21. சந்தாஜி கோர்படே மூலமான க்வாஸிம் கானின் தோல்வியும் மரணமும், 1695.
மராட்டியப் படையினர் தக்காண மொகலாய பகுதிகளில் 1695 அக்டோபர்-நவம்பர் முழுவதும் வெற்றிகளை ஈட்டினர். பீஜப்பூர் பகுதிகளில் தாக்குதல் நடத்திவந்த சந்தாஜி கோர்படேயை மொகலாயத் தளபதி ஹிம்மத் கான் கிருஷ்ணா நதிக்கு தெற்கே துரத்திச் சென்று, வெல்ல முடியாமல் திரும்பியிருந்தார். நவம்பர் தொடக்கத்தில் சந்தா ஜி தென் திசையில் வட மேற்கு மைசூர் பகுதியில் தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
இஸ்லாமாபுரியில் முகாமிட்டிருந்த ஒளரங்கஜீப் மராட்டியப் படைகளைத் தடுக்க க்வாஸிம் கானுக்கு உத்தரவிட்டார். அவருக்கு உதவும் நோக்கில் தன் முகாமில் இருந்தவர்களில் மிகவும் அனுபவம் குறைந்த கனாஸத் கான் உட்படப் பல தளபதிகளைப் படையுடன் அனுப்பினார். மொத்தம் 4800 வீரர்கள் இருந்த இந்தப் படையில் பேரரசரின் மெய்க்காவல் படையினர், வாரத்தின் வெவ்வேறு நாட்களில் முகாமை ரோந்து செய்து காக்கும் வீரர்கள்போல் பலர் இருந்தனர். இந்தப் படையினர் மராட்டியப் படை இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட இடத்துக்கு 12 மைல் தொலைவில் க்வாஸிம் கானுடன் சேர்ந்துகொண்டது. மொகலாயப் படையின் நகர்வுகள் பற்றித் தெரிந்துகொண்ட சந்தா கோர்படே விரைந்து முன்னேறி வந்து திறமையாக திட்டம் தீட்டினார். மொகலாயப் படையினர் தமது சாமர்த்தியமின்மை மூலம் அவருக்கு முழு வெற்றி மகுடத்தைச் சூட்டினர்.
மொகலாயர் தரப்பில் இருந்து வரும் கனவான்களை வரவேற்று விருந்தோம்பல் செய்து படோடோபம் காட்டுவதில் மட்டுமே க்வாஸிம் கான் அதிக ஆர்வம் காட்டினார். மராட்டியப் படையை எதிர்த்துப் போரிடும் தளபதியாக அவர் சிறிதும் நடந்துகொள்ளவே இல்லை. சந்தா கோர்படே மிக சாதுரியமாகச் செயல்பட்டார். தனது படையை மூன்று திசைகளில் பிரித்து அனுப்பி மிகத் தெளிவாக அவற்றை ஒருங்கிணைத்தார். தாக்குதலுக்கு மிகத் துல்லியமான நேரத்தைத் தீர்மானித்துக்கொண்டார். ஒரு படைப்பிரிவை மொகலாய முகாமைத் தாக்க அனுப்பினார். இரண்டாவது பிரிவினைக் கொண்டு மொகலாயப் படைவீரர்களுடன் போரிட்டார். மூன்றாவது படை, யாருக்கு உதவி தேவையோ அங்கு செல்லத் தயார் நிலையில் இருந்தது. சித்ரதுர்கா பகுதியின் ஜமீன்தாரான பரமப்ப நாயக்கர், மராட்டியர்களுடன் சேர்ந்துகொண்டார். இதனால் மொகலாயப் படைகள் சுற்றிவளைக்கப்பட்டு எந்த பக்கமிருந்தும் எந்த உதவியும் தகவலும் கிடைக்கமுடியாமல் போனது.
நவம்பர் 20-ல் சூரியன் உதித்து அரை மணி நேரம் கழித்து மராட்டியப் படை க்வாஸிம் கானின் முகாமைத் தாக்கியது. அங்கிருந்த வீரர்கள், காவல் படையினர், பணியாட்கள் அனைவரையும் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியது. கைக்குக் கிடைத்த அனைத்தையும் கவர்ந்தபின் முகாமுக்குத் தீவைத்தது. ஆறு மைல் தொலைவில் இருந்த க்வாஸிம் கான் இந்த செய்தி கிடைத்ததும் தன் முகாமை நோக்கி விரைந்தார். இரண்டு மைல் தொலைவைக் கடந்த நிலையிலேயே மராட்டியரின் இரண்டாவது படை வழி மறித்துத் தாக்கியது. மராட்டியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மேலும் தக்காணத்திலேயே மிகவும் தலைசிறந்த துப்பாக்கிப் படையான காலா பைதா படையினர் முன்னணியில் பெருமளவில் இருந்தனர். இதோடு மிகப் பெரிய காலாட்படையும் இருந்தது. இரு தரப்பிலும் மிகப் பெரிய அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன. தயார் நிலையில் காத்திருந்த சந்தா ஜி கோர்படேயின் மூன்றாவது படை இப்போது முகாமுக்குள் புகுந்து அங்கிருந்த அனைத்தையும் கவர்ந்துசென்றது.
மும்முரமாகப் போரிட்டுக் கொண்டிருந்த க்வாஸிம் கானும் கனாஸாத் கானும் இந்தச் செய்தி கிடைத்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர். தாத்ரி பகுதிக்குப் பின்வாங்கினர். தாத்ரி கோட்டை மிகவும் சிறியது. உணவுக் கிடங்கும் சிறியது. எனவே புதிய தளபதிகள் அங்கு அடைக்கலம் தேடிவரும் செய்தி கிடைத்ததுமே கோட்டைக் கதவுகள் இறுக மூடப்பட்டன. இதனால் கான்கள் இருவரும் கோட்டைக்கு வெளியில் முகாமிட வேண்டிவந்தது. இரவுவாக்கில் மராட்டியப் படை அவர்களைச் சுற்றி வளைத்தது. மூன்று நாட்களுக்கு மொகலாயர்களின் பார்வையில் படும்படியாகச் சுற்றிச் சுற்றி வந்தனரே தவிர தாக்குதலை ஆரம்பிக்கவில்லை. பரமப்ப நாயக்கர் அனுப்பிய சில ஆயிரம் படைவீரர்கள் வந்த பின்னர் நான்காம் நாளில் தாக்குதலை ஆரம்பித்தனர்.
மொகலாய முகாமில் இருந்த பீரங்கி வெடிமருந்துகள் ஏற்கெனவே மராட்டியப் படைகளால் கவரப்பட்டிருந்தன. மொகலாயப் படையினர் தம் வசம் இருந்த சொற்ப வெடி மருந்துகொண்டு தாக்குதல் நடத்தினர். சில மணி நேரங்களில் அதுவும் தீர்ந்துவிடவே சோர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டனர். காலா பைதா துப்பாக்கி வீரர்களுக்கு மிகவும் வசதியாகிப் போனது. பின்வாங்கிச் சென்றபோது, தாத்ரி குளத்தின் கரையில் நடந்த போரில் என மொகலாயப் படையில் மூன்றில் ஒரு பங்கினர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
வீரர்களை விட்டுவிட்டு கான் தளபதிகள் நைஸாகக் கோட்டைக்குள் நுழைந்து தப்பித்தனர். இஸ்லாமியப் படை முழு பட்டினியில் விழ நேர்ந்தது. ஓபியம் அதிகம் புகைக்கும் க்வாஸிம் கான் அது கிடைக்காமல் போனதும் மூன்றாம் நாள் உயிரிழந்தார். பேரரசர் கைகளில் மாட்டினாலோ மராட்டியப் படையின் கையில் சிக்கினாலோ ஏற்படும் அவமானத்தைத் தவிர்க்க அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
உணவுப் பொருள் முழுவதுமாகப் பற்றாக்குறையாகி, கோட்டைக்குள் இருந்த நீரும் குறைந்துபோய்விடவே கனாஸத் கான் தனது திவானையும் தக்காண தளபதி ஒருவரையும் அனுப்பி சந்தா கோர்படேயிடம் உயிர்ப்பிச்சை கேட்டு சமரசப் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். 20 லட்சம் பிணைத்தொகை தர சம்மதித்தார். தமது படையில் இருந்த பணம், நகைகள், குதிரைகள், யானைகள் அனைத்தையும் ஒப்படைத்துவிடவும் சம்மதித்தார். தளர்ந்துபோய் கோட்டைக்குள் நுழைந்த 13 நாட்கள் கழித்து மொகலாயப் படைக்கு மராட்டியப் படையினர் உணவும் நீரும் தந்தனர். முழுமையான தோல்வியடைந்திருந்த கனாசத் கான் இரண்டு நாட்கள் கழித்து மராட்டியப் படையினரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார்.
22. பசவபட்டணத்தில் ஹிம்மத் கானை சந்தா கோர்படே வீழ்த்துதல்
இந்தத் தாக்குதலுக்கு ஒரு மாதத்துக்குள் இதற்கு இணையான மாபெரும் வெற்றியை சந்தா கோர்படே பெற்றார். க்வாஸிம் கானுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட ஹிம்மத் கானைக் கொன்றார். தாத்ரிக்கு 40 மைல் தொலைவில் இருந்த பசவபட்டணத்தில் கான் அடைக்கலம் தேடியிருந்தார். 20, ஜன, 1696-ல் ஹிம்மத் கானை பத்தாயிரம் குதிரைப்படையினர் மற்றும் அதே அளவிலான காலாட்படையுடன் சந்தாஜி எதிர்கொண்டார். அவருடைய படையில் இருந்த மிகச் சிறந்த கர்நாடக துப்பாக்கி வீரர்கள் மலைப்பகுதியில் வாகாக அமர்ந்துகொண்டனர். மிகச் சிறிய படையுடன் ஹிம்மத் கான் அவர்களைத் தாக்கி மலையில் இருந்து கீழிறங்கச் செய்தார். ஆனால் சந்தா கோர்படே இருந்த இடம் நோக்கித் தன் யானையை ஓட்டிச் சென்ற ஹிம்மத் கானின் நெற்றியில் திடீரென்று ஒரு துப்பாக்கி குண்டு துளைத்து அவரை வீழ்த்தியது. சிறிது நாட்கள் கழித்து ஹிம்மத் கான் படையினரிடமிருந்து கவர்ந்தவற்றை எடுத்துக்கொண்டு மராட்டியப்படை திரும்பியது.
ஹிம்மத் கான் கொல்லப்பட்டதையும் பசவபட்டணத்தில் சந்தாஜி கோர்படேயால் தன் படை தடுத்து நிறுத்தப்பட்டதையும் ஒளரங்கஜீப் தெரிந்துகொண்டார். வட மேற்கு மைசூரில் இழந்த பகுதிகளை மீட்க முயற்சிகள் எடுத்தார். பசவபட்டண கோட்டையை மீட்க ஹமீத் உத் தீன் கான் தலைமையில் ஒரு படை 1, பிப்ரவரி வாக்கில் புறப்பட்டுச் சென்றது. இந்த இடத்துக்கு 20 மைல் தொலைவில் இருந்தபோதே 26 பிப்ரவரி வாக்கில் சந்தா கோர்படே தன் படையுடன் வந்து இவர்களைத் தாக்கினார். ஆனால், மராட்டியப்படைக்கு இந்த முறை தோல்வியே கிடைத்தது. அவர்களை விரட்டியடித்து பசவபட்டண கோட்டையை மொகலாயர்கள் மீட்டனர்.
23. 1696-ல் மொகலாயர்களின் போர் நடவடிக்கைகள்
பனாலா கோட்டையில் இருந்து புறப்பட்டு பசவபட்டண கோட்டைக்குச் செல்லும்படி இளவரசர் பிதார் பக்துக்கு ஒளரங்கஜீப் உத்தரவிட்டார். சில வாரங்களில் அங்கு வந்து சேர்ந்தவர் சில மாதங்கள் அங்கு தங்கினார். கலகங்களில் ஈடுபட்ட ஜமீந்தார்களைத் தன் படைகளை அனுப்பி தண்டித்தார். 16 மே வாக்கில் சித்ரதுர்கா பகுதியின் பரமப்ப நாயக்கர் மொகலாயர்களுக்குக் கட்டுப்படுவதாக ஒப்புக்கொண்டார். ஒளரங்கஜீப் முகாமிட்டிருந்த இஸ்லாமாபுரியில் இருந்து இளவரசர் முஹம்மது ஆஸம் 90 மைல் வடக்கில் இருந்த பேட்காவ் (பஹாதுர்கட்) பகுதிக்கு பிப்ரவரி 1696-ல் புறப்பட்டார். மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் அழைக்கப்படும்வரை அவர் அங்கேயே இருந்தார்.
மார்ச், 1697-ல் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து சந்தா கோர்படே சத்ரா மாவட்டத்துக்குத் திரும்பினார். அவரை வீழ்த்த ஃபிரோஸ் ஜங் அனுப்பப்பட்டார். 1697-ன் முதல் பாதியில் நடைபெற்ற உட்பகையின் காரணமாக மராட்டியர்களின் படை பலவீனமடைந்தது.
24. சந்தாஜி கோர்படேவுக்கும் தன யாதவுக்கும் இடையிலான உட்பகை; சந்தாஜியின் மரணம்.
மேற்குப் பகுதியில் மிகவும் வலிமையான இரண்டு மொகலாயத் தளபதிகளை வென்ற பெருமிதத்தில் இருந்த சந்தாஜி கோர்படே செஞ்சிக்குச் சென்று ராஜாராமின் வருகைக்காகக் (மார்ச் 1696) காத்திருந்தார். தன யாதவைவிட மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றவர் என்றவகையில் சந்தாஜி தனக்கு சேனாபதி பதவி தரவேண்டும் என்று எதிர்பார்த்ததாகத் தெரிகிறது. ஆனால், அவருடைய கர்வம், திமிர், யாருக்கும் கீழ்ப்படியாத தன்மை இவையெல்லாம் செஞ்சி மராட்டிய அவையினருக்குப் பிடிக்கவில்லை. இதனால் காஞ்சீபுரம் பகுதிக்கு அருகில் போர் மூண்டது (1696). தன யாதவ் பக்கம் ராஜாராம் நின்றார். அம்ருத் ராவ் நிம்பல்கரின் தலைமையில் ஒரு மராட்டியப் படை சந்தாஜியின் படையை எதிர்த்தது. ஆனால், சந்தாஜியின் போர் திறமையே வென்றது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருந்த தன் ஊருக்கு அடைக்கலம் தேடி தன யாதவ் ஓட நேர்ந்தது. அம்ருத் ராவ் போரில் கொல்லப்பட்டார்.
கிழக்கு கர்நாடகப் பகுதியில் பல மாதங்கள் முன்னேறிச் சென்ற சந்தாஜி மார்ச் 1697-ல் சொந்த ஊர் திரும்பினார். அங்கு மீண்டும் தன யாதவுக்கும் அவருக்குமிடையிலான மோதல் மீண்டும் வெடித்தது. சத்ரா மாவட்டத்தில் மார்ச் 1697-ல் இரு தரப்பு தளபதிகளும் கடும் மோதலில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முறை சந்தாஜிக்கு வெற்றி கிடைக்கவில்லை. அவருடைய கர்வம் மற்றும் கண்ணியமற்ற நடத்தைகளின் காரணமாக பல மராட்டிய அதிகாரிகள் தன யாதவ் பக்கம் சென்றுவிட்டனர். எஞ்சியவர்கள் போரில் காயம்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர்.
முற்றிலும் கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட சந்தாஜி கோர்படே சொற்ப வீரர்களுடன் மஸ்வாத் பகுதிக்குத் தப்பிச் சென்றார். அவரால் கொல்லப்பட்ட அம்ருத் ராவின் சகோதரியின் கணவர் நாகோஜி மனே அவருக்கு சிறிது காலம் உணவும் அடைக்கலமும் தந்தார். அதன் பின் அவரை அங்கிருந்து பத்திரமாக அனுப்பிவிட்டார். ஆனால் அவருடைய மனைவி ராதா பாய் தன் சகோதரரைக் கொன்றவர் மீதான பழி உணர்ச்சி மிகுந்த நிலையில் தன் இன்னொரு சகோதரரை அனுப்பி சந்தாஜியைக் கொல்ல முயன்றார். நீண்ட நெடுந்தொலைவு பயணம் செய்த சந்தாஜி, சம்பு மஹாதேவ மலையில் இருந்த நீர்நிலையில் குளித்துக் கொண்டிருந்தபோது மஸ்வத் பகுதில் இருந்து வந்த ஒரு குழு அவரைச் சுற்றி நின்று தலையை வெட்டிக் கொன்றுபோட்டது (ஜூன், 1697).
பரந்து விரிந்த நிலப்பகுதியில் இருக்கும் மிகப் பெரிய படையை நிர்வகிக்கும் திறமை சந்தாஜிக்கு பிறப்பிலேயே இருந்தது. எதிரியின் ஒவ்வொரு நகர்வையும் கூர்ந்து கவனித்து, மாறும் களச் சூழல்களுக்கு ஏற்ப மிகச் சரியான முடிவை விரைந்து எடுத்துவிடுவார். தன் படைகளை மிக அற்புதமாக ஒருங்கிணைத்து வெற்றி பெறுவதில் சமர்த்தர். அவருடைய வெற்றிகளுக்கு அவருடைய படையின் அதி வேகமாகப் பாய்ந்துசெல்லும் திறமையும் அவருடைய உத்தரவுகளை ஒரு நொடி கூடப் பிசகாமல் முன்னெடுக்கும் துணைத் தளபதிகளின் விசுவாசமும் முக்கிய காரணங்களாக இருந்தன. அவர் தனது படையினரிடையே மிகவும் கறாரான கீழ்ப்படிதலை வற்புறுத்தினார். மீறுபவர்களுக்குக் கடும் தண்டனையும் தருவார். இதன் காரணமாகப் பல மராட்டிய பிரமுகர்கள் இவருடைய எதிரியாகினர்.
சந்தாஜி கோர்படே, தன யாதவ் என பரம விரோதிகளாக இருந்த இரு தளபதிகளும் போர்க்கலையில் சிறந்து விளங்கினர். வியூகங்கள் வகுப்பதில் நிபுணர்களாக இருந்தனர். வீரமும் துடிப்பும் கொண்டிருந்தனர். ஆனால், இருவரின் குண நலன்களில் மிகப் பெரிய வேறுபாடு இருந்தது. தன யாதவ் போர்களை மிகவும் கண்ணியமாக கனவான்போல் கையாண்டார். வெற்றி பெற்றால் நிதானமாகவே நடந்துகொள்வார். தோற்றவர்களிடம் கருணை காட்டுவார். மிகவும் பணிவான நடத்தைகொண்டவர். சுய ஒழுங்கு மிகுந்தவர். தொலைநோக்குப் பார்வையுடன் ராஜ தந்திர நடவடிக்கைகளை நேர்த்தியாக எடுப்பார். தன யாதவை எதிர்க்க நேர்ந்த மொகலாயத் தளபதிகளிடம் அவர் காட்டிய மரியாதையை மொகலாய வரலாற்றாசிரியர்கள் புகழ்ந்து எழுதியிருக்கிறார்கள். மராட்டிய சாம்ராஜ்ஜியத்துக்கு தன்னலமற்றுப் பல ஆண்டுகள் விசுவாசமாக சேவை புரிந்திருக்கிறார்.
மாறாக, சந்தாஜி கோர்படே முரட்டுத்தனம் மிகுந்தவர்; தாராள குணம் அற்றவர். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர். தொலைநோக்குப் பார்வை இல்லாதவர். மன்னரின் உத்தரவுகளுக்கெல்லாம் காத்திராமல் தன் முன் எதிர்ப்படுபவர்களையெல்லாம் எதிர்த்தார். யாருக்கும் கருணை காட்டியதில்லை. கருணையை எதிர்பார்த்ததும் இல்லை. இந்தக் குணங்களின் காரணமாக யாருடனும் இணைந்து செயல்பட அவரால் முடிந்திருக்கவில்லை. ராஜ்ஜிய நலனுக்காகத் தன் நலன்களைத் தியாகம் செய்யும் குணமும் இருந்திருக்கவில்லை. மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் வரலாற்றிலோ ஒளரங்கஜீபுடனான மோதல்களிலோகூட எந்தப் பெரிய தாக்கத்தையும் செலுத்தியிருக்கவில்லை. தக்காண வானில் தனித்து எரிந்து விழுந்ததொரு எரிகல்லாகவே வாழ்ந்து மறைந்தார்.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.
Good effort