Skip to content
Home » ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #10 – அமெரிக்க ஐரோப்பியப் பயணங்கள்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #10 – அமெரிக்க ஐரோப்பியப் பயணங்கள்

லியான் டிராட்ஸ்கி மெக்சிகோ வந்தது ஃப்ரீடாவுக்கு வேறொரு வகையில் நன்மையளித்தது. மற்றெந்த ஆண்டைவிடவும் 1937இல் அதிகளவில் ஓவியங்களைப் படைத்தார். வாழ்க்கையின் பல நிகழ்வுகளைச் சித்திரமாகத் தீட்டினார். அவரின் முதிர்ச்சியடைந்த மனநிலையை அந்தப் படைப்புகள் சுட்டின. வாழ்வின் நிகழ்வுகளோடு அவரின் அகத்தைப் புறவுலகோடு தொடர்புபடுத்திக் கொள்வதைப் பிரதிபலித்தன. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஓவியராகத் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வழிகளைப் பரிசோதனை செய்து கண்டறியும் காலமாக அமைந்தது.

‘நினைவு’ அல்லது ‘இதயம்’ (Memory or The Heart) என்ற ஓவியத்தை 1937இல் வரைந்தார். அதில் புதிர்போன்ற மூன்று ஃப்ரீடாக்களைக் காணலாம். நடுவிலுள்ள ஃப்ரீடாவுக்குக் கைகளில்லை, அந்தரத்தில் மிதக்கிறார். இரு புறமும் தொங்கும் பள்ளிச் சீருடையிலும் டெஹூஆனா ஆடையிலுமாக ஒவ்வொரு கை மட்டுமே உள்ளன, உருவமில்லை. மூன்று ஃப்ரீடாக்களையும் ரத்த நாளங்கள் இணைக்கின்றன. நடுவிலுள்ள ஃப்ரீடாவின் இதயமிருக்கும் இடத்தில் பெரிய துளை. அதனுள் பாய்ந்த நீளமான வாள். இதயமோ ரத்தம் பீய்ச்சியபடி நிலத்தில் விழுந்துகிடக்கிறது. மத்தியிலிருக்கும் ஃப்ரீடாவின் ஒரு கால் நிலத்திலும் மற்றொரு கால் நீரிலும் ஊன்றியுள்ளன. ஒரு காலில் சமீபத்திய சிகிச்சையின்போது பொருத்தப்பட்ட கருவி காணப்படுகிறது.

டீயகோவின் நடத்தையால் காயப்பட்டதையும் அவருடனான உறவைச் சீர்செய்ய முடியாத கையாலாகாத்தனத்தையும் தன்னுடைய உடற்பாகங்களின் மூலம் சித்தரிக்கிறார். வாழ்க்கையின் ஓட்டத்தை ஃப்ரீடாவினால் கட்டுப்படுத்த முடியவில்லை, ஆனால் அதனால் ஏற்படும் உணர்வுகளை வெளிப்படுத்த கலை உதவியது, ஆறுதல் அளித்தது.

ஃப்ரீடா பலவிதமான விலங்குகளை வீட்டில் வளர்த்தார். சிலந்தி குரங்கு, மென்முடியற்ற மெக்சிகோ நாய் இனம், பேசும் கிளி, கழுகு, வான்கோழி, பூனை, மான் என பெரிய செல்லப்பிராணிப் பட்டாளத்துடன் இருப்பார். அவற்றைச் செல்லம் கொஞ்சி வளர்ப்பதுமூலம் குழந்தை ஏக்கத்தை ஈடுசெய்துகொண்டார்.

இடைக்காலம் முதல் சிலந்தி குரங்குகள் தீயசக்தி, துன்மார்க்கம், புறச்சமயநம்பிக்கை போன்றவற்றின் உருவமாகக் கருதப்பட்டன. மனித இனத்தின் வீழ்ச்சி, தீச்செயல், காமம் ஆகியவற்றின் குறியீடாக இருந்தன. அளவற்ற காதல், அதிகப்படியான அடிப்படை உணர்வுகளின் அபாயத்தைச் சுட்டுவதற்காகப் பயன்பட்டன. ஆனால் ஃப்ரீடா, சமூகத்தின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதோடு அவற்றைப் புறக்கணிப்பதே அவரின் வாடிக்கை அல்லவா.

ஃபுலாங் சாங், கைமீடோ டெ க்வாயாபா என்பது ஃப்ரீடாவின் இரண்டு செல்லக் குரங்குகளின் பெயர். அவற்றுள் ஃபுலாங்கிடம் பிரியம் அதிகம், தனக்குப் பிறக்காத குழந்தையின் மறுஉருவாகக் கருதினார். 1937இல் வரைந்த ‘ஃபுலாங் சாங்கும் நானும்’ (Fulang Chang and I) என்ற தன்னோவியத்தில் குரங்கின் கருத்த மென்மயிரை ஒத்த தலைமுடியைக் கித்தானிலுள்ள ஃப்ரீடாவுக்கும் வரைந்தார். இரு உருவங்களின் பின்னணியில் செடியின் மென்மையான பற்றிழைகளை வெளுத்த பச்சை வண்ணத்தில் தீட்டினார். இருவரையும் பிணைக்கும் மென்சிவப்பு ரிப்பன் தொப்புள்கொடியின் உருவகம். மொத்தத்தில் ஃப்ரீடாவின் வசீகரிக்கும் பெண்மையைச் சுட்டுவதாக அந்த ஓவியம் அமைந்தது. ஃபுலாங், ஃப்ரீடா இருவரையும் ஒருங்கே சித்தரிக்கும் அந்த ஓவியம் கலை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதால் அதைப்போன்ற வேறு பல ஓவியங்களோடு மற்ற விலங்குகளுடன் இருக்கும் சித்திரங்களையும் வரைந்தார்.

எப்போதும் தன்னோடிருக்கும் செல்ல நாய்க்குட்டிக்கு அஜ்டெக் புராணக் கடவுளான சொலோடிலின் பெயரைச் சூட்டினார். மரணத்துக்குப் பிறகு மனித ஆன்மாக்கள் கீழுலகுக்குச் செல்ல நாய்கள் வழிகாட்டும் என அஜ்டெக்குகள் நம்பினார்கள். ஃப்ரீடாவின் காலடியில் அந்தச் சின்னஞ்சிறிய நாய்க்குட்டி இருப்பதுபோன்ற தன்னோவியமொன்றை வரைந்தார். கிளி, பூனை, தேன்சிட்டு போன்றவற்றையும் தன்னோவியங்களில் தீட்டினார்.

1937இல் ஆண்ட்ரே ப்ரெடான் என்ற புகழ்பெற்ற அதீத கற்பனைவாத பிரெஞ்சு ஓவியர் மெக்சிகோ சிட்டியின் பல்கலைக்கழகக் கலைக்கூடத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு வருகை தந்தார். அங்கே ஃப்ரீடாவின் ஓவியங்களைப் பார்த்து அவை அதீத கற்பனைவாதத்தைப் பின்பற்றி வரையப்பட்டிருப்பதாகச் சொன்னார். ‘ஃப்ரீடாவின் கலை வெடிகுண்டைச் சுற்றிக் கட்டப்பட்ட ரிப்பன்,’ என்று சிலாகித்தார்.

ஃப்ரீடாவோ ஆண்ட்ரேயின் பேச்சு போலியானது என்ற அபிப்பிராயம் கொண்டிருந்தார். தன்னுடைய ஓவியங்கள் கற்பனையல்ல, எதார்த்த பாணியைச் சேர்ந்தவை என்று மறுப்பு தெரிவித்தார். ஆனாலும், ஆண்ட்ரே மூலம்தான் அவருடைய கலை வாழ்வின் மிகப் பெரிய திறப்பொன்று கிடைத்தது.

நியூயார்க் நகரில் ஓவியக்கூடமொன்றை நடத்திவந்த ஜூலியன் லெவியிடம் ஃப்ரீடாவின் ஓவியங்களைப் பரிந்துரைத்தார் ஆண்ட்ரே. உடனே தன்னுடைய ஓவியக்கூடத்தில் கண்காட்சி நடத்தவேண்டுமென ஃப்ரீடாவுக்குக் கடிதம் எழுதினார் ஜூலியன். என்றுமே தன்னுடைய ஓவியங்கள் சிறந்தவை என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை ஃப்ரீடா. எத்தனை பேர் ரசித்துப் பாராட்டினாலும் அதையெல்லாம் பொருட்டாகக் கொள்ளவில்லை. தனிப்பட்ட ஆர்வத்தினால் மட்டுமே ஓவியங்களைத் தொடர்ந்து வரைவதாகச் சொன்னார்.

டீயகோவைப் போலத் தானொரு தொழில்முறை ஓவியரல்ல என்பதை வலியுறுத்தும் வகையில் தகரம், கிளிஞ்சல், கண்ணாடி, வெல்வெட்டு, சுட்ட களிமண் ஓடு எந்த ஊடகத்திலும் வரைந்தார். தன்னுடைய ஓவியங்களை விலைகொடுத்து வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்பதை யோசித்துக்கூடப் பார்த்ததில்லை.

அப்படியிருந்த ஃப்ரீடா நியூயார்க்கில் கண்காட்சி நடத்துவதற்கான அழைப்பைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்பை நழுவவிட வேண்டாமென்று அறிவுறுத்தினார் டீயகோ. ஃப்ரீடாவுக்கு உற்சாகமூட்டியதோடு கலை விமர்சகர்கள் வட்டத்தில் அவரின் ஓவியங்களைப் பரிந்துரை செய்தார். மனைவி என்ற வகையிலன்றித் திறமைசாலியான சக ஓவியர் என்பதற்காக அதைச் செய்தார்.

1938 நவம்பர் மாதம் லெவி ஓவியக்கூடத்தில் ஃப்ரீடாவின் படைப்புகளுக்கெனத் தனிப்பட்ட கண்காட்சி நடந்தது. அதில் வைப்பதற்காகப் புதிய ஓவியங்களை வரைந்தார். கண்காட்சியில் பங்கேற்பதற்காக டீயகோ இன்றித் தனியே நியூயார்க்குக்குப் பயணமானார். கண்காட்சியின் முதல் நாளன்று பாரம்பரிய மெக்சிகோ ஆடை அணிகலன்களை அணிந்திருந்த ஃப்ரீடா பார்ப்பதற்குத் தானே ஓர் ஓவியத்தைப்போலத் தோற்றமளித்தார். கண்காட்சியில் வைக்கப்பட்ட ஓவியங்களில் பாதிக்குமேல் விற்பனையாகின.

நியூயார்க்கில் வெளியான பத்திரிக்கை செய்திகளிலும் விளம்பரங்களிலும் கண்காட்சி குறித்த விமர்சனங்களிலும் டீயகோவின் மனைவி என்று குறிப்பிட்டாலும் அதைத் தாண்டி தனக்கென அடையாளம் ஒன்றிருப்பதை உணர்ந்த ஃப்ரீடாவின் உற்சாகமும் தன்னம்பிக்கையும் பல மடங்கு கூடின. டீயகோ அருகில் இல்லாதது இன்னொரு வகையிலும் ஃப்ரீடாவின் தன்னம்பிக்கையைத் தூண்டியது. நியூயார்க்கில் சந்தித்த வசீகரமான ஆண்களிடம் நெருங்கிய நட்பு பாராட்டியதோடு காதல் சரசத்திலும் ஈடுபட்டார். ஆனாலும் டீயகோவின்பால் கொண்டிருந்த காதலும் அன்பும் சிறிதளவும் குறையவில்லை. அந்த டிசம்பர் மாதம் டீயகோவின் பிறந்தநாளில் அவருக்காகக் கவிதையொன்றை எழுதினார்.

கடந்த முறை போலல்லாமல் இந்தத் தடவை அமெரிக்காவை வியப்போடும் ஆவலோடும் நோக்கினார் ஃப்ரீடா. பிராட்வே, ஹார்லெம், சைனா டவுன், லிட்டில் இட்டாலி போன்ற வெவ்வேறு இன மக்கள் வசிக்கும் பகுதிகளை நோட்டமிடுவதில் ஆர்வம் காட்டினார். அவருடைய உடையும் அலங்காரமும் அமெரிக்கப் பொதுமக்களைத் திரும்பிப் பார்க்கச் செய்தன. ஆனால் எப்போதும் போல மோசமான உடல்நிலை அவரது உற்சாகத்தைக் குன்றச் செய்தது. எதையும் முழுமையாக அனுபவிக்கவிடவில்லை.

நியூயார்க்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து பாரிஸில் ஓவியக் கண்காட்சி நடத்துவதற்கு அழைப்பு விடுத்தார் ஆண்ட்ரே ப்ரெடான். 1939 ஜனவரி மாதம் கப்பலில் பயணமானார். அப்போது ஜெர்மனியின் புதிய அதிபராக அடால்ஃப் ஹிட்லர் பதவியேற்றிருந்தார். ஸ்பானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்திருந்தது.

ஆண்ட்ரேயின் வீட்டில் அவர் மனைவி, மகளுடன் தங்கினார் ஃப்ரீடா. பாரிஸில் புகழ்பெற்ற ஓவியர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், கவிஞர்கள் எனப் பலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. பாரிஸ் நகரின் அழகு ஃப்ரீடாவின் மனதைக் கொள்ளைகொண்டது.

முதல் கண்காட்சிக்குத் தேவையான ஏற்பாடுகளை ஆண்ட்ரே சரியாகச் செய்யவில்லை. பலவிதத்தில் தாமதம் ஏற்பட்டதால் தோல்வியில் முடிந்தது. கூடவே சுத்தமற்ற உணவினால் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஃப்ரீடா. சிகிச்சைக்குப் பிறகு வேறு சில நண்பர்களுடன் தங்கி அடுத்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

நியூயார்க்கைப்போலப் பெண் ஓவியர்களை அதுவும் புதியவர்களை பிரான்ஸ் மக்கள் திறந்த மனதுடன் வரவேற்கவில்லை. முதல் கண்காட்சியைப்போன்றே இதுவும் வெற்றி பெறவில்லை. அதனால் லண்டனில் அடுத்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யலாம் என்ற ஆலோசனையை ஏற்கவில்லை ஃப்ரீடா. ஆனால் போலிகள் மலிந்திருந்த காலகட்டத்தில் ஃப்ரீடாவின் படைப்புகளில் காணப்பட்ட நம்பகத்தன்மை, நேர்மை இரண்டையும் மற்ற ஓவியர்களும் பிரெஞ்சு விமர்சகர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.

பாப்லோ பிக்காசோ தான் உருவாக்கிய விரித்த உள்ளங்கை போன்ற இரண்டு காதணிகளை ஃப்ரீடாவுக்குப் பரிசளித்தார். பின்னாளில் வரைந்த தன்னோவியத்தில் அந்தக் காதணிகளை அணிந்திருந்தார். கூடவே ஸ்பானிய மொழிப் பாடலொன்றைக் கற்றுக்கொடுத்தார். அந்தப் பாடல் ஃப்ரீடாவுக்கு மிகவும் பிடித்துப் போனது. டீயகோவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் அடிக்கடிப் பாடிக் காட்டுவார்.

புகழ்பெற்ற லூவ்ர அருங்காட்சியகம் சட்டம் (The Frame) என்று பெயரிடப்பட்ட தன்னோவியத்தை விலைக்கு வாங்கி காட்சிக்கு வைத்தது. பெண்களின் ஆடை அணிகலன் நாகரிகத்துக்கான வோக் (Vogue) இதழில் ஃப்ரீடாவின் புகைப்படம் வெளியானது. மெக்சிகோவில் காண்போரிடம் எல்லாம் பாரிஸில் தன் மனைவியின் சாதனைகளைப் பெருமிதத்தோடு சொல்லிச் சொல்லிக் கொண்டாடினார் டீயகோ. பாரிஸ் கலையுலகின் உள்ளத்தை ஃப்ரீடா கொள்ளைகொண்டது குறித்து எழுதினார்.

ஃப்ரீடா ஐரோப்பாவிலிருந்து கிளம்பி அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கிருந்து 1939, ஏப்ரல் மாதம் கிளம்பி மெக்சிகோவை வந்தடைந்தார். அமெரிக்காவில் பல ஆண்களுடன் ஃப்ரீடா கொண்டிருந்த காதல் உறவுகளைப் பற்றி அறிந்த டீயகோவுக்கு மிகுந்த வருத்தம். இருவரும் ஓயாது வாக்குவாதம் செய்தனர். ஃப்ரீடா சான் ஏஞ்சல் வீட்டைவிட்டு வெளியேறி கோயோயாகானிலிருந்த நீல வீட்டுக்குச் சென்றார்.

1939 செப்டம்பர் மாதத்தில் விவாகரத்து பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அக்டோபர் மாதம் இருவரும் இசைவுடன் மணமுறிவு வேண்டுவதாக விண்ணப்பித்தனர். பள்ளிக்கால கச்சுச்சா குழு நண்பர் மேனுவெல் கோன்சாலெஸ் ராமிரேஸை தன் வழக்கறிஞராக நியமித்தார் ஃப்ரீடா. அந்த வருடத்தின் முடிவில் சட்டபூர்வமாக இருவரும் பிரிந்தனர்.

இருவரின் பிரிவுக்கு வேறு பல காரணங்களும் இருப்பதாகக் கூறப்பட்டது. தங்களுக்கிடையிலுள்ள நட்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வழி. இது வெறும் சட்ட நடைமுறை. ஃப்ரீடா சுதந்திரமாக வரைவதற்கான உதவி, இப்படியெல்லாம் டீயகோவும் ஃப்ரீடாவும் சொன்னதாக நாளிதழ்கள் எழுதின. இன்னொரு புறம் ஃப்ரீடா உடல்நோவினால் பல இன்னல்களை எதிர்கொள்ளவேண்டிய காலகட்டமாகவும் இது அமைந்தது.

மணமுறிவு பெற்றாலும் டீயகோவும் ஃப்ரீடாவும் அடிக்கடி ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். டீயகோவின் உடல்நலம், கடிதங்கள், கொடுக்கல் வாங்கல் என எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வதை ஃப்ரீடா நிறுத்தவில்லை. பல விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஒன்றாகச் சென்றனர். இப்படி மொத்த வாழ்க்கையுமே முரண்களினால் ஆனதாக அமைந்த தம்பதியராக இருந்தனர்.

மணமுறிவுக்கு விண்ணப்பித்திருந்த சமயத்தில் இரண்டு ஃப்ரீடாக்கள் (The Two Fridas) என்ற ஓவியத்தை வரையத் தொடங்கினார் ஃப்ரீடா. மணமுறிவு உறுதிசெய்யப்பட்ட கடிதம் வந்துசேர்ந்த நாளில் அதை வரைந்து முடித்திருந்தார். அது வரையில் அவர் தீட்டியவற்றில் மிகப் பெரிய சித்திரம் அதுதான்.

இரண்டு முழு உருவத் தன்னோவியங்களைக் கொண்ட ஓவியத்தின் பின்னணியில் புயல்சூழ்ந்த வானம் காணப்படுகிறது. இடப்புறத்தில் டீயகோவினால் புறக்கணிக்கப்பட்ட ஐரோப்பிய பாணி உடையணிந்த ஃப்ரீடா. வலப்புறம் டீயகோவினால் இன்னமும் காதலிக்கப்படும் பாரம்பரிய மெக்சிகோ ஆடையணிந்த ஃப்ரீடா.

இரண்டு ஃப்ரீடாக்களின் இதயங்களையும் நம்மால் காணமுடிகிறது. இடப்பக்கம் உள்ளவரின் இதயத்திலுள்ள ரத்த நாளம் வெடித்துவிட்டது. மருத்துவர்கள் பயன்படுத்தும் குறடைக்கொண்டு ரத்தக் கசிவை நிறுத்த முயல்கிறார். ரத்தம் கசியும் இதயம் கத்தோலிக்க, அஜ்டெக் மதங்களில் குறிப்பிடும் பலியின் குறியீடாக இருக்கிறது. மெக்சிகோ ஃப்ரீடாவின் கையிலுள்ள அலங்காரப் பேழையில் டீயகோவின் சித்திரம் காணப்படுகிறது. அதனால் அந்த ஃப்ரீடாவின் இதயம் ஆரொக்கியமாகக் காணப்படுகிறது. அந்த இதயத்திலிருந்து கிளம்பும் ரத்த நாளம் ஐரோப்பிய ஃப்ரீடாவின் இதயத்தைச் சென்றடைகிறது.

பேழையிலுள்ள டீயகோவின் சித்திரம் தொலைந்துபோன காதலன், பிறக்காத குழந்தை இரண்டையும் குறிக்கிறது. இரண்டு ஃப்ரீடாக்களும் கைகளைப் பற்றியுள்ளனர். ஃப்ரீடாவுக்குத் துணையாக அவரே இருக்கவேண்டிய கட்டாயம். தனக்குத்தானே அரணாகவும் ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் இருக்கிறார்.

மணமுறிவு ஏற்பட்ட 1940இலும் அதைத் தொடர்ந்தும் ஃப்ரீடா வரைந்த ஓவியங்களில் இறப்பு, எலும்புக்கூடு, ரத்தக் கசிவு போன்ற குறியீடுகளைக் காணலாம். இன்னும் சில ஓவியங்களில் ரிப்பன், கொடி, முட்செடி, ரத்த நாளம் போன்றவை கழுத்தை நெரிப்பதைப்போலச் சித்தரித்தார். அந்தக் காலகட்டத்தில் வரைந்த தன்னோவியங்களில் நுட்பமான பல குறியீடுகளைப் பொதிந்து வைத்தார். ஒவ்வொரு சித்திரமும் அவருடைய அற்புதமான கலைத்திறனுக்குச் சாட்சியாக அமைந்தன.

தன்னுடைய ஓவியங்களில் பாரம்பரிய மெக்சிகோ கலைப்படைப்புகளின் வண்ணங்களைத் பயன்படுத்தினார் ஃப்ரீடா. பிரெஞ்சு ஓவியங்களில் காணப்பட்ட வண்ணக் கலவைகளிலிருந்து அவை முற்றிலும் மாறுபட்டிருந்தன. அவரின் சித்திரங்களில் ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு உணர்வையும் இயல்பையும் குறியீட்டையும் சுட்டுவதாக அமைந்தது.

தாங்களிருவரும் மணமுறிவு பெற்ற காலத்தில்தான் ஃப்ரீடா சிறந்த ஓவியங்களைப் படைத்ததாக டீயகோ சொன்னதை ஃப்ரீடாவும் ஏற்றுக்கொண்டார். டீயகோவிடமிருந்து பொருளுதவி பெறக்கூடாது என்ற வைராக்கியமும் அந்த உந்துதலுக்கு இன்னொரு காரணம். தன்னுடைய படைப்புகளை விற்பனை செய்வதற்காக நியூயார்க்கில் ஜூலியன் லெவிக்கு அனுப்பிவைத்தார். ஃப்ரீடாவின் நண்பர்கள் அவருடைய ஓவியங்களை வாங்கியதோடு அவருக்குத் தேவையானபோது பொருளுதவியும் செய்யத் தயாராக இருந்தனர். எப்படியானாலும் அவருடைய படைப்புகள் எப்படி அமையவேண்டும் என்பதை ஃப்ரீடாதான் முடிவுசெய்தார். விற்பனையாக வேண்டுமே என்ற எண்ணத்தில் எந்த ஓவியத்தையும் அவர் வரையவில்லை.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *