1939இல் அரசியல் சித்தாந்த வேறுபாட்டினால் லியான் டிராட்ஸ்கியைப் பிரிவதாகவும் அவருடைய அரசியல் அமைப்பிலிருந்து விலகுவதாகவும் பொதுவெளியில் அறிவித்திருந்தார் டீயகோ. டிராட்ஸ்கியும் அவரது மனைவியும் கோயோயாகான் வீட்டிலிருந்து வெளியேறி வேறு வீட்டில் குடியேறினார்.
1940இல் ஸ்டாலினின் ஆதரவாளர்கள் டிராட்ஸ்கி தம்பதியினரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றனர். இருவரும் சமயோசிதமாகச் செயல்பட்டுத் தப்பிப் பிழைத்தனர். ஆனால் டீயகோதான் இதைச் செய்திருப்பார் எனச் சந்தேகம் எழுந்தது. காவல்துறை டீயகோவைக் கைது செய்யப் போவதாகத் துப்புக் கிடைத்தது. உடனே நண்பர்களின் உதவியுடன் சான் ஃபிரான்சிஸ்கோவுக்குத் தப்பிச்சென்றார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிராட்ஸ்கி கொல்லப்பட்டார். கொலைகாரன் ரமோன் மெர்காதர் எனும் ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட், சோவியத் யூனியனின் உளவாளி. ஏற்கனவே பாரிஸில் ஃப்ரீடாவுக்கு அறிமுகமாகி அவருடைய நம்பிக்கையையும் நட்பையும் பெற்றிருந்தான். மெக்சிகோவுக்கு வருமாறு அவனுக்கு அழைப்புவிடுத்திருந்தார் ஃப்ரீடா.
டிராட்ஸ்கி கொலையுண்டதும் காவல்துறை டீயகோவின் வீட்டைச் சோதனை செய்து அங்கிருந்த பொருட்களையெல்லாம் தூக்கிச் சென்றது. ஃப்ரீடாவையும் அவர் தங்கை கிறிஸ்டினாவையும் கைதுசெய்து 12 மணி நேரத்துக்கு விசாரணை செய்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்களை விடுவித்தது. கவலையும் அச்சமும் ஃப்ரீடாவின் உடல்நிலையைப் பாதித்தது.
அமெரிக்காவிலிருந்த டீயகோவுக்கு இந்தத் தகவல்கள் போய்ச் சேர்ந்தன. முன்னாள் அரசியல் தோழரின் இறப்பைவிடவும் ஃப்ரீடாவின் நிலைமை டீயகோவுக்குக் கவலையளித்தது. செப்டெம்பர் மாத இறுதியில் ஃப்ரீடா சான் ஃபிரான்சிஸ்கோ வருவதற்கு ஏற்பாடு செய்தார். அங்கே அவர்களின் மருத்துவரும் நண்பருமான லியோ எலஸ்ஸர் ஃப்ரீடாவின் உடல்நிலை தேறுவதற்கான சிகிச்சைகளை வழங்கினார்.
பிரிவினால் இணையர் இருவரும் வெவ்வேறு விதத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர். சான் ஃபிரான்சிஸ்கோ வந்த ஃப்ரீடாவைப் பார்த்த டீயகோவின் உள்ளம் நெகிழ்ச்சியுற்றது. மீண்டும் அன்பும் காதலும் துளிர்த்தது. ஃப்ரீடாவின் நெருக்கமும் அரவணைப்பும் டீயகோவுக்குத் தேவைப்பட்டது, ஃப்ரீடாவுக்கும் அப்படித்தான். டீயகோ வயதில் மூத்தவர், உருவத்தில் பெரியவர், முதிர்ச்சியுடையவர். நோயினால் உள்ளமும் உடலும் காயமுற்ற ஃப்ரீடாவைத் தாங்கிப் பிடிக்கும் திறனுள்ளவர். அவருடைய அருகாமை ஃப்ரீடாவுக்கு ஆறுதலளித்தது.
ஃப்ரீடாவின் மருத்துவர் இரண்டு பேருக்கும் நடுவே தூதுபோனார். டீயகோவின் நடத்தையில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை, மற்ற பெண்கள்மீது கொள்ளும் நாட்டத்தை நிறுத்திப் புதிய மனிதனாக அவர் மாறப்போவதில்லை என்பதையும் மருத்துவர் மறைக்கவில்லை. மிகுந்த யோசனைக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்தார் ஃப்ரீடா.
உறவைப் புதுப்பித்துக் கொள்வதோடு இருவருக்கிடையேயான திருமண உடன்படிக்கையையும் புதிதாக வரையறுத்துகொண்டனர். ஃப்ரீடா கணவரிடமிருந்து எந்தவிதமான பொருளுதவியையும் பெற்றுக்கொள்ளமாட்டார். வீட்டுச் செலவைச் சரிபாதியாக இருவரும் பகிர்ந்துகொள்ளவேண்டும். டீயகோவுடன் உடலுறவு கொள்ளமாட்டார். எதற்கும் மறுப்புச் சொல்லாமல் அப்படியே ஏற்றுக்கொண்டார் டீயகோ.
1940 டிசம்பர் 8ஆம் தேதி டீயகோவின் பிறந்தநாளன்று இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். திருமண வரவேற்போ வேறு கொண்டாட்டங்களோ எதுவுமில்லை. சொல்லப்போனால் திருமணப் பதிவு முடிந்ததும் டீயகோ சுவரோவியம் வரைந்துகொண்டிருந்த பணியிடத்துக்குச் சென்றுவிட்டார். திருமணத்துக்குப் பிறகு டீயகோவுடன் இரண்டு வாரம் தங்கியிருந்தார் ஃப்ரீடா. பிறகு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு மெக்சிகோ கிளம்பிச் சென்றார்.
1941 பிப்ரவரி மாதம் டிராட்ஸ்கியின் கொலையாளியைக் கைதுசெய்தனர். அதே நேரம் சான் ஃபிரான்சிஸ்கோவில் டீயகோ ஏற்றுக்கொண்டிருந்த ஓவியப் பணிகள் முடிவடைந்தன. ஃப்ரீடாவைச் சந்திக்கும் ஆவலுடன் மெக்சிகோ திரும்பினார் டீயகோ. இருவரும் கோயோயாகானிலிருந்த நீல வீட்டில் தங்குவதென்றும் சான் ஏஞ்சல் இல்லம் டீயகோவின் ஓவியத் தொழிற்கூடமாக இருக்குமென்றும் முடிவுசெய்தனர்.
டீயகோவின் வருகைக்காக அவரது அறையை ஒழுங்குசெய்து அழகுபடுத்தினார் ஃப்ரீடா. துணிமணியை வைக்கும் அலமாரி, எழுத்து மேசை, விருப்பமான அலங்காரப் பொருட்கள் எனப் பார்த்துப் பார்த்து அறைக்கலன்களைச் சீர்செய்தார். தேவைப்படும்போதெல்லாம் தோழியரோடு பொழுதைக் கழிப்பதற்கென டீயகோவின் சான் ஏஞ்சல் வீட்டிலும் ஒரு படுக்கையறை தயார்நிலையில் இருந்தது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
நீல வீட்டிற்கு அசூல் அனில் என்ற புதிய நிறத்தைத் தேர்வுசெய்தனர். தீய சக்திகள் அண்டாமல் இருக்க உதவுமென்றும் புதிய வாழ்க்கைக்கான உற்சாகத்தை வழங்குமென்றும் நம்பினர். மெக்சிகோ சிட்டியிலும் கோயோயாகானிலும் கடைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் நேரம் செலவிட்டார். குடியிருக்கும் வீட்டை அழகுபடுத்துவதையும் வீட்டுவேலைகளையும் பிரியத்தோடு செய்தார்.
சமையலறையைப் பாரம்பரிய மெக்சிகோ கிராமியப் பாணியில் சீரமைத்தார். குடியானவர்களின் வீட்டில் பயன்படுத்தும் ஓடுகளையும் விளக்குகளையும் பயன்படுத்தினார். சுவரில் வெகுமக்களின் கலைப்பொருட்களைக் கொண்டு அலங்கரித்தார். இழைக்கப்படாத மரத்தாலான மேசை, எளிமையான விரிப்பு, களிமண் கோப்பை, தட்டு என எல்லாவற்றிலும் மண்ணின் மணம் கமழ்ந்தது. இந்தப் பொருட்களை விற்கும் கடைக்காரர்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் தன்னாலான உதவிகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஃப்ரீடா தங்கத்தாலான பற்கள் ஒரு ஜோடியும் தங்கத்தில் வைரம் பதித்த பற்கள் ஒரு ஜோடியும் வைத்திருந்தார். அதில் தங்கப் பற்களைப் பாரம்பரியச் சிற்பங்களை விற்கும் பெண் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்.
வீட்டிலிருந்த செல்லப் பிராணிகளைக் கவனிப்பதிலும் இடைவிடாமல் வருகை புரிந்த விருந்தினர்களை உபசரிப்பதிலும் அவர்களுடன் அரசியல், கலை, வெட்டிப்பேச்சு என அளவளாவுவதிலும் நேரம் செலவிட்டார். டீயகோவுடன் கதை பேசுவது, விளையாடுவது, நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவது எனப் பொழுதைக் கழித்தார். ஒரு முறை டீயகோவும் ஃப்ரீடாவும் மற்ற நண்பர்களுடன் திரைப்படத்துக்குச் சென்றனர். வெளியே நின்ற கூட்டத்தில் ஃப்ரீடா சிக்கிக்கொண்டார். டீயகோ பாடலொன்றின் முதலடியைச் சீழ்க்கையடித்தார். உடனே கூட்டத்துக்கு நடுவிலிருந்து பாடலின் இரண்டாம் அடி ஒலித்தது; ஃப்ரீடாவேதான். பாடலைப் பாடியபடியே ஒருவரையொருவர் கண்டுபிடித்துவிட்டனர்.
இதற்கிடையே கோடைக்காலத்தில் ஃப்ரீடாவின் உடல்நிலை மீண்டும் மோசமானது. எடை குறைந்து உடல் மெலிந்து போனது. மருத்துவர் குழாமொன்று ஒவ்வொரு உபாதைக்கும் வெவ்வேறு சிகிச்சைகளை அளித்தது. கூடவே, ரஷ்யாவிலும் ஜெர்மனியிலும் நடந்த போர் உளச்சோர்வை ஏற்படுத்தியது. 1941ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஃப்ரீடாவின் தந்தை கில்லெர்மோ காலமானார். பெற்றோர் இருவரையும் இழந்தது ஃப்ரீடாவை அளவற்ற துயரில் ஆழ்த்தியது.
போரும் அழிவும் நோயும் மரணமும் சூழ்ந்த காலகட்டத்தில் நம்பிக்கையூட்டும் செயல்களில் ஈடுபடுவதே மீட்சிக்கான வழி. அதன்படி, டீயகோ புதிய செயல்திட்டமொன்றை முன்னெடுத்தார். இதுவரை தான் சேகரித்த ஸ்பானியர்களின் வருகைக்கு முந்தைய மெக்சிகோ பழங்குடிக் கலாசாரப் பொருட்களைப் பாதுகாக்கும் அருங்காட்சியகத்தை அமைப்பதில் ஆர்வம் கொண்டார். அது தொடர்பான பணிகளையும் கணக்கு வழக்குகளையும் ஃப்ரீடா பார்த்துக்கொண்டார். இப்படி டீயகோவின் செயலாளர், உதவியாளர், ஆவணக் காப்பாளர், சமையல்காரர் எனப் பல்வேறு வேலைகளை ஒற்றையாளாகச் செய்தார் ஃப்ரீடா.
இத்தனைக்கு நடுவிலும் ஓவியம் தீட்டுவதை நிறுத்தவில்லை. மெக்சிகோவிலும் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவிலும் அவருடைய படைப்புகளுக்குக் கிடைத்த வரவேற்பு ஊக்கமூட்டியது. புரவலர்கள், கலாசாரக் குழுக்களின் ஆதரவு, கருத்தரங்கம், கலை செயல்திட்டம் போன்றவற்றில் பங்குகொள்ள அழைப்பு, ஆய்வுக்கொடை, விருது, ஆசிரியப் பணி ஆகியவை அவருக்குரிய அங்கீகாரத்தை வழங்கித் தன்னம்பிக்கையூட்டின.
டீயகோவின் நிழலிலிருந்து வெளியேறித் தனக்கென அடையாளத்தைத் தேடிக்கொள்ளவேண்டுமென முனைப்புடன் செயல்பட்டார். தன்னோவியங்கள், நிலை ஓவியங்கள், நண்பர்கள், உறவினர்களின் உருவப் படங்கள் எனப் பலவாறாக வரைந்து வருவாய் ஈட்டினார். உடல்நிலை, இதர பொறுப்புகள், சீரற்ற வேலைமுறை ஆகியவற்றால் தொடர்ச்சியான வருமானம் வழங்கும் அளவுக்கு ஓவியங்களை வரையமுடியவில்லை. இதனால் மருத்துவம், உடல் பராமரிப்பு, வீட்டு நிர்வாகம், விருப்பமான பொருட்களை வாங்கிக் குவிப்பது என எல்லாச் செலவுகளையும் சமாளிக்க டீயகோவைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.
1942இல் மெக்சிகோ அரசின் கல்வித் துறை செமினாரியோ டி கல்ச்சுரா மெக்சிகானா என்ற அமைப்பை நிறுவியது. சொற்பொழிவுகள், கண்காட்சிகள், வெளியீடுகள் போன்ற செயல்பாடுகளின் வழியாக மெக்சிகோ கலாசாரத்தை வளர்ப்பதும் மக்களிடையே பரப்புவதும் அதன் நோக்கம். அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக ஃப்ரீடா நியமிக்கப்பட்டார். அமைப்பின் வெளியீடுகளில் தொடர்ந்து கட்டுரை எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.
ஒரு பக்கம் அங்கீகாரங்கள் கிடைத்தாலும் மற்றொரு பக்கம் ஃப்ரீடாவின் ஓவியங்களில் காணப்பட்ட வெளிப்படைத்தன்மையும் அதீத உணர்ச்சிகரமான சித்தரிப்பும் எல்லோருக்கும் ஏற்புடையதாக இல்லை. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் துயரும் வலியும் படைப்புகளில் வெளிப்பட்டன. 1938இல் டோரதி ஹேல் என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். டோரதியின் தாய்க்கு அவரின் நினைவாக உருவப்படம் ஒன்றை வரைந்து தருமாறு அவருடைய நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். ஃப்ரீடா அந்தப் பெண் உயர்மாடிக் கட்டிடத்திலிருந்து கீழே குதித்து இறந்து போகும் காட்சியைத் துல்லியமாக வரைந்தார் (The Suicide of Dorothy Hale). அதைப் பார்த்த டோரதியின் நண்பர் அதிர்ச்சியுற்றார். அந்த ஓவியத்தை டோரதியின் தாய் கண்ணில் படாதவாறு பார்த்துக்கொண்டார்.
1942இல் மெக்சிகோ அதிபரின் உணவு பரிமாறும் அறையில் மாட்டுவதற்காக ஓவியம் வரைந்து தருமாறு ஃப்ரீடாவிடம் கேட்டனர். பூ, பழம், காய்கறி போன்றவற்றை வரைந்தார் (Still Life, Round). ஆனால் ஃப்ரீடாவின் வழக்கப்படி அவற்றை மனித உடலின் உறுப்புகளைச் சுட்டுவதுபோன்ற தோற்றத்தில் தீட்டியிருந்தார். அதனால் அதிபரின் மனைவி அந்த ஓவியத்தை ஏற்க மறுத்தார். இன்னொரு பக்கம் ஓவியச் சேகரிப்பாளர்களையும் சுவைஞர்களையும் ஃப்ரீடாவுக்குப் பிடிக்கவில்லை, அதனால் அவருடைய ஓவியத்தை வாங்க முன்வந்த வேறு பலரை அவரே நிராகரித்தார். ‘பண்பட்டவர்கள், நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொண்டு அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுவபவர்களைவிடவும் காலணி தைப்பவர்கள், மரவேலை செய்பவர்களோடு நெருக்கமாகப் பழகமுடிகிறது,’ என்றார்.
1943ஆம் ஆண்டு முதல் பொது கல்வித் துறையின் ஓவிய, சிற்பக்கலைப் பள்ளியான லா எஸ்மெரால்டாவில் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார் ஃப்ரீடா. டீயகோ உட்பட மெக்சிகோவின் தலைசிறந்த ஓவியர்கள் மாணவர்களுக்கு ஓவியக்கலையின் நுட்பங்களை கற்பித்தனர். கணிதம், புவியியல், மொழிகள் எனப் பல பாடங்களையும் சொல்லிக்கொடுத்தனர். பெரும்பாலும் வறிய பின்னணியிலிருந்து வந்த கலையார்வம் கொண்ட குழந்தைகள் பின்னாளில் படைப்பூக்கம் கொண்டவர்களாக மிளிர்வதற்கான பயிற்சிகளை வழங்குவதுதான் பள்ளியின் குறிக்கோள்.
‘கற்றுத் தருவதா? யாருக்கும் எதையும் கற்றுத்தருவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.’ பள்ளிக்கு வந்த முதல் நாளன்று ஃப்ரீடா இப்படிச் சொன்னது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மாணவர்களும் சக ஆசிரியர்களும் அவரைச் சந்தேகத்தோடு பார்த்தனர். ஆனால் ஃப்ரீடா மாணவர்களைச் சரிசமமாக நடத்தினார், அவர்களுக்குத் தோழராகவும் தேவைப்பட்டால் சகோதரியாகவும் தாயாகவும்கூட மாறினார். அவருடைய மனதிலிருந்து வெளிப்பட்ட சொற்கள், பலகுரல் பேச்சு, அபிநயம், சிரிப்பு, நகைச்சுவை எல்லாமாக மாணவர்களையும் சக ஆசிரியர்களையும் நெருக்கமாக உணரச் செய்தது.
எதைக் கற்றுத்தரவேண்டும் என்ற திட்டமிட்ட வரைமுறையைப் பின்பற்றவில்லை ஃப்ரீடா. தன்னுடைய எண்ணம், கருத்து எதையும் குழந்தைகள்மீது திணிக்கவில்லை. மாறாக, மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றவாறு வரைவதை ஊக்குவித்தார். அவரவர் படைப்பை அவர்களே விமர்சனத்துக்கு உள்ளாக்குவது குறித்துக் கற்றுத் தந்தார். திருத்தங்களைச் சொல்லும்போது கனிவாக அதே சமயம் அது தன்னுடைய கருத்து மட்டுமே என்பதையும் தெளிவுபடுத்தினார். மாணவர்களின் மென்மையான படைப்பு மனம் நோகாதவாறு நடந்துகொண்டார்.
மாணவர்களை வகுப்பில் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைத்துக் கற்றுத்தருவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சந்தை, குடிசைப் பகுதி, தேவாலயங்கள், துறவிகள் வசிக்கும் மடம், பக்கத்து ஊர்கள், டெயோடீவாகான் பிரமிடுகள் என வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு காணும் காட்சிகளை வரையச் சொன்னார். போகும் வழியில் மெக்சிகோவின் பாரம்பரியப் பாடல்கள், புரட்சிப் பாடல்கள் போன்றவற்றைப் பாடக் கற்றுத் தந்தார்.
ஒரு சில மாதங்கள் கழிந்ததும் ஃப்ரீடாவின் உடல்நிலை மோசமானது. பள்ளிக்குச் சென்று வரும் பயணம் அயர்ச்சியூட்டியது. ஆனால் தன் பணியை விட்டுசெல்வதற்குப் பதில் சிறிய மாற்றமொன்றைச் செய்தார். மாணவர்களை கோயோயாகான் வீட்டுக்கு வரச் சொல்லி அவர்களுக்குக் கற்றுத்தரும் பணியைத் தொடர்ந்தார். மாணவர்களில் பலரால் அத்தனைத் தூரம் வரமுடியவில்லை. நான்கு பேர் மட்டுமே இறுதி வரையில் எஞ்சினார்கள். அந்த நால்வரும் பள்ளிக் கல்வி முடிந்த பிறகும் பல வருடங்களுக்கு ஃப்ரீடாவுடன் நெருக்கமாக இருந்தார்கள். அந்த மாணவர் குழு லாஸ் ஃப்ரீடோஸ் என்று அழைக்கப்பட்டது.
கோயோயாகான் வீட்டுக்கு வந்த மாணவர்களுக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை ஃப்ரீடா. தோட்டத்தில் இருக்கும் பூ, கனி, மரம், செடி, கொடி செல்லப் பிராணிகள் என்று மனதுக்குப் பிரியமான எதையும் மாதிரியாகக் கொண்டு வரையலாம் எனக் கூறினார். அவர் வீட்டு மேசையில் மலர், பழக்கூடை அலங்காரங்களைச் செய்யச் சொல்லிக்கொடுத்தார். பிறகு அதைப் பார்த்து வரையச் சொன்னார்.
கலைஞர்கள் ஏன் இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று சொன்னதோடு எதைப் படிக்கவேண்டும் என்றும் விளக்கினார். ஐரோப்பியர்களின் வருகைக்கு முந்தைய கலைதான் நவீன கலை வெளிப்பாடுகளின் ஆணிவேர் என்பதால் பாரம்பரிய மெக்சிகோ ஓவிய, சிற்பக் கலை வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று எடுத்துச் சொன்னார். ஓவியக் கலையோடு அரசியல், குறிப்பாக கம்யூனிஸச் சித்தாந்தம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர்களின் படைப்புகள் சமூக வாழ்க்கையைப் பிரதிபலிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாணவர்களில் சிலருக்குச் சுவரோவியம் வரைவதில் நாட்டமிருப்பதை அறிந்த ஃப்ரீடா அதற்கு வேறொரு ஏற்பாடைச் செய்தார். கோயோயாகான் வீட்டருகே இருந்த பாரம்பரிய மதுக் கடையின் சுவரில் ஓவியங்களை வரைவதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுத் தந்தார். அதற்கான வண்ணம், தூரிகைகள் ஆகியவற்றைத் தானே வாங்கிக் கொடுத்தார். ஓவியங்களை ஃப்ரீடாவும் டீயகோவும் அவ்வப்போது வந்து பார்த்து யோசனை சொல்லி மாணவர்களுக்கு வழிகாட்டினார். மெக்சிகோவின் தலைசிறந்த ஓவிய, இலக்கிய, இசை, திரைப்பட ஆளுமைகள் சுவரோவியத் திறப்பு விழாவுக்கு வருகைதந்து மாணவர்களைப் பாராட்டினர்.
மாணவர்களுக்குக் கற்பிப்பதோடு நின்று விடாமல் அவர்கள் தொழில்முறை ஓவியர்களாகப் பணிசெய்தவதற்கான உதவிகளையும் செய்தார் ஃப்ரீடா. லாஸ் ஃப்ரீடோஸ் குழு படிப்பை முடித்துக் கிளம்புகையில் மிகுந்த வருத்தமுற்றார். ‘அவரவர் வழியில் போனாலும் நம்முடைய தோழர்கள் என்பதால் நம்மை அவ்வப்போது வந்து சந்திப்பார்கள்,’ என்று ஆறுதல் சொன்னார் டீயகோ. லாஸ் ஃப்ரீடோஸ் குழு மாணவர்கள் ஃப்ரீடாவின் மரணத்துக்குப் பிறகும் இடது சாரி படைப்பாளர்களாகத் தொடர்ந்தார்கள்.
(தொடரும்)

