கச்சுச்சா குழு நண்பர்களைப்போலவே ஃப்ரீடாவும் புத்தகப் புழு. பள்ளிப் புத்தகங்களை ஒரு முறை படித்தாலே பாடங்களை மனத்திலிருத்தும் ஆற்றல் பெற்றிருந்ததால் நல்ல மதிப்பெண்களைப் பெற்றார். உயிரியல், இலக்கியம், கலை ஆகியவற்றில் விருப்பமிருந்தாலும் மனிதர்களைத் தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம்.
அறுவையான வகுப்புகளுக்குப் போகாமலிருக்கும் உரிமை தனக்கிருப்பதாக நம்பினார். வகுப்புகளை நடத்துவதற்கான தயாரிப்புகளின்றி, மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்துவைக்க முடியாத திறமையற்ற ஆசிரியர்களை நீக்கவேண்டும் எனப் பள்ளி இயக்குநருக்குப் புகார்க் கடிதம் எழுதுவார்.
ஆசிரியர்கள் மட்டுமல்ல, பள்ளி வளாகத்தில் பிரம்மாண்டமான சுவரோவியங்களை வரைய வந்த ஓவியர்களிடமும் வம்புசெய்தார்கள். ஓவியர்கள் சாரத்தின் மேலே நின்று ஓவியங்களை வரைகையில் சாரத்துக்கான கம்புகளைச் சீவுகையில் கீழே சிந்திய மரத் தூளுக்குத் தீயிடுவார்கள் அந்தக் குறும்பர்கள். மேலெழும் புகையில் ஓவியர்கள் மூச்சுத்திணறுவார்கள், ஓவியம் பாழாகும். அதன் பிறகு ஓவியர்கள் கைத்துப்பாக்கிகளைக் கொண்டு மாணவர்களை மிரட்ட வேண்டியதாயிற்று.
1922இல் டீயகோ ரிவேராவுக்கு 36 வயது. உலகப் புகழ்பெற்ற ஓவியர் என்பதோடு சுவையாகப் பேசும் திறமையும் பெற்றிருந்ததால், யாரையும் எளிதில் கவர்ந்துவிடுவார். முரட்டுத் தலைமுடி, தடிமனான உடல்வாகு, பெரிய உருண்டைக் கண்கள் எனப் பார்க்கத் தவளையைப்போலத் தோற்றமளித்தார். பெரிய தொப்பி, கனமான காலணி, தொளதொளப்பான கலைந்த ஆடையை இறுக்கிப் பிடிக்கும் பட்டையான பெல்ட் அல்லது குண்டுகள் தாங்கிய பெல்ட், தூக்கத்திலிருந்து விழித்தது போன்ற தோற்றம், பேசிக்கொண்டே ஓவியம் வரையும் பழக்கம் அனைத்தும் அவரை மாணவர்களிடையே பிரபலமாக்கியது.
ஃப்ரீடாவின் குறும்புத்தனம் பள்ளியின் கலையரங்கில் ஓவியம் வரைந்துகொண்டிருந்த டீயகோவையும் விட்டுவைக்கவில்லை. அவருடைய கூடையிலுள்ள உணவைத் திருடுவார். ஒரு முறை கலையரங்கின் படிகளில் சோப்பைப் பூசி வைத்துவிட்டுத் தூணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார். டீயகோ இயல்பாகவே கவனமாக நடப்பார் என்பதால் வழுக்கிவிழாமல் தப்பித்துவிட்டார். ஆனால் அடுத்த நாளே வேறொரு ஆசிரியர் அதே படிக்கட்டில் வழுக்கி விழுந்தார்.
டீயகோவின் அப்போதைய காதலியும் அவர் வரையும் ஓவியத்துக்கு மாதிரியாக நிற்கும் வேறொரு பெண்ணும் கலையரங்கில் மாறி மாறி அவருக்குத் துணையிருப்பார்கள். கலையரங்கில் ஒரு பெண் ஒளிந்துகொண்டு இருக்கையில் மற்றவரின் பெயரைச் சொல்லி டீயகோவுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவார் ஃப்ரீடா. இது குறித்து டீயகோவும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் தான் டீயகோவின்மீது மையல் கொண்டிருப்பதாகப் பள்ளித் தோழிகளிடம் தெரிவித்தார் ஃப்ரீடா. என்றாவது ஒரு நாள் டீயகோவுடன் குழந்தை பெற்றுக்கொள்வேன் என்றும் அடித்துச் சொன்னார். டீயகோவின் உருவத்தை யாராவது கேலிசெய்தால் அவர் அறிவும் கனிவும் கொண்டவர் என்று வக்காலத்து வாங்குவார்.
டீயகோவின்மீது ஃப்ரீடாவுக்கு ஈர்ப்பு இருந்தாலும் கச்சுச்சா குழுவின் அறிவிக்கப்படாத தலைவனான அலஜேண்ட்ரோ கோமெஸ் அரியஸ்தான் அவரின் நெருக்கமான தோழன். பேச்சாற்றல், கதைசொல்லும் திறன், ஆழ்ந்த புலமை, விளையாட்டுத் திறன் என பல்திறனுடையவன் அலஜேண்ட்ரோ. உயரமான நெற்றி, கருமைநிறக் கண்கள், நீளமான மூக்கு, மெல்லிய உதடுகள் என அழகனாகவும் இருந்தான். அரசியல், இலக்கியம், ஓவியம், ஊர்வம்பு என எதைப் பற்றியும் பேசுவான்.
மெக்சிகோவின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் முனைப்பும் உண்டு. பதின்வயது ஃப்ரீடா அவனுடன் நெருங்கிப் பழக இதைவிடவும் வேறு காரணங்கள் தேவையா என்ன? 1919இல் பள்ளியில் சேர்ந்த ஃப்ரீடாவைவிடவும் பல வகுப்பு மூத்தவன் என்பதால் வழிகாட்டியாகத் தொடங்கிய பழக்கம் தோழனாக மாறி இறுதியில் காதலனாக முடிந்தது.
‘பதின்வயது ஃப்ரீடா புத்துயிர்ப்பு, புத்திசாலித்தனம், குழந்தைமை இவற்றோடு வாழ்க்கையை அறிந்துகொள்ளும் ஆவலும் வேகமும் கொண்டிருந்தாள். எங்களை வருங்கால இணையர்கள் என்றெல்லாம் சொல்லமுடியாது; இளங்காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்,’ என்று பின்னாளில் சொன்னார் அலஜேண்ட்ரோ.
மென்மையான நடத்தையும் பெண்கள்மீது மதிப்பும் கொண்டிருந்த அலஜேண்ட்ரோ தன்னுடைய அறிவார்த்தமான நகைச்சுவையோடு மலர்க்கொத்துக்களையும் கொடுத்து ஃப்ரீடாவின் மனதைக் கவர்ந்தான். பள்ளி முடிந்த பின் ஒன்றாக நடந்தபடி இடைவிடாமல் பேசிக்கொண்டேயிருப்பார்கள். பிரிந்திருக்க நேருகையில் புகைப்படங்கள், கடிதங்கள் பரிமாறிக்கொள்வார்கள். ஃப்ரீடா எழுதிய கடிதங்களைப் பல வருடங்கள் கழித்தும் பத்திரமாக வைத்திருந்தார் அலஜேண்ட்ரோ.
அந்தக் கடிதங்களில் தன் வாழ்க்கை, உணர்வுகள் என அனைத்தையும் சொற்களில் வடித்தார் ஃப்ரீடா. கூடவே அழும், சிரிக்கும் முகங்கள், கேலிச் சித்திரங்கள் எனச் சின்ன கிறுக்கல்களை வரைந்தார். அவற்றைப் படிக்கையில் சிறுமியிலிருந்து பதின்வயதினர், அடுத்து இளம்பெண் என ஃப்ரீடாவின் பரிணாம வளர்ச்சியை அறியமுடிகிறது. பின்னாளில் ஃப்ரீடா வரைந்த ஓவியங்களிலும் இதே போன்ற உள வெளிப்பாடுகளைக் காணலாம்.
ஃப்ரீடா தன்னுடைய பெற்றோர், கணவர், உறவினர்கள், நண்பர்கள், காதலர்களுக்கு எழுதிய கடிதங்கள் தனித்தனி நூல்களாக வெவ்வேறு பதிப்பாசிரியர்களால் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக அவரின் வாழ்க்கை, உணர்வுகள், உளவியல், மனிதர்களின்மீதான நம்பிக்கை, அந்தக் காலகட்டத்தின் வரலாறு எனப் பலவற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது. கடிதத்தின் இறுதியில் கையொப்பத்துக்குப் பதில் முக்கோணம் ஒன்றை வரைவார். அலஜேண்ட்ரோவுக்கு எழுதிய பெரும்பாலான கடிதங்களில் முக்கோணத்தின் முனை மேல்நோக்கியும் மற்றவர்களுக்கு எழுதியவற்றில் கீழ்நோக்கியும் இருக்கும். சில நேரங்களில் முக்கோணத்தில் கிறுக்கல்களைச் சேர்த்துத் தன்னுடைய உருவப்படமாக மாற்றுவார்.
1922இல் அலஜேண்ட்ரோவின் தந்தை இறந்தபோது அவனுக்கு முதல் கடிதத்தை எழுதினார் ஃப்ரீடா. கத்தோலிக்க பள்ளிச் சிறுமி நண்பனுக்கு ஆறுதல் சொல்வதற்காக முறைப்படி எழுதிய சாதாரண கடிதம். 1923இல் காதல்வயப்பட்ட பிறகு எழுதிய கடிதங்களின் மொழி அவர்களிருவரிடையே உருவாகியிருந்த நெருக்கத்தையும் காதலையும் அலஜேண்ட்ரோமீது ஃப்ரீடா கொண்டிருந்த உடைமைத் தன்மையையும் சுட்டுகின்றன.
இருவரின் உறவையும் ஃப்ரீடாவின் பெற்றோர், குறிப்பாக அவருடைய தாய், ஏற்கவில்லை. அதனால் இருவரும் திருட்டுத்தனமாகச் சந்திக்கவும் கடிதம் பரிமாறிக்கொள்ளவும் வேண்டிய கட்டாயம். அந்தச் சந்திப்புகளுக்காகக் காலையில் சீக்கிரம் கிளம்பிச் செல்லவும் மாலையில் தாமதமாகத் திரும்பி வரவும் புதிய காரணங்களைக் கண்டுபிடித்தார் ஃப்ரீடா. இரவு வீட்டில் உள்ளவர்கள் உறங்கிய பின்னர் கடிதங்களை எழுதினார். சில சமயம் அஞ்சல் நிலையத்தில் நின்றபடியே எழுதித் தபாலில் சேர்ப்பார். சில சமயம் கடிதத்தை அலஜேண்ட்ரோவிடம் சேர்ப்பிக்கத் தங்கை கிறிஸ்டினாவின் உதவியை நாடினார்.
தனக்கு எழுதும் கடிதங்களில் அகஸ்டினா ரேய்னா எனத் தோழியின் பெயரைப் பயன்படுத்தும்படி அலஜேண்ட்ரோவுக்கு அறிவுறுத்தினார். தினமும் கடிதமெழுதுவது அலஜேண்ட்ரோவின்மீது தான் கொண்டுள்ள பிரியத்துக்குச் சான்று எனக் குறிப்பிட்டார். ‘அலெக்ஸ், நீ என்னைக் காதலிப்பதை நிறுத்திவிட்டாயா எனச் சொல். நீ என்னை ஒரு தெள்ளுப்பூச்சியளவுக்குக்கூடக் காதலிக்கவில்லையென்றாலும் நான் உன்னைக் காதலிக்கிறேன்.’ கடிதத்தில் வட்டமொன்றை வரைந்து ‘ஃப்ரீடுச்சாவிடமிருந்து உனக்கொரு முத்தம் இந்தா. இங்கே என் இதழ்களை வெகுநேரம் பதிந்திருந்தேன்,’ என்றெல்லாம் காதல்ரசம் சொட்டச்சொட்ட எழுதுவார்.
1923இன் இறுதியில் மெக்சிகோவில் அதிபர் அல்பாரோ ஓப்ரீகானுக்கு எதிராகப் புரட்சி வெடித்தது. புரட்சியாளர்களை ஒடுக்குவதற்குக் கொடூரமாக நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்து ஹொஸே வாஸ்கோன்செலோஸ் இரண்டு முறை பதவி விலகினார். ப்ரீடாவின் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கச்சுச்சா குழுவினரும் அரசியலில் ஈடுபடவதில்லை அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை என்றாலும் வாஸ்கோன்செலோஸுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசியல் கிளர்ச்சியால் வன்முறை வெடிக்கும் அபாயத்தினால் ஃப்ரீடாவின் தாய் அவரை வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டிலேயே அடைந்துகிடப்பது ஃப்ரீடாவுக்குச் சலிப்பையும் எரிச்சலையும் ஊட்டியது அலஜேண்ட்ரோவுக்கு அவர் எழுதிய கடிதத்தின் வாயிலாகத் தெரிய வருகிறது.
1924இன் பிற்பகுதியில் ஃப்ரீடா எழுதிய கடிதங்களில் அலஜேண்ட்ரோவின் மேல் அவருக்கிருந்த காதல் அதிகமானதைக் காணலாம். அவரிடம் இழையோடிய மெல்லிய சோகம், பாதுகாப்பின்மையினால் அலஜேண்ட்ரோ தன்னைக் காதலிப்பதை ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார். ‘ஃப்ரீடா பாலியல் விஷயங்களில் முதிர்ச்சி பெற்றிருந்தார். பாலியல் இன்பத்தை உயிர்த்துடிப்புமிக்க இயல்பான உந்துதலாகவும் வாழ்க்கையை அனுபவிக்கும் வழியாகவும் எண்ணினார்,’ என்கிறார் அலஜேண்ட்ரோ.
இந்தக் காலகட்டத்தில் சில நாட்களில் பள்ளி நேரத்துக்குப் பிறகும் விடுமுறை நாட்களிலும் தந்தையின் புகைப்பட நிலையத்தில் அவருக்கு உதவியாக வேலை செய்தார் ஃப்ரீடா. கூடவே குடும்பத் தேவைகளுக்காகப் பணமீட்டுவதற்கு வேறு வேலை தேடினார். முதலில் மருந்துக் கடையொன்றில் பணிசெய்தார். ஆனால் நாளின் இறுதியில் வரவையும் இருப்பையும் சமன்செய்வதில் தகராறு ஏற்பட்டதால் ஃப்ரீடா தன் கையிருப்பைப் போடவேண்டிய கட்டாயம். அடுத்து, மரக்கடையொன்றில் கணக்கெழுதும் வேலையில் சேர்ந்தார். இப்படி வேலைக்குப் போகையில் இடைப்பட்ட நேரத்தில் அலஜேண்ட்ரோவைச் சந்தித்தார்.
1925இல் கல்வி அமைச்சக நூலகத்தில் தட்டெழுத்து செய்யும் பணியொன்று கிடைத்தது. அந்தச் சமயத்தில் அங்கே வேலையிலிருந்த மூத்த பெண் பணியாளர் ஃப்ரீடாவை ஓரினப் பாலியலில் ஈடுபடுத்தினார். அதைக் கண்டுபிடித்த ஃப்ரீடாவின் பெற்றோர் ஃப்ரீடாவைக் கடுமையாகத் தண்டித்தனர். இது குறித்து அலஜேண்ட்ரோவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார் ஃப்ரீடா. பதின்பருவத்தின் இறுதியில் இதுபோன்ற மாறுபட்ட பல்வேறு அனுபவங்கள் ஏற்பட்டது அவருடைய ஆளுமையை வடிவமைப்பதில் பங்காற்றின.
இறுதியாக தந்தையின் நண்பரும் அச்சக உரிமையாளருமான பெர்ணான்டோ பெர்ணாண்டெஸிடம் வேலைக்குச் சேர்ந்தார். ஸ்வீடன் நாட்டு ஓவியரான ஆண்டர்ஸ் ஜார்னின் ஓவியங்களைப் பிரதியெடுக்கும் வேலையை ஃப்ரீடாவுக்குக் கற்றுத் தந்தார் பெர்ணான்டோ. அப்போது ஃப்ரீடாவிடம் ஒளிந்திருக்கும் கலைநயத்தையும் திறமையையும் கண்டுபிடித்து ஊக்குவித்தார். அதே நேரம் ஃப்ரீடாவுக்கு பெர்ணான்டோவுடன் பாலியல் உறவு இருந்ததாகச் சொல்கிறார் அலஜேண்ட்ரோ. அப்போது ஃப்ரீடா பதின்வயதைக் கடந்து இளம்பெண் பருவத்தை அடைந்திருந்தார்.
1926இல் கில்லெர்மோ தன் குடும்பத்தினரைப் பல புகைப்படங்கள் எடுத்தார். ஒரு புகைப்படத்தில் சாட்டின் உடையணிந்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் இளம்பெண் ஃப்ரீடாவைக் காணமுடிகிறது. ஊனமுற்ற இடது காலை வலது காலினால் மறைத்தபடி உட்கார்ந்திருப்பார். அந்தக் காலகட்டத்தில் சாட்டின் ஆடைகள் நாகரிகமாக இருக்கவில்லை என்றாலும் அதை அணிவதில் ஃப்ரீடாவுக்கு எந்தத் தயக்கமுமில்லை என்பதைச் சுட்டுகிறார்கள் வரலாற்றாளர்கள்.
அதே நாளில் எடுக்கப்பட்ட இன்னொரு குடும்பப் புகைப்படத்தில் ஃப்ரீடா ஆண்கள் அணியும் கோட்டு சூட்டு டையை அணிந்திருப்பார். ஒரு கையில் ஊன்றுகோலோடு மற்றொரு கையைக் கால்சட்டைப்பையில் நுழைத்துக்கொண்டு நின்றபடி கூர்மையான பார்வையால் புகைப்படக் கருவியை உற்று நோக்குவார். காதலை வெளிப்படுத்தும் அந்தக் கண்களில் ஒருவித சோகமும் ஏக்கமும் இழைந்திருப்பதைப் பார்க்கலாம். உணர்வு கொப்பளிக்கும் இந்தப் பார்வையை பின்னாளில் அவர் வரைந்த ஓவியங்களிலும் காணலாம்.
ட்ராம் வண்டிகள் மெக்சிகோ சிட்டியின் முக்கியமான போக்குவரத்து. மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்ற 1920களில் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. நகரின் வளைந்து நெளிந்த வீதிகளில் பேருந்தை ஓட்டிச் செல்வதற்கு ஓட்டுநர்கள் அப்போதுதான் மெல்லப் பழகிக்கொண்டிருந்தார்கள். மக்களுக்கோ புதிய வரவான பேருந்துகளில் பயணம்செய்ய ஆசை. அதனால் ட்ராம்களை விடவும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.
1925, செப்டம்பர் 17ஆம் தேதி. ஸ்பானியர்களிடமிருந்து மெக்சிகோ விடுதலைபெற்ற தினத்துக்கு மறுநாள். ஃப்ரீடாவும் அலஜேண்ட்ரோவும் கோயோயாகானுக்குச் செல்லும் பேருந்தில் ஏறிக் கடைசியில் இருந்த இருக்கையில் ஒருசேர அமர்ந்தனர். பேருந்து சான் யூவான் மார்க்கெட்டை அடுத்த சாலைக்குள் நுழைவதற்காக வளைந்தது. எதிரே வந்த ட்ராம் வண்டி மெதுவாக நகர்ந்தபடியே சாலையின் வளைவில் திரும்புகையில் பேருந்தின் நடுப்பகுதியில் இடித்தது. அந்தத் தாக்கத்தில் பேருந்து ஆயிரம் துண்டுகளாக வெடித்துச் சிதறியது. ட்ராம் வண்டி நிற்காமல் நகர்ந்துகொண்டே இருந்ததால் அதன் சக்கரங்கள் மக்களில் பல பேரின்மீது ஏறி இறங்கின.
அலஜேண்ட்ரோ பேருந்திலிருந்து ட்ராமின் கீழே தூக்கியெறியப்பட்டான். மோதலின் வேகத்தில் பேருந்தின் நீளமான கைப்பிடிக் கம்பி ஃப்ரீடாவின் உடலைப் பக்கவாட்டில் துளைத்துப் பிறப்புறுப்பின் வழியே வெளியே வந்தது. அலஜேண்ட்ரோவுக்கு பெரிய காயமில்லை, இரத்தம் பல இடங்களில் கட்டிக்கொண்டது. மேலே எழுந்ததும் முதலில் ஃப்ரீடாவைத்தான் தேடினான்.
‘நடந்தது எல்லாம் வினோதமாக இருந்தது. ஃப்ரீடா, உடம்பில் ஒட்டுத்துணியின்றிக் கிடந்தாள். பேருந்தில் பயணம்செய்த வீடுகளுக்கு வண்ணம் பூசுபவரிடம் இருந்த தங்கப் பொடி ஃப்ரீடாவின் உடல் முழுவதும் சிதறியிருந்தது. ரத்தத்தின் சிவப்பும் பொடியின் தங்கமும் கலந்த அவள் உடலைப் பார்த்தவர்கள் பாலே நடனமாடுபவள் என நினைத்து ‘பாலரீனா, பாலரீனா’ என்று சத்தமிட்டனர்.
‘அந்தக் காலத்தில் நான் உடலுறுதியோடு இருந்ததால் ஃப்ரீடாவை கையில் எளிதாகத் தூக்கினேன். அப்போதுதான் அவளுடலைக் கம்பி துளைத்திருப்பதைக் கண்டேன். அப்போது அங்கே வந்த ஓர் ஆள் கம்பியை அகற்றவேண்டும் என்றபடி அதை வெளியே உருவினார். தாங்கொணாத வலியில் துடித்த ஃப்ரீடாவின் அலறல் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது. விபத்து நடந்த இடத்துக்கு வந்துகொண்டிருந்த ரெட் க்ராஸ் ஊர்தியின் எச்சரிக்கை ஒலியையும் மீறிக் கேட்டது.
‘ஊர்தி வந்து சேர்வதற்குள்ளாக ஃப்ரீடாவை அருகிலிருந்த கடையின் பில்லியர்ட்ஸ் மேசையில் கிடத்தி என்னுடைய மேலங்கியை மேலே போர்த்தினேன். அவள் இறந்துவிடுவாள் என நினைத்தேன். ஏற்கனவே இரண்டு மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மரித்திருந்தனர். இன்னும் சில பேர் பின்னர் உயிர்நீத்தனர். ரெட் க்ராஸ் ஊர்தி அடுத்த தெருவிலிருந்த ரெட் க்ராஸ் மருத்துவமனைக்கு ஃப்ரீடாவை இட்டுச்சென்றது.’
ஃப்ரீடாவின் முதுகெலும்பு மூன்றாக முறிந்திருந்தது. கழுத்தெலும்பும் விலா எலும்புகளும் உடைந்திருந்தன. வலது காலில் எட்டு எலும்பு முறிவுகள். வலது பாத எலும்பு விலகியதோடு நொறுங்கியிருந்தது. இடது தோள் எலும்பு விலகியிருந்தது. இடுப்புக்கூடு மூன்றாக உடைந்திருந்தது. பேருந்தின் இரும்புக்கம்பி அடிவயிற்றைத் துளைத்துப் பிறப்புறுப்பைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்திருந்தது.
மருத்துவர்களுக்கு ஃப்ரீடாவை உயிர்பிழைக்கச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை சிறிதுமில்லை. அறுவை சிகிச்சை மேசையில் உயிர்பிரிந்துவிடலாம் என்று நினைத்தனர். ஒருவேளை உயிர்பிழைத்தாலும் மீண்டும் நடக்கமுடியுமா என்று அவர்களால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. உடம்பின் ஒவ்வொரு பகுதியாக ஒன்றிணைக்க வேண்டியிருந்தது.
ஃப்ரீடாவுக்கு நினைவு திரும்பியதும் தன் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கச் சொன்னார். ஆனால் பெற்றோர் இருவரும் மகளை இப்படிப்பட்ட நிலைமையில் பார்க்கத் தயாராக இல்லை. ‘அம்மா ஒருமாதம் வரையில் வாய்திறந்து பேசவில்லை. சேதி கேட்ட அப்பா நோயில் விழுந்தார். மீண்டும் தெப்புத்தேற இருபது நாட்களானது. என் அக்கா அட்ரியானா தகவலைக் கேட்டதும் மயங்கிவிழுந்தாள். மட்டில்டே மட்டும் உடனே நேரில் வந்து பார்த்தாள்.’ மட்டில்டே அருகிலேயே இருந்து தங்கையைக் கவனித்துக்கொண்டாள். ஃப்ரீடாவின் உடல் மட்டுமின்றி உள்ளமும் நலம்பெறத் தன்னாலான உதவிகளைச் செய்தாள்.
(தொடரும்)

