Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #8 – மாயமாக மறைந்த மந்திரவாதி

ஆட்கொல்லி விலங்கு #8 – மாயமாக மறைந்த மந்திரவாதி

தேவதை நீலப்பறவை

மழையில் நனைந்து, சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து தங்க நிறமாகப் புல்வெளி காட்சியளித்தது. தங்க நிறப் புல்வெளி செங்குத்தான மலைச் சரிவைப் போர்வைப் போர்த்தியதுபோல் படர்ந்திருந்தது. ஆண்டாண்டுகளாக பருவ மழை பெய்து, செங்குத்தான மலைச் சரிவில் வடிந்து, மலையின் அடிவாரத்தில் குறுகியப் பள்ளத்தாக்குகளை ஏற்படுத்தியிருந்தது. பல பள்ளத்தாக்குகளின் வழியாக ஓடிய நீர் ஒன்றாகச் சங்கமித்து கல்யாணி நதியின் வட கிழக்குக் கிளையாக ஓடியது.

மலையடிவாரத்தில் அமைந்திருந்த பள்ளத்தாக்குகளை மூங்கில்கள், லந்தனாக்கள் (உண்ணிச் செடி), கில்லர் கொடிகள் (killer creeper) முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. கில்லர் கொடிகளில் பழுப்பு நிறப் பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றைப் பறவைகள் சாப்பிடும். பறவையின் எச்சத்தின் வழியாக கில்லர் கொடியின் விதைகள் மண்ணில் விழும். இப்படித் தரையில் விழும் விதைகள் சிறு செடியாக முளைக்கும்.

இந்தச் செடி ஆரம்பத்தில் சுண்டு விரல் நகத்தின் அளவுதான் இருக்கும். பின்னர் அது வேகமாக வளர்ந்து கொடியாக (கொடியதாகவும்) உருப் பெறும். அருகில் இருக்கும் மரத்தில் படரும். படர்ந்தபடியே மேலும் தீவிரமாக வளரும். ஓர் ஆண்டில் நடு விரல் அளவிற்கு தடிமனாக மாறிய கொடி, தான் படர்ந்த பெரிய மரத்தின் முக்கால் உயரத்தைத் தொட்டுவிடும். இரண்டாவது ஆண்டில் தான் படர்ந்திருந்த மரத்தின் உச்சியைத் தொட்டுவிடும். பின்னர் அது போதாது என்று அருகில் இருக்கும் பெரிய மரங்களிலும் பரவத் தொடங்கும். இப்பொழுது கில்லர் கொடியின் தண்டு அளவு மணிகட்டின் அளவை ஒத்திருக்கும்.

ஆண்டுகள் ஓட ஓட மணிக்கட்டு அளவிற்கு இருந்த கொடியின் தண்டு, தொடை அளவிற்கு மாறும், பின்னர் ஒரு மனித உடல் அளவிற்கு வளரும். தான் படர்ந்திருந்த மரத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து மறைத்துவிடும். இப்பொழுது கில்லர் கொடியின் எடை அபரிவிதமாக இருக்கும். தான் சார்ந்திருந்த மரத்தை மறைத்ததோடு இல்லாமல் அதை நெருக்கவும் செய்யும்.

பிறகு மரத்தின் பட்டையைப் பிளந்து மரத் தண்டையே சேதப்படுத்தத் தொடங்கும். பலவீனம் அடைந்த மரம், புயலாலும் வெள்ளத்தாலும் சாய்ந்து வீழ்ந்துவிடும். தான் சிறிதாக இருந்தபொழுது அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்து வளர்த்த மரத்தை தான் வளர்ந்த பிறகு பலவீனப் படுத்தி விடுகிறது கில்லர் கொடி. ஒரு மரம் வீழ்ந்தால் என்ன அடுத்து இருக்கும் மரத்தில் படர்ந்து அங்கும் தன் வேலையைத் தொடங்கி விடும் இந்த கில்லர் கொடி. அதனால்தான் இந்த கொடிக்கு கில்லர் கொடி என்று பெயர் வைத்தார்கள் போல்!

இப்படிப்பட்ட கில்லர் கொடிகளும் மூங்கில்களும் லந்தனாக்களும் அடர்ந்த மலைப் பள்ளத்தாக்கில் பயணிப்பது என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்களுக்கும் கடினம்தான். ஆனால் இம்மாதிரி இடங்கள் கொறித்துண்ணிகளுக்கும் அவற்றை உண்ணும் பாம்புகளுக்கும் நல்ல வசிப்பிடம். இவ்விடங்கள் எப்பொழுதுமே பசுமையாக இருக்கும். அதீத கோடைக் காலங்களில்கூட பசுமையாக இருக்கும். மலைகள் சுற்றியிருப்பதால் அடிக்கடி மழைகள் பொழியும். அதனால் இப்பள்ளத்தாக்குகள் சதுப்பு நிலம்போல் இருக்கும். புதர்களும், கொடிகளும் மண்டியிருப்பதால் பகல் பொழுதில் சூரிய வெளிச்சம் தரையில் படாமல் அந்தி சாய்ந்தது போலவே காட்சியளிக்கும். கிரிக்கெட் பூச்சிகள் எப்பவும் கிசுகிசுத்தப்படியே இருக்கும். இப்படிப்பட்டச் சூழ்நிலையில் சிறு தளிர்கள் முளையிட்டு, வளரத் தாமதித்தால் அருகிலிருக்கும் கொடிகளும், புதர்களும் தளிரை வளர விடாமல் செய்து, பட்டுப்போக வைத்துவிடும்.

பள்ளத்தாக்கை ஒட்டிய மலைச் சரிவின் கதையே வேறு. இங்கு பகல் பொழுதில் வெயில் கருணையில்லாமல் வாட்டி வதைக்கும். கோடைக் காலங்களில் மலைச் சரிவில் உள்ள மரங்கள் பட்டுப்போய் அதன் இலைகளெல்லாம் சரகாக உதிர்ந்து கிழே விழுந்து மலைச் சரிவையே மூடிவிடும். மழைக் காலங்களில் சருகுகள் மண்ணோடு மண்ணாக மக்கி தன்னை வளர்த்த மரங்களுக்கே உரமாக மாறிவிடும்.

சரிவில் ஏறி மேலே சென்றால் மலை முகட்டை அடைந்துவிடலாம். அங்கு நிலைமையே வேறு. மலை உச்சி எப்பொழுதும் கரடு முரடாகவும், குளுமையாகவும் இருக்கும். பெரிய கற்பாறைகள் ஆங்காங்கே கிடக்கும். லைக்கன்களும் (lichens), பாசிகளும் படிந்து இருக்கும். மலை உச்சியில் இருக்கும் மரக் கிளைகளிலிருந்தும், பொந்துகளிலிருந்தும் மந்தாரைச் செடிகள் தலையை நீட்டியபடியே இருக்கும். இம்மரக் கிளைகளில் அமர்ந்தபடியே தேவதை நீலப்பறவை (Asian fairy blue-bird) ரம்மியமான சத்தத்தை எழுப்பிக் கொண்டிருக்கும். இப்பறவைகள் ஒருமுறை எழுப்பிய சப்தத்தை அடுத்த முறை எழுப்பாது.

இந்த வனப்பகுதியில்தான் பின்வரும் சம்பவம் நடைபெற்றது.

மதிய வேளை, பறவைகள் உள்பட அனைத்து வன விலங்குகளும் பாறை இடுக்குகளில் சிறு துயில் கொண்டிருந்தன. மலையின் செங்குத்தான சரிவில் இருந்த வெடிப்பிலிருந்து தூய்மையான குளிர்ந்த நீர் வடிந்து சொட்டிக் கொண்டிருந்தது. வனமே அமைதி பூண்டிருந்தது. யாரேனும் வாய் வழியே ஊதி மூச்சுவிட்டால்கூட அது தெளிவாகக் கேட்கும். அப்படி ஒரு மயான அமைதி. மரங்களில் இலைகள் ஆடவில்லை. புல் அசையவில்லை. கிரிக்கெட் பூச்சிகள் சத்தம் எழுப்பவில்லை.

இந்த அமைதியின் நடுவே ஒரு மெல்லிய சத்தம் எழுந்தது. பள்ளத்தாக்கில், நீரோடையின் பக்கத்திலிருந்து அந்தச் சத்தம் வந்தது. நீரோடையில் வழுவழுப்பான பாறைகளின்மீது பயணித்த நீரின் சலசலப்பை சற்று விஞ்சியது போல் விட்டு விட்டுக் கேட்டது அந்தச் சத்தம். யாரோ, எதையோ தோண்டுவதுபோல் இருந்தது.

இடுப்பை வளைத்து உட்கார்ந்தபடியே ஒருவன் தரையை கடப்பாரையால் குத்தி, கிளறிக் கொண்டிருந்தான். அவன் இருப்பதே தெரியவில்லை, காரணம் அந்த இடத்தில் அடர்த்தியாக இருந்த சேம்பு இலைகள் (சேப்பங் கிழங்குச் செடியின் இலைகள்) அவனை மறைத்திருந்தது. பள்ளத்தாக்கில் ஓடைக்கரை நெடுகிலும் சேம்புச் செடிகள் வளர்ந்திருந்தது. கடப்பாரை மண்ணில் படும் சத்தத்தை வைத்து அங்கு ஒரு ஆள் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளமுடியும். அவன் வெறும் அழுக்குப் படிந்த வேஷ்டியை மட்டுமே அணிந்திருந்தான்.

கோதண்ட ரெட்டி ரெங்கம்பட்டைச் சேர்ந்தவன். ரெங்கம்பட்டிலிருந்து சுமார் 12 மைல்கள் பயணித்துக் காட்டுக்கு வந்திருந்தான். அவன் காட்டுக்கு வந்ததன் நோக்கம் குலூ செடியின் வேர்கள். இச்செடியின் வேர்கள் பாலுணர்வைத் தூண்டக்கூடியவை என்றும் விசேஷ சக்திகள் கொண்டவை என்றும் கருதப்பட்டது. சேம்புச் செடிகளுக்கு அருகாமையில் இந்தச் செடி வளரும்.

குலூ செடியின் வேர்களை எடுத்துக் காய வைத்துப் பொடியாக்கி அதனுடன் ஆண் விந்தைக் கலந்து அமாவாசை அன்று மந்திர உபாசனைகள் செய்தால் அந்தப் பொடி வீரியம் கொண்டதாக இருக்கும். இப்படித் தயார் செய்யப்பட்ட பொடியை, தான் விரும்பும் பெண்ணின் உணவிலோ அல்லது பால் சேர்க்காத காப்பியிலோ பனை வெல்லத்துடன் (காரத் தன்மையை போக்க) கலந்து கொடுத்துவிட்டால், அந்தப் பெண் தூண்டப்பட்டு, அடக்கத்தை விட்டு, வெட்கத்தை விட்டு எந்த சங்கோஜமும் இல்லாமல் பொடி போட்டவனின் வலையில் வீழ்ந்துவிடுவாள்.

கோதண்ட ரெட்டி ஒரு சிட்டிகைப் பொடியை ஒரு ரூபாய்க்கு விற்று வந்தான். ரெங்கம்பட்டுக் கிராமத்தில் முறை தவறி பிறந்த குழந்தைகளுக்குக் காரணம் தன் பொடியின் வீரியம்தான் என்று உள்ளார்ந்த பெருமிதம் கொண்டிருந்தான் கோதண்ட ரெட்டி.

சம்பவத்தன்று கோதண்ட ரெட்டி குலூ செடியின் வேர்களை எடுப்பதில் மும்முரமாகச் செயல்பட்டான். அருகில் தனக்குத் தீங்கிழைக்க தன்னைக் கொடிய கண்களால் யாரோ பார்ப்பதை அவன் கவனிக்கவில்லை. அந்தக் கண்கள் ஒரு விலங்குக்குச் சொந்தமான கண்கள். நீரோடையின் கரையின் அருகாமையிலேயே ஓர் உயரமான இடத்திலிருந்து கோதண்ட ரெட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் கருணையில்லாத கண்கள் சிறிதும் சிமிட்டவில்லை. அந்த விலங்கு தன் இருப்பைக் காட்டிக்கொள்ளவில்லை. சிறு ஓசையைக் கூட எழுப்பவில்லை. தன்னுடைய நெஞ்சுக்கூட்டிலிருந்து, தொண்டையிலிருந்து எந்த உறுமலையும் எழுப்பவில்லை.

கோதண்ட ரெட்டியின் கடப்பாரையில் குலூ செடியின் வேர்கள் அகப்பட்டது. கடப்பாரையை வைத்துவிட்டு, கோதண்ட ரெட்டி குனிந்து தான் தோண்டிய குழியில் இரு கைகளையும் வைத்துச் செடியை வேருடன் எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தான்.

இவை அனைத்தையும் மேலே இருந்து அசைவில்லாமல் பார்த்துக்கொண்டிருந்த அந்த விலங்கு, குனிந்த நபர் தற்பொழுது தன்னைப் பார்க்கமுடியாது என்று தெரிந்துகொண்டு, தனது நாக்கால் மேல் உதட்டை நக்கியவாறு பதுங்கி ஒரே பாய்ச்சலாக கோதண்ட ரெட்டியின் மீது பாய்ந்தது.

இதுதான் அந்த விலங்கு செய்த முதல் கொலை.

சித்தூர் ஜில்லாவில், பக்கர்பெட், சாமலா பள்ளத்தாக்கு மற்றும் மாமண்டூர் வனச் சரகத்தின் எல்லையை ஒட்டிய கிராமங்களிலும், குக்கிராமங்களிலும் பலரை இந்த விலங்கு வேட்டையாடியது. கிராம மக்கள் இந்த விலங்கை தங்களுக்குத் தீயதாகக் கருதினர். எனவே அதற்கு ‘தீயது‘ என்று பெயரிட்டனர்.

கோதண்ட ரெட்டிக்கு தன் மீது பாய்ந்தது என்னவென்று கூடத் தெரியாது. ஆனால் அந்த நொடிப் பொழுதில் அவன் மீது அதிகப்படியான பாரம் விழுந்ததை உணர்ந்திருக்கமுடியும். தாக்குதலில் ஏற்பட்ட ஆழமான காயங்களின் வலியை உணர்ந்திருக்க முடியும். அந்த விலங்கின் நகங்கள் கோதண்ட ரெட்டியின் முதுகிலும், உடம்பின் பக்கவாட்டிலும் பதிந்தது. இந்த உணர்வெல்லாம் ஒரு நொடிதான். காரணம் அந்த விலங்கின் ஆற்றல் வாய்ந்த தாடைகள், அதில் உள்ள பெரிய பற்கள் கோதண்ட ரெட்டியின் கழுத்தையும், மண்டை ஓட்டின் பின் பகுதியையும் நொறுக்கியது. கோதண்ட ரெட்டி இறந்து போனான்.

கோதண்ட ரெட்டி ரெங்கம்பட்டிற்குத் திரும்பாதது குறித்து யாரும் பெரிதாகக் கவலைப்படவில்லை. காரணம், அவன் காட்டில் ரகசிய வேர்களையும் மூலிகைகளையும் தேடிச் செல்பவன். தான் தயாரித்த கலவைகள், விசேஷ பொடிகள், வசீகரப் பொடிகள் மற்றும் தாயத்துகளைச் சுற்று வட்டாரக் கிராமங்களில் சுற்றி விற்று வருவான். கோதண்ட ரெட்டியை பெரிய மந்திரவாதியாக கிராம மக்கள் கருதினர். கோதண்ட ரெட்டி காணாமல் போனது குறித்து யாரும் தேடவில்லை. தேடியிருந்தாலோ அவனது எலும்புகளாவது கிடைத்திருக்கும். அதை வைத்து அவன் எப்படி இறந்தான் என்று தெரிந்து கொண்டிருக்கலாம்..

சில வாரங்கள் கழித்து இரண்டு வனக் காவலர்கள் கோதண்ட ரெட்டி கொல்லப்பட்ட மலைப் பகுதிக்கு வந்தனர். தாகம் எடுக்கவே, அருகிலிருந்த நீரோடையில் நீர் பருகச் சென்றபோது அங்கு ஒரு கடப்பாரையையும் அதன் அருகே அழுக்குப் படிந்த துணிப் பையையும் பார்த்தனர். பாதி துணிப் பையை கரையான் அரித்திருந்தது. குலூ செடியின் வேர்கள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்தன. அப்பொழுதுதான் வனக் காவலர்களுக்கு கோதண்ட ரெட்டி வெகு நாட்களாகக் காணாமல் போனதும், ஊர் மக்கள் கோதண்ட ரெட்டி திடீர் என்று ஊரை விட்டே கிளம்பிவிட்டான் என்று பேசியதும் நினைவுக்கு வந்தது.

ஆக, கோதண்ட ரெட்டி காணாமல் போகவில்லை, கொல்லப்பட்டு விட்டான் என்று இப்பொழுது வனக் காவலர்களுக்குப் புரிந்தது. கோதண்ட ரெட்டி கொல்லப்பட்டு வெகு நாட்கள் ஆகியிருந்ததால் எப்படி அவன் இறந்தான்? மனிதர்களாலா? அல்லது ஏதாவது மிருகம் அவனைக் கொன்றதா என்று ஒன்றும் தெரியவில்லை. அதற்கான எந்தத் தடயம்கூட கிடைக்கவில்லை. வனக் காவலர்கள் தாங்கள் பார்த்ததை ரெங்கம்பட்டு காவல் நிலையத்தில் தெரிவித்தனர்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

2 thoughts on “ஆட்கொல்லி விலங்கு #8 – மாயமாக மறைந்த மந்திரவாதி”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *