Skip to content
Home » அரிய கல்வெட்டுகள் #10 – அச்சணந்தியின் கல்வெட்டுகள்

அரிய கல்வெட்டுகள் #10 – அச்சணந்தியின் கல்வெட்டுகள்

தமிழ்த்தாயின் அணிகலன்களான ஐம்பெருங்காப்பியங்களில் சீவகசிந்தாமணியும் ஒன்றாகும். ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன், தன்னுடைய மனைவி விசையை மேலிருந்த அளவு கடந்த காதல் காரணமாக, அரசாட்சியைக் கட்டியங்காரன் என்கிற அமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டு, அந்தப்புரத்திலேயே காலத்தைக் கழித்தான். கட்டியங்காரன் சூழ்ச்சி செய்து, தன்னைப் போரிட்டுக் கொல்ல முயன்றபோது, கருவுற்றிருந்த தன் மனைவி விசையையை ஒரு மயில் பொறியில் ஏற்றி சச்சந்தன் பத்திரமாக அனுப்பினான்; அதன்பிறகு அவன் போரில் மடிந்தான்.

இடுகாட்டில் வைத்து சீவகனைப் பெற்றெடுத்தாள் விசையை. பின்னர் அவள் தவம் செய்யச் சென்றுவிட்டாள். கந்துக்கடன் என்கிற வணிகன், சீவகனை எடுத்து வளர்த்தான். அச்சணந்தி என்பவரிடம் சீவகன் கல்வி கற்றான். தன் நெருங்கிய நண்பன் பதுமுகனுக்கு கோவிந்தை என்கிற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தான் சீவகன். திறமைசாலியாக இருந்த சீவகன், எண்மரை (எட்டு பெண்களை) மணந்தான். கட்டியங்காரனின் சூழ்ச்சியை முறியடித்து, அவனை வென்று, ஏமாங்கத நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினான். பின்னர், இல்வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, ஞானம்பெற்றுத் துறவு நிலையை அடைந்தான். இதுவே, சீவகசிந்தாமணி கூறும் கதை.

இக்காப்பியத்தில் சீவகனின் குருவாக வரும் அச்சணந்தி, உண்மையாக வாழ்ந்த ஒரு கதாபாத்திரம். 9ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 10ஆம் நூற்றாண்டின் தொடக்கம் இவர் வாழ்ந்த காலகட்டமாகும். தமிழகத்தில் சைவத்தை நால்வரும், வைணவத்தை பன்னிருவம் எவ்வாறு போற்றி வளர்த்தனரோ, அதற்குச் சற்றும் குறைவில்லாதது சமணத்துக்கான அச்சணந்தியின் செயல். தமிழகத்திலுள்ள குகைத்தளங்களில் அருகர் திருமேனிகளை ஏற்படுத்தி, சமண சமயத்தை வளர்த்ததில் இவருக்குப் பெரும்பங்குண்டு.

சீவகசிந்தாமணியின் 409ஆம் பாடல், மகாவீரரின் திருவடி நிழலில் நிரந்தரமாக வீற்றிருக்க வேண்டி அச்சணந்தி நோன்பு நோற்றதாகக் கூறுகிறது. மேலும், அந்தச் செயலில் அவர் தனது பிறவியை விட்டதாகவும் அது கூறுகிறது. இது சமணர்களின் ‘நிசீதிகை’ எனும் நோன்பாகக் கருதலாம்.

சமணத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று சல்லேகனை விரதம். உண்ணா நோன்பிருந்து இறக்கும் முறையே சல்லேகனம் எனப்படும். இவ்விரதம் மேற்கொள்வோர் முதலில் தம் குருவிடம் உத்தரவுபெற்று, சரியான இடத்தை, அதாவது மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுத்து, அவ்விடத்தைத் தருப்பை புல்லால் பரப்பி, அதன்மேல் வடக்கு திசை நோக்கி அமர்ந்து விரதம் மேற்கொள்வர். முதலில் திரவ உணவு மட்டும் உட்கொள்வர், அதன்பின் தண்ணீர் மட்டுமே அருந்துவர். இதற்கு அடுத்த நிலையில் தண்ணீரும் அருந்தாமல் விரதம் மேற்கொள்வர். தொடக்கத்தில் புல்மேல் நடக்கலாம், அமரலாம், ஆனால் இறுதி நிலையை எட்டும்போது கை கால்களை அசைக்காமலிருந்து உயிர் துறப்பர்.

சல்லேகனை எனும் இச்சொல் பின்னாளில் வந்தது. ஆரம்பத்தில் ஆராதனை, நிசீதி, பஞ்ச நமஸ்காரம் என இது வழங்கப்பட்டது. தமிழிலக்கியத்தில் வரும் ‘வடக்கிருத்தல்’ வழக்கமே சல்லேகனையாக வந்திருக்கக்கூடும் என்கிற கருத்துமுண்டு. ஐங்குறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசி, சமணப்பெண் நீலகேசி என்பவள் பௌத்த பெண் குண்டலகேசியிடம் வாதிட்டு வெற்றிபெறுவதாக அமைந்த ஒரு காப்பியமாகும்.

முகமலர்ந்து விரும்பியேற்கும் மரணத்தை ‘தற்கொலை’ எனக் குண்டலகேசி கூறுகிறது. இந்தக் கருத்தை மறுத்து, உடம்பாகிய சிறையிலிருந்து உயிர் விடுதலையடைய இவ்விரதம் (சல்லேகனை) உதவுகிறதென நீலகேசி கூறுகிறது. இவ்விரதம் இருப்போர் ‘பிறவாநிலையடைவோர்’ (மறுபிறவி இல்லாத நிலை) எனவும் நீலகேசி கூறுகிறது. எனவே, அச்சணந்தியடிகள் நிசீதிகை நோன்பு நோற்று இறந்ததாகக் கருத இடமுள்ளது.

அச்சணந்தியின் கல்வெட்டுகள்

1. சிதறால் கல்வெட்டு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ளது சிதறால் எனும் சமணத்தலம். இங்கேயுள்ள மலைப்பகுதியில் நிறைய அருகர் திருமேனிகள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. சில சிற்பங்களுக்குக் கீழே, அதை அமைத்தவரின் பெயரும் கல்வெட்டாக உள்ளது. இதில் தொங்கு பாறை எனும் இடத்திற்குக் கீழே அச்சணந்தி திருமேனியை அமைத்த தகவலை அளிக்கிறது.

கல்வெட்டு

1. ஸ்ரீ அச்சணந்தி
2. செய்வித்த
3. திருமேனி

2. சமணமலை (கீழக்குயில்குடி)

மதுரை-தேனி சாலையில் அமைந்துள்ள நாகமலை புதுக்கோட்டைக்கு அருகேயுள்ளது கீழக்குயில்குடி. திருவுருவகம் என இவ்வூர் அன்று அழைக்கப்பட்டது கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. இம்மலைக்கு மேலேயுள்ள பேச்சிப்பள்ளம் எனும் பகுதியில் உள்ள பாறைச்சரிவில் எட்டு சமணத் திருவுருவங்கள் உள்ளன. இதில் அவற்றைச் செதுக்கியவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. கடைசியாக உள்ள பார்சுவநாதரின் சிற்பத்தைச் செய்தவர் அச்சணந்தியின் தாயார் குணமதியார் ஆவார்.

கல்வெட்டு

1. ஸ்ரீ அச்சணந்தி
2. தாயார் குணமதி
3. யார் செய்வித்
4. த திருமேனி ஸ்ரீ

3. அரிட்டாப்பட்டி

மதுரை-திருச்சிராப்பள்ளி புறவழிச்சாலையில் நரசிங்கப்பட்டிக்கு வலதுபுறம் உள்ளது அரிட்டாப்பட்டி. இங்குள்ள ஒரு குகைத்தளத்தில் இரு தமிழிக் கல்வெட்டுகள் உள்ளன. வலதுபுறம் உள்ள பாறையில் சற்று உயரே, தாமரைப் பீடத்தின் மீது அமர்ந்தவாறு ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் குடையப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டில், இம்மலை திருப்பிணையன்மலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மலைத்தொடரில் ஆங்காங்கே சிறு சிறு குன்றுகள் உள்ளன. அவற்றில் ஒன்றைப் பொற்கோடு (பொன்மலை) என்று அழைத்துள்ளனர். இத்தீர்த்தங்கரர் உருவத்தை அச்சணந்தி செதுக்கியுள்ளார். அதற்குக் காவலாகப் பாதிரிக்குடி ஊரார் இருந்துள்ளனர். அரிட்டாப்பட்டியின் பழைய பெயர் பாதிரிக்குடியாக இருந்திருக்கலாம்.

கல்வெட்டு

1. ஸ்ரீதிருப்பிணையன் மலைப் பொ
2. ற்கோட்டுக் கரணத்தார் பேரால்
3. அச்சணந்தி செய்வித்த தி
4. ருமேனி பாதிரிக்குடியார் ரக்ஷை

4. யானை மலை

மதுரை-மேலூர் சாலையில் ஒத்தக்கடை அருகேயுள்ள ஊர் நரசிங்கம். அவ்வூரில் உள்ள ஆனைமலை, பெரியமலைக்குன்றாய்ப் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது. மதுரை-திருச்சி புறவழிச்சாலையில் பயணிப்போர் இம்மலையைக் கண்டிருப்பர். பார்ப்பதற்குத் துதிக்கையை முன்னே நீட்டி, ஒரு யானை படுத்துள்ளதுபோல் அது காட்சியளிக்கும். அதனாலேயே இம்மலைக்கு இக்காரணப்பெயர் வந்தது. 2000 வருடங்களாக இம்மலை இதேபேரில் அழைக்கப்பட்டதற்கு இங்குள்ள தமிழிக் கல்வெட்டே சான்று. இக்கல்வெட்டு இம்மலையை இவகுன்றம் என அழைக்கிறது. சமஸ்கிருதத்தில் யானைக்கு ‘இவம்’ என ஒரு பொருள் உண்டு. இவகுன்றம் எனில் யானைக்குன்றம் அல்லது யானைமலை எனக் கொள்ளலாம்.

இக்கல்வெட்டு உள்ள பாறையின் மேற்புறம் பார்சுவநாதர், தீர்த்தங்கரர், இயக்கி அம்பிகா போன்றோரின் சிற்பங்கள் உள்ளன. இதில் நான்காம் கல்வெட்டு அச்சணந்தி திருமேனி செய்ததைக் குறிக்கிறது. மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள புரவுவரியார் என்பது, அரசாங்கத்தில் பணிபுரியும் வரிக்கணக்குத் துறையினர் எனப் பொருள் தருகிறது. நரசிங்கமங்கலத்து சபையோர் அச்சணந்தி செய்வித்த திருமேனிக்குக் காவலாகவும், புரவுவரியின அதிகாரிகளும்கூட பாதுகாப்பாகவும் இருந்துள்ளனர்.

கல்வெட்டு

1. ஸ்ரீநரசிங்கமங்கலத்து
2. ஸபையார் ரக்ஷை அச்சணந்
3. தி செய்வித்த திருமேனியும் பரிவார
4. புரவுவரியார் பேரமும்

5. கருங்காலக்குடி

மதுரை-திருச்சிராப்பள்ளி புறவழிச்சாலையில் மேலூரைத் தாண்டி அமைந்துள்ள ஊர் கருங்காலக்குடி. இங்குள்ள குகைத்தளம் ஒன்றில் தமிழிக் கல்வெட்டும், அதன்மேலே சமண கற்படுக்கைகளும் அதில் கல்வெட்டுகளும் அமைந்துள்ளன. மேலும், அத்தமிழிக் கல்வெட்டு அமைந்துள்ள பாறைக்கு எதிரே ஒரு தீர்த்தங்கரர் சிற்பமும், அதன்கீழே ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளது. இத்தீர்த்தங்கரர் சிற்பத்தினை அச்சணந்தி செய்வித்ததாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கல்வெட்டு

1. ஸ்ரீ அச்சணந்தி செய்
2. வித்த திருமேனி

6. உத்தமபாளையம் (திருக்குணகிரி மலை)

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ’மொட்டமலை’ எனப்படும் மலை ஒன்றுள்ளது. இம்மலையை இங்குள்ள கல்வெட்டுகள் திருக்குணகிரி மலை என்கின்றன. இம்மலைக்குக் கீழேயுள்ள சுனையின் மேல்புறம் சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றில் அச்சணந்தி அச்சிற்பத்தைச் செய்வித்த தகவலைத் தெரிவிக்கிறது.

7. கொங்கர் புளியங்குளம்

மதுரையிலிருந்து தேனி செல்லும் பிரதான சாலையில் காமராஜர் பல்கலைக்கழகத்தைத் தாண்டி அமைந்துள்ள ஊர் கொங்கர் புளியங்குளம். இங்குள்ள மலைத்தொடரில் பாறை ஓவியங்களும், தமிழிக் கல்வெட்டுகளும் உள்ளன. இதில் பாறை ஓவியம் அமைந்துள்ள பகுதிக்கு அடுத்துள்ள ஒரு குன்றில் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று குடையப்பட்டுள்ளது. அதன் கீழே அச்சணந்தி அச்சிற்பத்தைச் செய்ததைக் கல்வெட்டு கூறுகிறது.

கல்வெட்டு

1. ஸ்ரீ அச்சணந்தி செயல்

8. ஐவர்மலை

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கொழுமம் அருகேயுள்ளது ஐவர்மலை. இம்மலையைச் சங்க இலக்கியங்கள் ’அயிரை மலை’ என்றழைத்தன. ‘மடைஎதிர் கொள்ளா அஞ்சுவரு மரபின் கடவுள் அயிரை’ எனப் பதிற்றுப்பத்து கூறுகிறது. இம்மலையில் இயற்கையாக அமைந்த குகைத்தளம் ஒன்றுள்ளது. இங்குள்ள தீர்த்தங்கரர் சிற்பங்கள் கீழே அவற்றைச் செதுக்கியவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு தீர்த்தங்கரரின் கீழே ஸ்ரீ அச்சணந்தி என்கிற பெயர் உள்ளது.

கல்வெட்டு

1. ஸ்ரீ அச்சணந்தி

9. வள்ளிமலை

வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை, தொண்டை மண்டலத்திலுள்ள முக்கியமான சமணத்தலமாகும். இங்கே சமண துறவிகளின் உருவச்சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 9ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தொன்மையான கல்வெட்டுகள் இங்குள்ளன. இத்தொகுப்பில் உள்ள நான்கு கல்வெட்டுகள் கிரந்த – சமஸ்கிருதம், கிரந்த – கன்னட மொழிகளில் உள்ளன. இங்குள்ள கல்வெட்டுகளில் மேலைக் கங்கர் கல்வெட்டு, இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் வெட்டப்பட்டுள்ளது. மேலைக் கங்க அரசனான முதலாம் ராசமல்லனால் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு, ‘மலைகளில் சிறந்தது இம்மலை. சமண முனிவர்களின் வாழ்விடம் அமைவதற்குத் தகுதியானது என்று இம்மன்னனால் தேர்ந்தெடுக்கப்பட்டது’ எனக் குறிப்பிடுகிறது. ராஜமல்லனின் முன்னோர்களாக ரணவிக்கிரமன் ஸ்ரீபுருஷன், முதலாம் சிவமாரன் ஆகியோர் இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வாணர்குல அரசனான வாணாதிராசனின் குருவான பவணந்தியின் மாணவர்களில் ஒருவரான தேவசேனர் என்கிற சமண துறவியின் உருவச்சிலை இங்கு அமைக்கப்பெற்றுள்ளது. இக்கல்வெட்டுகள் கன்னட மொழியில் உள்ளன என்பதால் அக்காலத்துச் சமண துறவிகள் கன்னட மொழி அறிந்தவர்கள் என்பது தெரிய வருகிறது. வள்ளிமலையில் மற்றொரு புறத்தில் உள்ள கல்வெட்டில், அங்குள்ளது கோவர்த்தனர் என்கிற சமண துறவியின் உருவச் சிலை என்றும் அச்சிலையைப் பேராளரான பாலசந்திரரின் மாணவர் அஜ்ஜநந்தி உருவாக்கினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டு அங்கேயுள்ள உருவச் சிலையை வெட்டியவர் அஜ்ஜநந்தி படாரர் எனக் குறிப்பிடுகிறது. வேறொரு கல்வெட்டு, தேவசேனர் என்கிற சமண துறவியின் உருவச்சிலை மேலே உள்ளது என்றும் அவர் பாணராய அரசரின் குருவான பவணந்தி ஆசிரியரின் மாணவர் என்றும் குறிப்பிடுகிறது.

எனவே வாண அரசர்கள் சமண மதத்தை ஆதரித்தவர்களாக இருந்துள்ளது தெரிகிறது. மேலும், இக்கல்வெட்டு வாயிலாக, பாலச்சந்திரர் என்கிற குருவிடம் அச்சணந்தி சீடராக இருந்ததும் தெரியவருகிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *