1838ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி மதராஸ் கடற்கரைக்கு மேரி அன் வந்து சேர்ந்தது. சோழமண்டலத் தென்னந் தோப்புகளையும் மலை முகடுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் கால்டுவெல். காலனித்துவ அரசின் சிம்மச் சொப்பனமாகத் திகழ்ந்ததோடு இறை ஊழியர்களின் கோட்டையாகவும் விளங்கியது இந்நகரம்.
தரங்கம்பாடியிலிருந்து கிறிஸ்தவ ஊழியம் மேற்கொண்டு வந்த சீகன்பால்கு, 1710ஆம் ஆண்டில் வடக்கு நோக்கிப் பயணம் மேற்கொண்ட போது ‘மதராஸ்’ நகரம்தான் தன் பணிகளுக்கு நம்பிக்கை அளித்ததாக எழுதினார். 1813இல் வெளியான இந்தியப் பட்டயச் சட்டம், இந்தியாவில் கிறிஸ்தவம் பரப்புவதற்கு முழு சாளரத்தையும் திறந்துவிட்டது. ஆகவே மதராஸைத் தலைநகரமாகக் கொண்டு பல கிறிஸ்தவ இயக்கங்கள் செயல்பட்டன. உள்ளூர் இந்துக்களுக்கு இவை பெரும் அச்சுறுத்தலாக விளங்கின. இதனால் சமயம் சார்ந்த பதட்டநிலை உருக்கொண்ட காலத்தில்தான், சற்றொப்ப 24 வயது பூர்த்தியடைந்த கால்டுவெல் எனும் இளைஞர் மதராஸ் மாகாணத்தில் கால் பதித்தார் எனத் தெளிவாகத் தெரிகிறது.
துறைமுகம் அடைவதற்கு முன்பே, இறை ஊழியர் ஸ்மித்தின் மாணவர்கள் சிறிய படகொன்றை எடுத்துக் கொண்டு கால்டுவெல்லை வேப்பேரி அழைத்துச் செல்ல வந்துவிட்டனர். திருவாளர் ஸ்மித் இலண்டன் மிஷனரி சொசைட்டியின் ஊழியர். அவரின் சீடர்கள் டைலர் மற்றும் ஜான்சன் என்போருக்கு கிரேக்கம் மற்றும் இலத்தீன் பாடங்களைக் கற்றுத் தந்தார் கால்டுவெல். இடையே உடல்நலம் சரியில்லாமல் ஸ்மித் இங்கிலாந்து சென்றபோது, ஜூன் 1838இல் தொடங்கி ஐந்து மாதம் ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்து ஸ்மித்தின் வேலையைத் தான் பார்த்துக் கொண்டார். இந்த ஐந்து மாதங்களும் ஆங்கிலேயர்களுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனி ஊழியர்களுக்குமே அவர் சுவிசேஷம் செய்ய வேண்டியிருந்தது. கால்டுவெல் இதனால் மிகவும் அயற்சி அடைந்தார்.
இலண்டன் மிஷனரி சொசைட்டி செயலருக்குத் தன் அபிப்பிராயங்களைத் திரட்டி ஒரு கடிதம் எழுதினார். அதன் சாரம் பின்வருமாறு: ‘நான் கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்கு வேதம் போதிக்கவே இவ்வியக்கத்தில் சேர்ந்தேன். ஆனால் இங்கு வந்த ஐந்து மாதகாலமும் ஆங்கிலேயர்களிடம் மட்டுமே பேச வாய்ப்பளித்துள்ளீர்கள். தமிழ் மொழி மீது எனக்கு இப்போது அதிகம் நாட்டம் வந்துள்ளது. இங்குள்ள 5,00,000 மக்களின் கண்ணீர் துடைக்க யாருமே இல்லை. அதைப் பொருட்படுத்தாது ஆங்கிலேயர்கள் மீது மட்டுமே கரிசனம் கொள்ளச் சொல்லி நம் சங்கம் வற்புறுத்துகிறது.’ பர்த்தலோமேயு சீகன்பால்க், சி.எஃப் ஸ்வார்ட்ஸ், ரேனியஸ் முதலான தன் முன்னோடிகள் போல் உள்ளூர் மக்களோடு பணியாற்ற கனவு கண்டவர் கால்டுவெல். ஆனால் இந்தியா வந்த தொடக்கத்திலேயே எல்.எம்.எஸ்ஸின் இச்செயல்பாட்டல் அதன்மேல் கரும்புள்ளி தோன்றியது. இது பின்னாளில் மற்றொரு இயக்கம் நோக்கி அவரை நகர வைத்தது.
வேப்பேரியிலிருந்து வெளியேறி உள்ளூர் மக்களைப் புரிந்து கொள்ளும் விதமாக மதராஸ் நகரில் பல அறிஞர்களைச் சந்தித்தார். சுமார் ஒரு வருட காலம் ட்ரூ பாதிரியார் வீட்டில் தங்கினார். ட்ரூ மிகச்சிறந்த தமிழ் அறிஞர். திருக்குறளின் முதல் 63 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பரிமேலழகரின் மூல உரையுடன் 1840இல் புத்தகமாக வெளியிட்டார். இப்பணியில் இராமனுசக் கவிராயர் இவருக்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ட்ரூ பாதிரியார் உட்பட மிரன் வின்ஸ்லோ, தாம்சன் கிளார்க், ஜி.யு.போப் முதலான பல அறிஞர்களுக்கு அவர் தமிழ் கற்பித்துள்ளார்.
மதராஸில் தங்கிய மூன்றரை வருடத்தில் பல அறிஞர் பெருமக்களோடு கால்டுவெல்லுக்கு பழக்கம் உண்டானது. திருவாளர் கிரால் (Dr. Graul) முதலான அயல்நாட்டுத் தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கல்வியின் அவசியத்தையும் இனிமையையும் உணர்த்தினார்கள்.
ஸ்காட்சு பிரெஸ்பிட் சபையைச் சார்ந்த ஜான் ஆண்டர்சன் மற்றும் அலெக்ஸாண்டர் டஃப் முதலானோர் ஆங்கிலேயக் கல்வியின் மூலந்தான் உயர்சாதி இந்துக்களை கிறிஸ்தவத்தின்பால் இழுக்க முடியும் என்று நம்பினார்கள். கால்டுவெல்லுக்குத் தாய்மொழி கல்வியிலும் நாட்டம் இருந்தது, ஆங்கிலேயக் கல்வியிலும் விருப்பம் இருந்தது. இவ்விரண்டின் சாதக பாதகங்களையும் அறிந்தார். ஜான் மீது அளவுகடந்த மரியாதை கொண்டிருந்தார். பல சந்தர்ப்பங்களில் அவர் பேசுவதைத் தூக்கமிழந்து ரசித்திருக்கிறார். மாணவர்களிடம் தாய் போல் அரவணைத்துப் பேசி பலரையும் கிறிஸ்தவத்தின்பால் ஈர்த்தார், ஜான். அவர் நடத்திவந்த ஆண்டர்சன் ஸ்கூல் என்ற நிறுவனம்தான் தற்போது சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியாகச் செயல்பட்டுவருகிறது.
அச்சுப் பண்பாட்டில் தமிழ் எழுத்துரு வடிவத்தை மேம்படுத்திய திருவாளர் ஹண்ட் அவர்களைச் சந்திந்து நட்புப் பாராட்டினார். பின்னாளில் தமிழ் – ஆங்கில அகராதியை வெளியிட்ட அமெரிக்க இறை ஊழியர் மிரன் வின்ஸ்லோவுடன் ஆரம்பக் காலத்திலிருந்தே தொடர்பில் இருந்தார். சி. ஏ. பிரெளன் மற்றும் ட்ரூ முதலான பலரும் மேல்தட்டு மக்களிடம் மட்டுமே சமயப் பொழிவுகள் ஆற்றினர். கால்டுவெல்லுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் தமிழ் மொழி கைக்கூடாத அவர் மதராஸ் வாசத்தில், வெறுமனே இவற்றை வேடிக்கைப் பார்க்கத்தான் முடிந்தது. தினந்தினம் இந்தியா குறித்து புதிய பரிமாணம் அவருக்கு அறிமுகமானது.
தமிழ் மொழியை முழுவதுமாகக் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அடிப்படைப் பயிற்சியே வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணி செய்வதற்கு போதுமானதாக இருந்தது. மொழி உச்சரிப்பில் அதிகம் மெனக்கெட்டார். மக்கள் நிறைந்த கூட்டங்களில் அருளுரையாற்றுவதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. செல்வ வளம் படைத்தவர்களுக்கும் படித்தவர்களுக்கும் இறைப்பணி ஆற்றுவதால் என்ன பயன் என்று உடன் இருந்துவர்களிடம் நொந்துக்கொண்டார். வீட்டுப் பணியாளர்களிடம் இருந்து கால்டுவெல்லின் சுவிசேஷங்கள் தொடங்கின. உதவியாளர்களை அனுப்பி உள்ளூர் வட்டத்தில் தேர்ந்தெடுத்த நபர்களைக் கொண்டு சிறிய அளவில் கூட்டம் போட்டார். பெரும்பாலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குத் திருமுழுக்குச் செய்துவித்து கிறிஸ்தவத்திற்குள் ஏற்று, அதன் மூலம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் ஈர்த்தார்.
எல்.எம்.எஸ். இயக்கத்திலிருந்து பின்னாளில் எஸ்.பி.ஜி. (Society for the Propagation of the Gospel in Foreign Parts) இயக்கத்திற்கு மாறிய ஹென்றி பவர், கால்டுவெல்லின் தமிழ்ப் பற்றை மேலும் வலுப்படுத்தியவர்களுள் ஒருவர். ஹென்றி பவர் வேப்பேரி செமினரியில் படித்தவர். மிக இளம் வயதிலேயே நன்கு தமிழ்ப் படித்தார். டாம் பட்லரின் மேற்கோள்கள், நம்பிக்கை பற்றிய பியர்சனின் பொன்மொழிகள், இந்தியாவில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி, பைபிள் மற்றும் இறையியல் அகராதி முதலான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து பெரும் பங்காற்றியவர். கால்டுவெல் இவரிடம் தமிழின் தொன்மையான இலக்கண இலக்கியங்களையும் பேச்சுத்தமிழ் வழக்காறுகளையும் கற்றுக்கொண்டார். மதராஸ் பல்கலைக்கழகத்தின் முதன்மைத் தேர்வராக இருந்து பணி ஓய்வு பெற்ற பவர், தன் இறுதிகாலத்தைப் பாளையங்கோட்டையில் வாழ்ந்து கழித்தார். பின்னாளில் ஹென்றி பவரின் பைபிள் மொழிபெயர்ப்பில் (1872) கால்டுவெல் உதவியது குறிப்பிடத்தக்கது. இவர் முதலான வேறு சில எஸ்.பி.ஜி. இறை ஊழியர்களின் தொடர்பால் இவ்வியக்கத்தின் மேல் கால்டுவெல்லுக்கு மதிப்பு கூடியது.
இந்நாட்களில் கால்டுவெல்லுக்கு அறிமுகமான மற்றொரு முக்கிய நபர் ஜி.யு.போப். 1839இல் மதராஸ் கடற்கரையில் வந்திறங்கியபோது போப்பின் வயது வெறும் 19. கால்டுவெல்லை விட 6 வயது இளையவர். ஆனால் போப்பிடம் கொண்ட நட்பை மிகவும் சிலாகித்து எழுதியுள்ளார், கால்டுவெல். உண்மையில் வெஸ்லியன் மிஷனரி சொசைட்டிக்காக திருப்பணி செய்ய வந்த போப், 1842இல் இங்குள்ள எஸ்.பி.ஜி. இயக்கத்தின் தொடர்பால், திருநெல்வேலியில் உள்ள சாயர்புரம் துணைநிலையத்தில் அதன் உறுப்பினராகத் தன் பணியைத் தொடர்ந்தார்.
ஆற்றின் வடக்கே பள்ளிக்கூடங்களையும் திருச்சபைகளையும் உருவாக்கினார். உள்ளூர் இறை ஊழியர்களுக்கு கிறிஸ்தவப் பாடங்களோடு செந்தமிழ், கிரேக்கம், இலத்தீன் மற்றும் ஹீப்ரு மொழிகளைப் பயிற்றுவித்தார். போப் ஹீப்ரு மொழியிலும் கணிதத்திலும் ஆர்வம் உடையவர். போதனைகள் தொடங்கிவிட்டால் இரவு 11 மணி வரைக்கும் கண் அயராமல் பேசிக் கொண்டேயிருப்பார். சாயர்புரத்தை மதராஸ் மாகாணத்தின் தலைச்சிறந்த பல்கலைக்கழகமாக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். ஆனால் அப்போதைய தேவை தொடக்கப்பள்ளிக்கூடமே தவிர, பல்கலைக்கழகம் அல்ல என்று கால்டுவெல் சொன்னார். தன் மாணவர்களைக் கூட போப் நடத்திவடந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிப் படிக்க வைத்தார். மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் குறைவின்றிச் செய்துக்கொடுத்தார், போப். ஒரு தனி மனிதனால் இவ்வளவு காரியங்கள் செய்ய முடிந்ததா என்று எஸ்.பி.ஜி. சங்கம் அசந்துபோனது.
சமயப் பிரிவுகள் பாராமல், அனைத்துக் கிறிஸ்தவ இயக்கத்து இறை ஊழியர்களிடமும் ஒன்றுபோலவே பழகியதுதான் கால்டுவெல்லின் தனித்துவ மாண்பு. அத்தோடு மதராஸில் இருந்தபோது நிறைய நூல்களை வாங்கிக் குவித்தார். கி.பி.325இல் எழுதப்பட்ட ‘நிசையின் நம்பிக்கைகளுக்கு முற்பட்ட திருந்தந்தையர்’ எனும் நூல், ஐரோப்பிய கண்டத்தின் லூதரன் கால்வினிஸ்டிக் தொடர்பான இறையியல் நூல்கள், திருச்சபை வரலாறுகள், விவிலிய உரைகள் முதலியன அதில் அடக்கம்.
இச்சமயத்தில் கேம்பிரிட்ஜைச் சார்ந்த ஜான் ஸ்மித் அவர்கள் எழுதிய பிளாடோவின் தத்துவ நூல்களைக் கால்டுவெல் வாசிக்க நேர்ந்தது. இவர் பிளாட்டோவின் தத்துவப் பள்ளியைச் சார்ந்தவர். இந்தப் படிப்பினையால் எவ்விதச் சடங்கு முறைகளைக் காட்டிலும் அன்பு, அமைதி மற்றும் மகிழ்வூட்டும் பண்புகளே எல்லாவிதத்திலும் உயர்ந்தது என்று நம்பத் தொடங்கினார். இறை ஊழியர்களின் வழி வந்த இங்கிலாந்து திருச்சபை இறப்பின் விளிம்பில் இருந்தது என்று நம்பப்பட்ட நிலையில், கால்டுவெல் அதற்கு உயிரூட்ட விரும்பினார். அதன்மூலம் தான் சார்ந்திருந்த இலண்டன் மிஷனரி சொசைட்டியில் இருந்து விலகி, எஸ்.பி.ஜி. சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இம்முடிவு ஒரேநாளில் உருப்பெற்றது அல்ல. ஹென்றி பவர், ஜி.யு.போப் முதலான பல எஸ்.பி.ஜி. நிர்வாகிகளைக் கண்டு, அவர்களின் செயல்களால் உத்வேகம் கொண்டு, தாமும் பல காரியங்கள் சாதிக்க வேண்டும் என்று கைக்கொண்ட தீர்மானம். மேலும் எல்.எம்.எஸ்ஸில் உண்டான கசந்த அனுபவங்களும் இதற்கு வழிவகுத்தன. கால்டுவெல்லின் தெளிவான விளக்கங்களால், இலண்டனைச் சார்ந்த நான்கு சங்கங்களும்; வெஸ்லியன் பணித்தளத்தில் ஆறு சங்கங்களுமாக மொத்தம் 10 சங்கங்கள் இங்கிலாந்து திருச்சபையோடு சேர்ந்துகொண்டன.
கால்டுவெல்லின் பணிவிலகல் கடிதத்தைக் கண்ட எல்.எம்.எஸ். சங்க நிர்வாகிகள், அவர் படிப்புக்கும் பயணத்துக்கும் ஆக 400 பவுண்ட் பணத்தைத் திருப்பி அனுப்பச் சொல்லி கடிதம் அனுப்பினார்கள். கால்டுவெல்லுக்கு இதன்மீது தார்மீகக் கோபம் எழுந்தது. தான் ஏற்றுக்கொண்ட பணியையோ, காரியத்தையோ கைவிடாதபோது தான் ஏன் இதற்குப் பதிலீடு கட்ட வேண்டும் என்று யோசித்தார். பல உதாரணங்களை மேற்கோள் காட்டி இதிலிருந்து தம்மை விடுவிக்கப் போராடினார். இறுதியில் இங்கிலாந்து திருச்சபைக் கொள்கையோடு எல்.எம்.எஸ். உடன்பட்டு நடந்தால், தான் அப்பணத்தைத் திரும்பச் செலுத்துகிறேன் என்று உறுதியளித்தார்.
இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தது கால்டுவெல்லின் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனை. இதுகுறித்து தன் சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் பல கடிதங்கள் எழுதினார். ‘பணிவு, அடக்கம், ஒழுக்கம் என இம்மூன்றும் குறைபாடுடைய தன் சங்கத்திற்கு இனியும் நம்பிக்கையுடவனாக நீடிப்பதில் ஒரு பலனும் இல்லை. இதைத்தான் கிளாஸ்கோவிலேயே நான் கண்டடைந்தேன். இப்போதும் நான் இங்கிலாந்து திருச்சபையின் விசுவாசி எனச் சொல்வதற்கு இல்லை. இங்கும் தவறு காணும் பட்சத்தில் திருத்தப் பார்ப்பேன். அதற்கு இடமில்லை என்றால், நன்மையளிக்கும் வேற்றிடத்திற்குச் செல்வேன்’ என்றார்.
மேலும் தன் முடிவுக்கு வலுவூட்ட ‘ஒருவர் தன் நேரம் செலவழித்து அவ்வளவு படித்துத் தெரிந்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் ஒன்றும் முன்பின் சிந்திக்காமல் முடிவு எடுக்கமாட்டார் . . . உனக்கு இது திருப்தியான பதிலையே அளிக்கும் என்று நினைக்கிறேன்’ என்று தன் வீட்டிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். இதன்மூலம் கால்டுவெல்லின் முடிவு எத்தகைய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. இலண்டன் இயக்கத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் பெயரளவில் மட்டுமே இருந்தன. நடைமுறையில் ஒருதுளி முன்னேற்றமும் இல்லை. எனவே தான் விரும்பியதை மேற்கொள்ள தோதான இடமென்று எஸ்.பி.ஜி. சங்கத்தைக் கண்டடைந்தார்.
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக உள்ளூர் மக்களுடன் ஒன்றிணைந்து வெற்றிக்கரமாக நடைப்பெற்று வரும் இயக்கம் எஸ்.பி.ஜி. அதன் ‘திருநெல்வேலி திருச்சபைக் கிளை’ விமர்சையாக இயங்கிவருவதைக் கண்டார். நகர்புற மதராஸ் கணவான்களின் காதுகளில் சுவிசேஷ கீதம் பாடுவதைவிட, தெருக்கோடி கிராமத்தில் கண்ணீர் சிந்தம் ஏழைக்கு ஆறுதல் சொல்வதே மேல் என்று நம்பினார். தன் முன்னோர்களும் இதே களத்தில் பணிசெய்தார்கள் எனக் கேட்டு அறிந்துகொண்ட பின்னர், எவ்விதத் தயக்கமுமின்றி திருநெல்வேலி செல்லும் பணிகளை முழு மூச்சில் தொடங்கினார் கால்டுவெல்.
(தொடரும்)
______________
படம்: சோழமண்டலக் கடற்கரையொட்டி புனித ஜார்ஜ் கோட்டைக்கு கப்பல்கள் வருதல்
நல்ல தரவுகளுடன் கூடிய அழகிய கட்டுரை. பாராட்டும் வாழ்த்தும்