கருச்சிதைவினால் தளர்வுற்ற ஃப்ரீடாவின் உடலும் மனமும் நலம்பெறுவதற்குள் இன்னொரு மோசமான தகவல் வந்தது. தாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என்ற தந்தியைப் படித்ததும் பதறிப் போனார். ஆறு மாதத்துக்கு முன்னர் மடில்டாவை மார்பகப் புற்றுநோய் தாக்கியிருந்தது. சிகிச்சை பலனளிக்கவில்லை என்பதால் ஃப்ரீடாவுக்குத் தெரிவித்தனர்.
ஃப்ரீடாவினால் குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. உடனே விமானத்தில் கிளம்பவேண்டும் என்றால் சீட்டு கிடைக்கவில்லை. ‘எப்போதும் வளர்ச்சி பற்றியே பேசுகிறார்களே. விமானத்தில் போகமுடியவில்லையே. நாகரிக சௌகரியங்களுக்கு என்னவானது?’ என ஆற்றாமையும் கோபமும் பொங்கச் சீறினார் ஃப்ரீடா. உடனிருந்த நண்பர்கள் டீயகோவுக்குத் தகவல்சொல்லி வரவழைத்தனர்.
வெள்ளமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த ஃப்ரீடாவை மெக்சிகோவுக்கு ரயிலில் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தார் டீயகோ. அவருக்குத் துணையாக டெட்ராய்ட்டில் ஃப்ரீடாவுக்கு உற்றதோழியாக இருந்த லூசியன் ப்ளாக்கையும் போகச் சொன்னார். லூசியன் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஓவியர், புகைப்படக் கலைஞர். டீயகோவின் உதவியாளராகப் பணியாற்றினார். டீயகோ, ஃப்ரீடா இருவரையும் இவர் எடுத்த அரிய புகைப்படங்கள் முக்கிய ஆவணங்களாக அமைந்தன.
பயணத்துக்கிடையே செயிண்ட் லூயிஸ் நகரில் உணவுவிடுதியொன்றில் இருவரும் இளைப்பாறினார்கள். அங்கேதான் ரியோ க்ராண்டே நதியில் வெள்ளம் கரைபுரள்வதைத் தெரிந்துகொண்டனர். தொலைபேசித் தொடர்பு கிடைக்காமல் போனதன் காரணம் தெரியவந்தது. ஃப்ரீடாவுக்கு மறுபடியும் ரத்தப்போக்கு ஏற்பட்டு பலவீனமானார். மெக்சிகோவை அடைந்த பிறகு வெள்ளத்தினால் ரயில் மெல்ல நகர்ந்தது. ஒரு வழியாக இரவு பத்து மணிக்கு மெக்சிகோ சிட்டிக்கு வந்துசேர்ந்தனர். சகோதரிகள், உறவினர்கள் என ஃப்ரீடாவைச் சந்திக்க எல்லோரும் குழுமியிருந்தனர். ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கண்ணீர் பெருக்கினர்.
மடில்டாவின் நிலைமை மிக மோசமாக இருந்தது, அழுதுகொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் கில்லெர்மோவுக்கு மூப்பெய்தி காதுகேட்காமல் போனது. அவரைக் கவனித்துக்கொள்வது தனி வேலை. தாயின் உடல்நிலை குறித்து டீயகோவுக்குக் கடிதமெழுதினார் ஃப்ரீடா. அதே நேரம் டீயகோவை யார் கவனித்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் வாட்டியது. டீயகோவும் ஃப்ரீடாவைப் பிரிந்திருப்பது சிரமமாக இருப்பதாகப் பதிலெழுதினார்.
ஃப்ரீடா மெக்சிகோ வந்த மறு வாரம் மடில்டே இறந்துபோனார். கில்லெர்மோவுக்கு நினைவு தப்பியதால் மனைவி இல்லையென்பது புரியாமல் அவர் எங்கே எனக் கேட்டபடி இருந்தார். தாயை நினைத்து நினைத்து அழுதுகொண்டேயிருந்தார் ஃப்ரீடா. மெக்சிகோவில் தங்கியிருந்த ஐந்து வாரமும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டார். தந்தையைத் தினமும் பூங்காவில் நடைப்பயிற்சிக்கு அழைத்துப்போனார். சகோதரிகள் அட்ரியானா, கிறிஸ்டினா இருவருடனும் மணிக்கணக்கில் பேசினார். இடையில் சான் ஏஞ்சலில் டீயகோ தங்கள் இருவருக்காகவும் கட்டிவந்த இரட்டை வீட்டைப் பார்வையிட்டார்.
ஆறேழு வாரங்கள் கழிந்தன. ஃப்ரீடா மெக்சிகோவிலிருந்து கிளம்பும் நேரம் வந்தது. நண்பர்கள் பிரிவுபசார விருந்து ஏற்பாடு செய்தனர். விடை கொடுப்பதற்காக ரயில் நிலையத்துக்கு ஃப்ரீடாவின் தந்தை, சகோதரிகள், டீயகோவின் முன்னாள் மனைவி லூப் மாரின் என எல்லோரும் வந்தனர். ரயில் கிளம்பிய சிறிது நேரத்துக்கு அழுதபடியிருந்தார் ஃப்ரீடா. பிறகு படுக்கையில் படுத்து உறங்கிவிட்டார்.
டெட்ராய்ட் வந்த ஃப்ரீடாவினால் டீயகோவை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. வாட்டசாட்டமான மனிதர் அத்தனை இளைத்துப்போயிருந்தார். பிறக்காத குழந்தை, பெற்ற தாய் என இரண்டு இழப்புகளின் துயரம் ஃப்ரீடாவை வாட்டியது. கூடவே டீயகோவை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு வேறு சேர்ந்துகொண்டது. ஃப்ரீடாவின் மனநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டதால் திடீரென அழத் தொடங்குவார். டீயகோ எப்போதும் பதற்றத்தில் இருந்த காரணத்தால் ஃப்ரீடாவின் இருப்பே எரிச்சலூட்டியது.
ஓரிரு வாரங்களில் ஃப்ரீடா சோகத்திலிருந்து மீண்டார். அந்தச் சமயத்தில் ‘என் பிறப்பு’ (My Birth) என்ற சிறப்புமிக்க ஓவியமொன்றைத் தீட்டினார். மெக்சிகோவுக்குக் கிளம்புவதற்கு முன்னர் தொடங்கியதைத் திரும்பிவந்த பிறகு வரைந்து முடித்திருக்கலாம். உன் பிறப்பு, வளரும் பருவம் குறித்து வரையலாமே என்ற டீயகோவின் ஆலோசனையின்படி தீட்டப்பட்ட முதல் ஓவியம். ‘எப்படிப் பிறந்திருப்பேன் என்ற என் கற்பனை இது,’ என்றார் ஃப்ரீடா.
குழந்தைப் பிறப்பு குறித்து இதுவரை வரையப்பட்ட ஓவியங்களில் இது சிறந்ததாகக் கருதப்படுகிறது. மருத்துவரின் பார்வைக் கோணத்திலிருந்து வரையப்பட்டது. ஓவியத்தில் தாயின் தொடைகளுக்கு நடுவிலிருந்து சிசுவின் தலை வெளியே வருகிறது. அதன் அடர்த்தியான இணைந்த புருவங்கள் ஃப்ரீடா என்பதைச் சுட்டுகின்றன. தொங்கிய கழுத்து குழந்தை இறந்துவிட்டது போன்ற தோற்றம் அளிக்கிறது. பிரசவிக்கும் தாயின் உடலும் முகமும் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டுள்ளதால் அவளும் மரணமடைந்துவிட்டாள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
தாயின் தலைக்குமேலே உள்ள சுவரில் துயரத்திலாழ்ந்த மற்றொரு தாயின் படம் தொங்குகிறது. ஏழு வாள்களால் துளைக்கப்பட்ட ரத்தம் கசியும் இதயத்தோடு கண்ணீர் சிந்தும் கன்னி மரியாளின் படம். அதில் குறியீடு எதுவுமில்லை. கத்தோலிக்கரான தன்னுடைய தாய்க்குப் பிடிக்கும் என்பதால் வரைந்தேன் என்று விளக்கினார் ஃப்ரீடா. கீழேயுள்ள இரண்டு உயிர்களின் மரணம் குறித்த எந்த உணர்வையும் கன்னி மரியாளின் பார்வை வெளிக்காட்டுவதில்லை.
ஓவியத்திலிருந்த கட்டில் ஃப்ரீடாவின் தாயினுடையதை ஒத்திருந்தது. இளஞ்சிவப்பு பூவேலைப்பாடு கொண்ட தலையணையும் வெளிர் வண்ணச் சுவரும் குழந்தைப் பருவ நினைவுகளோடு தொடர்புடையவை. கீழ்ப்பகுதியிளுள்ள எழுத்துச் சுருளில் எதுவும் எழுதவில்லை. ஓவியத்தின் சாராம்சத்தை மீண்டும் எழுத்தில் விவரிப்பது தேவையில்லை என நினைத்திருக்கலாம். என் பிறப்பு பேரழிவைக் குறிக்கிறது, தெய்வீக மீட்பு எதுவும் நிகழவில்லை என்று சொல்ல வந்திருக்கலாம்.
அஜ்டெக் இனத்தின் பெண் தெய்வம் குத்துக்காலிட்ட நிலையில் தாங்கொணாத வலியோடு வளர்ந்த மனிதனைப் பிரசவிப்பதைச் சித்தரிக்கும் கற்சிற்பம் ஒன்று உள்ளது; சகாப்தமொன்றைப் பிரசவிக்கும் குறியீடு. ஃப்ரீடா அதைப் பார்த்திருக்கலாம். அஜ்டெக் மதத்தில் பிரசவம் என்பது வருங்காலத்தைக் கணிக்கும் சகுனம். ஓவியத்தில் ஃப்ரீடா தான் பிறக்கும் காட்சியைச் சித்தரித்தாலும் அது பிறக்காத அவரின் குழந்தையையும் குறிக்கிறது. அதனால் ஃப்ரீடா தன்னையே பிரசவித்துக் கொள்வதையும் சுட்டுகிறது. அவருடைய தாய் இறந்த சமயத்தில் வரையப்பட்டது என்பதால் ஓவியத்தில் இருக்கும் தாயான தன்னுடைய முகத்தை மூடியிருப்பதாகச் சொல்கிறார் ஃப்ரீடா.
ஃப்ரீடாவின் தன்னோவியங்கள் இனம், அழகு, உடல்திறன், அடையாளம் ஆகியவை குறித்த பொதுக்கருத்தை உடைத்தன. உடல்வலி, மனப்போராட்டம், மரபிற்கு இசையாத தோற்றம் ஆகிய எதையும் மறைக்கவேண்டுமென அவர் நினைக்கவில்லை. சொல்லப்போனால் இவையனைத்தும் அவருடைய ஓவியங்களின் மையக்கருத்தாக அமைந்தன. மகள், மனைவி, பெண், மாற்றுத்திறனாளி என்ற சமூகத்தின் எந்த வரையறைக்குள்ளும் அடங்க மறுத்தார். தலைசிறந்த ஓவியர் டீயகோவின் மனைவியான ஓவியர் ஃப்ரீடா என்ற பின்னொட்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘இதுதான் நான், இப்படித்தான் என்னைப் பார்க்கிறேன்,’ எனத் தன் படைப்புகளின் வழியாக அறுதியிட்டுச் சொன்னார்.
பெரும்பாலும் ஆண் கலைஞர்கள், விமர்சகர்கள் ஆகியோரின் பார்வையில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவர் ஃப்ரீடா. குறிப்பாக புகழ்மிக்க ஓவியரான டீயகோவின் இணையர். ஆனாலும் எவருடைய கருத்தையும் பாணியையும் பின்பற்றாமல் தனித்துவத்துடன் மிளிர்ந்தார். பெண்மையின் வடிவாகச் சமூகம் வரித்தவற்றை ஒதுக்கினார். மெக்சிகோவின் பாரம்பரியம், தன்னுடைய அரசியல் நம்பிக்கை, உடல்வலி எனத் தன்னுடைய வாழ்விலிருந்தே குறியீடுகளைத் தேர்ந்தெடுத்தார். கலையின் வழியாகத் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றைச் சொன்னார். வேறு எவரும் ஃப்ரீடா இப்படிப்பட்டவர் என்று வரையறுக்க முடியாமல் செய்தார்.
அடுத்து ஃப்ரீடா வரைந்த தன்னோவியத்தில் முந்தையவற்றைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்தார். குழந்தைத்தனம் அகன்று முதிர்ச்சியும் புத்துணர்ச்சியும் பெற்றவராகத் தோற்றமளித்தார். அப்போது டெட்ராய்ட் நகரின் முக்கிய நாளிதழ் அவரைப் பேட்டி கண்டது. டீயகோ மட்டுமல்ல ஃப்ரீடாவும் தனித்தன்மை வாய்ந்த ஓவியர் என்பது உலகுக்குத் தெரியவந்தது.
பேட்டியில் ஃப்ரீடாவின் நகைச்சுவையுணர்வும் குறும்பும் வெளிப்பட்டது. ‘நானாகவே வரையத் தொடங்கினேன். நான் டீயகோவின் மாணவியல்ல. உண்மைதான், அவர் சின்னப் பையன் என்றாலும் நன்றாகவே வரைகிறார். ஆனால் நான்தான் அவரைவிடவும் பெரிய ஓவியர்,’ எனக் கண்கள் மின்னச் சொன்னார்.
டீயகோவுக்கு அடுத்தடுத்து நியூயார்க்கிலும் சிகாகோவிலும் வரைவதற்காக அழைப்பு வந்தது. அதற்குள்ளாக டெட்ராய்ட்டில் டீயகோவின் ஓவியங்களுக்கு எதிர்ப்புக் குரல் எழத்தொடங்கியது. புனிதத்துவத்துக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகவும் கம்யூனிஸச் சித்தாந்தத்தைப் பரப்புவதாகவும் ஆபாசமானவை என்றும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். டீயகோவின் ஓவியங்கள் டெட்ராய்ட்டின் ஆன்மாவைச் சித்தரிக்கின்றன என்று ஃபோர்ட் நிறுவனத்தினரும் கலை ஆர்வலர்களும் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.
நியூயார்க் ராக்ஃபெல்லர் கலை மையத்தில் டீயகோ வரையும் ஓவியத்துக்குச் சாலைகளின் சந்தியில் நிற்கும் மனிதர்கள் நம்பிக்கையும் உயர்நோக்கும் கொண்ட எதிர்காலத்தை நோக்குதல் என்ற தலைப்பிடப்பட்டது. ஓவியத்தில் கம்யூனிஸத் தலைவரான லெனினின் கழுத்தளவு உருவத்தையும் சேர்த்திருந்தார். அதை நெல்சன் ராக்ஃபெல்லரிடம் முன்னரே காண்பித்து அனுமதி பெற்றிருந்தாலும் சுவரில் வரையத் தொடங்கிய பிறகுதான் எல்லோரின் கண்ணிலும் பட்டது.
முதலாளித்துவத்தை மையமாகக் கொண்ட அமெரிக்காவின் தலைநகரில் பொதுவுடைமைத் தத்துவத்தை ஆதரித்த தலைவர், அதுவும் பரம எதிரியான ரஷ்யரின் உருவத்தை வரைவது அடுக்குமா என்று எதிர்குரல் எழும்பிப் பேரலையாக மாறிச் சீற்றம்கொண்ட புயலாக வடிவம்கொண்டது. வரைவதை நிறுத்தமுடியாது, வேண்டுமென்றால் லெனினினுக்கு அருகில் ஆபிரகாம் லிங்கனை வரைகிறேன் என்று சமரசம் செய்ய முயன்றார் டீயகோ. ராக்ஃபெல்லர் ஒத்துக்கொள்ளவில்லை. பாதுகாவலர்கள் டீயகோவை அரங்கிலிருந்து வெளியேற்றினர்.
டீயகோவின் உதவியாளர்களும் ஆதரவாளர்களும் ஓவியத்தை அழிக்கக்கூடாது எனப் போராடினாலும் பலனளிக்கவில்லை. ராக்ஃபெல்லர் கலை மையத்தில் ஓவியம் வரைந்த சுவர் இடித்துத் தள்ளப்பட்டது. அடுத்து சிகாகோவில் சுவரோவியம் வரைவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பு ரத்து செய்யப்பட்டது. சுவரோவியத்தின் மூலம் அமெரிக்காவில் சமூகப் புரட்சியை விதைக்கும் டீயகோவின் முயற்சி தவிடுபொடியானது.
இத்தனைக்கும் நடுவே டீயகோவுக்குத் துணையாக நின்றார் ஃப்ரீடா. ராக்ஃபெல்லர்களுக்கு லெனினின் உருவத்தை வரையப்போகிறார் என்பது தெரியுமென்றும் பொதுமக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி இப்படி நடந்துகொள்கிறார்கள். உண்மையில் ராக்ஃபெல்லர்கள் இது குறித்து வருத்தமடைந்திருப்பார்கள் என்று சொன்னார்.
அதற்குள்ளாக அமெரிக்கா வந்து நான்கு வருடங்களாகியிருந்தன. ஃப்ரீடாவுக்கு கிரிங்கோலாண்டியா பிடிக்கவில்லை. மெக்சிகோவின் நினைவு வாட்டியது. வீட்டுக்குத் திரும்பவேண்டுமென்று டீயகோவிடம் சொன்னார். அமெரிக்கர்கள் டீயகோவின் ஓவியங்களின்மீது மிகுந்த பிரியம் கொண்டிருந்தனர். பெரும் பொருளியல் வீழ்ச்சிக் காலத்திலும் அதற்கான விலையைக் கொடுக்கத் தயாராக இருந்தனர். இவை இரண்டினாலும் டீயகோவுக்கு அமெரிக்காவின்மீதும் அமெரிக்கர்களின்மீதும் பிடிப்பு ஏற்பட்டிருந்தது. இதுவரையில் சம்பாத்தித்த பணம் முழுவதும் செலவாகியிருந்தது. அதனால் அவர் அமெரிக்காவில் தங்கிப் பொருளீட்ட நினைத்தார், மெக்சிகோ செல்ல விரும்பவில்லை. ஆனால் வேறு ஓவியங்கள் வரைவதற்கான அழைப்பு எதுவும் வரவில்லை. ஒருவழியாக 1933 டிசம்பர் மாதம் நண்பர்களின் உதவியோடு மெக்சிகோ செல்வதற்கான கடல்வழிப் பயணச்சீட்டுக்களை வாங்கினார்கள்.
மெக்சிகோ வந்ததும் சான் ஏஞ்சலில் டீயகோ கட்டிய வீட்டில் குடியமர்ந்தனர். இரு தனித்தனிக் கட்டடங்களைக் கொண்ட வீடு இரு கலைஞர்களுக்கும் அவர்கள் வேண்டிய தனிமையைக் கொடுத்தது. இருவரின் உறவும் சுமுகமாக இல்லை என்பதால் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கவேண்டும் என்று திட்டமிட்டார் ஃப்ரீடா.
வீட்டில் தன்னுடைய நீலவண்ணப் பகுதியை அலங்கரிக்கும் வேலையில் இறங்கினார். மூன்று தளங்களில் அமைந்த வீட்டில் ஃப்ரீடாவின் ஓவிய அறை மேல்தளத்தில் அமைந்திருந்தது. வளைந்து செல்லும் படிக்கட்டில் ஏறிச் செல்லவேண்டும். ஆனால் மெக்சிகோ வந்து சேர்ந்த பிறகு ஃப்ரீடா ஓவியம் வரையவே இல்லை.
டீயகோவின் கையிருப்பு முழுவதும் கரைந்து போனது. இன்னொரு பக்கம் அமெரிக்க வருவாய் போனதே என்ற கவலையும் சேர்ந்துகொண்டது. அதுவுமின்றி அமெரிக்காவில் உணவுக்கட்டுப்பாட்டில் இருந்ததால் உடல்நிலை மோசமானது, மனவழுத்தம் ஏற்பட்டது. அமெரிக்காவிலிருந்து மெக்சிகோ திரும்பவேண்டுமென்று ஃப்ரீடா பிடிவாதம் பிடித்தார் என்பதால் தன்னுடைய கஷ்டங்களுக்கு அவர்தான் காரணம் என்று குற்றம் சொன்னார் டீயகோ.
1934இல் ஃப்ரீடாவுக்குப் பல உடல்கோளாறுகள் ஏற்பட்டதால் அடிக்கடி மருத்துவமனை செல்லவேண்டிய கட்டாயம். முதலாவதாக, குடல்வால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அடுத்து, மூன்று மாதமான கருவை மருத்துவரின் பரிந்துரையில் கலைக்க வேண்டியதாயிற்று. இறுதியாக, வலது கால் கவலைக்கிடமானதால் அதற்குச் சிகிச்சை மேற்கொண்டார்.
இந்தக் காலகட்டத்தில் ஃப்ரீடாவின் தங்கை கிறிஸ்டினாவுடன் ரகசிய உறவிலிருந்தார் டீயகோ. எப்போது எப்படித் தொடங்கியது என்பது தெரியவில்லை. டீயகோ வேறு ஒரு பெண்ணுடன் உறவிலிருப்பதை ஃப்ரீடா அனுமானித்திருந்தார். ஆனால் அந்தப் பெண் தன்னுடைய உடன்பிறந்த தங்கை என்பது தெரிய வந்ததும் நொறுங்கிப் போனார்.
ஃப்ரீடாவைவிடப் பதினோரு மாதம் இளையவர் கிறிஸ்டினா. சகோதரிகளுள் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள். தன்முனைப்பும் ஆளுமைத்தன்மையும் கொண்ட அக்காவுக்கு நேரெதிரான குணமுள்ளவர் தங்கை. ஆண்களிடம் மென்மையாகவும் வளைந்துகொடுத்தும் நடந்துகொள்வார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு கணவர் அவரைப் பிரிந்திருந்தார்.
டீயகோவுடனான உறவைச் சீர்செய்யும் எண்ணதிலிருந்த ஃப்ரீடா இந்த நிகழ்வால் சொல்லொணாத துக்கமும் பதற்றமும் சீற்றமும் கொண்டார். வீட்டின் இரண்டு பகுதிகளுக்கிடையே இருந்த பாலத்தை அடைத்தார். டீயகோவுக்குப் பிரியமான விஷயங்களை நிராகரிக்கும் வகையில் தன்னுடைய நீளமான முடியைக் கத்தரித்தார். டவ்வான்டப்பெக் ஆடைகளை அலமாரியில் வைத்துப் பூட்டினார். வழக்கறிஞராக இருந்த பள்ளிக்கால நண்பனிடம் விவாகரத்து குறித்துக் கலந்தாலோசித்தார்.
இத்தனைக்குப் பிறகும் கிறிஸ்டினாவுடனான உறவை நிறுத்தவில்லை டீயகோ. மாறாக, தேசிய மாளிகை ஓவியத்தில் கிறிஸ்டினாவையும் அவர் பிள்ளைகளையும் வரைந்தார். ஃப்ரீடாவின் மனம் ரணமானது. கணவர், தங்கை இருவரின்மீதும் கடுங்கோபம் கொண்டார். சான் ஏஞ்சல் வீட்டைவிட்டு வெளியேறித் தனியாகத் தங்கினார். பெண் தோழியருடன் சேர்ந்து நியூயார்க்குக்குச் சென்றார்.
சில மாதங்கள் கழிந்து சினம் தணிந்த பிறகு தன்னால் டீயகோவைவிட்டு முழுமையாக விலகமுடியாது என்பதை உணர்ந்தார். டீயகோவும் ஃப்ரீடாவைத் தவிர வேறு யாரையும் தன்னால் நினைத்துப் பார்க்கமுடியாது என்பதைப் புரிந்துகொண்டார். விலகியிருந்த காலத்திலும் இருவரும் அவ்வப்போது சந்தித்தனர். எப்போதும்போல வாழ்க்கை தனக்குப் பரிசளிக்கும் வஞ்சகங்களைச் சீரணித்துக் கடப்பதற்குக் கலையிடம் தஞ்சம் புகுந்தார் ஃப்ரீடா.
(தொடரும்)

