Skip to content
Home » ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #6 – ஏமாற்றமும் நம்பிக்கையும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #6 – ஏமாற்றமும் நம்பிக்கையும்

இளம்வயதில் சான் கார்லோஸ் கலைப் பள்ளியில் ஓவியம் பயின்றார் டீயகோ. ஃப்ரீடாவுடன் திருமணமான பிறகு அந்தப் பள்ளியின் இயக்குநராகப் பதவியேற்றார். ஆனால் அவருடைய அதிபுரட்சியான மாற்றங்கள் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களிடையே பெரும் எதிர்ப்பைப் பெற்றதால் பதவி விலக நேர்ந்தது. அதே காலகட்டத்தில் கம்யூனிஸச் சித்தாந்தங்களுக்கு எதிராக, முதலாளித்துவ அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். டீயகோவோடு சேர்ந்து ஃப்ரீடாவும் கட்சியிலிருந்தும் அந்த நட்பு வட்டத்திலிருந்தும் விலகினார். ஆனால், கம்யூனிஸச் சித்தாந்தமும் மார்க்சியமும் இருவரின் உயிரிலும் சிந்தனையிலும் கலந்து அவர்களின் படைப்புகளில் வெளிப்பட்டது.

1929 டிசம்பர் மாதம் மெக்சிகோவின் அமெரிக்கத் தூதர் ட்வைட் மோரோ குவெர்னவாகாவிலுள்ள கோர்டெஸ் மாளிகையில் சுவரோவியங்களை வரையவேண்டும் என டீயகோவைக் கேட்டுக்கொண்டார். ஸ்பானியர்களின் அடக்குமுறையை எதிர்த்து வெடித்த மெக்சிகோ புரட்சியைச் சித்தரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அரசியல் நிலைப்பாடுகளில் டீயகோவும் தூதர் மோரோவும் எதிர் அணியில் செயல்பட்டவர்கள். என்றாலும் டீயகோவின் கலைத்திறனின்மீது பெருமதிப்பு கொண்டிருந்தார் ட்வைட் மோரோ. அதனால் டீயகோவினால் அவருடைய வேண்டுகோளைப் புறந்தள்ள முடியவில்லை.

புதுமணத் தம்பதியரான டீயகோவும் ஃப்ரீடாவும் இயற்கை வளமும் எழிலும் கொஞ்சும் குவெர்னவாகாவில் சில மாதங்கள் தங்கியிருந்தனர். பெரும்பாலான நேரங்களில் டீயகோ ஓவியம் வரைகையில் அருகேயிருந்து பார்த்துக்கொண்டிருப்பார் ஃப்ரீடா. அதுகுறித்த தன்னுடைய கருத்துக்களை நுட்பமாக கணவரின் மனம் நோகாத வகையில் பகிர்ந்துகொள்வார்.

கலையிலும் அன்றாட வாழ்விலும் போலிகளை அடையாளம்கண்டு விலக்கும் திறமைபெற்றவர் ஃப்ரீடா என்பது டீயகோவுக்குத் தெரியும். கூடவே டீயகோவின் படைப்புகளில் பொதிந்திருக்கும் உள்ளார்ந்த பொருளைப் புரிந்துகொள்ளும் திறன்மிக்கவர். அதனால் அவருடைய கருத்து, கலைப்பார்வை இரண்டையும் பெரிதும் மதித்தார் டீயகோ.

குவெர்னவாகா சுவரோவியத்தின் ஒரு பகுதியாக மெக்சிகோ புரட்சி வீரர் ஜபட்டாவின் குதிரையை வெள்ளை நிறத்தில் வரைந்தார் டீயகோ. அது கறுப்பு நிறம்கொண்டதாயிற்றே எனக் குறிப்பிட்டார் ஃப்ரீடா. மக்களுக்கு அழகான விஷயங்களை உருவாக்கவேண்டும் என்பதால் அப்படி வரைந்தேன் என்று பதிலளித்தார் டீயகோ. அடுத்து குதிரையின் கால்கள் தடிமனாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார் ஃப்ரீடா. எப்படியிருக்கவேண்டுமோ அப்படி நீயே வரைந்துவிடு என்று தூரிகையை ஃப்ரீடாவிடம் கொடுத்தார் டீயகோ.

குவெர்னவாகாவிலிருந்தபோது ஃப்ரீடா மீண்டும் வரையத் தொடங்கினார். ஆனால் அவர் அடுத்தடுத்து வரைந்த தன்னோவியங்களில் பின்னதில் அவருடைய முகம் துயரத்தைத் தேக்கியிருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அதற்கான காரணத்தை நண்பரிடம் விளக்கினார் ஃப்ரீடா. ‘குவெர்னவாகாவில் தங்கியிருந்தபோது கருவுற்றேன், ஆனால் ஓரிரு மாதங்களில் கருவைக் கலைக்க நேர்ந்தது. குழந்தை பெறமுடியாத காரணத்தால் தாங்கொணாத துயரில் அழுது தீர்த்தேன். பிறகு சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, ஓவியம் வரைவது, டீயகோ சாரத்தின்மீது ஏறி வரைகையில் அருகிலிருப்பது என வேறு விஷயங்களில் கவனத்தைத் திருப்பினேன்.’

திருமணமான முதல் ஆண்டில் கருவுறமுடியாத துயரத்தோடு டீயகோவின் துரோகமும் சேர்ந்துகொண்டது. தன்னுடைய உதவியாளரான இளம்பெண்ணோடு உறவிலிருந்தார் டீயகோ. குழந்தைப் பருவத்திலும் பதின்வயதிலும் எதிர்கொண்ட துரதிர்ஷ்டங்களைக் காட்டிலும் அதிகமானவற்றை வளர்ந்த பிறகும் அனுபவித்தார் ஃப்ரீடா. ‘என் வாழ்க்கையில் இரண்டு மோசமான விபத்துக்கள் ஏற்பட்டன. ஒன்று ட்ராம் வண்டியில் நிகழ்ந்தது. மற்றொன்று டீயகோ,’ என்றார்.

ஃப்ரீடா, டீயகோ இருவரின் உறவும் எவராலும் எளிதில் விவரிக்கமுடியாத புரிந்துகொள்ள இயலாத ஒன்று. எல்லா மண உறவுகளையும் போலவே ஒற்றுமைகளும் முரண்பாடுகளும் நிலவின. தொடக்கம் முதலே டீயகோவின்மீது அளவிட முடியாத காதல் கொண்டிருந்தார் ஃப்ரீடா. டீயகோவின் கற்பனைத் திறன் ஃப்ரீடாவுக்கு வியப்பைத் தோற்றுவித்தது. அதே நேரம் ஒவ்வொரு நாளும் அவர் சொன்ன கட்டுக்கதைகள் அயர்ச்சியூட்டின.

டீயகோ நம்பிக்கையும் விசுவாசமும் கொண்ட கணவனில்லை. பல நேரங்களில் அவரின் எண்ணற்ற உறவுகள் மனக்கசப்பை ஏற்படுத்தின, மற்ற சமயங்களில் வேடிக்கையாக இருந்தது. ஒரு தாயைப்போல டீயகோவைப் பார்த்துக்கொண்டார் ஃப்ரீடா. ஆனாலும் உறவின் தொடக்கத்தில் டீயகோவைத் தந்தையாக வரித்துக்கொண்ட பாவனையும் இறுதிவரையில் மாறவில்லை. டீயகோவின் செயல்களை வெறுத்தாலும் அவர்மீது கொண்டிருந்த காதல் சிறிதும் குறையவில்லை. அவருக்கு நல்ல மனைவியாக இருக்கவேண்டும் என்பதே வாழ்வின் மையப்புள்ளியாகவும் வாழ்வதற்கான பொருளையும் ஃப்ரீடாவுக்குக் கொடுத்தது.

டீயகோ வலிமையும் சுயாதீனமும் கொண்ட பெண்களை மெச்சினார். ஃப்ரீடா தனிப்பட்ட எண்ணம், நட்புவட்டம், செயல்பாடுகளைக் கொண்டிருப்பதை விரும்பினார். ஓவியத்தில் தனக்கென புதிய பாணியை அமைத்துக்கொள்ள ஊக்குவித்தார். தங்களுக்கென புதிய வீட்டை உருவாக்கியபோது இரண்டு தனி வீடுகள் அமைத்து அவற்றுக்கிடையே பாலமொன்றைக் கட்டினார்.

திருமணத்துக்குப் பிறகும் பின்னொட்டாக தன்னுடைய பிறந்த குடும்பத்தின் பெயரையே ஃப்ரீடா வைத்துக்கொண்டது டீயகோவுக்குப் பிடித்திருந்தது. அவர்களின் மண உறவு பல வண்ணங்களில் மிளிர்ந்தது. சில நேரம் சோகத்தினால் மங்கினாலும் எப்போதும் உயிர்ப்புடன் விளங்கியது. ‘டீயகோ அப்படித்தான், அதனால்தான் அவரைக் காதலிக்கிறேன். அவர் எதுவாக இல்லையோ அதற்காக அவரைக் காதலிக்கமுடியாது,’ என சோகம்தோய்ந்த புன்னகையுடன் சொன்னார் ஃப்ரீடா.

காலப்போக்கில், டீயகோவின் வாழ்க்கையின் வலுவான தூணாக விளங்கினார் ஃப்ரீடா. என் வாழ்க்கையின் முக்கிய அங்கம் ஃப்ரீடா எனத் தன்வரலாற்று நூலில் குறிப்பிட்டார் டீயகோ. மனைவிக்கு எழுதிய கடிதங்களில் தன்னுடைய காதலையும் பிரியத்தையும் கொஞ்சல் மொழியின்மூலம் வெளிப்படுத்தினார். ‘என் கண்ணின் மணியே, உனக்குப் பல்லாயிரம் முத்தங்கள்,’ ‘என் அழகான சின்னப் பெண்ணுக்கு,’ ‘என் அருமை ஃபிசிடா, என் கண்ணின் மணியே, என் உயிரின் உயிரே,’ எனப் பலவாறாகச் செல்லப் பெயரிட்டு எழுதினார்.

ஒவ்வொரு நாளும் டீயகோ வீடு திரும்புவதற்காகக் காத்திருப்பார் ஃப்ரீடா. அவர் வரும் ஓசை கேட்டதும் ‘அதோ டீயகோ,’ எனக் குதூகலிப்பார். டீயகோவை கடவுளாகக் கண்டார் ஃப்ரீடா. டீயகோவோ ஃப்ரீடாவைத் தன்னுடைய செல்லப் பொருளாகப் பார்த்தார். தவளை, தேரை, குட்டி ஃபிசிடா என ஒருவரையொருவர் செல்லம் கொஞ்சுவது தங்கள் மண உறவிலிருந்த கசப்புகளையும் பிரச்சினைகளையும் மறைப்பதற்கான வெளிவேஷம் எனக் கூறப்பட்டது.

திருமணத்தின்போதும் அதற்குப் பிறகும் மெக்சிகோவின் டவ்வான்டப்பெக் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் பாரம்பரிய உடை, மேலாடை, நகை ஆகியவற்றை அணிவதில் நாட்டம்கொண்டார் ஃப்ரீடா. தனக்கெனப் புதிய அடையாளமொன்றை ஏற்படுத்திக்கொள்ள விழைந்தார். வெவ்வேறு காலம், கலாசாரத்தைச் சேர்ந்த ஆடைகளை உள்ளார்ந்த கலையுணர்வுடனும் ரசனையுடனும் ஒன்றிணைத்துப் புதிய பாணியை உருவாக்கினார். ஆடையில் மாற்றம் வேண்டுமென்றால் அவற்றைத் தானே செய்துகொண்டார். கரைகளையும் பூவிழைகளையும் குஞ்சங்களையும் கையால் தைத்து இணைத்துப் பின்பு அணிந்து கொண்டார்.

கழுத்தில் கண்ணாடி மணிகள், விலையுயர்ந்த ரத்தினக்கற்கள் எனப் பல்வித மாலைகளை அணிவார். மணிகளாலான பெரிய தொங்கும் காதணிகளோடு விரல்களில் கற்கள் பதித்த பெரிய மோதிரங்களைப் போட்டுக்கொண்டார். தலைமுடியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சீவிச் சிங்காரிப்பார். பளீர் வண்ணக் கம்பளி நூல், ரிப்பன், சீப்பு, க்ளிப், புது மலர்கள் எனத் தனக்கு விருப்பமானவற்றைக் கொண்டு அலங்கரித்துக் கொள்வார். உலகம் தன்னை எப்படிக் காணவேண்டும் என்பதை ஒவ்வொரு நாளும் தன்னுடைய ஆடை, ஆபரணங்களைத் தேர்வுசெய்வதுமூலம் முடிவுசெய்தார். உடல் நலிவுற்ற இறுதிக்காலத்திலும் தங்கை, தங்கையின் மகள், தோழி என யாரையாவது அழைத்து தலைமுடியை வாரிவிடச் சொல்வார்.

மெக்சிகோ பாரம்பரியத்தின்மீது அளவற்ற பிரியம் கொண்டிருந்த டீயகோவுக்கு இவையெல்லாம் பிடித்திருந்தன. ஓர் இளவரசிக்குச் சமர்ப்பணம் செய்வதுபோல ஃப்ரீடா ஆசைப்பட்டவற்றை எல்லாம் வாங்கித் தந்தார். ஃப்ரீடாவின் உண்மையான, கலப்படமற்ற, பழைமையான பாரம்பரிய உணர்வைச் சிலாகித்தார். நடுத்தர வர்க்கத்தின் சமூக வரைமுறைகளுக்குள் அடைபடாத எண்ணங்களையும் உணர்வுகளையும் உடையவர் ஃப்ரீடா. எல்லா அனுபவங்களையும் ஆழமாக உணர்வதோடு சமூகத்தின் கட்டுப்பாடுகளால் மழுங்கடிக்கப்படாத கூருணர்வைப் பெற்றிருந்தார். இயந்திரமயமான வாழ்வை வெறுத்ததால் அதை எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருந்தார்.

பாரம்பரிய உடையணிவது இயற்கையுடனான முதன்மைத் தொடர்பை நிறுவியதோடு நடுத்தர வர்க்கத்தின் சமூகப் பழக்கவழக்கங்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்துக்கொள்ளவும் உதவியது. கூடவே மக்களுடன் கொண்ட பற்றைப் பறைசாற்றும் அரசியல் நிலைப்பாட்டை நிறுவ முடிந்தது என டீயகோவும் ஃப்ரீடாவும் நம்பினார்கள். ‘பாரம்பரிய மெக்சிகோ உடை மக்களுக்காக மக்களுக்கென உருவாக்கப்பட்டது. அதை அணிந்துகொள்ளாத மெக்சிகோ பெண்கள் மக்களுடன் தொடர்பற்றவர்கள். மனம், உணர்வுரீதியாக அமெரிக்க, பிரெஞ்சு நிர்வாகங்களின்மீது சார்ந்திருப்பவர்கள்,’ என்று சொன்னார் டீயகோ.

தன்னுடைய ஆளுமையை வெளிக்காட்டவும் புகழ்பெற்ற கணவரின் வசீகரிக்கும் இணையராக விளங்கவும் தனித்தன்மை வாய்ந்த தீக்கொழுந்துபோன்ற பாணியை வளர்த்துக்கொண்டார் ஃப்ரீடா. டீயகோவுக்காக தன்னை மாற்றிக்கொள்ளவில்லை; மாறாக, தன்னுடைய ஆளுமையையும் தோற்றத்தையும் கவனமாகச் செதுக்கிக்கொண்டார். நாடகீயமும் தனித்துவம் வாய்ந்த கலையுணர்வும் சரிவிகிதத்தில் கலந்த தோற்றத்தினால் பொதுப்பார்வையை டீயகோவிடமிருந்து தன் பக்கம் திருப்பினார் என்கிறார் ஃப்ரீடாவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர்களுள் ஒருவரான ஹேய்டன் ஹெரேரா.

நாளடைவில் ஃப்ரீடாவின் ஆடைகளும் அலங்காரங்களும் அவரின் பிரிக்கமுடியாத அடையாளங்களாக மாறின. அவர் இல்லாவிட்டாலும் ஆடைகளைக் கொண்டு அவரின் இருப்பை உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்த ரசவாதம் நடைபெறும் என்பதை ஃப்ரீடா நிச்சயம் முன்னரே கணித்திருக்கவேண்டும். ‘ஆளில்லாவிட்டாலும் ஒரேயொருவரின் உருவப்படத்தைத்தான் டெஹுஆனா ஆடை குறிக்கும், அது நான்தான்,’ எனக் கூறினார் ஃப்ரீடா.

உடல் நலிவுற்ற இறுதி நாட்களிலும் விருந்துக்குத் தயாராவதுபோல அலங்கரித்துக்கொள்வதை நிறுத்தவில்லை. அது அவரின் இருப்பை எடுத்துக் காட்டியதோடு பார்ப்போரைக் காந்தம்போல வசீகரிக்க உதவியது. ஃப்ரீடாவின் உண்மை நிலையை மறைக்கும் முகமூடியாக இருந்த அதே சமயம் அவரைக் காட்சிப்படுத்தும் சட்டகமாகவும் அமைந்தது. அவருடைய உடல் காயம், குறைபாடு இவற்றோடு உள்ளத்தில் ஏற்பட்ட வலி, மரணம் குறித்த உணர்வுகள் ஆகியவற்றை ஈடுசெய்யும் வழியாக விளங்கியது.

டீயகோவும் ஃப்ரீடாவும் முதலில் சந்தித்துக் காதல்வயப்பட்டிருந்த காலத்தில் வரைந்த சுவரோவியத்தில் ஃப்ரீடாவை கம்யூனிஸப் போராளியாகச் சித்தரித்தார் டீயகோ. அதேபோல ஃப்ரீடாவின் படைப்புகளில் டீயகோவின் தாக்கம் இருந்தது. டீயகோவுக்குப் பிரியமான விஷயங்களை வரைந்தார். அதன் காரணமாக டீயகோ ஃப்ரீடாவை வியந்து பாராட்டினார், அவர்மீது அதிக நேசம்கொண்டார். அதே நேரத்தில் ‘உனக்கென ஒரு பாணியை வளர்த்துக்கொள்ளவேண்டும்,’ எனவும் ஃப்ரீடாவிடம் வலியுறுத்தினார்.

ஆனால் ஒரு நாளும் ஃப்ரீடாவுக்கு ஓவியம் வரையக் கற்றுத் தருகிறேன் என்று கிளம்பவில்லை. அப்படிச் செய்தால் ஃப்ரீடாவின் உள்ளார்ந்த கலைத்திறன் வெளிப்படாது என்பது டீயகோவுக்குத் தெரிந்திருந்தது. டீயகோவை உற்றுக் கவனிப்பதுமூலமும் அவர் சொல்வதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்பதுமூலமும் நிறையக் கற்றுக்கொண்டார் ஃப்ரீடா. ‘வாழ்க்கையில் புரட்சியின் பொருளையும் வண்ணங்களின் உண்மைத் தன்மையையும் டீயகோதான் எனக்குக் காட்டினார்,’ எனக் கூறினார் ஃப்ரீடா.

0

மெக்சிகோவின் கம்யூனிஸ்ட்டுகள் டீயகோவை ’கோடீஸ்வரர்களின் ஓவியர், அரசாங்கத்தின் கைக்கூலி’ என்று அழைத்தனர். வலதுசாரியினர் அவரை ‘புரட்சியாளர்களின் முகவர்’ என்று குற்றஞ்சாட்டினர். மெக்சிகோவின் வேறு இரண்டு ஓவியர்களான ஹொஸே க்ளமெண்டே ஆரோஸ்கோ, டேவிட் அல்ஃபரோ செக்கேரோஸ் இருவரும் ஏற்கனவே மெக்சிகோவிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அமெரிக்காவில் வசித்துவந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட டீயகோவும் அமெரிக்காவுக்குச் செல்ல ஆயத்தமானார்.

அமெரிக்க அரசு கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட காலம் அது. மெக்சிகோவில் நடந்த சுவரோவிய மறுமலர்ச்சி குறித்தும் டீயகோவின் சுவரோவியங்கள் குறித்தும் அமெரிக்கர்கள் அறிந்திருந்தனர். அவரது சுவரோவியங்களில் சிவப்புக் கொடியும் நட்சத்திரங்களும் சுத்தியலும் அரிவாளும் அமெரிக்கக் கோமகன்களுக்கு எதிரான சித்திரங்களும் நிறைந்திருக்கும் என்பதும் தெரியும். இதையெல்லாம் தாண்டி டீயகோவை அமெரிக்காவுக்கு அழைத்துவரவேண்டும் எனக் கலைப் புரவலர்கள் எண்ணினார்கள். சான் ஃப்ரான்சிஸ்கோ பங்குச் சந்தையிலும் கலிஃபோர்னியா நுண்கலைப் பள்ளியிலும் சுவரோவியங்கள் வரையவேண்டும் என்று டீயகோவிடம் கேட்டுக்கொண்டனர்.

அமெரிக்காவுக்கு வந்த அந்த யானை-புறா ஜோடியில் டீயகோ புகழ்பெற்ற ஓவியர், ஃப்ரீடாவோ அவரின் மனைவி என்ற தகுதியை மட்டுமே கொண்டிருந்தார். சிறப்புரை ஆற்றவேண்டுமெனப் பல்வேறு கல்வி நிலையங்களும் பல்கலைக்கழகங்களும் டீயகோவுக்கு அழைப்பு விடுத்தன. முதல் இரண்டு மாதங்கள் இருவருமாகப் பல இடங்களுக்குச் சென்று வந்தனர், ஊர் சுற்றிப் பார்த்தனர். பிறகு டீயகோ சான் ஃப்ரான்சிஸ்கோ பங்குச் சந்தை கட்டடத்தில் சுவரோவியம் தீட்டும் பணியில் முழுகினார்.

டீயகோவின் உதவியாளராகப் பணிபுரிய உலகம் முழுவதுமிருந்து எண்ணற்ற ஓவியர்களும் கலைஞர்களும் அமெரிக்கா வந்தனர். அவர்களும் அவர்களின் மனைவியரும் ஃப்ரீடாவுடன் நட்புடன் பழகினார்கள். என்றாலும் யாரோடும் ஃப்ரீடாவால் ஒட்டுதலோடு பழகமுடியவில்லை. யாரிடமும் ஓவியங்கள் குறித்துப் பேசவோ தானும் ஓவியர் என்பதைச் சொல்லவோ முற்படவில்லை.

பெரும்பாலும் தனியே பொழுதைக் கழிக்க விரும்பினார். ஊர் முழுவதும் மனம்போன போக்கில் சுற்றினார். சான் ஃப்ரான்சிஸ்கோவின் ட்ராலிகளில் பயணம் செய்தார், அருங்காட்சியகத்துக்குப் போனார், சைனா டவுன் எனப்படும் சீனர்கள் வசிக்கும் பகுதியைப் பார்த்தார். அமெரிக்காவில் பெரும் பொருளியல் வீழ்ச்சிக் காலம் தொடங்கியிருந்தது. சான் ஃப்ரான்சிஸ்கோ நகரின் தெருக்களைச் சுற்றி வருகையில் வறிய நிலைமையில் இருந்த பல பேரைப் பார்த்தார் ஃப்ரீடா. கணவருடன் சென்ற விருந்துகளில் வசதியானவர்களைச் சந்தித்தார். இப்படி ஒரே நகரில் இரு வேறு உலகங்கள் இருப்பதை நேரடியாகக் கண்டு மனம்பதைத்தார்.

இன்னொரு பக்கம் டீயகோவின் சுவரோவியத்துக்கு மாதிரியாக இருந்த ஹெலன் வில்லிஸ் என்ற டென்னிஸ் வீராங்கனையுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கியிருந்தார் டீயகோ. பதிலுக்கு டீயகோவின் உதவியாளர்களில் ஒருவரின் மனைவியான க்றிஸ்டினா ஹேஸ்டிங்க்ஸ் என்பவருடன் உறவுகொள்ளத் தொடங்கினார் ஃப்ரீடா.

அந்தச் சமயத்தில் ஃப்ரீடாவின் உடல்நிலை சீர்குலைந்தது. வலது காலிலும் கணுக்காலிலும் இருந்த தசை நாண்களில் அழற்சி ஏற்பட்டு நடக்கச் சிரமப்பட்டார். டீயகோவின் நண்பரான சான் ஃப்ரான்சிஸ்கோவைச் சேர்ந்த மருத்துவர் லியோ எலஸ்ஸர் ஃப்ரீடாவுக்கு மருத்துவம் செய்தார். அதுமுதல் ஃப்ரீடாவின் வாழ்நாள் முழுவதும் அவருக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவராகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தார் லியோ எலஸ்ஸர்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *