Skip to content
Home » ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #28 – பொரி ஆந்தையின் வேட்டை

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #28 – பொரி ஆந்தையின் வேட்டை

பொரி ஆந்தை

நான் முன்பே சொன்னது போல, பண்ணாரி சாலையில் நடைப் பயிற்சிக்குப் போவது எப்போதும் ஒரு சுகானுபவம் மற்றும் பறவைகளைப் பார்க்க நல்ல வாய்ப்பு. மற்றொரு ஈர்க்கக் கூடிய விஷயம், திரு. சுந்தரராமன் அவர்களது பண்ணைத் தோட்டத்தையும் பார்த்துவிட்டு வருவதோடு, சில நல்ல கருத்துச் செறிவு மிக்க உரையாடல்களையும் மேற்கொள்ளலாம்! அவர் இயற்கை விவசாயத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர்; தபோல்கர் மற்றும் நாராயண ரெட்டி போன்றோரைப் பின்பற்றி அறிவார்ந்த முறையில் விவசாயம் செய்பவர். நம்மாழ்வாருடன் ஆரம்பக் காலத்தில் இணைந்து இயற்கை விவசாயப் பட்டறைகளை நடத்தியவர். தற்போது தமிழ்நாடு விவசாயப் பல்கலை மாணவர்கள் வந்து இயற்கை விவசாயம் பயிலும்படி வசதிகள் செய்து தருபவர். தமிழகத்தில் மட்டுமின்றி, தென்னிந்திய மாநிலங்களில் இயற்கை விவசாயிகளால் நன்கு அறியப்பட்டவர். இயற்கை விவசாயத்தை மேலும் பரவச் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இயற்கை விவசாய முன்னோடிகளில் ஒருவர் என்றால் மிகையாகாது! அப்படித்தான் விவசாயம் குறித்து எந்தப் புரிதலும் இல்லாத நான் ஓரளவு மண்ணின் தன்மை; கரிம வளம்; கரிமப் பொருள்களின் உயிர்ச் சத்து மற்றும் உரமாகும் தன்மை போன்றவற்றைத் தெரிந்துகொண்டேன். விவசாயம் செய்யப் புகுந்தேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், இவற்றைப் பற்றிய நல்ல புரிதல் அடைந்தேன் என்று சொல்லலாம்!

பண்ணாரி சாலையில், ஊரில் இருந்து ஓர் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஒதுக்குப் புறமாக அமைந்துள்ளது சுந்தரராமன் அவர்களது தோட்டம். நெடுஞ்சாலையில் இருந்து திரும்பும் ஒரு பிரிவிலிருந்து அரை கிலோமீட்டர் உள்ளடங்கி இருக்கும். அங்கு மண்புழு படுக்கைகள், கோசாலை, கிணறு, சூரிய ஒளி அடுப்பு (சோலார் ட்ரையர்) மரங்கள் என்று எல்லாம் ஒரு தொகுப்பாக ஒன்றுக்கொன்று இட்டு நிரப்பும் பணியைச் செவ்வனே செய்யும்!

மாட்டுச் சாணம், மூத்திரம் உரக் கலவைகள் தயாரிக்கப் பயன்படும், நீரின் காரத் தன்மையைக் குறைக்கும் ஒரு கலவையைத் தயார் செய்ய உதவும்; மண்புழு படுக்கைகள் மண்ணின் வளத்தைக் கூட்டும் மேல் படுகையாகும்; மரத்தின் இலைகள், தழைகள் மக்கிய உரமாகும்; கிணற்று நீர் மழை நீருடன் சேர்ந்து நல்ல பாசன நீராகும். இப்படி அங்கு இருக்கும் எதுவும் வீணாகாமல் மறுசுழற்சியில் ஈடுபடுத்தப்படும். இது அல்லாது இந்தப் பத்து ஏக்கர் நிலத்தில், ஒரே வகைப் பயிர்கள் பயிரிடப்படாமல், பல வகைப் பயிர்கள் வளர்க்கப்படும். இது மண்ணின் வளம் குன்றாமல் இருக்க, பயன்படுத்தப்பட்ட பழங்கால முறை! இது குறித்துப் பேசத் தொடங்கினால், அது இயற்கை விவசாயம் பற்றிய ஒரு வகுப்பாகிவிடும்! நான் அங்கு என்ன வகைப் பறவைகளைப் பார்க்க முடியும் என்பதை மட்டும் நான் இதில் சொல்கிறேன்!

திரு. சுந்தரராமன் அவர்களது பண்ணைத் தோட்டம்

மண்புழு படுக்கைகள் இருப்பதால், அந்தக் கொட்டகையைச் சுற்றி மரங்கள் மற்றும் நிழல் இருக்கும். ஒரு சில மண்புழுக்கள் எப்படியும் வெளியே வந்துவிடும் அல்லது உலவிக் கொண்டிருக்கும். அது போதுமே பறவைகள் அங்கு வர! முக்கியமான விருந்தாளி, நமது வெண்தொண்டை மீன்கொத்தி. நான் முன்பே சொன்னதுபோல இவன் நீர்நிலைகளில் மட்டும் காணப்படுவது கிடையாது. பெரும்பாலும் ஊர்ப் புறத்தில்தான் காணப்படும். அவன் நாள் முழுவதும் அவ்வப்போது இங்கு வட்டமிட்டுக்கொண்டு இருப்பான். அடுத்தது, நம் கரிச்சான். இவனுக்கும் இங்கு இலகுவாக இரை கிடைப்பதால், அவ்வப்போது ஒரு வட்டமடிப்பான். இவை அல்லாது, தையல் சிட்டு, தேன் சிட்டு, புல்புல், சிலம்பன், குயில், மயில், வண்ணாத்திக் குருவி, நீள வால் காக்கை போன்றவற்றையும் காணலாம்.

சுந்தரராமனின் வீட்டுத் தாழ்வாரத்தின் எதிரில் இந்த மண்புழு படுக்கைகள் இருப்பதால், பறவைகளுக்கு எந்த வித இடைஞ்சலும் இன்றி நாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். என்ன, எல்லாப் பறவைகளும் ஒரே நேரத்தில் வராது. அவரவர் மனம் போல, தேவைக்கேற்ப வரும்; போகும். நாம் பொறுமையாக இருந்தால், நல்லவிதமாக பறவை நோக்கல் செய்யலாம். தாழ்வாரத்தின் ஒரு புறத்தில் சுந்தரராமன் அய்யா தேடி வருபவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருப்பார்! வகுப்புகள் பெரும்பாலும் முன்புறமுள்ள மற்றொரு கொட்டகையில்தான் நடக்கும். அதன் எதிரில் காய வைக்கும் களம் இருக்கிறது. அங்கு சிட்டுக் குருவிகளும், முனியாக்களும் (சில்லைகள்) சிதறிக் கிடக்கும் தானியங்களைப் பொறுக்கித் தின்று கொண்டிருக்கும். இவற்றுக்குத் துணையாக, மயில்களும், காகங்களும் இருக்கும்.

மண்புழு படுக்கைகள்

மரங்களில் பொன்முதுகு மரங்கொத்திகள் அங்குமிங்கும் ஓடியாடிக்கொண்டிருக்கும்; நீளவால் காக்கைகள் இனிய ஒலி எழுப்பிப் பாடிக்கொண்டிருக்கும். இதனால்தான் இவற்றைக் கோகிலா என்கின்றனர்! கிண்டலாகவும் சிலர் கோகிலத்வனி என்றும் சொல்வதுண்டு! எப்போதாவது ஒரு ஷிக்ரா எட்டிப் பார்க்கும். ஒரு தேன் பருந்து வட்டமிடும். ஏனெனில், கடைக் கோடியில் உள்ள நெடிய மரங்களில் தேனடை சில நேரங்களில் இருக்கும்! வயலில் தண்ணீர் தேங்கி நிற்கும் காலங்களில், கருடனும் வட்டமிட்டுப் பறக்கும். வயலில் இருக்கும் நண்டுகள், மற்றும் தவளைகளை அவை கொத்திச் செல்லும். கள்ளப் பருந்து என்றறியப்படும் ஊர்ப் பருந்து, இந்தப் பகுதிகளில் ஏனோ அதிகம் தென்படுவதில்லை. என்றோ ஒரு நாள் வெகு அபூர்வமாகத்தான் கண்ணில் படுகிறது. மற்ற வேட்டையாடிப் பறவைகளும் எளிதில் இங்குக் காணப்படுவதில்லை. என்றோ ஒரு நாள் நான் ஒரு குட்டை விரல் கழுகைப் பார்த்தேன். அவ்வளவுதான்.

மற்றபடி, இங்கு மாலை நேரங்களில் தவறாமல் பார்க்கக் கூடியது புள்ளி ஆந்தை! சிலர் அதைப் பொரி ஆந்தை என்றும் சொல்வதுண்டு. சாம்பல் நிறத்தில் புள்ளிகளுடன் ஒரு சின்னப் பந்து போல உருண்டையான உருவம் கொண்ட ஒரு சிறிய ஆந்தை. ஆந்தைகளுக்கே உரிய குணத்தால், அதிகாலை மற்றும் அந்தி நேரங்களில் மிகுதியாக வேட்டையாடும். ஒரு சில நேரங்களில் இவற்றைப் பகல் பொழுதிலும் மண்புழுக் கொட்டகையில் பார்க்கலாம். என்ன, காகம், மைனா போன்ற மற்ற பறவைகள் இல்லாத நேரமாக இருக்க வேண்டும்! இல்லை என்றால், அவை ஆந்தையை ஓட ஓட விரட்டும்! பாவம் ஆந்தை! தப்பித்தால் போதும் என்று இடத்தைக் காலி செய்து விடும்! இது போன்ற ஒரு நேரப் பங்கீடு, இயற்கை பறவைகளுக்குள் மோதலைத் தவிர்க்க ஏற்பாடு செய்தது என்றுதான் நான் சொல்வேன்! நீ பகலில், நான் இரவில் என்று!

மேலும், இரவில் நடமாடும் சில தீங்குயிரிகளை (நமக்குத்தான் தீங்குயிரிகள், மற்றபடி அவை இயற்கையின் சுழற்சியில் நல்லவை மற்றும் பங்கு வகிப்பவை!) கட்டுப்படுத்த ஆந்தைகள் பெருமளவில் உதவுகின்றன என்பது எல்லா இயற்பியலாளர்கள் கருத்து. உதாரணமாக, எலிகள், தேள்கள், பூரான்கள் போன்றவை இரவில்தான் அதிகம் நடமாடும். அவற்றின் எண்ணிக்கை கூடினால், எல்லோருக்கும் தொந்தரவுதான். ஆந்தைகள் அவற்றை வேட்டையாடுவதால், அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்காமல் சரியான விகிதத்தில் பராமரிக்கப்படுகிறது. இதுதான் இயற்கை கடைப்பிடிக்கும் சமநிலைத் தத்துவம். இது புரியாமல் நாம் நமக்குப் பயம் மற்றும் தீங்கு தரும் என்ற எண்ணத்தால், சில உயிரினங்களை அழித்து விடுகிறோம். விளைவு, மற்றொரு உயிரினம் அளவுக்கதிகமாகப் பெருகி, பெரும் இம்சையாகி விடுகிறது!

இப்போதைய நல்ல உதாரணம், மயில்கள்! ஒரு சில தசாப்தங்களுக்கு முன் வரை கட்டுக்குள் இருந்த அவற்றின் எண்ணிக்கை, இப்போது வரையறை இன்றிப் பெருகி விட்டது. எங்கெல்லாம் மயில்கள் இல்லாமல் இருந்தனவோ, அங்கெல்லாம் மயில்கள் பல்கிப் பெருகி விட்டன. காரணம், அவற்றைக் கட்டுப்படுத்தக் கூடிய சிறிய ஊனுண்ணிகள் இல்லாமல் போனதுதான்! அதாவது, நரிகள், உடும்புகள், முள்ளெலிகள் போன்றவை எல்லா இடங்களிலும் காணப்பட்டன. இப்போது அவற்றைக் காணக் காடுகளுக்குத்தான் போக வேண்டும்! இதன் விளைவாக மயில்கள் இஷ்டம்போல இனப்பெருக்கம் செய்து, நாட்டிலுள்ள பயிர் நிலங்களில் பெரும் சேதம் விளைவிக்கின்றன. இன்னும் சிறிது காலத்தில் இவற்றைத் தொல்லை தரும் விலங்கு என்று அறிவித்துக் காட்டுப் பன்றியைச் சுட அனுமதி கேட்பது போல, மயில்களையும் வேட்டையாட அனுமதி கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

அன்று சுந்தரராமன் அய்யாவின் தோட்டத்துக்குப் போனபோது, மாலை ஆறு மணி இருக்கும். தாளவாடி மணிகண்டன் வந்திருந்தார். அவர்கள் இருவரும் விவசாய முறைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் பொது விஷயங்களை அலசத் தொடங்கினோம். எம்.எஸ். ஸ்வாமிநாதனின் மறைவு பற்றிப் பேச்சு திரும்பியது. பசுமைப் புரட்சி என்ற பெயரில் விவசாயத்தைப் பாழ் செய்துவிட்டார் என்று அவர்களும், இல்லை அது காலத்தின் கோலம் என்று நான் பேச, விவாதம் சூடு பிடித்து, எப்போதும்போல ஒரு முடிவும் எட்டாமல் முடிந்தது!

மணிகண்டன், ‘சரி, வாங்க, போற வழியில் உங்களை இறக்கி விட்டுட்டுப் போகிறேன்’ என்றார். தாழ்வாரத்தின் சிமெண்ட் தரையைக் கடந்ததும் மண் பாதை; எதிரில் மண்புழுப் படுக்கைகள்; மற்ற பக்கங்களில் தோட்டம் அல்லது செடி கொடிகள். மண் தரைக்கு வந்து விடை பெற்றுக்கொண்டு வண்டியில் ஏறப் போகும்போது, ‘அய்யா, கீழே பார்த்து வாங்க. தேள் ஒன்று வருகிறது’ என்றார் மணிகண்டன். நன்றாக இருட்டிவிட்டது. தாழ்வார விளக்கின் ஒளி படர்ந்த இடம் வரை தேள் வந்த பின்தான் தெளிவாகப் பார்க்க முடிந்தது. நல்ல பெரிய கருந்தேள். கொடுக்கைத் தூக்கிப் பிடித்தவாறு விரைவாக எதிர் புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தை நோக்கி நகர்ந்தது! எனக்கும் தேளுக்கும் ஒரு சிறிய இடைவெளிதான்! ஆயினும், அதுவும் கிலேசம் அடையவில்லை; நானும் அலுங்காமல் இருந்தேன். சுந்தரராமன், ‘அது அப்படியே போயிடும். சும்மா விட்டுடுங்க’ என்றார். வேகமாக, அது விளக்கின் ஒளி வட்டத்தில் இருந்து விலகிச் சென்று கொண்டிருந்தது.

தேள் அந்த ஒளி வட்டத்தின் நிழலில் சென்று இருட்டுக்குள் நுழைந்தது. அந்த இடத்தின் இடது புறம், ஒரு முல்லைக் கொடியும், போகன் வில்லா கொடியும் பந்தல்போல படர்ந்திருக்கும். இருட்டுப் பகுதிக்குள் நுழைந்து சிறிது தூரமே சென்ற அந்தத் தேளை சடாரென்று பாய்ந்து ஒரு பறவை கொத்திக் கொண்டு போனது! யாரடா இந்த நேரத்தில் இப்படி ஒரு கிளைமாக்ஸ் கொடுத்தது என்று ஆச்சரியத்துடன் எல்லோரும் பார்த்தோம்! அது வரை அந்தக் கொடிகளில் மறைந்து இருந்த நம்ம பொரி ஆந்தைதான் என்பது புலனானது! ஒரு நொடி நேரத்தில் தனது உத்தியைச் செவ்வனே நிறைவேற்றிய ஆந்தையின் திறமையை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை! நாங்கள் எப்படித் தேளை கண்ணில் பட்ட நேரத்தில் இருந்து தொடர்ந்தோமோ, அதே போல இவனும் அமைதியாக போகன் வில்லா கொடியின் மறைவில் இருந்து கண்காணித்திருக்கிறான்! இருட்டில் வந்ததும் சடாரென்று பாய்ந்து கவ்விக்கொண்டு போய்விட்டான்! அவனது இடமான கிணற்றுக்கருகில் உள்ள மரத்தில் வைத்து அடித்துத் துவைத்த பின் சாப்பிட்டிருப்பான்!

இந்தத் தோட்டத்தில் இரண்டு ஜதை பொரி ஆந்தைகள் இருக்கின்றன என்பது என் அனுமானம். இயற்கையான பூச்சிக் கொல்லி ஆந்தைகள்! சின்னப் பூச்சிகள், பூரான்கள், தவிர சிறிய எலிகள், அரணைகள் என எல்லாவற்றையும் உண்டு இங்கே கொண்டாட்டமாக வாழ்கின்றன.

மணிகண்டனுடன் சேர்ந்து வீடு திரும்பிய பின்னும், அந்த மின்னல் வேக வேட்டையை மறக்க இயலவில்லை! அந்தக் கடைசி நிமிட வேகம், சரியான தருணத்தை நோக்கிக் காத்திருத்தல், மின்னல் வேகச் செயல்பாடு என்று எல்லாமே ஓர் அற்புதமான வனஉயிர் திரைப்படத்தைப் பார்த்ததுபோல இருந்தது! இன்னும் அந்தத் தாக்கம் போகவில்லை!

(தொடரும்)

பகிர:
nv-author-image

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

1 thought on “ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #28 – பொரி ஆந்தையின் வேட்டை”

 1. கனகதிலீபன் க

  அனுபவப் பகிர்வு. அழகியல் பதிவு.

  காணி நிலமும்; காக்கை குருவி எங்கள் ஜாதியும்
  கண் முன் நிழலாடிய நிதர்சன நிகழ்வு.

  பாரதியும், சுந்தரராமனும்,
  பண்ணையமும், பல்லுயிர் ஓம்புதலும்
  பாங்காய் அமைந்த பசுமைப் பிணைவு.

  வாழ்க! வாழ்க!!

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *