Skip to content
Home » அரிய கல்வெட்டுகள் #7 – கல்வெட்டுகள் கூறும் அற்புதங்கள்

அரிய கல்வெட்டுகள் #7 – கல்வெட்டுகள் கூறும் அற்புதங்கள்

மருத்துவர்களால் போக்கமுடியாத நோய் பாதிப்பை இறைவனால் போக்க முடியும் என்கிற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. தமிழ்நாட்டின் திருத்துறைப்பூண்டி மற்றும் திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் என்கிற பெயரில் சிவ தலங்கள் உள்ளன. வைத்தியர்களால் நீக்க இயலாத அப்பரின் குலைநோய், இறைவன் திருநீற்றால் நீங்கியதைப் பக்தி இலக்கியத்தின் வாயிலாக அறியலாம்.

தற்காலத்தில் குழந்தைப் பேறின்மை, நீரிழிவு நோய், இதய நோய் போன்ற குறைபாடுகளுக்காகக் கோவில்களில் பரிகாரம் செய்யுமாறு நிமித்தகர்கள் கூறுவதுண்டு. இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இத்தகைய நேர்ச்சை நிகழ்வுகள் நடந்துள்ளதைச் சில கல்வெட்டுகள் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன. குடிமக்கள் மட்டுமின்றி சில அரசர்கள், சீறூர்த் தலைவர்கள், நாடுகாவல் அதிகாரிகள் போன்றோரும் இந்நம்பிக்கைக்கு விதிவிலக்கல்ல. அவ்வாறு சில தேவைகளுக்காக நேர்ந்துகொண்டு, பிறகு அத்தேவைகள் நிறைவேறியதும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளைக் காண்போம்.

பிள்ளை வரம் அளித்த திருவாலீஸ்வரர்

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் திருவாலீஸ்வரர் கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அப்பகுதியை ஆண்ட சிற்றரசரான சுத்தமலன் செயங்கொண்ட சோழ வன்னாடுடையார் என்பவருடன் தொடர்புடையது. தனக்குப் பிள்ளைப் பேறு இல்லாததால், ஒருநாள் திருவாலீஸ்வரமுடைய நாயனார் திருப்பாதங்களில் விழுந்து வணங்கி பிள்ளை வரம் அருளும்படி அவர் வேண்டிக்கொண்டார். தனக்குப் பிள்ளை பிறந்தால் இறைவனுக்குப் பொன்னால் பட்டம் செய்து சாத்துவதாக அவர் நேர்ந்துகொண்டார்.

இறைவனருளால் சுத்தமலனுக்கு பிள்ளை பிறந்தது. எனவே நேர்ந்துகொண்டபடி, திருவாலீஸ்வரருக்கு பொன்பட்டம் சாத்த, தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட புகழறை பூண்டி என்கிற ஊர் முழுவதையும் அவர் காணியாகக் கொடுத்தார். இந்தத் தானத்தையே அவர் கல்வெட்டாகவும் வெட்டியுள்ளார். பிள்ளை வரம் வேண்டுவோர், இத்தலத்து ஈசனை வணங்கினால் நன்மை பயக்கும் என்பதற்குச் சுத்தமலனே சாட்சி.

கல்வெட்டு

1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவற்கு யாண்டு இருபத்தொன்பதாவது வடகரை கரிகா
2. ல கன்ன வளனாட்டு வன்னாட்டு வாலிகண்டபுரத்து உடையார் திருவாலீஸ்வரமுடைய னாயனா
3. ற்கு இன்னாடு காணிஉடைய சுத்தமலன் செயங்கொண்ட சோழ வன்னாடுடையானேன் இன்னாயனார்
4. சீபாதத்திலே சென்று எனக்குப் பிள்ளை பிராஸாதித்தருள வேணும் நான் பொன்னாலே பட்டஞ் செய்து சா
5. த்துகிறேனென்றிசைந்து போன விடத்து இந்த இசைவின்படி பிள்ளை பிரசாதித்தருளுதலால் நாந் சாத்தக் கட
6. வநாத பொந்நிந் பட்டத்துக்கு செலவாக எனக்கு காணியாய் வருகிற ஊர்களில் புகழறை பூண்டியை ஊர்மை உ
7. ள்பட காணியாக நீர்வார்த்துக் கல்வெட்டிக் குடுத்தேந் செயங்கொண்ட சோழ வன்னாடுடையாநேந்
8. இது பந்மாஹேஸ்வர ரக்ஷை

நீரிழிவு நோய் தீர்த்த ஈசர்

பழனியிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள மடத்துக்குளம் என்னும் ஊரில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் இருக்கும் கடத்தூர் என்கிற கிராமத்தின் எல்லையில் அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள்ளது. பெரும்பாலும் சிவாலயங்கள் நீர்நிலையை ஒட்டி அமைந்திருப்பதைப்போல் இக்கோவிலும் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இன்றைய உலகில் தீராத நோயாக உருவெடுத்துள்ள நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) தொடர்புடையதே இக்கோவிலில் இருக்கும் கல்வெட்டு.

சுமார் 750 வருடங்களுக்கு முன்பு கொங்கு விக்ரமசோழன் ஆட்சியின்போது, திரிபுவனசிங்கன் எனும் குறுநிலத் தலைவர், ‘பிரமேகம்’ என்கிற நோய் பாதிப்பு நீங்கியதற்காக நில தானம் அளித்துள்ளார்.

சித்த மருத்துவக் குறிப்பின்படி ‘மேகநோய்’ என்பது சிறுநீரகம் தொடர்புடையதாக அறியப்படுகிறது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சிறுநீரக (மேக) நோய்கள் உள்ளதென சித்த மருத்துவ நிகண்டுகள் கூறுகின்றன. குறிப்பாக, பிரமேகம் என்பது நீரிழிவு நோய் எனக் குறிப்பிடப்படுகிறது.

கல்வெட்டு செய்தி

கொங்கு விக்ரமசோழனின் ஆட்சியில், திரிபுவனசிங்கனுக்கு ‘பிரமேக’ நோய் பாதிப்பு ஏற்பட்டு, கடத்தூர் இறைவனின் திருவருளால் அது நீங்கியது. இதனால் இறைவனின் இரவு வழிபாட்டிற்காக அவர் அரிசி தானம் அளித்தார். வழிபாட்டிற்காக அரிசி தொடர்ந்து கிடைப்பதற்காகச் சில நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. இவை அரச துரோகியாக மாறிய, உதயாதிச்ச சோழதேவன் என்பவனிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்களாகும். இவற்றின் எல்லையும், வரிச்சலுகை தகவலும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அரசின் ஆணைப்படி (திருமுகதிருவிள்ளம்) நிலங்கள் இறைவனுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஈசனைக் குறிப்பிடும் மருந்தீஸ்வரர் என்கிற கல்வெட்டு பெயர் மருவி, இன்று அர்ச்சுனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

கல்வெட்டு

1. ஸ்வஸ்திஸ்ரீஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு உயசு வது விக்கிரம சோழத் திருபுவன சிங்க
2. னேன் கடற்றூர் ஆளுடையார் திருமருதுடையார் எனக்கு பிரமேகம் தீர்ந்தமையில் இந்நாயனா
3. ர் திருவொத்த சாமத்துக்கு நாள் ஒன்றுக்கு அரிசி குறுணிக்கு நான் நீர்வார்த்து விட்ட நிலமாவது..க
4. ரவழி நாட்டுக் கண்ணாடிப்புத்தூர் வடகரையில் உதயாதிச்ச தேவந் துரோகியாய் வடகொங்கில்
5. ப் போனைமையில் அவந் நிலம் அறுகலமும் எனக்கும் என் தம்பி சோழசிங்க தேவற்கும் இவ்விருவ
6. இக்காணியாக்கினேன் என்று திருமுகம் தந்தமையில் இதில் என்னோபாதி மன்றாட்டு வி…
7. கலமும் இந்நாயனார்க்குத் திருவ…

பார்வையளித்த ஈசன்

திருச்சிராப்பள்ளி உய்யக்கொண்டான் திருமலை அருகேயுள்ள ஊர் பெருங்குடி. கல்வெட்டுகளில் திருப்பெருமுடி என அறியப்படும் இந்த ஊர் நாளடைவில் மக்கள் வழக்கில் பெருங்குடி என அழைக்கப்பட்டது. இவ்வூரில் சுந்தரசோழர் காலத்துக் கற்றளி ஒன்று உள்ளது. இக்கோவில் உள்ள ஹொய்சாளர் வீரராமநாதன் கல்வெட்டு ஒரு சுவாரஸ்யமான தகவலை அளிக்கிறது.

ஹொய்சாளர் காலத்தில் இக்கோவில் புனரமைக்கப்பட்டபோது, கல் தச்சர்களுக்குக் கூலி வழங்கப் பணத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இக்கூலிக்காக, ராஜகம்பீர வளநாட்டு உறையூர் கூற்றம் ஸ்ரீஜகதேவவீர சதுர்வேதி மங்களத்தைச் சேர்ந்த காணியுடைய பொற்கொல்லர் (தட்டான்) மருதாண்டான் என்பவரின் மகனான கூத்தன் என்பவர் மூன்று கழஞ்சு பொன்னை கி.பி. 1260 புரட்டாசி மாதம் (கன்னி ஞாயிறு) புனர்பூச நட்சத்திரம் அன்று தானமாகக் கொடுத்து உதவினார். திருப்பணிகள் நடந்துகொண்டிருந்தபோதே, அதாவது தானம் வழங்கிய மூன்றாவது மாதத்தில் – தை மாதம் (மகர ஞாயிறு) அன்று பிறவியிலேயே கண் பார்வையற்ற கூத்தனின் மகள் நல்லமங்கை கண் பார்வை பெற்ற அதிசயம் நடந்தேறியது. இந்நிகழ்வால் அகமகிழ்ந்த கூத்தன், இத்தலத்தின் ஈசனுக்கு கழஞ்சு பொன்னால் பட்டம் செய்து காணிக்கை அளித்தார்.

கல்வெட்டு

1. ஸ்வஸ்திஸ்ரீ ஸர்வ புவனம் சக்க(ரவரி)த்திகள் ஸ்ரீவீரராம நாததேவற்கு யாண்டு 14வது சுன்னி நாயற்று அபர பக்ஷத்து த்ரயோதசியும் நாயிற்றுக் கிழமையும் பெற்ற புனர்பூசத்து நாள்
2. தென்கரை இரா(கம்பீர) வளநாட்டு உறையூர் கூற்றத்து ஸ்ரீ ஜகதேகவீரச் சதுர்வேதிமங்கலத்து காணியுடைய தட்டாரில் மருதாண்டான் மகன் கூத்தன் கட்டளைப் பிறிவு
3. காணி ஆட்சியான மேல்பிடாகையான ஊர்களில் பெருங்குடி உடையார் திருஅகத்தீச்வரமுடையார் கோயி லுக்கு கல் தச்ச கூலி தாழ்வாய் திருப்பணிக் குறையா யிருக்கையில் திருப்பணிக்கு தச்
4. சக் கூலிக்கு இவன் இட்ட பொன் முக்கழஞ்சு இப் பொன் முக்கழஞ்சும் திருப்பணிக்குக் கூ(த்)தன் இட் டான் இதுவும் 19ஆவது மகரநாயற்று நாள் இந்த கூத்தன் மகள் நல்லமங்கை சிறுவயஸ்ஸிலே கண் ம(றை)ந்த அளவுக்கு இவன் மகள்
5. பின்பு கண் விளங்கி இன்னாயனார்க்கு இவன் கழஞ்சு பொன்னிட்டு பட்டம் பண்ணிச் சாத்தினான்

பார்வையைத் திருப்பியளித்த வாகீசர்

புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப்பட்டியில் இரு குடைவரைக் கோவில்கள் உள்ளன. விஷ்ணு குடைவரை ஒளிபதி விஷ்ணு க்ருஹம் என்றும் சிவன் கோவில் ஆலந்துறையார் தளி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரு குடைவரைக் கோவில்களும், விடேல் விடுகு முத்தரையரால் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதில் சிவன் கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு, தவறு செய்த ஒருவருக்குப் பார்வை பறிக்கப்பட்டு அதன்பிறகு மீண்டும் கிடைக்கப்பெற்ற தகவலைத் தருகிறது.

இதே போன்றொரு சம்பவம் தேவார மூவரில் ஒருவரான சுந்தரருக்கும் நடந்துள்ளது. செய்த தவறுக்குத் தண்டனையாகப் பார்வை பறிபோய் அதன்பின் இறைவன் முன்னிலையில் வேண்டுதல் வைத்ததும் பார்வை கிடைத்த கதை பெரியபுராணத்தில் உள்ளது. முன்னதாக அளிக்கப்பட்ட உறுதியை மீறித் திருவொற்றியூரைத் தாண்டும் சுந்தரர் பார்வையை இழப்பதும், அதன்பின் வழியில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வழிபட்டு ஒரு கண் பார்வையும் திருவாரூரில் பாடும்போது மறு கண் பார்வையும் அவருக்குக் கிடைத்ததைச் சேக்கிழாரின் பெரியபுராணம் வாயிலாக அறியலாம். இதையே மீள் உருவாக்கம் செய்யப்பட்டது போன்ற நிகழ்வு 18ஆம் நூற்றாண்டில் நடந்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில் ஊருக்கு ஊர் தேவரடியார்கள் இருந்தார்கள். ஒவ்வொரு கோவிலிலும் அவர்கள் இறைத்தொண்டாற்றி வந்தார்கள். இன்றைய திருச்சி மாவட்டத்தில் உள்ள திருநெடுங்களம் அன்றைய கவிரநாட்டுக்குள் இருந்தது. இந்நாட்டு எல்லைக்குள் மலையடிப்பட்டியும் இருந்தது. திருநெடுங்களத்தில் இருந்த தேவரடியார் பெண் ஒருவர், பூச்சிக்குடியை சேர்ந்த ஆவுடையத்தேவர் என்பவருடன் தொடர்பில் இருந்தார். மேலும், அப்பகுதியில் இருந்த பிராமணர் ஒருவருடனும் அப்பெண் தொடர்பில் இருந்தார்.

பிராமணருடன் அப்பெண்ணுக்கு இருந்த தொடர்பை ஒரு கட்டத்தில் கேள்விப்பட்டு ஆத்திரப்பட்ட ஆவுடையத்தேவர், அப்பெண்ணையும் அந்தப் பிராமணரையும் கொன்றுவிட்டு, மலையடிப்பட்டிக்கு தப்பிச்சென்று விடுகிறார். திருநெடுங்களத்தின் எல்லைக்குச் சென்றதும், இக்கொலை பாவத்தால் அவருடைய கண்பார்வை பறிபோய்விட்டது. அச்சமயம் வாகீசர் எனும் இத்தலத்தின் சிவனை (ஆலந்துறையார் எனும் பெயர் மருவி, வாகீசர் எனப் பிற்காலத்தில் அழைக்கப்படுகிறது) மனதில் நினைத்து, தன்னுடைய வயலில் ஒருபகுதியை வாகீசருக்கு தருவதாக வேண்டிக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்குக் கண் பார்வை கிடைத்தது.

எனவே நேர்ந்து கொண்டபடி தன்னுடைய வயலில் ஒரு பகுதியை வாகீசருக்கு தானமாக அளித்தார் ஆவுடையத்தேவர். இந்த வயலுக்கு எவரேனும் தீங்கு ஏற்படுத்தினால் அவர் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார் என எழுதியும் வைத்துள்ளார். இச்சாசனம் மலையடிப்பட்டி குடைவரை கோவிலின் வெளிப்புற சுவற்றில் கல்வெட்டாக உள்ளது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *