75 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை கிடைத்தது என்று வீட்டிலும் சாலையிலும் கொடியேற்றி, தங்கள் தேசபக்தியை நிரூபிக்கத் துடிக்கும் ஒவ்வொருவரும் தம் வீட்டுப் பெண்களிடம் இந்தக் கேள்வியை கேட்கவேண்டும். ‘அம்மா, சகோதரி, அன்பே… உங்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டதா? நீங்கள் சுதந்தரமாக இருப்பதாக உணர்கிறீர்களா?’
இந்த ஒற்றைக் கேள்விக்கான பதில் ‘இல்லை’ என்றே வரும் என்று உங்களுக்குத் தெரியும் என்பதால் நீங்கள் இந்தக் கேள்வியை அவர்களிடம் முன்வைக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.
‘பெண்ணியலாளராக இயங்குவது என்பது தன்னால் மேற்கொள்ளமுடியாத தெரிவுகளைப் பிற பெண்கள் எடுப்பதற்கான விடுதலையை அவர்களுக்கு பெற்றுத்தருவதே’ என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் லேனா டன்ஹாம்.
எனக்கு ஒன்று கிடைக்கவில்லை, அதனால் நான் அவதியுறுகிறேன். ஆனால் இன்னொரு பெண்ணுக்கு அதே ‘பொருள்’ மறுக்கப்படும்போது அவளுக்காக நான் போராடுவேன் என்பதே இந்தியப் பெண்ணியலாளர் ஒவ்வொருவருடைய நிலையாக இன்று இருக்கிறது.
மதம், சாதி, வர்க்கம், அரசு இவற்றைக் கொண்டு செலுத்தும் ஆணாதிக்கமே பெண்ணின் கருப்பை தொடங்கி கைப்பை வரை இன்று ஆட்சி செய்கிறது. அமெரிக்கா போன்ற ‘உலகின் முதல்நிலைக் குடியரசு’ நாட்டிலேயே கருப்பையின் உரிமை ஒரு பெண்ணுக்கு இல்லை எனில், இந்தியாவை என்னென்று சொல்ல? நூற்றாண்டுக்கு முன்பு சட்டப் பேரவையில் டாக்டர் முத்துலட்சுமி பேசிய கருத்து இன்றைய சூழலுக்கும் பொருந்துகிறது.
1920களில் நகராட்சி, மாவட்ட, உள்ளூர் மன்றங்களுக்கான தேர்தலில் பெண்கள் பங்கேற்க வழிவகை செய்யும் திருத்த மசோதா குறித்த சட்டமன்ற விவாதத்தில் பேசிய டாக்டர் முத்துலட்சுமி, ‘உண்மையில் ஒடுக்கப்பட்ட ஆண்களைவிட மோசமான நிலையில் இன்று இருப்பவர்கள் இந்துப் பெண்கள். எவ்வளவு படித்தாலும் பெண் ஆணுக்கு நிகராக வரமுடிவதில்லை. தேர்தலில் ஆண்கள் எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்ய முடியும், அதற்கான வழி அவர்களிடம் உள்ளது. ஆனால் பெண்கள் நிலை அப்படி அல்ல. பொருளாதார விடுதலை எங்களுக்கு இல்லை!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘தந்தை வழி சொத்தும் கிடைப்பதில்லை, கணவர் வழி சொத்தும் எங்களுக்கு இல்லை. சிறு வயதிலேயே மணம் முடித்து மனைவி, தாய் என்று எங்கள் வாழ்க்கையைக் கழிக்கிறோம். தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கும்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘ஆண் பெண்ணுக்கு நகை, பட்டு சேலை, கடற்கரைக்குச் செல்ல கார் போன்றவை தருகிறான். ஆனால் பெண் விடுதலை அதுவல்ல! வீடுகளில் ஆண் சொல்வதற்கு தலையாட்டும் பொம்மை போலத்தான் பெண் இருக்கிறாள். இன்னும் சில ஆண்டுகளில் பெண்களுக்கு கல்வியும் பொருளாதார விடுதலையும் கிடைக்கும்வரை, சொத்தில் ஆண்களுக்கு இணையாக சம பங்கு கிடைக்கும்வரை, இஸ்லாமிய மத முறை போல கணவன் சொத்தில் மனைவிக்கு பங்கு கிடைக்கும்வரை, தேர்தலில் பெண்களால் ஆண்களுக்கு இணையாகப் போட்டியிடமுடியாது’ எனவும் முத்துலட்சுமி கூறியுள்ளார்.
இன்றைய பெண்களின் மிகப்பெரிய சிக்கல் ‘அதிகார மையங்கள்’ அவர்கள் கையில் கிடைக்காமல் போவதே என்பது என் நம்பிக்கை. எந்த அலுவலகத்திலும் உயர் பதவிகளை அலங்கரிப்பவர்கள் ஆண்கள். அரசியல் அதிகாரத்தில் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் ஆண்கள். பணி – குடும்ப சமநிலையை தக்கவைப்பதே இங்கு பெண்ணுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.
பெரும்பாலும் பெண்களை உயர் பதவிகளுக்கு வரவிடாமல் தடுப்பதில் குடும்பம் புண்ணியம் கட்டிக்கொள்கிறது. அங்கங்கே ஒன்றிரண்டு ‘ஸ்டே அட் ஹோம்’ அப்பாக்கள் இருந்தாலும், அவர்களையும் குத்திக் குதறிப் பார்க்க ஆணாதிக்கச் சமூகம் தவறுவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் குடும்பப் பணி, ஊதியப் பணி என இரட்டைக் குதிரை சவாரி செய்ய வேண்டியுள்ளது. இதில் ஒன்று சறுக்கினாலும் ஊரும் சுற்றமும் அவளைத் தூற்றித் தள்ளிவிடும்.
குடும்பத்தில் சிக்கல் என்றால் அதற்குக் காரணம் ‘அவள் எப்போதும் அலுவலகம் வேலை என்று இருப்பதுதான்’. அலுவலகச் சிக்கல் எனில், ‘அவள் மண்டைக் கர்வம்தான் எல்லாவற்றுக்கும் காரணம்’. ஒரே பெண் அலுவலகத்திலும் வீட்டிலும் அகம்பாவம் பிடித்தவள் என்ற பெயரை சம்பாதித்துக்கொள்வது இன்று மிகச் சாதாரணம்.
குழந்தை வளர்ப்பு முதல் திருமணம் வரை இந்தியப் பெற்றோர் அந்த நான்கு பேரின் அறிவுரையை கேட்டுதான் நடக்கவேண்டியிருக்கிறது. விக்கிரமாதித்தின் தோள்மீது வேதாளம் தாவி ஏறி அமர்ந்துகொள்வது போல் ஒவ்வொரு பெண்ணின் தோளின்மீதும் சமூகம் ஏறி அமர்ந்துகொள்கிறது. அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறது. அவள் பேசும் ஒவ்வொரு சொல்லையும் உற்றுக் கேட்கிறது. ஒவ்வொரு செயலையும் மேற்பார்வையிடுகிறது. அந்த வேதாளத்தின் கட்டுப்பாட்டில்தான் அவள் காலம் முழுக்க வாழ்ந்தாகவேண்டும். அது என்ன கேள்வி கேட்டாலும் அவள் எத்தனை சாதுரியமாகப் பதில் சொன்னாலும் அது அவளை விடுவிக்கப்போவதில்லை.
தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் போட்டியிடும் உரிமை இருக்கிறது; மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் பெண் கல்விக்குப் பொருளாதார உதவித் திட்டத்தைச் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்திருக்கிறார்; பெண்களுக்குத் தந்தை சொத்தில் சம உரிமையை கலைஞர் ஆட்சி பெற்றுத் தந்தது. அந்த உரிமையை இப்போது முழு இந்தியாவும் பெற்றிருக்கிறது.
ஆனால், பெண் நினைக்கும் கல்வியைப் பெற முடிகிறதா? அரசியல் அதிகாரம் அரசியல் குடும்பத்துப் பெண்களுக்கு அன்றி பிற பெண்களுக்குச் சாத்தியம் ஆகியிருக்கிறதா? பெண்ணுக்குச் சொத்து தரும் சமூகம் அவளை இடித்து உரைக்காமல் அதை மனமுவந்து தருகிறதா?
யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்காமல் தன்னியல்பில் இயங்குவதுதான் விடுதலை. அப்படியொரு விடுதலையைப் பெற்றுவிட்டதாக இங்கு ஏதேனும் ஒரு பெண் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஒரு பெண்ணை எங்கேனும் நீங்கள் சந்தித்ததுண்டா? முதலில் சமையலறை என்ற சிறையிலிருந்து அவளுக்கு விடுதலை வழங்கி இருக்கிறோமா? ‘செத்துப் போவதானால்கூட ஒரு வாய் ரசம் சோறு போட்டுவிட்டு செத்துப்போ’ எனச் சொல்லும் வீடுகள் இங்குண்டு.
தலித் பெண் ஊராட்சித் தலைவர் அவரது உரிமையை விட்டுத் தராமல் நாட்டுக் கொடியை ஏற்ற முடிகிறதா? தன் ஊதியத்தை தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு செலவு செய்ய இங்கு பெண்ணுக்கு முழு உரிமை இருக்கிறதா? உங்களில் சரிபாதி அவள். நாட்டு மக்கள் தொகையில் சரிபாதி அவள். அவளை இன்னமும் காலில் போட்டு நசுக்கிக்கொண்டே எப்படி ஐயா வீடுகளில் கொடியேற்றி உங்களால் நாட்டு விடுதலையைக் கொண்டாடி, மகிழ முடிகிறது?
‘பெண் விடுதலையே சமூக விடுதலையின் அடையாளம்’ என்று பெண்ணியலாளர் ரோசா லக்சம்பர்க் குறிப்பிட்டுள்ளார். இந்த வரையறையைப் பொருத்திப் பார்த்தால் சாதிய ஆதிக்க வெறி, மத வெறி, வர்க்க வேறுபாடு நிறைந்துள்ள இன்றைய இந்தியச் சமூகம் உண்மையில் விடுதலை கண்டிருக்கிறதா? இந்தக் கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன். இதற்கான விடையை நீங்கள் தேடிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்றால் நீங்களும் எம் தோழரே!
0
குற்ற உணர்வுடன்தான் 75 ஆண்டு சுதந்திர கொண்டாட்டத்தைக் கடக்க வேண்டியிருக்கிறது!…
உண்மையில் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர்/ சமூக நீதிக்கான போராளி நினைவாக, ‘முத்துலட்சுமி (ரெட்டி) அம்மையார் தமிழ் நாடு மருத்துவப் பல்கலைக்கழகம்’ என்றுதான் பெயர் சூட்டப்பட்டிருக்க வேண்டும்…
நிவேதிதா லூயிஸ் கட்டுரை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது!