Skip to content
Home » அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி

அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி

‘ஒரு மலைக்கு மேல் 500 அடி உயரத்தில் அமைந்திருந்த சித்தூர் கோட்டையின் நீளம் மட்டும் 5 கிலோமீட்டர்கள். இதை வெறுமனே ஒரு கோட்டை என்று புரிந்துகொள்வது தவறு. ராணாவின் அரண்மனை, மக்கள் குடியிருப்புகள், கோவில்கள், சந்தைகள் எனக் கோட்டைக்குள் ஒரு சிறு நகரமே இருந்தது. கோட்டைக்குள் வசிப்பவர்களின் பல மாதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கான தண்ணீர் வசதிகளும் உள்ளேயே இருந்தன.’

ஆக்ராவிலிருந்து குஜராத்துக்குச் செல்லும் பாதையில் அமைந்திருந்த மேவார் ராஜ்ஜியத்தின் வசம் இருந்தது இந்தச் சித்தூர் கோட்டை. சிசோடியா ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த மேவாரின் ஆட்சியாளர் ராணா சங்காவைத்தான் 1527ஆம் வருடம் நடந்த கான்வா போரில் தோற்கடித்திருந்தார் பாபர். இந்த முன்பகை காரணமாக சங்காவின் மகன் ராணா உதய் சிங், முகலாயர்களின் எதிரிகளுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவந்தார். மிக முக்கியமாக முகலாயப் படையெடுப்பால் மால்வாவிலிருந்து தப்பிய பாஸ் பகதூருக்குத் தஞ்சமளித்திருந்தார் உதய் சிங்.

இந்தக் காரணங்களால் குஜராத் படையெடுப்பை மேற்கொள்ளும் முன்பு மேவாரின் முக்கியக் கோட்டையான சித்தூரைக் கைப்பற்றுவது அவசியம் என முடிவு செய்தார் அக்பர். 1567ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஒரு மழை நாளின் இரவு நேரத்தில் சித்தூருக்கு வந்து சேர்ந்தது முகலாயப்படை. விடிந்து சூரிய வெளிச்சம் வந்ததும், மேகங்கள் கலைந்து சென்று கோட்டையின் பிரம்மாண்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின.

கோட்டையைப் பார்த்ததும் முதல் வேலையாகக் குதிரையில் ஏறி கோட்டை அமைந்திருந்த மலையைச் சுற்றி வந்தார் அக்பர். கீழே இருந்த முகலாய வில்வித்தை வீரர்களால் கோட்டைக்கு மேலே உயரமான இடத்தில் நின்று கொண்டிருந்த ராஜபுத்திர வீரர்களை நோக்கி அம்பெய்த முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டார். பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் உபயோகித்துத்தான் கோட்டையைக் கைப்பற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்தார் அக்பர். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது.

விடிந்தும் விடியாததுமாக முற்றுகையிட வந்திருக்கும் முகலாயப்படையைப் பார்த்த ராஜபுத்திர வீரர்கள் கோட்டையிலிருந்து அம்பு மழை பொழிய ஆரம்பித்தார்கள். இதனால் முகலாய வீரர்களால் கோட்டையின் அடித்தளத்தை நெருங்க முடியவில்லை.

பீரங்கிகளை ஓரளவுக்காவது அருகே கொண்டு சென்றால்தான் கோட்டையின் சுவர்களைத் தகர்க்க முடியும். எனவே அதைச் செயல்படுத்துவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. மலையைச் சுற்றி ஆங்காங்கே அகழிகள் வெட்டப்பட்டு அந்த அகழிகள் வழியாகக் கோட்டையின் அடித்தளத்துக்குச் செல்லப் பாதை அமைக்கப்பட்டது.

இவ்வாறு வெட்டப்பட்ட அகழிகளுக்கு மேலே மணல் மூட்டைகள், மரத்துண்டுகள், உலோக அட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த அகழிகள் ஒவ்வொன்றும் யானைகள் நுழைந்து பீரங்கிகளைக் கோட்டையின் அடித்தளத்துக்கு இழுத்துச் செல்லும்படியான அளவுக்கு மிகப்பெரியதாக உருவாக்கப்பட்டன. இத்துடன் ஆங்காங்கே தடுப்புகளுடன் கூடிய உயரமான கோபுரங்கள் கட்டப்பட்டன.

மழை, வெயில், குளிர் என எதையும் பொருட்படுத்தாமல், தோடர்மால் மேற்பார்வையில் ஆயிரக்கணக்காகத் தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு நாளும் முகலாயர்கள் தரப்பில் 100 முதல் 200 வரையிலான ஆட்கள் ராஜபுத்திரர்களின் அம்பு, துப்பாக்கித் தாக்குதல்களுக்குப் பலியானார்கள். அதிலும் கோட்டைக்குள் இருந்த இஸ்மாயில் என்ற கைதேர்ந்த துப்பாக்கி வீரன் தன்னால் முடிந்த அளவு முகலாயர்கள் கூடாரத்தில் சேதாரம் விளைவித்துக் கொண்டிருந்தான்.

உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், கட்டுமானத்துக்கு வேண்டிய மூலப்பொருட்கள், உபகரணங்கள் என முகலாயத் தரப்புக்குத் தேவைப்பட்ட அனைத்தும் டன் கணக்கில் வந்துகொண்டே இருந்தன. இதற்கு நேரெதிராக சித்தூர் கோட்டைக்குள்ளிருந்த உணவும், ஆயுதக் கையிருப்புகளும் குறைந்துகொண்டே வந்தன. இதனால் நாட்கள் செல்லச் செல்ல ராஜபுத்திரர்கள் தரப்பைப் பயம் சூழ ஆரம்பித்தது.

இது போன்ற பல முற்றுகைகளை ஏற்கெனவே அவர்கள் பார்த்துள்ளார்கள். ஆனால் கோட்டையைக் கைப்பற்ற இவ்வளவு நுணுக்கமாகத் திட்டமிட்டு மாதக்கணக்கில் நேரம் எடுத்துக் கொண்டு முகலாயர்கள் செய்த ஒவ்வொரு காரியமும் அவர்களிடம் இருந்த தன்னம்பிக்கையைக் குறைத்தது. மேலும் ராணா உதய் சிங் கோட்டைக்குள் இல்லாததும் அவர்களின் பயத்துக்கு முக்கியக்காரணமாக அமைந்தது.

1540ஆம் வருடம்தான் மேவாரின் ஆட்சியாளராகப் பட்டம் சூட்டிக்கொண்டார் ராணா உதய் சிங். சங்காவின் இறப்புக்குப் பின்பு மேவார் அரியணையை முன்வைத்து நடந்த பங்காளிச் சண்டைகள் அனைத்தையும் ஒரு வழியாகச் சமாளித்து ஆட்சி நடத்திக் கொண்டிருந்தபோது, 1544ஆம் வருடம் சித்தூர் கோட்டையை முற்றுகையிட்டார் ஷேர் கான். அப்போது ஆயுதங்களும், உணவுக் கையிருப்புகளும் குறைவாக இருந்ததால் வேறு வழியில்லாமல் ஷேர் கானுடன் உடன்படிக்கை மேற்கொண்டு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்தார் உதய் சிங்.

இதுபோல வருங்காலத்தில் யாராவது முற்றுகை எடுத்து வந்து அது மாதக்கணக்கில் தொடர்ந்தால், அதைத் தாக்குபிடிப்பது சிரமம் என்பதை உணர்ந்த உதய் சிங், புதிதாக ஒரு தலைநகரத்தை உருவாக்கும் பணியில் இறங்கினார். அதன்படி சித்தூருக்கு 70 மைல் தென்மேற்கில், ஏரிகள் சூழ உதய் சிங் உருவாக்கிய நகரம் ‘உதய்பூர்’.

அக்பர் படையெடுத்து வந்த சமயம் ராணா உதய் சிங் தன் அரசவையுடன் உதய்பூரில் இருந்தார். மெர்ட்டா என்ற குறுநிலப் பகுதியின் ஆட்சியாளர் ஜெய்மால் ரத்தோரின் கட்டுப்பாட்டில் சித்தூர் கோட்டை இருந்தது. அவருடன் ஆயிரக்கணக்கான ராஜபுத்திர வீரர்களும், பொதுமக்களும் கோட்டைக்குள் இருந்தனர்.

குஜராத் படையெடுப்புக்குச் செல்லும் முன்பு சித்தூர் கோட்டையைக் கைப்பற்றுவது அவசியம் என்றாலும், இந்தப் படையெடுப்பின் மூலம் தன்னுடைய ஆளுமையையும், முகலாயப் படையின் வலிமையையும் ராணாவுக்குத் தெரியப்படுத்த நினைத்தார் அக்பர். பாதுஷாவின் இந்த நோக்கத்தை நிறைவேற்ற எந்தத் தொய்வும் இல்லாமல் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தது முகலாயப்படை.

ஆக்ரா ஆயுதக்கிடங்கிலிருந்து சிறிதும் பெரிதுமாக ஏகப்பட்ட பீரங்கிகளும், பலவிதமான துப்பாக்கிகளும் வந்திறங்கின. நான்கு மாதங்களில் அனைத்து முன் ஏற்பாடுகளும் முடிந்து பிப்ரவரி வாக்கில் தாக்குதலை ஆரம்பித்தது முகலாயப்படை. முகலாயப் பீரங்கிகளிலிருந்து கிளம்பிய குண்டுகள் சித்தூர் கோட்டைச் சுவர்களைப் பதம் பார்த்தன. மேலும் கோட்டைப் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த ராஜபுத்திர வீரர்களை, உயரமான கோபுரங்களில் இருந்தபடிச் சுட்டு வீழ்த்தினார்கள் முகலாய வீரர்கள்.

இதுபோலத் தனக்கு மிகவும் பிடித்த துப்பாக்கியான சங்ரமை வைத்து கோட்டையின் மேல் தளத்தில் தெரிந்த ஒரு நபரைச் சுட்டார் அக்பர். அவர் சுட்டவுடன் சுருண்டு விழுந்து இறந்த அந்த நபர் ஜெய்மால் ரத்தோர். ஜெய்மால் இறந்ததும் கோட்டையைப் பாதுகாக்க எதிர்த்தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த ராஜபுத்திர வீரர்கள் அனைவரும் நொடிப்பொழுதில் காணாமல் போனார்கள். நிலைமையை உபயோகித்துக்கொண்ட முகலாயப்படை அடுத்த நாளே கோட்டைக் கதவுகளைத் தகர்த்தெறிந்து உள்ளே நுழைந்தது.

முகலாய யானைப்படை ராஜபுத்திர வீரர்களைப் பந்தாடியது. கோட்டைக்குள் நடந்த போரில் ஏகப்பட்ட ராஜபுத்திர வீரர்கள் இறந்து போனார்கள். எஞ்சியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். முகலாயர்களை எதிர்த்தப் பொதுமக்களுக்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டது. சரணடைந்தவர்கள் கைது செய்யப்பட்டனர், எதிர்த்து நின்றவர்கள் கொல்லப்பட்டனர்.

சித்தூர் கோட்டையும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் முகலாய ராஜ்ஜியத்துடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படையெடுப்பில் சிறப்பாகப் பணியாற்றிய புந்தேலா ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராஜா விக்ரம்ஜித், அக்பரால் கௌரவிக்கப்பட்டார். மூன்று நாட்கள் அங்கே தங்கியிருந்து அந்தப் பகுதியை நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஆக்ராவுக்குக் கிளம்பிச் சென்றார் அக்பர்.

0

சில மாதங்கள் கழித்து ஆமீருக்குத் தெற்கிலிருந்த ரன்தம்போர் கோட்டையைக் கைப்பற்றக் கிளம்பினார் அக்பர். சவுஹான் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சுர்ஜன் ஹடா அச்சமயம் ரன்தம்போர் பகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்தார்.

சித்தூரைப்போல இங்கேயும் பலவித முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு பீரங்கிகளை வைத்துக் கோட்டையைத் தாக்கும் பணியைத் தொடங்கியது முகலாயப்படை. ஆனால் தாக்குதல் ஆரம்பித்த சில நாட்களிலேயே சுர்ஜன் ஹடா அக்பரிடம் சரணடைந்து அவரின் தலைமையை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து பிகானீர், ஜெய்சால்மீர், புந்தேல்கண்ட் ராஜ்ஜியங்களின் ராஜபுத்திர மன்னர்களும் அக்பரின் தலைமையைத் தாமாக முன்வந்து ஏற்றனர். அவர்களுக்கான மரியாதையை உறுதி செய்த அக்பர், அவர்களிடம் இருந்து பெண் எடுத்து ராஜபுத்திர-முகலாய உறவுகளைப் பலப்படுத்தினார்.

ரன்தம்போர் வெற்றிக்குப் பிறகு அஜ்மீர் தர்காவுக்குச் சென்று தொழுதார் அக்பர். பிறகு அங்கிருந்து கிளம்பி ஆமீருக்குச் சென்ற அக்பருக்கு, அவரது மைத்துனர் பகவான் தாஸ் தடபுடலாக வரவேற்பளித்தார். இதைத் தொடர்ந்து அக்பரின் வெள்ளிக்கிழமை தொழுகைக்காகப் பிரத்தியேகமாக ஒரு மசூதி ஆமீரில் கட்டப்பட்டது.

ஆமீர் மட்டுமல்லாமல் இந்தக் காலகட்டத்தில் அக்பர் தொழுத இடங்களிலெல்லாம் அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டது ஒரே ஒரு விசயத்துக்காக மட்டும்தான். வெளியுலகில் அக்பர் தொட்டதெல்லாம் வெற்றியில் முடிந்தது. ஆனால் தனிப்பட்ட வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட அந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய இறைவனின் கருணை அவருக்குத் தேவைப்பட்டது.

(தொடரும்)

பகிர:
ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.comView Author posts

1 thought on “அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி”

  1. 14 தொடர்களும் முகலாய பேரரசின் வரலாற்றை அழகாக வடிதுளிர்கள் ராம்.!
    வீரமும்! விவேகமும்! திறமையும்! கொண்ட அக்பரின் ஆட்சி பிரமிப்பாக இருந்தது.

    சிறு ஆசை சொல்லிக்கொள்கிறேன் வீரம் செழித்த போர்கலதின் இடையே #ஜோதா என்னும் இளவரசியின் மௌன காதலையும் கதையில் சேர்த்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்

    வாழ்க வரலாறு வளர்க பாரதம்*

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *