Skip to content
Home » அக்பர் #2 – ஆதியும் அந்தமும்

அக்பர் #2 – ஆதியும் அந்தமும்

மேற்கே காஸ்பியன் கடலுக்கும், கிழக்கே சீன-மங்கோலியப் பகுதிக்கும் இடைப்பட்ட பிராந்தியம் மத்திய ஆசியா. மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், அடர் புல்வெளிகள் என வெவ்வேறு வகையான புவியியல் பின்னணியைக் கொண்டது இந்தப் பகுதி. பல நூற்றாண்டுகளாக இங்கு வாழ்ந்து வந்த துருக் பழங்குடியின மக்களிடையே ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன.

முதலாவதாக, மேற்கே பாரசீகத்தின் (ஈரான்) வழியாக வந்த இசுலாமிய மதம், துருக் மக்களிடையே மிக வேகமாகப் பரவியது. இரண்டாவது, கிழக்கே மங்கோலியாவிலிருந்து வந்த செங்கிஸ்கான், மத்திய ஆசியாவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முதல் முறையாக ஒரு வகையான ஆட்சிமுறையை அமல்படுத்தினார்.

கடுமையான இயற்கைச் சூழலில், பல நூற்றாண்டுகள் நாடோடிச் சமூகங்களாக வாழ்ந்து வந்த துருக் மக்கள், குதிரை ஏற்றத்தில் அசகாய சூரர்களாக இருந்தனர். இவர்களுக்கு வில் வித்தையும், பிற போர்க் கலைகளையும் கற்றுக்கொடுத்து, மங்கோலியர்கள் தங்கள் படைகளில் இணைத்துக்கொண்டனர்.

காலப்போக்கில் மங்கோலியர்களுக்கும் துருக் மக்களுக்கும் இடையே திருமண உறவுகள் ஏற்படுவது சகஜமான நிகழ்வானது. இந்த மங்கோலியத் தொடர்பினால் துருக் பழங்குடியினர் நாகரீக வாழ்க்கை முறையை நோக்கி நகர்ந்தனர். அதிலும், 1227ஆம் வருடம், மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான் இறந்த பிறகு மங்கோலியர்களின் ஆதிக்கம் இந்தப் பகுதியில் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.

சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, இந்தப் பகுதியிலிருந்த ‘கெஷ்’ என்ற சிற்றூரில் பிறந்த தைமூர் என்ற நபர், தனது வாளுக்கு ஒட்டு மொத்த மத்திய ஆசியாவையும் அடிபணிய வைத்தார்.

தைமூர்? ஆம், துக்ளக் வம்ச ஆட்சியாளர்களின் அந்திமக்காலத்தில் டெல்லியைத் தரைமட்டமாக்கிச் சூறையாடிய அதே தைமூர். ஆக்கிரமிப்பு என்று வந்துவிட்டால் அதற்கு மதம் ஒருபோதும் தடையாக இருக்க முடியாது என்பதற்கு தைமூர் ஆகச்சிறந்த உதாரணம்.

அன்றைய காலத்தில் இஸ்லாமின் கொடி உயரே பறந்த பாக்தாத், அலெப்போ, டமாஸ்கஸ், டெல்லி என ஆசியாவின் செழிப்பான பிரதேசங்கள் அனைத்தும் தைமூரின் வாளுக்கு இரையாகின. டெல்லி சுலபமாகப் பணிந்திருந்தாலும் அதை ஆளவேண்டுமென்ற ஆசை அவருக்கு இல்லை. ஆனால் டெல்லியில் கைப்பற்றப்பட்ட பொக்கிஷங்களைக் கொண்டு தனது தலைநகர் சாமர்கண்டை வளப்படுத்தினார் தைமூர்.

1405ஆம் வருடம் தைமூர் இறந்த பிறகு மத்திய ஆசியா முழுவதும் பரந்து விரிந்திருந்த தைமூரிய சாம்ராஜ்ஜியம், அவரது வாரிசுகளுக்கிடையே துண்டாடப்பட்டது. வருடங்கள் செல்லச் செல்ல அடுத்தடுத்த தலைமுறையினர் தலையெடுத்தபோது ராஜ்ஜியங்கள் மேலும் துண்டாடப்பட்டு சுருங்கின.

அப்படித்தான் தைமூரின் மூன்றாவது மகனான மீரான் ஷா வழிவந்த உமர் ஷேக் மிர்சா, பனி படர்ந்த மலைகள் சூழ்ந்த பர்கானா பள்ளத்தாக்குப் பகுதியின் ஆட்சியாளராக இருந்தார். ஆனால், உமர் மிர்சாவின் அகால மரணத்தால் அவரது பதினொரு வயதான மூத்த மகன் சாஹிர் உத்-தீன் முகம்மது பாபர், 1494ஆம் வருடம் பர்கானாவின் புதிய ஆட்சியாளரானார்.

0

பதினொரு வயதில் ஆட்சிப் பீடத்தில் அமர்வது அன்றைய காலகட்டத்தில் சாதாரணமான விஷயம். ஆனால், என்னதான் ஆட்சி நடத்தவேண்டுமென்ற பொறுப்பு இருந்தாலும், அந்த வயதில் பாபர் ஒரு சிறுவன்தான். இவ்வளவு சிறிய வயதில், மிகப் பெரிய பொறுப்பில் அமர்ந்தபோது தந்தை இல்லாத பாபருக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தது இரண்டு பெண்கள். ஒருவர் பாபரின் தாய் குத்லுக் நிகர் கான், மற்றொருவர் அவரது தாய் வழிப் பாட்டி ஐசான் தவுலத் பேகம்.

பாபரின் தந்தை துருக் ஆட்சியாளர் தைமூரின் வம்சாவழி என்றால், பாபரின் தாய் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கானின் இரண்டாவது மகன் சாகடாய்யின் வம்சாவழியைச் சேர்ந்தவர். பாபர் மட்டுமல்லாமல் பர்கானாவைச் சுற்றியிருந்த பகுதிகளில் ஆட்சி செய்துகொண்டிருந்த அவரது ரத்தச் சொந்தங்கள் அனைவருமே இப்படிப்பட்ட, துருக்-மங்கோலிய இணைப்பின் பின்னணியைக் கொண்டவர்கள்தான்.

அரியணையில் அமர்ந்ததும் அரசியல், ஆட்சி இரண்டையும் கற்றுத் தேர்ந்த பாபர், தனது முதல் படையெடுப்பை சாமர்கண்ட் நோக்கி 1497ஆம் வருடம் தொடங்கினார்.

அன்றைய மத்திய ஆசியாவின் வளம் கொழிக்கும் பகுதியாக இருந்த சாமர்கண்ட், ஒரு காலத்தில் தைமூரின் தலைநகராக இருந்தது. எனவே அதைக் கைப்பற்றி ஆள்வதற்கு பாபரின் தந்தை உமர் மிர்சா ஆசைப்பட்டார். ஆனால், முயற்சிகள் கைகூடும் முன்பே அவர் மரணமடைந்திருந்தார்.

தந்தையின் ஆசையை நிறைவேற்றக் களமிறங்கிய பாபர், தனது முதல் படையெடுப்பிலேயே சாமர்கண்டைக் கைப்பற்றினார். ஆனால் விதி வலியது. அது பாபரிடம் வேறு வழியில் விளையாடியது. விதி என்பதைவிட, இதை ஒரு விதமான நெறி என்று குறிப்பிட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

பொதுவாக ஒரு ராஜ்ஜியத்தின் மன்னர் மரணமடைந்ததும் அவரது மூத்த மகன் அரியணையேறுவது வழக்கமாக நடக்கும் நிகழ்வு. ஆனால் இதற்கு நேரெதிராக இரண்டு வழக்கங்கள் அப்போதைய மத்திய ஆசியாவில் ஆட்சி செய்து வந்த துருக்-மங்கோலிய வம்சாவழியினரால் பின்பற்றப்பட்டது.

முதல் வழக்கத்தின் படி, தந்தையான மன்னர் உடல் நலத்துடன் இருக்கும்போதே ராஜ்ஜியத்தைத் தனது மகன்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார். இதற்கான ஆகச் சிறந்த உதாரணம் செங்கிஸ்கான். நலமாக இருந்தபோதே மகன்களுக்குத் தனது பேரரசைப் பங்கிட்டுக் கொடுத்தார். அவர் மரணமடைந்த பிறகு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அந்தந்த மகன்கள் ஆட்சி செய்துகொண்டனர்.

இரண்டாவது வழக்கத்தின் படி, ‘வலியது பிழைக்கும்’ என்ற நெறி கையாளப்பட்டது. ஆளும் மன்னர் ராஜ்ஜியத்தைப் பிரித்துக் கொடுக்காமல் ஒருவேளை அகால மரணமடைந்துவிட்டால், அவரது மகன்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள். இதில் வெற்றியடைபவருக்கு ராஜ்ஜியம் சொந்தம்.

இதுமட்டுமல்லாமல், மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒரு வழியில் ஒருவனுக்கு அரியணை கிடைத்து, அவன் அதிகாரப்பூர்வமாக மன்னனான பிறகும்கூட அவனுடன் பிறந்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றப் போர் புரிவார்கள். மேலும், அரசில் முக்கியப் பதவி வகிப்பவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு பிற இரத்தச் சொந்தங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதெல்லாம்கூட சர்வ சாதாரணமாக நடக்கும். ஆட்சி செய்வோருக்கு அறம் கூற்றாக இருப்பது அங்கே மிக அரிது.

இளைய சகோதரர்கள் இருந்தாலும், மூத்தவரான பாபரே சிறுவனாக இருந்ததால் தாய், பாட்டி ஆகியோரின் உதவியுடன் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அரியணை அவருக்குக் கிடைத்தது.

ஆனால், சாமர்கண்ட் முற்றுகையில் இருந்தபோது தனது ஒன்றுவிட்ட தம்பி ஜஹாங்கிர் மிர்சா, அரசின் முக்கியஸ்தர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு தடாலடியாக பர்கானாவின் புதிய மன்னரானார். இந்தச் செய்தி சில நாட்களில் பாபரை எட்டியது.

இங்கே சாமர்கண்ட் முற்றுகையில் ஏற்கெனவே பல வீரர்களை இழந்திருந்தார் பாபர். இருந்தாலும், ஒரு வழியாக சாமர்கண்டைக் கைப்பற்றி அதனை நம்பிக்கைக்குரியவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு பர்கானா நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவர் பாதி வழியில் சென்றுகொண்டிருந்தபோதே சாமர்கண்டும் கையைவிட்டுப்போன செய்தி அவரைச் சென்றடைந்தது.

0

தம்பியின் துரோகம், உடல்நலக்கோளாறு, வீரர்கள் இழப்பு எனக் கொஞ்சம் கலங்கித்தான் போனார் பாபர். இருந்தாலும் மனம் தளரவில்லை. பர்கானாவோ, சாமர்கண்டோ, அடுத்து எதைக் கைப்பற்ற வேண்டுமென்றாலும் தகுந்த படைபலம் மிக அவசியம். எனவே, அடுத்த ஒரு வருடம் மத்திய ஆசியாவின் மேற்குப் பகுதியில் வசித்து வந்த பாரசீகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தஜிக் பழங்குடியினரை வைத்து ஒரு தேர்ந்த படையை உருவாக்குவதில் மும்முரமாக இருந்தார் பாபர்.

ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாம் பரவிய காலத்துக்கு முன்பிருந்தே மத்திய ஆசியாவின் மேற்குப் பகுதிகளில், பாரசீக கலாசாரத்தின் தாக்கமும், பாரசீக மொழியின் தாக்கமும் அதிகமாக இருந்தது. சாகடாய் துருக்கிய மொழி ஒரு பக்கம், மங்கோலியர்கள் அளித்தருளிய அரசு நிர்வாகம் மறுபக்கம் இருக்க, இவைகளுக்கிடையே பாரசீகக் கலாச்சாரமும் இணைந்து வெவ்வேறு பின்னணியைக் கொண்ட கூறுகள் இயல்பாகச் சங்கமித்து, ஒன்றிணையும் பகுதியாக இருந்தது அன்றைய மத்திய ஆசியா.

இதே காரணத்தினால்தான் பின்னாளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கு வந்த பாபரும் அவருக்குப் பின் அரியணை ஏறிய முகலாயப் பேரரசர்கள் அனைவரும் இந்தியக் கூறுகளை எளிதாக உள்வாங்கிக்கொண்டு, இங்கிருந்த கலாச்சாரத்துடன் இயல்பாக ஒன்றிவிட்டனர்.

தஜிக்களைக் கொண்டு உருவாக்கிய புதிய படையை வைத்து சாமர்கண்டைக் கைப்பற்றினர் பாபர். வெற்றிதான், ஆனால் கொண்டாட முடியவில்லை. ஏனென்றால், கிழக்கிலிருந்து திடீரென வந்தார் முகம்மது சய்பானி கான். சய்பானி கான், உஸ்பெக்கியர்களின் தலைவர். மத்திய ஆசியாவின் கிழக்குப் பகுதியில் வசித்து வந்த உஸ்பெக்கியர்கள் துருக் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர்.

சய்பானி கானுக்கு சாமர்கண்ட் மீது ஒரு கண் இருந்தது. எனவே போர் முரசு கொட்டியது. போரில் பாபர் தோற்கடிக்கப்பட்டார். சாமர்கண்டைத் தன் நினைப்பை விட்டே தூரமாக வைத்த பாபர், அடுத்து பர்கானாவைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். ஆனால், அதிலும் தோல்வி. இப்போது நாடில்லாத நாடோடி மன்னனாகிப்போனார் பாபர்.

பர்கானா மன்னராக பதினொரு வயதில் பொறுப்பேற்ற பிறகு பாபருக்கு கிடைத்த வெற்றிகள் எல்லாமே தற்காலிகமானவை. பத்தொன்பது வயதிலேயே வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் எப்படி இருக்கும் என்பதைச் சொந்த அனுபவத்தில் கற்றுக்கொண்டார்.

அடுத்த வந்த ஒன்றிரண்டு வருடங்கள் பாபருக்கு மிகவும் சோதனையான காலகட்டம். உதவி என்று திரும்பிய பக்கமெல்லாம் அவமானம் மட்டுமே பதிலாகக் கிடைத்தது. இந்த அவமானங்கள் அவருக்குள் இருந்த நெருப்பை அணைய விடாமல் காத்தன. நண்பர்களுடனும் மலைவாழ் பழங்குடியின மக்கள் சிலரின் உதவியுடனும் நாட்களைக் கடத்திக் கொண்டு தனது நேரத்துக்காகக் காத்திருந்தார் பாபர். அப்படிக் காத்திருந்ததுக்குப் பலனாகத் தெற்கே காபூலிலிருந்து வந்தது ஒரு செய்தி.

காபூல், இந்தியத் துணைக்கண்டத்தின் நுழைவாயில். வடக்கில் இருந்தும் வடமேற்கிலிருந்தும் இந்திய நிலப்பரப்புக்குள் நுழைய நினைக்கும் எவரும், காபூல் பகுதியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஏனென்றால், காபூலுக்குக் கிழக்கே கைபர் கணவாய் இருந்தது. அதில் நுழைந்தால் முதலில் பெஷாவர், பிறகு தட்சசீலம் வரும். தட்சசீலத்திலிருந்து கிழக்கே சென்றால் காஷ்மீர் வரும். தெற்கே சென்றால் லாகூர்.

பல நூற்றாண்டுகளாகக் கைபர் கணவாய் வழியாகத்தான் வணிகம், மதச் சிந்தனைகள், கலாச்சாரக் கூறுகள், படையெடுப்பு எனப் பலவும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வெளியே சென்று, உள்ளேயும் நுழைந்துள்ளன.

பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் புதிதாக அமைந்த டெல்லி சுல்தானியத்தின் கட்டுப்பாட்டில் காபூலும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளும் சில காலம் இருந்தன. அதற்குப் பிறகு நடந்த மங்கோலியர்கள் படையெடுப்பால் இந்தப் பகுதிகள் அனைத்தும் அவர்கள் வசம் சென்றன. பிறகு தைமூர், அவரது வழித்தோன்றல்களின் ஆட்சிக்குக் கீழ் காபூல் வந்தது.

இறுதியாக பாபரின் தாத்தா நடத்திய பாகப்பிரிவினையின்போது பாபரின் தந்தைக்கு பர்கானாவும், பாபரின் பெரியப்பா இரண்டாம் உளூக் பெக்குக்கு காபூலும் கிடைத்தன. பர்கானாவைக் கைப்பற்ற முடியாமல் பாபர் தோற்ற அதே 1502ஆம் வருடம், பாபரின் பெரியப்பா காபூலில் மரணமடைந்தார். ஆனால், காபூலின் அரியணையை பாபர் குடும்பத்துக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவர் அபகரித்துக்கொண்டதால் அங்கே கலவரம் வெடித்தது. மக்கள் நிம்மதியை இழந்தார்கள்.

நாளுக்கு நாள் பிரச்சனையின் வீரியம் அதிகரித்து, ஒரு கட்டத்தில் விஷயம் பாபரை எட்டியது. உடனே தனக்கு நம்பிக்கையானவர்களுடன் கலந்தாலோசித்துவிட்டுப் படை பரிவாரங்களுடன் காபூலைக் கைப்பற்ற இந்து குஷ் மலைத்தொடரைக் கடக்கும் பயணத்தைத் தொடங்கினார் பாபர். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல!

(தொடரும்)

பகிர:
ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.comView Author posts

1 thought on “அக்பர் #2 – ஆதியும் அந்தமும்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *