‘இந்து தமிழ் திசை’ சென்னைப் புத்தகக் காட்சியின்போது வெளியிட்ட சிறந்த பத்து நூல்களில் ஒன்றாக இடம்பிடித்திருந்தது எழுத்தாளர் செஞ்சி தமிழினியனின் ‘ஊத்தாம் பல்லா’ நாவல்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாரப் பழங்குடி இருளர்களின் வாழ்க்கைதான் இந்நாவலின் கதைக்களம். பழங்குடிகள், மீனவர்கள், மலைவாழ் மக்கள் ஆகியோர் குறித்து ராஜம் கிருஷ்ணன், கு. சின்னப்ப பாரதி, அறிவழகன், நாத சிவக்குமார், இமையம், என். டி. ராஜ்குமார் , பாலமுருகன், நஞ்சப்பன், ஆர். ரவிந்திரன், கலைச்செல்வி எனப் பலரும் இதற்குமுன் நாவல்கள் எழுதியுள்ளனர் என்றாலும், இந்நாவல் வடதமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ‘தும்பூர் சன்னியாசி ஏரிக்கரை’ சமவெளி நிலப்பகுதியில் வாழும் இருளர் பழங்குடிகளைப் பற்றி அச்சு, அசலாகப் பதிவு செய்திருப்பதால் அனைவரின் கவனத்தையும் பெற்றது.
‘ஊருக்கு எளப்பம் வண்ணாமூடு’ என்ற பேச்சு வழக்கு இன்றளவும் கிராமங்களில் புழக்கத்தில் உள்ளது. யாரும், எப்போதும் எளிய மக்கள்மீது எவ்வித வன்முறையையும் நடத்தலாம் என்பதே மேற்கண்ட பேச்சு வழக்கின் பொருள். இருளர் பழங்குடிகள் சமூகத்தின் விளிம்புநிலையில் குரலற்றுக்கிடப்பவர்கள். இன்றுவரை கல்வி இல்லை. குடும்ப அட்டை இல்லை. பட்டாவுடன் வீடு இல்லை. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனை இல்லைகளைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல் தன் கை, கால்களை நம்பி கடுமையாக உழைத்து வாழும் சமூகம். தன் வயிற்றுப் பசிக்காக ஒருநாளும் திருட்டு, வழிப்பறி செய்வதில்லை. ஆணும் பெண்ணும் அத்தனை இயல்பாக இணைந்து எளிய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் பிடித்திருந்தால் போதும் ஒருதுண்டு மஞ்சள், ஒரு முழம் மஞ்சள் கயிற்றில் முடிந்துவிடுகிறது திருமணம். வயது, சீர்வரிசை பற்றிய எந்தக் கவலையும் இல்லை. கடப்பாறை, கொடுவாள், ஊத்தாம் பல்லா (சிறிய மண்பானை) இம்மூன்றும் இருந்தால் போதுமானது. வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்று வாழும் எளிய மக்கள்.
பெரிய உயிர்களைக் கொல்லுதல் இல்லை. வயல்காட்டு வரப்புகளில், புஞ்சை நிலங்களின் மல்லாட்டை அறுவடைக் காலங்களில் வரப்பு வளைகளில் கிடக்கும் எலிகளை வேட்டையாடுவது (ஊத்தாம் பல்லாவில் புகைபோட்டு பிடிப்பது), காடை, கெளதாரி, முயல், உடும்புகளுக்கு கண்ணி வைப்பது, மழைக்காலங்களில் புற்றுகளில் மருந்தூதி ஈசலைச் சேகரிப்பது, பாம்பு பிடிப்பது இவையே முதன்மையான தொழில். காலம்முழுக்க வேளாண் குடிகளுக்கு ஒத்தாசையாக இருப்பவர்கள். விஷக்கடிகளுக்கு மூலிகைகளை அறிந்து பயன்படுத்தும் ’மரபு அறிவு’ இவர்கள் இயற்கையிலே பெற்றது.
ஊரில் நீண்ட நாள் யாராவது உடல் நலமின்றிப் படுத்துக்கிடந்தால் ‘இருளன் பதி’ வைப்பார்கள். அதற்காக இருளர் குடியிருப்புகளில் ஒருசில ஆண், பெண் இருந்தனர். அவர்களைத் தேடி அழைத்துக்கொண்டு வருவார்கள். இரவு நேரங்களில் பதி வைக்கும் நிகழ்வு பெரும்பாலும் நடக்கும். பதி போட்ட சில நாட்களில் நோயில் படுத்திருந்தவர் எழுந்து நடப்பார். இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்புவரை சிற்றூர்களின் வாழ்க்கை இருந்தது. மாறிவரும் வாழ்க்கைமுறை, நகரமயமாக்கம், நவீன வாழ்க்கைமுறை போன்றவை, பிற யாவரை விடவும் பழங்குடிகளின் வாழ்க்கையை முற்றாகச் சிதைத்துவிட்டது. போதைப்பொருட்களின் பயன்பாடும், நவீனக் காலச்சாரங்களும் இவர்களையும் விட்டுவைக்கவில்லை.
இவ்வாறானச் சூழலில் ‘ஊத்தாம் பல்லா’ நாவல், சமவெளி இருளரின் மக்கள் பற்றிய பெரிதும் அறியப்படாத பல நிகழ்வுகளைக் கதைகளினூடே அறிமுகப்படுத்துகிறது. வேட்கையும் வேட்டையும், இசையும் அடவும், புழுதிப் படலம் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கதை சொல்லப்பட்டுள்ளது.
முதல் இரண்டு பகுதிகளிலும் சன்னியாசி ஏரிக்கரை இருளர் குடிசைகளில் வாழும் சுமார் 30க்கும் குறைவான குடும்பங்களின் அன்றாட நிகழ்வுகள், அவர்களின் பாடுகள், வலிகள், வேட்டைகள், குலதெய்வ வழிபாட்டு நிகழ்வுகள், ஒருவருக்கொருவர் உதவி வாழும் அழகிய இனக்குழு வாழ்க்கை முறைகள் என்று மிக இயல்பாகக் கதை நகர்கிறது. கதையில் வரும் மலையனூர் அம்மா இரவுவேளைகளில் குழந்தைகளுக்குக் கதை சொல்கிறாள். அவள் கதைகளில் ஒருகாலத்தில் வேட்டையில் இறந்த வீரப்பெண் ஒருத்தியின் நினைவாக எடுக்கப்பட்ட வீரக்கல் குறித்து கூறுகிறாள். கல்லாகிப்போன அப்பெண் தங்களைத் தெய்வமாகிக் காப்பதாக அம்மக்கள் நம்புகிறார்கள். அவளை ‘அல்லி’ என்றும், அக்கல்லை ‘அல்லிக்கல்’ என்றும் அழைத்து வணங்குகிறார்கள். இவ்வாறு அப்பகுதியின் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் அடையாளங்கள் கதைகளின் ஊடாகப் பின்னப்பட்டுள்ளது. அவை கதைக்கும் வலுவாகப் பொருந்திச் சேர்கின்றன. இருளர் இனமக்களின் வாழ்க்கையை மட்டும் கதையாக்கிச் செல்லாமல், அதனூடாக அப்பகுதியின் வரலாற்றுச் சின்னங்களின் பின்னே உள்ள சரித்திர நிகழ்வுகளையும் கோர்த்து வரலாற்றிற்கும் ஒரு நியாயம் செய்திருக்கிறார் செஞ்சி தமிழினியன்.
‘கன்னியம்மா’ திருவிழாவும், அதுசார்ந்த அவர்களின் அன்றாட வேலைகளிலும் இரண்டாம் பாகம் எழுதப்பட்டுள்ளது. களஆய்வில் நாவலாசிரியர் சேகரித்த பல்வேறு பாடல்கள் மிகவும் பொருத்தமான இடங்களில் ஒலித்து வாசிப்பாளரின் உடலைச் சிலிர்க்கச் செய்துவிடுகின்றன. நாவலின் எந்த இடத்திலும் கதையாசிரியர் தன்புலமையைக் காட்டாமல், களத்தில் நின்று வெகு இயல்பாக அம்மக்களின் வாழ்க்கையை உள்ளது, உள்ளவாறு பதிவுசெய்திருப்பது நாவலின்மீதான நம்பகத்தன்மையை, அம்மக்களின் ஊடான நெருக்கத்தை ஏற்படுத்துவிடுகிறது. ‘கற்பூரம் இல்லாம கெளம்பாது சாமி/ ஒருநாளும் திருநாளும்/ ஊராரு சொகந்தானா/ மொழங்காலு தண்ணில/ நம்ம விளையாடும் கரையில/ அலையே என் சிலையே/ வாம்மா நீ முன்னால’ என ஒலிக்கும் பாடல்கள் கதையினூடே நம்மை பரவசத்திற்குள்ளாக்குபவை. அவர்களின் சடங்குகளோடு நம்மை அழைத்துக்கொண்டுபோய் கன்னிமார் கோயில் முற்றத்தில் நிறுத்துபவை.
கணேசன், பழனி, செங்கேணி, சாஞ்ச காலன், சின்னபொண்ணு, மலையனூரம்மா, களவெட்டி, சடையன், தொப்பை, காசி, காத்தவராயன், சேட்டு, பரவதம், கதிர்வேலு இவர்கள்தான் இந்நாவலில் முதன்மையான கதாநாயகர்கள். சன்னியாசி ஏரிக்கரையோடும், பென்னகர் கிராம மண்ணோடும், மக்களோடும் காலத்தைத் தள்ளும் இவர்களிடம் புரோக்கர் மனோகர் வந்து ‘செங்கல் சூளையில் கல் அறுத்தால் அதிக பணம் கிடைக்கும். கல்லூடு கட்டி மற்றவர்களைப் போல நீங்களும் வாழலாம்’ எனப் பேசி மூளைச்சலவை செய்து முன்பணம் கொடுக்கிறார்.
‘கன்னியம்மாவுக்குத் திருவிழா நடத்தி அவளின் உத்தரவு பெற்ற கையோடு இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சன்னியாசி ஏரிக்கரை குடிசைகளிலிருந்து லாரியில் புறப்பட்டு ஊத்தங்கரை பக்கம் மனிதர்கள் அற்ற காட்டுப் பகுதியை அடைகிறார்கள். மறுநாளில் இருந்து இந்த உலகத்தோடு எந்தத் தொடர்பும் அற்ற மனிதர்களாக மாற்றப்பட்டு பெருமுதலாளி ஒருவரின் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக மாட்டிக்கொள்ளும் துயரம். தார்சாலையில் ஒட்டிக்கிடக்கும் பறவையொன்றின் அடையாளமற்ற உடலைப் போல, சிதையும் வாழ்க்கை. கொடூர மிருகத்தின் கூரிய நகங்களில் கிழிபட்டு ரத்தம் சிந்தும் அவலம். செங்கல் சூளையிலும், கொடிய மனித மிருகங்களிடமும் இம்மக்கள்படும் அன்றாட அவஸ்தைகள், மனித உழைப்புச் சுரண்டல்கள், பாலியல் அத்துமீறல்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் போன்றவற்றை மிகத்துல்லியமாகப் பதிவு செய்கிறது இந்நாவல்.
செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக மாட்டிக்கொண்டு கொடிய சிறைவாழ்விற்குள்ளான தலைகாய்ந்த இம்மனிதர்கள் என்ன ஆகிறார்கள்? எப்படி மீள்கிறார்கள்? மீண்டவர் போக, மாண்டவர்களின் எண்ணிக்கை என்ன? சன்னியாசி ஏரிக்கரை இருளர் பழங்குடி குடிசைகளின் வாழ்வு நெடுகிலும் படர்ந்திருந்த அமாவாசையின் அடரிருட்டு விலகியதா? அந்த எளிய மக்களும் ஒளியைத் தரிசித்தார்களா? என்பதெல்லாம் ஒரு திரைப்படத்தின் விறுவிறுப்பானகாட்சியைப்போல இறுதிப் பகுதியில் அடுக்கி எழுதிக்கொண்டு போகும் சமார்த்தியத்தில் ‘ஊத்தாம் பல்லா’வை நாம் வாரி அணைத்துக்கொள்ளலாம்.
0
வெளியீடு: வேரல் புக்ஸ்
6, இரண்டாம் தளம், காவேரி தெரு,
சாலிகிராமம், சென்னை – 93.
விலை – 500.
தொடர்புக்கு : 95787 64322.
எளிய மக்கள்மீது எவ்வித வன்முறையையும் நடத்தலாம் என்பது காலம் காலமாக நடந்தேறி வருகிறது.
மக்களின் வாழ்வியலை அழகாக படைப்புகளாக தந்து இருக்கிறார் .
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
நன்றி
ஊதம்பல்லா நாவலில் தற்போது 138 பக்கங்களை கடந்துள்ளேன் கதை மாந்தர்களின் சேட்டு மட்டும் தொடர்ந்து என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரமாக உலா வருகிறார், ஒரு சுயம்புவை போல் உலா வரும் அந்த கதாபாத்திரம் நாவலின் ஓட்டத்தில் எப்படி மாறுமோ என்ற ஒரு சிறு பயம் எனக்கு தோன்றுகிறது, முழுவதும் வாசித்து இன்புற விரும்புகிறேன்…..
மக்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டியுள்ளார்கள் சிறப்பு அனைவரும் படிக்க வேண்டிய ஒரு சிறந்த நூல் இயல்பு
நன்றி
உண்மைதான் எளிய மக்களின் வாழ்வியலை மிகத் தெளிவாக எழுத்தாளர் பதிப்புத்துள்ளார் என்பதை தங்கள் முன்னுரையை படித்தாலே தெரிகிறது...
விரைவில் புத்தகத்தை வாசிக்கும் ஆவல் தோன்றியுள்ளது
மிக மிக சிறப்பு நாவல் சுருக்கம், சுருக்கமே இவ்வளவு சுவையாக இருக்கு, நாவல் எவ்வளவு இனிமையாக இருக்கும் வாழ்த்துகள்.
புலவர் திரு. அ . அமுல்ராஜ் அவர்களுடைய இந்த நூல் சுருக்கம், நாவலை வாங்கி படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை மிகுதிபடுத்துகிறது. தங்கள் மதிப்புரை செஞ்சி தமிழினியன் அவர்களின் “ஊத்தாம் பல்லா” நாவலுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாகவுள்ளது. தங்கள் தமிழ் பணி செம்மையாக தொடர நல்வாழ்த்துகள் ஐயா
அன்பு இளவல் முனைவர். அ . அமுல்ராஜ் அவர்களுடைய இந்த நூல் மதிப்புரை, நாவலை வாங்கி படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டுகிறது. தங்கள் மதிப்புரை செஞ்சி தமிழினியன் அவர்களின் “ஊத்தாம் பல்லா” நாவலுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாகவுள்ளது.
“செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக மாட்டிக்கொள்ளும் துயரம். தார்சாலையில் ஒட்டிக்கிடக்கும் பறவையொன்றின் அடையாளமற்ற உடலைப் போல, சிதையும் வாழ்க்கை. கொடூர மிருகத்தின் கூரிய நகங்களில் கிழிபட்டு ரத்தம் சிந்தும் அவலம்” எனும் தங்கள் கருத்து நாவலின் அழகியலுக்கு அணி சேர்ப்பதாக உள்ளது. சீரிய முயற்சி. தங்கள் தமிழ் பணி சிறப்புற நல்வாழ்த்துகள் தம்பி.