விபத்துக்குப் பிறகு ஃப்ரீடாவின் உடல்முழுவதும் மாவுக்கட்டு போடப்பட்டது. உடல் அசையாமல் இருக்கவேண்டும் என்பதற்காகச் சவப்பெட்டிபோன்ற மரக் கூட்டுக்குள் படுக்க வைக்கப்பட்டார். அக்கா மட்டில்டே அபாரமான நகைச்சுவை உணர்வுகொண்டவர். ஃப்ரீடாவையும் மற்ற நோயாளிகளையும் வயிறு குலுங்கச் சிரிக்கவைத்தார். கச்சுச்சா குழுவினரும் மற்ற நண்பர்களும் ஃப்ரீடாவைப் பார்க்க அவ்வப்போது வந்தார்கள். அவர்களின் வருகையினால் பகலில் எப்படியோ நேரத்தைக் கடத்திவிடுவார் ஃப்ரீடா.
இரவில் இறந்துவிட்டதுபோலவும் இறக்கப்போவது போலவும் விதவிதமான கனவு வரும். விபத்தின் காட்சிகளும் ஓசைகளும் கண்முன்னே தோன்றும். அலஜேண்ட்ரோவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம். சிறிது உடல் குணம்பெற்றதும் வழக்கம்போல அலஜேண்ட்ரோவுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினார். ‘இந்த மருத்துவமனையில் இரவு நேரத்தில் மரணம் என் கட்டிலைச் சுற்றி நடனமிடுகிறது.’
உண்மை, கற்பனை, உணர்வுகளின் தீவிரம் என எல்லாம் கலந்து எழுதினார். நகைச்சுவையும் களிப்பும் இருந்தாலும் அதில் சோகம் மெல்லிழையாக ஊடாடியது. பின்னாளில் அவர் வரைந்த ஓவியங்களிலும் இந்த உணர்வுகள் வெளிப்பட்டன. விபத்துக்குப் பிறகு துன்பத்துக்குப் பழக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகச் சொன்னார் ஃப்ரீடா. வலியும் உடல்வலிமையும் அவர் வாழ்க்கையின் அங்கங்களாயின.
‘என் உயிரே அலெக்ஸ், இந்த அழுக்குப் பிடித்த மருத்துவமனையில் இருப்பது எத்தனைத் துயரமான விஷயம் என்பது மற்றவர்களைவிடவும் உனக்கு நன்றாகத் தெரியும். பையன்கள் அதைச் சொல்லியிருப்பார்கள். நம்பிக்கை இழக்காதே என்று எல்லோரும் சொல்கிறார்கள். மூன்று மாதம் படுக்கையில் இருப்பது எப்போதும் தெருக்களில் திரிந்துகொண்டிருக்கும் என்னைப் போன்றவளுக்கு எப்படியிருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. என்ன செய்வது! அந்த மொட்டைத்தலையன் (மண்டையோடும் எலும்புகளும்) என்னைக் கூட்டிச்செல்லவில்லையே. நீ எப்படி இருக்கிறாய் என்பது தெரியாமல் நான் ஒவ்வொரு நாளும் கடுந்துயரில் துவள்கிறேன்.’
இன்னும் பல பத்திகள் எழுதி இறுதியில் கையொப்பமாக அழும் முகத்தை வரைந்தார். விபத்து நடந்து ஒரு மாதம் கழித்து மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். நண்பர்களைச் சந்திக்கமுடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கவேண்டுமே என்ற எண்ணம் வலியைக் காட்டிலும் அதிக அச்சமூட்டியது.
மருத்துவமனை பள்ளிக்கு அருகில் இருந்ததால் பள்ளித் தோழர்கள் அங்கே எளிதாக வந்துசென்றனர். ஆனால் அவர் வீடிருக்கும் கோயோயாகான் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமான பகுதி. அதுவுமின்றிக் குடும்பத்தினரின் விசித்திரப் போக்கு நண்பர்களைக் கலங்கடிக்குமெனப் பயந்தார். அம்மாவின் எரிச்சல், அப்பாவின் அமைதி எனத் தன்னுடைய வீடுதான் சோகத்தினால் சூழப்பட்டது என எண்ணினார். சொல்லப்போனால் கோயோயாகான் வீட்டுக்கு மட்டில்டே வந்தால் அவர்களின் தாய் மாயமாக மறைந்துபோவார். அந்தக் காரணத்தால் மட்டில்டே வருவது நின்றுபோனது.
எது எப்படியானாலும் அலஜேண்ட்ரோ தன்னை வந்து சந்திக்கவேண்டும் என மிகுந்த விருப்பம் தெரிவித்துக் கடிதமெழுதினார். வரும்போது தனக்குப் பிரியமான தின்பண்டங்களைக் கொண்டுவரச் சொன்னார். ஆனால் அலஜேண்ட்ரோ ஃப்ரீடாவைச் சந்திக்க வரவில்லை. ஃப்ரீடாவும் அலஜேண்ட்ரோவிடம் எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். பெர்ணான்டோவுடன் ஃப்ரீடாவுக்கு இருந்த தொடர்பு அவரைக் காயப்படுத்தியிருக்கலாம்.
அறைக்குள்ளேயே அடைந்து கிடக்காமல் சுத்தமான காற்றும் வெயிலும் மேனியில் படவேண்டும் என்று மருத்துவர் சொன்னதால் ஃப்ரீடாவைத் தினமும் வீட்டின் முற்றத்தில் கிடத்தினர். அவருக்குத் தரப்பட்ட பல்வேறு சிகிச்சைகள் மிகுந்த வலி, அசௌகரியத்தை ஏற்படுத்தின. ஒரு முறை சிகிச்சைக்காக க்ளோரோஃபார்ம் கொடுத்தும் அதன் வீரியம் குறைந்தபின் வலியை உணர முடிந்தது, துடித்துப்போனார் ஃப்ரீடா. பிறகு ஊசிபோட்டு கோகெய்னும் கொடுத்தார்கள். சில நாட்கள் உடலில் ஏற்பட்ட அழற்சி காரணமாக நாள் முழுவதும் வலியில் அலறியதால் தலைவலியோடு வயிற்று வலியும் சேர்ந்துகொண்டது.
விபத்து நடந்து மூன்று மாதங்களில் மெக்சிகோ சிட்டிக்குப் போய் வருமளவுக்குத் தேறியிருந்தார் ஃப்ரீடா. மருத்துவச் செலவுகள் குடும்பத்தின் சேமிப்பைக் கரைத்ததால் தந்தைக்கு உதவியாக வேலையில் சேரவேண்டிய கட்டாயம். அதனால் பள்ளியில் புதிய வகுப்பில் இணையப் பதிவுசெய்யவில்லை.
அலஜேண்ட்ரோவுடனான நட்பு விலக்கம் தீவிரமடைந்தது. உன்னுடன் நட்பைத் தொடர எனக்கு விருப்பமில்லை என ஃப்ரீடாவின் தோழி அகஸ்டினா ரேய்னா கூறினார். தனக்கும் அலஜேண்ட்ரோவுக்கும் மட்டுமே தெரிந்த சில விஷயங்களை அகஸ்டினாவிடம் அவர் சொல்லியிருந்தது ஃப்ரீடாவுக்குத் தெரியவந்தது. அதுமட்டுமின்றித் தன்னுடைய நற்பெயரையும் மதிப்பையும் இழந்த காரணத்தால் கச்சுச்சா, பள்ளி நண்பர்கள் என எல்லோரும் தன்னுடன் தோழமைகொள்வது கீழ்மை என எண்ணியதும் அவருக்குப் புரிந்தது.
நண்பர்களில் சிலர் தன்னைப் பற்றிக் கண்ணியக் குறைவாகப் பேசுவதையும் குறிப்பாக ஒரு நண்பர் தான் அவரை முத்தமிட்டதாகப் பொய் சொன்னதையும் அறிந்தார். இவைகுறித்து முதலில் வருத்தம் கொண்டாலும் பின்னர் கண்டுகொள்ளாமல் இருக்கப் பழகினார். எல்லாவற்றைப் பற்றியும் அலெக்ஸிடம் விளக்கமுடியாது என்பதும் தெளிவானது. அலஜேண்ட்ரோவை மீண்டும் சந்திக்கவும் உறவைப் புதுப்பிக்கவும் இன்சொல், மிரட்டல், தன்னையே மாற்றிக்கொள்வேன் என்ற உறுதிமொழி எனப் பல வழியிலும் ஃப்ரீடா எடுத்த முயற்சிகள் வீணாகின.
ஓரளவுக்கு உடல்நிலை தேறினாலும் 1926ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் மீண்டும் ஃப்ரீடாவின் ஆரோக்கியம் சீர்குலைந்தது. நடமாட ஆரம்பித்த பிறகு மீண்டும் படுக்கையில் கிடக்கவேண்டுமென்பது ஃப்ரீடாவுக்கு வேதனையளித்தது. அந்தச் சமயத்தில்தான் ஓவியம் வரைவதில் ஆர்வமேற்பட்டது. படுத்தபடியே ஓவியம் தீட்டுவதற்கேற்ற கட்டிலின் மேலே கவிந்திருக்கும் சட்டமொன்றைத் தயார் செய்தார் ஃப்ரீடாவின் தாய். அதற்கும் மேலே பெரிய நிலைக் கண்ணாடியொன்றைப் பொருத்தினார். வெளியுலகைக் காணமுடியாத ஃப்ரீடா தன்னோவியங்களை வரையத் தொடங்கினார்.
ஃப்ரீடா வாழ்நாளில் மொத்தம் 66 தன்னோவியங்களைப் படைத்தார். 1926இல் ‘வெல்வெட்டு உடையில் ஒரு தன்னோவியம்’ என்ற தலைப்பிட்ட முதல் ஓவியத்தைத் தீட்டினார். அதை அலஜேண்ட்ரோவுக்குப் பரிசளிப்பதற்காக வரைந்தார். ‘இன்னும் சில நாட்களில் ஓவியம் உன் வீட்டிலிருக்கும். சட்டமிடாமல் அனுப்புவதற்கு மன்னித்துவிடு. தாழ்வான இடத்தில் அதைத் தொங்கவிடு, அப்போதுதான் என்னை நேரில் பார்ப்பதுபோலத் தோன்றும்.’
ஐரோப்பிய, மெக்சிகன் பாணிகளின் கலவையாக இருந்தது அந்த ஓவியம். வைன் சிவப்பு எனப்படும் ஆழ்ந்த வண்ணத்திலான வெல்வட்டு ஆடையில் தங்கச் சரிகையில் பூவேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைதி தவழும் முகத்தில் தீர்க்கமான பார்வைகொண்ட கண்கள், மெலிந்த கழுத்து, முன்னே நிற்பவரைத் தொடுவதுபோல நீண்டிருக்கும் வலது கை எனக் கற்பனை நவிற்சி மிகுந்திருந்தது. வானும் கடலும் ஒன்று கலக்கும் அடர்நீலப் பின்னணி அவருடைய உணர்வுகளைச் சித்தரித்தது.
காதல், வலி, மீண்டெழும் ஆற்றல் என அவரின் வாழ்க்கையின் உள்ளார்ந்த கருப்பொருளை ஓவியம் பிரதிபலித்தது. இழைநய அமைப்பும் குறியீடுகளும் ஆரம்ப கட்டத்திலிருந்தாலும் பின்னாளில் முதிர்ச்சியடைந்து அவரின் முத்திரையாகின. தன் படைப்புகளின் வழியாக அவர் வெளிப்படுத்திய தன்னடையாளம், தன்கதை இரண்டுக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. இந்த ஓவியத்தின் வழியாக ஃப்ரீடா தன் உள்ளக்கிடக்கையைத் தெரிவித்ததோடு தீவிர ஓவிய உலகுக்குள் முறையாக அடியெடுத்து வைத்தார்.
ஓவியத்தின் பின்புறம் ‘1926 செப்டம்பரில் ஃப்ரீடா காஹ்லோவுக்கு 17 வயதிருக்கையில். கோயோயாகான்’ எனவும் சிறிது இடைவெளிவிட்டு ‘இன்று இன்னமும் நடக்கிறது’ என்று ஜெர்மானிய மொழியிலும் எழுதினார். தான் இன்னும் அலஜேண்ட்ரோவைக் காதலிப்பதைத் தெரிவித்தார். ஆனால் 1926இல் ஃப்ரீடாவுக்கு 17 அல்ல, 19 வயதாகியிருந்தது. ஓவியம் ஃப்ரீடாவின் உளவலியைத் தெரிவிப்பதோடு காண்பவரைத் தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவரும் தன்மையுடையதாக இருந்தது. நிச்சயம் அலஜேண்ட்ரோவின் மனதையும் தொட்டிருக்கவேண்டும்; பிரிந்த காதலர்கள் சீக்கிரமே ஒன்றுசேர்ந்தார்கள்.
தலைகவிழ்ந்த பேருந்து ஃப்ரீடாவின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதுடன் குறுக்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் கைநழுவிச் செல்லும் வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்ளப் பெரும்போராட்டத்தை நடத்தினார். உடல்நிலை ஓரிரு வாரங்கள் நலமாக இருக்கும். அடுத்த சில வாரங்களுக்கு மருத்துவர், மருந்து மாத்திரை, அறுவை சிகிச்சை என்று போராட வேண்டியிருக்கும்.
விபத்து நடந்தவுடன் ரெட் கிராஸ் மருத்துவமனையிலிருந்தபோது மருத்துவர்கள் அவருடைய முதுகுத்தண்டுக்கான முழுமையான சிகிச்சையை அளிக்கத் தவறிவிட்டனர். குடும்பத்தின் நிதிப் பற்றாக்குறை காரணமாகச் சில சிகிச்சைகளைத் தக்க நேரத்தில் எடுத்துக்கொள்ள முடியவில்லை. காலங்கடந்து வழங்கப்பட்ட சிகிச்சை அவரை முழுமையாகக் குணம்பெறச் செய்யவில்லை.
ஓராண்டுக்குப் பின்னர் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் முதுகுத்தண்டில் மூன்று எலும்புகள் விலகியிருப்பதைக் கண்டுபிடித்தார். அதைச் சீர்செய்வதற்காக இறுக்கமான கச்சுகளை அணிந்தார். வலது காலில் சிறப்புக் கருவியொன்றைப் பொருத்திக்கொண்டார். போலியோ நோயின் தாக்கத்தைக் குறைப்பதற்காகப் பலவிதமான விளையாட்டுகளில் ஈடுபட்டு எப்போதும் இயங்கிக்கொண்டே இருந்தவர், இப்போது விபத்தின் காரணமாக நகராமல் படுத்துக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம்.
‘என்னுடைய இளவயது காரணமாக இந்தத் துரதிர்ஷ்டமான நிகழ்வு துன்பியல் சாயலைப் பூசிக்கொள்ளவில்லை. மருத்துவப் படிப்பைத்தவிர வேறெதையும் செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பதாகத் தோன்றியது. அதிகம் யோசிக்காமல் வரையத் தொடங்கினேன்.’ பெர்ணான்டோவுடன் பணிசெய்கையில்தான் ஃப்ரீடாவுக்குக் கலையின்மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கவேண்டும்.
வரைதல், களிமண் மாதிரிகளைச் செய்தல் என இரண்டு பாடத் திட்டங்களைப் பள்ளியில் தேர்வுசெய்திருந்தார். மருத்துவப் பாடநூல்களில் அறிவியல் ஓவியங்களை வரையும் பணிசெய்து பொருளீட்டலாம் என்ற எண்ணமும் இருந்தது. நுண்ணோக்கியின் வழியாகத் திசுக்களை உற்றுநோக்குவார். பிறகு, வீட்டில் அவற்றை வரைந்து பார்ப்பார். புகழ்பெற்ற ஓவியர்கள் பள்ளியில் சுவரோவியங்களைத் தீட்டியபோது அவற்றைக் கவனிப்பார். நோட்டுகளிலும் கடிதங்களிலும் கேலிச்சித்திரங்களையும் கிறுக்கல் ஓவியங்களையும் வரைவார். ‘கோடுகளையும் வளைவுகளையும் வரைந்து அவற்றை தொடச் செய்வதும் பிரிந்துபோகச் செய்வதும் அவருக்கு மிக விருப்பமானது,’ என்கிறார் ஃப்ரீடாவின் பள்ளித் தோழர் மேனுவெல் கோன்சாலெஸ் ராமிரேஸ்.
தான் எப்போது வரைய ஆரம்பித்தேன் என்று யாராவது கேட்டால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதையைச் சொல்வார் ஃப்ரீடா. ஆனால் ஒருபோதும் கையில் தூரிகையோடு பிறந்தேன் என்றோ உள்ளார்ந்த மேதைமை என்றோ கூறியதில்லை. விபத்துக்குப் பிறகு நாள் முழுவதும் படுக்கையில் கிடக்கும் கட்டாயத்தினால் வரையத் தொடங்கினேன் என்று நியூ யார்க் கண்காட்சியையொட்டி அளித்த பேட்டியில் சொன்னார். அப்பாவின் வண்ணங்களின்மீது எப்போதும் ஒரு கண் இருந்தது, உடல்நலிவினால் வேறு எதுவும் செய்யமுடியாதபோது அவரிடமிருந்து கடன்வாங்கி வரையத் தொடங்கினேன் என்று வேறொரு தருணத்தில் நண்பரும் வரலாற்றியலாளருமான அண்டோனியோ ரோட்ரீகெஸ்ஸிடம் சொன்னார்.
தொடக்கத்தில் தோழியரையும் குடும்பத்தினரையும் மாதிரிகளாகக் கொண்ட ஓவியங்களைத் தீட்டினார். அவரின் கலைத்திறனை எடுத்துக்காட்டுவதாக அவை அமைந்தாலும் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் அதிகம் என்பதைச் சுட்டின. அடர்த்தியான, சோகம் ததும்பும் வண்ணங்களோடு உயிரோட்டமின்றிக் காணப்பட்டன. 1927இல் வரைந்த தமக்கை அட்ரியானாவின் உருவப்படத்தைப் பார்த்தால் இது தெளிவாகும். பள்ளித்தோழர் மிகேல் லிராவின் உருவப்படமும் வெட்டியெடுத்த அட்டையைப் போலத் தோற்றமளித்தது என்று ஃப்ரீடாவே சொன்னார். தங்கை கிறிஸ்டினாவின் மகள் இசொல்டா பினேடோ காஹ்லோ குழந்தையாக இருக்கையில் அவரை ஓவியமாக வரைந்தார்.
ஃப்ரீடா கலை, ஓவியம் குறித்த நூல்களை ஆழ்ந்து படித்ததால், அதன் நுட்பங்களை அறிந்திருந்தார். இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்திய ஓவியரான பொட்டிசெல்லியின் தாக்கம் அவரது படைப்புகளில் காணப்பட்டது. இன்னொரு இத்தாலிய ஓவியரான ப்ரொன்ஜினோ வரைந்த உருவப்படங்களைக் கண்டு வியந்தேன் என்று அலஜேண்ட்ரொவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். ஆர்ட் நூவோ பாணிக் கட்டடங்கள், ஜப்பானிய பாணி எனப் பலவற்றின் கலவையாக ஃப்ரீடாவின் படைப்புகள் இருந்தன.
1927 மார்ச் மாதம் அலஜேண்ட்ரோ ஐரோப்பாவுக்கு நான்கு மாதப் பயணமாகச் சென்றார். அவருடைய உறவினருக்கு அறுவை சிகிச்சை நடப்பதால் துணையாக இருக்கச் சென்றார் எனக் கூறப்பட்டது. கூடவே ஜெர்மன் மொழியைப் பயிலவும் அந்த நாட்டைச் சுற்றிப் பார்க்கும் யோசனையும் உண்டு. ஃப்ரீடாவை மறக்கச் செய்வதற்காக அவர் குடும்பத்தினர் தீட்டிய திட்டம் என்று சொல்லப்படுகிறது. ஃப்ரீடா எதையும் பொருட்படுத்தவில்லை. எப்போதும்போலத் தொடர்ந்து காதலருக்குக் கடிதமெழுதினார்.
ஃப்ரீடாவின் மூச்சுத் திணறவைக்கும் உடைமையுணர்விலிருந்து தப்பிக்க அலஜெண்ட்ரோ எண்ணியிருக்கலாம். அலஜேண்ட்ரோ மீண்டும் மெக்சிகோ திரும்ப 8 மாதமானது. வந்த பிறகு இருவரின் உறவிலும் முன்னைப்போன்ற பிணைப்பு இல்லை. பல்கலைக்கழகக் கல்வி, ஓவியம் என அவரவருக்கான உலகில் வாழ்க்கையை நடத்தத் தொடங்கினர். ஆனால் அலஜேண்ட்ரோ வாழ்நாள் முழுவதும் ஃப்ரீடாவுடன் தொடர்பிலிருந்து அவருக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்தார்.
1928இல் அலஜேண்ட்ரோவை ஓவியமாகத் தீட்டினார். பார்க்கப் பள்ளிச் சிறுவனைப்போலத் தோற்றமளித்தது. வயதுவந்தோர் அணிந்துகொள்ளும் கோட்டு சூட்டைப் போட்டுக்கொண்டு எதையோ பறிகொடுத்த பாவனையோடு என்ன செய்வதென்று புரியாதவனைப்போலக் காணப்பட்டான்.
அதே வருடத்தில் ஃப்ரீடா வீட்டைவிட்டு வெளியே சென்றுவரும் அளவுக்குத் தேறினார். மெக்சிகோ சிட்டிக்குப் பயணம்செய்து கலை, அரசியல் இரண்டிலும் பங்குகொண்டார். கம்யூனிஸ சித்தாந்தத்தின்மீது நாட்டம் ஏற்பட்டு கம்யூனிஸ்ட்டுகளுடன் நட்புக்கொண்டார். முதலாம் உலகப்போர் நடந்த சமயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் மெக்சிகோவில் தஞ்சம் புகுந்தனர்.
1921இல் மாஸ்கோவிலிருந்து மெக்சிகோவுக்குத் திரும்பியிருந்தார் டீயகோ ரிவேரா. ரஷ்ய கம்யூனிஸ்ட்டுகள் அவரை மரியாதையோடு நடத்தவில்லையென்பதால் அங்கிருக்க முடியாமல் தாய்நாட்டுக்கு வரவேண்டிய கட்டாயம். என்றாலும் கம்யூனிஸச் சித்தாந்தத்தின்மீது அளவிடமுடியாத மதிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார் டீயகோ. கம்யூனிஸ நண்பர்களின் கூட்டத்தில் ஒருவராக டீயகோவைச் சந்தித்தார் ஃப்ரீடா. இருவரும் எப்போது, எப்படிச் சந்தித்தார்கள் என்பது குறித்து பல்வேறு கூற்றுகள் உண்டு.
(தொடரும்)
படம்: Self-portrait in a Velvet Dress

