ஹராகிரி எனும் தற்கொலை சடங்கில் ஈடுபடும் ஜப்பானிய சாமுராய்கள், பல போராளிக் குழுக்களில் உள்ள தற்கொலைப்படை வீரர்கள் போன்றோருக்கு முன்னோடிகள், அக்காலத்தைய தமிழகத்தில் இருந்த தற்பலியினரான நவகண்ட, அரிகண்ட வீரர்கள்.
அடிப்படையில் இவர்கள் அனைவரும் ஒரே உளவியல் எண்ணங்களைக் கொண்டவர்களே. இவ்வாறு தற்பலியிடுதலைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘அவிபலி’ என்கிறது. சிந்துசமவெளியில் கிடைத்த முத்திரைகளில்கூட பலியிடுதல் குறித்த உருவங்கள் கிடைக்கின்றன.
‘வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி’
(இந்திர விழவூரெடுத்த காதை – சிலப்பதிகாரம்)
‘அடிக்கழுத்துடன் சிரத்தை அரிவராலோ
அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ
கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ…’
(கலிங்கத்துப்பரணி)
மேற்கண்ட இருபாடல்களும் வீரன் தன்தலையை அரிந்து கொற்றவையின் முன்னுள்ள பீடத்தில் வைப்பான் என்கின்றன. எவ்வளவு மனவுறுதி பெற்றவனாய் இருப்பினும் வெட்டுண்ட தன்தலையைப் பீடத்தில் வைப்பது சாத்தியமா, இல்லையா என விவாதம் இருப்பினும் கர்நாடக ஹம்பி மற்றும் தமிழக எல்லைப்பகுதியான மல்லம் பகுதிகளில் கிடைத்த இரு நடுகல் சிற்பங்கள் இவை சாத்தியமாக இருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன. சிற்பத்தில் தன் இடக்கையில் தன்தலையை ஏந்தி நிற்கும் வீரன் சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி காட்டும் வீரனை நினைவுறுத்துகிறான்.
இவ்வாறு தன்னைப் பலியிட்டுக்கொள்ளும் வீரன் எவ்வாறு இறக்கத் தயாராகின்றான், அவனது இறுதிநொடி எவ்வாறு இருந்தது? கலிங்கத்துப்பரணி கூறும் காளியை ஒரு சிற்பமாக வடித்தால் அதன் படிமவியல் எவ்வாறு இருக்கும் என்பதையும் காண்போம்.
ஒரு தற்பலியிட்டுக்கொள்ளும் வீரனை எவ்வாறு அவ்வூரார்கள் தயார் செய்கின்றனர் எனச் சோழன் பூர்வ பட்டயம் எனும் நூல் ஒன்று விவரிக்கிறது. இந்நூல் சில புராணங்களையும், அதீத தகவல்களையும் கொண்டிருப்பினும், சில முக்கிய ஆவணங்களையும் உள்ளடக்கியது.
கொங்குச் சோழனான கரிகாலச் சோழன் சென்னிமலையில் உள்ள காளிகோவில் கைங்கரியத்திற்குக் கைக்கோளர்கள் 50 குடும்பத்தினரைக் குடியேற்றம் செய்துள்ளார். அங்குள்ள மாகாளிக்கு நரபலி தருவோரின் குடும்பமே, அக்கைக்கோளர்களின் நாட்டாண்மையாக விளங்குவர் என அங்குள்ள தலைவனான சமயமுதலி கூற, கருப்பண்ண முதலியார் என்பவர், தன் மகன் பாலகுமாரன் என்பவனைப் பலியாகத் தர முன்வந்தார். அந்த பலியாளான பாலகுமாரன் எவ்வாறு தயாரானான் எனக் காண்போம்.
முதலில் பாலகுமாரன் தன் கைகளால் மாகாளிக்கு அபிஷேகமும் தீபாராதனையும் காட்டினான். அதன்பின் கருப்பண்ணன் தன் மகனை அழைத்து திருமஞ்சனம் செய்து, காப்புகட்டி, ஆபரணத்தால் அலங்கரித்து, ஆடையுடுத்தி, பரிமள, களப, கஸ்தூரி முதலிய நறுமணப்பொடிகளைப் பூசினார். வீரசந்தனம் இடித்து, பாக்கு, வெற்றிலையைக் கையில் கொடுத்து, வீரக்கொம்பு, வீரகாளம், வீரமல்லாரி, வீரசிகண்டி, வலம்புரி சங்கு ஆகியவற்றுடன் வீரமேள வாத்தியம் முழங்க, பஞ்சவர்ணக் குடை பஞ்சமுகத் தீவட்டிகைகொண்டு, ரண வீரவேங்கை புலிக்கொடியுடனே நடபாவாடைமேல் நடந்து, நடன சங்கீதராக மேள வாக்கியம் சூழ்ந்துவர செய்தார். பின் சென்னி மாநகரிலுள்ள நாலுவீதி மறவனை வரவைத்து, சென்னி மாகாளிக்கு முன்நிறுத்துகிறார். பின் அந்த பாலகுமாரனைச் சமயமுதலி வெட்டி பலியூட்டிவைக்கிறார். தொடர்ந்து, ஆடு, பன்றி, கோழி ஆகியவையும் பலியூட்டப்படுகிறது. இதன்பின் மாகாளி எனும் துர்க்கைக்கு வருடத்திற்கு ஒருமுறை திருவிழா நடத்திவைத்து, பொங்கல், ஆடு, பன்றி, கோழி ஆகியவற்றையும், எருமைக் கிடா ஒன்றையும் பலி கொடுத்து, உயிர்விட்ட பாலகுமாரனுக்குச் சிலை வைத்து வழிப்பட்டனர் என்று அந்நூல் குறிப்பிடுகிறது.
கலிங்கத்துப்பரணி கூறும் காளியின் இலக்கணம்
ஜயங்கொண்டார் 900 ஆண்டுகளுக்குமுன் பாடிய கலிங்கத்துப்பரணியை மெய்ப்பிக்கும் வகையில் இன்றுவரை அக்கோலம் மாறாமல், வீற்றிருக்கும் காட்சியை நாம் கல்வராயன்மலையின் எருக்கம்பட்டு எனும் மலைக்கிராமத்தில் காணலாம். கலிங்கத்துப்பரணியின் துணைகொண்டு இக்காளியினை நாம் உள்வாங்க முற்படுவோம்.
சாம்பாயி அம்மனின் தோற்றம்
‘உவையுவை உளஎன் றெண்ணி
உரைப்ப தென்உரைக் கவந்த
அவை அவை மகிழ்ந்த மோடி
அவயவம் விளம்பல் செய்வாம்’
(கலிங்கத்து பரணி 121)
அணங்குகள் (ஆண்,பெண் பேய்கள்) அம்மையைத் தொழுது அடிவணங்க பெருமை படைத்துடைய காளி, 3 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் 8 கைகளுடன் அசுரன் (நிசும்பன்) ஒருவனை இடதுகாலால் மிதித்தவாறு சுகாசனத்தில் வீற்றிருக்கிறாள். ஆஸனம் சற்று இடதுபக்கம் சாய்வாகக் காட்டப்பட்டுள்ளது.
எண்டோளியாய் அமர்ந்த காளி
அன்னை இடது கரங்களில் மேலிருந்து கீழாக விஸ்மய முத்திரை காட்டிய கரம், கேடயம், மணி, கபாலம் ஏந்தியும், வலது கரங்களில் டமருகம், வாள், சூலம், வில் ஏந்தியும் எண்டோளியாக வீற்றிருக்கிறாள். சூலம் அசுரனை வதைக்கும் விதமாக மெல்லியதாக நீண்டு அவன் மார்பைத் துளைக்கிறது. வில் பின்னமாகியுள்ளது. விரிசடையில் பாம்பு சுற்றிய தலையலங்காரமும் நெற்றிக்கண்ணும் கொண்டு ஈசனின் வடிவாகக் கோரப்பற்களுடன் புன்முருவல் பூத்த அன்னையின் முகம் கீழ்கண்ட பாடலுக்கு வடிவம் கொடுத்துத் திகழ்கிறது.
‘உருகுத லைத்தொ டையற்கு வமைய றச்சுழல்வுற்று
உலவுவி ழிக்கடைபட்டு உடல்பகை யற்றொழியத்
திருகுரவைக் கிளவிச் சிறுகுத லைப்பவளச்
சிறுமுறு வற்றரளத் திருவத னத்தினளே’ (130)
சாமுண்டி, நிசும்பசூதனி போன்ற தெய்வங்களுக்குள்ள பிரேத குண்டலமாக இல்லாமல் இரு காதுகளிலும் பனையோலைக் குண்டலம் அணிந்துள்ளது, புலவரின்
‘அண்டமுறு குலகிரிகள்
அவளொருகால் இருகாதில்
கொண்டணியின் குதம்பையுமாம்’ (132)
என்ற வரிகளைக் காட்சிப்படுத்துகிறது.
கால்களில் சிலம்பு, கைவளை, கழுத்தில் கண்டிகை ஆகியவற்றை அணிந்து, மார்புக்கச்சையின்றி மெல்லிய பூணூல் சாற்றிய அன்னையின் இடையாடையும் பரணியை ஒத்தே உள்ளது.
‘பரிவக லத்தழுவிப் புணர்கல விக்குருகிப்
படர்சடை முக்கணுடைப் பரமர்கொ டுத்தகளிற்று
உரிமிசை யக்கரியிற் குடரொடு கட்செவியிட்டு
ஒருபுரி இட்டு இறுகப் புனையுமு டுக்கையளே.’ (125)
வாள் கேடயம் ஏந்தி காலின்கீழ் மிதிபட்டிருக்கும் அரக்கனைக் குறித்து பரணியில் குறிப்பு எதுவும் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
‘எவ்வணங்கும் அடிவணங்க
இப்பெருமை படைத்துடைய
அவ்வணங்கை அகலாத
அலகைகளை இனிப்பகர்வாம்.’ (134)
என்ற பாடலில் உள்ளதுபோலவே இங்கு அன்னை தனித்துக் காணப்படவில்லை. ஆகவே, இனி அன்னைக்கு அருகில் உள்ள மற்ற உருவங்கள் குறித்துப் பரணியை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
‘அணங்கை அகலாத அலகைகள்
கெடாதபடி கெடுஞ்செழியர் கெடும்பொழுதின்
இடும்பிண்டி பாலம் ஏந்தி
இடாகினிகள் இருமருங்கும் ஈச்சோப்பிப்
பணிமாற இருந்த போழ்தின்.’ (138)
என்று கூறியவாறே அன்னையின் இருபுறமும் பேய்கள் பணிவிடை செய்து நிற்கின்றன.
ஆண் பேய்: அன்னையின் வலதுபுறம் ஆண் பேய் ஒன்று கையில் படையலைப்போல் எதையோ ஏந்தி த்ரிபங்கமாய் சற்றுச் சாய்ந்து நிற்கிறது.
பெண் பேய்: அன்னையின் இடதுபுறமுள்ள பெண் பேய் தோலில் ஒரு பாம்பைப்போட்டு அதனை இருகைகளிலும் பிடித்துக்கொண்டு சிரிக்கிறது. இக்காட்சிகளைப் பரணியில் அடையாளப்படுத்த முடியவில்லை. எனினும், பேய்களின் தோற்றத்தை நெடிய பனைமரம் போன்றும், குந்தி அமர்ந்தால் முகம் வரை நீளும் கால்களையும் கைகளையும் கொண்ட பெரிய குகை போன்ற வாயும், அந்த வாயில் எதைப் போட்டாலும் நிறையாது ஒட்டிப்போன வயிறும், வெறும் எலும்புகளை நரம்புகொண்டு கட்டியது போன்ற உடலும், ஒட்டியும் ஒட்டாத கன்னங்கள் மற்றும் கொள்ளிக்கட்டை ஏந்தி ஒருவன் குகைக்குள் சென்றால் அதனுள் தெரியும் மலைபோல் உள்ளொடுங்கிய கண்களையும் கொண்ட முகமுமாக, ஜயங்கொண்டாரின் வர்ணனையில் சற்றும் மாறுபாடு இன்றி அப்படியே சிற்பி வடித்துள்ளார்.
‘பெருநெ டும்பசி பெய்கல மாவன
பிற்றை நாளின்முன் னாளின் மெலிவன
கருநெ டும்பனங் காடுமு ழுமையுங்
காலுங் கையுமு டையன போல்வன. (135)
வன்பி லத்தொடு வாதுசெய் வாயின
வாயி னால்நிறை யாதவ யிற்றின
முன்பி ருக்கின்மு கத்தினு மேற்செல
மும்மு ழம்படும் அம்முழந் தாளின. (136)
வெற்றெ லூம்பைந ரம்பின்வ லித்துமேல்
வெந்தி லாவிற கேய்ந்தவு டம்பின
கொற்ற லம்பெறு கூழிலம் எங்களைக்
கொள்வ தேபணி யென்றுகு ரைப்பன (137)
உள்ளொ டுங்கியி ரண்டுமொன் றாகவே
ஒட்டி ஒட்டிவி டாதகொ டிற்றின
கொள்ளி கொண்டிரண் டேமுழை யுட்புகின்
குன்று தோன்றுவ போலவி ழிப்பன. (138)
இடைமொ ழிந்து இடைநு டங்கவரு யோகினிகள்’
இறுதியாக, பரணி குறிப்பிடுவதுபோலவே அன்னையின் இருபுறமும் பேய்களைக் காட்டியுள்ள சிற்பி, பரணி கூறும் மற்றொரு காட்சியான யோகினிகளையும் சற்றும் பிசகாதவாறு காட்சிப்படுத்தி இச்சிற்பம் கலிங்கத்துப்பரணியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்ற கருத்துக்கு வலுசேர்க்கிறார்.
பேய்களின் கால்களுக்கு அருகிலும், அசுரனின் இருபுறமும் நிற்கும் பெண்களை யோகினிகள் என்பதை அடையாளப்படுத்த உதவும் பாடல்.
‘படைவ லங்கொடுப சுந்தலைஇ டங்கொ டணைவார
இடைமொ ழிந்து இடைநு டங்கவரு யோகினிகளே.’ (116)
பாடலில் உள்ளதுபோலவே வலதுபுறமுள்ள யோகினி கையில் வாள் ஏந்தியும், இடதுபுறமுள்ள யோகினி தலைக்கபாலம் ஏந்தியும் சிற்பி காட்சிப்படுத்தியுள்ளார். ஆக, மேற்கண்ட தரவுகளை ஒப்பிட்டு நோக்கும்போது இச்சிற்பத்தைப் படைக்கச் சிற்பியின் கற்பனைக்கு கலிங்கத்துப்பரணி எத்துனை உறுதுணையாக இருந்துள்ளது என்பதை உணர முடிகிறது.
(தொடரும்)

