Skip to content
Home » அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

ஹூமாயூனின் அகால மரணத்தைத் தொடர்ந்து 1556ஆம் வருடத்தில் பதின்மூன்று வயது சிறுவனான அக்பர், முகலாய பாதுஷாவாகப் பொறுப்பேற்றார். 50 வருடங்களின் முடிவில் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அவர் கட்டியெழுப்பி இருந்தார்.

கிழக்கில் ஒடிசா, வங்காளம், பீகாரில் தொடங்கி மேலே சென்றால் அலகாபாத், ஆவாத். அவற்றுக்கு இடது பக்கத்தில் ஆக்ரா. அதற்கும் கீழே குஜராத், மால்வா, அஹமத்நகர். பிறகு அங்கிருந்து மேலே வந்தால் அஜ்மீர். அதற்கும் மேலே டெல்லி, லாகூர். இவைபோக காஷ்மீர், முல்தான், சிந்து, காபூல் என மொத்தம் 16 மாகாணங்களாக முகலாய சாம்ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு வருடமும் நூறு மெட்ரிக் டன் அளவிலான வெள்ளியை இந்தியாவில் கொடுத்து, இங்கிருந்து பொருட்களை வாங்கிச் சென்று வெளியே விற்பனை செய்தனர் ஐரோப்பிய வியாபாரிகள். இன்றைய கணக்குப்படி 1605ஆம் வருடத்தில் முகலாய அரசுக்குக் கிடைத்த வருமானம் மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய். இதனால் அன்றைய உலகின் பணக்கார ஆட்சியாளராக இருந்தார் அக்பர்.

சாம்ராஜ்ஜியத்தைப் பாதுகாக்க 3 லட்சம் தரைப்படை வீரர்கள், அரசாங்கத்தை நிர்வகிக்க 1,823 முகலாய அதிகாரிகள் என மிகப் பிரம்மாண்டமான ஒரு நிர்வாக அமைப்பு அக்பரின் கண் அசைவில் இயங்கியது.

இத்தனை சாதனைகளுக்கும், இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கும் காரணமாக இருந்த அக்பருக்கு அவரது கடைசி காலகட்டம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. குடியால் இறந்துபோன இரண்டு மகன்களும், தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட மூத்த மகன் சலீமும் அக்பரை வேதனைப்பட வைத்தனர்.

ஆக்ராவில் ஒருநாள் யானைச் சண்டை நடந்துகொண்டிருந்தது. மைதானத்தில் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த இரண்டு யானைகளில் ஒன்று சலீமுடையது. மற்றொன்று பிஜாப்பூர் சுல்தான் இரண்டாம் அடில் ஷாவுடையது. மைதானத்துக்கு எதிரே இருந்த கட்டடத்தின் முதல்தளத்தில் தன் ஆசைக்குரிய பேரன் குர்ரமுடன் அமந்து சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்தார் அக்பர். கீழே மைதானத்தின் ஒரு பக்கம் சலீமும், மறுபக்கம் குஸ்ரௌவும் தத்தமது பணியாளர்களுடன் நின்றுகொண்டிருந்தனர்.

யானைச் சண்டை மும்முரமாக நடந்துகொண்டிருந்த சமயம் திடீரென சலீமின் பணியாளர்களும், குஸ்ரௌவின் பணியாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி சலீமின் பணியாளர்கள் சிலர் குஸ்ரௌ தரப்பினரை நோக்கிக் கல்லெறிய ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதலில் அருகிலிருந்த யானைப் பாகன் ஒருவரின் தலையில் கல் பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

இந்தச் சம்பவம் முழுவதையும் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அக்பர், சண்டையை உடனடியாக நிறுத்துமாறு குர்ரம் மூலம் சலீமுக்குத் தகவல் கூறி அனுப்பினார். தந்தையின் தகவல் கிடைத்ததும் சண்டையை உடனடியாக நிறுத்திவிட்டு நேரடியாக வந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டார் சலீம்.

சலீமின் பணியாளர்கள் அங்கே நடந்துகொண்டவிதம் அக்பரை வெகுவாகக் காயப்படுத்தியது. அரை நூற்றாண்டு காலமாகத் தனக்கு முன்பு பிறர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அக்பர் கட்டிக்காத்து வந்த கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் ஒரே சம்பவத்தின் மூலம் காலி செய்திருந்தார் சலீம். இந்தச் சம்பவத்தைத் தனக்கான அவமரியாதையாக எடுத்துக்கொண்டு மனதுக்குள் புழுங்கினார் 63 வயதான அக்பர்.

0

1605ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் கோடைக் காலத்தின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்து கொண்டிருந்தபோது, சம்பங்கிப் பூக்கள் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன. அப்போது திடீரென ஒரு நாள் அக்பருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. தலைமை வைத்தியர் ஹக்கீம் அலி கிலானி அக்பரைச் சோதித்தார். ஒருநாள் விரதமிருந்து மருந்துகளை உட்கொள்ளுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கினார் ஹக்கீம்.

ஆனால் ஹக்கீமின் ஆலோசனையைப் பின்பற்றிய பிறகு அக்பரின் உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் அடுத்ததாக அக்பருக்கு எந்தவிதத்தில் சிகிச்சை அளிப்பது எனக் குழம்பினார்கள் வைத்தியர்கள். அடுத்தாகக் கொடுக்கப்படும் சிகிச்சை உடல்நிலையைக் குணப்படுத்தாமல், இன்னும் மோசமடைய வைத்துவிட்டால் என்ன செய்வது என அவர்கள் தயங்கினார்கள்.

ஆனால் அந்த வயதிலும் அக்பர் சிறிதும் கலங்கவில்லை. ஹக்கீமை நான் பரிபூரணமாக நம்புகிறேன், அவருக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ அதை அவர் செய்யட்டும் என வெளிப்படையாக அறிவித்தார். உடல்நிலை மோசமடைந்து பலவீனமான பிறகும்கூட அரசு அலுவல்களில் ஈடுபட்டார். கோட்டையின் முதல் தளத்திலிருந்து மக்களுக்குத் தினமும் காட்சி கொடுத்து வந்தார்.

உடல் உபாதைகளால் அக்பர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்த அத்தனை நாட்களும் அவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார் 13 வயதான அவரது அன்புக்குரிய பேரன் குர்ரம். ஆனால் ஒருகட்டத்தில் உடல்நிலை படுமோசமடைந்து தன் அறைக்குள்ளேயே முடங்கிப்போனார் அக்பர்.

பாதுஷா பதவியைக் கைப்பற்ற அக்பருக்கு சலீம் விஷம் கொடுத்துவிட்டதாகவும், அக்பரைத் தீர்த்துக்கட்டி முகலாய அரியணையைக் கைப்பற்ற வேறு சிலர் முயற்சிசெய்து வருவதாகவும் புதிய புதிய வதந்திகள் கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் பரவ ஆரம்பித்தன.

இந்த வதந்திகளால் அதிகமாகப் பயந்துபோனார் குர்ரமின் தாய் மணி பாய். இந்தப் பிரச்னையில் குர்ரமுக்கு எதாவது ஆகிவிடுமோ என்று கலங்கிய மணி பாய், அவரைத் தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்தார். ஆனால் தாயின் அழைப்பை நிராகரித்தார் குர்ரம். தனக்கு என்ன நடந்தாலும் சரி, தாத்தாவுக்கு அருகிலேயே இருந்து அவரைக் கவனித்துக்கொள்வேன் என உறுதியாகத் தன் தாயிடம் தெரிவித்தார் அவர்.

அக்பர் மரணப்படுக்கையில் விழுந்துவிட்டதால், குஸ்ரௌவைப் புதிய பாதுஷாவாக அறிவிக்கும் முயற்சியில் களமிறங்கினார் மான் சிங். முகலாய அரசின் மூத்த அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் போட்ட மான் சிங், சலீமுக்குப் பதிலாக குஸ்ரௌவைப் புதிய பாதுஷாவாக அறிவிக்க அவர்களின் ஒத்துழைப்பைக் கேட்டார். ஆனால் மான் சிங்கின் கோரிக்கையைப் பிற முகலாய அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.

தந்தை உயிரோடு இருக்கும்போது அரியணையை மகனுக்குக் கொடுக்கும் நடைமுறை சாகடாய்-துருக் வம்சத்தில் கிடையாது. எனவே அந்த வழியில் வந்த முகலாய அரசக் குடும்பத்தின் பாரம்பரியத்தை மாற்றுவது தவறு என மான் சிங்கிடம் வாதிட்டு அவர்கள் வெற்றி பெற்றார்கள். புதிய பாதுஷாவாக சலீமை முன்னிருந்த அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தன் கருத்து நிராகரிக்கப்பட்டாலும் குஸ்ரௌவுக்காக இறுதியாக ஒருமுறை களமாடிப் பார்க்க முடிவு செய்தார் மான் சிங். சிறிய எண்ணிக்கையிலான வீரர்களை அழைத்துக்கொண்டு ஆக்ராவிலிருந்த முகலாயக் கருவூலத்தை அவர் கைப்பற்றச் சென்றார். ஆனால் அவருடைய உறவினரான ராம்தாஸ் கச்வாஹா, கருவூலத்தைச் சுற்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்தி மான் சிங்கின் முயற்சியை முறியடித்தார்.

வெளியே இத்தனை அமளி துமளிகள் நடந்துகொண்டிருந்தபோது ஆக்ரா கோட்டையில் இருந்த தன் அறைக்குள் முடங்கிக் கிடந்தார் சலீம். குஸ்ரௌவைப் புதிய பாதுஷாவாக அறிவிக்க ஒருதரப்பு முயன்றுகொண்டிருந்த செய்தி அவரை வந்தடைந்திருந்தது. இதனால் நேரடியாகச் சென்று அக்பரைச் சந்திக்க நினைத்தார் சலீம்.

ஆனால் அக்பருக்கு விஷம் கொடுத்ததாகத் தன் மீது பழி போடப்பட்டிருந்தால் எதற்கு வம்பு நினைத்து தன் அறைக்குள்ளேயே இருந்துவிட்டார் சலீம். மேலும் அந்தச் சூழ்நிலையில் யாரை நம்புவது என்று தெரியாமல் அவர் குழப்பத்தின் உச்சத்தில் இருந்தார்.

சலீமைப் புதிய பாதுஷாவாக அறிவிக்க முகலாய அதிகாரிகள் கூட்டத்தில் முடிவெடுத்த பிறகு, அவர்கள் அனைவரும் கையோடு வந்து தங்கள் முடிவை சலீமிடம் தெரிவித்தார்கள். அத்துடன் அவரது மகன் குஸ்ரௌவையும், அவருக்கு ஆதரவாக நடந்துகொண்டவர்களையும் தண்டிக்கக்கூடாது என்ற கோரிக்கையை சலீமிடம் முன்வைத்தனர். தான் பாதுஷாவாகப் போகும் செய்தியைக் கேட்டு அகமகிழ்ந்துபோன சலீம், அவர்களின் கோரிக்கைக்கு உடனடியாக ஒப்புக்கொண்டார்.

புதிய பாதுஷாவாக சலீம் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பரவ ஆரம்பித்ததும், அத்தனை நாட்களாக ஆக்ரா கோட்டையில் இருந்துவந்த இறுக்கம் தளர்ந்தது. ஒவ்வொருவராக சலீமைச் சந்தித்து வாழ்த்து கூற ஆரம்பித்தனர். அதில் சலீமுக்கு எதிர்த்தரப்பில் இருந்த மீர்சா அஜீஸ் கொக்கா, மான் சிங் உள்ளிட்டோரும் அடக்கம். முக்கியமாக அப்போது தன்னுடம் குஸ்ரௌவை அழைத்து வந்திருந்தார் மான் சிங்.

இதற்கு அடுத்தநாள் தந்தையைப் பார்க்கச் சென்றார் சலீம். சலீம் வந்திருக்கும் செய்தி அக்பரிடம் தெரிவிக்கப்பட்டது. கண்களை மெதுவாகத் திறந்து பார்த்த அக்பர், தன் வாளையும், தலைப்பாகையையும், அங்கியையும் சலீமிடம் கொடுக்கச் சொன்னார். அவற்றைப் பணிவுடன் பெற்றுக் கொண்ட சலீம், இறுதியாக ஒருமுறை அக்பரின் பாதங்களில் தன் தலையை வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு தன் மகன் குர்ரமை அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அக்டோபர் 26, 1605ஆம் வருடம் ஆக்ராவில் சூரிய அஸ்தமனத்துடன், அக்பரின் மரணமும் நிகழ்ந்தது. அக்ராவிலிருந்து மதுரா செல்லும் பாதையில் இருந்த சிகந்தரா என்னும் இடத்தில், யமுனை நதிக்கரைக்கு அருகே அக்பரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

0

அக்பருக்குப் பிறகு…

நவம்பர் 3, 1605ஆம் வருடம் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் புதிய பாதுஷாவாக `ஜஹாங்கீர்’ என்ற பெயருடன் 36 வயதில் அரியணையேறினார் சலீம். ஜஹாங்கீரை எதிர்த்து அவரது மகன் குஸ்ரௌ கலகத்தில் இறங்கினார். ஆக்ராவில் இருந்து கிளம்பி பஞ்சாபுக்குள் சென்று, லாகூரைக் கைப்பற்ற முயற்சி செய்தார் குஸ்ரௌ.

அக்பர் உயிரோடிருந்த வரை ஜஹாங்கீருக்குத் தன் மகன் குஸ்ரௌ மீது கோபம் இருந்தது. ஆனால் பாதுஷாவாகப் பொறுப்பேற்றதும், முன்பு குஸ்ரௌவுக்கு ஆதரவளித்து தனக்கு எதிராகச் செயல்பட்ட முகலாய அதிகாரிகள் அனைவரையும் மன்னித்தார் ஜஹாங்கீர். குஸ்ரௌவையும் அவர் மனதார மன்னித்தார்.

ஆனால் தந்தையுடன் சுமூகமாகச் செல்லாமல் கலகத்தில் இறங்கினார் குஸ்ரௌ. இத்தனை வருடகாலப் போராட்டத்துக்குப் பிறகு தனக்குக் கிடைத்த அரியணையை முன்வைத்து குஸ்ரௌ கலகத்தில் இறங்கியது ஜஹாங்கீரை ஆத்திரப்படுத்தியது. எனவே பஞ்சாபுக்குப் படையெடுத்துச் சென்ற ஜஹாங்கீர், குஸ்ரௌவைக் கைதுசெய்து அவரது கண்களைக் குருடாக்கினார். ஆத்திரத்தில் அதைச் செய்தாலும், மகனின் கண்களைக் குருடாக்கியதற்காக அதிகமாக வருத்தப்பட்டார் ஜஹாங்கீர்.

அக்பர் உயிரோடிருந்தபோது அவருக்குப் பிடிக்காத செயல்களைச் செய்துவந்த ஜஹாங்கீர், பாதுஷாவாகப் பொறுப்பேற்றதும் அக்பரின் மகன் என்பதைப் பல வழிகளிலும் நிரூபித்தார். இதற்கு உதாரணமாக ஒரே ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

பாபர் காலத்திலிருந்து முகலாயர்களுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வந்த மேவார் ராஜ்ஜியத்துடனான பகையை முடிவுக்குக் கொண்டு வந்தார் ஜஹாங்கீர். அதுநாள் வரை முகலாயர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சித்தூர் கோட்டையையும், அதைச் சுற்றி இருந்த பகுதிகளையும் அப்போதைய மேவார் ஆட்சியாளர் ராணா அமர் சிங்கிடம் திருப்பிக்கொடுத்தார் ஜஹாங்கீர். அக்பர் கடைபிடித்துவந்த ராஜபுத்திரக் கொள்கையை இவ்வாறு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் ஜஹாங்கீர்.

சிகந்தராவில் அக்பர் புதைக்கப்பட்ட இடத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல்லறையைக் கட்டி எழுப்பினார் ஜஹாங்கீர். மேலும் தான் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்யும்விதமாக அபுல் ஃபாசலின் மகன் ஷேக் அஃப்சல் கானை 1608ஆம் வருடத்தில் பீகார் மாகாணத்தின் ஆளுநராக நியமித்தார்.

ஒட்டுமொத்தமாக 22 வருடங்கள் ஆட்சிசெய்த ஜஹாங்கீரின் இறுதிக்காலத்தில், அவரது ராணிகளில் ஒருவரான நூர் ஜஹான் அரசு அதிகாரத்தைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தார்.

அக்பரின் ஆட்சிக்காலத்தில் பாரசீகத்திலிருந்து தஞ்சம் தேடி இந்தியாவுக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நூர் ஜஹானின் தந்தை கியாஸ் பெக். நூர் ஜஹானின் சகோதரர் அபுல் ஹாசனின் மகள் அர்ஜூமண்ட் பானுவைத் திருமணம் செய்துகொண்டார் ஜஹாங்கீரின் இரண்டாவது மகன் குர்ரம்.

தந்தை சார்பாகப் பல போர்களில் பங்கேற்று முக லாயப்படையைத் திறம்பட வழிநடத்திப் பல வெற்றிகளைக் குவித்தார் குர்ரம். 1627ஆம் வருடம் மரணமடைந்த ஜஹாங்கீர், அவரது ஆசைக்குரிய இடமான லாகூரில் நல்லடக்கம் செய்யப்பட்டார். பின்பு அங்கே சமாதி கட்டியெழுப்பப்பட்டது.

ஜஹாங்கீருக்குப் பிறகு அவரது இரண்டாவது மகன் குர்ரம், ஷாஜஹான் என்ற பெயருடன் அரியணையேறினார். தாத்தா அக்பரின் கணிப்புப்படி மிகச்சிறந்த ஆட்சியாளராக அவர் விளங்கினார். ஷாஜஹானின் அன்புக்குரிய மனைவி அர்ஜூமண்ட் பானு, பிரசவத்தின்போது ஏற்பட்ட அதிகப்படியான உதிரப்போக்கால் 1631ஆம் வருடம் உயிரிழந்தார்.

இந்த அர்ஜூமண்ட் பானுதான் உலகமே அறிந்த தாஜ்மஹாலில் புதைக்கப்பட்ட மும்தாஜ் பேகம்!

(முற்றும்)

பகிர:
ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.comView Author posts

1 thought on “அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்”

  1. உங்கள் வரலாற்று பயணம் செழீக்க வாழ்த்துகள்! தோழரே!

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *