ஆதிகாலத்தில் தனித்து வாழ்ந்திருந்த மக்கள் குழுக்களாய்க் கூட்டமாக வாழத் தொடங்கிய பிறகு, தங்களைப் பாதுகாத்து வழிநடத்தத் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து, அரசியல் எனும் அமைப்பை ஏற்படுத்தி, அரசாளும் முறையையும் கோட்பாட்டினையும் வகுத்தனர். அரசாளும் முறையை வகுத்தவர்கள் அவ்வரசர்களுக்கு உறுதுணையாக இருந்து அரசியல் பணிகளை மேற்கொள்ளவும், மக்கள்நலத் திட்டங்களை வகுக்கவும் நிர்வாகக் குழுக்களை அமைத்தனர். ஓர் அமைப்பின் அன்றாடச் செயல்பாடுகளை வழிநடத்திச் செல்லவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் நியமிக்கப்படும் உயர்நிலைத் தலைவர்கள் கொண்ட குழுவே நிர்வாகக் குழு ஆகும்.
ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய, கிடைக்கக்கூடிய மனித வளம், நிதி வளம், பொருள் வளம், நேரம் போன்ற வளங்களைச் சரியான முறையில் ஒருங்கிணைத்து, திட்டமிட்டு, நெறிப்படுத்திச் செயல்படுத்துவதே அக்குழுவினரின் பணியாகும். இவ்வகையில் ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம் ஆகியவை சங்ககால அரசர்களுக்கு ஆட்சி நிர்வாகத்திலும், ஆலோசனையிலும் துணைநின்ற இரு முக்கியக் குழுக்கள் ஆகும். ஐம்பெருங்குழுவை அரசனுடைய நிர்வாகச் செயற்குழு மற்றும் மந்திரிசபை என்றும் கூறலாம். எண்பேராயம் என்பது பொதுமக்கள் சபையாகும். இச்சபையிலே அரசாங்கத்தை நடத்தும் பொறுப்புள்ள ஒவ்வொரு துறையின் பிரதிநிதிகளும் இருந்தனர். மக்களின் பிரதிநிதிகளும் இருந்தனர்.
ஐம்பெருங்குழுவைப் பற்றியும் எண்பேராயத்தைப் பற்றியும் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்கமாகக் கூறியுள்ளார்.
அமைச்சர், புரோகிதர், சேனாபதியர்
தவாத் தொழில் தூதுவர், சாரணர் என்றிவர்
பார்த்திபர்க்கு ஐம்பெரும் குழுவெனப் படுமே
என்பது அடியார்க்கு நல்லார் உரையாகும்.
ஆட்சியை நடத்துவதற்கு வழிகாட்டுகின்றவர்கள் அமைச்சர் ஆவர். காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவோர், இன்னக் காலத்திலே இன்னச் செயல்களைச் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துவோர், பருவ காலங்களையும், அவற்றின் இயல்புகளையும் எண்ணிக் கூறுவோர் புரோகிதர் என்று அழைக்கப்பட்டனர். உள்நாட்டில் அமைதி நிலவுவதற்கும், வெளிநாடுகளுடன் ஒத்த உறவு கொண்டிருப்பதற்கும் துணையாக இருப்பவர்கள் சேனாதிபதியர் எனும் படைத்தலைவர்கள். வெளிநாட்டு அரசாங்கத்துடன் ஏதேனும் மாறுபாடு தோன்றினால் அதை மாற்றுவதற்குத் தூதுவர்கள் வேண்டும். நல்ல அரசியல் நுட்பமும், சொல்வன்மையும் உள்ளவர்களே தூதுவர்கள். இங்கு ‘தவாத் தொழில்’ என்பது அழிவில்லாத அல்லது பிழை நேராத வகையில் மேற்கொள்ளப்படும் பணியைக் குறிக்கிறது. சாரணர்கள் என்பவர்கள் ஒற்றர்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை அரசாங்கத்திற்கு அறிவிப்பவர்கள்.
அரசன் எக்காரியத்தைச் செய்வதாயினும் மேற்காட்டிய ஐவரையும் கலந்தாலோசித்த பிறகே செய்ய வேண்டும். இதற்காகவே இந்த ஐம்பெருங்குழு ஏற்பட்டது.
கரணத்து இயலவர், கரும காரர்,
கனகச் சுற்றம், கடைக்காப் பாளர்,
நகர மாந்தர், நளிபடைத் தலைவர்,
யானை வீரர், இவுளி மறவர்,
இனையர், எண்பே ராயம் என்ப
என்பது அடியார்க்கு நல்லார் காட்டும் எண்வகையினரைக் கொண்ட பெரிய அவையாகும்.
தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய தலைவர்களுக்குக் கரணத்தியலவர் என்று பெயர். அரசாங்க அலுவல்களைச் செய்வோர் மற்றும் அவர்களுடைய தலைவர்களுக்குக் கருமகாரர் என்று பெயர். கனகம் என்றால் பொன். அரசாங்கத்தின் செல்வத்தைப் பாதுகாப்போர் கனகச்சுற்றமாவர். இவர்கள் நிதித்துறை அலுவலர்களாவர். கடைகாப்பாளர் என்பவர் அரண்மனையையும் ஏனைய அரசாங்க அலுவல் இடங்களையும் காத்து நிற்பவர்களாவர். நகர மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் நகர மாந்தராவர். சேனைத் தலைவர்களுக்குப் படைத்தலைவர்கள் என்று பெயர். யானையின் மேலேறி ஊர்ந்து போர்செய்யும் வீரர்களுக்கு யானைவீரர் என்று பெயர். குதிரையின் மீதேறி போர்ச் செய்யும் வீரர்களுக்கு இவுளி மறவர் என்று பெயர். இவுளி என்றால் குதிரை. மறவர் என்றால் வீரர்.
மேற்கூறிய தொழிலாளர், அரசாங்க அலுவலர், நிதி காப்போர், காவல்காரர், நகர மக்கள், படைத்தலைவர், யானைவீரர், குதிரைவீரர் இவ்வெண்மரும் எண்பேராயம் என்று அழைக்கப்பட்டனர்.
சிலப்பதிகாரத்தின் கால்கோள் காதையில் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டும் நிகழ்வின்போது, அவனது அரசவை மற்றும் ஆட்சி அதிகாரத்தின் சிறப்பை விளக்கும் பகுதியில் ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம் குறித்துக் கூறப்பட்டிருந்த பாடலுக்குத்தான் மேற்கூறிய உரையை அடியார்க்கு நல்லார் விளக்கியிருந்தார்.
ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும்,
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய
கரும வினைஞரும், கணக்கியல் வினைஞரும்,
தரும வினைஞரும், தந்திர வினைஞரும்;
‘மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க!’
ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும் – அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் 5 பேர் கொண்ட குழுவும், 8 வகையான குழுக்களும்;
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய – வேகமான குதிரைப்படை மற்றும் யானைப்படை கொண்ட அரசனுக்கு நெருக்கமாக இருந்து;
கரும வினைஞரும் – அரசக் காரியங்களைக் கவனிப்பவரும்;
தரும வினைஞரும் – அறநெறி வழுவாமல் காப்பவரும்;
கணக்கியல் வினைஞரும் – கணக்காளரும்;
தந்திர வினைஞரும் – தந்திர ஆலோசகரும்;
‘மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க!’ – நிலம் செறிந்த உலகை ஆள்பவன் வாழ்க என வாழ்த்தினர்.
ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும், குதிரைப்படை மற்றும் யானைப்படை கொண்ட அரசனுக்குரிய அதிகாரிகளும், அரசனுக்கு உதவும் பல்வேறு அமைச்சர்களும் (கருமம், கணக்கு, தருமம், தந்திரம்) ஒன்றுகூடி, ‘நிலம் செறிந்த உலகை ஆளும் வேந்தன் நீடூழி வாழ்க!’ என அவனது வெற்றியைப் போற்றும் காட்சியை இப்பாடல் விளக்குகிறது. மக்களின் பிரதிநிதிகளும், எண்பேராயத்தில் இடம்பெற்றிருந்ததின் மூலம் மக்களும் அரசாட்சியில் கருத்துகளைப் பகிர்ந்து பங்குவகித்திருக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது.
ஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகியவற்றின் ஆலோசனையின்படி நடைபெறும் அரசாங்கத்தின் தலைவன், ஆளப் பிறந்த அரசக் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் தன் விருப்பப்படி எதையும் செய்துவிட முடியாது. மக்களின் கருத்தறிந்துதான் ஆட்சி நடத்தமுடியும் என்பதை இதன் மூலம் அறிகிறோம். புலவர் மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி எனும் சங்க இலக்கிய நூலில் நாற்பெருங்குழு இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும்
மோகூர் என்னும் ஊரை ஆண்ட சங்ககால மன்னன் பழையன். பாண்டிய சிற்றரசன். அவனது அவை, அறிவுடைய சான்றோர்களால் சிறந்து விளங்கியது. நான்கு மொழிகளில் வல்லமைபெற்ற கோசர் என்ற இனக்குழுவினர் அவனது ஆட்சிக்குத் துணையாக இருந்தனர். பாண்டியன் நெடுஞ்செழியனின் அவையில் இருந்த நாற்பெருங்குழு, பழையனின் மோகூர் அவையில் இருந்த நான்மொழிக் கோசர் போலச் சிறப்புற்றிருந்தது என்கிறார் மாங்குடி மருதனார். நாற்பெருங்குழுவை நான்மொழிக் கோசர்களுடன் ஒப்பிட்டுக் கூறியதில் பாண்டியன் நெடுஞ்செழியன் அவையிலும் பன்மொழி புலமைபெற்ற புலவர்கள் இருந்திருக்கின்றனர் என்றும், அவர்கள் குழுக்களாய் இயங்கி இருக்கின்றனர் என்றும் புலனாகிறது.
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்ககாலப் பாண்டிய அரசர்களில் ஒருவன். இவனது அரசவையில் ஐம்பெருங்குழுவைப்போல் 5 நண்பர்கள் இருந்தனர் என்கிறது சங்கப் பாடல்.
வையைச் சூழ்ந்த வளம் கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும், மன் எயில் ஆந்தையும், உரை சால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ் சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த
வையை – வைகை நதி
சூழ்ந்த – சூழப்பட்ட
வளம் கெழு – வளம் பொருந்திய
வைப்பின் – நிலப்பரப்பு, ஊர் அல்லது நாடு (வைப்பு – இருப்பிடம்/நாடு)
பொய்யா யாணர் – யாணர் என்றால் புது வருவாய்/வளமை. பொய்யாத புதுவருவாய்/ வளமை.
மையல் – மையல் என்பது ஊரின் பெயர்.
கோமான் – அரசன்
மாவன் – மையல் ஊர் அரசனின் பெயர்
மன் எயில் ஆந்தையும் – எயில் ஊரை ஆளும் அரசன் ஆந்தையும்;
உரை சால் அந்துவஞ் சாத்தனும் – புகழ் மிக்கக் குறுநில மன்னனான அந்துவஞ் சாத்தனும்;
ஆதன் அழிசியும் – ஆதன் அழிசி எனும் மன்னனும்;
வெஞ் சின இயக்கனும் – மிகுந்த கோபத்தை உடைய இயக்கனும்;
உளப்படப் பிறரும் – அவர்களோடு மற்றவரும்;
கண் போல் நண்பின் கேளிர் – கண்ணைப் போன்ற மதிப்புமிக்க நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள்.
கலந்த – ஒன்றாகக் கூடியிருந்த;
ஒருசமயம் பூதப்பாண்டியனுக்கும் சேர, சோழ மன்னர்களுக்கும் பகை உண்டாயிற்று. அப்பகையின் காரணத்தால் அவர்கள் பூதப்பாண்டியனோடு போருக்கு வந்தனர். அதை அறிந்த பூதப்பாண்டியன் மிகுந்த சினத்தோடு கூறிய வஞ்சினமே இப்பாடல். வஞ்சினம் என்பது ஒரு காரியத்தை முடிப்பேன் என்று சபதம் கூறுவதாகும். வைகை நதியால் சூழப்பட்ட வளம்பொருந்திய பொய்யாத புதுவருவாய்க் கொண்ட மையல் எனும் ஊரை ஆளும் அரசன் மாவனும், நிலைபெற்ற எயில் எனும் ஊரை ஆளும் ஆந்தையும், புகழ்மிக்க அந்துவன் சாத்தனும், ஆதன் அழிசியும், சினமிக்க இயக்கன் ஆகியோர் உட்பட என் கண்போன்ற நட்பினையுடைய நண்பர்களோடு கூடிக்களிக்கும் மகிழ்ச்சியை இழந்தவனாவேன் என்று வஞ்சினம் உரைப்பதாய் அமைந்த இப்பாடலில் அரசனின் நண்பர்களாய் ஐம்பெருங்குழுவினரைப்போன்று 5 நண்பர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
ஒருநாடு முழுவதும் அரசனது கட்டுப்பாட்டிற்குள் திகழ்ந்தபோதும், அந்நாட்டிலுள்ள ஊர்கள் அனைத்தும் மக்களால் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரவையினரால் நிர்வகிக்கப்பட்டன. ஊர் நிர்வாகத்திற்குத் தகுதி உடையவர்களின் பெயர்களைத் தனித்தனியே ஓலைத் துண்டில் எழுதி, ஒரு குடத்தில் இட்டு, சிறுகுழந்தை மூலம் ஓலையை எடுக்கச் செய்து, அதில் குறிப்பிட்டிருப்பவரையே நிர்வாகியாகத் தேர்ந்தெடுத்தலே குடவோலைமுறைத் தேர்வாகும். இவ்வாறு தேர்வு செய்யப்பெற்ற ஊர் அவையினரே ஊர் வழக்குகளை விசாரித்துத் தீர்வு அளித்தல், வரிவசூல் செய்தல், பஞ்சம் ஏற்படும்போது ஊர்மக்களைக் காத்தல், நீர்ப்பாசன வசதி செய்தல், மக்கள் நலம் பேணுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.
பழங்கால நிர்வாக அமைப்புகளான ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம் ஆகியவற்றுடன் தற்போதைய தமிழக அமைச்சரவையை ஒப்பிடும்போது, அதிகாரப் பங்கீடு மற்றும் பொறுப்புகள் மாறுபட்டாலும், அடிப்படை நோக்கமான சமூக நலன், ஒழுங்கு, மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளன.
தற்போதைய தமிழக அமைச்சரவை முதல்வர் தலைமையில் இயங்குகிறது. ஒவ்வொரு அமைச்சரும் தனித்துறைக்கு (கல்வி, சுகாதாரம், நீர்வளம், தொழில், முதலியன) பொறுப்பேற்கிறார். சட்டப்பேரவை மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் அமைச்சர்களாக நியமிக்கப்படுகிறார்கள். நவீன ஜனநாயகக்கொள்கை அடிப்படையில், அமைச்சர்கள் மக்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுக்கிறார்கள். இன்றைய அமைச்சரவை, சட்டப்பேரவை, அரசியல் கட்சிகள், தேர்தல் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் அரசவை ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம் கொண்டு சமூக அடிப்படையில், தொழில் மற்றும் அனுபவத்தை முன்னிறுத்தி அமைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் தற்போதைய அமைச்சரவை அமைப்பு நவீன ஜனநாயக வடிவம் என்றும், சங்ககால அமைப்புகள் சமூக அடிப்படையிலான கூட்டாய நிர்வாகம் என்றும் இரண்டிலும் மக்கள் நலனே மையமாக இருந்தது என்றும் அறிகிறோம்.
(தொடரும்)

