அபுல் ஃபாசலைக் கொலை செய்தது தன் மீது தந்தைக்கு எந்த அளவு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது சலீமுக்குத் தெரியும். எனவே தந்தையைச் சந்திக்கும்போது, பாட்டி ஹமீதா பானுவும் உடன் இருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார் சலீம். பாட்டி அருகே இருந்தால் தந்தையின் கோபப் பார்வையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டார் சலீம்.
சலீமைக் கைபிடித்து அழைத்துச் சென்ற ஹமீதா பானு, அவரை நேராக அக்பரின் காலில் விழ வைத்தார். சலீமைத் தூக்கி, தன் தலைப்பாகையை எடுத்து அவர் தலை மீது வைத்தார் அக்பர். இவ்வாறு சலீமை அக்பர் ஏற்றுக்கொண்டாலும், உண்மையில் அவர் அதை மனதாரச் செய்யவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வேறு வழியில்லாமல் இந்த முடிவை அவர் எடுத்திருந்தார். இதற்குப் பிறகு அக்பரின் ஒப்புதலுடன் மீண்டும் அலகாபாத்துக்குத் திரும்பினார் சலீம்.
ஒரு வழியாக இந்தத் தந்தை-மகன் பிரச்னை முடிவுக்கு வந்தபோது, வேறொரு தந்தை-மகன் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது. சலீம் மீது அக்பர் கோபப் பார்வை காட்டிய அதேநேரம், குஸ்ரௌ மீது கரிசனப் பார்வை காட்டினார். இதனால் அக்பருக்குப் பிறகு குஸ்ரௌ பாதுஷாவாகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாக வதந்திகள் முகலாய அரசுக்குள் ரெக்கை கட்டிப் பறந்தன.
தன்னிடம் பாசம் காட்டிய தாத்தா, தன் தந்தையிடம் பாரா முகத்தைக் காட்டிவந்தது குஸ்ரௌவைப் பாதுஷா கனவு காண வைத்தது. இதனாலேயே நாளுக்கு நாள் சலீமுக்கும் குஸ்ரௌவுக்கும் இடையே மறைமுகமாக முட்டல்களும் மோதல்களும் அதிகரித்தன. கணவருக்கும் மகனுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த பிரச்னையில் மனதளவில் பாதிக்கப்பட்டார் மான் பாய். ஒருகட்டத்தில் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அளவுக்கதிகமாக அபினை உட்கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
தன் அன்புக்குரிய முதல் மனைவி மான் பாய் மரணமடைந்தது சலீமை உலுக்கியது. அந்த வேதனையில் அலகாபாத்தில் இருந்தவாறு குடியில் மூழ்கிப்போனார் சலீம். மது தரும் போதை போதுமான அளவு இல்லாததால், மதுவில் அபின் கலந்து அவர் குடிக்க ஆரம்பித்தார். இதனால் அவ்வப்போது தறிகெட்டு நடக்க ஆரம்பித்தார் சலீம்.
மான் பாயின் மரணத்துக்குப் பிறகு ஆக்ரா அரசவைக்கு வருமாறு சலீமுக்குச் செய்தி அனுப்பினார் அக்பர். ஆனால் அதை உதாசினப்படுத்தினார் சலீம். மேலும் தான் ஒரு சுதந்திர ஆட்சியாளர் என்ற தொனியில் அக்பரின் உத்தரவுகளை மதிக்காமல் அவர் நடந்துகொள்ள ஆரம்பித்தார். சில நாட்கள் பொறுத்துப் பார்த்த அக்பருக்கு ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறியது.
எனவே சலீமை ஒரு கை பார்த்துவிடுவது என முடிவு செய்து ஆக்ராவில் இருந்து அலகாபாத்துக்குச் செல்லப் படகில் கிளம்பினார். யமுனை நதியில் அப்போது நீரின் அளவு குறைவாக இருந்த காரணத்தால் கிளம்பிய சில நேரத்துக்குள்ளேயே அக்பரின் படகு மணலில் சிக்கிக் கொண்டது.
இதனால் படகிலிருந்து இறங்கி நதிக்கரைக்கு அருகே அமைக்கப்பட்ட கூடாரத்தில் ஓய்வெடுக்க ஆரம்பித்தார் அக்பர். ஒரு சில மணிநேரத்தில் ஹமீதா பானுவின் உடல்நிலை மோசமான செய்தி அக்பரை வந்தடைந்தது. ஆக்ராவில் இருந்து கோபத்துடன் அக்பர் கிளம்பியபோதே அவரைப் போக வேண்டாம் என்று தடுத்தார் ஹமீதா பானு. ஆனால் சலீம் மீது இருந்த ஆத்திரத்தில் முதல்முறையாகத் தாயின் பேச்சை மீறினார் அக்பர்.
தன்னுடைய நடத்தைதான் ஹமீதா பானுவின் இந்த நிலைமைக்குக் காரணமாக இருக்குமோ என்ற எண்ணத்தில் வருத்தத்துடன் ஆக்ராவுக்கு விரைந்தார் அக்பர். ஆக்ரா கோட்டையை அக்பர் அடைந்தபோது தன் சுயநினைவை ஏற்கெனவே இழந்திருந்தார் ஹமீதா பானு. ஆகஸ்ட் 29, 1604 அன்று தன் மூச்சை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டார்.
இந்துக்களைப்போலத் தன் தலைமுடியையும் மீசையையும் முழுமையாக மழித்துக் கொண்டார் அக்பர். அக்ரா நகரத்தின் எல்லை வரை தன் தாயின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியைப் பிறருடன் இணைந்து அவர் சுமந்து சென்றார். பிறகு டெல்லி ஹூமாயூன் கல்லறையில் புதைக்க ஹமீதா பானுவின் உடலை அனுப்பிவிட்டு அக்ரா கோட்டைக்குத் திரும்பினார் அக்பர். யாரிடமும் பேசிக்கொள்ளாமல் நேராகத் தன் அறைக்குச் சென்றார்.
மாலை நேர வானில் சூரியன் அஸ்தமனமாகி கொஞ்சம் கொஞ்சமாக இருள் பரவ ஆரம்பித்த நேரத்தில் தன் அறையைவிட்டு வெளியே வந்தார் அக்பர். மழை பெய்வதற்கு அறிகுறியாக வானில் கருமேகங்கள் சூழ்ந்திருந்ததை அமைதியாக வேடிக்கை பார்த்தார்.
இந்த 60 வருடகால வாழ்க்கையில் அவருடன் பயணித்த முக்கிய நபர்கள் பலரும் மரணமடைந்திருந்தனர். அக்பரை விடுத்துப் பார்த்தால் முகலாய வம்சத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டப் பழைய ஆட்களில் மிர்சா அஜீஸ் கொக்கா, சலீமா சுல்தான் பேகம், ருக்கையா சுல்தான் பேகம் என மொத்தமே மூன்று பேர் மட்டுமே அப்போது உயிரோடிருந்தனர். அரசின் முக்கியப் பொறுப்புகள் பலவற்றிலும் அடுத்த தலைமுறை நபர்கள் பணி அமர்த்தப்பட்டிருந்தனர்.
0
1604ஆம் வருடம் நவம்பரில் ஆக்ரா அரசவையில் அக்பரை நேரில் சந்தித்து, பாட்டியின் மரணத்துக்கான தன் வருத்தத்தைத் தெரிவித்தார் சலீம். ஒரு வகையில் அக்பரின் மனநிலையை நோட்டம் பார்க்கவும் இந்தச் சந்திப்பை அவர் பயன்படுத்திக்கொண்டார். சலீமைக் கட்டியணைத்து வரவேற்ற அக்பர், யானைகள், வைரங்கள் என சலீம் அளித்த பரிசுகளை ஏற்றுக்கொண்டார்.
இது நடந்த சில மணிநேரத்துக்குள் சலீமைக் கைது செய்து தன் அறைக்குக் கொண்டு வரச் செய்தார் அக்பர். சலீம் செய்த தவறுகளுக்கு எல்லாம் சேர்த்து ஆத்திரம் தீர அவரது முகத்தில் அறைந்தார் அக்பர். தந்தையின் செயலால் தடுமாறிய சலீம் அவமானத்தில் கூனிக்குறுகிப்போனார். இதைத் தொடர்ந்து சலீமைச் சிறை வைத்த அக்பர், அவருக்கு மது உள்ளிட்ட எந்த ஒரு போதை தரும் பொருளையும் கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.
ஒரு தந்தையாக சலீம் செய்த தவறுகள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டார் அக்பர். ஆனால் தன்னுடைய ஆகச்சிறந்த விசுவாசி தன் மகன் உத்தரவால் கொல்லப்பட்டதை மட்டும் அக்பரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நாட்கள் கடந்திருந்தாலும் அந்த ஆத்திரம் அவருக்குள் தீராமல் இருந்தது. அதைத்தான் ஒட்டுமொத்தமாக அவர் வெளிப்படுத்தினார்.
சலீமின் சகோதரிகள் அக்பரின் மனதைக் கரைத்துச் சில நாட்களிலேயே அவரைச் சிறையிலிருந்து விடுவிக்கவைத்தனர். முன்பு ஹமீதா பானுவுடன் வந்தபோது சலீமை மன்னித்ததைப்போல வேறு வழியில்லாமல்தான் இப்போது அவரை விடுவிக்க உத்தரவிட்டார் அக்பர்.
ஏனென்றால் அதீத குடிப்பழக்கம் காரணமாக அக்பரின் கடைசி மகன் தானியலின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த தகவல் அக்பரை வந்தடைந்திருந்தது. எனவே மகன் என்ற ஸ்தானத்தில் தனக்குப் பிறகு அரியணையேற சலீம் மட்டுமே இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தார் அக்பர். அக்பரின் கணிப்புப்படி மார்ச் 11, 1605ஆம் வருடத்தில் தன் 33வது வயதில் மரணமடைந்தார் தானியல்.
இரு சகோதரர்களும் மரணமடைந்தால் தந்தைக்குப் பிறகு அரியணையேறத் தனக்கு எவ்விதப் போட்டியும் இருக்காது என நினைத்தார் சலீம். ஆனால் சலீமுக்குப் போட்டியாக அவருடைய மகன்களே களமிறங்கினார்கள். குஸ்ரெளவுடனும் குர்ரமுடனும் அக்பர் காட்டிய நெருக்கத்தை ஆக்ரா கோட்டையில் இருந்தபடி வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார் சலீம்.
இந்த இருவரில் அக்பருக்கு மிகவும் பிடித்த பேரனாக இருந்தது குர்ரம்தான். தன் திறமைகளுக்கும் லட்சியங்களுக்குமான வாரிசாக குர்ரம் இருப்பான் என்று பெருமை பொங்கப் பிறரிடம் கூறிக்கொண்டே இருப்பார் அக்பர். ஆனால் சலீமைப் பிடிக்காதவர்கள் பட்டியலில் இருந்த பலருக்கும் 18 வயது குஸ்ரெளதான் அடுத்த பாதுஷாவாகத் தெரிந்தார்.
இந்தப் பட்டியலில் முக்கியமான இருவர், மான் சிங்கும், மிர்சா அஜீஸ் கொக்காவும். அன்றைய காலகட்டத்தில் முகலாய அரசில் அக்பருக்கு அடுத்த இடத்தில் அதிகாரமிக்க நபர்களாக இருந்த இவர்கள் இருவரும், அக்பருக்குப் பிறகு குஸ்ரௌ பாதுஷா பதவியை அலங்கரிப்பதற்கு ஆதரவாக இருந்தனர்.
12 வயது சிறுவனாகத் தன் அத்தை ஹர்க்கா பாயைத் திருமணம் செய்ய வந்த அக்பரை, 1562ஆம் வருடம் முதன்முதலில் சந்தித்தார் மான் சிங். இத்தனை வருட காலத்தில் மான் சிங் மேற்கொண்ட படையெடுப்புகளும், அதன் மூலம் கிடைத்த வெற்றிகளும், அவரை அக்பரின் வலதுகரமாகவே மாற்றியிருந்தது.
1605ஆம் வருடம் வங்காளத்தின் ஆளுநர் பதவியில் இருந்த மான் சிங்கை 7000 வகைமை எண் கொண்ட முகலாய அதிகாரியாக நியமித்தார் அக்பர். முகலாய இளவரசர்களைத் தாண்டி அப்போது இத்தனை உயரிய கௌரவம் பெற்ற ஒரே நபர் மான் சிங் மட்டுமே.
மேலும் குஸ்ரெள பாதுஷா பதவியை அடையத் தடையாக இருந்த சலீமை ஆக்ராவிலிருந்து அகற்ற நினைத்தார் மான் சிங். எனவே சலீமை வங்காளத்தின் ஆளுநராக நியமிக்க அவர் அக்பரிடம் பரிந்துரைத்தார். மான் சிங்கின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட சலீம் அவரது ஆலோசனையை ஏற்க முடியாது என்று நேரடியாக அக்பரிடமே தெரிவித்தார்.
ஆலோசனைகளை நிராகரிக்கலாம், பேச்சுவார்த்தைகளைத் தவிர்க்கலாம், பாராமுகம் காட்டலாம். ஆனால் உள்ளுக்குள் புகைந்துகொண்டிருந்த நெருப்பை எத்தனை காலம்தான் அடக்கி வைத்திருக்க முடியும்?
இத்தனை வருட காலமாக சலீமுக்கும் குஸ்ரெளவுக்கும் இடையே மறைமுகமாக நடந்துவந்த போட்டி ஒருநாள் அக்பருக்கு முன்னாலேயே வெளிப்படையாக வெடித்தது. அதன் தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகளின் முடிவில் இந்த இருவரில் ஒருவருக்கு முகலாய அரியணை கிடைத்தது.
(அடுத்த அத்தியாயத்தில் தொடர் நிறைவு பெறும்)
நிறைவா 😮😮😭