டு காட்டுக்குள் நடக்கத் தொடங்கியதும் ஒரு மரத்தடியில் ஒதுங்கி குழம்பு வகைகளில் அந்த மருந்துப்பொடியைக் கலந்து கரைத்துவிட்டனர். பிறகு ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தபடியே வேடிக்கைக்கதைகள் பேசியவண்ணம் பாழடைந்த கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
அதே நேரத்தில், கோவிலில் தங்க நாணயக் குடத்துக்குக் காவலாக உட்கார்ந்திருந்த இரு திருடர்களும் தமக்குக் கிடைக்கும் பங்கை வைத்து எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்டினர். ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்வதும் அடுத்தவர் அதை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நிராகரிப்பதுமாக உரையாடிப் பொழுது போக்கினர். பேச்சு வளர்ந்து வளர்ந்து கடைசியில் வெளிப்படையாகவே பேசிக்கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது.
‘இங்க பாரு, நமக்குக் கிடைச்சிருக்கறதை நாலு பங்கா ஆக்கினா, ஆளுக்குக் கொஞ்சம்தான் கிடைக்கும். ரெண்டு பங்கா இருந்தாதான் அடுத்த தலைமுறைக்கும் விட்டுட்டு போறமாதிரி கூடுதலா கிடைக்கும்.’
‘அதுக்கு என்ன செய்யறது?’
‘அவுங்க ரெண்டு பேருக்கும் பங்கே இல்லாதபடி செய்யணும்.’
‘அது எப்படி முடியும்?’
‘ஆளுங்களையே முடிச்சிடுவோம். அப்ப தானா பங்கு ரெண்டாயிடும் இல்லையா?’
‘அவுங்களும் நம்மளப்போலவே திறமையான ஆளுங்கதான? அவுங்கள எப்படி முடிக்கறது?’
‘இதோ, இந்த ஆள் கதையை நீ எப்படி முடிச்ச? கொஞ்சம் யோசிச்சி பாரு. அந்த இரும்புத்தடிதான அதுக்கு உதவியா இருந்தது. அதே இரும்புத்தடியை வச்சி அவனுங்க கதையையும் முடிச்சிடுவோம்.’
‘எப்படி?’
‘நல்லா கேட்டுக்கோ. சாப்பாடு வாங்கப்போன ஆளுங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வருவானுங்க. நீ அந்தத் தூணுக்குப் பின்னால தடியை வச்சிகிட்டு நில்லு. நான் இந்தத் தூணுக்குப் பின்னால தடியோடு நிக்கறேன். அவனுங்க உள்ளே வந்ததும் அவனுங்க மண்டையை பொளந்துடணும். யாரு அடிச்சாங்கன்னு கூட தெரியாம அவனுங்க கதை அப்படியே முடியணும்.’
‘அதுக்கப்புறம் எல்லாமே நம்ம ரெண்டு பேருக்குத்தான். சந்தோஷமா எடுத்துகிட்டு வீட்டுக்குப் போவோம்.’
சாப்பாட்டுப் பொட்டலங்களோடு வருபவர்களைக் கொல்லும் நோக்கத்துடன் பாழடைந்த கோவிலின் வாசலையொட்டி உட்பக்கமாக இருவரும் இரு தூண்களுக்குப் பின்னால் இரும்புத்தடியுடன் நின்றுகொண்டனர். தொலைவில் பேச்சுச்சத்தம் கேட்டதும் அவர்கள் வருகையை உறுதி செய்துகொண்டு எச்சரிக்கையோடு காத்திருந்தனர்.
வெளியே இருந்து உள்ளே வந்தவர்களுக்கு கண் பழகாததால் ஒரே இருட்டாக இருந்தது. அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இருவரும் தம் தடிகளால் அடித்து அவர்களைக் கீழே வீழ்த்தினர். ஏற்கனவே செத்து வீழ்ந்திருந்த தொட்டராஜுவின் உடலோடு இப்போது இந்த இரு திருடர்களின் பிணங்களும் சேர்ந்துகொண்டன. அவர்களுடைய உடல்களை உள்ளே தூணுக்குப் பின்னால் இழுத்துப்போட்டு மறைத்தனர். பிறகு இருவரும் தம் முயற்சி மிக எளிதாக வெற்றிகரமாக நிறைவேறியதை நினைத்து ஒருவரையொருவர் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தனர்.
‘இனிமே நம்ம ரெண்டு பேருக்குத்தான் எல்லாமே. நாம நெனச்ச மாதிரி எல்லாமே கச்சிதமா முடிஞ்சிட்டுது பாரு. இதுதான் அதிர்ஷ்டம். சரி வா. நல்ல பசி. முதல்ல சாப்புடுவோம். பிறகு பங்கு பிரிச்சிகிட்டு நடப்போம்.’
பிறகு அவர்கள் வாங்கிவந்த உணவுப்பொட்டலங்களைப் பிரித்து குழம்பை உற்றிப் பிசைந்து திருப்தியாகச் சாப்பிட்டனர். சிறிது நேரத்திலேயே அவர்கள் உடலில் விஷம் ஊறி இறந்தனர்.
ஆண்டுக்கணக்கில் அந்த ஐந்து உடல்களும் அந்தப் பாழடைந்த கோவிலில் கிடந்து மட்கி மண்ணோடு மண்ணாகின. தங்கநாணயங்கள் அடங்கிய குடம் மட்டும் தூணுக்கு அருகில் அப்படியே கிடந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருநாள் அந்த வழியாக ஒரு துறவி தம் சீடர்களோடு வந்தார். நடந்துவந்த களைப்பு தீர ஓய்வெடுப்பதற்காக அவர்கள் சிறிது நேரம் அந்தப் பாழடைந்த கோவிலில் அமர்ந்தனர்.
அப்போது, ஒரு சீடர் தூணுக்கு அருகில் இருந்த தங்கநாணயக்குடத்தைப் பார்த்து, ஆச்சரியம் நிறைந்த குரலில் அதைத் தன் குருவிடம் சுட்டிக்காட்டினார். ‘இங்க பாருங்க குருவே. பாழடைஞ்ச கோவிலுக்குள்ள இப்படி ஒரு தங்கப்புதையல்’ என்றான். குருவும் அந்தக் குடத்தை ஒரு கணம் பார்த்தார். அதைப் பார்த்ததுமே என்ன நடந்திருக்கக்கூடும் என்பதெல்லாம் அவருடைய ஆழ்மனம் உணர்ந்துவிட்டது. உடனே, அதையே ஒரு கதையாக தம் சீடர்களுக்குச் சொன்னார் குரு.
‘இந்தக் காட்டுக்குள்ள மனிதர்களை அடிச்சிச் சாப்புடற புலி இருக்குது. அது ஆபத்தானது. அதே சமயத்துலயும் ஊருக்குள்ளயும் அப்படிப்பட்ட ஒரு புலி இருக்குது. அதுதான் பணம். அதுவும் ஆபத்தானது. இந்தப் பணத்துக்காக இங்க இதுவரைக்கும் ஏழு பேர் செத்திருக்காங்க. நீங்க யாரும் இந்தக் குடத்தையோ, நாணயத்தையோ தொடாதீங்க’ என்றார். பிறகு ‘சரி, ஓய்வெடுத்தது போதும். வாங்க, இந்த இடத்துலேர்ந்து நாம கெளம்பி அடுத்த ஊருக்குப் போவலாம்’ என்று சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
0