Skip to content
Home » ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #9 – காதலும் மனமுறிவும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #9 – காதலும் மனமுறிவும்

1935இல் ஃப்ரீடா இரண்டு முக்கியமான ஓவியங்களைத் தீட்டினார். அவற்றுள் A Few Small Nips படுகொலை ஒன்றை அவல நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது. நாளிதழில் வெளியான செய்தியை மையக்கருவாகக் கொண்டது. குடிகாரன் ஒருவன் தன்னுடைய காதலியைக் கட்டிலின்மீது தூக்கியெறிந்து 20 முறை கத்தியால் குத்தினான். கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது ‘நான் சும்மா சின்னதாகத்தான் குத்தினேன்,’ என்று வெகுளியாகச் சொன்னான்.

ஃப்ரீடாவின் ஓவியம் கொலை நடந்த பிறகான காட்சியின் விவரிப்பு. கொலையுண்ட பெண் கறுப்பு நிறக் காலணியும் கணுக்கால் வரையில் இழுத்துவிடப்பட்ட காலுறையும் அணிந்திருக்கிறாள். அவையிரண்டும் அவள் பாலியல் தொழிலாளி என்பதைக் குறிக்கின்றன. கொலையாளி ரத்தம் தோய்ந்த குறுவாளைக் கையில் பற்றியபடி கட்டிலருகே நிற்கிறான். தொப்பி அணிந்தபடி இறந்தவளை ஏளனப் புன்னகையோடு நோக்குகிறான்.

அந்தப் பெண் படுக்கையில் கைகால்களைப் பரத்தியபடி நிர்வாணமாகக் கிடக்கிறாள். உயிரற்ற உடலெங்குமுள்ள வெட்டுக்களிலிருந்து ரத்தம் கசிகிறது. கீழே தொங்கும் பெண்ணின் ரத்தம் தோய்ந்த உள்ளங்கை பார்வையாளரை நோக்கி நீண்டிருக்கிறது. விரல்களிலிருந்து மஞ்சள் வண்ணத் தரையில் ரத்தம் சொட்டுகிறது. பின்னணியில் வெள்ளை, கறுப்பு என நன்மையையும் தீமையையும் சுட்டும் இரு வண்ணப் புறாக்கள் எழுத்துச் சுருளைத் தாங்கியபடி பறக்கின்றன. அதில் ‘சில சின்னக் குத்துக்கள்’ என்ற ஓவியத்தின் தலைப்பு எழுதப்பட்டுள்ளது. பல வருடங்கள் கழித்து ஓவியத்தில் மட்டுமின்றி அதன் சட்டம் முழுவதும் ரத்தச் சொட்டுக்களைத் தீட்டினார் ஃப்ரீடா. இடது புறத்தில் கூண்டொன்றை அமைத்து அதற்குள் வெண்புறாவை அடைத்தார்.

நாளிதழில் படித்த சம்பவத்தில் இறந்த பெண்ணின்மீது தோன்றிய கரிசனையில் அதைத் தீட்டியதாகச் சொன்னார். தானும் வாழ்க்கையினால் கொலை செய்யப்பட்ட நிலைமையிலிருந்ததாக உணர்ந்த காலகட்டத்தில் வரையப்பட்டது. அமெரிக்காவிலிருந்து மெக்சிகோ திரும்பியதும் டீயகோவுடன் இணக்கமான உறவு ஏற்படும் என நம்பினார். ஆனால் டீயகோவோ ஃப்ரீடாவின் தங்கையுடன் நெருக்கமானார். தன்னுடைய நடவடிக்கையால் ஃப்ரீடாவைக் காயப்படுத்தியது குறித்துச் சிறிதும் வருத்தம் கொள்ளாமல் ஓவியத்திலுள்ள கொலையாளியைப் போலவே இருந்தார்.

ஓவியத்தில் சித்தரிக்கப்பட்ட உடல் காயங்கள் ஃப்ரீடாவின் மனக்காயங்களின் குறியீடு. அதன் வழியாகத் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்கொணர்ந்து கடுந்துயரத்தை அப்போதைக்கு ஆற்றிக்கொண்டார். கணவரும் தங்கையும் இழைத்த துரோகத்தை வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு ஓவியங்களின் மூலம் வெளிப்படுத்திக்கொண்டார்.

இதே காலகட்டத்தில் தன்னோவியம் ஒன்றையும் தீட்டினார். தனிமையும் வெற்றுணர்வும் வாட்டிய நிலைமையில் வரையப்பட்ட அதில் கத்தரிக்கப்பட்ட சுருட்டைத் தலைமுடியோடு காணப்படுகிறார். தீர்க்கமான பார்வையோடு அனுபவமிக்கவராகத் தோற்றமளிக்கிறார்.

டீயகோவின் வஞ்சகம் ஃப்ரீடாவுக்குள் பெரிய மாற்றத்தைத் தோற்றுவித்தது. மனிதர்களால் உறவின் அலைக்கழிப்புகளிலிருந்து எளிதில் விடுவித்துக்கொள்ள முடிவதில்லை. ஆனால் வாழ்க்கையின் எதிர்பாராத துயர்மிகுந்த நிகழ்வுகளால் மனம் தளராமல் இருப்பது அவசியம். உடல்நோவின் அன்றாடச் சவால்களை எதிர்கொண்ட ஃப்ரீடா நெருங்கிய உறவுகளின் துரோகத்தைச் சமாளிக்கும் மனத்தின்மையை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டார். கணவரின் வட்டத்தைவிட்டு முழுவதுமாக வெளியேறாமல் அதே நேரம் தனக்கான அங்கீகாரத்தைக் கலைத்திறனின் மூலம் பெற்றார். புகழ்பெற்ற ஓவியரின் மனைவி, வீட்டைப் பராமரிக்கும் பொறுப்புகொண்ட குடும்பத் தலைவி என்பதைத் தாண்டி தன்னுரிமை பெற்ற பெண்ணாக உருவெடுத்தார்.

ஃப்ரீடா வலுவான ஆளுமை கொண்டவர். கணவரின் திருமணத்துக்கப்பாற்பட்ட உறவுகளைப் பார்த்து மனம் குமைந்து போவதோடு நிறுத்தவில்லை. தன் பங்குக்குத் தனக்குப் பிடித்த பெண்கள், ஆண்கள் என இரு பாலரோடும் உறவுகொள்ளத் தொடங்கினார். இந்த இருபாலின ஈர்ப்பு அவரது படைப்புகளிலும் வெளிப்பட்டது. இரண்டு ஃப்ரீடாக்களை வரைவதோடு இரண்டு பெண்கள் தனிமையிலிருப்பது போன்ற ஓவியங்களையும் தீட்டினார்.

தன் மனைவியின் பெண் காதலர்களை வெளிப்படையாக அங்கீகரித்த டீயகோ ஆண் காதலர்களிடம் அதே புரிதலையும் கருணையையும் காட்டவில்லை. அமெரிக்க ஓவியர் இசாமு நொகுச்சி மெக்சிகோ வந்தபோது ஃப்ரீடாவும் அவரும் நெருக்கமானார்கள். அது தெரியவந்தபோது துப்பாக்கியை நீட்டி நொகுச்சியை மிரட்டினார் டீயகோ.

ஃப்ரீடாவின் வாழ்க்கையும் குணமும் முரண்களின் கலவை. ஒரு புறம் அமெரிக்கர்களை கிரிங்கோ எனக் கிண்டல்செய்வார். ஆனால் அமெரிக்காவோடும் அமெரிக்கர்களோடும் பிணைப்பைக் கொண்டிருந்தார். டீயகோவின் இரட்டை வேஷமும் பெண்களிடம் கொண்ட நாட்டமும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவரைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை, அவருடனான உறவைத் துண்டித்துக்கொள்ள இயலவில்லை. தங்கை கிறிஸ்டினாவின் துரோகம் துயரைத் தந்தாலும் அவருடைய அருகாமை ஆறுதலைத் தந்தது. அக்கா தங்கை உறவு முன்போலவே தொடர்ந்தது.

கிறிஸ்டினா, அவரது குழந்தைகள் இசொல்டா, அண்டோனியோ என எல்லோரையும் உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது ஃப்ரீடா, டீயகோவின் குடும்பம். குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கும் அன்புப் பெரியம்மா ஃப்ரீடா. பள்ளி, இசைப்பயிற்சி என அவர்களுக்கான எல்லாச் செலவுகளையும் செய்தார். வெளியூர்ப்பயணம் செல்கையில் குழந்தைகளுக்கு அன்பொழுகக் கடிதம் எழுதுவார். தன் பங்குக்கு டீயகோவும் வண்ணங்களையும் விளையாட்டுப் பொருட்களையும் வாங்கித் தருவார்.

காயப்பட்ட மனமும் உணர்வும் ஒரு புறம் அதற்குக் காரணமான உறவுகளை உதறித் தள்ளமுடியாத நிலை மற்றொரு புறம் என ஊசலாடினார் ஃப்ரீடா. 1936இல் ஃப்ரீடா வரைந்த என் பெற்றோரின் பெற்றோரும் என் பெற்றோரும் நானும் என்ற சித்திரம் அவருடைய உள்ளார்ந்த பயணத்தையும் வளர்ச்சியையும் சுட்டுகிறது. ஓவியத்தில் கோயோயாகான் நீல வண்ண வீட்டின் நடு முற்றத்தில் ஐந்தே வயதான சிறுமியாக ஆடையின்றி நிற்கிறார் ஃப்ரீடா. பின்னணியில் ஒரு பக்கம் பாலை நிலத்தில் எழுந்து நிற்கும் மலைகளும் மண்டிக்கிடக்கும் கற்றாழைகளும் இன்னொரு பக்கம் கடலும் காணப்படுகின்றன. குழந்தை ஃப்ரீடா கையில் பற்றியுள்ள சிவப்பு நாடா ஓவியத்தின் மேற்புறத்தின் இரு பக்கத்திலும் காணப்படும் தாத்தா, பாட்டிகளின் உருவங்களோடு இணைகிறது.

நடுவே ஃப்ரீடாவின் பெற்றோரின் திருமணக் கோலம். இவற்றோடு தாயின் கருப்பைக்குள் உறங்கும் குழந்தையாகத் தன்னையே வரைந்துள்ளார். அதற்குக் கீழே கருமுட்டையைத் துளைக்கும் விந்து. தாய்மையடையும் வாய்ப்பை இழந்த ஃப்ரீடா ஓவியராகப் புதிய வாழ்வைத் தொடங்குவதைச் சித்தரிக்கிறது இந்த ஓவியம். ஃப்ரீடாவின் படைப்புகளில் கருப்பை, கருத்தரிப்பு, குழந்தை, தாய் ஆகியவையும் அவற்றுக்கிடையேயான பிணைப்பும் மீண்டும் மீண்டும் தோன்றுவதைக் காணலாம்.

கூடவே, அந்தச் சமயத்தில் ஜெர்மனியின் அதிபராகப் பதவியேற்றிருந்த அடால்ஃப் ஹிட்லர் இனத்தூய்மையைப் பேணுவதற்காக வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களின் திருமணத்தைத் தடைசெய்யும் உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அதை எதிர்ப்பதோடு தன்னுடைய மெக்சிகோ இந்திய, ஸ்பானியப் பின்னணியோடு ஹங்கேரிய, ஜெர்மானிய யூதப் பின்னணியையும் வலுவாகப் பதிவுசெய்வதற்காக இந்த ஓவியத்தை வரைந்தார் ஃப்ரீடா.

0

ஓவியம் வரைவதிலும் டீயகோவுடனும் கிறிஸ்டினாவுடனுமான உறவைச் சமநிலைப்படுத்துவதிலும் ஃப்ரீடா முனைப்பாக இருந்த சமயத்தில் மெக்சிகோவுக்கும் டீயகோவின் இல்லத்துக்கும் புதிய மனிதர் ஒருவர் வந்து சேர்ந்தார். அவர்தான் ரஷ்யாவின் போல்ஷெவிக் கட்சியைச் சேர்ந்த லியான் டிராட்ஸ்கி. போல்ஷெவிக் கட்சியின் தலைவரும் ரஷ்ய அதிபருமான விளாதிமிர் லெனினின் நெருங்கிய தோழர். லெனினின் மறைவுக்குப் பிறகு கட்சியில் டிராட்ஸ்கியின் நிலை மாறியது.

சர்வாதிகாரத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி ரஷ்ய அதிபராகப் பதவியேற்கத் துடித்தார் ஜோசப் ஸ்டாலின். அதற்கு டிராட்ஸ்கி தடையாக இருப்பார் என்ற காரணத்தால் தனக்கு எதிராகச் செயல்பட்டார் என்ற குற்றம் சாட்டி அவரை மாஸ்கோவிலிருந்து வெளியேற்றினார். ஆனாலும் ஸ்டாலினுக்கு எதிரான கட்டுரைகளையும் நூல்களையும் தொடர்ந்து டிராட்ஸ்கி எழுதிவந்தார். அதனால் அவரைக் கொலை செய்யுமாறு ரஷ்யாவின் ரகசியக் காவல் படைக்கு உத்தரவிடப்பட்டது. உயிருக்கு உத்திரவாதமற்ற நிலையில் ரஷ்யாவிலிருந்து தப்பிச் சென்றார் டிராட்ஸ்கி. ஒன்பது வருடங்களுக்கு வெவ்வேறு நாடுகளில் மறைந்து வாழவேண்டிய கட்டாயம்.

டீயகோவுக்கு லெனினும் டிராட்ஸ்கியும் ஆதர்சம். நியூயார்க்கில் ராக்ஃபெல்லர் கலை மையத்தில் வரைந்த சுவரோவியத்தில் லெனினோடு டிராட்ஸ்கியையும் சேர்த்து வரைந்திருந்தார் டீயகோ. லெனினின் மறைவுக்குப் பிறகு டிராட்ஸ்கியின் கட்சிக்கு ஆதரவைத் தெரிவித்திருந்தார் டீயகோ. மெக்சிகோ அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிராட்ஸ்கி மெக்சிகோவில் தஞ்சம்புக உதவினார். ஸ்டாலினின் காவல் படையினரின் கண்ணில் படாமல் மறைந்து வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்தார்.

1937ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி டிராட்ஸ்கியும் அவர் மனைவி நடாலியாவும் மெக்சிகோ வந்து சேர்ந்தனர். கண் கோளாறு, சிறுநீரகப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் இருந்தார் டீயகோ. அவர் சார்பாக ஃப்ரீடாவும் கட்சியின் மற்ற உறுப்பினர்களும் டிராட்ஸ்கியையும் அவர் மனைவி நடாலியாவையும் வரவேற்கத் துறைமுகத்துக்குச் சென்றனர். பிறகு அவர்களை ரகசியமாக மெக்சிகோ சிட்டிக்கு அழைத்துப் போயினர்.

டிராட்ஸ்கி தம்பதியர் கோயோயாகானின் நீல வண்ண வீட்டில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்காக வேலையாட்கள், காவல்காரர்கள் என எல்லா ஏற்பாடுகளையும் ஃப்ரீடாவும் டீயகோவும் முன்னால் நின்று செய்தனர். டிராட்ஸ்கியும் அவர் மனைவியும் மிகுந்த மகிழ்ச்சிகொண்டனர். பல வருடங்கள் அங்கேயும் இங்கேயுமென அலைந்து திரிந்து ஒளிந்து வாழ்ந்தவர்களுக்கு கோயோயாகானும் நீல வண்ண வீடும் அமைதியைத் தரும் புகலிடமாக அமைந்தன. இரண்டு தம்பதியரும் ஒன்றாக நேரம் கழித்தனர், பயணம் செய்தனர், உணவுண்டனர்.

போல்ஷெவிக் கட்சியில் லெனினுக்கு இரண்டாம் நிலையில் இருந்தவர் டிராட்ஸ்கி. ராணுவப் பயிற்சி பெற்றவர், புரட்சியாளர், ஆழ்ந்த அறிவும் எழுத்தாற்றலும் கொண்டவர். 58 வயதானாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். டீயகோ அவர்மீது பெருமதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் பார்த்த ஃப்ரீடா, கிறிஸ்டினாவுடன் டீயகோ கொண்ட உறவுக்குப் பதிலாகத் தானும் சின்னக் குத்துகளைத் தர நல்வாய்ப்பு கிடைத்ததாகக் கருதினார். மெல்லத் தன் பார்வையை டிராட்ஸ்கியின்மீது வீசினார். டிராட்ஸ்கியும் ஃப்ரீடாவின்மீது நாட்டம் கொண்டார். ஸ்டாலினுக்குப் பயந்து ஓடி ஒளிந்தவருக்கு அறுபதை எட்டிப் பார்க்கும் சமயத்தில் இன்னும் முப்பதை எட்டாத இளம்பெண்ணின் கடைக்கண் பார்வை கிடைத்ததில் குளிர்ந்துபோனார்.

நடாலியாவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஃப்ரீடா டிராட்ஸ்கியுடன் ஆங்கிலத்தில் பேசுவார். இப்படியாக, டிராட்ஸ்கியின் மனைவி நடாலியாவின் முன்னிலையில் அவர்களின் காதல் நாடகம் அரங்கேறியது. ஃப்ரீடா படிக்கவேண்டிய நூல்களைப் பரிந்துரை செய்து அவற்றினுள் காதல் கடிதங்களை வைத்துக் கொடுப்பார் டிராட்ஸ்கி. மெல்ல மெல்ல இருவரும் அடுத்த தெருவிலிருந்த ஃப்ரீடாவின் தங்கை கிறிஸ்டினாவின் வீட்டில் தனியே சந்திக்கத் தொடங்கினர்.

டீயகோவுக்கு இவை எதுவும் தெரியவில்லை. ஆனால் என்ன நடக்கிறதென்பதைப் புரிந்துகொண்டார் நடாலியா. புரட்சியாளர், எழுத்தாளரும்கூட. டிராட்ஸ்கியுடன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காதலி, மனைவி என உறவிலிருந்தவர் நடாலியா. கணவருக்கு மிகுந்த வருத்தத்தோடு கடிதமொன்றை எழுதினார். டிராட்ஸ்கியின் பாதுகாவலர்களுக்கும் இந்த உறவு குறித்து அச்சம் ஏற்பட்டது. டீயகோ, நடாலியா இருவருடைய கோபத்தோடு டிராட்ஸ்கியைக் கொல்வதற்காகத் தேடியலையும் ஸ்டாலினின் ரகசியக் காவல்படைக்குத் தெரியவந்தால் பிரச்சனையாகும் என்று பரிதவித்தனர். ஆனால் அவர்கள் அஞ்சியதுபோல் எதுவும் நடக்கவில்லை.

உண்மையில் ஃப்ரீடாவுக்கு டிராட்ஸ்கியின் மேல் காதலோ ஆர்வமோ கிடையாது. மாபெரும் ஆளுமையின் காதல் அவருக்கு மகிழ்ச்சியூட்டியது, டீயகோவை பழிதீர்க்க அதைப் பயன்படுத்திக்கொண்டார், அவ்வளவே. அதனால், உறவை ஆரம்பித்த வேகத்திலேயே முடித்தும் கொண்டார். உறவைத் தொடரவேண்டுமென மன்றாடி நீளமான கடிதமொன்றை எழுதினார் டிராட்ஸ்கி. அதை ரசித்துப் படித்து தன் தோழியோடு பகிர்ந்துகொண்டாரே ஒழிய வேண்டுதலுக்குச் செவிசாய்க்கவில்லை ஃப்ரீடா. இனி நண்பர்களாகத் தொடரலாம் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

இருவரும் பிரிந்து பல மாதங்களுக்குப் பிறகு முன்னாள் காதலர் டிராட்ஸ்கியின் பிறந்த நாளுக்குத் தன்னோவியம் ஒன்றை வரைந்து பரிசளித்தார் ஃப்ரீடா. ஓவியத்தில் இரண்டு திரைச்சீலைகளுக்கு நடுவே ஆபரா பாடகியைப் போல நிற்கிறார். வழக்கமான டெஹுஆனா ஆடைக்குப் பதிலாக மேல்வர்க்கப் பெண்களணியும் ஆடையை அணிந்துள்ளார். தலையிலும் கையிலும் பூச்செண்டுகள். கூடவே டிராட்ஸ்கிக்கு எழுதிய கடிதமொன்றை வைத்திருக்கிறார். ‘என் மொத்தக் காதலுடன் இந்த ஓவியத்தை 1937ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியன்று லியான் டிராட்ஸ்கிக்கு அர்ப்பணிக்கிறேன். ஃப்ரீடா காஹ்லோ, சான் ஏஞ்சல், மெக்சிகோ,’ என அதில் எழுதியிருந்தார்.

இது வரையில் ஃப்ரீடா வரைந்த தன்னோவியங்களில் மிகவும் சிறப்புமிக்கதாக இது கருதப்படுகிறது. ஃப்ரீடாவின் முகப்பொலிவு, ஒப்பனை, மென்சிவப்புப் பாவாடை, அரக்கு வண்ணச் சட்டை, தலையுள்ள ஒற்றை ரோஜா, சிவப்பு ரிப்பன்கள், பாசிப்பச்சை பின்னணி என ஓவியத்தில் காணப்படும் ஒத்திசைந்த வண்ணங்களின் கலவை ஃப்ரீடாவின் உள்ளார்ந்த கலையுணர்வை வெளிப்படுத்துகின்றன.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *