Skip to content
Home » ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

11. ஒளரங்கஜீபின் போர்களினால் உருவான அழிவு; எங்கும் நிலவிய கூச்சல் குழப்பம்.

அக்பரால் நிர்மாணிக்கப்பட்ட மாபெரும் சாம்ராஜ்ஜியம், ஷாஜஹானால் உலகப் புகழும் வளமும் பெற்ற சாம்ராஜ்ஜியம் 17-ம் நூற்றாண்டின் முடிவில் வீழ்ச்சியை எட்டியிருந்தது. ஆட்சி நிர்வாகம், கலாசாரம், பொருளாதார நடவடிக்கைகள், ராணுவ பலம், சமூக அமைப்புகள் என அனைத்தும் வீழ்ச்சியடையத் தொடங்கியிருந்தன. கால் நூற்றாண்டுக்கும் மேலான போர் நடவடிக்கைகள் மிகப் பெரிய இழப்புகளைக் கொண்டுவந்திருந்தன. தக்காணம் முழுவதுமாக அழிக்கப்பட்டிருந்தது. சமகால ஐரோப்பியர் ஒருவர் அதுபற்றிக் குறிப்பிட்டிருப்பவை:

‘அகமது நகருக்கு ஒளரங்கஜீப் திரும்பினார். தக்காணப் பகுதிகள் முழுவதும் ஒற்றை மரமோ செடியோ தானியமோ இன்றி அழிந்துவிட்டிருந்தது. எங்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பிணங்களே சிதறிக் கிடந்தன. துளி பசுமை கூட கண்ணில் தென்படவில்லை. எல்லாமே தரிசாகிக் கிடந்தன. ஆண்டுதோறும் சுமார் லட்சம் மொகலாயப் போர் வீரர்கள் இறந்திருந்தனர். ஒட்டகங்கள், யானைகள், குதிரைகள், காளைகள் என மூன்று லட்சத்துக்கு மேல் ஆண்டு தோறும் போர்க்களங்களில் இறந்தன. தக்காணத்தில் 1702 தொடங்கி 1704 வரையான பிளேக் மற்றும் பஞ்சங்களினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்துக்கும் மேல் இருக்கும்’.

வாகின்கெரேயில் இருந்து வடக்கு நோக்கிப் பின்வாங்கிய மொகலாயப் படையின் பின்னால் ஐம்பதாயிரம் மராட்டியப் படையினர் பெரும் உற்சாகத்துடன் சில மைல் தொலைவுக்குப் பின்னாலேயே துரத்தியபடி வந்தனர். மொகலாயப் படையினருக்கான உணவு வண்டிகள், பின்தங்கி வருபவர்கள் இவர்களை மொகலாயப் படையிடமிருந்து பிரித்தனர்.

நேரில் இவற்றையெல்லாம் பார்த்த பீம்சென் குறிப்பிட்டிருப்பவை:

‘மராட்டியர்கள் முழு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருந்தனர். அந்தச் சாலை வழிகள் முழுவதையும் தம் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். மொகலாயப் படைகள் மற்றும் அவர்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து அபகரித்தவற்றைக் கொண்டு அவர்கள் தமது ஏழ்மையைப் போக்கி வளம் பெற்றனர். ஒவ்வொரு வாரமும் அவர்கள், தமக்கு வளமான வாழ்க்கைக்கு வழிவகுத்த ஆலம்கீருக்கு நன்றி தெரிவித்து அவர் நீண்ட காலம் வாழவேண்டும் என்று வாழ்த்தி மக்களுக்கு இனிப்பும் பணமும் கொடுத்துக் கொண்டாடினர்!

தானியங்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. மொகலாயப் படையில் உணவுப் பற்றாக்குறையினால் பலர் பட்டினியால் இறந்தனர். பல்வேறு முறைகேடுகள், கொள்ளையடிப்புகள் நடக்க ஆரம்பித்தன. ஆலம்கீர் ஆட்சிக்கட்டில் ஏறியதிலிருந்து ஒரு நாள்கூட ஓய்வெடுக்கவில்லை. எப்போதும் போர்களிலும் போர் முகாம்களிலும் பயணங்களிலுமாகவே இருந்துவந்தார். இதனால் அவருடன் சென்ற முகாம்வாசிகள் எல்லாம் தமது குடும்பத்தைவிட்டு நீண்டகாலம் பிரிந்திருக்க விரும்பாமல் அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியாக ஒரு புதிய மொகலாயத் தலைமுறைபோர்க்களக் கூடாரங்களிலேயே பிறந்திருக்கிறது. பச்சிளம் குழந்தைப் பருவத்திலிருந்து இளமைக்கும் இளமையிலிருந்து முதுமைக்கும் அங்கிருந்து சொர்க்கத்துக்கும் என கூடாரங்களிலேயே வாழ்ந்துவருகிறது. அவர்கள் இந்த உலகில் வீடு என்ற ஒன்றையே பார்த்ததில்லை. ஒரு போர்க்களத்தில் அமைந்த கூடாரம் விட்டு இன்னொரு போர்க்களத்தில் அமைந்த கூடாரம் என அவர்கள் வாழ்க்கை அதிலேயே முடிந்துவிட்டிருக்கிறது.

மராட்டியர்கள் ஒரு மொகலாயப் பகுதியைத் தாக்கும்போது தங்களால் முடிந்த அளவுக்குச் செல்வத்தைக் கவர்ந்து செல்கிறார்கள். அவர்களுடைய குதிரைகளை, வயல்களில் வளர்ந்து நிற்கும் தானியக் கதிர்களை மேயவிடுகிறார்கள். மொகலாயப் படையினர் புதிதாக பயிர் நட்டு வளர்த்த பின்னர்தான் ஏதாவது உண்ண முடியும். அனைத்து நிர்வாக எந்திரங்களும் செயல் இழந்துவிட்டன. ரயத்கள் எல்லாரும் பயிரிடுவதை நிறுத்திவிட்டனர். ஜாஹிர்தார்களுக்கு எல்லாம் ஒரு நயா பைசா கூடக் கிடைப்பதில்லை. மராட்டிய அரசு தன் படையினருக்கு சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டது. எனவே அவர்கள் படையெடுத்துச் செல்லும்போது கிடைப்பதையெல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டனர். சொற்ப சதவிகிதத்தை மன்னருக்கும் கொடுத்தனர்.

மராட்டியப்படைகளின் இப்படியான சூறையாடல், மொகலாய ஜாஹிர்தார்களுக்குக் கிடைக்கவேண்டிய தொகை வராமல் போனது, இவற்றோடு பஞ்சமும் சேர்ந்துகொண்டுவிடவே நிலைமை மிக மிக மோசமாகிவிட்டது. தானியங்கள் கிடைக்கவே இல்லை. கிடைத்தாலும் கொள்ளை விலை கொடுக்கவேண்டியிருந்தது. மராட்டியர்களின் வருவாயோ பெருகிக் கொண்டே சென்றது. ஹைதராபாத், பீஜப்பூர், ஒளரங்காபாத், பர்ஹான்பூர் போன்ற பாதுகாப்பு பலமாக இருந்த பகுதிகளைக் கூட அவர்களால் தாக்க முடிந்தது.’

ஆட்சி நிர்வாகம் சீர்குலைவதும் அதைத் தொடர்ந்து நாட்டில் அமைதி சீர்குலைவதும் ஒன்றை ஒன்று சார்ந்ததாகவும் ஒன்றை மற்றொன்று மேலும் நிலைகுலையச் செய்வதாகவும் இருப்பதை பீம்சென்னின் இந்தக் குறிப்பு நன்கு எடுத்துக்காட்டுகிறது:

‘மன்சப்தார்கள் தமக்குக் கீழே இருக்கும் சிறிய படையைக்கொண்டு ஜாஹிர் உரிமையாகத் தரப்பட்டிருக்கும் பகுதிகளில் இருந்து வரி வசூல் பணிகளைத் திறமையாகச் செய்யவே முடியாத நிலையில் இருந்தனர். உள்ளூர் ஜமீந்தார்கள் வலிமை பெறத் தொடங்கினர். அவர்கள் மராட்டியர்களுடன் கைகோத்துக் கொண்டனர். வரி வசூலை அவர்களே எடுத்துச் சென்றனர். பல்வேறு அடக்குமுறைகளில் ஈடுபட்டனர். மொகலாயர்கள் தமது சார்பில் நியமித்தவர்களுக்கு ஜாஹிர் உரிமையைக் கொடுத்து வரி வசூல் செய்யும் அதிகாரத்தைக் கொடுத்ததுபோல் மராட்டியர்களும் தமது பிரதிநிதிகளுக்கும் தளபதிகளுக்கும் நாட்டைப் பங்குபோட்டுக் கொடுத்து வரி வசூலித்துக் கொள்ளும் உரிமையை வழங்கினர். அப்படியாக ஒரே ஊரில் இரண்டு ஜாஹிர்தார்களுக்கு வரி கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த இரட்டை வரிச்சுமைக்கு ஆளான நில உடமையாளர்கள், விவசாயிகள் எல்லாம் குதிரைகள் வாங்கி, ஆயுதங்களைக் கையில் ஏந்தி மராட்டியர் பக்கம் அணிவகுத்தனர்’.

ஏராளமான மொகலாய மன்சப்தார்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டதால் எளிய அப்பாவி விவசாயிகளைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். தமக்கு ஆதரவாக வரும்படிக் கேட்டுக்கொண்டனர். சில மொகலாய மன்சப்தார்கள் மராட்டியர்களுடன் சேர்ந்து கொண்டு தமது பங்கைப் பெறவும் ஆரம்பித்தனர்.

12. மராட்டியப் போர்முறையும் அபகரிப்பும்

போர்க்கால அபகரிப்புகளை மராட்டியர்கள் ஒரு தனி வழிமுறையாகவே ஆக்கினர். ‘எங்கெல்லாம் மராட்டியப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வெற்றி பெறுகின்றனவோ அங்கெல்லாம் வரி வசூல் வேலைகளையும் அவர்கள் ஆரம்பித்தனர். அந்த இடங்களில் தமது குடும்பங்களுடன் குடியேறி வாழத் தொடங்கினர். வென்ற பகுதிகளை பர்கானாக்களாக தமக்குள் பங்கிட்டுக் கொண்டனர். தமக்கென தனியான சுபேதார்கள், காமவிஸ்தார்கள் (வரி வசூலிப்பாளர்கள்), ராஹ்தார்கள் (சாலைப் பாதுகாப்புப் படை) ஆகியோரை நியமித்தனர். சுபேதார் என்பவர் படைத் தளபதி போன்றவர். எங்கெல்லாம் பெரும் படையோ, மொகலாய வணிகக் குழுவோ வருவதாகத் தகவல் கிடைத்தால் சில ஆயிரம் குதிரைப் படையினருடன் புறப்பட்டுச் சென்று அவர்களைத் தாக்கி உடமைகளைக் கைப்பற்றுவார்கள்.

ஒவ்வொரு பர்கானாவிலும் காமவிஸ்தார்கள் நியமிக்கப்பட்டு வரு வசூல் பணிகளைச் செய்தனர். யாரேனும் ஜமீந்தாரோ மொகலாயத் தளபதியோ இந்த வரி வசூலிப்பாளரை எதிர்த்தால் இவருடைய உதவிக்கு சுபேதார் படையுடன் வந்து உதவுவார். அங்கு எதிரிகளை முற்றுகையிட்டுத் தாக்குதலில் ஈடுபடுவார். மராட்டிய ராஹ்தாரின் பணி என்னவென்றால் வணிகக் குழுக்களுக்குப் பாதுகாப்பு தருவதுதான். எந்தவித அச்சுறுத்தலும் இழப்பும் இல்லாமல் நெடுஞ்சாலைகளில் சென்று வருவதற்கு இவர்களுக்கு வண்டிக்கு இவ்வளவு தொகை என்று கொடுத்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளவேண்டும். அதன் பின்னரே சாலையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பார்கள். இந்தத் தொகை மொகலாயர்களுக்குக் கொடுக்கவேண்டிய சுங்க வரியைவிட மூன்று நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். ஒவ்வொரு பர்கானா சபாவிலும் ஓரிரு சிறிய கோட்டைகளைக் கட்டிக் கொண்டு அதற்குள் அடைக்கலம் புகுந்துகொள்வார்கள். தேவைப்படும் நேரங்களில் வெளியே வந்து தாக்குதலில் ஈடுபடுவார்கள்.’ (காஃபி கான் எழுதியவை).

‘1703க்குப் பின்னர் மராட்டியர்களே தக்காணத்தின் எஜமானர்கள் என்ற நிலையை அடைந்துவிட்டனர். வட இந்தியாவில் கூட சில பகுதிகளில் அவர்களுடைய ஆதிக்கம் பரவியிருந்தது. மொகலாய அதிகாரிகள் எல்லாரும் நிராதரவான நிலைக்கும் தற்காப்பு நிலைக்கும் தள்ளப்பட்டனர். அதிகாரம் பெருகப் பெருக மராட்டியர்களின் வழிமுறைகளும் மாறத் தொடங்கின. சிவாஜி காலம் அல்லது சம்பாஜி காலம் போல் இப்போது இல்லை. ஓரிடத்தில் தாக்குதல் நடத்துபவர்கள் மொகலாயப் படை வருகிறது என்ற செய்தி கிடைத்ததுமே அங்கிருந்து தப்பிச் செல்பவர்களாக இப்போது இல்லை. மாறாக 1704 வாக்கில் மராட்டியத் தலைவர்களும் படையினரும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் படைகளை நகர்த்த ஆரம்பித்தனர். ஏனென்றால் இப்போது அவர்கள் மொகலாயர்களை அடிபணிய வைத்துவிட்டனர். அவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திவிட்டனர். இப்போது மராட்டியர்களிடம் துப்பாக்கிகள், பீரங்கிகள், வில் அம்புகள், யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், போர் முகாமுக்கான கூடார வசதிகள் எல்லாம் அவர்கள் வசம் இருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால் அவர்கள் இப்போது மொகலாய படைகளைப் போலவே வலிமையும் வசதிகளும் கொண்ட படையாக ஆகிவிட்டனர்’.

ஒளரங்கஜீபின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்பட்ட சீரழிவும் நிலைமையை மோசமாக்கியது. அதிகாரிகள் எல்லாரும் தாங்க முடியாத அளவிலான ஊழலில் திளைக்க ஆரம்பித்தனர். செயல் திறமும் சுத்தமாக இல்லை. ஆலம்கீரின் உத்தரவுகளை மீறி அத்தனை அநியாய, சட்ட விரோத அத்துமீறல்களும் நடக்க ஆரம்பித்துவிட்டன. வயதாகிவிட்ட காரணத்தாலும் வெகு தொலைவில் அவர் இருந்ததாலும் அதிகாரிகள் அவருக்குப் பணிய மறுத்துவிட்டனர். ஆட்சி நிர்வாகம் முழுவதுமாக செயல் திறனை இழந்துவிட்டது.

13. ஒளரங்கஜீப் அஹமது நகர் திரும்புதல், 1705.

வாகின்கெரே கோட்டையைக் கைப்பற்றியதும் (27, ஏப்ரல், 1705) ஆலம்கீர் தன் முகாமை தேவபூருக்கு மாற்றிக்கொண்டார். அது அந்தக் கோட்டையில் இருந்து தெற்கே எட்டு மைல் தொலைவில் கிருஷ்ணா நதிக்கரையில்அமைந்திருக்கும் அமைதியான, வளமான கிராமம்.

முதுமை காரணமாகவும் (90 வயது) இடைவிடாத அலைச்சலினாலும் நோய்வாய்ப்பட்டார். மொகலாய முகாமில் இருந்த அனைவரையும் சோர்வு பீடித்தது. முதலில் நோயை அவர் துணிச்சலுடன் எதிர்கொண்டார். எதைக் கண்டும் கலங்காத அவருடைய மனதின் வலிமையால் சில நாட்கள் ஆட்சி நிர்வாகத்தையும் தொடர்ந்து மேற்கொண்டார். தன் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து மக்களுக்கு, தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தியும் வந்தார். ஆனால் இப்படியாக அவர் செயல்பட்டதெல்லாம் அவருக்கு நெருக்கடிகளையே அதிகரித்தன. வலி அதிகரித்து, சில நேரங்களில் சுய நினைவு நினைவிழந்து போகவும் ஆரம்பித்தார். அவர் இறந்துவிட்டார் என்றும் மகன்களுக்கிடையே வாரிசுரிமைப் போர் மூண்டுவிட்டதாகவும் வதந்திகள் பரவியவண்ணம் இருந்தன.

சுமார் பத்து பன்னிரண்டு நாட்கள் இதே நிலைமை நீடித்தது. மெள்ள உடல்நிலை தேறியது. ஆனால் இப்போதும் பலவீனமாகவே உணர்ந்தார். ஒரு நாள் சோகத்தின் உச்சத்தில் இருந்தவர் ஷேக் கஞ்சாவிலிருந்து கீழ்க்கண்ட வரிகளை முணகினார்:

எண்பது தொன்னூறு வயதை அடையும்போது
காலத்தின் கைகளால் கணக்கற்ற அடிகளை நீங்கள் வாங்கியிருப்பீர்கள்
அங்கிருந்து நீங்கள் நூறு வயதை நோக்கி நகரும்போது
மரணமே வாழ்வின் போர்வை போர்த்தி வந்து நிற்கும்.
நீங்கள் உயிருள்ள பிணமாகியிருப்பீர்கள்.

ஆலம்கீரின் இறுதிக்கட்டத்தில் அருகில் உதவிக்காக இருந்த அமீர்கான், ‘உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்’ என்று ஆறுதல் சொன்னார். ஷேக் கஞ்சா இந்த வரிகளை பின்னால் வரும் கவிதைக்கான முன்னுரை போலவே எழுதியிருந்தார்:

நடைபிணமான நிலையிலும் உற்சாகத்துடன் இருங்கள்
உற்சாகமாக இருந்தால்தானே
உங்களால் அல்லாவை நினைவுகூரமுடியும்.

ஒளரங்கஜீப் அதையே செய்தார்.

23 அக்டோபர் 1705-ல் ஆலம்கீர் தேவபூரில் இருந்து வடக்கே ஒரு பல்லக்கில் பயணத்தை ஆரம்பித்தார். மெள்ள மெள்ள 20, ஜன, 1706-ல் அஹமது நகர் சென்று சேர்ந்தார். தக்காணப் படையெடுப்புக்காக 23 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கிருந்து புறப்பட்டிருந்தார். அங்கு சென்று சேர்ந்ததும் இதுவே என் பயணத்தின் இறுதி’ என்றார்.

14. ஒளரங்கஜீபின் இறுதிக் காலத்தின் சோகமும் அவ நம்பிக்கையும்

ஆலம்கீரின் இறுதிக் காலம் மிகவும் சோகம் நிரம்பியதாகவே இருந்தது. இந்தியா முழுவதையும் நேர்மையுடனும் வலிமையுடனும் அடக்கி ஆளவேண்டும் என்ற அவருடைய வாழ் நாள் முயற்சிகள் எல்லாம் அராஜகத்திலும் கலகத்திலும் குழப்பத்திலுமாக முடிந்திருந்தன. சொல்லவொண்ணா தனிமை அந்த முதுமையில் அவரைச் சூழ்ந்தது. அவருடைய எல்லா நண்பர்களும் ஒவ்வொருவராக இறந்துவிட்டிருந்தனர். இளமைக் காலம் தொடங்கி அவருடன் இருந்துவந்தவர்களில் ஆருயிர் நண்பரான ஆஸாத் கான் மட்டுமே உயிருடன் இருந்தார். வாஸிராக இருந்த அவருமே ஒளரங்கஜீபைவிட ஐந்து வயது இளையவர். அரியணையில் அமர்ந்திருக்கையில் ஆலம்கீர் கண்களை எந்தப் பக்கம் திருப்பினாலும் எல்லா இடங்களிலும் இளையவர்களே நிரம்பியிருப்பதைப் பார்க்கவேண்டியிருந்தது. கூழைக்கும்பிடுபோடுபவர்கள், பொறுப்புகளை ஏற்கத் துணிச்சல் இல்லாத கோழைகள், உண்மையைச் சொல்ல அஞ்சும் நபர்கள், சுய நலமும் பொறாமையும் நிரம்பியவர்கள்.

மார்க்க விஷயங்களில் அதி தூய்மைவாதியான ஒளரங்கஜீப் பிறரிடமிருந்து எப்போதும் விலகி இருக்கவே விரும்பினார். மகிழ்ச்சி, சோகம், பலவீனம், பரிதாபம் என பொதுவான மனிதர்களிடம் இருக்கும் எந்தவொரு பந்தமும் பாசமும் உணர்ச்சியும் இருந்திராதவர்; இந்த உலகில் வாழ்ந்தும் இந்த உலக நடைமுறைகளில் இருந்து முற்றிலும் அப்பாற்பட்டவராக வாழ்ந்தவரைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி விலகியே இருந்தனர். முடிவற்றுச் செய்துகொண்டிருந்த ராஜ்ய விவகாரங்களில் இருந்து விலகி நிற்கும் அரிய தருணங்களில் அவருடைய மகள் ஜீனத் உன் நிஸாவே ஒரே துணையாக இருந்தார். அவருமே முதுமையின் இறுதிப் படிகளில் இறங்க ஆரம்பித்திருந்தார். மிகவும் விசுவாசமாக அடங்கி ஒடுங்கி நடக்கும் கடைசி மனைவி உதய்புரி இன்னொரு ஆறுதலாக இருந்தார். ஆனால், அவருடைய மகன் காம் பக்ஷ் தனது மூடத்தனங்களாலும் தணியாத வேட்கையினாலும் ஆலம்கீரின் மனதை சுக்கு நூறாக உடைத்திருந்தார்.

ஒளரங்கஜீபின் குடும்ப வாழ்க்கை இருள் மண்டியதாக ஆனது. மூடத் தொடங்கிய கண்களைக் கொண்டு அன்புக்குரியவர்களின் இறப்பையே காண நேர்ந்தது. அன்புக்குரிய மருமகள் ஜனாப் பானு குஜராத்தில் மார்ச் 1705-ல் உயிர் துறந்தார். தந்தைக்கு எதிராகக் கலகம் செய்த அக்பர் அந்நிய நாட்டில் நாடு கடத்தப்பட்ட நிலையில் 1704-ல் இறந்திருந்தார். அதற்கும் முன்பாக மகளும் கவிஞருமான ஜேப் உன்னிஸா தில்லி சிறையில் 1702-ல் இறந்திருந்தார். ஆலம்கீரின் உடன்பிறந்த சகோதர சகோதரிகளில் இதுவரையிலும் உயிருடன் இருந்த குஹர் ஆரா பேஹம் 1706-ல் இறந்தார். அதைக் கேட்டதும் ஒளரங்கஜீப் வாய்விட்டுக் கதறி அழுதார். ஷாஜகானின் குழந்தைகளில் அவளும் நானும் மட்டும்தானே உயிருடன் இருந்தோம் என்று சொல்லிச் சொல்லி அழுதார்.

மே 1706-ல் மகள் மஹருன்னிஸாவும் இஸித் பக்ஷ் (முராத் பக்ஷின் மகன்) இருவரும் தில்லியில் ஒரே நேரத்தில் இறந்தனர். அடுத்த மாதம் இரண்டாம் அக்பரின் மகன் புலந்த் அக்தர் இறந்திருந்தார். ஆலம்கீரின் இரண்டு பேரக் குழந்தைகள் அவர் இறப்பதற்கு சற்று முன்னதாக 1707லேயே இறந்திருந்தனர். ஆனால் அவருடைய அமைச்சர்கள் இறுதிக்கட்டத்தில் இந்த சோகச் செய்திகளைச் சொல்லவேண்டாம் என்று கருதிச் சொல்லாமலே விட்டுவிட்டனர்.

15. மராட்டியர்கள் மொகலாயப் பகுதிகளில் கொடுத்த நெருக்கடிகள், 1706-1707.

அஹமது நகர் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தபோது ஆலம்கீர் எதிர்மறை அம்சங்களையெல்லாம் விட்டுவிட்டே புறப்பட்டிருந்தார். ஆனால் அந்த நகருக்குத் திரும்பிவந்த பின்னர் அவரால் படைக்கு ஓய்வையோ நாட்டில் அமைதியையோ கொண்டுவர முடிந்திருக்கவில்லை. மே 1706 வாக்கில் மிகப் பெரிய மராட்டியப் படை ஆலம்கீர் முகாமிட்டிருந்த பகுதிக்கு நான்கு மைல் தொலைவில் வந்து நின்று அச்சுறுத்த ஆரம்பித்திருந்தது. அங்கிருந்து அவரகளை விரட்டியடிக்க கான் இ ஆலம் மற்றும் பிற தளபதிகள் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். அவர்கள் நீண்ட நேரம் கடுமையாகப் போரிட்டு மராட்டியப் படையை விரட்டியடித்தனர்.

குஜராத்தில் மொகலாயர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கந்தேஷ் பகுதியில் மதுபான உற்பத்தியாளராக இருந்த இனு மண்ட், நெடுஞ்சாலை மொகலாய வணிகக் குழுக்களைத் தாக்கவும் ஆரம்பித்திருந்தார். தன யாதவையும் அவருடைய படையையும் சேர்த்துக்கொண்டு வணிகத்தில் சிறந்து விளங்கிய பரோடாவைக் கடுமையாகத் தாக்கினார் (1706). அந்தப் பகுதியின் தளபதியாக இருந்த நாஸர் அலியை மராட்டியப்படை தோற்கடித்து அவருடைய படை வீரர்களைச் சிறைப்பிடித்தது. அதுபோல், ஒளரங்காபாத் பிராந்தியத்தை மராட்டியப் படைகள் தன யாதவ் மற்றும் பிற தளபதிகள் தலைமையில் அடிக்கடித் தாக்கியது.

ஜூலையில் மராட்டியப் படை வாகின்கெரேயில் தாக்குதல் நடத்தியது. ஆலம்கீர் தனது தளபதி தர்பியத் கானை அனுப்பி அவர்களைத் தண்டிக்க உத்தரவிட்டார். பிடியா நாயக்கர் ஹிந்து ராவுடன் சேர்ந்துகொண்டு பேணுகொண்டாவைக் கைப்பற்றினார். பல மாதங்களாக சம்பளமே கிடைக்காமல் சோர்ந்துபோயிருந்த மொகலாய கோட்டைக் காவலருக்கு கையூட்டு கொடுத்து அதைக் கைப்பற்றியிருந்தனர். இந்த வெற்றியையடுத்து மராட்டியர்கள் பீஜப்பூர் கர்நாடகாவின் தலைநகரான சேராவை நோக்கிப் படையெடுத்தனர். 1704 வாக்கில் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைத் தாக்கினர். கர்நாடகத் தளபதியான தாவுத் கான் பின்னர் படையுடன் வந்து பேணுகொண்டாவைக் கைப்பற்றிக் கொண்டார். மொகலாய அதிகாரி சியாதத் கான் துப்பாக்கிக் குண்டுகள் தாக்கி இரு கண்களையும் இழந்திருந்தார். பேரட்கள் அவரைப் பிணைக்கைதியாகச் சிறைப்பிடித்தனர். இதே நேரத்தில் வசந்தகர் கோட்டையையும் மொகலயரிடமிருந்து கைப்பற்றியிருந்தனர்.

செப் 1706 வாக்கில் மழைக்காலம் முடிவுக்கு வந்ததும் மராட்டியப் படைகளின் தாக்குதல் பத்து மடங்கு அதிகரித்தது. பேரார், கந்தேஷ் போன்ற பகுதிகளை மீட்க தன யாதவ் சீறிப் பாய்ந்தார். ஆனால் மிராஜ் பகுதியில் முகாமிட்டிருந்த நஸ்ரத் ஜங் மராட்டியப் படையை பீஜப்பூருக்கு வெகு அப்பால் கிருஷ்ணா நதிக்க்கும் அப்பால் விரட்டியடித்தார். ஒளரங்காபாதிலிருந்து மொகலாய முகாம் நோக்கி வந்துகொண்டிருந்த தானிய, வணிக வண்டிகளை அஹமது நகருக்கு 24 மைல் தொலைவில் இருக்கும் சந்தா பகுதியில் மராட்டியப் படை வழிமறித்துத் தாக்கியது.

16. ஒளரங்கஜீபின் இறுதி நாட்கள்

ஒளரங்கஜீபின் படைகளுக்கு இப்படியான நெருக்கடிகள் வரத்தொடங்கியநிலையில் மொகலாய முகாமுக்குள் ஏற்பட்ட உள் மோதல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கின. கர்வமும் அதீத ஆசையும் கொண்டிருந்த இளவரசர் முஹம்மது ஆஸம் மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த ஆட்சியாளர் தானே என்று முடிவு செய்து தடையாக வரும் அனைவரையும் அகற்றத் தீர்மானித்தார். அதனால் ஷா ஆலமின் மூன்றாவது மகனும் திறமைசாலியுமான அஸிம் உஸ் ஷான் குறித்து ஆலம்கீரிடம் பொய்யான தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார். பாட்னாவில் ஆட்சிப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்த அஸிம் கானை அங்கிருந்து திரும்பிவரச் சொல்லும்படிச் செய்தார். பிரதம அமைச்சர் ஆஸாத் கான் உட்பட பல மொகலாய முன்னணி பிரமுகர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டார். போட்டி வாரிசான காம் பக்ஷை சரியானன நேரத்தில் தாக்கிக் கொல்லவும் திட்டமிட்டார். இந்தத் திட்டங்கள் நாளுக்கு நாள் வலுவடைந்து வரவே அதைத் தெரிந்துகொண்ட ஆலம்கீர், இளவரசர் காம் பக்ஷுக்கு உதவியாக வீரமும் விசுவாசமும் மிகுந்த சுல்தான் ஹுஸைனை (மீர் மலகை) நியமித்தார்.

1707 பிப்ரவரி தொடக்கத்தில் ஒளரங்கஜீபின் உடல் நிலை மீண்டும் மோசமானது. இந்தக் கட்டத்தில் அவருக்கு அடிக்கடி இப்படி ஏற்பட ஆரம்பித்திருந்தது. ஒவ்வொருமுறையும் உடல் நலம் தேறியதும் மக்க்களைச் சந்தித்து அரசவைப் பணிகளில் ஈடுபட்டு வருவார். ஆனால் இந்த முறை ஏற்பட்ட நோயிலிருந்து அவரால் மீளமுடியவில்லை. தவிர்க்க முடியாத சம்பவம் கூடிய விரைவில் நடக்கப்போகிறது என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. ஆஸமின் ஆசை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருவதும் நாட்டில் கலகமும் குழப்பமும் ஏற்படப்போகிறது என்பதும் அங்கு கூடியிருக்கும் நபர்களில் பலருக்கு இளவரசரால் நெருக்கடி வரப்போகிறது என்பதும் புரிந்தது. எனவே பீஜப்பூரின் சுபேதாராக காம் பக்ஷை நியமித்து பெரும் படையுடன் தொலைதூரத்துக்குச் செல்லும்படி 9 பிப்ரவரியில் அனுப்பிவைத்தார். நான்கு நாட்கள் கழித்து முஹம்மது ஆஸமை மால்வாவுக்கு ஆட்சியாளராக நியமித்து அனுப்பிவைத்தார். ஆனால் அந்த தந்திரக்கார இளவரசர், ஆலம்கீரின் மரணம் விரைவில் சம்பவிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு நின்று நின்று மெதுவாகவே புறப்பட்டுச் சென்றார்.

கடைசி மகனையும் தொலைதூரத்துக்கு அனுப்பிய நான்கு நாட்களுக்குப் பின் முதுமையடைந்து தளர்ந்திருந்த ஆலம்கீர் தீவிர காய்ச்சலில் விழுந்தார். இருந்தும் மூன்று நாட்கள் தொடர்ந்து அரசவைக்கு வந்தார். தினமும் ஐந்து நேரத் தொழுகைகளை முழு அளவில் செய்தார்.

‘கண்ணிமைக்கும் தருணத்தில்
நொடிப் பொழுதில்
ஒருமுறை மூச்சு இழுத்து விடும் காலத்துக்குள்
உலகமே மாறிவிடும்’

என்று முணுமுணுத்தபடியே இருந்தார். மகன்கள் ஆஸமுக்கும் காம் பக்ஷுக்கும் இரண்டு கடிதங்கள் இந்தக் கடைசி கட்டத்திலும் எழுதினார். சகோதர பாசத்துடன் அமைதியாக நிதானமாக வாழவேண்டும் என்றும் உலகியல் விஷயங்களின் பயனின்மை பற்றியும் விளக்கிச் சொல்லி அறிவுரை வழங்கியிருந்தார்.

20, பிப், 1707 வெள்ளிக்கிழமை காலையில் ஒளரங்கஜீப் படுக்கையறையில் இருந்து எழுந்து வந்தார். ஃபஜர் தொழுகை (வைகறைத் தொழுகை) செய்துமுடித்தார். ஜெபமாலையை உருட்ட ஆரம்பித்தார். ஏக இறைவன் மீதும் அவரது ஒரே இறைத்தூதர் மீதுமான விசுவாசத்தை வெளிப்படுத்தும் புனித வசனங்களை உச்சரித்தார். மெள்ள நினைவு தப்பியது. மூச்சு முட்டியது. உடல் வலு முழுவதுமாக இழந்தநிலையிலும் கலீமா ஓதுவதை உதடுகள் நிறுத்தவில்லை. ஜெபமாலை உருட்டுவதை விரல்கள் நிறுத்தவில்லை. எட்டு மணி அளவில் கலீமா ஓதுவது நின்றது. ஜெபமாலை உருள்வது நின்றது.

வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் உயிர் பிரியவேண்டும் என்றே அவர் எப்போதும் விரும்பியிருந்தார். ஏக இறைவன், எல்லையற்ற அருளாளன் தனது மார்க்க விசுவாசியின் அந்தப் பிரார்த்தனைக்கு செவிசாய்த்தார்.

22-ம் தேதிவாக்கில் முஹம்மது ஆஸம் வந்து சேர்ந்தார். தந்தையின் மறைவுக்கு அழுதுவிட்டு சகோதரி ஜீனத் உன் நிஸா பேகத்துக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சிறிது தூரம் பாடையைச் சுமந்துசென்றார். பின் உடலை தெளலதாபாதுக்கு அருகில் இருந்த கெளல்தாபாத் கல்லறைக்கு அனுப்பிவைத்தார். அங்குதான் சூஃபி சேக் ஜின் உத் தீன் சமாதியும் இருந்தது.

மேலே குவி மாடமோ கீழே பளிக்குக் கல்வெட்டோ எதுவும் இல்லாத மிக எளிய கல்லறை. மேலே இருக்கும் கற்பாளத்தில் செடிகள் வளர்க்க தொட்டியில் மண் நிரப்பப்பட்டிருந்தது (தில்லிக்கு வெளியே இருக்கும் சகோதரி ஜஹன்னராவின் கல்லறையைப் போல்). மாபெரும் மொகலாயப் பேரரசர்களில் ஒருவராக இருந்தவரின் இறுதி மிச்சங்கள் அங்கு புதையுண்டு கிடக்கின்றன.

***

பின்னிணைப்பு

இளவரசர் முஹம்மது ஆஸமுக்கு ஆலம்கீரின் கடிதம்

அல்லாவின் திருப்பெயரால் உனக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

முதுமை வந்துவிட்டது. தளர்ச்சி அதிகரித்துவருகிறது. கால்கள் வலுவிழந்துவிட்டன. தனியாகவே உலகுக்கு வந்தேன். தனியாகவே விடைபெறப்போகிறேன். நான் யார் என்பது தெரியாது; என்ன செய்கிறேன் என்பது தெரியாது. மார்க்க விஷயங்கள் அல்லாதவற்றில் நான் கழித்த நாட்கள் எல்லாம் மனதில் வருத்தத்தையே தருகின்றன. நான் நல்லாட்சி வழங்கவில்லை. விவசாயத்தை வளர்த்தெடுக்கவில்லை.

விலைமதிக்க முடியாத வாழ்க்கை வீணாக்கப்பட்டுவிட்டது. ஏக இறைவன் என் அருகிலேயே இருந்தார். ஆனால் என் இருண்ட கண்களுக்கு அவரின் மகத்துவம் தெரியவில்லை. வாழ்க்கை அநித்தியமானது. கடந்த காலத்தின் தடயங்கள் அழிந்துவிட்டன. எதிர்காலமோ நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

காய்ச்சல் குணமாகிவிட்டது. எலும்பும் தோலும் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. பீஜப்பூருக்குச் சென்றிருந்த என் மகன் காம் பக்ஷ் அருகில் இருக்கிறான். ஆனால் நீயோ அவனைவிட மேலும் நெருக்கமாக இருக்கிறாய். அன்பு ஷா ஆலம் வெகு தொலைவில் இருக்கிறான். பேரன் முஹம்மது ஆஸின் அல்லாவின் கட்டளையினால் ஹிந்துஸ்தானுக்கு வந்து சேர்ந்துவிட்டான்.

ஏக இறைவனை விட்டுப் பிரிந்த என்னைப் போலவே படைவீரர்களும் நிராதரவாக, நிலைகுலைந்து, குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். நான் இப்போது பாதரசம்போல் நிலைகொள்ளாமல் உருண்டுகொண்டிருக்கிறேன். அல்லா நம்முடன் எப்போதும் இருக்கிறார் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. இந்த உலகுக்கு நான் எதையும் கொண்டுவரவில்லை; நான் செய்த பாவங்களின் கனிகளை மட்டுமே சுமந்துசெல்லப்போகிறேன். எனக்கு என்ன தண்டனை தரப்படும் என்பது தெரியவில்லை. ஏக இறைவன் எல்லையற்ற அருளாளன் தான்; ஆனால் நான் செய்தவற்றுக்கு என்ன கிடைக்கும் என்ற பதற்றம் என்னைத் தொற்றிக் கொண்டிருக்கிறது. என்னைவிட்டே நான் பிரிந்து செல்லும்போது என்னுடன் யார்தான் துணையிருப்பார்?

காற்று எப்படி வீசினாலும்
என் படகை நான் நதியில் செலுத்துகிறேன்.

ஏக இறைவன் அவனது அடிமைகளை என்றும் காப்பாற்றுவார். ஆனால், இந்த உலகில் கடவுளின் படைப்புகளும் மார்க்கத்தவர்களும் அநீதியாக அழிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என் மகன்களுக்கு இருக்கிறது.

என் இறுதி ஆசிகளை பேரன் பஹதூருக்குத் (பிதார் பக்துக்குத்) தெரிவிக்கவும்.நான் விடைபெறவிருக்கும் இந்த தருணத்தில் அவனைப் பார்க்கமுடியவில்லை. அவனை சந்திக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேபோகப்போகிறது. பேகம் சோகத்தில் ஆழ்ந்திருப்பது தெரிகிறது. அல்லா அனைத்து துயரங்களையும் போக்க வல்லவர். குறுகிய சிந்தையும் பார்வையும் இருந்தால் சோகத்தைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது.

விடைபெறுகிறேன்… விடைபெறுகிறேன்… விடைபெறுகிறேன்…

காம் பக்ஷுக்கு ஒளரங்கஜீப் எழுதிய கடைசி கடிதம்

அன்பு மகனே…இதயத்துக்கு நெருக்கமானவனே… நான் அதிகாரத்துடன் வலுவுடன் இருந்த நாட்களில் அல்லாவின் விருப்பத்துக்கு உங்களை ஒப்புக்கொடுக்கும்படி அறிவுரை சொல்லியிருந்தேன். என்னால் முடிந்த அளவுக்கு உங்களை மார்க்க வழியில் செல்லவைக்கவும் முயற்சி செய்திருந்தேன். அல்லாவின் விருப்பம் வேறாக இருந்துவிட்டது. நீங்கள் யாரும் என் சொல் பேச்சைக் கேட்கவில்லை. இதோ நான் இறக்கப் போகிறேன். இதனாலும் எந்தப் பலனும் விளையப் போவதில்லை. நான் செய்த செயல்கள் மற்றும் பாவங்களின் தண்டனைகளைப் பெறப் போகிறேன். தனியாகவே இந்த உலகுக்கு வந்தேன். இந்த மாபெரும் பயணத்தை முடித்துவிட்டு தனியாகவே போகப் போகிறேன். இந்தப் பெரு வழிப் பயணத்தில் என் கண் முன்னே அல்லாவைத் தவிர வேறு யாருடைய முகமும் தென்படவில்லை.

படைகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் என்ன ஆகும் என்ற பதற்றமே என் மனதை உருக்குலைக்கின்றன. அல்லா தன் விசுவாசிகளை நிச்சயம் நன்கு கவனித்துக்கொள்வார்தான். இருந்தும் முஸ்லிம்களும் என் மகன்களும் செய்யவேண்டிய கடமைகளும் இருக்கவே செய்கின்றன. நான் முழு வலிமையுடன் இருந்தபோதுகூட அனைவரையும் என்னால் பாதுகாக்க முடிந்திருக்கவில்லை. இப்போதோ நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலையை எட்டிவிட்டேன். என் கால்கள் தளர்ந்துவிட்டன. சுவாசம் குறையத் தொடங்கிவிட்டது. இனி மீட்சிக்கு வழியில்லை. பிரார்த்தனை செய்வதைத் தவிர இப்போது செய்ய என்ன இருக்கிறது?

உதய்புரி பேகம் என்னை அருகில் இருந்து கவனித்துக்கொள்கிறார். மறு உலகுக்கும் என்னுடனே வந்துவிட வேண்டும் என்று விரும்புகிறார். அவளையும் குழந்தைகளையும் அல்லாவிடம் ஒப்படைக்கிறேன். என் உடல் நடுங்குகிறது. விடைபெறப் போகிறேன். உலகியல் விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர்கள் எல்லாம் ஏமாற்றுக்காரர்களே. அவர்கள் கோதுமையைக் காட்டி வைக்கோலைக் கொடுத்துவிடுவார்கள். அவர்களை நம்பி எதையும் செய்யாதே. இறைவன் தரும் கட்டளைகள், சமிக்ஞைகள் இவற்றைக் கொண்டே செயல்படவேண்டும். தாரா ஷுகோ தவறான செயல்களைச் செய்தார். எனவே தன் இலக்கை அடையமுடியாமல் தோற்றுவிட்டார். தனக்குக் கீழே இருந்தவர்களுக்கு முன்பைவிட அதிக சம்பளம் கொடுத்தார். ஆனால், அவருக்கு ஒரு உதவி தேவைப்பட்டபோது யாரிடமிருந்தும் எதுவும் கிடைக்கவில்லை. அவர் சோகத்தில் ஆழ்ந்தார். எனவே அகலக் கால் வைக்காதே.

சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். விடைபெற்றுக் கொள்கிறேன். குடியானவர்களும் பொது மக்களும் கஷ்டப்படாமல் பார்த்துக்கொள். இஸ்லாமியர்கள் கொல்லப்படாமல் பார்த்துக்கொள். நீ இதைச் செய்யத் தவறினால் பழிபாவமும் தண்டனையும் எனக்கே வந்து சேரும்.

(இந்திய ஆஃபீஸ் எம்.எஸ். 1344, 26)

ஒளரங்கஜீபின் உயில்

(இந்தியா ஆஃபீஸ் நூலகம், எம்.எஸ். 1344, 49. ஒளரங்கஜீப் தன் கைப்பட எழுதி தன் தலையணைக்கடியில் வைத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது).

என் வாழ்க்கையில் நான் நிராதரவானவனாகவே இருந்தேன். இப்போதும் அப்படியே விடைபெற்றுச் செல்கிறேன். ஆட்சிக்கு வரவிருக்கும் மகன் யாராக இருந்தாலும் காம் பக்ஷுக்கு, பீஜப்பூர், ஹைதராபாத் ஆகிய இரண்டின் ஆட்சிப் பொறுப்போடு அவர் திருப்தியடையும்பட்சத்தில், நெருக்கடி தரக்கூடாது.. ஆஸாத் கானைவிட மிகச் சிறந்த வாஸிர் இதுவரை இருந்ததும் இல்லை. இனிமேலும் வரப்போவதும் இல்லை. தக்காணத்தின் திவான் தினாத் கான் மொகலாய அரசின் பணியாளர்களில் மிக மிகச் சிறந்தவர். முஹம்மது ஆஸம் ஷாவை மதிப்பும் மரியாதையும் கொடுத்து நடத்தவும். என் ஆயுள் காலத்தில் பங்கிட்டுக் கொடுத்திருப்பதுபோலவே இருந்துகொள்ள சம்மதித்தால் எந்த சண்டையும் உயிரிழப்பும் ஏற்படாது.

வாரிசுரிமையாகப் பதவியும் பொறுப்பும் பெறும் என் பணியாளர்களைப் பதவியில் இருந்து விலக்கவோ தொந்தரவுக்கு உள்ளாக்கவோ செய்யவேண்டாம். ஆட்சிக் கட்டிலில் ஏறுபவர் ஆக்ரா மற்றும் தில்லி சபா ஆகிய இரண்டில் ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாம். ஆக்ராவைப் பெற்றுக்கொள்ள சம்மதிப்பவருக்கு ஆக்ரா, மால்வா, குஜராத் மற்றும் அஜ்மீர் ஆகிய நான்கு பகுதிகளும் அவற்றைச் சார்ந்திருக்கும் பகுதிகளும் கிடைக்கும். கந்தேஷ், பேரார், ஒளரங்காபாத் மற்றும் பிடார் ஆகிய நான்கு தக்காணப் பகுதிகளும் அவர் நிர்வாகத்தின் கீழ் இருக்கும். தில்லியைப் பெற விரும்பும் மகனுக்கு தில்லி, பஞ்சாப், காபுல், முல்தான், டால்டா, காஷ்மீர், வங்காளம், ஒரிஸ்ஸா, பிஹார், அலஹாபாத், மற்றும் அயோத்யா ஆகியவை கிடைக்கும்.

0

ஒளரங்கஜீப் எழுதியதாகச் சொல்லப்படும் இன்னொரு உயில் (அகிம் இ ஆலம்கிரியில் இடம்பெற்றிருக்கிறது) ஹமீத் உத் தீன் கான் பஹதூருக்கு எழுதப்பட்டிருக்கிறது. அதில்:

எல்லாப் புகழும் இறைவனுக்கே. இறையச்சம் கொண்டவர்களுக்கும் மார்க்கப் பற்று கொண்டவர்களுக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

எனது இறுதி ஆசையாக – உயிலாக சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.

முதலாவதாக, பெரும் பாவங்கள் செய்தவனாகிய என் சார்பாக புனித ஹஸனின் கல்லறைக்கு பணிந்து பட்டாடை போர்த்தி வணக்கம் தெரிவிக்கவேண்டும். ஏனென்றால் பாவக் கடலில் மூழ்குபவர்களுக்கு எல்லையற்ற அருளாளனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதைத் தவிர மீட்சிக்கு வேறு வழியே இல்லை. என் சார்பாக இந்தப் புனிதக் கடமையை என் மகன் இளவரசன் அலியா ஆஸம் செய்யவேண்டும்.

இரண்டாவதாக, நான் நெய்த தொப்பிகள் விற்றுக் கிடைத்த தொகை மஹால்தார் ஆயியா பெய்க் வசம் இருக்கிறது. அதிலிருந்து நான்கு ரூபாய் இரண்டு அணாக்கள் எடுத்து பாவப்பட்ட என் உடம்பை மூடும் துணியை வாங்கிக்கொள்ளவும். குர்ரான் பிரதியெடுத்ததற்குக் கிடைத்த தொகையாக ரூ 305 என் பையில் இருக்கிறது. என் மரண ஊர்வல நாளில் ஃபகிர்களுக்கு அந்தத் தொகையைப் பிரித்துக் கொடுத்துவிடவும். ஷியா முஸ்லிம்கள் குர்ரான் பிரதியெடுத்து சம்பாதித்த தொகையை எப்படி வேண்டுமானாலும் பார்க்கட்டும். பிண ஆடை அல்லது வேறு எந்தக் காரியத்துக்கும் செலவிடவேண்டாம்.

மூன்றாவதாக, இளவரசர் ஆஸமின் பிரதிநிதியிடமிருந்து தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்ளவும். என் மகன்களில் அருகில் இருக்கும் மகன் அவன்தான். முறைப்படியான மற்றும் முறையற்ற இறப்புச் சடங்குகள் எல்லாம் செய்யும் கடமையும் அவனுக்குத்தான் உண்டு. இந்த பாவப்பட்ட மனிதன் (ஒளரங்கஜீப்) அவை எதற்கும் பொறுப்பல்ல. ஏனென்றால் இறந்தவர்கள் எல்லாம் உயிருடன் இருப்பவர்களின் தயையை இந்த விஷயத்தில் எதிர்பார்த்து நிற்பவர்களே.

நான்காவதாக, மார்க்கப் பாதையில் இருந்து வழுவி நடந்த இந்த நாடோடியின் தலையை எதைக் கொண்டும் மூடாமல் புதையுங்கள். ஏனெனால் தலையை மூடாமல் எல்லையற்ற அருளாளனின் முன்னால் கொண்டு நிறுத்தப்படுபவர்களுக்கு அவர் கூடுதல் கருணை காட்டுவார்.

ஐந்தாவதாக, என் சவப்பெட்டியை காஜி எனப்படும் முரட்டு வெள்ளைத் துணி கொண்டு போர்த்துங்கள். கல்லறைக்கு மேற்கூரை வேண்டாம்; புதிய வழக்கங்களாக இறுதி ஊர்வலத்துக்கு இசைக் கலைஞர்களை நியமிக்கவேண்டாம். ஆண்டு நினைவுக் கொண்டாட்டங்கள் வேண்டாம்.

ஆறாவதாக, இந்த வெட்கம் கெட்ட மனிதருடன் பாலைவனங்களிலும் காடு மலைகளிலும் (தக்காணத்தில்) துணையாக அலைந்து திரிந்த விசுவாசமான நிர்கதியாகி நிற்கும் பணியாளர்களை, அடுத்து வாரிசுரிமையாக ஆட்சிக்கட்டிலில் ஏறுபவர் அன்புடன் நடத்தவேண்டும். அவர்கள் ஏதேனும் தவறு செய்தாலும் பெருந்தன்மையுடன் அவர்களை மன்னித்து அந்தக் குற்றங்களைப் பொறுத்துக்கொள்ளவும்.

ஏழாவதாக, பாரசீகர்களின் தேசத்தைப் போல் உலகில் மிகச் சிறந்த நிர்வாகப் பணியாளர்கள் (முதாசத்தி) எங்கும் இல்லை. அரசர் ஹுமாயூனின் காலத்திலிருந்து இன்று வரையிலும் பாரசீகர்கள் போரை வெறுத்ததில்லை. அவர்களுடைய வலிமையான கால்கள் ஒருபோதும் நடுங்கியதில்லை. மேலும் அவர்கள் ஒருபோதும் தமது மாலிக்களுக்கு துரோகமோ கீழ்படிதலின்மையையோ காட்டியதில்லை. அவர்கள் தம்மை மதிப்பும் மரியாதையுடன் நடத்தும்படிக் கேட்டுக்கொள்வார்கள். எனவே அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் சிரமம். ஆட்சிக்கு வருபவர் எப்பாடுபட்டாவது என்ன தந்திரங்கள் செய்தாவது அவர்களுடன் நல்லுறவைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும்.

எட்டாவதாக, துராணி மக்கள் காலாட் படையினராகவும் இருந்திருக்கிறார்கள். முன்னேறிச் சென்று தாக்குதல், சூறையாடுதல், இரவு நேரத் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவற்றில் கை தேர்ந்தவர்கள். போர்க்களத்தில் இருந்து பின்வாங்கும்படிச் சொன்னால் எந்தவித வருத்தமோ சந்தேகமோ அவமானமோ அடையாமல் நடந்துகொள்வார்கள். உயிரே போனாலும் போர்க்களத்தில் பின்வாங்க மாட்டேன் என்று சொல்லும் அடி முட்டாள் ஹிந்துஸ்தானிகளைவிட 100 மடங்கு உயர்ந்தவர்கள். துராணிகளுக்கு முடிந்த சலுகைகளையெல்லாம் தரவேண்டும். வேறு எந்த இனத்தினராலும் செய்ய முடியாத, தேவையான சேவைகளை இவர்களால்தான் சிறப்பாகச் செய்யமுடியும்.

ஒன்பதாவதாக, பர்ஹா சையதுகளுக்கு ‘(அல்லாவுக்கு நெருக்கமானவர்களுக்கு) உறவினருக்கு அவருடைய உரிய தொகையைக் கொடுத்துவிடவும்’ என்ற புனித வசனத்துக்கு இணங்க முழு சலுகையையும் மரியாதையும் தந்துவிடவும். இதில் எந்த சுணக்கமும் காட்டவேண்டாம். ’உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!’ என்ற புனித வசனத்துக்கு ஏற்ப அவர்கள் மீது அன்பு காட்டுவதே இறைக்கடமை. இவர்கள் தொடர்பாக எந்தவொரு கவனக்குறைவும் வேண்டாம். இம்மையிலும் மறுமையிலும் அதன் பலன்கள் தொடர்ந்துவரும்.

பர்ஹா சையதுகளை மிகுந்த அக்கறையுடன் கையாளவேண்டும். அவர்கள் மீதான அன்பு குறையவே கூடாது. அதேநேரம் அவர்களுடைய பதவி, அந்தஸ்தை உயர்த்திவிடவும்கூடாது. ஏனென்றால் ஆட்சி நிர்வாகத்தில் வலிமையான கூட்டாளி என்பவர் எந்நேரமும் ஆட்சியைக் கைப்பற்றிவிடக்கூடும். ஆட்சி அதிகாரத்தில் அவர்களுக்கு கொஞ்சம்போல் இடம் கொடுத்தாலும் நமக்குத்தான் வீழ்ச்சி வந்து சேரும்.

பத்தாவதாக, ஆட்சிக் கட்டிலில் அமர்பவர் ஒரே இடத்தில் எப்போதும் இருக்கக்கூடாது. நகர்ந்துகொண்டே இருக்கவேண்டும். ஒரு வேலையும் செய்யாமல் சுற்றிக்கொண்டிருப்பதுபோலவோ ராஜ்ய நிர்வாக விஷயங்களில் இருந்து விலகி மிகுந்த ஓய்வை அனுபவிப்பதுபோலவோ தோன்றலாம். ஆனால் உண்மையில் அப்படி நகர்ந்துகொண்டேயிருப்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரச்னைகளில் இருந்து விடுதலை பெற்றுத் தரும்.

பதினொன்றாவதாக, உங்கள் மகன்களை நம்பாதீர்கள். மிகவும் நெருக்கமாக யாருடனும் பழகவேண்டாம். தாரா ஷுகோவை ஹாஜகான் இப்படிச் சற்று விலக்கி வைத்திருந்தால் அவருக்கு இப்படியான சோக முடிவு வந்து சேர்ந்திருக்காது. மன்னரின் வாக்கு என்பது தரிசு நிலம் போன்றது என்பதை மனதில் வைத்துக்கொள்.

பனிரெண்டாவதாக, அரசாங்கத்தின் மிக முக்கியமான அம்சம் என்பது மன்னருக்கு ராஜ்ஜியத்தில் நடக்கும் அனைத்தும் தெரிந்தாகவேண்டும். ஏதேனும் ஒன்றில் அலட்சியம் காட்டினாலும் பின்னர் நீண்ட காலத்துக்கு வருந்த நேரிடும். சிவாஜி விஷயத்தில் (நான்) காட்டிய சிறிய அலட்சியத்தின் காரணமாக என் வாழ் நாள் முழுவதும் மராட்டியர்களுக்கு எதிராக கஷ்டப்படவேண்டிவந்துவிட்டது.

12 என்பது எண்களில் ஆசிர்வதிக்கப்பட்டது. எனவே 12 வழிகாட்டுதல்களுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

(நான் சொல்லியிருப்பவற்றை) புரிந்துகொண்டு நடந்தால்
உன் அறிவை உச்சி முகர்ந்து மெச்சிக் கொள்ளலாம்.
இல்லையென்றால் அந்தோ பரிதாபம் அந்தோ பரிதாபம் அந்தோ பரிதாபம்!

(தொடரும்)

___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *