Skip to content
Home » என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

நார்சிசஸ்

புதிதாக எழுதத் தொடங்கியிருக்கும் ஓர் இளம் எழுத்தாள நண்பரிடம் ஓரிரு வாரங்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அறிவியல் புனைவு, செவ்வியல் இலக்கியம், கிரேக்கத் தொன்மம் என்று உரையாடல் நீண்டுகொண்டிருந்தபோது, எனக்கு அவர் பிடிக்கும், இவர் பிடிக்காது என்று சொல்லிக்கொண்டே வந்தவர், ‘எனக்கு நார்சிசஸ் ரொம்பப் பிடிக்கும்’ என்றார். நார்சிசஸ் கதையா அல்லது அவரையேவா என்றேன். ‘அவரைத்தான்’ என்றார் படக்கென்று. பாரதி பிடிக்கும், டால்ஸ்டாய் பிடிக்கும், செகாவ் பிடிக்கும் என்பதுபோல் இவ்வளவு இயல்பாக, இவ்வளவு உணர்வுபூர்வமாக எனக்கு நார்சிசஸ் பிடிக்கும் என்றும் ஒருவரால் சொல்லமுடியுமா? என் குழப்பத்தை அவரே போக்கினார். ‘எனக்கு என்னை மிகவும் பிடிக்கும். அதனால் நார்சிசஸ் பிடிக்கும்.’ அவர் விடைபெற்றுச் சென்றதும் ஓவிட்டைத் தேடியெடுத்து வாசிக்கத் தொடங்கினேன். நாம் வாழ்ந்துகொண்டிருப்பது நார்சிசஸ் காலம் என்பது உரைத்தது.

சில பக்கங்களில் முடிந்துவிடக்கூடிய கிரேக்கத் தொன்மக்கதை அது. என் குழந்தை நீண்ட காலம் வாழ்வானா என்று ஆரக்கிளிடம் சென்று லிரியோப் கேட்டபோது, அவருக்கு அளிக்கப்பட்ட ஆரூடம் இது. ‘உன் மகன் தன்னை உணராமல் இருக்கும்வரை மகிழ்ச்சியோடு, நீண்ட காலம் வாழலாம்’. இதென்ன விசித்திரமான வாக்கு? புத்தியுள்ள எந்த மனிதனுக்கும் தன்னை உணரும் திறன் உண்டல்லவா? அல்லது, தன்னை உணர்ந்தவன்தானே புத்தியுள்ளவனாக இருக்கமுடியும்? அர்த்தமற்ற சொற்களை ஆரக்கிளும் உதிர்க்கும் போலும் என்று நினைத்துக்கொண்டே மலையிலிருந்து கீழே இறங்கினாள் லிரியோப்.

நார்சிசஸின் அசாதாரண அழகை முதலில் உணர்ந்தவர் லிரியோப்தான். விரைவில் ஊரே அவன் அழகைக் கொண்டாடத் தொடங்கியது. இப்படியொரு அழகன் இதுவரை படைக்கப்பட்டதில்லை என்று கண்டவர்களெல்லாம் சொக்கினார்கள். இளம் பெண்கள் அனைவரின் கனவுகளையும் நார்சிசஸ் ஆக்கிரமித்துக்கொண்டான். கனவு கண்ட அனைவரும் அவனைக் காதலித்தார்கள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கும் அவனிடம் மோகம்தான். நார்சிசஸை நாம் அனைவரும் போட்டிப்போட்டுத் துரத்துகிறோம். அவன் கடைக்கண் பார்வை நம்மில் யார்மீது விழப்போகிறதோ தெரியவில்லையே! இப்படி நினைத்து, நினைத்து ஏங்க முடிந்ததே தவிர, ஒருவராலும் நார்சிசஸை நெருங்க முடியவில்லை.

ஒரு நாள் எக்கோ எனும் அழகிய தேவதை நார்சிசஸைக் கண்டு வியந்து அவனைப் பின்தொடரத் தொடங்குகிறாள். நார்சிசஸ் செல்லும் இடமெல்லாம் எக்கோவும் சென்றாள். நார்சிசஸ் எப்போது என்னைத் திரும்பிப் பார்ப்பான்? நான் அவன் அழகில் மயங்கியதுபோல் அவனும் என்னைக் கண்டு மயங்குவானா? மயங்கவெல்லாம்கூட வேண்டாம். ஒரேயொரு சொல் அவனிடமிருந்து வந்தாலும் போதும். ஒரு சொல். என் இதயத்தை அவனுக்குப் பிளந்து கொடுத்துவிடுவேன்.

எக்கோ வாங்கி வந்த சாபம் அது. அவளால் யாரிடமும் எது குறித்தும் வாயெடுத்துப் பேசமுடியாது. யாராவது ஒருவர் பேசினால் அவரிடமிருந்து வரும் கடைசிச் சொல்லை எக்கோ எதிரொலிப்பாள். அவ்வளவு மட்டும்தான் முடியும். தன் மனதிலிருப்பதை ஒருபோதும் அவளால் வெளிப்படுத்தமுடியாது. எனவே, ஏதாவது பேசேன், பேசேன் என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டே நார்சிசஸை அடியொற்றிச் சென்றுகொண்டிருந்தாள் எக்கோ. மனம் முழுக்க காதல் தளும்பிக்கொண்டிருந்தது. வெளிவரமுடியாத சொற்களெல்லாம் தொண்டைக்குழிக்குள் குதித்துச் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.

தன்னை யாரோ பின்தொடர்வதை நீண்ட நேரம் கழித்த உணர்ந்து நார்சிசஸ் குரல் கொடுத்தான்.

‘யார் அங்கே?’

எக்கோ எதிரொலித்தாள். ‘அங்கே.’

இதென்ன என்று நார்சிசஸ் சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தான். ‘வா இங்கே!’

‘வா இங்கே!’ என்றது குரல்.

யாரையும் காணமுடியாததால் நார்சிசஸ் குழம்பினான். ‘ஏன் இப்படி ஓடுகிறாய்?’

‘ஓடுகிறாய்’ என்றாள் எக்கோ.

‘இங்கே வா. நாம் சந்திக்கலாம்’ என்றான் நார்சிசஸ்.

‘நாம் சந்திக்கலாம்’ என்று மகிழ்ச்சியோடு இரு கரங்களையும் விரித்தபடி துள்ளிக் குதித்து வெளிப்பட்டாள் எக்கோ. வந்திருப்பது பெண் என்பது தெரிந்ததும் ‘என்னைத் தொடாதே! விலகிப் போ!’ என்று பதறியபடி பின்வாங்கினான் நார்சிசஸ். நீ என்னைத் தீண்டுவாய் என்றால் அதற்குள் நான் இறப்பதே மேல் என்று முழங்கினான். ‘நீ என்னைத் தீண்டுவாய்’ என்று நார்சிசஸ் சொன்னபோது உடல் சிலிர்த்த எக்கோ, இறுதியாக வந்து விழுந்த சொற்களைக் கேட்டதும் துடிதுடித்துப்போனாள்.

அவமானமும் ஏமாற்றமும் எக்கோவைப் பிடுங்கித் தின்றன. நார்சிசஸ் கடுஞ்சொற்களால் தன்னை நிராகரித்ததை அவளால் ஏற்கமுடியவில்லை. உதடுகள் துடிக்க, கன்னம் சிவக்க, அருவி போல் ஓவென்று அழதபடி காட்டுக்குள் ஓடினாள் எக்கோ. அங்கிருந்த ஒரு குகைக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டாள். அந்த இருண்ட குகை என்னையும் என் அவமானத்தையும் சேர்த்து ஒரே விழுங்காக விழுங்கிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்று நினைத்தாள். ஆனால் குகை அவளை விழுங்கவில்லை என்பதோடு அவள் வேட்கையை மேன்மேலும் வளர்த்துவிட்டது. நார்சிசஸ்மீது மேலும் காதல் கொண்டாள். மேலும் துயரம் கொண்டாள்.

அல்லது இரண்டும் ஒன்றேதானா? உறக்கம் தொலைந்தது. மேனி வதங்கியது. மினுமினுப்பு உதிர்ந்தது. உடலிலுள்ள எலும்புகள் யாவும் கற்கள்போல் இறுகின. அதன்பின் அவளை ஒருவராலும் காணமுடியவில்லை. உருகி, உருகி ஒரு கட்டத்தில் கரைந்தே போனாள் எக்கோ. முற்றாக மரிக்கவில்லை என்பதற்கு அத்தாட்சியாக அவள் குரல் மட்டும் எஞ்சியிருந்தது. அந்தக் குரலும் கானகத்தின் அடர் இருளுக்குள் மறைந்து கிடந்தது. அவள் கேட்க விரும்பிய ஒற்றைச் சொல் நார்சிசஸிடமிருந்து வரவேயில்லை.

நம் கண்முன்னால் வளர்ந்த தளிர் இப்படி வாடிக் கிடக்கிறதே என்று காடும் நம்மில் ஒருத்தி இப்படித் தொலைந்துபோனாளே என்று சக தேவதைகளும் வருத்தம் கொண்டு பழிவாங்கும் கடவுளான நெமிசிஸிடம் சென்று, எக்கோவை வஞ்சித்த நார்சிசஸை நீதான் என்னவாவது செய்யவேண்டும் என்று முறையிட்டனர். இவர்களில் பலர் நார்சிசஸால் ஏற்கெனவே இதயம் முறிந்துபோனவர்கள். அவர்கள் வலியை மற்றொரு பெண்ணான நெமிசிஸால் உணரமுடிந்தது. தன் மாயத்தை நிகழ்த்தினாள்.

ஒரு நாள் நார்சிசஸ் ஓடியாடி, வேட்டையாடிக் களைத்து அலைந்துகொண்டிருந்தபோது ஒரு நீரூற்றைக் கண்டான். அடர்ந்த காட்டுக்குள் இருந்தாலும் ஓர் இலை விழாமல் ஒரு விலங்கோ பறவையோ நெருங்காமல் காற்றுகூட அசைக்காமல் படிகம்போல் இருந்தது நீரூற்று. தாகத்தோடு குனிந்த நார்சிசஸ் நீரில் தெரிந்த உருவத்தைக் கண்டதும் உறைந்துபோனான். அந்தக் கணமே வேறொரு தாகம் ஆரம்பமாகிவிட்டது. அடடா, இப்படியொரு அழகிய தரிசனம் இதற்குமுன்பு வாய்த்ததில்லையே! என் நெஞ்சைக் கரைத்துவிடும் அழகாக அல்லவா இருக்கிறது இது! இமைக்கவும் மறந்து பார்த்துக்கொண்டே இருந்தான் நார்சிசஸ். வனப்பான உடலமைப்பையும் உருண்டு திரண்ட தோள்களையும் மின்னும் இரு நட்சத்திரங்களையும் (அவன் கண்கள்தான்) தந்தம் போன்ற கழுத்தையும் ஈர்க்கும் சுருள் முடிகளும் முடிவற்ற பரவசத்தை அவனுக்கு அள்ளித் தந்தன. நா வறண்டால் வறண்டு போகட்டும். ஒரு கை நீரை அள்ளினாலும் மயக்கும் இந்த உருவம் கலைந்துவிடும். கூடாது. ஒரு கணமும் என் அழகை நான் பிரியமாட்டேன்.

ஆனால் எவ்வளவு காலம் பார்த்துக்கொண்டே இருப்பது? நீரில் துடித்த அழகிய உதடுகளைக் கண்டு பித்தம் கொண்ட நார்சிசஸ் முத்தமிடத் துணிந்தான். வெள்ளைக் கழுத்தை ஒருமுறை வருடிப் பார்க்கும் ஆசையோடு கைகளை நீட்டினான். கட்டியணைத்துக்கொள்ளத் துடித்தான். மாய உருவத்தை ஒரு கணமாவது தீண்டிவிடவேண்டும் என்று வெறி கொண்டான். இயலவில்லை. அவன் நெருங்க, நெருங்க அவன் காதல் விலகிக்கொண்டே போனது. இருந்தும் அவன் அங்கிருந்து விலகிவிடவில்லை. பசி, தாகம், உறக்கம் எதுவும் அவனைக் குறுக்கிடவில்லை. என்னைச் சூழ்ந்திருக்கும் மரங்களே, இவ்வளவு காதலை, இவ்வளவு வேட்கையை, இவ்வளவு பற்றுறுதியைச் சுமந்து நிற்கும் வேறொரு மனிதனை இதற்கு முன்பு இங்கே நீங்கள் கண்டதுண்டா? என்னளவு யாரேனும் ஒருவர் இன்னொருவரைக் காதலித்துப் பார்த்திருக்கிறீர்களா? என் காதலை, கனவை, வாழ்வைக் கண்டடைந்த பிறகும் என்னால் இவனைத் தழுவமுடியவில்லை. எங்கள் இருவரையும் ஒரு மெல்லிய நீர்த் திரை கொடூரமாகப் பிரித்து வைத்திருக்கிறது. இது நியாயமா? என் காதலே, ஏன் என்னை வதைக்கிறாய்? எழுந்து வெளியில் வா!

என்னை உனக்குப் பிடிக்கவில்லையா? என் அழகு உனக்கு இணையானதல்ல என்று தயங்குகிறாயா? ஆனால் தேவதைகளும் கடவுள்களும் மோகம் கொண்ட அழகல்லவா என்னுடையது? நீ மட்டும் ஏன் நெருங்க, நெருங்க விலகிக்கொண்டே போகிறாய்? உன் விரல்களை ஏன் என்னால் பற்றிக்கொள்ளமுடியவில்லை? உன் கனிந்த விழிகளால் துன்புறுத்துவதை எப்போது நிறுத்திக்கொள்வாய்? உன் உதடுகள் பிரித்து ஒரேயொரு எப்போது என்னிடம் பேசுவாய்?

நான் புன்னகைத்தால் நீயும் புன்னகைக்கிறாய். என் கண்களிலிருந்து நீர் பெருகும்போது நீயும் கலங்குகிறாய். நான் உனை அறிவேன். நீயும் எனை அறிவாய். இருந்தும் நாம் ஏன் இணையமுடியவில்லை? நான் என்ன செய்வேன்? என்னுடல் வாடுகிறது. நான் பலமிழந்துவிட்டேன். நீ யாரோ, தெரியவில்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன். இதை எப்படி உனக்குப் புரிய வைப்பது? என் இதயம் உனக்காகவே துடித்துக்கொண்டிருப்பதை நீ உணரவே மாட்டாயா?

நார்சிசஸின் கண்ணீர் நீரில் பட்டதும் ஒரு சிறிய குமிழ் தோன்றியது. சுற்றி ஒரு சிறிய வட்டமும் உண்டானது. சலசலப்புக்கு ஏற்ப நார்சிசஸின் பிம்பம் அசைந்து, அசைந்து மிதக்க ஆரம்பித்தது. ஐயோ என்று அலறினான் நார்சிசஸ். என் உயிரே, என்னைப் பிரியாதே! கலங்கிய நீரில் அவன் காதலும் கலங்கியது. தன்னிலை மறந்த நார்சிசஸ் மேலாடையைத் துறந்துவிட்டு இரு கைகளாலும் தன் மார்பைப் படபடவென்று அடித்துக்கொண்டான். அரற்றினான். அலறினான். முற்றிலும் மதியிழந்தான்.

தன் காதலனின் வீழ்ச்சியைத் தொலைவிலிருந்து எக்கோ பார்த்துக்கொண்டிருந்தாள். கனிவுதான் தோன்றியது அவளுக்கு. நார்சிசஸ் ஒவ்வொருமுறை பரிதவிப்போடு பெருமூச்சு விடும்போதும் எக்கோ அவன் துயரை எதிரொலித்தாள். அவன் தன்னையே அடித்துக்கொண்டபோது, வலியில் துடித்தபோது எக்கோவும் அவன் அடிகளை, அவன் வலிகளைக் கண்ணீரோடு எதிரொலித்தாள்.

சரிவதற்கு முன்பு, இறுதியாகத் தன் பிம்பத்தை ஒருமுறை குனிந்து பார்த்துக்கொண்டான் நார்சிசஸ்.

‘ஓ, அழகே, என் காதல் வீணாகிவிட்டது. விடைபெறுகிறேன்.’

‘விடைபெறுகிறேன்’ என்றாள் எக்கோ.

0

வீழ்ந்த இடத்திலேயே வெள்ளையும் மஞ்சளுமான ஒரு மலராக நார்சிசஸ் மலர்கிறான் என்கிறார் ஓவிட் (Metamorphosis, Ovid, trans. David Raeburn, Penguin). லில்லி மலரின் கிரேக்கப் பெயரிலிருந்தே லிரியோப் (நார்சிசஸின் அம்மா) என்னும் பெயரை ஓவிட் உருவாக்கியிருக்கிறார். நார்சிசஸ் எனும் மலர் அந்தத் தாவரக்குடும்பத்திலிருந்து வந்ததுதான். செஃபிசஸ் எனும் நதிக் கடவுளால் லிரியோப் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். நார்சிசஸின் தந்தை என்று இவரே அழைக்கப்படுகிறார். குழந்தைகளை வயிற்றில் தாங்கி நிற்கும் பெண்கள்போல் ஆற்றங்கரையோரம் மலர்கள் பூத்துக்குலுங்குவதை நார்சிசஸின் குடும்பக் கதையோடு பொருத்திப் பார்க்கலாம். செஃபிசஸ் நார்சிசஸின் தாயைக் குலைப்பதோடு நிற்கவில்லை. நார்சிசஸை ஏமாற்றி அவனையும் குலைக்கிறது நீர். (Narcissus and the Invention of Personal History, Kenneth J. Knoespel, Routledge).

கிரேக்கத் தொன்மக் கதைகளை ரோமானிய வரலாற்றோடு இணைத்து கற்பனை செய்தவர் ரோமானியக் கவிஞரான ஓவிட் (பொயுமு 43-பொயு 17). பாலியல் வேட்கையை ஒரு கொண்டாட்டமாகத் தன் கவிதைகளில் முன்னிறுத்தியதால் ரோமானிய மன்னன் அகஸ்டஸால் நாடு கடத்தப்பட்டவர். நார்சிசஸின் கதையை முதலில் சொன்னவர் அல்லர். ஆனால் சிறப்பாகச் சொன்னவர்.

ஆஸ்கர் ஒயில்டின் டோரியன் கிரே (The Picture of Dorian Gray, Oscar Wilde, Wordsworth Classics) நார்சிசஸ் போலவே தன் அழகால் ஆட்கொள்ளப்பட்டவன். ஓர் ஓவியர் டோரியன் கிரேவின் உருவத்தை வரைந்து தர, அதைக் கண்டு மயங்குகிறான் கிரே. அதன் அழகு அவனை வேறு வகையில் பித்தமாக்குகிறது. வயது ஏற, ஏற என் இளமையும் அழகும் குறைந்துபோகும். தளர்ந்தவனாக, முதியவனாக நான் மாறுவேன். ஆனால் என் ஓவியமோ இதே கட்டுக்கோப்போடு, இதே வனப்போடு மிளிரும் என்றால் இது எவ்வளவு பெரிய அநீதி? ரத்தமும் சதையும் சிந்தனையுமாக இருக்கும் நான் அழிவேனாம். என்னைப் பிரதியெடுத்திருக்கும் என் படம் காலத்தைக் கடந்து நிற்குமாம். இது குரூரம் கிடையாதா? நீ ஒரு காலத்தில் இப்படித்தான் பேரழகனாக இருந்தாய் என்று என் இதயத்தைக் குத்திக் கிழிக்கும் பணியை அல்லவா இந்த ஓவியம் வருங்காலத்தில் செய்யப்போகிறது? ஓவியத்துக்குப் பதில் நான் நிரந்தர அழகோடும் எனக்குப் பதில் என் ஓவியம் மூப்படைந்தும் வளருமானால் என் ஆன்மாவை இழக்கவும் தயார் என்று கூக்குரலிடுகிறான். கதேயின் ஃபெளஸ்ட் போல் கிரேவின் கனவு நிறைவேறுகிறது. ஒரு புதிய உல்லாச வாழ்வை அவன் தொடங்குகிறான்.

நாடக நடிகையான சிபில்மீது காதல் கொள்கிறான் கிரே. மெய்யான காதலைக் கண்டடைந்த பிறகு நான் ஏன் மேடையில் பொய்யான காதல் வசனம் பேசி நடிக்கவேண்டும் என்று நினைத்த சிபில் தன் பணியைக் கைவிடுகிறாள். நான் காதலித்தது உன்னையல்ல, நடிகையை என்று சொல்லி சிபிலைவிட்டு விலகுகிறான் கிரே. எக்கோவை நினைவுபடுத்தும் வகையில் மனமுடைந்த தற்கொலை செய்துகொள்கிறாள் சிபில். கிரே தன்னை மறந்து உல்லாச உலகுக்குள் மூழ்குகிறான். இன்பங்களைத் தேடித் தேடித் துய்க்கிறான். பதினெட்டு ஆண்டுகள் கழிகின்றன. அவன் ஏற்படுத்தும் வலிகளை, அவன் எதிர்கொள்ளவேண்டிய துயரங்களை, அவன் இழைக்கும் பாவங்களை அவனுடைய ஓவியம் எதிர்கொண்டு பொலிவிழக்கத் தொடங்குகிறது. உன் ஆன்மா அழிந்துகொண்டிருக்கிறது. உன் வழியை மாற்றிக்கொள் கிரே, என்று ஓவியர் எச்சரிக்க, வாக்குவாதம் முற்றி அவரைக் கொல்கிறான் கிரே. பதினெட்டு ஆண்டுகள் கழிந்த பிறகும் கிரேவும் மாறவில்லை அவன் அழகும் குலையவில்லை. அவன் ஓவியமோ முற்றிலும் சிதைந்த ஒரு மனிதனின் படத்தைக் காட்டுகிறது. அதைக் கண்டு கோபம் கொள்ளும் கிரே ஓவியனைக் குத்திய அதே கத்தியைக் கொண்டு ஓவியத்தைக் கிழித்துக்கொல்கிறான். சத்தம் கேட்டு வேலையாள்கள் விரைந்து வருகிறார்கள். அழகிய, மினுமினுப்பான ஓவியம் ஒன்று தரையில் விழுந்து கிடக்கிறது. குழி விழுந்த, சுருக்கம் விழுந்த, அருவருப்பான தோற்றம் கொண்ட ஒரு முதியவன் கத்தியால் குத்தப்பட்டு இறந்துகிடக்கிறான்.

உண்மைக்காதல் கைக்கு அருகில் இருந்தபோதும் நார்சிசஸ்போல் டோரியனும் (இதுவும் கிரேக்கப் பெயர்தான்) சுய காதலால் தானும் அழிந்து தன் காதலியையும் அழிக்கிறான். நீரில் காணும் பிம்பம் வெளியில் வந்து தன்னை ஏற்றுக்கொள்ளும் என்று ஒருவனும் சிதைந்திருக்கும் ஓவியத்தை அழித்தால் தனக்கு மீட்சி கிடைத்துவிடும் என்று இன்னொருவனும் துடிக்கிறார்கள். அழகு அவர்கள் ஆன்மாவை அழிக்கிறது.

0

இலக்கியம் கடந்து உளவியல், சமூகவியல், அரசியல், பண்பாடு உள்ளிட்ட துறைகளிலும் நார்சிசஸின் தாக்கத்தைக் காணமுடியும். நம் எல்லோருக்குள்ளும் ஒரு நார்சிசஸ் இருப்பதாகச் சொல்கிறார் சிக்மண்ட் ஃபிராய்ட். பிறக்கும்போதே நார்சிசிஸமும் நம்மோடு தோன்றிவிடுகிறது. சுய காதல் அளவு கடந்து மிகும்போது ஒரு நோய்க்கூறாக மாறுகிறது என்கிறார் ஃபிராய்ட்.

முதல் நிலை, இரண்டாம் நிலை என்று இரண்டாக நார்சிசிஸத்தைப் பிரிக்கிறார். சர்ச்சைக்குரிய அவருடைய பார்வையை எளிமைப்படுத்திச் சொல்லவேண்டுமானால் நான், என் உடல், என் தேவை என்று உள்ளுக்குள் சுருங்குபவனால் எது குறித்தும் கவலையின்றி அளவின்றி வேட்டையாடி உண்டு வாழமுடியும். எனக்கு வெளியிலும் உலகம் இருக்கிறது, வாழ்க்கை இருக்கிறது என்று தன்னை உடைத்துக்கொண்டு வெளியில் நீண்டு வரும் ஒருவன் வகைதொகையின்றி ஒரு விலங்கை வேட்டையாடினால் அது அழிந்துபோகும் என்பதை உணர்வான்; தன் வேட்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பான். அளவுகடந்த சுய காதல் பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்கிறார் ஃபிராய்ட். வெளியில் செலுத்த வேண்டிய காதலைத் தன்மீதே திருப்பிக்கொண்டதன்மூலம் நார்சிசஸ் பாதிக்கப்பட்டதுபோல். சுய காதல் ஒருவனைச் சமூகத்தோடு ஒன்றவிடாமல் தடுக்கிறது; மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் சமூகத்தில் ஓர் அங்கம்தான் என்பதையும் உணரவிடாமல் கண்களை மறைத்துவிடுகிறது.

எல்லாவற்றிலும் தன்னை முன்னிறுத்திக்கொண்டே சிந்திப்பது, செயல்படுவது. அசாதாரணமான சுயமதிப்பீட்டை வளர்த்துக்கொள்வது; அதை மற்றவர்களும் நம்பவேண்டும் என்று எதிர்பார்ப்பது. தன்னை மையப்படுத்தியே அனைத்தும் சுழல்வதாகக் கற்பனை செய்துகொள்வது. சுற்றமும் சூழலும் தன் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது… இந்த அதீதங்களை நார்சிசிஸம் என்று உளவியலாளர் வகைப்படுத்துகின்றனர்.

வேறெந்த துறைகளைக் காட்டிலும் அரசியலில் நார்சிசிஸம் துலக்கமாக வெளிப்படுவதைக் காணலாம். பூதாகரமான பதாகைகள், பிரமாண்டமான மக்கள் கூட்டம், ஆயுதத் தளவாடங்களின் அணிவகுப்பு ஆகியவற்றைக் கொண்டு தன் பிம்பத்தை நூதனமாக முறையில் பெரிதாக்கிக் காட்டுவதில் ஹிட்லர் வெற்றி பெற்றார். ஹிட்லரின் உரைகள் அவரிடமிருந்து தொடங்கி, அவரை மையமிட்டு, அவரை வானுக்கு உயர்த்தி, அவரிடமே முடியும் வண்ணம் அமைந்திருப்பதை ரிச்சர்ட் எவான்ஸ் சுட்டிக்காட்டுகிறார். தன்னைப் பற்றியும் தனது கடந்த கால வாழ்க்கை பற்றியும் பல கட்டுக்கதைகளை அவரால் போகிற போக்கில் உருவாக்கமுடிந்திருக்கிறது. உணவு வேளைகளில், போர்க்காலங்களில் ஹிட்லர் மற்றவர்களோடு மேற்கொண்ட உரையாடல்களைப் படித்துப் பார்த்தால் அவருடைய நார்சிசிஸப் பண்புகள் அழுத்தமாக வெளிப்படுவதைக் காணலாம் என்கிறார் எவான்ஸ். நார்சிசஸ் தன்னை அழித்துக்கொண்டான் என்றால் ஹிட்லர் மற்றவர்களை அழித்தான். நார்சிசஸ் எக்கோவின் குரலை நிராகரித்தான் என்றால் ஹிட்லர் மானுடத்தின் குரலை.

ஒரு நார்சிசிஸ்ட் எப்படி இருப்பார், அவரிடம் என்னென்ன குணங்கள் இருக்கும் என்பதற்கான கண்முன் உதாரணமாக டொனால்ட் டிரம்ப் திகழ்ந்ததை அரசியல் ஆய்வாளர்கள் பலரும் எடுத்துக்காட்டுகளோடு விவாதித்திருக்கின்றனர். நரேந்திர மோடியின் சுய காதலை ராமச்சந்திர குஹா ஒரு நேர்காணலில் கவனப்படுத்தியிருக்கிறார். ‘எந்தத் துறையாக இருந்தாலும் நிறைய தன்னம்பிக்கை இருந்தால்தான் மேலே வரமுடியும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால் இங்கே (மோடி விஷயத்தில்) என்ன அசாதாரணமானதாக இருக்கிறது என்றால் தன்னையே அவர் படர்க்கையில் அழைத்துக்கொள்கிறார். நரேந்திர தாமோதர் மோடி என்று தன் பெயர் பொறித்த சூட் அணிந்துகொள்கிறார். சுய காதல்தான் அவரை உருவாக்கியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். அங்கே ராமர் எனும் கடவுள் இருக்கிறார்… இங்கே நரேந்திர மோடி இருக்கிறார்… இதற்கு முன்பிருந்த பிரதமர்களுக்கும் இவருக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. எந்த வெற்றியாக இருந்தாலும் (அது உண்மையானதோ கற்பனையோ) அதற்குத் தான் மட்டுமே காரணம் என்று இவர் கருதுகிறார். ராமர்கூடக் கிடையாது.’

நான், எனது போலவே அதீத நாம், நமது காதலும் பிரச்சினைக்குரியதுதான். இந்த மனநிலையைக் கூட்டு நார்சிசிஸம் என்று அழைக்கிறார்கள். தான் சார்ந்திருக்கும் குழு குறித்த மிதமிஞ்சிய பெருமித உணர்வோடு, ஊதிப் பெரிதாக்கப்பட்ட கதையாடல்களோடு, எங்கள் மூதாதையர், எங்கள் பண்பாடு, எங்கள் வரலாறு, எங்கள் மரபு என்றொரு வட்டத்துக்குள் இவர்கள் மயங்கி, சுருங்குவார்கள்.

சுய காதலுக்கும் சுய அழிவுக்குமான வேறுபாடு நீரில் தெரியும் பிம்பத்தை அவ்வப்போது எட்டிப் பார்த்து மகிழ்வதற்கும் அங்கேயே கட்டுண்டு விழுந்து கிடப்பதற்குமான வேறுபாடு. இந்த வேறுபாட்டை நன்கறிந்தவர்கள் எக்கோவும் சிபிலும்.

நெமிசிஸ் நம் காலத்துக்கு அளித்திருக்கும் மாய நிரூற்று, சமூக ஊடகம். முழு உலகும் அதன் கரையில் சுரண்டு, சுய காதலில் திளைத்துக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவோடு ஒலிக்கிறது ‘நான்’. தன்னிடம் மயங்கி, தன்னைத் தானே உயர்த்திப்பிடிக்கும் போக்கு தீவிரம் பெற்றிருக்கிறது. கூட்டு நார்சிசிஸத்தின் ஓலம் காதைப் பிளக்கிறது. எனக்குத் தாகமில்லை என்று ஒதுங்குபவர்களையும்கூட ஓலமிடுபவர்கள் பிடித்து, இழுத்து மூச்சு முட்ட, முட்ட நீருக்குள் அழுத்துகிறார்கள்.

நார்சிசஸ் குறித்து ஒரு சிறிய வசனக் கவிதையையும் (The Disciple) ஆஸ்கர் ஒயில்ட் தீட்டியிருக்கிறார்.

நார்சிசஸ் இறந்ததும் நீரூற்றின் தன்மை மாறுகிறது. இனிக்கும் நீர் உப்பு நீராக, கண்ணீர் குளமாக திரிகிறது. சமாதானம் செய்ய வன தேவதைகள் திரண்டு வருகின்றனர். ‘அழகிய நார்சிசிஸின் பிரிவால் நீ வருந்துவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.’

‘அப்படியா, நார்சிசஸ் அவ்வளவு அழகா என்ன?’ என்றது குளம்.

‘ஆகா, மற்றவர்களைவிட உனக்குத்தானே நன்றாகத் தெரியும்!’ என்றார்கள் தேவதைகள். ‘எங்களையெல்லாம் அவன் கண்டுகொள்ளக்கூட இல்லை. உன்னிடம்தான் மயங்கிக்கிடந்தான். உன்னையே பார்த்துக்கொண்டிருந்தான். உனது கண்ணாடி நீரில் அல்லவா தன் அழகை அவன் பிரதிபலித்துக்கொண்டிருந்தான்?’

குளம் சொன்னது. ‘என் கரையில் அவன் சரிந்து கிடந்தபோது, என்னை அவன் குனிந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அவன் கண்களில் என்னுடைய அழகு பிரதிபலிப்பதைக் கண்டேன். அதனால்தான் அவனைக் காதலித்தேன்.’

0

பகிர:
மருதன்

மருதன்

எழுத்தாளர், கட்டுரையாளர். ‘அசோகர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். வரலாறு, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய வெளியீடு, ‘ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம்’. தொடர்புக்கு : marudhan@gmail.comView Author posts

1 thought on “என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்”

  1. அக்களூர் இரவி

    “குளம் சொன்னது. ‘என் கரையில் அவன் சரிந்து கிடந்தபோது, என்னை அவன் குனிந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அவன் கண்களில் என்னுடைய அழகு பிரதிபலிப்பதைக் கண்டேன். அதனால்தான் அவனைக் காதலித்தேன்.’”

    நல்ல கட்டுரை, மருதன். ரசித்துப் படித்தேன்.

    இதைவிட சிறப்பாக விவரிக்க முடியுமா, சுய மோகத்தை, என்ன?

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *