Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #4 – சம்பாக் கோயிலில் தீண்டாமைச் சுவர்?

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #4 – சம்பாக் கோயிலில் தீண்டாமைச் சுவர்?

சம்பாக் கோயில்

பாதிரிக் கோயில் என்றழைக்கப்பட்ட சம்பாக் கோயில். இப்போது புனித ஜென்மராக்கினி மாதாகோயில் என்று அழைக்கப்படுகிறது. புதுச்சேரியின் புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்று. இக்கோயிலுக்கான அடிக்கல்லை 1691 ஏப்ரலில் அப்போதைய பிரெஞ்சு ஆளுநர் பிரான்சுவா மர்த்தேன் நாட்டினார். அடுத்த ஆண்டிலேயே இக்கோயில் வழிபாட்டிற்கு வந்தது. 1693இல் டச்சுக்காரர்களின் தாக்குதலில் இடிக்கப்பட்ட இக்கோயில், அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் எழுந்தது. இப்படியாக பல நேரங்களில் நான்குமுறை இடிக்கப்பட்ட சம்பாக் கோயில் 1792இல் நிலையாக நின்றது.

அதேபோல் இந்த ஆலயத்தில் பிரச்னைகளும் அவ்வப்போது எழுந்தது. குறிப்பாகப் பூசை கேட்க வரும் பறையர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஆலயத்துக்குள் சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. புதிதாகப் பொறுப்பிற்கு வந்த காரைக்கால் பாதிரியாரிடம் இதுபற்றி பறையர்கள் முறையீடு செய்தனர். ‘எல்லோரையும் ஒரே கண்ணால் பார்க்க வேண்டும். இறைவன் முன் அனைவரும் சமம் எனும்போது இந்தப் பாகுபாடு ஏன்?’ என்று கேள்வி கேட்டனர். இதன் நியாயத்தை உணர்ந்தப் பாதிரியார் ‘எல்லாரும் நமக்குப் பிள்ளைகள்தான்’ என்று சொல்லி அந்தச் சுவரை இடித்திருக்கிறார். ஆனாலும்கூட அடுத்தநாள் பூசைக்கு வந்த மற்றவர்கள், குறுக்காக நாற்காலியை வைத்து மறைத்தும் பிரித்தும் வைத்தனர்.

அதேபோல, பூசை கேட்க வந்த வசதி படைத்தப் பெண் ஒருவர், வாசனைத் திரவியங்கள் பூசிக்கொண்டும், மேனி தெரிகிற வகையில் சல்லாப் (மெல்லீசு) புடைவை கட்டிக்கொண்டும் வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாதிரியார், தன் கையிலிருந்த பிரம்பினாலே அந்தப் பெண்ணின் கொண்டையிலே குத்தி, ‘நீ பூசை செய்தது போதும். எழுந்திரு’ எனக் கோபித்துக் கொண்டார்.

மேலும், பூசைக்கு வரும் பெண்கள் எப்படி ஆடை அணிந்துவர வேண்டும், கொண்டை முடித்துவர வேண்டும், வாசனைத் திரவியங்கள் பூசக்கூடாது என்றெல்லாம் உத்தரவு போடுகிறார். இதனால் பாதிரியாருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மோதல் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

இதுபற்றியெல்லாம் ஆனந்தரங்கப் பிள்ளை தனது நாட்குறிப்பில் பின்வருமாறு பதிவு செய்கிறார்:

1745 ஒக்தோபர் 16 அற்பிசி 3 சனிவாரம் நாள்

காலமே எட்டுமணிக்கு, சம்பாக் கோவிலிலே நடந்த அதிசயமென்ன வென்றால், காரைக்கால் பாதிரியாரிடத்துக்கு வந்தவர் யோசனை பண்ணி, கோவிலுக்குள்ளே வடவண்டை பக்கத்திலே குறுக்கே சுவர் வைத்து அந்தச் சுவருக்கு இப்புறம் பறையர் வந்து பூசை கேட்கவும், அப்புறத்திலே கிறிஸ்துவர் சட்டைக்காரர், வெள்ளைக்காரர் எல்லாரும் ஒருமிக்க வந்திருந்து பூசை கேட்கவும் இப்படியாக முன்னாலே தமிழ்க் கிறிஸ்துவர் இந்தப்படி ஒரு அத்துபண்ணி நாளது வரைக்கும் அந்தப்படிக்கு நடந்து வந்ததைக் காரைக்கால் பாதிரியார் இவ்விடத்திலே யிருக்கப்பட்ட சிஷ்யாக்கள் பண்ணிப்பறைச்சேரி பறையர், பெரிய பறைச்சேரி பறையர், சுடுகாட்டுப் பறைச்சேரி பறையர், உழந்தைப் பறைச்சேரிப் பறையர் பின்னையும் இருக்கப்பட்ட சிஷ்யாக்களாகிய பறையர், தோட்டிகள் அனைவரையும் எடுத்துவிட்டு அவர்களெல்லோருமாய் வந்து குருவாயிருக்கப்பட்ட பெரிய சுவாமியார் கிரேஷ்டருடனே சொல்லிக்கொண்ட தென்னவென்றால்,

‘உங்களுக்கு சிஷ்யாக்கள் என்றால் எல்லாரையும் ஒரு கண்ணினாலே பார்க்க வேணும். நாங்கள் வந்து சுவாமியினிடத்திலே சகல பணிவிடை ஊழியமும் செய்யத்தக்கதாகச் சுவாமியாரவர்கள் கிருபை பண்ணியிருக்க, தமிழ்க் கிறிஸ்துவர் எங்களைப் புறம்பாய் தள்ளிவைத்ததாகவும் நீங்கள் அதற்கு உத்தாரங் கொடுத்துக் கொண்டு பாரபக்ஷமாய் எங்களைப் புறம்புபண்ணக் காரியமென்ன’ வென்கிறதாய் கும்பல்கூடி பேசுகிறவிடத்திலே பாதிரியார் சிரேஷ்டவர்களும் நியாயமென்றுதானே ஒத்துக்கொண்டு, அந்நேரமே அந்தக் குறுக்குச் சுவரை இடித்துப்போட்டு எல்லாரும் நமக்குப் பிள்ளைகள்தான். நீங்கள் சம்மதியானபடிக்குக் கூட வந்திருந்து பூசை கேட்கலாமென்று சொல்லி அவர்களுக்கு ஆசீர்வாதம் பண்ணிப்போகச் சொன்னார்கள்.

இற்றைநாள் சாயங்காலம் கிறிஸ்துவர் அவர்கள் வீட்டுப் பெண்டுகள் கூட பூசை கேட்கிறவிடத்திலே இன்றைய தினம் பறையர், சட்டைக்காரர், வெள்ளைக்காரர், தமிழர் அனைவரும் கூடத்தானேயிருந்து பூசை கேட்கிறவிடத்திலே கனகராய முதலியார் உடன்பிறந்தான் குமாரன் ஆசாரப்ப முதலியார் பெண்சாதி செல்வத்துடனே இருக்கிற படியினாலே அந்தப் பெண் அவர்கள் சாதியிலே இடவேண்டிய உடமையெல்லாம் தரித்துக் கொண்டு பரிமள சுகந்தத்துடனே துலாம்பரமாயிருக்கப்பட்ட சல்லாப் புடவையைக் கட்டிக்கொண்டு, சுவாமிக்கு அடுத்தாற்போலே யிருக்கப்பட்ட சிரேஷ்டராயிக்கிற பாதிரியாரண்டையிலே போய் முட்டிக்காலின் பேரிலேயிருந்து கொண்டு, தேகத்தியானமாய்ப் பூசை கேட்கிற விடத்திலே,

அந்தச் சுகந்த பரிமள சுகந்தத்தினுடைய வாசனை பாதிரியார் மேலே பட்டவுடனே அவர் பூசை சொல்லுகிறதை விட்டுவிட்டு மூக்கைப் பிடித்துக் கொண்டு கையிலே யிருக்கிற பிரம்பினாலே கொண்டையிலே குத்தி, நீ கலியாணக்காரி அல்லவா, நீ தேவடியாளா, உன்னுடைய புருஷனுக்கு வெட்கமில்லையா, சரீரம், மார்பு, ரோமத்துவாரமெல்லாம் தெரியத்தக்கதாகச் சல்லாப் புடவையைக் கட்டிக்கொண்டு கோவிலுக்கு வருவார்களா புண்ணியவதீ. நீ பூசை செய்தது போதும். எழுந்திருந்து வீட்டுக்குப் போ.

1745 ஒக்தோபர் 16 அற்பிசி 3 சனிவாரம் நாள்

சம்பாக் கோவிலிலே நடந்த அதிசயம் கடுதாசியிலே எழுதப்பட்டதுபோக மற்றது இந்தக் கடுதாசியிலே எழுதின வயணம்.

…என்கிறதாகக் கோபித்துக்கொண்டு போகச் சொல்லிவிட்டார். அதன் பேரிலே கிறிஸ்துவர் எல்லாரையும் அழைத்து இனிமேல் பெண்டுகள் ஒருத்தரும் மெல்லீசுப் புடவை கட்டத்தேயில்லை என்றும், உடமைகள் தமிழரைப்போலே இடப்போகாதென்றும், எப்போதும் போலே கொண்டை முடிக்கப் போகாதென்றும், சட்டைக்காரிச்சிகள் போலே கொண்டை முடிக்கச் சொல்லியும், வாசனை பரிமளத் திரவியம் பூசப்போகாதென்றும், இந்தப்படிக்குத் திட்டப்படுத்தி நடந்துகொள்ளச் சொல்லி பாதிரியார் சொன்னார்.

அதன்பேரிலே கிறிஸ்துவர் எல்லாரும் கும்பல்கூடிக் கொண்டு கோவிலுக்குப் போய் பாதிரியாருடனே தற்கித்துப் பேசுகிறவிடத்திலே கெவுனி வாசல் முதலிலிருந்து கொண்டு எப்போதும் நடந்தபடி நடக்கிறதே அல்லாமல் நூதனமாய் நீங்கள் இப்படிச் சொன்னால் அது எங்களவருக் கொருத்தருக்கும் சம்மதிப்படவில்லை என்று எதிர்த்துச் சொன்னார். நீங்கள் எங்களுடனே எதிர்த்துப் பேசலாமா என்று பிடித்துத் தள்ளவும் அவர் போய் பாதிரியார் சட்டையை பிடித்திழுத்து விஷயங்கள் ஏறக்குறையப் பேசி, இனிமேல் நாங்கள் உங்களுடைய கோவிலுக்கு வருகிறதில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

இப்புறம் வந்து எல்லாரும் கும்பலாய்க் கூடிக்கொண்டு கனகராய முதலியாருடனே சொல்லிக்கொண்டார்கள். அதின்பேரிலே அவர் தெரியச்சொல்லி, நல்லது எப்போதும் போலேதானே அவர்களுக்குச் சம்மதியானதுக்கு இருக்கச் சொல்லி உத்தாரங் கொடுத்துப் போகச் சொல்லிவிட்டுப் பாதிரிகள் போய் துரையவர்களுடனே சொல்லிக் கொண்டதென்ன வென்றால்,

கிறிஸ்துவர்கள், நாங்கள் சொன்னபடி கேளாமல் அத்துமீறி சரிபோன படியினாலெல்லாம் பேசி கும்பலாக் கூடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தாக்கீது பண்ணிக் கோவிலுக்கு வரத்தக்கதாகச் செய்யவேணும் என்று சொல்லிக் கொண்டதின் பேரில் துரையவர்கள், தளவாய் கிரிமோசி பண்டிதரை அழைத்து, கிறிஸ்துவர் யாதொருத்தராகிலும் நாலு பேராய்க் கூடிப்பேசிக் கொண்டிருக்கிறது கண்டால் பிடித்துக்கொண்டு போய்க் காவலிலே வைக்கச் சொல்லி உத்தாரங் கொடுத்தார்கள். அந்த மட்டிலே கும்பல் கூடாமல் அவரவர் இதைத் தனித்தே யிருந்தார்கள்.

1745 ஒக்தோபர் 17 அற்பிசி 4

சிறிதுபேர் கோவிலுக்குப் போனார்கள். பறையர் வந்திருக்கிறதற்குக் குறுக்கே நாற்காலியை மறைத்து வைத்துப் பிரித்து அடைத்து வைத்தார்கள். பின் என்னமாய் நடக்குமோ தெரியாது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

1 thought on “ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #4 – சம்பாக் கோயிலில் தீண்டாமைச் சுவர்?”

  1. இ.தினேஷ்கண்ணா

    இந்து சமயத்தில் தான் இப்படி பிரச்சினைகள் இருக்கிறது என்றால் மற்ற சமயங்களிலும் இப்படி பிரச்சினைகள் இருந்திருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்புகள்.
    இதை நான் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கிறிஸ்தவ கோவிலை கடந்து கொண்டிருந்தேன்

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *