உலகம் முழுவதிலும் மக்கள் பயன்படுத்தும் நீருக்குத் தோற்றுவாயாக மழைநீர் விளங்குகிறது என்பதைப் பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இவ்வாறு கூறுகிறார்.
‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப்பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல்
நீரினின்று நிலத்து ஏற்வும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்’
பூம்புகார் நகரின் துறைமுகத்திலிருந்து வரும் பிறநாட்டுக் கப்பல்கள் ஒருபுறம் ஏற்றுமதி, மறுபுறம் இறக்குமதி செய்வதை உவமையாகக் குறிப்பிட்டு, கடலிலிருந்து வானிற்கு நீர் ஆவியாகிச் செல்வதையும், பின்னர் வானிலிருந்து தோன்றும் நீரானது ஆறுகள் மூலமாக மீண்டும் கடலினில் கலப்பதையும் இலக்கியச் சுவைப்படக் கூறுகிறார். இந்நிகழ்வு ‘நீரியல் சுழற்சி’ எனப்படுகிறது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, மழையில்லா காலங்களில் ஆற்றுக்கான நீராதாரமாக விளங்கும் ஊற்று நீரின் உருவாக்கம் குறித்த புரிதலை வேறுவிதமாகக் கிரேக்கச் சிந்தனையாளர்கள் கொண்டிருந்தார்கள்.
கடலிலிருந்து, நிலத்திற்கு அடியில் உள்ள பாறைகளின் வழியாக மலைப்பகுதிக்குச் செல்லும் நீர் மலையின் அழுத்தத்தால் மேலெழுந்து ஊற்றுநீராக வருகிறது என்றே அவர்கள் நம்பி வந்தனர். கிட்டத்தட்ட கி.மு. 2-3ஆம் நூற்றாண்டு வரையிலும் இவ்வாறே அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இவ்வறிஞர்களுக்குச் சமகாலத்தில் வாழ்ந்த நம் உருத்திரங்கண்ணனார் மேற்கண்ட பட்டினப்பாலை பாடலில் நீரியல் சுழற்சியைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
இவ்வாறு பழங்காலந்தொட்டே நீரியல் தொடர்பான அறிவு தமிழர்களுக்கு இருந்து வந்துள்ளது. நீரியல் மேலாண்மையில் நமது முன்னோரின் குறிப்பிடத்தக்கச் செயல்பாடே ‘குமிழித்தூம்பு’ எனும் மடைத் தொழில்நுட்பம். பெருகிவரும் நீரைக் கற்களைக்கொண்டு தடுக்கும் முறையினை ‘கற்சிறை’ என நமது இலக்கியங்கள் கூறுகின்றன. தொல்காப்பியப் பொருளதிகாரம் இதனை, ‘வருசிறை புனலைக் கற்சிறை போல’ எனவும், வீரசோழியம் இதனை, ‘வருவிசைப்பு புனலைக் கற்சிறை போல’ எனவும், மதுரைக்காஞ்சி இதனை, ‘வருபுனல் கற்சிறை கடுப்ப இடைஅறுத்து ஒன்னார் ஒட்டிய செருப்புகல் மறவர்’ எனவும் சிறப்பித்துக் கூறுகின்றன!
இக்கூற்றை நிரூபிப்பதாகச் சங்ககாலத்தில் – இன்றைய திருக்காட்டுப்பள்ளி (ஆர்க்காடு நாடு) மன்னரான சேந்தன் அழிசி (இந்த மரபின் மன்னர்கள் சோழர்களின் படைத் தலைவர்களாக இருந்துள்ளனர்) வெண்ணாற்றின் இருகரைகளிலும் மதகு அமைத்து இருபுற மேட்டுப்பகுதிகளிலும் பாசனத்திற்கு வசதி அமைத்துக்கொடுத்துள்ளனர். அதைப் பின்பற்றியே கரிகால் பெருவளத்தானும் காவேரிக்கு கரையெழுப்பி கற்சிறை (அணை) அமைத்துள்ளார்.
மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான ‘அறவணர் தொழுத காதை’ என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,
‘பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்’ (1384-87)
என்கிறார். ‘சுருங்கை’ என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளில், தேக்கப்பட்ட நீர் அங்குள்ள சிறிய சுருங்கை வழியாக வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல், செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.
1,600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் ஏரிகளிலும் குளங்களிலும் இருந்து நீரை வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே ‘குமிழித்தூம்பு’ என்பதாகும். பழங்காலந்தொட்டு நடைபெற்றுவரும் நீர்மேலாண்மைக்குப் பயன்பட்ட இவ்வகை குமிழித்தூம்புகள் தற்பொழுதுள்ள சூழலில் முற்றிலுமாய் தவிர்க்கப்பட்டு, வெறும் நினைவுச்சின்னங்களாகக் காட்சியளிக்கின்றன.
அக்காலத்தில் குடிமராமத்து எனும் முறை பின்பற்றப்பட்டு, சீரான இடைவெளியில் ஏரிகளில் வண்டல் மண்ணை அப்புறப்படுத்தி, அவற்றை ஆழப்படுத்தி நீர்வளத்தைப் பேணிக் காத்துள்ளனர். 14-17ஆம் நூற்றாண்டுகளில், நிலையில்லா அரச சூழல்களால் இந்நுட்பம் மெல்ல மெல்லப் பொலிவிழந்து, இவற்றின் சிறப்பு குறித்து அறியாததால் இவை புறக்கணிக்கப்பட்டு, தற்போதைய மதகு திட்டம் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, அதுவே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
மானூர் மடையர்கள் கல்வெட்டு
திருநெல்வேலி – சங்கரன்கோவில் சாலையில் உள்ளது மானூர். இங்குள்ள பெரியகுளத்து மடை பாண்டியர்களின் நீர் மேலாண்மைக்குச் சான்றளிக்கிறது. பொதுப்பணித்துறை தகவல்படி, இக்குளத்தின் நீர்ப்பிடிப்பு கொள்ளளவு 165 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 25 கிராமங்கள் மற்றும் 5,000 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் பாசனம் பெருகுவதற்கு இக்குளத்து நீரே முக்கிய ஆதாரமாக இருக்கிறது. தாமிரபரணி ஆற்றில், முக்கூடல் திருப்புடைமருதூர் இடையே தடுப்பணை ஒன்றைக் கட்டி மதிகெட்டான் கால்வாய் வழியாக மானூர் பெரிய குளத்துக்கு நீரைக் கொண்டுவந்துள்ளனர். காலப்போக்கில் அந்த அணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு தூர்ந்து போனது. இன்றளவும் அதன் அடிச்சுவடுகள் காணப்படுகின்றன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், வீரகேரளம்புதூர் அருகேயுள்ள தாயார் தோப்பு என்கிற இடத்தில், தாமிரபரணியின் கிளை நதியான சித்ரா நதி எனப்படும் சிற்றாற்றின் குறுக்கே 215 மீட்டர் நீளத்தில் அணை கட்டி, சுமார் 32.50 கி,மீ தூரம் கால்வாய் வெட்டி, அக்கால்வாயின் 20வது குளமாக மானூர் பெரியகுளத்தை இணைத்தனர். மானூர் பெரியகுளம் நெல்லை மாவட்டத்தில் 2வது பெரிய குளமாக இருந்தாலும், 185 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணை, 174 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணை, 152 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ராமாநதி அணை, 25 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடைய குண்டாறு அணைகளைவிடப் பெரியதாகும்.
இக்குளமானது கல்வெட்டுத் தகவல்களின்படி, 1000 வருடங்களுக்கும் மேல் பழமையானது என உறுதியாகக் கூறலாம். இங்கு அமைக்கப்பட்ட இரண்டு மூன்று கண் மடைகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. இதேபோன்ற வட்ட வடிவ பெரிய மடைகள் ஸ்ரீவில்லிப்புத்தூர் பராங்குச பேரேரி மற்றும் மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு பகுதியில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் குளத்திலிருந்து திறக்கப்படும் நீர், மூன்று திசைகளிலும் உள்ள விவசாய நிலங்களுக்குப் பிரிந்து செல்கிறது. பாண்டியர்களின் நீர் மேலாண்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த மடை.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஊரணி மற்றும் குளங்களிலுள்ள மடைகளைப் பாசனத்திற்குத் திறப்பதற்கென ஒருவர் இருப்பார் அவரை மடையர் என மக்கள் அழைப்பதுண்டு. இவரின் வேலை அந்த ஊரில் இருக்கும் கண்மாய், எரி மற்றும் குளம் ஆகியவற்றைப் பராமரிப்பது மட்டுமல்ல. தேவை ஏற்படும்போது (வெள்ளம் ஏற்படும் நிலையில்) தன் உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் இறங்கி மடையைச் சரியான நேரத்தில் திறந்து பெரும் வெள்ளச் சேதத்தைத் தவிர்ப்பார்.
இத்தகைய செயலின்போது பலர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்த பலருக்கும், சம்பந்தப்பட்ட கண்மாய் அல்லது ஏரியின் கரையில் சிலை வைத்து, மடை கருப்பு எனத் தெய்வமாக அந்த ஊர் மக்கள் வழிபடுவதுண்டு. அவ்வாறு மானூர் குளத்தில் இறந்துபோன குடவந் சாத்தப்பன், பாலி வேளான், நின்றமால் காவிதி எனும் மூன்று மடையர்களுக்குச் சிலை எழுப்பி, அதில் அவர்களின் பெயரைப் பொறித்து அவ்வூரார் வணங்கி வருகின்றனர்.

மன்னர் பெயர் குறிப்பிடப்படாத, (அவருடைய) 41ஆம் ஆட்சியாண்டின் கல்வெட்டானது, இறந்துபோன மூவர் குடும்பத்திற்கும் மருதாந்தக (மதுராந்தக என இருந்திருக்க வேண்டும். மக்கள் வழக்கில் மருதாந்தக என்று மருவியிருக்கக்கூடும்) சதுர்வேதி மங்கலத்திலிருந்து, அவ்வூர் மகாசபையார், ஒரு மா நிலம் இறை நீக்கி உதிரப்பட்டியாக சந்திராதித்தவர் (சந்திரனும் சூரியனும்) உள்ள வரை வழங்கிய தகவலைக் குறிப்பிடுகிறது. இப்பகுதியில் கங்கைகொண்ட சோழப்பெருமான் என்பவர் அச்சமயம் நாடுகாவல் அதிகாரியாய் இருந்தது தெரிய வருகிறது.
இங்குள்ள குமிழித்தூம்பு, கல்வெட்டில் ‘பள்ளத்தூம்பு’ என வழங்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலிலேயே மிகப் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் மானூர் குளம், ஆயிரம் வருடம் முன்பு எவ்வளவு பிரமாண்டமாக இருந்திருக்கும் என்பதை எண்ணும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் தன் உயிரைத் துச்சமென நினைத்து, ஊரைக் காப்பாற்றக் குளத்தில் மூழ்கி மடையைத் திறக்கும்போது இறந்துபோன அவர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது.

இன்றைய காலத் தொழில்நுட்பத்தில் மடைதிருகு அமைப்பின் மூலம் மிகவும் எளிதாகத் தண்ணீரைத் தேவைப்படும் அளவு திறக்க முடியும். ஆனால் அன்றைய காலகட்டத்தில், குளத்துக்குள் மூழ்கிச்சென்று, மூச்சை அடக்கி, தூம்பில் உள்ள துளைஅடைப்புக் கல்லை பலம்கொண்டு மேலே எழுப்பினால்தான் தண்ணீர் வெளியேறும். அச்சமயம் தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருக்கும். இதனால் குமிழித்தூம்பில் மோதினாலோ அல்லது சேறோடித்துளை (குமிழித் தூம்பின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய துளை – ஏரியின் அடியில் தேங்கும் வண்டல் மண் மற்றும் சேற்றை, நீரோடு நீராகத் தானாகவே வெளியேற்ற உதவும்) போன்ற பகுதியில் சிக்கினாலோ மேலே வருவது இயலாத காரியம். ஊரைக் காப்பற்ற தன் உயிரைக் கொடுக்க துணிந்த ஒருவராலே, இத்தகைய அறச்செயலைச் செய்ய முடியும். மானூர் குளத்தில் குடவந் சாத்தப்பன் முதலில் மடை திறக்கும் முயற்சியில் இறந்துபோக, அதன்பின் நின்றமால் காவிதி, பாலி வேளான் என இருவரும் இறந்துள்ளனர்.
இனி யாரையாவது திட்டுவதற்கு நாம் மடையன், மடப்பயல் ஆகிய சொற்களைப் பயன்படுத்தும் முன்னர், மானூர் வீரர்களின் தியாகத்தைச் சிறிதேனும் நினைத்துப் பார்ப்போம். மானூர் குளத்து மடைக்கு எதிரேயுள்ள நடுகற்களின் முன்புறம் இறந்தவர்களின் பெயர்களும், பின்புறம் அவர்கள் குடும்பத்திற்கு அளித்த உதிரப்பட்டி கொடை குறித்த கல்வெட்டும் உள்ளது.
கல்வெட்டு:
1. ஸ்ரீ மருதாந்தகச்சருப்பெதி
2. மங்கல[த்து]மஹாஸபையோ…
3. யாம் நம்முற் குடவந் சாத்த நப்ப-
4.நு ம் நின்றமால் காவிதியும் பாலிவெ-
5. ளாநும் இவ[ர்*]கள் கொயி[ற் கால்] மருதாந்தக-
6. பெராற்றில் குலமாணிக்க… யிற்று-
7. றையிப்புக்கு மரித்தவிருவரும் பள்ள-
8. த்தூம்பு [ம]டை திறந்து மரிச்ச சா-
9. த்த நப்பநும் யாண்டு 41ஆவ-
10. து உதிரப்பட்டியாக குடுத்த நில முன்-
11. றாவது இவ்வூர் நாடாள்கின்ற கங்-
12. கை கொண்ட சொழப் பெ(ருமா)க்கள்…
13. …முன்றாங்(கூறு செ)ய்து [இச்]சருகை
14. கால் தென்கணாற்று பதிநா[ன்கு செ] [ய்*] நி-
15. ன்றமால் காவிதிக்கு தெற்கிற் [க]-
16. …ல் வடகணாற்று பதிநால் செய் [ப]-
17. …லி வெளாநுக்கு [கைக்]ருணவாக்-
18. காற் தென்கணாற்றுப் பதி[ன்னான்கு]
19. செய் சாத்தனப்பனுக்கு இந்நிலம்
20. முன்று மாவும் உதிரப்பட்டியாக குடு-
21. த்தெந் சந்திராதிதவற் இறையிலியா
22. க்கி குடுத்தொன் மகாஸபையோம்…
23……………..
24……………..
25. இவை கா()க்கு…
26. ச்செட்டு ந(…)ராய-
27. ண னெழுத்து
28. …கிர இருவர்
29. கெசவ னெழு-
30. த்து (…)
31. இவர்க (ளகுனா)-
32. ல்………….
33. க்கணக்கு
34. (இழ)நல்லு-
35. டையார் எ-
36. ழுத்து…
37. சா(த்)தன்
38. அப்ப-
39. னுக்கு|
40. |பாலிவெ-
41. ளான்||
42. நின்றமால் கா-
43. விதி||
(தொடரும்)

