Skip to content
Home » என்ன எழுதுவது? #5 – பெருவாசம், பெருவலி

என்ன எழுதுவது? #5 – பெருவாசம், பெருவலி

‘செலக்ட்’ மூர்த்தி

பெருந்தொற்றுக்கு முன்பு பார்த்தது. இப்போது அவருக்கு 93 அல்லது 94 வயது இருக்கலாம். கே.கே.எஸ். மூர்த்தி என்பதைவிட ‘செலக்ட்’ மூர்த்தி என்று சொன்னால்தான் பலருக்கும் அவரைத் தெரியும். கை நிறைய புத்தகங்களை எடுத்து வந்து அவர் மேஜையில் வைத்தால், முதலில் உட்காருங்கள் என்பார். எப்போதாவதுதான் வருகிறீர்கள். இந்த முறை நேரம் இருக்கும் அல்லவா என்று கேட்டுவிட்டு, நான் பதில் சொல்வதற்குள் தேநீருக்குச் சொல்லிவிடுவார்.

அநேகமாக பெங்களூரூ செல்லும் ஒவ்வொருமுறையும் மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள புத்தகக் கடைகளை வேடிக்கை பார்க்கவாவது போய்விடுவது வழக்கம். மதிய நேரம் உள்ளே நுழைந்தால் பழைய பிளாசம்ஸ், புதிய பிளாசம்ஸ், புக் வர்ம், இன்னும் இரண்டு பெயர் நினைவில்லாத சிறு கடைகளைப் பார்த்துவிட்டு, இந்தியன் காபி ஹவுஸில் ஒரு சாண்ட்விச்சும் காபியும் முடித்துவிட்டு இறுதியாகவே செலக்ட் வந்து சேருவேன். மூர்த்தியோடு பேசிவிட்டுக் கிளம்பும்போது இருட்ட ஆரம்பித்துவிடும். நன்றாகக் குளிரவும் ஆரம்பித்துவிடும்.

பெரும்பாலும் கோட் அணிந்திருப்பார். புத்தகங்களை மெதுவாக அடுக்கி வைத்துக்கொண்டிருப்பார். அல்லது ஏதாவது எழுதிக்கொண்டிருப்பார். ஒவ்வொருமுறையும் ஏதேனும் ஒரு திட்டத்தை அல்லது கனவைப் பகிர்ந்துகொள்வார். என்ன எழுதுகிறீர்கள், என்ன மாதிரியான புத்தகங்கள் தமிழில் வெளிவருகின்றன, எப்படிப்பட்ட புத்தகங்களை அதிகம் படிக்கிறார்கள் என்றெல்லாம் விசாரிப்பார்.

இருங்கள், உங்களுக்காகச் சில புத்தகங்கள் வைத்திருக்கிறேன் என்று அழைத்துக்கொண்டு போய் கொரியா, இந்தோனேஷியா, வியட்நாம் நூல்களையெல்லாம் காட்டுவார். நான் விழித்தால், ‘இவையெல்லாம் முக்கியம்’ என்பார். தொடக்கத்தில் இவரிடம் சீனா, சோவியத் நூல்கள் அதிகம் வாங்கியிருக்கிறேன் போலிருக்கிறது. தண்டகாரண்யத்தில் கூடாரம் போட்டு வசிக்கிறேன் என்றும் அடுத்த மாதம் ஒரு புரட்சிக்குத் திட்டமிட்டிருக்கிறேன் என்றும் அவராகவே நினைத்துக்கொண்டுவிட்டார். சணல் கட்டிய புத்தக அடுக்குகளை இழுத்து வந்து என் முன்னால் தள்ளுவார். ஐந்து முறை தும்மிவிட்டு, மன்னிக்கவும் இவை தேவைப்படாது என்பேன்.

உடைந்த, பூச்சி அரித்த புத்தகங்களை எப்படிப் பழுது பார்ப்பது, அக்கு அக்காகப் பிரிந்திருக்கும் பக்கங்களை எப்படித் தைப்பது, வெள்ளிமீன்கள் முளைத்தால் என்ன செய்யலாம், அரிய புத்தகங்கள் என்றால் என்ன என்றெல்லாம் கேட்டால் உற்சாகம் அவரைத் தொற்றிக்கொள்ளும். சில கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ராமச்சந்திர குஹாவுக்கு அந்தப் புத்தகத்தை வரவழைத்துக்கொடுத்தேன், இந்தப் புத்தகத்தைக் கண்டுபிடித்துக்கொடுத்தேன் என்று பெருமைப்படுவார். கடிதம் எழுதுவார். இரண்டு வரி விசாரித்துவிட்டு, நான்கு பக்கங்களில் ஒரு பட்டியலை இணைப்பார். தலைப்பு, ஆசிரியர், பக்க எண், புத்தகத்தின் நிலை, விலை அனைத்தும் இடம்பெற்றிருக்கும். பொறுமையாக அமர்ந்து எப்படி அவரால் இதையெல்லாம் எழுதமுடிகிறது? இப்படி எவ்வளவு பேருக்குத் தனித்தனியாகக் எழுதி அனுப்புவார்? அவர்களில் எவ்வளவு பேர், ‘ஆம் இந்தப் புத்தகங்களெல்லாம் வேண்டும், அனுப்பி வையுங்கள்’ என்று பதில் போடுவார்கள்?

அவரிடம் வாங்கியதைவிட அதே வீதியில் உள்ள மற்ற கடைகளில்தான் அதிகம் வாங்கியிருக்கிறேன். புத்தகத்தின் பின்னால் விலை ஒட்டி இருக்காது. பிளாசம்ஸ் போல் இயந்திரக் கரம் கொண்டு வருடி பில் போட்டுக் கொடுக்க மாட்டார். ஒவ்வொன்றாக நிதானமாக எடுத்து முன்னும் பின்னும் பார்த்துவிட்டு ஒரு துண்டுச் சீட்டில் 70, 80, 120 என்று வரிசையாக எழுதி, கோடு கிழித்து, கூட்டி, கடைசியாக நமக்காகக் கொஞ்சம்போல் குறைத்து, இவ்வளவு என்று சொல்லி வாங்கிக்கொள்வார்.

ஒரு பழைய வீடுதான் கடையாக மாறியிருக்கும். இறந்தவரின் சேகரிப்புகளை மொத்தமாக வாங்கிய கதைகளைச் சொல்லியிருக்கிறார். பழைய நூல்களைக் கொள்முதல் செய்வதற்காக எப்போதும் காத்துக்கொண்டிருப்பார். உங்களுக்கு அவர் தெரியுமா, அவர் இறந்தபிறகு அவர் நூலகத்தை மொத்தமாக மூட்டை கட்டி என்னிடம்தான் அவர் குடும்பத்தினர் கொண்டுவந்து கொடுத்தனர் என்பார். ஒருநாள் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். அங்கும் உங்களுக்குத் தேவைப்படும் நூல்கள் இருக்கின்றன என்பார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு போனபோது, இரண்டு மூன்று முறை என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. ‘ஓ, சரி, புத்தகம் பார்க்கிறீர்களா?’ என்று அவர் கேட்ட விதத்தை வைத்தே அவருக்கு என்னை நினைவில் இல்லை என்பது தெரிந்துவிட்டது. ஒரு சுற்று சுற்றிவிட்டு, மீண்டும் வந்து என்னைத் தெரிகிறதா என்று கேட்டேன். ‘எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று விழித்தார். அவர் கையை நானாகவே எடுத்து ஒருமுறை மெலிதாக அழுத்திவிட்டு, விடைபெற்றுக்கொண்டேன்.

பழைய புத்தகங்களில் பழங்கால நினைவுகள் தேங்கியிருக்கின்றன என்பது என் நம்பிக்கை. ஒரு பழுப்புப் புத்தகத்தை எடுத்து நான் பிரிக்கும்போது கால இயந்திரம் ஒரு பறவை போல் அமைதியாக என்னருகில் வந்து நிற்கிறது. சுடச்சுட அச்சிலிருந்து வந்து விழும் ஒரு டால்ஸ்டாய் எனக்கானவர் அல்ல. ஒரு ஹோமரோ ஹியூகோவோ ஷேக்ஸ்பியரோ செக்காவோ எனக்குத் தேவைப்பட்டால் நிச்சயம் அமேசானில் தேடமாட்டேன். தாஸ்தோவ்ஸ்கியை, ஃபாக்னரை, கிரகாம் கிரீனை, ஜேக் லண்டனை, லூயி கரோலை என்னால் புதிய அட்டைகளில் கற்பனை செய்ய இயலாது. போரும் வாழ்வும் நூலை நீண்டகாலம் காத்திருந்து பிளாசம்ஸில் வாங்கினேன். ரோஸ்மேரி ஆடம்ஸ் மொழிபெயர்த்த பழைய பெங்குவின் பதிப்பு (இரு தொகுதிகள்).

ராபர்ட் கால்பிரைத் கதைகள் புதிய வாசத்தோடு மட்டும்தான் கிடைக்கும். எனக்கு அதில் பிரச்சினையில்லை. கிண்டிலிலும் என்னால் கால்பிரைத்தைப் படிக்கமுடியும். துப்பறியும் கதைகளுக்கு கிண்டில் உகந்தது. ஆனால் ஷெர்லாக் ஹோம்ஸ் என்று வந்துவிட்டால் எனக்குப் பழைய பதிப்பு தேவைப்படும். The Name of the Rose புத்தகத்தைக் கிண்டிலிலோ புதிய பதிப்பிலோ படித்தால் ரோஜாவின் மணம் கிடைக்குமா என்ன?

சில தினங்களுக்கு முன்பு, ‘புக்சோர்’ எனும் இணையக்கடையிலிருந்து சில பழைய நூல்களை வாங்கினேன். நான் ஏற்கெனவே படித்த, என்னிடம் தற்சமயம் இல்லாத அன்னா கரீனினா, புரூஸ் சாட்வின், ஆர்வெல் ஆகியவற்றோடு நான் படிக்காத சில புத்தகங்களும் பழங்கால வாசனையோடு வந்து சேர்ந்தன. ‘இந்தப் புத்தகங்களெல்லாம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறோம். புத்தகங்களை நேசிக்கும் எங்கள் குடும்பத்துக்கு உங்களை வரவேற்கிறோம்’ என்று மஞ்சள் துண்டு காகிதத்தில் யாரோ கையால் எழுதி அனுப்பியிருந்தார்கள். ஒரு புத்தகம் தன் வாசத்தை இப்படியெல்லாம்தான் திரட்டிக்கொள்கிறது.

0

சுகுமாரனின் பெருவலியைச் சென்ற வாரம் படித்தேன். கிட்டத்தட்ட ஒரே அமர்வில் முடித்துவிடக்கூடிய அளவுக்குச் சிறிய நூல். ஜகனாராவின் பார்வையிலிருந்து விரியும் முகலாய உலகின் கதை. சூதும் பகையும் அதிகார வெறியும் மதவெறியும் நின்று நிலைபெற்றுவிட்ட ஆண்களின் உலகில் ஓர் இளம் பெண்ணாக ஜகனாரா தன்னந்தனியாக நிற்கிறார். குரலற்ற, குறிக்கோளற்ற, அந்தப்புரப் பதுமைகளில் ஒருவராக அவரால் சுருங்கமுடியவில்லை. சுடர்விட்டு எரியும் அறிவு அவரை அலைகழிக்கிறது. ஷாஷகானும் ஔரங்கசீப்பும் தாராவும் சத்ரசாலும் ஆளுக்கொரு பக்கம் அவரைப் பிடித்து இழுக்கிறார்கள். தனக்கென்று கனவுகளை வளர்த்துக்கொள்ளும் ஆற்றலும் அந்தக் கனவுகளைச் செயல்படுத்துவதற்கான வலுவையும் பெற்றவளாக ஜொலிக்கிறாள் ஜகனாரா.

ஷாஜகானின் இந்துஸ்தானத்தில் ஜகனாராவால் ஒரு பறவைபோல் சிறகுகள் விரித்து விருப்பப்படி அலையமுடிகிறது. அப்பாவுக்குப் பிறகு தாராவின் உலகில் இதைவிடவும் சுதந்தரக் காற்று இன்னும் அதிகம் வீசும் என்று தாரா நம்புகிறாள். மும்தாஜை ‘தேவி’ என்று ஷாஜகான் அழைப்பதுபோல் ஜகனாராவின் கனவில் தோன்றும் சத்ரசாலும் ‘தேவி’ என்று தன் கரங்களை அவளை நோக்கி நீட்டுகிறான்.

எல்லோரும் கனவு காண்கிறார்கள். எல்லோரும் கனவுகளைத் துரத்துகிறார்கள். ஜகனாரா கனவுகளைப் புசித்து வாழ்கிறாள் என்றால் ஔரங்கசீப்பை அவன் கனவுகள் மென்று புசிக்கின்றன. ஷாஜகானின் கனவு சிறைபடுத்தப்படுகிறது. தாராவின் கனவு கொல்லப்படுகிறது. வெள்ளைப் பாம்பு என்று ஜகனாரா அழைக்கும் ஔரங்கசீப் தன்னைச் சுற்றியிருப்பவர்களை வேகவேகமாக விழுங்குகிறான். காற்றில் நச்சு பரவுகிறது. தன் சிறகுகள் முறிந்து விழுவதை ஜகனாரா காண்கிறாள். இறுதியில் அவள் கனவும் ஆக்கிரமிக்கப்படுகிறது. இந்துஸ்தானம் இருளின் வயிற்றுக்குள் நுழைகிறது. இருந்தும் சுகுமாரன் தன் நாவலை இப்படி முடிக்கிறார். ‘மேகத்தின் சிறு கீற்றும் இல்லாமல் முடிவற்று விரிந்திருக்கும் ஆகாயத்தில் மங்கலாகப் பிறை ஒளிர்கிறது.’

வரலாற்றுக்கு மிகவும் நெருக்கமாக எழுதிச் செல்கிறார் சுகுமாரன். வேறு சில நூல்களைத் துணைக்கு வைத்துக்கொண்டாலும் பிரதானமாக ஜகனாராவின் நாட்குறிப்புகளைக் கொண்டே தனது புனைவை அவர் கட்டமைக்கிறார். ஒருவேளை வரலாற்றுப் பகுதிகளை நாவலாசிரியர் சுகுமாரனும் கனவுகளையெல்லாம் கவிஞர் சுகுமாரனும் எழுதியிருக்கக்கூடுமோ? பல இடங்களில் கவிஞரிடம் பேனாவைக் கொடுத்துவிட்டு, நாவலாசிரியர் அமைதியாகப் பின்னுக்கு நகர்ந்து சென்றுவிடுகிறார். (‘மறதி வலிமையானது. ஒரு நாள் அது நினைவாக மாறும்’.)

சிறு வலி மட்டுமே எஞ்சி நிற்கிறது. சுகுமாரன் இந்நாவல் எழுதிய காலத்தில் ஏதேனும் காகிதத் தட்டுப்பாடு நிலவியதா? ஒரு முக்கியக் கட்டத்தில் எதற்காக நாவலைச் சட்டென்று முடிக்கவேண்டும்? வெள்ளைப் பாம்பும் வெண்புறாவும் இணைந்தும் முரண்பட்டும் வாழ்ந்த பொழுதுகளை எங்கே சென்று காண்பது? ஜகனாராவின் கனவை அவள் விட்ட இடத்திலிருந்து நாம் காண ஆரம்பிக்கவேண்டியதுதானா?

0

பகிர:
மருதன்

மருதன்

எழுத்தாளர், கட்டுரையாளர். ‘அசோகர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். வரலாறு, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய வெளியீடு, ‘ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம்’. தொடர்புக்கு : marudhan@gmail.comView Author posts

2 thoughts on “என்ன எழுதுவது? #5 – பெருவாசம், பெருவலி”

 1. அன்புள்ள மருதன்
  ‘பெருவலி’யை வாசித்தமைக்கு நன்றி.
  எழுதியமைக்கு மிக்க நன்றி.

  சுகுமாரன்

 2. அதிகாரத்தை அண்டிப் பிழைக்கும் அதிகார விரோதி என்று ஓரு வரி வரும்.

  பழைய புத்தகங்கள் தரும் இன்பம் அனுபவித்தால் மட்டுமே அடைய முடியும்

  புஸ்தகம் ஹஸ்த லட்சணம்

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *