‘ஓம்படை’ எனும் சொல்லுக்கு ‘காத்திடுமாறு வேண்டுதல்’ எனும் ஒரு பொருளைத் தொல்காப்பியம் அளிக்கிறது. கல்வெட்டுகளில், ‘அறத்தைக் காத்திட’ என்று குறிப்பிடுவதற்கு, ‘ஓம்படைகூறும்’ என்கிற வார்த்தை உண்டானது. இந்த மரபானது ‘ஓம்படைக்கிளவி’ என்று வழங்கப்பட்டது. இந்த மரபில், மூன்று வகையான நிலைகள் பயின்று வருவதைக் காணலாம். முதலாவது தானறி நிலை, அதாவது ஒருவர் அறத்தை மேற்கொள்ளுதல். இரண்டாம் நிலை, அந்த அறத்தைப் பாதுகாப்பதால் ஏற்படும் நன்மைகளைக் கூறுதல். மூன்றாம் நிலை, அந்த அறத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துபவரை அச்சுறுத்துதல் அல்லது ஆசைகாட்டுதல்.
பல்லவர், சோழர் மற்றும் பாண்டியர் கல்வெட்டுகளில் பெரும்பாலும் முதல் இரு நிலைகளே காணப்படும். அதாவது, தர்மத்தில் ஈடுபடுவதைக் குறிப்பிடுதல் மற்றும் அந்த தர்மத்தைக் காப்பவரின் பாதத்தைத் தம் தலைமேல் வைத்துப் போற்றுவதாகக் கூறுதல் (போற்றுதல்). ஆனால் விஜயநகரக் கல்வெட்டுகளில் மூன்றாம் நிலையும் சேர்த்துக் காணப்படும். உதாரணமாக, சம்பந்தப்பட்ட அறத்தை நிந்திப்பவர், கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்றதால் ஏற்படும் தீங்கை அடைவார் எனக் கூறுவது.
தவத்துறை என்று அறியப்படும் லால்குடியில், முதலாம் பராந்தகரின் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இடையாற்று நாட்டைச் சேர்ந்த ‘கவிரபொற்கட்டிகுடி ஈழசான்றான் தேவன்கவிமறி’ என்பவர், சந்திரனும் சூரியனும் உள்ளவரை, தவத்துறை மகாதேவருக்கு (சிவனுக்கு) விளக்கு எரிக்க வேண்டும் என்கிற தர்ம சிந்தனையில், 96 சாவாமூவாப் பேராடுகளை (ஆடுகளை) தானமாக அளித்துள்ள செய்தி அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஆடுகளைக் கோவில் சார்பாகப் பெற்றவரோ அல்லது கோவில் சபையினரோ, தானமாக அளிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கைக்குக் குறையாமல் அவற்றை எப்போதும் வைத்திருக்க வேண்டும். ஆடுகள் பிறப்பதையும் இறப்பதையும் கணக்கில் கொண்டு, எண்ணிக்கையைச் சரிபார்க்க வேண்டும். ஆடுகளைப் பெற்றவர், கோவில் நந்தா விளக்கு எரிய தினமும் குறிப்பிட்ட அளவு நெய்யை அளிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆடுகள் குட்டிகளை ஈன்றால், தானம் பெற்ற நபர் அவற்றை வைத்துக்கொள்ளலாம். இதனால் கோவிலுக்கு அளிக்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை குறையாது; மேலும், அந்த ஆடுகளை வைத்து வறுமையில் உள்ளவர் பிழைத்துக்கொள்ளலாம். எனவே, இந்தச் செயல் ‘சாவாமூவாப் பேராடு’ எனப்பட்டது.
மேலும், இந்த அறத்தைச் செய்த அந்த மனிதர், இந்த அறத்தை வருங்காலத்தில் காப்பவரின் பாதத்தைத் தன் தலைமேல் வைப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு 12ஆம் நூற்றாண்டு வரையில், நல்ல வார்த்தைகளையே பயன்படுத்தி வந்த இந்த ஓம்படை மரபில், பின்னர் ஆங்காங்கே தீய வார்த்தைகளைப் பதியத் தொடங்கினர். மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தைச் சேர்ந்த தாமரைப்பாக்கம் கல்வெட்டே இம்மாதிரியான தீய வழக்கத்தைத் தொடங்கி வைத்தது எனலாம்.
தற்போது வக்காளி, தாயோழி, தகப்பனோழி போன்ற வார்த்தைகளைத் திட்டுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற சொற்களும் கல்வெட்டுகளிலேயே பயின்று வந்துள்ளன.
1. தாமரைப்பாக்கம் கல்வெட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தாமரைப்பாக்கம் சிவன் கோவிலில் இக்கல்வெட்டு உள்ளது. இதில், மூன்றாம் குலோத்துங்கனின் அதிகாரியான அல்லது தாமரைப்பாக்கம் பகுதியின் சிற்றரசரான கூத்தாடும் தேவர் பிருதிவிகங்கரையர் இறந்ததும், புதைக்கப்பட்டதும் குறித்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது பாடல் பாடும் பாடினிகள் இருவரையும், நடனமாடும் கூத்தாடிகளான ஆடும் ஆழ்வார் மற்றும் சதுரநடைப்பெருமாள் ஆகிய இருவரையும் அவருடன் உயிருடன் சேர்த்துப் புதைத்துள்ளனர்.
இந்நால்வரும் தங்கள் மரணத்தை விரும்பி ஏற்றுக்கொண்டனரா, அல்லது கட்டாயப்படுத்தப்பட்டு உயிரிழந்தனரா என்பது தெரியவில்லை. இறந்தவர்களின் மனக்கேதம் தீர, அவர்களுடைய வம்சாவளியினருக்கு, கூத்தாடும் தேவரான பிருதிவிகங்கரையரின் மகன் சோமனான பிரிதிகங்கர் என்பவர் தலா ஒரு வேலி நிலத்தைத் தானமாகக் கொடுத்துள்ளார்.
இக்கல்வெட்டின் இறுதிப்பகுதி கடுமையான இழிச்சொல்லைக் கொண்டுள்ளது. அதாவது, இத்தர்மத்துக்குத் தீங்கு செய்வோர், மதுராந்தக வேளார் எனும் அதிகாரியின் காலைக் கழுவிய நீரைக் குடித்து, அவரது இடுப்புச் சேற்றை (மலத்தை) உண்ணும் இழிநிலைக்கு ஆளாகும் கீழானவர் என்கிறது இக்கல்வெட்டு.
கல்வெட்டு: (ARE.NO.185 OF 1973-74)
- ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவநச்சக்ரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ யாண்டு யவது சோமனான பிருதி
- கங்கனேன் எங்களைய்யர் கூத்தாடுந்தேவரான பிருதிகங்கர் உடன் பள்ளிகொண்ட பாடும் பெண்
- டிருக்கும் மனக்கேதம் தீர்த்தமைக்கும் சந்தா[நசா]மமாக பதினறு சாண் கோலால் விட்டநிலம் ஒருவேலியும் இ
- வர்கள் வங்கிசமுள்ளதனையும் செல்வதாக விட்ட நிலத்துக்கு நம்வங்கி சத்து இதுக்கு இலங்கனம் சொல்லுவ நீலச்சோறும்
- ர் மதுராந்தக வேளான் கால்கழுவின நீருங் குடிச்சுக் கலைச்சேறும் தின்பாந் கெங்கையிடைக் குமரியிடைச் செய்
- தார் செய்த பாவங்கள் கொள்வார் பள்ளமுணோங்கி கு யசு குமிலி சயஅ புலையக்கள் யகூ கிணற்றின் கீழ்பட்டி
- நூறு உட்கழனியில் தடி சிங்கன் த[டி]* சளஅயச சேரியான் பட்டி ளகூய பொன்
- னரா’யந் த
- ண்டில் அய
- ச சஈத்திா
- அய்அ நடு
- வில் கழுவ
- ல்வடதலை
2. திருச்சோற்றுத்துறை கல்வெட்டு
தஞ்சை மாவட்டம் திருச்சோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவிலில் கவிதை வடிவில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதில், புனல்நாடும் மலைநாடும் இழந்து, தோற்றோடிய பாண்டியனை ‘புகழ்ந்து’ ஒரு செய்தியை வெட்டியுள்ளனர். இதில் குறிப்பிடப்பட்டுள்ள வழுதி என்பது பாண்டியரைக் குறிக்கும் சொல்லாகும். பொதுவாகவே, வட்டார வழக்குகளில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு சொற்கள் தீய சொற்களாகக் கருதப்படுகின்றன. சில இடங்களில், விவகாரமான சொற்களைக்கூட சாதாரணமாக எடுத்துக்கொண்டு பேசும் வழக்கமும் இருந்திருக்கிறது.
உதாரணமாக, ‘தாயோழி’ என்கிற சொல் சில இடங்களில் சகஜமாகப் பேசப்படுகிறது. ‘வக்காலோளி’ என்கிற சொல்லின் பொருள் தெரிந்திருந்தபோதிலும், அதையும் இயல்பான பேச்சில் பயன்படுத்தும் வழக்கம் சிலரிடம் உள்ளது. கீழ்வரும் 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு, தோற்றோடிய பாண்டியனை இவ்வாறான இழிச்சொல்லைப் பயன்படுத்திக் குறிப்பிடுகிறது.
கல்வெட்டு: (ARE.NO.204 OF.1930-31)
- ஸ்வஸ்தி ஸ்ரீ
- புன னாடு மலை
- நாடும் பொடிபட
- ப் பொழுதும் போர்
- வழுதி தாயொழி
- யப் போயொளி
- த்த பொழுது வ
- தனினால் மதி
- ள்…கட்
- டழிந்த பொழுது
- ங் கற்கடை மான
- கர் கவடி விதைப்
- புண்ட பொழுது
- ஞ் சின்னா பின
- வோ மான
3. நெடுங்குன்றம் கல்வெட்டு
செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் அகஸ்தீஸ்வரர் கோவிலிலுள்ள சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்றின் இறுதியில் இடம்பெறும் ஓம்படைக்கிளவியில் சில வசைச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அறத்துக்குத் தீங்கு செய்பவனின் மனைவியைக் கழுதை புணரும் என்கிற பொருளில் அமைந்துள்ள இந்த வாசகம், காலப்போக்கில் ஓம்படைக்கிளவி எவ்வாறு தரம் தாழ்ந்தது என்பதற்குச் சான்றாகிறது.
கல்வெட்டு: (ARE.NO.603 OF 2013)
- பசுவையும் மாதுறுவதை பிதாவதை
- பண்ணின தோஷத்திலே போக கடைவா
- ராகவும் யிதுக்கு யகிதம் பண்ணினவன்
- பெண்டாட்டியை கழுதை ஒழ்கு(று)ம்
4. வேடன் கலிங்கு நடுகல்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியாபுரத்துக்கு அருகே வைரிச்செட்டிப்பாளையம் எனும் இடத்திலுள்ள ஒரு கலிங்குப் பாலத்தில் ஒரு நடுகல் உள்ளது. இந்நடுகல் வேறு எங்கோ இருந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் புதிதாக இக்கலிங்குப் பாலத்தைக் கட்டியபோது, இந்த நடுகல்லை அங்கே பொருத்தி வைத்துள்ளனர். இந்நடுகல்லுக்கு மேலே உள்ள ஒரு பலகைக் கல்லில் 1908 என்கிற ஆண்டு வெட்டப்பட்டுள்ளது. எனவே, இந்நடுகல் 1908ஆம் ஆண்டில் வேறு எங்கிருந்தோ இங்கே கொண்டு வரப்பட்டிருக்கலாம்.
ஆயப்பாடியைச் சேர்ந்த வேடர்கள் அவ்வூரின் நிரைகளைக் (பசுக்களைக்) கவர்ந்து செல்ல, அவற்றை மீட்க நடந்த கரந்தைப் போரில் இறந்த வீரன் (திருநாணமுனை…) குறித்து அந்நடுகல் செய்தி தெரிவிக்கிறது. நடுகல் கல்வெட்டின் இறுதியில், ஓம்படைக்கிளவியாக வசைபாடும் ஒரு சொல் இடம்பெற்றுள்ளது. அதாவது, இந்நடுகல்லுக்குத் தீங்கு செய்பவனின் தாய்க்கு “நான் கணவன்” (மிணாளந்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தீங்கு செய்பவனை இழிவுபடுத்தும் வகையிலும், அவனை வசைபாடும் வகையிலும் அமைந்துள்ளது.
நடுகல் கல்வெட்டு:
- ஆய்ப்பாடி நிரை வே
- டுவர் கொடுபோக எயிது ப
- ட்டார் திருநாண முனை
- த…
- இது தீ…
- கு செய்வா
- ன் தாய்க்
- கு மி
- ணா ளந்
5. வசூர் புதுப்பாளையம் கல்வெட்டு
திருவண்ணாமலை மாவட்டம் வசூர் புதுப்பாளையம் எனும் ஊரில் சம்புவராயர் கல்வெட்டு ஒன்று, திருவண்ணாமலை மாவட்ட ஆய்வு நடுவத்தினரால் தற்போது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டின் இறுதியில் ஓம்படைக்கிளவியாக, ‘அஞ்சாதான் சுண்ணியை தின்பான்’ என்கிற வசைச் சொல் இடம்பெற்றுள்ளது. மக்களின் பேச்சுவழக்கில் எளிதான கெட்ட வார்த்தையாகப் புழங்கும் இச்சொல்லை, காளமேகப் புலவர்கூடத் தமது கீழ்க்கண்ட பாடலில் சிலேடையாகப் பயன்படுத்தியுள்ளார்.
‘கூதிக்கட் டேழும் குலைந்து நடுநடுங்கிப்
பூதிக்கொப் பாகவன்றே போய்விடுமே – ஆதி
நரக்காட் டகவரியை நற்சரப மாகிச்
சுருக்கா விடினஞ் சுணி.’
ஆண்குறியைக் குறிப்பிடும் இச்சொல்லைக் காளமேகர் இரு இடங்களில் பயன்படுத்துகிறார். பேச்சுவழக்கில் இவ்வார்த்தை ‘சுணி’ என்றே வழங்கப்படுகிறது. யாப்பிலக்கணம் இதை இடைக்குறை என்கிறது. ஓந்தி என்பது ஓதி என்றானதுபோல், எழுத்துவழக்கில் ‘சுண்ணி’ என்கிற சொல், பாடலில் பயன்படும்போது ‘சுணி’ என்றாகியுள்ளது.
கல்வெட்டு:
- ஸ்வஸ்தி சம்புவராய ந்
- முடப்பாணதுக்கு சிறுபாக்
- கம் விட்ட நிலம் முநூறு வேலியு
- ம் பாயக்கரைக்கு கிழக்கு இது
- மனலுவரநாந் அடியாந்
- சங்கம் அஞ்சாதாந் சு
- ண்ணியை திந்பா
- ந்
(தொடரும்)

