Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #3 – சாமலா புலியின் கதை

ஆட்கொல்லி விலங்கு #3 – சாமலா புலியின் கதை

சாமலா பள்ளத்தாக்கு

சாமலா பள்ளத்தாக்கு கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேஷாச்சலம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் சேஷாச்சலம் மலை ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி, சித்தூர் மற்றும் கடப்பா ஜில்லாக்களில் அடங்கிய மலைத் தொடர்.

சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்னர் சாமலா பள்ளத்தாக்கு வேட்டைக்காரர்களின் புகலிடம் என்று சொன்னால் அது மிகையாகாது. பள்ளத்தாக்கு முழுவதும் புள்ளி மான்கள் தென்படும். இங்குள்ள ஆண் புள்ளி மான்களின் தலை தென்னிந்தியாவில் காணப்படும் ஏனைய புள்ளி மான்களைவிடப் பெரிதாக இருக்கும். கட மான்கள் (சாம்பார் மான்கள்) சாமலா பள்ளத்தாக்கில் நிறையச் சுற்றித் திரியும். இவை தவிர குரைக்கும் மான்களையும் பார்க்கலாம். கரடிகளும் (sloth bear) ஏராளமாக உள்ளன. சிறுத்தைகளுக்கும் குறைவில்லை.

புலிகள் பக்ரபேட் மலைகளிலிருந்து இறங்கி சாமலா பள்ளத்தாக்கு வழியாக கடப்பா காடுகளில் புகுந்து மாமண்டூர் மலைகளுக்குச் செல்லும். இங்குள்ள காட்டுச் சேவல்கள் விசித்திரமாக சூரியன் உதயம் மற்றும் அஸ்தமிக்கும் நேரங்களைத் தாண்டியும் கூவும் பழக்கத்தைக் கொண்டிருந்தன. இந்தக் காட்டுச் சேவல்கள் அலாரம் வைத்த மாதிரி நள்ளிரவு 2 மணி; விடியற்காலை 4:30 மணி மற்றும் மதியவேளை எனக் கூவிக்கொண்டிருக்கும்.

இந்தப் பசுமை மிகுந்த ரம்மியமான சாம்லா பள்ளத்தாக்கில்தான் 1937 ஆம் ஆண்டில் ஒரு புலி தென்பட்டு அனைவரது மத்தியிலும் பேரச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. அந்தப் புலி எங்கிருந்து வந்ததென்று யாருக்கும் தெரியவில்லை. அருகிலுள்ள காடுகளிலும் அந்த ஆட்கொல்லிப் புலியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதனுடைய கால் தடயங்களை வைத்துப் பார்க்கும்போது அது ஒரு சாதாரணமான புலியாகத்தான் தோன்றியது. அதன் உடலில் ஊனம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் குறைபாடு இல்லாத புலி, மனித மாமிசத்தைப் புசிப்பதில் விருப்பம் காட்டியதுதான் வினோதம்.

குண்டல்பெண்டா குளத்தின் அருகே மூங்கில்களை வெட்டச் சென்ற ஒரு நபரை புலி தாக்கி அவரை முழுமையாகச் சாப்பிட்டுவிட்டது. இதுதான் சாமலா புலியின் முதல் தாக்குதல். அடுத்த மூன்று நாட்களில், நாகபட்லா – புலிபோனு காட்டு வழிப்பாதையில் பயணித்த இன்னொருவரையும் தாக்கி இரையாக்கிக்கொண்டது சாமலா புலி.

அதன் பின்னர் தொடர்ந்து ஆங்காங்கே பள்ளத்தாக்கிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மனிதர்களை வேட்டையாடி விழுங்கியது புலி. சுமார் ஆறு மாதங்களில் ஏழு நபர்களை வேட்டையாடிவிட்டது. இந்நிலையில், பக்ரபேட் வன வரம்பு அதிகாரி (சாமலா பள்ளத்தாக்கு இவரது வரம்புக்குள் உட்பட்டது) ஆய்வு மேற்கொள்வதற்காக அந்தக் காட்டுக்குள் பயணமானார். 15 நாட்கள் மேற்கொள்ள வேண்டிய ஆய்விற்கு ஏதுவாக அவர் நாகப்பட்லாவில் உள்ள காட்டுப் பங்களாவில் தங்க முடிவு செய்தார். அதன் பொருட்டு தனக்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு ஒரு மாட்டு வண்டியில் நாகப்பட்லாவிற்குப் பயணமானார். அவருடன் ஒரு வனக் காவலரும் பயணித்தார்.

மாலை 5 மணி இருக்கும், நாகப்பட்லாவில் உள்ள பங்களாவைச் சென்றடைய இன்னும் இரண்டு மைல் தூரம் இருக்கும் தருவாயில், ஒரு புலி சாவகாசமாக மாட்டு வண்டியின் முன்னர் நடந்து வந்தது. வண்டிக்காரர் வண்டியை நிறுத்திவிட்டு, வன அதிகாரியையும், வனக் காவலரையும் அழைத்தார். மாட்டு வண்டி மூடப்பட்டு இருந்ததால், உள்ளே பயணித்த வன அதிகாரியாலும், வனக் காவலராலும் புலியைப் பார்க்கமுடியவில்லை.

வண்டியிலிருந்தபடியே மூவரும் சத்தம் எழுப்பினர். சாலையின் ஓரத்தில் நடந்து வந்துகொண்டிருந்த புலி, வண்டியைக் கடந்ததும், வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த இருவரது கண்ணிலும் பட்டது. இந்தச் சமயத்தில் காரணமே இல்லாமல் வனக் காவலர் புலியைப் பயமுறுத்துகிறேன் பேர்வழி என்று வண்டியிலிருந்து குதித்து தன் கைகளை அசைத்துக் கூச்சல் போட்டார். அப்படிச் செய்ததன் மூலம் தன் விதியைத் தானே தீர்மானித்துக்கொண்டார். வனக் காவலரை பார்த்து உறுமிய புலி, கண் இமைக்கும் நேரத்தில் அவரை நோக்கிப் பாய்ந்தது. அடுத்த கணம் தன்னுடைய வாயில் வனக்காவலரை கவ்விக்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் சட்டென்று சென்று மறைந்தது.

சட்டென்று நடந்துவிட்ட இந்தச் சம்பவத்தில் வன அதிகாரியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஒன்றும் செய்திருக்கவும் முடியாது. காரணம் அவர் ஆயுதம் எதையும் எடுத்து வரவில்லை. புலியின் தாக்குதலுக்குப் பிறகு மாட்டு வண்டி எங்கேயும் நிற்காமல் நேரே நாகப்பட்லாவில் உள்ள காட்டுப் பங்களாவை வந்தடைந்தது.

மறுநாள் காலை அருகிலிருந்த மக்கள் திரட்டப்பட்டனர். அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கிகள், கோடாரி, கோல்கள் இருந்தன. வனத்தில் நுழைந்து வனக் காவலரை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

வனக் காவலரின் உடல், சாலையிலிருந்து சுமார் அரை மைலுக்கும் குறைவான தூரத்தில் ஒரு மலை இடுக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. தலை, கைகள், கால்கள் மற்றும் ரத்தக் கறைப் படிந்த அவரது காக்கிச் சீருடை ஆகியவை மட்டுமே கிடைத்தன.

இந்த விவகாரம் அரசு வட்டாரங்களில் பெரிதாகப் பேசப்பட்டது. நாடு முழுவதிலும் பத்திரிகைகள் இந்தச் செய்தியைப் பெரிதாகப் பிரசுரித்தன. சாம்லா ஆட்கொல்லிப் புலியை அழிப்பவர்களுக்குச் சன்மானம் தருவதாக அரசு அறிவித்தது. உள்ளூர் வேட்டைக்காரர்களும் சென்னையிலிருந்து வந்த வேட்டைக்காரர்களும் களத்தில் இறங்கினர். வேட்டைக்காரர்களைப் பார்த்து உஷார் ஆனதோ என்னவோ சாம்லா புலி யார் கண்ணிலும் படவில்லை.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு அந்தப் புலியைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வரவில்லை. சாமலா பள்ளத்தாக்கில் வட திசையில் மலைச் சரிவை தாண்டி கடப்பா ஜில்லாவிற்குள் புலி சென்றிருக்கலாம் அல்லது பக்ரப்பட், திருப்பதி வனச் சரகத்திற்குள் புகுந்திருக்கலாம் என்று பலவாறாக நம்பப்பட்டது.

இந்தச் சமயத்தில் சென்னை – மும்பை ரயில் தடத்தில், மாமண்டூர் ரயில் நிலையத்தில் கேங்மேன் ரோந்துப் பணியை முடித்துவிட்டு முனையத்திற்குத் திரும்பவில்லை. ஓரிரு நாட்களுக்கு மேலாகியும் காணாததால் ரயில்வே நிர்வாகம் ஒரு குழுவை அமைத்து தேடத் தொடங்கியது.

மாமண்டூர் ரயில் நிலையம், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருந்தது. சுற்றிலும் மலைகள். சாமலா பள்ளத்தாக்கிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 கி.மீ. தொலைவில் இந்த மாமண்டூர் ரயில் நிலையம் அமைந்திருந்தது.

கேங்மேனைத் தேடிச் சென்ற ரயில்வே குழுவிற்குக் கிடைத்த முதல் தடயம், கேங்மேன் பயன்படுத்தும் சுத்தியல். அந்தச் சுத்தியல் ரயில் இருப்புப்பாதையின் அருகே கிடந்தது. சிறிது தூரத்தில் தரையில் ரத்தத் துளிகள் தென்பட்டன. அந்த ரத்தத் துளிகள் ஒரு மேட்டுக்கரையைத் தாண்டி அதன் பின்னர் அருகிலிருந்த வனத்திற்கு வழி நடத்திச் சென்றது. அந்தத் திசையில் சென்ற ரயில்வே குழுவிற்குக் கிடைத்த அடுத்த தடயம் கேங்மேனின் காலணிகள். அடுத்து அருகிலிருந்த புதர்களிலெல்லாம் ரத்தத் துளிகள் தென்பட்டன. இன்னும் சற்றுத் தொலைவில் மென்மையான மண் தரையில் புலியின் கால் சுவடுகள் பதிந்திருந்தன.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது தேடப்பட்டு வந்த கேங்மேனை புலி அடித்துத் தூக்கிச் சென்றிருப்பது தெரியவந்தது. ஆனால் எவ்வளவு தேடியும் கேங்மேனின் உடலை ரயில்வே குழுவால் மீட்கமுடியவில்லை. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சாமலா ஆட்கொல்லிப் புலி மேலும் பிரபலமடைந்தது.

அடுத்தடுத்து இரண்டு மாதங்களில் மேலும் இரண்டு தாக்குதல்கள், இரண்டு உயிர் இழப்புகள். முதல் தாக்குதல் மாமண்டூரிலிருந்து வட மேற்குப் பகுதியில் உள்ள செட்டிகுண்டா என்ற இடத்தில் நடந்தது. இரண்டாவது தாக்குதல் கல்யாணி நதி உற்பத்தியாகும் ஆரம்ப இடங்களில் ஒன்றான உம்பால்மேருவில் நடந்தது.

இந்தச் சமயத்தில் கென்னெத் ஆண்டர்சன் சென்னையில் உள்ள முதன்மை வனப் பாதுகாவலரைச் சந்தித்து அவரிடம் புகார் ஒன்றைக் கொடுக்க வந்திருந்தார். அதாவது அப்போதைய சேலம் மாவட்டத்தில் உள்ளூர் மக்கள் சட்ட விரோதமாக வேட்டையாடுகிறார்கள் என்றும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் கொடுத்தார். அப்பொழுது முதன்மை வனப் பாதுகாவலர், கென்னத் ஆண்டர்சனிடம் சாமலா ஆட்கொல்லிப் புலியை வேட்டையாடி அழிக்க நீங்கள் முயற்சி மேற்கொள்ளலாமே என்று பரிந்துரை செய்தார்.

தனது சொந்த ஊரான பெங்களூரூக்குச் சென்ற ஆண்டர்சன் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டார். பின் தனக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு சாமலா பள்ளத்தாக்கில் உள்ள நாகப்பட்லா காட்டுப் பங்களாவிற்கு வந்து சேர்ந்தார்.

ஆண்டர்சன் உள்ளூர் வாசிகளிடம் சாமலா புலியைப் பற்றி விலாவாரியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். சாமலா புலி தாக்குதல் நடத்திய இடங்களுக்குச் சென்று பார்த்தார். அதில் அவருக்கு ஒரு விஷயம் புலனானது. ஆட்கொல்லிப் புலி முறைப்படி ஒருவரையும் வேட்டையாடவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே மனிதர்களை வேட்டையாடியிருக்கிறது. சாமலா பள்ளத்தாக்கிற்குள் எப்பொழுதாவது நுழைகிறது, சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது மனித உயிரைப் பறித்துப் புசிக்கிறது, பின்னர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி மாமண்டூருக்கோ கடப்பாவுக்கோ சென்றுவிடுகிறது.

ஆண்டர்சன் புலியை வீழ்த்தும் முயற்சியில் இறங்கினார். புலிக்குத் தூண்டில் வைத்தார். எருமை மாடுகள்தான் தூண்டில். நான்கு எருமை மாடுகளைச் சிரமப்பட்டு வாங்கினார். பொதுவாக இந்தியாவில் கிராமவாசிகள் தங்கள் மாடுகளைத் தூண்டிலாகப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டார்கள். அதனால் இம்மாதிரி காரியங்களுக்கு மாடுகளை வாங்குவது மிகவும் சிரமம். நான்கு மாடுகளையும் புலி நடமாடிய வெவ்வேறு இடங்களில் கட்டினார். முதல் மாடு குண்டல்பெண்டாவில் கட்டப்பட்டது. இரண்டாவது உம்பல்மேருவில் கட்டப்பட்டது. மூன்றாவது மாடு நாகப்பட்லா – புலிபோனு வனச் சாலையில் அமைந்துள்ள நரசிம்ம செருவூ என்ற தண்ணீர் துளை அருகே கட்டப்பட்டது. நான்காவது மாடு கல்யாணி நதியின் கிளையாறான ராகிமன்கோனர் என்ற ஓடையின் அருகே கட்டப்பட்டது.

மாடுகள் கட்டப்பட்ட இரண்டாவது நாளன்று நரசிம்ம செருவூ தண்ணீர் துளை அருகே கட்டப்பட்ட மாடு கொல்லப்பட்டிருந்தது. ஆனால், இறந்த மாட்டைப் பரிசோதனை செய்து பார்த்ததில் அது புலியால் தாக்கப்படவில்லை, மாறாக ஒரு சிறுத்தையால் தாக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தது. ஆண்டர்சன் இறந்த மாட்டுக்கு மாற்றாக இன்னொரு மாட்டை அந்த இடத்தில் கட்டி வைத்தார். அடுத்த ஒரு வாரம் கட்டப்பட்ட மாடுகளின்மீது எந்த ஒரு தாக்குதலும் நடைபெறவில்லை.

ஒன்பதாம் நாள் விடியற்காலையில் ஆண்டர்சன் புலிபோனு நோக்கி தன்னுடைய காரில் உலாவியபோது, சாலையில் ஒரு புலி நடந்து சென்றதற்கான கால் சுவடுகளைக் கவனித்தார். அவர் அந்தக் கால் சுவடுகளைப் பரிசோதித்தபோது அது ஓர் ஆண் புலி என்றும் சராசரியான உயரம் கொண்டது என்றும் தெரியவந்தது. மேலும் கால் தடத்தை வைத்து அந்தப் புலிக்கு உடலில் ஊனமோ காயமோ இல்லை என்பதை ஆண்டர்சன் தெரிந்துகொண்டார். அதனால் ஆண்டர்சனுக்கு தான் பார்த்த புலியின் சுவடு அவர் தேடிவந்த ஆட்கொல்லிப் புலியினுடையதா அல்லது வேறேதேனும் புலியினுடையதா என்று தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை.

தனது காரை புலிபோனுவில் விட்டுவிட்டு ஆண்டர்சன் கால்நடையாகப் பள்ளத்தாக்கின் வட கிழக்கே சென்றார். கல்யாணி ஆற்றைக் கடந்தார். அங்கு காட்டுப் பாதையில் அவருக்கு முன்னதாக ஒரு புலி நடந்து சென்ற சுவடு இருந்தது. குண்டல்பெண்டாவிலும் உம்பலமேருவில் தான் கட்டிவைத்திருந்த மாடுகள் புலியால் கொல்லப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்கச் சென்றார். மாடுகள் எந்தச் சேதாரமும் இல்லாமல் பத்திரமாக இருந்தன. கொட்டப்பட்டிருந்த வைக்கோலை நன்கு சுவைத்துக்கொண்டிருந்தன.

(தொடரும்)

 

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

4 thoughts on “ஆட்கொல்லி விலங்கு #3 – சாமலா புலியின் கதை”

  1. அருமையான வாசிப்பு கொடுத்தமைக்கு நன்றி. நல்ல நடை . சிறப்பான கட்டுரை அமைப்பு. அனைத்து வயதினருக்குமான தொகுப்பு. பாராட்டுக்கள்.

  2. புத்தக எலி

    விறுவிறுப்பான சம்பவங்கள்.
    அடுத்து என்ன நடக்க போகிறதோ என்கிற அச்சமும், ஆர்வமும் நம்மை அறியாமல் வந்து தொற்றிக்கொள்ளுகிறது….

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *