Skip to content
Home » பூமியும் வானமும் #3 – அமெரிக்கப் பெண்களின் நூற்றாண்டுக் கனவு

பூமியும் வானமும் #3 – அமெரிக்கப் பெண்களின் நூற்றாண்டுக் கனவு

ஹிலாரி க்ளிண்டன்

ஒரு பட்டாம்பூச்சி தன் சிறகை அசைத்தால் உலக வரலாறு மாறிவிடுமா? ஆம், மாறிவிடும். அமெரிக்காவிலிருந்து ஓர் உதாரணம்.

1920

1920இல் பெண்களுக்கு அமெரிக்காவில் ஓட்டுரிமை வழங்கப்படும்போது, ‘அடிமைத் தளையிலிருந்து ஜனாதிபதி பதவிக்கு’ என்னும் வாசகத்தோடு ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டது. அடுக்களையில் இருக்கும் பெண் ஒவ்வொரு படியாக ஏறிச்சென்று அனைத்து உரிமைகளும் பெற்று, இறுதி இலக்காக அமெரிக்க ஜனாதிபதி பதவியை அடைவார் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அடிமைத் தளையிலிருந்து ஜனாதிபதி பதவிக்கு

அடிமைத் தளையிலிருந்து ஜனாதிபதி பதவிக்கு

கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கடந்த பிறகு ஒரேயொரு பெண் அந்த இறுதி இலக்கை நோக்கி நெருங்கி வந்தார். அவர் ஹிலாரி க்ளிண்டன். 2016ஆம் ஆண்டில் டெமக்ராடிக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் பெற்று அமெரிக்க வரலாற்றில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் எனும் தகுதியை அவர் பெற்றார். அவருக்கு முன்பு இருந்தது ஒரே தடைதான். டொனால்ட் டிரம்ப்.

டிரம்ப்பின் தோல்வி உறுதி என்று தேர்தலுக்கு முந்தைய நாள்வரை கூறப்பட்ட நிலையில், ஹிலாரிதான் ஜனாதிபதி என ஓட்டு எண்ணும் நாள் காலை நியூஸ் வீக் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. ‘10,000 ஆண்டுகால ஆணாதிக்கம் இன்றுடன் அழிந்தது’ என்று முழங்கினார்கள் கட்சித் தொண்டர்கள்.

ஓட்டு எண்ணிக்கையைப் பார்த்தபடி வெற்றியைக் கொண்டாட நியூ யார்க்கின் ஜாவிட்ஸ் அரங்கில் மிகப்பெரும் கூட்டம் கூடியது. ஹிலாரி முன்னணியில் நீடித்தபடியே, வெற்றியின் இறுதிப்படியில் காலை வைக்கும் நேரம். கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி இலக்கை தொட்ட ஜாவிட் மியாண்டட் போல விஸ்கான்ஸின், மிஷிகன், பென்சில்வேனியா மூன்றையும் வென்று வெற்றிக்கனியைப் பறித்தார் டிரம்ப்.

ஹிலாரி ஜனாதிபதி ஆவார் என்று எதிர்பார்த்த கோடிக்கணக்கான பெண்ணியவாதிகள் கண்ணீரில் மூழ்கினார்கள். அவர் தொடவேண்டியிருந்த இறுதிப்படி ஒரு பகல் கனவாக மாறியது. இன்றுவரை அப்படியே நீடிக்கிறது.

அன்று வீழ்ந்தது ஹிலாரி மட்டுமல்ல, அவருடைய வலதுகரமாகச் செயல்பட்டுவந்த உதவியாளர் ஹியூமா ஆபிதீன் என்பவரும்தான். ஹியூமாவின் வீழ்ச்சிதான் ஹிலாரியின் வீழ்ச்சியாக மாறிப்போனது என்றும் சொல்லலாம். பெண்ணியவாதிகளின் நூற்றாண்டுக் கனவை வீழ்த்திய ஹியூமாவின் கதை மிகவும் பரிதாபகரமானது.

யார் இந்த ஹியூமா ஆபிதீன்?

ஹியூமாவின் பூர்விகம் இந்தியா. பெற்றோர் அமெரிக்காவில் குடியேறிய இந்திய முஸ்லிம்கள். அவர்களின் மகளாக மிஷிகன் மாநிலத்தில் பிறந்தவர் ஹியூமா. முற்போக்குக் கருத்துகளைக் கொண்ட இவர், டெமக்ராடிக் கட்சியால் ஈர்க்கப்பட்டு அதில் பணியாற்றத் தொடங்கினார். விரைவில் ஹிலாரியின் உதவியாளராக வளர்ந்து அவரது வலது கரமாகவும் திகழ்ந்தார். ‘ஹியூமா என்னுடைய இரண்டாவது மகள்’ என ஹிலாரி சொல்லும் அளவு நெருக்கம் இருந்தது.

ஹியூமா ஆபிதீன்

ஹியூமா ஆபிதீன்

அந்தோணி வெய்னர் எனும் டெமக்ராடிக் கட்சி காங்கிரஸ்மேன் (எம்பி மாதிரி) கண்ணில் படுகிறார் ஹியூமா. அவர்மீது காதல் வசப்படுகிறார் வெய்னர். ஹியூமாவை டேட்டிங்குக்கு அழைக்க, அவர் ஹிலாரியிடம் சொல்ல, ‘போய் வா’ என்று அனுப்பி வைக்கிறார் ஹிலாரி. அந்தோணி வெய்னர் பில் க்ளின்டனின் அன்புக்குப் பாத்திரமானவர். துடிப்பான, வளரும் அரசியல்வாதி.

யூதரான அந்தோணி வெய்னரும் முஸ்லிமான ஹியூமாவும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

2012

இரு ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் கழிகின்றன. ஹியூமா கர்ப்பம் தரிக்கிறார். வயிற்றில் பிள்ளை வளரும் அதே நேரத்தில் அந்தோணி வெய்னர் ஒரு பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார். ஒரு பெண்ணுடன் இணையத்தில் அவர் ‘செக்ஸ் சாட்’ நடத்தியது கண்டுபிடிக்கப்படுகிறது. சும்மா பேசியிருந்தால் பரவாயில்லை. நிர்வாணப் புகைப்படமும் அனுப்பியிருக்கிறார் அவர். விஷயம் வெளியே வந்து சந்தி சிரிக்கிறது. அந்தோணி வெய்னர் தன் பதவியை ராஜினாமா செய்கிறார்.

இரு ஆண்டுகள் கழிகின்றன. ஒபாமாவுக்கு அடுத்து ஹிலாரிதான் ஜனாதிபதி என்று அனைவரும் பரபரப்பாகப் பேசத் தொடங்கியிருந்த சூழல்.
நியூ யார்க் மேயர் தேர்தல் வந்தது. அந்தோணி வெய்னர் அதில் போட்டியிட முடிவு செய்தார். ஹியூமா அவரை மன்னித்துவிட்டதாகச் சொன்னார். இருவரும் ஜோடியாகத் தேர்தல் பிரசாரம் செய்தார்கள். பில் க்ளின்டன் செய்யாத தவறுகளா என்ன? அவரையே மக்கள் மன்னிக்கையில் வெய்னரை மன்னிக்கமாட்டார்களா?

கிட்டத்தட்ட அப்படிதான் நடந்திருக்கவேண்டும். அந்தோணி வெய்னர் வெற்றி பெறும் சூழல் உருவானது. பாரம்பரியமிக்க நியூ யார்க் மேயர் பதவி அவரை அடையும் தருணம். இன்னொரு பெண் முன்வந்து ஒரு குற்றச்சாட்டை வீசினார். ‘வெய்னர் பதவியை விட்டு விலகி வீட்டில் இருக்கையில் மறுபடி என்னுடன் செக்ஸ் சாட் செய்தார். மீண்டும் நிர்வாணப் புகைப்படம் அனுப்பினார்.’

கொஞ்சம், நஞ்சம் மீஞ்சியிருந்த மானமும் கப்பலேறிவிட்டது. மீண்டும் நிர்வாணப் புகைப்படங்கள் வெளிவர, வெய்னர் ஒரு காமெடி பீஸாக மாறிப்போனார். அதன்பின் வீட்டோடு முடங்கிப்போனார் வெய்னர். மனதளவில் மிகவும் நொறுங்கிப் போன ஹியூமா, வெய்னரை விவாகரத்து செய்திருக்கலாம். ஏனோ செய்யவில்லை. மீண்டும் அவரை மன்னித்தார். வெய்னர் வீட்டில் அமர்ந்துகொண்டு பிள்ளையை வளர்க்க, ஹியூமா தொடர்ந்து ஹிலாரியிடம் பணிபுரிந்து வந்தார்.

2016

ஹிலாரி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது, ஹியூமா அவருடன் பரபரப்பாகப் பிரசாரத்துக்குச் சென்று கொன்டிருந்தார். டிரம்பை வீழ்த்துவது அப்படியொன்றும் பெரிய செயலல்ல என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஹிலாரியின் பதவியேற்பு எப்போது, யாரெல்லாம் மந்திரிகளாக வரலாம் என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

ஹிலாரி ஜெயித்திருந்தால் ஹியூமா அசைக்கமுடியாத அதிகார மையமாக உருவாகியிருப்பார் என்று அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும்போது டிரம்ப்பின் அடித்தளம் ஆட்டம் கண்டுகொண்டிருந்தது. ஹிலாரிக்கு பெருவாரியான ஆதரவு இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறின. டிரம்ப்பின் மீது 30 பெண்கள் பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார்கள். டிரம்ப் கட்சியே அவருக்கு எதிராக திரும்பியிருந்தது.

இதற்கிடையில் வீட்டில் சும்மா உட்கார்ந்துகொன்டிருந்த அந்தோணி வெய்னர் உலக வரலாற்றை மாற்ற முடிவெடுத்தார். ஒரு சுபயோக, சுபதினத்தில் மனைவியின் ஆபிஸ் லேப்டாப்பை எடுத்தார். அதில் ஒரு 15 வயது பெண்ணுடன் செக்ஸ் சாட் செய்து, வழக்கம் போல தன் நிர்வாணப் புகைப்படத்தையும் அனுப்பிவைத்தார். பெண்ணின் தகப்பன் புகார் செய்ததைத் தொடர்ந்து ஹியூமாவின் வீட்டுக்கு போலீஸ் பறந்தது. அந்தோணி வெய்னர் கைது செய்யப்பட்டார்.

ஹியூமாவின் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ஹிலாரியின் ரகசிய மின்னஞ்சல்கள் இருந்தது கண்டறியப்பட்டது. விஷயம் FBIக்குச் சென்றது.

அவ்வளவுதான், ‘ஹிலாரி மேல் FBI விசாரணை’ என்று செய்திகள் கசிய ஆரம்பித்தன. அந்தோணி வெய்னரின் நிர்வாணப் படங்கள் மீண்டும் பத்திரிக்கைகளில் உலா வந்தன. டிரம்ப்பை விட்டுவிட்டு எல்லாரும் வெய்னர், ஹிலாரி, ஹியூமா என்று பேச ஆரம்பித்தார்கள்.

அந்தோணி வெய்னரின் லேப்டாப் விவகாரம் வெளியே வந்தபின் அடுத்த நாள் ஹியூமா கண்ணீர் மல்க ஹிலாரியின் அலுவலகத்துக்குப் போனார். ‘என்னம்மா இப்படி பண்ணிட்டியேம்மா’ என அனைவரும் அவரை அதிர்ச்சியுடன் பார்க்க, அவரோ கண்ணீருடன் ஹிலாரியைப் பார்த்தார். ஹிலாரி இப்போதும் அவரைக் கண்டிக்கவில்லை. பார்த்துக்கலாம் என்று சொல்லி அனுப்பினார்.

அந்த வாரம் முழுக்க ஹிலாரியின் ஆதரவு தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. படு தோல்வி எனும் நிலையில் இருந்த டிரம்ப் நிமிர்ந்தார். தேர்தல் நாளன்று கடும் போட்டி நிலவியது. முடிவுகள் வெளிவந்த நிலையில் டிரம்ப் 300 எலெக்டோரல் ஓட்டுக்களைப் பெற்று வரலாற்றின் மிகப்பெரும் தேர்தல் நாள் அதிர்ச்சியை அனைவருக்கும் அளித்தார்.

இப்படியாக அமெரிக்கப் பெண்களின் நூற்றாண்டுக் கனவைச் சிதைத்தார் வெய்னர். அதன்பின் ஹியூமா அவரை விவாகரத்து செய்ய, வெய்னர் சும்மா இருக்காமல் மீண்டும் ஒரு 16 வயது பெண்ணுடன் செக்ஸ் சாட் செய்து ஜெயிலுக்கும் போய் வந்தார்.

இப்போது வெய்னர், ஹியூமா தங்கியிருக்கும் அதே குடியிருப்பு வளாகத்தில் வசித்தபடி பிள்ளையை அவ்வப்போது பார்த்து வருகிறார். ஹியூமா ஹிலாரியிடம் தொடர்ந்து வேலைக்குச் செல்கிறார். அமெரிக்கப் பெண்களின் நூற்றாண்டு கனவு நிறைவேறாமல் இருக்கிறது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

1 thought on “பூமியும் வானமும் #3 – அமெரிக்கப் பெண்களின் நூற்றாண்டுக் கனவு”

  1. மிகவும் சுவாரஸ்யமான நடையில் எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள். “பூமியும் வானமும்” தொடரில் இதுவரை வெளிவந்த மூன்று கட்டுரைகளும் மிகச்சிறப்பாக உள்ளன.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *