காபூலிலிருந்து இந்தியாவை வந்தடைய கைபர் கணவாயைக் கடப்பதுபோல, மத்திய ஆசியாவிலிருந்து காபூலை வந்தடைய இந்து குஷ் மலைத்தொடரைக் கடக்க வேண்டும். ஆனால் கைபர் கணவாயைப்போல இந்து குஷ் மலைத்தொடரை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது.
குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கே இந்து குஷ் மலைத்தொடரைக் கடந்து செல்வது சவாலான காரியம். ஏனென்றால் இங்கு உற்பத்தியாகும் குளிர், அணிந்திருக்கும் உடைகளைத் தாண்டி தோலுக்குள் புகுந்து எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜை வரை ஊடுருவி சில்லிட வைக்கும். உறைய வைக்கும் பனிப்பொழிவும், திடீரெனத் தலைகாட்டும் பனிப்புயலும் எப்பேர்ப்பட்ட பராக்கிரமசாலிகளின் தைரியத்தையும் சுக்கு நூறாக உடைத்துக் குலை நடுங்க வைத்துவிடும்.
தகுந்த நேரம், காலம், தட்ப வெட்பம் என ஒவ்வொன்றாகப் பார்த்து, பலவிதமான முன்னேற்பாடுகளுடன் கிளம்பியவர்களைக்கூட இங்கிருக்கும் குளிரும் பனியும் சுலபமாகக் காவு வாங்கியிருக்கின்றன.
இப்படிப்பட்ட முன் பின் தெரியாத மலைத்தொடரைக் கடப்பதைத் தவிர பாபருக்கு வேறு வழியிருக்கவில்லை. எனவே இந்தப் பகுதியைப் பற்றி நன்கு தெரிந்த ஒரு சிலரை வழிகாட்டுதலுக்காகத் துணைக்கு அழைத்துக்கொண்டு, தன் குடும்பத்தினருடன் அசாத்தியத் துணிச்சலோடு பயணத்தைத் தொடங்கினார். இறுதியில் வெற்றி பாபர் வசமானது.
அதிஜாக்கிரதையாக இந்து குஷ் மலைத்தொடரைக் கடப்பதில் மட்டுமல்லாமல், வெறும் 300 சொச்ச வீரர்களின் உதவியோடு 1504ஆம் வருடம் காபூலைக் கைப்பற்றுவதிலும் வெற்றிபெற்றார் பாபர்.
மத்திய ஆசியாவைப்போலவே தட்பவெப்பம் இருந்ததால் புதிய இடமாகவே இருந்தாலும் காபூல் அந்நிய நிலமாகத் தெரியவில்லை. தாத்தா காலம் முதல் பாபர் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் காபூல் இருந்ததால் விட்டுப்போன பழைய ரத்தச் சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.
காபூல் அரசு நிர்வாகத்தில் மாற்றங்களை மேற்கொண்ட பாபர், ஏற்கெனவே அங்கு பதவியில் இருந்தவர்களை அரவணைத்துச் சென்றார். அதற்குப் பிறகு மத்திய ஆசியாவிலிருந்து சய்பானி கானால் துரத்தப்பட்ட பலருக்கும் காபூலில் தஞ்சமளித்தார்.
சிறுவனாகப் பர்கானாவில் ஆட்சிப்பொறுப்பேற்று வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைப் பார்த்து, தாய் நாட்டை விட்டு வெளியேறி, ஒரு தோல்வியுற்ற இளைஞனாக வந்த பாபரை ஆற்றுப்படுத்திப் பண்படுத்தியது காபூல். வருடங்கள் செல்லச் செல்ல அது அவருக்கு மிகவும் பிடித்த இடமானது.
தன் மனதுக்குப் பிடித்த காபூலை அழகாக்கினார் பாபர். அவரது மேற்பார்வையில் அங்கு பல நீரோடைகள் நேர்த்தியாக்கப்பட்டு அழகிய தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. பின்னாளில் உலகப் புகழ்பெற்ற முகலாயத் தோட்டங்கள் லாகூர், காஷ்மீர், ஆக்ரா என இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளில் அமையப்படுவதற்கான முதல் விதையை அன்று காபூலில் விதைத்தார் பாபர்.
மூத்த மகன் ஹூமாயூன் உட்பட அவரது நான்கு மகன்களும் காபூலில்தான் பிறந்து வளர்ந்தனர். புதிய நிலத்தில் நிரந்தரமாகக் குடியேறி விட்டாலும் அங்கிருந்தபடியே தனது தாய் நிலமான பர்கானாவைக் கைப்பற்ற சில முயற்சிகளை மேற்கொண்டார் பாபர், ஆனால் அவை கைகூடவில்லை. இனி ஒருபோதும் அங்கு திரும்புவதற்கான வாய்ப்பு அமையாது என்பதை ஒரு கட்டத்தில் பக்குவப்பட்ட நிலையில் உணர்ந்துகொண்டார்.
என்னதான் காபூல் நிரந்தர வசிப்பிடமாகிவிட்டாலும் அது ஒரு வறண்ட பூமி. அங்கிருந்தபடி ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைக்கத் தேவையான செயல்களை முன்னெடுக்க முடியாது. எனவே இந்தியப் படையெடுப்பு பாபருக்கு மிகவும் அவசியமாகிப்போனது.
இந்தியாவைப் பற்றி பர்கானாவிலேயே கேள்விப்பட்டிருந்தாலும், காபூலில் வசித்த இந்த 20 வருடங்கள் இந்தியாவின் வளம், பன்முகத்தன்மை, செழிப்பு ஆகியவை குறித்து நிறைய விசயங்களைத் தெரிந்துகொண்டார் பாபர். ஆனால் காபூலைப்போல அவ்வளவு லேசில் டெல்லியைக் கைப்பற்றிவிட முடியாது என்பதும் அவருக்குத் தெரியும்.
ஏனென்றால் அன்றைய டெல்லியில் லோதி சுல்தானியத்தின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இந்தியாவை அடைய முதலில் லாகூரின் ஆளுநர் தவுலத் கான் லோதியை வீழ்த்த வேண்டும். அப்படியே வீழ்த்தி முன்னேறினாலும் சுல்தான் இப்ராஹிம் லோதியின் பெரும் படையைச் சமாளிக்க வேண்டும். அதைச் சமாளித்து டெல்லியைக் கைப்பற்றினாலும் அருகிலிருக்கும் பகுதிகளைச் சேர்ந்த மன்னர்கள் எதிர்ப்பார்கள், அவர்களையும் ஒரு கை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அனைத்தையும் தெரிந்துவைத்து, படையெடுப்புக்குத் தயாராக இருந்த பாபருக்கு அதை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மட்டும் அமையவில்லை. இறுதியில் அந்த வாய்ப்பை இப்ராஹிம் லோதியே ஏற்படுத்திக் கொடுத்தார்.
0
அன்றைய டெல்லி சுல்தான் இப்ராஹிமுக்குத் தந்தை சிக்கந்தர் அளவுக்குப் பக்குவம் கிடையாது. தந்தையின் கீழ் பணிபுரிந்த திறமைசாலிகள் பலரைத் தனது துடுக்குத்தனத்தால் பகைத்துக்கொண்டார் இப்ராஹிம். அந்தப் பகைப்பட்டியலில் முதன்மையானவர் பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநர் தவுலத் கான் லோதி.
ஆனால் தவுலத்தால் இப்ராஹிமைத் தனியாக எதிர்க்க முடியாதென்பதால் உதவிக்கு பாபரை அழைத்தார். பாபரும் வந்தார். 1526ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் நடந்த முதலாம் பானிபட் போரில், தன் படையைவிடப் பத்து மடங்கு பலம் கொண்ட டெல்லி படையைப் பல போர் யுக்திகளைப் பயன்படுத்தித் தோற்கடித்தார் பாபர். அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆயுதங்கள்.
பல காலமாக வெடி மருந்துகள் பயன்பாட்டில் இருந்தாலும், பானிபட் போரில்தான் முதல் முறையாக பாபர் படையினரால் கைத்துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இந்தியாவில் உபயோகப்படுத்தப்பட்டன. அதனால் ஒரே நாளில் போர் முடிவுக்கு வந்து பானிபட் போர்க்களத்திலேயே கொல்லப்பட்டிருந்தார் இப்ராஹிம் லோதி.
வெற்றிபெற்றாலும் தனது படையைக் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார் பாபர். இப்ராஹிம் லோதியின் குடும்பப் பெண்கள் மரியாதையோடு நடத்தப்பட்டதுடன் டெல்லி மக்களுக்கும் பாபர் படையினரால் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.
டெல்லிக்கு 120 மைல் தெற்கில் அமைந்திருந்த ஆக்ராவைத் தனது புதிய தலைநகராகத் தேர்ந்தெடுத்து, 1526ஆம் வருடம் முகலாயச்* சாம்ராஜ்ஜியத்தை இந்தியாவில் நிறுவி அதன் முதல் பாதுஷாவானார் பாபர். இவ்வாறு ஒரு மாபெரும் செயலைச் செய்துமுடித்துவிட்ட பாபரால் நிதானமாக ஓய்வெடுக்கமுடியவில்லை. மேற்கிலிருந்து வந்த ஒரு புதிய சவாலால் மீண்டும் போர் முரசு கொட்டியது.
0
தெற்கு ராஜஸ்தானிலிருந்த மேவார் பகுதியின் ராஜபுத்திர மன்னர் ராணா சங்காதான் இந்தப் புதிய சவால். சித்தூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த ராணா, ஏற்கெனவே குஜராத், மால்வா ஆகிய பகுதிகளின் சுல்தான்களைப் போரில் வீழ்த்தி மேற்கு இந்தியாவின் சக்தி வாய்ந்த மன்னராக இருந்தார்.
ராஜபுத்திர மன்னர்களுக்கும், டெல்லி சுல்தான்களுக்கும் எப்போதுமே ஆகாது. எனவே தனது எதிரி இப்ராஹிம் லோதியை வீழ்த்திய கையோடு பாபர் காபூலுக்குத் திரும்பிவிடுவார் என ராணா நினைத்தார். ஆனால் பாபர் அப்படிச் செய்யவில்லை. நீண்ட கால எதிரியின் கதை முடிந்தது என்று நினைத்த ராணாவுக்கு, புது எதிரி முளைத்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
எனவே இதை முளையிலேயே கிள்ளி ஏறிய நினைத்த ராணா, பாபருக்கு எதிராக ஆம்பர், சந்தேரி, மார்வார் எனப் பிற ராஜபுத்திர ராஜ்ஜியங்களையும் அணி திரட்டினார். இதில் ஆச்சரியமூட்டும் விதமாக புதிய எதிரியை முன்வைத்து பழைய எதிரிகள் கைகோர்த்தனர். மறைந்த சுல்தான் இப்ராஹிம் லோதியின் சகோதரர் மஹ்மூத் லோதி ராஜபுத்திரர்களுக்கு ஆதரவாக இந்தப் போரில் பங்கேற்கச் சம்மதித்தார்.
ராணாவின் படை பலத்தையும், ராஜபுத்திரர்களின் வீரத்தையும் கேள்விப்பட்ட முகலாய வீரர்கள் கொஞ்சம் கலங்கித்தான் போனார்கள். இருந்தாலும் பாபர் அவர்களிடம் உரையாற்றி போருக்குத் தயார்படுத்தினார். இன்றைய ராஜஸ்தானின் பரத்பூருக்கு அருகிலிருந்த ‘கான்வா’ எனும் இடத்தில் 1527ஆம் வருடம் மார்ச் மாதத்தில் போர் தொடங்கியது. இரண்டாவது முறையாக மீண்டும் போர் யுக்திகளால் வெற்றி பெற்றது முகலாயப் படை.
அடுத்தடுத்து இரண்டு பெரும் வெற்றிகளைப் பெற்று எதிர்க்க யாருமில்லை என்ற நிலை இருந்தாலும் காபூலில் தொடங்கி பஞ்சாப், டெல்லி, ஆக்ரா, மத்தியக் கங்கைச் சமவெளி வரை இருந்த இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தைத் தன்னிடம் இருந்த ஆட்களை மட்டும் வைத்து நிர்வகிப்பது பாபரால் முடியாத காரியம்.
எனவே தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் இன, மத வேறுபாடின்றி டெல்லி சுல்தானம், ராஜபுத்திர பின்னணியைக் கொண்ட பல திறமைசாலிகள் முகலாய அரசில் பணியமர்த்தப்பட்டனர். அடுத்த சில வருடங்கள் தான் கனவு கண்டிருந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்துக்கான அடித்தளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார் பாபர். அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் அளவுக்கான நிதிச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்திய மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்தாலும், உற்பத்தித் தொழிலும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. அதிலும் இந்தியாவில் உற்பத்தியான பொருட்கள் மேற்கு ஆசியா, ஐரோப்பா எனத் தொலைதூரப் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
அன்றைய இந்தியாவின் முழு நிலப்பரப்பையும் பாபர் பார்க்காவிட்டாலும், பார்த்தவரை இருந்த விசயங்கள் மட்டுமே அவரை ஆச்சரியப்பட வைத்தன. ஒவ்வொரு சில நூறு மைல்களுக்கும் மாறிய மக்களின் மொழி, உடை, உணவு, விவசாயம் ஆகியவற்றுடன், வெவ்வேறு திசைகளிலிருந்த வேறுபட்ட காலநிலைகள், புவியியல் அம்சங்கள் என இந்தியாவின் பன்முகத்தன்மை முகலாயர்களைத் திகைக்க வைத்தது.
முகலாய ஆட்சியை இந்தியாவில் உருவாக்கி நான்கு வருடங்கள் கடந்த பிறகு 1530ஆம் வருடம் பாபர் மரணமடைந்தார். முதலில் ஆக்ராவில் புதைக்கப்பட்டாலும் பின்பு அவருக்கு மிகவும் பிடித்த காபூல் தோட்டத்தில் புதைக்கப்பட்டார்.
பாபருக்குப் பிறகு முகலாய சாம்ராஜ்ஜியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அவரது மூத்த மகன் ஹூமாயூனுக்கு இந்தியப் பகுதியும், இரண்டாவது மகன் கம்ரானுக்கு காபூல்-காந்தஹார் பகுதியும் வழங்கப்பட்டன. மத்திய ஆசியாவில் வாரிசுகளுக்கு ராஜ்ஜியத்தைப் பிரித்துக் கொடுப்பதைப்போல இந்தியாவிலும் முதல் முறையாக நடந்தது.
முகலாய சாம்ராஜ்ஜியத்தின் புதிய பாதுஷாவாக 22 வயதில் முடிசூடினார் ஹூமாயூன். ஆனால் அதே வயதில் பாபருக்கு இருந்த அனுபவமும் பக்குவமும் இவரிடம் இல்லை. போதாக்குறைக்குக் குடும்பத்துக்குள்ளேயே ஹூமாயூனுக்குப் பல எதிர்ப்புகள் இருந்தன.
ஒரு வழியாக அனைத்தையும் சமாளித்து மன்னராகப் பத்து வருடங்களை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், பாபர் முழுமையாக முடிக்காமல் விட்டிருந்த பழைய பகை ஒன்றைத் தவறாகக் கையாண்டார் ஹூமாயூன். அதனால் அரியணையை இழந்து ராஜ்ஜியத்தை விட்டே வெளியேறவும் செய்தார்.
(தொடரும்)
* ‘மங்கோல்’ (Mongol) என்ற வார்த்தை திரிந்து பின்னாளில் ‘முகல்’ (Mughal) என்றானது.
Excellent
Despite knowing the story, it’s getting interesting with your usage of language.