ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு உட்பட்ட ஐயர்லாந்தின் சிறிய கிராமம், கிளாடி. ஆண்ட்ரிம் நகரத்திற்கு அருகில் அமைந்த எழில்பொங்கும் கரையோரப் பிராந்தியம். அங்குள்ள ஃபின் ஆற்றங்கரையில் மேய்ச்சல் புற்கள் அபரிவிதமாக வளர்ந்திருந்தன. சூரியன் முகில்களிடம் கண்ணாமூச்சி ஆடி களைத்துப்போவதால், அந்நகரின் தட்பவெப்பம் எப்போதும் வசந்தம் வந்தார்போல இருக்கும். ஊரைச் சுற்றி மலைகள் வாசம் செய்ய, அரண்களுக்கு நடுவே அவ்வூர் மேய்ச்சல் விலங்குகள் துள்ளிக் குதித்து ஓடும். ஆற்றுநீர் உள்ளூர் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கியது. அதற்கப்பால் உள்ள கடற்கரையோடு கலந்துபோகும்வரை, ஃபின் ஆற்றிலிருந்து வேண்டியமட்டுமான வளங்களை அவ்வூர் மக்கள் உறிஞ்சி எடுத்தனர்.
அங்குதான், கி.பி.1814ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி இராபர்ட் கால்டுவெல் பிறந்தார். கால்டுவெல்லின் தாயார் இசபெல்லா ஹாமில்டனுக்கு தன் கடைசி பையன் மீது தனிப் பிரியம் உண்டு. தந்தை வில்லியம் கால்டுவெல் காலிகோ அச்சு ஓட்டியும், பெல்ஃபாஸ்ட் கப்பல்துறையில் கைவினைத் தொழில் செய்தும் குடும்பத்தை நகர்த்தி வந்தார். கால்டுவெல்லுக்கு முன்பே அக்குடும்பத்தில் ஆறு குழந்தைகள் இருந்தனர். நான்கு அக்காக்களுக்கும், இரண்டு அண்ணன்களுக்கும் கடைக்குட்டியாக வந்தார் கால்டுவெல். இசபெல்லாவின் குடும்பம் சமயச் சார்புடையது. அவர்தான் கால்டுவெல்லுக்கு கிறிஸ்தவத்தை அறிமுகம் செய்திருக்க வேண்டும். ஐயர்லாந்திற்கும் கால்டுவெல் குடும்பத்திற்கும் பெரிய தொடர்பு கிடையாது. உண்மையில் ஸ்காட்லாந்துதான் அவர்களின் பூர்வீகமாக இருந்தது.
கால்டுவெல்லின் மூதாதையர்கள், பிரஸ்பிடேரியனிசம் (Presbyterianism) என்று அழைக்கப்படும் பொது ஆட்சிமுறைத் திருச்சபையை வழிவழியாகப் பின்பற்றினர். பிரஸ்பிட் என்றால் ‘மூத்தோர்’ என்று பொருள். 16ஆம் நூற்றாண்டில் ஜான் நாக்ஸ் என்பார் இச்சபையைத் தொடங்கினார். ஜான் நாக்ஸின் ஆசிரியர் ஜான் கேல்வின். ஜெனிவாவில் கேல்வினிடம் கற்ற பாடங்களைக் கொண்டு, ஸ்காட்லாந்தில் பிரஸ்பிடேரியனிசம் எனும் புதுச் சபையைத் திறந்தார் நாக்ஸ். கத்தோலிக்க மரபிலிருந்து அநேக இடங்களில் பிரஸ்பிட் வேறுபட்டனர்.
வேதாகம வார்த்தைகள் கடவுளின் வார்த்தை ஆகையால், அவையே பிரதானம் என்று கருதினர். கத்தோலிக்கர்களுக்கு பாப்பரசர் தலைமைத் தாங்கினார்; பிரஸ்பிட்களுக்கு திருக்கூட்டத்தால் தேர்ந்தெடுக்கப்பெற்ற முதியோர்கள் வழிகாட்டினர். ஜனநாயக முறையிலான அமைப்பு இங்கு நீடித்தது. சடங்குமுறைகளும் எளிமையாக இருந்தன. சமயப் பணிக்கு வருபவர்கள் திருமணம் செய்துகொள்ள பிரஸ்பிட்டில் இடமுண்டு. இதுபோன்ற அதிகார குவிமையம் இல்லாத, உலகியல் வாழ்க்கைக்கு ஏற்படைய புது சபைமீது பலரும் நாட்டம் கொண்டனர்.
ஜான் நாக்ஸ் கி.பி. 1514ஆம் ஆண்டு பிறந்தார். கல்லூரி காலங்களில் சீர்த்திருத்த சபையினரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டார். கத்தோலிக்கர்களுடன் எதிர்கொண்ட கலவரத்தால் இங்கிலாந்து தப்பிச் சென்றவருக்கு, கேல்வினின் கொள்கைகள் பிடித்துப் போயின. 1559ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் சபைமாற்றத்திற்கான தக்க சூழல் அமைந்ததை உணர்ந்து, மீண்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் ஸ்காட்லாந்தில் பிரஸ்பிடேரியனிசம் எனச் சொல்லப்படும் பொது ஆட்சிமுறைத் திருச்சபை வலுவாகக் காலூன்றியது.
ஐக்கிய இராஜ்ஜியத்தில் ஸ்டூவர்ட் வம்சம் (1603-1714) கத்தோலிக்கர்களுக்கு ஆதரவான அரசைக் கட்டமைத்தது. இதனால் சீர்த்திருத்த சபையினரும் பிரஸ்பிட் சபையினரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர். குறிப்பாக இரண்டாம் ஜேம்ஸ் ஆட்சியில், கத்தோலிக்க வழக்கத்தைப் பின்பற்றாத பிரஸ்பிட் உறுப்பினர்கள் தேடித்தேடி வேட்டையாடப் பட்டனர். பொது இடத்தில் தூக்கிலிட்டும், கை கால்களைக் கட்டி கடலில் வீசியும் கொலை செய்தனர்; சிறையில் இருத்திக் கொடுமைப்படுத்தினர். உயிருக்குப் பயந்த சிலர் அண்டை நாடுகளுக்குத் தப்பி ஓடினார்கள். அவர்களுக்கு முதன்மைப் புகலிடமாக விளங்கியது, வட ஐயர்லாந்து. அங்கு ஏராளமான பிரஸ்பிட்டினர் வாழ்ந்து வந்தனர். கால்டுவெல்லின் மூதாதையர்களும் அங்ஙனம் குடியேறியதாக இருக்க வேண்டும் என்று ஊகிக்க இடமுண்டு. அவர்கள் குறித்து மேலதிகத் தகவல் இல்லை.
கால்டுவெல்லுக்கு 10 வயதான போது, அவர்கள் குடும்பம் மீண்டும் ஸ்காட்லாந்துக்கே திரும்பியது. அங்கு அவர்கள் கிளாஸ்கோவில் ஓர் அடுக்ககத்தில் வசித்தனர். ஐயர்லாந்தில் பார்த்தது போலவே, இதுவும் ஒரு துறைமுக நகரம். கால்டுவெல், இங்குதான் அடுத்த ஆறு ஆண்டுகளைச் செலவு செய்தார். தான் ஒரு பூர்வ ஸ்காட்லாந்தியன் என்று எண்ணுவது அவருக்குப் பிடித்திருந்தது.
ஒவ்வொரு நாளும் ஏதோவொரு புது புத்தகத்தைக் கையிலேந்தினார். சரியான வழிகாட்டுதல் இன்றி கிடைக்கும் எல்லா நூல்களையும் வாசித்தார். இலக்கியம், வரலாறு, கலை, தொன்மம் என்று பல புலங்களில் புகுந்து விளையாடினார். புத்தகங்கள்தான் அவரின் நண்பர், காதலி, விரோதி எல்லாம். நாட்கள் செல்லச் செல்ல, எது தரமான இலக்கியம் எனத் தெரிந்தது. சில நாட்களுக்குப் பிந்தி அதுவே மோசமானது என்றும் எண்ணினார். அப்போது ‘நான் வாசித்த அனைத்து நூல்களும் குப்பையா?’ எனக் கேள்வி எழுப்பிக் கொண்டு, ‘குப்பையானாலும் தரமானக் குப்பை’ எனச் சொல்லி தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டார். இளமையிலேயே தன் மகனுக்குத் தீவிரமான வாசிப்புப் பழக்கம் கைக்கூடியதில் கால்டுவெல் தம்பதியினருக்கு புளங்காகிதம் தாங்கவில்லை.
ஆனால் கால்டுவெல்லின் வாசிப்புப் பழக்கத்தில் ஒரேயொரு குறைபாடு இருந்தது. இறையியல் புத்தகங்களில் அவருக்குத் துளியும் நாட்டம் செல்லவில்லை. மதம் தொடர்புடைய எந்தவொரு நூலையும் அவர் வாசிக்க மறுத்தார். தீவிர பிரஸ்பிட் குடும்பத்திலிருந்து இப்படியொரு குழந்தையா என்று அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. கட்டாயத்தின் பேரில் ‘வெஸ்ட்மினிஸ்டர் குறுகிய வினா-விடைப் புத்தகத்தை’ மனப்பாடம் செய்து ஒப்பித்தார். இளம் வயதில் மதம் தொடர்பாக கால்டுவெல் படித்த ஒரே நூல் அதுதான்.
பதினைந்தாவது பிறந்தநாள் முடிந்த கையோடு கால்டுவெல்லின் எதிர்கால வாழ்க்கைக் குறித்து சிந்திக்கத் தொடங்கினர். அப்போது அவர் சோபித்த இரண்டே விஷயங்கள்: ஒன்று வாசிப்பு, மற்றொன்று ஓவியம். கால்டுவெல் நன்றாக ஓவியம் தீட்டினார். ஒருவேளை ஓவியம்தான் இவன் எதிர்காலமாக இருக்கக்கூடுமென்று பெற்றோர் நினைத்தனர். டப்ளினில் வசிக்கும் மூத்த மகனுக்குக் கடிதம் எழுதி, தன் தம்பியை டப்ளின் அழைத்துச் சென்று பெரிய ஓவியனாக்கும்படி வில்லியம் வேண்டிக் கொண்டார். அடுத்த வாரமே கால்டுவெல் டப்ளினுக்கு அனுப்பப் பட்டார். 1830 முதல் 1833 வரையிலான இடைப்பட்ட மூன்றாண்டுகளில் அவர் ஐயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள புகழ்பெற்ற கவின் கலைக் கல்லூரி ஒன்றில் ஓவியம் பயின்றார்.
ஒருவேளை சமயம் தொடர்பாக தன் பார்வை திசை திறம்பவில்லை என்றால், ஓவியத்தை மூலமாக வைத்து தொழில் செய்திருப்பேன் என்று அவர் பின்னாட்களில் கூறியதுண்டு. இடையன்குடி கிராம அமைப்பை மனத்தில் நிர்மாணிக்கும்போதுகூட அவருள் இருந்த ஓவியன் உயிர்ப்படைந்திருப்பான். டப்ளினில் மூத்தச் சகோதரர் வீட்டில் இருந்தபோது, நண்பர் க்ளார்க்சன் ஸ்டான்ஸ்ஃபீல்ட் மற்றும் நோயில் பேடன் உடன் சேர்ந்து அவர் வரைந்த ‘ஆல்ப்ஸ் மலையைக் கடந்துச் செல்லும் கோவேறுக் கழுதைகளின் வரிசை’ என்ற ஓவியத்திற்கு டப்ளின் நகரில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பரிசும் பெற்றனர். ஓவியத்துறையோடு கால்டுவெல் பயணித்த நாட்கள் குறைந்தவை என்றாலும் வாழ்நாள் நெடுக, அதற்கு அவர் நெருக்கமான இடம் கொடுத்திருந்தார்.
கிளாஸ்கோவைவிட டப்ளினில் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது. புத்தகங்களைப் பெறுவதற்கும் நிறைய மூலங்களைக் கண்டறிந்தார். இயற்பியல் முதலான அறிவியல் புலங்கள் குறித்து இங்குதான் தெரியவந்தன. இதற்கிடையே கால்டுவெல்லும் அவர் சகோதரரும் டாக்டர் உர்விக் சபைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அயர்லாந்து தேவாலயத்தைச் சார்ந்த பலரும் அங்கு வருவதுண்டு. டாக்டர் வில்லியம் உர்விக், உருவத்தில் சிறிய மனிதர். ஆனால் மிகச்சிறு வயதிலேயே தேவாலயத்தின் மிகப்பெரும் பொறுப்புகளைக் கையாண்டிருக்கிறார். கத்தோலிக்கர்களைச் சபைமாற்றம் செய்யும் பணியில் உயரிய பதவிகளை வகித்திருக்கிறார். ஆகவே இவரின் உருவமைப்பையும் செயல்பாடுகளையும் முன்னிறுத்தி ‘குட்டி பூதம்’ என்று செல்லமாக அழைப்பர்.
கால்டுவெல்லுக்கு இந்தச் சூழல் முழுவதும் விசித்திரமாக இருந்தது. இதுநாள்வரை நம் எண்ணத்தில் உதிக்காத அருவப் பொருட்களையும், புத்தகப் பயிற்சியில் கண்டடையாதப் பக்கங்களையும் இங்கு இத்தனைத் தீவிரமாக விவாதிக்கின்றனரே என்று ஆச்சரியப்பட்டார். தான் ஏன் சமயப் புத்தகங்களை இத்தனை ஆண்டுகள் வாசிக்காமல் தவறவிட்டேன் என்று வருந்தினார். தொடக்கத்தில் அவர்கள் பேசுவதெல்லாம் குழப்பமாக இருந்தன. தன் சகோதரரை கேள்விகளாய்க் கேட்டு இம்சைப்படுத்தி, அடிப்படையிலிருந்து கற்றுக் கொள்ளத் தொடங்கினர்.
இதற்குமுன்பு இத்தனைச் சமயச்சார்புடைய சூழலில் கால்டுவெல் இருந்தது கிடையாது. அவர் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக இறையியல் எண்ணங்கள் துளைக்க ஆரம்பித்தன. பிறப்பு, இறப்பு, வாழ்க்கை, கருணை, பசி, பஞ்சம், சுரண்டல், அதிகாரம், ஆதரவு – இச்சொற்களுக்கு அவர் படித்தறிந்த அர்த்தங்கள் எல்லாம் சாரமற்றுப் போயின. ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமைக் கூடியதுபோல் உணர்ந்தார். அதற்குப் பின்னாலிருக்கும் வலியைக் கண்டடைந்தார். இச்சொற்களெல்லாம் ஆதியிலே இருந்து வந்தவைதான். ஆனால் அவை இத்தனை உலுக்கியெடுக்கும் என்று அவர் எண்ணவில்லை.
கால்டுவெல்லின் மனம் இரட்டைப் போராட்டங்களை எதிர்கொண்டது. தான் படித்தறிந்த கலையுலகுக்கும், அனுபவித்தறிந்த இறையியல் உலகுக்கும் வேறுபாடு தெரியாமல் குழப்பத்தில் தவித்தார். கலை இலக்கியப் புத்தக வாசிப்பிலிருந்து அவரால் முழுமையாக விடுபட இயலவில்லை. இறுதியாக அந்த ஒரு நாள் வந்தது. ‘புரட்டிப்போடும் எண்ணங்களையெல்லாம் அழுத்திப் போடும்படி’ அவர் தனக்குக் கட்டளைப் பிறப்பித்துக் கொண்டார். தன் வாழ்க்கை பத்தோடு பதினொன்றாக கடந்து போகும்படி அல்லாமல், வேத நூல்களின்வழி உருப்பெற முடிவெடுத்தார்.
தன் எதிர்காலம் குறித்த சந்தேக மேகங்கள் ஒவ்வொன்றாக கலைந்துபோகும்படி மனத்தைத் தயார்படுத்தினார். அன்றைக்கு எல்லாக் குழப்பங்களும் ஒரேயடியாக சுக்குநூறூகின. மனம் தெளிந்த நீரோடைபோல் சீராக இருந்தது. ‘நான் என்னை முழுவதுமாகக் கடவுளுக்கு அர்பணிக்க விரும்பினேன் என்றால், ஏன் அந்தப் பொழுது இன்றைக்கே அமையக்கூடாது?’ கால்டுவெல் தன் சகோதரரிடம் கேட்டார். இந்தத் திடீர் மாற்றங்களைக் கண்டு அவர் அண்ணனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கால்டுவெல் அவர் பதிலை எதிர்பார்த்தார் என்று சொல்ல முடியாது. ‘இப்போதே’ ஆம், இப்போதே நான் கடவுளிடம் அடைக்கலம் கேட்கப்போகிறேன். வாழ்நாள் முழுவதும் இதே திண்மையுடன் நாட்களை எதிர்கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது. நான் செய்யத்தான் போகிறேன் என்று பலமுறை சொன்னார். அன்றுமுதல் வேறுமாதிரியான மனிதராக கால்டுவெல் அடையாளங் காணப்பட்டார்.
தன்னுள் நிகழ்ந்த மாற்றங்களை எல்லாம் வார்த்தைப் பிசகாமல் மையிட்டு எழுதி பெற்றொருக்கு அனுப்பினார். இசபெல்லாவுக்கு இனி கால்டுவெல் தன்வயிற்றுப் பிள்ளைதான் என்று மார்தட்டிச் சொல்ல மற்றொரு காரணம் கிடைத்துவிட்டது. ஓவியப் பயிற்சியை அத்தோடு முடித்துவிட்டு கிளாஸ்கோ திரும்பிவரும்படி பதில் கடிதம் எழுதினார்.
கடிதத்தைப் படித்த கையோடு இருக்கையை விட்டு வேகமாக வெளியே ஓடி வந்தார், கால்டுவெல். வெற்று வானைப் பார்த்து, ‘நான் ஒரு புதிய பிறவி எடுத்துள்ளேன்’ என்று கத்தவேண்டும் போல இருந்தது. பூமி புதிதாக இருந்தது, சொர்க்கம் எட்டும் தூரத்தில் தெரிந்தது. எல்லாம் உள்ளங்கைக்குள் அத்துப்படி என்ற புதுத் தெம்பு கிடைத்தது. அந்த நாள் கால்டுவெல்லின் சமய வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனை; இந்திய வருகைக்கான முதல் துடுப்பு; தென்னிந்திய திராவிடவியல் ஆராய்ச்சியில் முதல் சொல்.
(தொடரும்)
படம்: இளம்வயதில் இராபர்ட் கால்டுவெல்.
கால்டுவெல் எப்படி எல்லா குப்பைகளையும் படித்து பின்னர் தெளிந்தாரோ அப்படிதான் நானும் இப்போதும் கூட கொஞ்சம் கொஞ்சமாக படிக்கும் பழக்கதுக்கு வந்துள்ளேன் 🥰 மற்ற எழுத்தாளர்களை போலவே தொடரும்.. என நிறுத்தாமல் சீக்கிரம் அடுத்தடுத்த தொடர்களை எழுதும்படி #இஸ்கரா அவர்களை கேட்டுக்கொள்கிறேன் நன்றி💐
உறுதியாக, மிக்க நன்றி.
கட்டுரை படித்தேன். மிகச் சிறப்பு.
” கால்டுவெல்லின் மனம் இரட்டைப் போராட்டங்களை எதிர்கொண்டது. தான் படித்தறிந்த கலையுலகுக்கும், அனுபவித்தறிந்த இறையியல் உலகுக்கும் வேறுபாடு தெரியாமல் குழப்பத்தில் தவித்தார். ”
சிறப்பான நடை.