சிவபெருமானின் ஒவ்வொரு வடிவத்தின் பின்னணியிலும் ஒரு புராணம் உள்ளது. அந்த வகையில் அவரது அகோர வடிவத்துக்கும் ஒரு புராணக் கதை உண்டு. சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சத்ததந்து என்பவன், தன்னுடைய பெரும்பேறுக்கு ஈசனே காரணம் என்பதை மறந்து ஆணவமிகுதியில் வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் யாகம் ஒன்றை நடத்தத் திட்டமிட்ட சத்ததந்து, அந்த யாகத்துக்கு வரும்படி திருமால், பிரம்மா, தேவர்கள் முதலானோரை அழைத்தான். ஆனால் ஈசனை அழைக்காமல் தவிர்த்துவிட்டான். ஈசனை தவிர்த்துவிட்டு யாகம் வளர்த்தால் உனக்கு அழிவு ஏற்படும் என அறிவுரை கூறி, பலரும் அவனுக்கு எச்சரிக்கை விடுத்தார்கள். ஆனால் அதைக் கேட்காமல், அவன் யாகம் வளர்க்கத் தொடங்கினான். இச்செய்தியை அறிந்ததும் வெகுண்டெழுந்த ஈசன், அந்த யாகத்தை அழித்தொழிக்க முடிவு செய்தார். தனக்கு அருகிலிருந்த வீரபத்திரரை நோக்கி ‘சத்ததந்துவின் யாகத்தை அழித்துவிடு’ என ஆணையிட்டார்.
மண்டலத்தை ரதமாகவும், உலகைச் சக்கரமாகவும், அக்னி பகவானை வில்லாகவும், சந்திரனை நாணாகவும், வருணனை பாணமாகவும், பல போர்க்கருவிகளை ஆயுதமாகவும் ஏந்தியபடி, குமரக் கடவுளைச் சாரதியாகக்கொண்டு தேரில் கிளம்பினார் வீரபத்திரர். யாகம் நடைபெறும் இடத்துக்குச் சென்றதும், வருண அஸ்திரத்தை எய்து அவர் யாகத்தை அழித்தார். இதன் தொடர்ச்சியாக சத்ததந்துவை கொன்றார். ஆனால் இதன்பிறகும் கோபம் தணியாத நிலையில், பல தேவர்களைக் கொன்றொழித்தார் வீரபத்திரர். இதனால் கொல்லப்பட்டவர்களின் மனைவியர் கைலாயம் சென்று ஈசனிடம் முறையிட்டார்கள். தத்தமது கணவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கேட்டார்கள். அவர்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்து ஈசன் அவர்களை உயிர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து கைலாயம் சென்று நடந்த அனைத்தையும் ஈசனிடம் விவரித்தார் வீரபத்திரர்.
தன்னுடைய அகோர அஸ்திரத்தால் சத்ததந்துவை கொன்றதால், ‘அகோர அஸ்திர மூர்த்தி’ எனவும் வீரபத்திரர் அழைக்கப்படுகிறார். இந்த அகோர மூர்த்திக்கு வளர்க்கப்படும் யாகங்கள் எதிரியை அழிக்கும் வல்லமைகொண்டவை என்பது பரவலாக இருக்கும் நம்பிக்கை. புராணத்தின்படி குமரக் கடவுள் என்றழைக்கப்படும் முருகர், போர்க்கடவுளாவார். தற்போது திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடத்தப்படும் ‘சத்ரு சம்ஹார யாகம்’, முந்தைய காலகட்டத்தில் போருடன் தொடர்புடையதாக இருந்தது.
ஒரு முக்கியப் போரில் வெல்லும் நோக்கத்தில் இத்தகைய யாகத்தை முன்பு சோழர்கள் நடத்தியுள்ளார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் கோவிலில் இந்த அகோர பூஜை நடந்துள்ளது. பொதுவாகவே, குரு மரபின் வாயிலாக இந்த அகோர பூஜை நடத்தப்படும். இரண்டாம் ராஜாதித்த சோழரின் ஆட்சிக்காலத்தில் உமாபதி தேவர் எனும் ஞானசிவ தேவரின் தலைமையில் இப்பூஜை நடைபெற்றுள்ளது. இலங்கைப் படை வருகையைத் தடுத்து போரில் வெற்றிபெற, இந்த அகோர பூஜையைச் சோழர்கள் நடத்தியுள்ளார்கள். தொடர்ந்து 28 நாட்கள் நடைபெற்ற பூஜைக்குப் பிறகு நடந்தேறிய போரில், இலங்கைப் படை தோற்றதாக ஆர்ப்பாக்கம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இக்கல்வெட்டின் வாயிலாக, குலசேகரபாண்டியன் ஆட்சிக்காலத்தின்போது பாண்டிய நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பங்கள், அதற்குச் சோழர்கள் அளித்த உதவி என அன்றைய காலகட்டத்து அரசியல் நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடிகிறது.
பாண்டிய நாட்டு குழப்பம்
12ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில், ஆட்சி அதிகாரத்தை முன்வைத்து பராக்கிரமபாண்டியனுக்கும் குலசேகரபாண்டியனுக்கும் இடையே பனிப்போர் உருவானது. பராக்கிரமபாண்டியன் சிங்களவரையும், குலசேகரபாண்டியன் சோழரையும் உதவிக்கு அழைத்தார்கள். இலங்கைப் படை வந்திறங்கும் முன்னரே, பராக்கிரமபாண்டியன் மற்றும் அவரது அரசியைக் கொன்று, குலசேகரன் மதுரையைக் கைப்பற்றினார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இலங்கை வேந்தன் பராக்கிரமபாகு, குலசேகரனை கொன்று, மதுரை அரியணையைப் பராக்கிரமபாண்டியனின் கிளையினர் எவரிடமாவது ஒப்படைத்துவிட்டு வருமாறு தன்னுடைய தளபதி லங்காபுரனுக்கு உத்தரவிட்டார்.
அச்சமயம் பராக்கிரமபாண்டியனின் மகன் வீரபாண்டியன், குலசேகரபாண்டியனிடமிருந்து தப்பி கேரளத்துக்குச் செல்கிறார். இத்தகவல் லங்காபுரனுக்கு கிடைத்ததும், தன்னைச் சந்திக்குமாறு அவர் வீரபாண்டியனுக்கு தூதனுப்பினார். இதையறிந்த குலசேகரன் கொங்கு பகுதியிலிருந்த தன் உறவினர் மற்றும் சோழரின் உதவியை நாடினார். பிள்ளை பல்லவராயர் தலைமையில் சோழப் படை, பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற போரில் சோழப் படையை இலங்கைப் படை வென்றது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை அருகேயுள்ள இன்றைய கீழாநிலையில் நடைபெற்ற மற்றொரு போரில் குலசேகரபாண்டியனின் படை தோற்றது. லங்காபுரனின் இத்தகைய எழுச்சியைக் கண்ட ராஜாதித்தர், இதே நிலை தொடர்ந்தால் பாண்டிய நாடு மட்டுமல்லாமல் சோழ நாட்டிற்கும் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்தார்.
ராஜாதித்தரின் தளபதியான எதிரிலி சோழ சம்புவராயன், கௌட தேசத்து தட்சிணலாடம் பகுதியைச் சேர்ந்த உமாபதி தேவரிடம் சென்று, வழிபாடு மற்றும் யாகத்தின் மூலமாக இறை உதவியை நாட வேண்டினார். அவரும் தொடர்ச்சியாக 28 நாட்கள் யாகத்தில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக மீண்டும் நடைபெற்ற போரில் சோழர் கூட்டுப்படை வென்றதாகப் பிள்ளை பல்லவராயரிடமிருந்து தகவல் வரப்பெற்றது. உமாபதி தேவர் வளர்த்த யாகத்தால்தான் இந்த வெற்றி கிட்டியதென எதிரிலி சோழ சம்புவராயர் அகமகிழ்ந்தார். இந்த வெற்றியைக் கொண்டாட ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து மாறல்நாட்டு ஆல்பாக்கத்துப் புஞ்சை நஞ்சை விளைநிலம் நூற்றறுபத்தேழு வேலியும், நத்தமும் கிணறும், நாற்பாற்கெல்லை உள்பட நிலமும், வெள்ளை வாரி, தறியிறை தட்டார்பாட்ட மந்தராயம் பாட்டமும் உள்பட நிலங்களையும் இறையிலியாக அளித்தார். இத்தகவல்கள் அனைத்தும் மிகத் தெளிவாக ஆர்ப்பாக்கம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவை செப்பேட்டிலும் ஆவணமாக ஏற்றியுள்ள தகவலை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இச்செப்பேடு வருங்காலங்களில் கிடைக்கக்கூடும்.
ஆர்ப்பாக்கம் கல்வெட்டு வரிகள்
‘ஸ்வஸ்திஸ்ரீ, கணபதயே நம கடழ்சூழ்ந்த பார்மாதரும் பூமாதரும் கலைமாதரு மடல்சூழ்ந்த போர்மாதருஞ் சீர்மாதருமமர்ந்து வாழ னாத் கடல்சூழ் புவியேழும் பாற்கடலம் புகழ் பரப்ப ஆதியகம் வந்ததெ நச்சோதிமுடி புனைந்தருளி அறுசமையமும் ஐம்பூதமும் நெறியில் வந்து பாரிக்க தென்னவரும் சிங்களரும் கொங்கணரும் பல்லவரும் முதலாய் பார்வேந்தர் வந்திறைஞ்சச் செம்பொன் வீரஸிம்ஹாநைத்து உலகுடை முக்கோக் கிழானடிகளோடும் விற்றிருந்தருளிய கோப்பரகேசரி பந்மராந திருபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜாதிராஜதேவற்கு யாண்டு ஐஞ்சாவது
ஈழப்படை பாண்டி மண்டலத்தைக் கைகொண்டு, மதுரையிலேயிருந்த ராஜா குலசேகரறைப் போகத்துரத்திப், பின்பு மகாராஜா ஸ்ரீராசாதிராசதேவர் ஸாமத்தரோடே பூசல்பொரத்துடங்கி, தொண்டி பாசி பிரதேசத்திலே பூசலுண்டாய், அபாயத்திலே ஈழப்படை ஜனித்தவாறே சோழமண்டலத் திலும் மற்றுள்ள னாட்டுக்களிலுமுள்ள ஐநங்களெல்லாம் பயப்பட்டமையைக் கேட்டு, எதிரிலிசோழச்சம்புவராயநேந்
இநக்குயிது எங்ஙதெயாமோ வென்று விசாரந்தோன்றி சுவாமிதேவர் ஸ்ரீபாதத்தேறச்செற்று இப்படி புகுந்தது ஈழப்படையாகிறது சாலப்பாப கர்ம்மாக்கள் அவர்கள் சோழமண்டலத் தெல்லையிலே புகுதில், ஸ்ரீமகாதேவர் கோயிலுள்ளிட்ட இப்படி புகுந்தது ஈழப்படையாகிறது சாலப்பாப கர்ம்மாக்கள்; அவர்கள் சோழமண்டலத்தெல்லையிலே புகுதில், ஸ்ரீமகாதேவர் கோயிலுள்ளிட்ட தேவர்கள் கோயிலுக்கும் பிராமணர்க்கும் ராஷ்ட்ரத்துக்கு மடங்க விரோத முண்டாம்; இதுக்குப் பரிகாரமாக ஜபஹோமார்ச்சநங்களாலெப் படியாலும் அபூஷ்ட்ரமதம் பண்ணியருளவேணும் மென்று விண்ணப்பஞ் செய்ய தேவர் அருளிச் செய்தருளுகிறார்
ஈழப்படையாகிற இது சாலப்பாபிஷ்டருமாய் துர்ஜநருமாய் திருவிராமீஸ்வரத்தில் தேவர்கோயிலைத் திருக்காப்புக்கொண்டு பூசை முட்டப்பண்ணி, அங்குள்ள ஸ்ரீபண்டாரமெல்லாம் கைக்கொண்டு, ஸிவத்ரோஹிகளெந்து மிடம் மறிந்தோம், அவர்கள் பூசலிலே அறப்பட்டு துரப்புண்டு போம்படிக்கு அத்ருஷ்ட முகத்தாலே வேண்டும் யத்தம் பண்ணுகிறோமென்றருளிச்செய்து, இருபத்தெட்டு நாள் அகோரசுபூஜை பண்ணியருளிதார் இதுக்குப் பிந்பு பிள்ளை பல்லவராயர் பாடுநின்றுமிருக்கு ஓலை கொண்டு தூதர் வந்தார்கள். அதில் ஐயத்ரத தண்டநாயக்கதும் லங்காபுரி தண்டநாயக்கநு முள்ளிட்ட பிரதாநிகளும் படையு மடங்கப்பட்டு ஓடிப்போச்சு மென்று சொல்லி வந்தது, இப்பட்டாங்கை தேவர் ஸ்ரீ பாதத்திலே ஸம்ப்ரமத்துச் செ… நான் தேவர் செய்தருளிந அத்ருஷ்டயந்தமாய் இப்படி பலித்த தென்று விண்ணபஞ்செய்து ‘தேவர் ஸ்ரீ பாதபூஜையாக னாந்தருவெநென்’று விண்ணப்பஞ்செய்ய ‘நீர் தமக்கு முன்பேதேநும் குறைவாகச் செய்த துண்டோ? அவஸ்யமேதேநும் தர வேணுமென்றிருந்ததாகில் ஆல்பாக்க மாகிற ஊரைச் செம்பிலும் கல்லிலும் வெட்டித்தருவ’ தென்றருளிச் செய்ய,
சயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து மாகறல்நாட்டு ஆல்பாக்கத்துப் புஞ்சை நஞ்சை அகப்பட, விளைநிலம் நூற்றறுபத்தெழு ஆல்பாக்கத்துப் புஞ்சை நஞ்சை அகப்பட, விளைநிலம் வேலியும் எரிகோளும் நத்தமும் குட்டமும் கிணறும் மேநோக்கிந மரமுமகப் பட நாற்பாற்கெல்லை உள்பட நிலம் வெள்ளை வாரி பண்ணிக்கக்கூலி தறியிறை தட்டார்பாட்ட மந்தராயம் பாட்டமுட்பட ஆயமெல்லா மகப்பட்ட ஏகபோக இறையிலியாக
கௌட தேசத்து தக்ஷினராடத்து கங்கோலி ஸார்வண்ண கோத்ர மகா மகேசுவர சுருதிஸ்மிருதி சிந்தித கார்கஸ்தந்மாஸ்ரித உமாபதி தேவராத ஞாநஸிவதேவற்கு நீர்வார்த்து சூர்ய சந்த்ரர்களுள்ளதிதையும் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக்குடுத்தேன்
எதிரிலி சோழச்சம்புவ… தம் ஈழப்படை சோழமண்டலத்தில் புகுதாமைக் கும், பூசலிலே பட்டு ஓடிப்போகைக்கு மிளயாவர் சிலர் சோழராஜ்யத்துக்கு ராஜாவாதார் அவர்கள் பரிபாலிப்பது; எங்கள் வம்சத்து தர்ம்மம் பரிபாலிப்பது; யாவதொருவ நிந்த தர்ம்மம் பரிபாலியா தொழிகிறாந் அவந்கங்… பித்ருபத மும் மாத்ருபதமும் பிராம்மணி பதமும் ஸிவத்ரோஹமும் பண்ணினார் பட்டபாவ.’
தன்னுடைய படையைத் தகுந்த நேரத்தில் அனுப்பிவைத்து உதவி செய்த ராஜாதித்தருக்கு இறுதிவரை குலசேகரன் விசுவாசமாக இருந்திருப்பார் என்றே நினைத்திருப்போம். ஆனால் நடந்ததே வேறு. சிங்களவருடன் விரைவில் நட்பு ரீதியிலான உடன்படிக்கையில் குலசேகரன் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாதித்தர் தன்னுடைய தளபதி பல்லவராயரை அழைத்து, பராக்கிரமபாண்டியன் மகன் வீரபாண்டியனை பாண்டிய நாட்டின் அரசனாக்குமாறு உத்தரவிட்டார். கடும் போரில் ஈடுபட்டு பல்லவராயர் அந்த உத்தரவை நிறைவேற்றினார். ராஜாதித்தரின் ஆட்சிக்காலம் முடியும் வரை பாண்டிய அரசராக வீரபாண்டியனே இருந்தார்.
அணிமாறும் அரசியல் இன்றல்ல, அன்றே இருந்தது என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம்.
(தொடரும்)

