Skip to content
Home » திராவிடத் தந்தை #7 – பாடுகளின் பாதை

திராவிடத் தந்தை #7 – பாடுகளின் பாதை

1841ஆம் ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில், கால்டுவெல்லின் திருநெல்வேலி பயணம் திட்டமிடப்பட்டது. உதவிக்காக மூன்று பணியாட்களை உடன் அழைத்துக் கொண்டார். துரைமார்கள் பக்கத்து வீதிக்குச் செல்வதென்றால்கூட சிவிகை வைத்துக்கொண்டு போவதுதான் அந்நாள் வழக்கம். ஆனால் தன் பயணம் முழுக்க கால்நடையாகவே நாடளக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் கால்டுவெல்.

உள்ளூர் மக்களைப் பதற்றமின்றி அருகில் பார்க்கவும், அவர்களின் பழக்க வழக்கங்களைப் போலித்தன்மையின்றி நேரடியாகத் தெரிந்துகொள்ளவும் இதுவொன்றுதான் வழி. வெற்றி பெற்ற இறை ஊழியர்களின் வாழ்விலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்டவர் கால்டுவெல். என்ன செய்ய வேண்டும், எப்படித் தயாராக வேண்டுமென்று கல்மேல் எழுதியதுபோல் அவர் மனம் அடியாழத்தில் தெளிவாக இருந்தது.

கால்டுவெல் இடையன்குடி செல்வதுதான் திட்டம். ஆனால் அங்குச் சென்று பணியில் அமர்வதற்கு முன், நீலகிரியில் வசித்துவரும் மதராஸ் ஆயரைச் சந்தித்து உரைப் பொழிவுக் கேட்டுப் பதவிப் பிரமானம் பெற வேண்டும். மெட்ராஸிலிருந்து மொத்த தூரத்தையும் மனத்திலிறுத்தித் தேவையான பொருட்களைப் பையில் பூட்டிக்கொண்டு பயணத்தைத் தொடங்கினார். காலை தொடங்கி சூரியன் மறையும்வரை நடப்பார். பின் அருகிலிருக்கும் உள்ளூர் விடுதியில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு, மீண்டும் மறுநாள் காலை விட்ட இடத்திலிருந்து பயணம் தொடரும்.

பாண்டிச்சேரி செல்லும் வழியில் மணல் அதிகம் இருந்தது. சப்பாத்துகளையும் காலுறையையும் கழட்டி கையிலேந்தினால், கால்கள் மண்ணுக்குள் புதைபடாமல் விரைந்து நடக்கலாம் எனக் கால்டுவெல் ஊகித்தார். ஆனால் அந்த யோசனை விபரீதத்தை உண்டாக்கியது. இந்திய வெயிலைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டார். வெக்கை தாங்காமல் அவர் பாதம் முழுக்க கொப்புளம் உண்டானது. மறு அடி வைக்கமுடியாமல் தள்ளாடினார். பாதம் நிலத்தில் பட்டால் உச்சந்தலைவரை சூடு ஊறியது. இரண்டு நாள் முழு ஓய்விற்குப் பிறகே, கால்டுவெல் இயல்பு நிலைக்குத் திரும்பினார். இனி கட்டை வண்டியாவது வைத்துக்கொள்ளலாம் என்ற யோசனை வந்தது.

பாண்டிச்சேரியில் திருவாளர் ஜோன்ஸ் வீட்டில் ஓய்வு கிடைத்தது. ஜோன்ஸ் எஸ்.பி.ஜி. ஊழியர். ஆயர் ஸ்பென்சரின் உதவியாளர். பாண்டியில் இருந்த நாட்கள் ஜோன்ஸின் அறிமுகத்தால் சங்கத்தைச் சார்ந்த பல இறை ஊழியர்கள் அறிமுகமானார்கள். அங்கிருந்து தரங்கம்பாடி சென்று திருவாளர் கார்ட்ஸுடன் சில நாட்கள் செலவழித்தார். மதராஸ் நாட்களில் இருந்தே கார்ட்ஸுடன் கால்டுவெல்லுக்கு நல்ல பழக்கம் இருந்தது. தரங்கம்பாடி அப்போது டச்சு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம். டேனிஷ் ஆளுநர் வீட்டில் மாலை விருந்தில் கலந்துகொண்டு, அருளுரை முடிந்த பிறகு அங்கிருந்து கும்பகோணம் கிளம்பினார்.

கால்டுவெல் சென்ற திசையெல்லாம் இறை ஊழியர்களின் அரவணைப்பு மழை. எஸ்.பி.ஜி. சங்கத்தின் பரந்துபட்ட கட்டமைப்பைக் கண்டு, தான் சங்கம் மாறியது மிகவும் சரியெனத் தோன்றியது. உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலந்து வாழும் இத்தகு அலாதியான வாழ்க்கையில்தான் கோடி சுகம் இருக்கிறது. மதராஸ் மாகாணத்தின் தூசு படிந்த கிராமங்களும், வறுமைப் பீடித்த குடிசைகளும், எலும்புந் தோலுமான குடியானவர்களும் இரட்சிப்புக்கு ஏங்குகிறார்கள்; ஏட்டுக் கல்விக்குத் திண்டாடுகிறார்கள். கால்டுவெல் மனம் பதைபதைத்தது. ஒவ்வொரு மாவட்டமும் புதுப் புதுத் தகவல் சுரங்கமாக அவர் கண்ணில் பட்டது.

கும்பகோணத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளைத் திரு. வாலெண்டின் கூம்ஸ் தயார் நிலையில் வைத்திருந்தார். டாக்டர் பவர் மற்றும் கென்னத் போன்றோர் படித்த கல்கத்தா பிஷப் கல்லூரியின் வார்ப்பு இவர். குடந்தையிலிருந்து மறுநாள் காலை தஞ்சாவூருக்குக் கிளம்பினார் கால்டுவெல். தஞ்சைப் பெரிய கோயிலின் பிரம்மாண்டத்தையும் கட்டடக் கலையின் உச்சத்தையும் ஆச்சரியத்துடன் ரசித்தார். அங்கிருந்து சிதம்பரம் பயணப்பட்டு, நடராஜர் கோயிலைத் திருப்தியாகக் கண்டுகளித்தார். ‘தென்னிந்தியாவின் மிகவும் வியக்கத்தக்க கோயில்கள் இங்கே இருந்தன’ என்று பல ஆண்டுகளுக்குப் பின்பும் நினைவிழக்காமல் எழுதுவதால் அவை உண்டாக்கிய பரவசம் வெளிப்படை.

1800 – 1850 இடைப்பட்ட காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில்

இந்து மதம் பற்றியும், அதன் கட்டட வேலைப்பாடுகள் பற்றியும் கால்டுவெல் ஓரளவு படித்திருந்தார். கோயிலின் கலைச்சிறப்பை உணர அவை முழுமையாகப் பயன்பட்டன. கால்டுவெல்லுக்குத் தஞ்சை மராத்தியர்களின் கடைசி மன்னரைக் காண வாய்ப்புக் கிடைத்தது. அரபு மற்றும் கோதிக் கலை வடிவத்தில் கட்டப்பெற்ற பிரம்மாண்ட இந்து அரண்மனை. அதன் தர்பாரில் போன்ஸ்லே வம்சத்தைச் சார்ந்த தஞ்சை சிவாஜி, விருந்தினர்களை அன்போடு வரவேற்றார். சிவாஜி மெலிந்த உடல்வாகும், கறுத்த சரீரமும் உடையவர். சரஸ்வதி மகால் நூலகத்திற்காகப் பெரும் பொருளுதவிகள் செய்திருக்கிறார். 1855ஆம் ஆண்டு சிவாஜி இறந்த பிறகு முறையான அரச வாரிசு இல்லாததால், வாரிசு இழப்புக் கொள்கை மூலம் தஞ்சையைக் கிழக்கிந்தியக் கம்பெனி கைப்பற்றியது.

தஞ்சை நாட்களில் திரு. பிரதர்டன், கோலாப் முதலான இறை ஊழியர்களோடு கால்டுவெல்லுக்கு நெருக்கமான நட்பு உண்டானது. இதையடுத்துக் கிறிஸ்தவத் தமிழ் இலக்கியத்தில் பெரும்பங்காற்றிய தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியை கால்டுவெல் சந்தித்தார். மறைத்திரு ஸ்வார்ட்ஸ்ஸிடம் வேதக் கல்வி பெற்ற சாஸ்திரியார், இறையியல் கல்வி நிலையத்தில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். வாழ்வின் இறுதிக்கட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் தம்மைக் கைக்கழுவிவிட்டனர் என்று அவர்களுக்கு எதிராக வெளிப்படையாகக் குற்றம் சாட்டி நூல்கள் எழுதினார். கிறிஸ்தவச் சமயத்திற்கு மாறிய பிறகும், அவரின் சாதியப் பிடிப்பில் வலு குறையவில்லை. இதனால் ஜி.யு.போப் முதலான அறிஞர்களுடன் பிணக்குக் கொண்டார். எனினும் இவரின் பங்களிப்புகள் ஏராளம். சாஸ்திரியாருடன் உண்டான சந்திப்பை நினைத்துப் பார்க்கையில், ‘அவரின் குணங்கள் என்னவாக இருந்தாலும் அவை அவரோடு இறந்துவிட்டன. ஆனால் அவரின் எழுத்துகள் மக்கள் வாழ்வில் ஒளியாக விளங்குகின்றன’ எனக் கால்டுவெல் குறிப்பிட்டார்.

வேதநாயகம் சாஸ்திரி

திருச்சிராப்பள்ளியின் சங்கங்களையும் கோட்டைகளையும், கோயில்களையும் கோலோப் சுற்றிக் காட்டினார். திருவரங்கம் செல்ல அப்போது அங்கு பாலம் கிடையாது. எனவே கால்டுவெல் படகு வழியே கரையைக் கடந்து அரங்கநாதரைத் தரிசித்தார். ‘இக்கோயிலின் பரப்பளவு மிகப் பெரிதாக இருக்கிறதே?’ என்று கால்டுவெல் அடுத்தடுத்து கேட்கும் கேள்விகளுக்கு கோலோப்பின் பதில்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. கோலோப் முதன்முதலில் பணிசெய்த இடம் திருநெல்வேலி. ஆகவே அந்நகரம் குறித்தும், அம்மக்கள் குறித்தும் நிறைய கேட்டுத் தெரிந்துகொண்டார்.

பயணம் தொடங்கி வெகு நாட்கள் ஓடிவிட்டன. இனி ஒரு பொழுதும் வீணடிக்கக் கூடாது. கால்டுவெல் தமக்குத் தாமே விதித்துக்கொண்ட கட்டளை இது. நேராக நீலகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையத்திற்குச் செல்லும்படி உத்தரவிட்டார். அவர் பாதத்தில் கொப்புளங்கள் ஏற்பட்டதில் இருந்து, கட்டை வண்டியின் பயன்பாடுதான் அதிகம் இருந்தது. எனவே நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் சொந்தமாக நடக்க ஆசைப்பட்டார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம். ஒன்று, இனி செல்லவிருக்கும் இடம் மலைப்பாங்கான பகுதி, சுமைதூக்கிகளுக்கு மிகுந்த சிரமம் உண்டாகலாம். இரண்டு, இங்கு வெயில் அதிகம் இல்லை.

கோத்தகிரியில் அமைந்துள்ள ஆயர் ஸ்பென்சரின் வீட்டிற்குத் தாமாக நடந்து சென்றார். ஸ்பென்சர் வீட்டில் இடமில்லாத காரணத்தால், தங்குவதற்கான ஏற்பாடுகள் அவரின் உதவியாளர் ஹிக்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. சுமார் ஒரு மாதம் நீலகிரியில் தங்கியிருந்த பின், செப்டெம்பர் 19ஆம் தேதி புனித ஸ்டீபன் ஆலயத்தில், மதராஸ் ஆயரால் கால்டுவெல்லுக்குத் திருத்தொண்டர் பதவி வழங்கப்பட்டது. கால்டுவெல் வந்த அதே முறைமைகளைப் பின்பற்றித்தான் ஜி.யு. போப், ஹென்றி பவர் முதலான வேறு சில இறை ஊழியர்களும் இன்னும் சில நாட்களில் இங்கு வரவிருந்தனர்.

மறுநாள், நீலகிரியில் ஒரு நல்ல குதிரையை விலைபேசி வாங்கிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி விரைந்தார், கால்டுவெல். ஆனால் சேறும் சகதியுமான மழைக்காலச் சாலையில் பயணித்ததாலோ என்னவோ, பாதி மலை இறங்குவதற்குள் பாடாவதியாகிவிட்டது அக்குதிரை. கோயம்புத்தூரில் அதை விற்றுவிட்டு, மற்றொரு குதிரை வாங்கினால் பயன்படுமென்று சேணத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டார். ஆனால் இறுதிவரை அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. ஒரு நாளைக்கு 17 மைல் தூரம் நடப்பதென்று தீர்மானித்துச் சீராக நடந்தார்.

ஓர் ஐரோப்பியர் இத்தனை ஏழைமைக்குத் தள்ளப்பட்ட காரணம் என்னவோ என்றெண்ணி விடுதியில் இடம்தர பலரும் மறுத்தார்கள். இவர் பின்னால் பணியாளர்கள் பெட்டித் தூக்கி வருவதைப் பார்த்த பிறகே, அவர்கள் மனம் சற்று கனிந்தது. அக்காலத்தில் துரைமார்களின் கெளரவத்தை பணியாளர்களின் எண்ணிக்கை வைத்தே மதிப்பிட்டனர்.

ஒருநாள் திண்டுக்கல் அடுத்த கிராமம் ஒன்றில் (பாலகனுட்டா என அவர் குறிப்பிடும் ஊர் தற்போது எதுவென்றுத் தெரியவில்லை) இரவில் ஓய்வெடுக்க இடம் தேடி அலைந்தனர். அங்கு அரசு கட்டிக்கொடுத்த விடுதி ஒன்று இருந்தது. ஆனால் அதில் பிராமணர்களுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு எனச் சொல்லி கால்டுவெல்லை மாட்டுக் கொட்டகையில் தங்க வைத்தனர். காற்றுக்கும் மழைக்கும் பெயர்ந்து போகும் அக்கொட்டகை எந்நேரமும் நொடித்துப்போகும் அபாயத்தில் இருந்தது. உண்மையில் பறையர்களுக்கும் நோய்வாய்ப்பட்ட ஆங்கிலேயர்களுக்கும் கட்டப்பட்ட அச்சத்திரம், மாட்டுத் தொழுவமாக மாறியிருந்தது.

மறுநாள் திண்டுக்கல்லில் அமைந்துள்ள எஸ்.பி.ஜி. திருச்சபையில் அருளுரையாற்றிவிட்டு மதுரை நோக்கி நடை பயின்றார். அப்போது வைகை நதி பலமான வெள்ளத்தாக்குதலுக்கு ஆளாகியிருந்தது. கால்டுவெல், உதவியாளர் ஒருவரின் தோள்பட்டை மீதேறி அமர்ந்துகொண்டார். ஓரிடத்தில் உதவியாளரின் மார்பு வரை வெள்ளம் நிறைந்திருந்தது. நீரின் வேகத்திற்கு அசைந்துகொடுக்காமல் கால்டுவெல்லைப் பத்திரமாக மறுகரையில் வந்து சேர்த்தனர். அந்த உள்ளூர்காரருக்கு ஆயர் பெரும் தொகையைக் கையில் கொடுத்தனுப்பினார்.

கால்டுவெல் மேற்கொண்ட பயண வழித்திட்டம்

மதுரையில் திரு. ஹப்பார்ட் வீட்டில் ஓய்வுக்கு ஒதுங்கினார். ஹப்பார்ட் உள்ளூர் செல்வாக்கு மிக்கவர். எஸ்.பி.ஜி. பணித்தள ஊழியர். இங்கு அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கால்டுவெல் உரையாற்றினார். குறிப்பாக இவரின் தமிழ் உச்சரிப்பை ஹப்பார்ட் விரும்பினார்.

திருநெல்வேலி சாணார் கிறிஸ்தவர்களைக் கால்டுவெல் முதன்முதலில் இங்குதான் பார்த்தார். அவர்களின் பேச்சுமொழிம், நீளமான காதுளைகளும், தொங்கு காதணிகளும், பெண்கள் போல் முடிந்துவைத்த சடையும் வியப்பாக இருந்தன. ஹப்பார்ட் வீட்டில் தங்கியிருக்கும் கால்டுவெல்லை, இவர்கள் அடிக்கடிச் சந்திக்க வந்தனர். கைக்கூப்பி வணங்கி கரும்பு முதலான பரிசுப் பொருட்களைக் கொண்டுவந்தனர். வடக்கில் சந்தித்த கரடுமுரடான மக்களுக்கு மாறாக, இவர்களின் சாந்தமான நடத்தை அவருக்கு ஆச்சரியம் அளித்தது. மதுரையின் சிறப்பு வாய்ந்த கோயில்கள், அரண்மனைகள், புனிதப் பொய்கைகள் முதலான எல்லாவிடத்தும் சென்று ஓய்ந்தபிறகு பயணத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்தார்.

மதுரையிலிருந்து தாமிரபரணி ஆற்றங்கரைக்கு ஒரே பாய்ச்சலில் வந்ததால், பசி வயிற்றைக் கிள்ளியது. ஆற்றின் வடகரைக்கு மேல் ஒரு கூம்பு மாடத்தில் அமர்ந்து காலை உணவை முடித்தார். நீரோட்டம் அவ்வளவாக இல்லை. கால்டுவெல் சப்பாத்துகளை கையிலெடுத்துக் கொண்டு ஆற்றில் நடந்தார். ஆற்று நீரை நம்பி, அதன் கரையோரத்தில் விவசாயம் செய்யும் மக்கள் அத்தனை அழகாகத் தெரிந்தனர். இந்தியாவிலேயே பாளையங்கோட்டை அடுத்த இச்சிறிய பகுதிதான் ஒய்யாரமான நகரமென்று அவருக்குத் தோன்றியது. மதராஸில் தொடங்கிய 1300 கி.மீ. நெடிய பயணம், தாமிரபரணி ஆற்றங்கரையின் ரம்மியமான ஒரு நவம்பர் காலைப் பொழுதில் அரவமின்றி அமைதியாக முடிந்தது.

(தொடரும்)

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

1 thought on “திராவிடத் தந்தை #7 – பாடுகளின் பாதை”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *