பொ.யு. 300 முதல் பொ.யு. 550 வரையிலான காலகட்டத்தைத் தமிழக வரலாற்று அறிஞர்கள் களப்பிரர் காலம் என வரையறுத்துள்ளனர். இக்காலகட்டத்தைச் சேர்ந்த, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகேயுள்ள பூலாங்குறிச்சி கல்வெட்டு மற்றும் இலக்கியங்கள் வாயிலாக இம்முடிவை அவர்கள் எட்டியுள்ளார்கள்.
4ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் புத்ததத்தர் எனும் பௌத்த அறிஞர் சோழநாட்டில் வசித்தார். இவரது ‘அபிதம்மாவதாரா’ எனும் நூல் புகார் நகரம் குறித்துக் கூறுகிறது. வட இந்தியாவின் பர்ஹுத் (Barhut) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொ.யு.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராகிருதக் கல்வெட்டில், காவிரிப்பூம்பட்டிணம் (புகார்) பற்றிய ஆரம்பகால குறிப்பு காணப்படுகிறது. ‘காகந்தி’ நகரத்தைச் சேர்ந்த ‘சோமா’ என்கிற பௌத்தத் துறவி, ஒரு ஸ்தூபியின் சுற்றுச்சுவருக்காக ஒரு கல் பலகையைத் தானமாக வழங்கியதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. புகாரின் பழைய பெயர்களில் ஒன்றான காகந்தி, மணிமேகலையில் காணப்படுகிறது.
அச்சுத விக்கந்தன் என்கிற அரசரின் காலத்தில் அமைதியான ஒரு மடத்தில் தங்கியிருந்து, ‘அபிதம்மவதாரா’ நூலை புத்ததத்தர் இயற்றினார். புகார் நகரின் பல்லவனம் எனும் இடத்தில் தொல்லியல்துறையினர் அகழாய்வில் ஈடுபட்டபோது, பொ.யு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடமும் ஏராளமான தொல்லியல் சார்ந்த பொருட்களும் கிடைத்துள்ளன. சோழநாட்டைக் களப்பிரர் ஆட்சிசெய்ததற்கு இதுவே முதல் சான்று. இதுதவிர, வேறு சில இலக்கியச் சான்றுகளையும் ‘சேந்தன் கூற்றன்’ என்கிற அரசரின் கல்வெட்டையும் களப்பிரர் காலத்துக்கான முதன்மைச் சான்றுகளாக எடுத்துக்கொள்ளலாம்.
களப்பிரர் ஆட்சி நடைபெற்றதாகக் கருதப்படும் சுமார் 250 ஆண்டுகள் (பொ.யு. 300-550) தமிழகமெங்கும் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியரின் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. கடைசியாகக் கரூர் மாவட்டம் புகழூரில் பொ.யு. 2–3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர்களின் கல்வெட்டு கிடைத்தது. சங்ககால அரசர்களின் இறுதித் தடம் இதுவாகும். அதன்பின் சுமார் 250 ஆண்டுகள் தமிழகமெங்கும் ஆங்காங்கே சீறூர்த் தலைவர்களின் கல்வெட்டுகளே கிடைத்துள்ளன. இந்தக் களப்பிரர் கால கல்வெட்டுகளில் முக்கியமானவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.
1. அம்மன் கோவில்பட்டி தமிழி
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் ஓமலூர்–தாரமங்கலம் சாலையில் அம்மன் கோவில்பட்டி உள்ளது. இவ்வூரின் பெருமாள் கோயில் பாறையில் அமைந்த சுனைக்கு அருகில் பிற்காலத் தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.
தமிழி கல்வெட்டுகள் பொதுவாகப் படுக்கைகள் மற்றும் குகைத்தளங்களில் காணப்படும். ஆனால் அம்மன் கோவில்பட்டியிலுள்ள சமதளப் பாறையில் காணப்படும் இந்தக் கல்வெட்டு இப்பகுதி மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்ததற்குச் சான்றாக இருக்கிறது. சங்க இலக்கியத்தில் பல இடங்களில் ‘கிழான்’ எனும் சொல் இடம்பெற்றிருந்தாலும், கல்வெட்டில் முதன்முதலாக ‘கிழான்’ என்பது இடம்பெறுவது இங்குதான்.
இரண்டு வரிகளில் மட்டுமே இருக்கும் இக்கல்வெட்டு, சுனைக்கு வடியும் மழைநீர் மற்றும் வெயில் காரணமாகத் தேய்ந்துள்ளது. இக்கல்வெட்டின் எழுத்தமைவுகொண்டு இது சுமார் பொ.யு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறலாம்.
‘பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன்
கோபன் கணதேவன் தொட சுனை’ என்பது இக்கல்வெட்டு வாசகம்.
கணதேவன் என்பதில் ‘ண்’ மெய் சேர்த்து கண்ணதேவன் என்றும் ‘தொட’ என்பதில் ‘ட்’ மெய் சேர்த்து ‘தொட்ட’ என்றும் கொள்ளவேண்டும். பரம்பன் கோகூர் என்கிற ஊரின் கிழாரின் மகன் வியக்கன் கோபன் கண்ணதேவன் இந்தச் சுனையைத் தோண்டினான் என்பது இக்கல்வெட்டின் பொருள். ‘கோகூரின் கிழாரான பரம்பன்’ என்றும் அந்தத் தந்தையின் பெயரைக் கருத இடமுள்ளது.
‘குளம் தொட்டு வளம் பெருக்கி’ என்கிற பட்டினப்பாலை வரியும் (பட்டின. 284), ‘தொட்டனைத் தூறும் மணற் கேணி’ என்கிற குறளும் இக்கல்வெட்டில் வரும் தொட (தொட்ட) என்கிற வினைச் சொல்லை நினைவுபடுத்துகின்றன. ‘ஊழ்படு பாறை நெடுஞ்சுனை’ என்கிற அகநானூற்றுப் பாடல் (அகம் 2:34) தொன்மையான பாறையில் அமையும் சுனையைக் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.
2. நெகனூர்ப்பட்டி தமிழி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள நெகனூர்ப்பட்டி ஊரில், (இங்குள்ள மக்கள் வழக்கில் அழைக்கப்படும்) அடுக்குப்பாறை என்கிற சிறிய பாறைக்குன்றின் விளிம்பில், சதுர வடிவக் கட்டம் கட்டி, அதற்குள் நான்கு வரிகளில் தமிழி கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
‘பெரும் பொகழ்
சேக்கந்தி தாயியரு
சேக்கந்தண்ணி செ
யி வித்த பள்ளி’ என்பது இக்கல்வெட்டின் வாசகம்.
பெரும் பொகழ் என்கிற ஊரைச் சேர்ந்த சேக்கந்தி என்பவரின் தாயார் சேக்கந்தண்ணி என்பவர் இந்தப் பள்ளியைத் தோற்றுவித்தார் என்பது இதன் பொருள். இவ்வூருக்கு அருகே பெரும்புகை என்றொரு ஊர் உள்ளது. அங்குள்ள குன்றிலும் கற்படுக்கைகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில் கூறப்படும் பெரும்பொகல் இன்றைய ‘பெரும்புகை’யாகவும் இருக்கலாம். இக்கல்வெட்டு பொ.யு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
3. விழுப்புரம் ஏரிக் கல்வெட்டு
விழுப்புரம்-செஞ்சி சாலையில் விழுப்புரத்திலிருந்து வடக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ள ஏரியில் தலைமடைக்கு முன்பு நடப்பட்டுள்ள பலகைக் கல்லில் பொ.யு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு உள்ளது.
பிரையகம் யெறிந்த
க் கால்லப் போருட்ப
ட்டான் தெருக்கால்(லா)
ரு மகன் நீலகண்ட (ரைச)
ன் கல்
இக்கல்வெட்டு ஆரம்பகால வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டில் அரசன், ஆட்சி ஆண்டு போன்ற விவரங்கள் ஏதும் இல்லை. மெய்யெழுத்துகளுக்குப் புள்ளிகள் இடப்பட்டுள்ளன. எறிந்தக்கால் என்பது மொழி முதலில் யகரம் பெற்று ‘யெறிந்தக்கால்’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வரியில் ‘எறிந்தக்கால் அப்போருட்’ என்பதில் லகரம் இரட்டித்து வந்துள்ளது. பலகைக் கல்லின் வலது பக்கம் சிதைந்துள்ளதால் சில எழுத்துகள் மறைந்துவிட்டன. தெருக்கால் என்பது ஊரின் பெயராக இருக்கலாம். தமிழியிலிருந்து வட்டெழுத்தாக மாறும் தொடக்க நிலை வட்டெழுத்துக்களில் அமைந்துள்ள பழைய கல்வெட்டாக இதைக் கருதலாம்.
4. சாத்தனூர் நடுகல்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூரை அடுத்த மல்லிகாபுரத்தில் பொ.யு. 4ஆம் நூற்றாண்டு கால நடுகல் ஒன்றுள்ளது. சுமார் ஓர் அடி உயரம் மற்றும் அகலம்கொண்ட இந்தச் சிறிய நடுகல் கல்வெட்டில் 5 வரிகள் இடம்பெற்றுள்ளன.
கருங்காலி நல்
லு ரான் பூயலு
ட் கண்ணந்தைகண் மக
ன் விண்ணன் ஆ
ன் பூயலுட் பட்டான்
‘கருங்காலி நல்லூ(ரான்) கண்ணந்தைகண் மகன் விண்ணன் ஆன் பூயலுட் பட்டான்’ என்று இதில் எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள், ‘கருங்காலி நல்லூரைச் சேர்ந்த கண்ணந்தைகண் மகன் விண்ணன் என்பவன் சங்க இலக்கியங்களில் வரும் ஆநிரை (ஆன் பூயலுட் பட்டான்) கவரும் வெட்சிப் போரில் ஈடுபட்டு இறந்ததன் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் இது’.
இதில் குறிப்பிடப்படும் கருங்காலி நல்லூர் என்பது இவ்வூருக்கு அருகில் செங்கம் வட்டத்தில் உள்ள கருங்காலிப்பாடியைக் குறிப்பதாக இருக்கலாம். விண்ணன் என்ற பெயர் பெருங்களத்தூர் உள்ளிட்ட சில கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டிலுள்ள பூயல் என்பது பூசல் என மாறிவிட்டது தொல்காப்பியத்தின் வெட்சித்திணையில் பூசல் என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பூயல் என்பது காலத்தால் முற்பட்ட சொல் – நாட்டார் வழக்காறாக இருந்திருக்கவேண்டும். கன்னடக் கல்வெட்டுகளில் ‘புய்யல்’ என்பது மாடுபிடி சண்டையைக் குறிக்கும்.
இந்நடுகல் கல்வெட்டு பல வகைகளில் சிறப்புப் பெற்றதாகும். தமிழகத்தில் கிடைத்த தொன்மையான நடுகல்லில் இதுவும் ஒன்று. இது, தமிழ் எழுத்து வடிவம் தமிழி எழுத்திலிருந்து வட்டெழுத்து வரிவடிவமாக மாற்றமடையும் காலத்தைச் சேர்ந்தது. மேலும் சங்ககால புலிமான்கோம்பை, பொற்பனைக்கோட்டை, தாதப்பட்டி, நடுகற்களைப் போன்று இந்த நடுகல்லும் வீரனின் உருவமில்லாமல் அமைந்துள்ளது. எந்த அரசர்களின் பெயரும் இந்நடுகல்லில் இடம்பெறவில்லை.
5. கோழிப்போர் நடுகற்கள்
பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலகாலும்
காய்ந்தும்வாய்க் கொண்டும் கடுஞ்சேவல் – ஆய்ந்து
நிறக்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப்
புறங்கண்டும் தான்வருமே போர்க்கு
புறப்பொருள் வெண்பாமாலையில் சேவற்சண்டை குறித்து இடம்பெற்றுள்ள பாடல் இது. இன்று நாம் ஆண்கோழியைச் சேவல் என்று கூறுகிறோம். அன்று சேவல் மற்றும் பெட்டைக்கோழிகளைப் பொதுவான சொல்லில் ‘கோழி’ என்றே அழைத்தனர். பெண்கோழியை ‘அளகு’ என்றும் சேவல்களைச் சண்டையில் ஈடுபடுத்தும் நபர்களை ‘வித்தகர்’ என்றும் குறிப்பிட்டனர். கோழிச்சண்டையின் நுட்பங்களை விளக்கும் ‘கோழிநூல்’ பிற்காலத்தில் அழிந்துபோனது. இந்நூலிலிருந்த பல மேற்கோள்கள் பல இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் அரசலாபுரம் மற்றும் இந்தளூர் கிராமங்களில் பொ.யு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய சேவல் நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அரசலாபுரம் கல்வெட்டு
‘முகையூரு மேற்கே
ரிகு யாடிக
ருகிய கோழி’
முகையூர் என்கிற ஊரின் மேற்சேரியில் நடந்த சேவல் சண்டையில், சேவல் இறந்துபோனது என்பது இதன் பொருள். இக்கல்வெட்டு தற்போது பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தளூர் கல்வெட்டு
‘கீழைச்சேரி கோழி
பொற்கொற்றி’
6. அரச்சலூர் கல்வெட்டு
ஈரோடு மாவட்டம் ஈரோடு-காங்கேயம் சாலையில் அமைந்துள்ள அரச்சலூரை ஒட்டியுள்ள நாகமலையில், ஆண்டிப் பாறை என்றழைக்கப்படும் இடத்தில் இயற்கையான குகைத்தளமும் கற்படுக்கைகளும் உள்ளன. கற்படுக்கைகளுக்கு இடையே சிறப்பான மூன்று இசைக் கல்வெட்டுகள், பிற்காலத் தமிழ்-பிராமி எழுத்தில் உள்ளன. 1960இல் புலவர் இராசு இக்கல்வெட்டுகளைக் கண்டறிந்தார்.
கல்வெட்டு 1
எழுத்தும் புணருத்தான் மலைய்
வண்ணக்கன் தேவன் சாத்தன்
மலை வண்ணக்கனான தேவன் சாத்தன் (இசை) எழுத்துகளைச் சேர்த்தமைத்தான் என்பதே இதன் பொருள். கற்படுக்கைகளுக்கு இடையே இரண்டு வரிகளில் இடம்பெற்றுள்ள இக்கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. இந்த இருவரிகளிலும்கூட சில எழுத்துகள் உடைந்துள்ளன. இதன் காலம் ஏறத்தாழ பொ.யு. 4ஆம் நூற்றாண்டு.
கல்வெட்டு 2
த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த
முதல் கல்வெட்டின் இடதுபுறம் 5 வரிகளிலான இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலமும் பொ.யு. 4ஆம் நூற்றாண்டு.
இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துக்கள் பண்ணமைப்புடன் கூடிய தாள மாத்திரைகளாகும். இச்சதுரத்தில் இடம்பெற்றுள்ள ‘அடவு’ எனப்படும் இசைத்தாள எழுத்துகள் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக, கீழிருந்து மேலாக, மேலிருந்து கீழாக என எப்படிப் படித்தாலும் ஒன்றுபோல் அமைந்துள்ளதைக் காண முடியும்.
இந்த இசைத்தாள இரண்டாம் கல்வெட்டில் எழுத்துகளைப் பொறித்தவனின் பெயர்தான் முதலாம் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. இதன் வழியாக இசைத்தாள எழுத்துகளை அமைக்கும் இலக்கணத்தைத் தமிழர்கள் நன்கு அறிந்துள்ளதைப் புரிந்துகொள்ளலாம்.
இசை எழுத்துக் குறிப்புகள் பற்றி தன்னுடைய சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் குறிப்பிட்டுள்ளார். ஆயப்பாலை என்பது இசை எழுத்துகளின் மொத்தத் தொகுதியாகும். இசை எனும் சொல் இயை என்கிற வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது. ‘இயையே புணர்ச்சி’ எனத் தொல்காப்பியம் கூறுகிறது. எனவே இசைத்தல் என்பது பொருந்துதல், ஒன்றுதல், இணைதல் ஆகிய பொருள்களைத் தரும் சொல்லாக உள்ளது. இசைக்குரிய அடிப்படை அலகினைச் ‘சுரம்’ என்று கூறுவர். சுரத்தை ‘நரம்பு’ என்று குறிப்பர். சுர வரிசையைக் ‘கோவை’ என்பர்.
ஆயப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை எனக் கோவை நான்கு வகைப்படும். ஆயம் என்பது இங்கு தொகுதியாகிய பன்னிரண்டு என்பதைக் குறிக்கும். ஆயப்பாலை என்பது பன்னிரு ராசிகளை வீடுகளாக அமைத்து, அவ்வீடுகளைச் சுரங்களாக அமைத்தலாகும். வட்டப்பாலை என்பது ஒவ்வொரு ராசி வீடும் இரண்டு பகுதியாகப் பிரிந்து இருபத்தி நான்கு நிலைகளைப் பெறுவதாகும். திரிகோணப்பாலை என்பது ஓர் அலகு இரண்டாகப் பிரிந்து அரை அலகாக வழங்குவதாகும். சதுரப்பாலை என்பது அரை அலகு சுரம், கால் அலகாகப் பிரிந்து நுண்ணிசையைத் தருவதாகும்.
அறச்சலூர் கல்வெட்டில் காணப்படும் இசை எழுத்துத் தொகுப்பைச் சதுரப்பாலை வடிவாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்விதம் ஆயம் என்பது அரைச்சுர இசை, வட்டம் என்பது காற்சுர இசை, திரிகோணம் என்பது அரைக்கால்சுர இசை மற்றும் சதுரம் என்பது வீசம் (1/16) அளவுகொண்ட இசையாகும். இவ்வளவு தொன்மைமிக்க இந்த இசை வடிவம் தமிழகத்தில் இன்றும் பின்பற்றப்படுகிறது.
7. வி. நெற்குணம் நடுகல் கல்வெட்டு
[தோர்]
மகன் நெற்குந்
றங்கிழான்
மரையமான் யிளமகன்
ஒரு சோலையுள் பொருதுபட்டார்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்தில் உள்ள வி. நெற்குணம் கிராமத்தில் கண்டறியப்பட்ட இந்த நடுகல் கல்வெட்டு, பொ.யு. 5ஆம் நூற்றாண்டில் நெற்குன்றத்தைச் சேர்ந்த கிழான் மறையமானின் சேவகன் அவ்வூரில் நிகழ்ந்த போர் ஒன்றில் இறந்ததன் நினைவாக எழுப்பப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
8. ஈரெட்டி மலை நடுகல் கல்வெட்டுகள்
ஈரோடு மாவட்டம் பர்கூருக்கு அருகே ஈரெட்டி மலை உள்ளது. லிங்காயத்து மரபினர் வணங்கும் பைரவர் கோவில் ஒன்று இங்கு இருக்கிறது. பொ.யு. 4-5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன்கூடிய இரு நடுகற்கள் உள்ளன.
கல்வெட்டு 01
துற கையுள்
ளாரு கல்
கல்வெட்டு 02
கரு மதச்
சாத்தன்
கல்
9. பறையன் பட்டு நிசீதிகை கல்வெட்டு
நிசீதிகை எனும் உண்ணாநோன்பு
சமண மதத்தின் முக்கிய கொள்கைகளில் சல்லேகனை விரதமும் ஒன்றாகும். இது உண்ணாநோன்பிருந்து உயிர்துறக்கும் வழிமுறை. இவ்விரதம் மேற்கொள்வோர் தம் குருவிடம் உத்தரவைப் பெற்று, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தைச் சரியாகத் தேர்ந்தெடுத்து, அவ்விடத்தின் மீது தர்ப்பைப் புல்லைப் பரப்பி, அதன்மேல் வடக்கு திசை நோக்கி அமர்ந்து விரதம் மேற்கொள்வர். ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில நாட்களுக்குத் திரவ உணவை உட்கொள்வர், அதன்பிறகு தண்ணீர் மட்டுமே அருந்துவர். இதற்கு அடுத்த நிலையில் தண்ணீரும் அருந்தாமல் விரதம் மேற்கொள்வர்.
தொடக்கத்தில் புற்களின்மேல் நடக்கலாம், அமரலாம். இறுதிநிலையை அடையும்போது கைகால்களை அசைக்காமலிருந்தபடி உயிர் துறப்பர். இந்த விரதமுறையைக் குறிக்கும் ‘சல்லேகனை’ எனும் சொல் பின்னாளில் வந்தது. ஆரம்பத்தில் ஆராதனை, நிசீதி, பஞ்சநமஸ்காரம் என்றெல்லாம் இது குறிப்பிடப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ‘வடக்கிருத்தல்’ வழக்கமே சல்லேகனையாக வந்திருக்கக்கூடும் என்கிற கருத்தும் உண்டு. சங்ககால அரசன் கோப்பெருஞ்சோழன் தொடங்கி நாட்டுப்புற நாயகன் பொன்னர் வரையில் பலர் வடக்கிருந்து உயிர்விட்ட சான்றுகள் உள்ளன.
நீலகேசி எனும் சமணப்பெண்மணி, குண்டலகேசி எனும் பௌத்த பெண்மணியிடம் வாதிட்டு வெற்றி பெறுவதாக அமைந்ததே ஐங்குறுங் காப்பியங்களில் ஒன்றான ‘நீலகேசி’. முகமலர்ந்து விரும்பியேற்கும் மரணத்தைத் ‘தற்கொலை’ என்றே ‘குண்டலகேசி’ கூறுகிறது. இந்தக் கருத்தை மறுத்து, உடம்பாகிய சிறையிலிருந்து உயிர் விடுதலையடைய இவ்விரதம் (சல்லேகனை) உதவுகிறதென ‘நீலகேசி’ கூறுகிறது. குறிப்பாக, இவ்விரதம் இருப்போர் பிறவாநிலையை அடைவோர் என ‘நீலகேசி’ குறிப்பிடுகிறது.
ஒடிஷாவில் உள்ள கலிங்க அரசன் காரவேலனின் உதயகிரி கல்வெட்டு, (பொ.யு.மு. முதலாம் நூற்றாண்டு) சமண முனிவர்களின் இருக்கைகளை நிசீதியா என்று குறிப்பிடுகிறது.
பறையன்பட்டு நிசீதிகை
விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில், இரண்டு குன்றுகள் காணப்படுகின்றன. அதில் இரண்டாவது குன்றின் உச்சியில் முருகர் கோயில் அமைந்துள்ளது. அந்த முருகர் கோயிலைக் கடந்து செல்லும்போது ஓர் அரிய பழமையான வட்டெழுத்து நிசீதிகை கல்வெட்டு காணப்படும். அது பின்வருமாறு,
நமோத்து பாணாட்டு வ (ச்)
சணந்தி (ஆ) சாரி (ய)
ர் மணாக்க ராராதனி
நோற்று (மு)டித்த (நி)
சீதிகை
பாண நாட்டைச் சேர்ந்த வச்சணந்தி என்கிற ஆசிரியரின் மாணவனான ஆராராதன் என்பவர் உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த நிசீதிகை (இடம்) என்கிற செய்தி இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொ.யு. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
(தொடரும்)

