Skip to content
Home » காலத்தின் குரல் #14 – செய் அல்லது செத்து மடி!

காலத்தின் குரல் #14 – செய் அல்லது செத்து மடி!

செய் அல்லது செத்து மடி

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பதில் மகாத்மா காந்தி நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அவர் எதிர்நோக்கிய தீர்வு ஒன்றுதான். இந்திய தேசத்தின் விடுதலை.

இரண்டாம் உலகப்போரை காரணம் காட்டி கிடுக்கிப்பிடி தந்திரங்களை ஏவிவிட்டு, ஆங்கிலேய அரசு அடாவடித்தனமாய் இந்தியர்களை நசுக்கியது. அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களின் ஒப்புதல் இல்லாமலேயே பிரிட்டன் இந்தியாவைப் போர்க்களத்திற்கு அழைத்துச் சென்றது.‌ இந்த வடுவை ஆற்றுவதற்காக மார்ச் மாத வாக்கில் சமாதானம் பேச கிரிப்ஸ் தூதுக்குழுவை பிரிட்டன் அனுப்பிவைத்தது. நிபந்தனைகளோடு போருக்கு ஒப்புதல் தெரிவித்த காங்கிரஸ் கட்சியும் நிலையான சுதந்திர தேதி அறிவிக்கப்படாததால் பின்வாங்கியது. இந்தியர்கள் கொதித்தெழுந்தார்கள்.

ஜூலை 14ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் வர்தாவில் கூடியது. அங்கு பிரிட்டன் ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, பூரண சுதந்திரம் அடைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட ஒருமனதாக முடிவுசெய்தனர்.

இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவத்தை மண்ணின் தேவைக்கு ஏற்ப உணர்ச்சியூட்டும் வகையில் உரையாற்ற காந்தி தயாராய் இருந்தார்.

ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாயில் உள்ள கோவாலியா டாங்க் மைதானம் கூட்ட நெரிசலால் நிரம்பி வழிந்தது. தீர்மான உரையை வாசிப்பதற்கு முன்னாள் அதன் தேவையை இந்துஸ்தானியில் காந்தி மொழிந்தார். புகழ்ப்பெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் அரங்கேற்ற உரையில் முதல் பாதியாக இந்த உரை வரலாற்றில் இடம்பெறுகிறது.

தீர்மான உரையை வாசித்து, வாக்கெடுப்பு முடிந்த பின்னர் மீண்டும் அதன் தேவையை இந்துஸ்தானியில் பேசும் காந்தியின் புகழ்ப்பெற்ற உரையின் இரண்டாம் பாதியில்தான் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற வாசகம் இடம்பெறுகிறது.

காந்திக்கும் காந்தியத்திற்கும் அன்றைக்கு இருந்த சிக்கல்கள் இந்த உரையில் அப்பட்டமாகத் தெரிகின்றன. உலகளாவிய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் புதியதொரு அணுகுமுறையைக் கையாண்ட காந்தியின் மிக முக்கியமான உரை இது.

0

(தீர்மானம் பற்றிய பொது அபிப்பிராயங்களைப் பேசுகையில்)

தீர்மானத்தைப் பற்றி விவாதிப்பதற்கு முன், உங்களிடம் ஒன்றிரண்டு விஷயங்களைச் சொல்ல வேண்டும். மிகக் கவனமாகக் கேளுங்கள். நான் உங்களிடம் சொல்லும் அதே பக்குவத்தில் நீங்களும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் சொல்லும் கருத்தை எனது நிலையிலிருந்தே நீங்கள் பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால் அதை ஏற்கும் பட்சத்தில், அதன்படி செயல்புரிய நீங்கள் எத்தனிக்கப்படுவீர்கள். இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. 1920களில் பார்த்த அதே மனிதனாகத்தான் நான் இருக்கிறேனா, இல்லை மாறுதலுக்கு இடம் கொடுத்து விட்டேனா என்று சிலர் கேட்கிறார்கள். அவசியமான கேள்வி.

எது எப்படியோ, நான் இதை உங்களுக்கு விரைந்து சொல்கிறேன். நீங்கள் 1920களில் சந்தித்த அதே காந்தியாகத்தான் நான் இருக்கிறேன். எவ்வித அடிப்படை குணாம்சத்தையும் மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது வலியுறுத்தி வந்த அகிம்சை கொள்கைக்கு இன்றைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், அகிம்சை பற்றிய என் பார்வை முன்னைவிட வலுவாக வேர்ப்பிடித்திருக்கிறது. எந்தவிதத்திலும் இந்தத் தீர்மானம் முன்னர் பதிவாகிய என் எழுத்துக்கும் பேச்சுக்கும் முரண்பாடானது அல்ல.

இப்போது நிகழ்ந்திருக்கும்படியான சம்பவங்கள் எல்லோருக்கும் அமைவதில்லை. வரலாற்றில் ஓரிருவர் மட்டுமே அரிதாகச் சிக்கிக் கொள்கிறார்கள். நான் இன்று சொல்வதிலும் செய்வதிலும் புனிதத்துவமான அகிம்சை கொள்கை மட்டுமே அடிநாதமாய் இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். செயற்குழுவின் வரைவு அறிக்கையும், தற்போது நாம் வெளிப்படுத்தும் போராட்ட உத்திகளும் அகிம்சையின் வெளிச்சத்திலிருந்து உதயமானவை என்பதை மறந்துவிடக்கூடாது.

ஒருவேளை அகிம்சை கொள்கையில் நீங்கள் யாரேனும் நம்பிக்கை இழந்திருந்தாலோ, சோர்வு அடைந்திருந்தாலோ இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாய் வாக்குச் செலுத்த வேண்டாம். என் நிலையை உங்களுக்குத் தெளிவாக விளக்குகிறேன். கடவுள் எனக்கு விலைமதிப்பற்ற பரிசை அகிம்சையின் பெயரால் வழங்கியிருக்கிறார்.

நானும் எனது அகிம்சை கொள்கையும் இன்று சோதனைக்கு உள்ளாகியிருக்கிறோம். சண்டைச் சச்சரவுகள் மலிந்து உலகமே தீயின் நாக்குகளுக்கு இரையாகத் துடிக்கும்போது, விடுதலைக்கு ஏங்கும் இவர்களை இப்படியே தகிக்கவிட்டு, கடவுள் தந்த விஷேச சக்திகளை பிரயோகிக்காமல் போவது முறையாகுமா?

இதனால் நான் பெற்ற அருந்தவப் பரிசினைக் கொண்டு யாதொரு பயனும் இல்லை. கடவுள் என்னை மன்னிக்க மாட்டார். நான் இப்போது செயல்பட வேண்டும். ரஷ்யாவும் சீனாவும் அச்சுறுத்தப்படும்போது, நாம் வெறுமனே தயங்கி வேடிக்கைப் பார்க்க முடியாது.

நாம் அதிகாரத்திற்காகப் போராடவில்லை. சுதந்திரமான இந்திய தேசத்திற்காக அகிம்சை வழியில் போராடுகிறோம். இதுவே வன்முறை போராட்டம் என்றால், வெற்றியடைந்த கட்சியின் தலைமைப் பொறுப்பாளர் ராணுவ ஆட்சியென்ற பெயரில் சர்வாதிகாரத் தலைமை ஏற்பார். ஆனால் காங்கிரஸ் விவகாரத்தில், இன்னும் குறிப்பாக அகிம்சை விவகாரத்தில் சர்வாதிகாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சுதந்திரத்திற்காகப் போராடும் அகிம்சை வீரர், பேராசையின் பொருட்டு தன்பால் எதையும் சுருட்டிக் கொள்ள மாட்டார். நாட்டின் விடுதலை ஒன்றே அவர் கொண்ட லட்சியம். விடுதலை அடைந்தபிறகு இந்நாட்டை யார் ஆளவேண்டும் என்பதில் காங்கிரஸ் இன்னும் அசிரத்தையாகவே இருக்கிறது.

ஆட்சியதிகாரம் கிடைக்கும்போது ஒட்டுமொத்த மக்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். தங்களை யார் ஆளவேண்டும் என்பதை மக்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை பார்ஸிகளின் கையில் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படலாம். இல்லையென்றால் நான் விரும்புவதைப் போல இன்றைய காங்கிரஸ் கூட்டத்தில் நாம் கேள்விப்படாத வேறு ஒருவரின் கைகளில் இந்தப் பதவி அதிகாரத்தை நாம் ஒப்படைக்கலாம்.‌

அப்போது வந்து, ‘இந்தச் சமூகம் மிகச் சிறுபான்மையானது. சுதந்திரப் போராட்டத்தில் அந்தக் கட்சி பெரும்பங்காற்றவில்லையே, அதற்கு ஏன் முழு அதிகாரம்?’ என்று கேள்வியெழுப்பக் கூடாது. தொடக்கக் காலத்தில் இருந்தே, வகுப்புவாத பிரச்னைகளை காங்கிரஸ் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. எதற்கும் ஆட்படாமல், ஒட்டுமொத்த தேசம் என்ற பெருங்கனவுப் பார்வையில் தன்னை லட்சியப்படுத்தி அதற்கேற்றார்போல் செயல்பட்டு வருகிறது.

இன்று நாம் பின்பற்றும் கொள்கையில் குறைபாடு இருக்கிறது. அகிம்சையில் இருந்து நெடுந்தூரம் விலகியிருக்கிறோம். ஆனால் உண்மையான அகிம்சையில் குறைபாடும் இல்லை; அதைப் பின்பற்றுபவர்களுக்குத் தோல்வியும் இல்லை.

நம்மிடம் சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெரும் விஷயங்கள் சாத்தியப்படும் என்ற உத்வேகம் பிறக்கிறது. 22 ஆண்டுகளாய் அமைதிப் பூத்துக் கிடக்கும் நம் போராட்டங்களுக்கும்; இடைவிடாத நம் முயற்சிகளுக்கும் கடவுள் கருணை காட்டி மகுடம் சூட்டுவார் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

உலக வரலாற்றிலேயே, சுதந்திரத்திற்காக அரங்கேறிய நேர்த்தியான ஜனநாயகப் போராட்டம் நம்முடையதுதான். சிறையில் இருந்தபோது கார்லைல் எழுதிய ‘பிரெஞ்சுப் புரட்சி’ புத்தகத்தை வாசித்தேன். ரஷ்யப் புரட்சி பற்றி பண்டித ஜவாஹர்லால் நேரு எனக்குக் கொஞ்சம் சொல்லியிருக்கிறார். என்னுடைய புரிதலின்படி, ஆயுதம் ஏந்தி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய இவர்கள், ஜனநாயகக் கொள்கையை மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நான் மனத்தில் எண்ணியுள்ள; அகிம்சை வழியில் நாம் அடையப் போகும் இந்த ஜனநாயகம் சரிசமமான விடுதலையை நாமெல்லோருக்கும் வழங்கும். உங்களுக்கு நீங்கள்தான் ராஜா. நான் அழைக்கும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதில்தான் எல்லா வெற்றிகளும் அடங்கியிருக்கின்றன. இதை உணர்ந்துகொண்டால் இந்து முஸ்லிம் என்ற பாகுபாடு களைந்து, இந்தியர்களாய் ஒன்றிணைந்து சுதந்திரத்திற்காகப் போராடுவீர்கள்.

பிரிட்டிஷாரை அணுகுவது குறித்து சில கேள்விகள் இருக்கின்றன. மக்களுக்கு பிரிட்டிஷார் மீது வெறுப்பு உண்டாகியிருக்கிறது. அவர்களின் நடத்தை அருவருப்பூட்டுவதாகச் சிலருக்கு இருக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் பிரிட்டன் மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அவர்கள் காண்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான். இந்த வெறுப்பினால் ஜப்பானியர்களை வரவேற்கவும் தயங்க மாட்டார்கள். இது முன்னதைக் காட்டிலும் அதிபயங்கரமானது.

வெறும் அடிமை முறையின் எஜமான மாற்றமாகவே இது இருக்கும். இந்த உணர்விலிருந்து நாம் விடுபட வேண்டும். நாம் எதிர்ப்பது பிரிட்டிஷார்களை அல்ல, அவர்கள் பின்பற்றும் ஏகாதிபத்தியத்தை. கோபம் கொள்வதால் அதிகார மாற்றம் நிகழ்ந்துவிடாது. தற்போதைய இக்கட்டான சூழலில் இந்தியா தனது பங்கை ஆற்றுவதற்கான உரிய நேரம் இது.

போர்முனையில் பிரிட்டன் சண்டை செய்து கொண்டிருக்கும்போது, வெறுமனே பணமும் பொருளும் கொடுத்து உதவி செய்வது இந்தியா போன்ற பெரும் தேசத்திற்கு உகந்தது அல்ல. சுதந்திரம் அடைவதற்கு முன்பு வீர உணர்வையும்; தியாக உணர்வையும் நம்மால் துளியும் தூண்ட முடியாது. எல்லையில்லாத தியாகங்கள் செய்து நம்மை அர்ப்பணித்துக் கொண்டால், பிரிட்டிஷ் அரசால் சுதந்திரம் தராமல் இருந்துவிட முடியுமா?

வெறுப்புணர்வில் இருந்து நம்மை மீட்டுக்கொள்ள வேண்டும். என்னளவில் இதுவரை நான் யாரையும் வெறுத்தது இல்லை. உண்மையில் முன்னெப்போதையும் விட பிரிட்டிஷாரின் மிக நெருங்கிய நண்பனாக இப்போது உணர்கிறேன்.

இன்று அவர்கள் துன்பத்திற்கு ஆளாயிருக்கிறார்கள். அவர்கள் செய்த குற்றத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நட்பு ரீதியில் துளிர்க்கிறது. நிலைமையை ஆழமாகப் பார்க்கும்போது, அவர்கள் படுகுழியின் விளிம்பில் சிக்கியிருப்பதாய் தெரிகிறது. நட்பிற்காக விரித்த கரங்களை, குற்றத்தைச் சுட்டிக்காட்ட பயன்படுத்த விழைகிறோம். இது பிரிட்டிஷாரைக் கோபப்படுத்தலாம். ஆனாலும் இது நம் கடமை. செய்துதான் ஆக வேண்டும்.

மக்கள் சிரிக்கலாம். இருந்தாலும் இதுதான் என்‌ முடிவு. என் வாழ்வின் மிகப்பெரிய போராட்டத்தை நான் முன்னெடுக்கும் போது, நான் யார் மீதும் வெறுப்புகொள்ளாதவனாய் இருப்பது அவசியம் என்று கருதுகிறேன்.‌

0

(தீர்மானம் நிறைவேற்றிய பிறகு)

நீங்கள் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்திற்கு என் வாழ்த்துகளைப் பகிர்கிறேன். இந்தத் தீர்மானத்தின் மீது ஏகோபித்த வரவேற்பு இருந்தாலும்கூட மூன்று தோழர்கள், சில திருத்தங்களைச் சுட்டியிருக்கிறார்கள்; பதிமூன்று பேர் தீர்மானத்திற்கு எதிராக வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். நான் அவர்களையும் பாராட்டுகிறேன். இதில் அவர்கள் வெட்கப்பட என்ன இருக்கிறது. கடந்த இருபது வருடங்களாக நாம் இதற்குப் பழகிப்போயிருக்கிறோம்.

நம்பிக்கையில்லாமல் தனித்து நிற்கும் போதும், மக்கள் நம்மைப் பார்த்து ஏளனம் செய்யும்போதும் தைரியத்தை கைவிடாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் செய்வது சரி என்று எடுத்த காரியத்தை நம்பிக்கையோடு கடைப்பிடித்திருக்கிறோம்.

ஐம்பது வருடங்களுக்கும் மேலாய் நான் கடைப்பிடிக்க நினைக்கும் கொள்கையை, இந்தத் தோழர்கள் எளிதில் தன்வயப்படுத்தி உள்ளார்கள். அவர்கள் தைரியத்தை மெச்சுகிறேன்.

ஆனால் திருத்தங்களோடுதான் இந்தத் தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்று இப்போது சொல்வது முறையல்ல. இந்த நண்பர்கள் தங்கள் திருத்தங்களைத் திரும்பப் பெறுமாறு மௌலானாவிடம் செய்த வேண்டுகோளைப் பற்றி சிந்தித்திருக்க வேண்டும்; ஜவாஹர்லால் கூறிய விளக்கங்களை அவர்கள் கவனமாய்ப் பின்பற்றியிருக்க வேண்டும்.

அவர்கள் அப்படிச் செய்திருந்தால், இப்போது காங்கிரஸ் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரும் உரிமை, காங்கிரஸால் ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும்.

ஒவ்வொரு முசல்மானும் இந்தியாவைத் தன் தாய்நாடாக மதித்த காலம் ஒன்று இருந்தது. அப்போது அலி சகோதரர்கள் என்னோடு இருந்தார்கள். அவர்களின் பேச்சும் நடத்தையும் ஒன்றைத்தான் பிரதிபலித்தது. ‘இந்தியா இந்துக்களுக்கு எப்படியோ, அப்படித்தான் முசல்மான்களுக்கும்.’

இது அவர்களின் உள்ளார்ந்த நம்பிக்கையே அன்றி, வெளிப்பூச்சான முகமூடி அல்ல. அவர்களோடு பலகாலம் வாழ்ந்ததன் பேரில் என்னால் இதை உறுதிபடச் சொல்லமுடியும். பல இரவுகள் அவர்களோடு இருந்திருக்கிறேன். ஒவ்வொரு உரையாடலும் ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடாய் இருந்தது.

முகத்தோற்றத்தைக் கண்டு எளிதில் ஏமாறக்கூடிய மனிதன் என்று என்னைச் சிலர் சொல்கிறார்கள். நான்‌ அந்த அளவுக்கு ஏமாளி அல்ல. இருந்தாலும் இந்த விமர்சனங்களால் நான் காயப்படுவதில்லை. ஏமாற்றுக்காரன் என்பதைவிட ஏமாளியாய் இருப்பது நல்லது.

கம்யூனிஸ்ட் நண்பர்கள் முன்வைத்த சட்டத்திருத்தத்தில் புதிதாக ஒன்றும் இல்லை. ஆயிரம் மேடைகளில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் அதே கோரிக்கைதான். ‘இந்து – முஸ்லிம் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு வேண்டினால், அது நான் உயிரோடு இருக்கும்போது கிட்டினால்தான் உண்டு’ என்று ஆயிரக்கணக்கான முஸல்மான்கள் என்னிடம் சொல்லிவிட்டார்கள்.

இதைக் கேட்டு நான் முகஸ்துதி அடைய வேண்டும். ஆனால் ஈர்ப்பில்லாத ஒப்புதலை நான் எப்படி ஏற்றுக்கொள்வது? இந்து – முஸ்லிம் ஒற்றுமை என்பது இன்று நேற்று கதையல்ல. லட்சக்கணக்கான இந்துக்களும் முஸ்லிம்களும் அதைத் தேடி அலைந்திருக்கிறார்கள். எனது பிள்ளைப் பருவத்திலிருந்தே, நான் இதைக் கவனமோடு கையாண்டிருக்கிறேன். முஸ்லிம் – பார்ஸி நண்பர்கள் இடையே நட்புறவு ஏற்படுத்த முனைந்திருக்கிறேன்.

மாற்றுச் சமூக மக்களோடு அமைதியோடும் இணக்கத்தோடும் வாழ விரும்பினால், விடாப்பிடியாய் அயலாரோடு நட்பு பாராட்ட வேண்டும் என்பதை அந்த இளம் வயதிலும் நன்றாக உணர்ந்திருந்தேன். இந்துக்களோடு நட்புப் பாராட்ட நான் எவ்விதச் சிறப்பு முயற்சிகளும் மேற்கோள்ளவில்லை. மாறாய் முசல்மான்களைத் தேடித் தேடி அன்பு செய்தேன்.

நான் தென்னாப்பிரிக்கா சென்றதுகூட ஒரு முசல்மானின் அறிவுறுத்தலால் ஏற்பட்ட பயணம். அங்கு சென்ற பிறகு எதிர்க்கட்சிக்காரர் என்றாலும் பல முசல்மான்களை நண்பராக்கிக் கொண்டேன். ஒற்றுமைக்காக அங்கு எனக்கு நல்ல பெயர் உருவானது. எனது நட்பு வட்டத்தில் பல முஸ்லிம் சகோதரர்களும் பார்சி நண்பர்களும் இருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் மீளாத துன்பத்தை ஏற்படுத்தி கண்ணீர் சொரியவிட்டுத்தான் இந்தியா வந்தடைந்தேன்.

இந்தியாவிலும் அந்த நட்புப் படலம் தொடர்ந்தது. கருங்கற்களையும் உருகவைத்து நட்பு ஏற்படுத்திக் கொண்டேன். கிலாபத் இயக்கத்தில் உள்ள முசல்மான்களுக்கு என் முழு ஒத்துழைப்பை நல்குவது வாழ்வின் பெரும் லட்சியமாய் இருந்தது. நாடெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் என்னை உண்மையான நண்பனாய் ஏற்றுக்கொண்டார்கள்.

அப்படியிருந்த என்னை இத்தனைக் கொடூரமாய், வெறுக்கப்படும் மனிதனாய் சித்திரிப்பதற்கு என்ன காரணம்? கிலாபத் இயக்கத்தை ஆதரிப்பதில் எனக்கு என்ன சுயநலம் இருக்க வேண்டும்?

உண்மைதான். பசுவைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் என் ஆழ்மனத்தில் இருக்கிறது. நான் பசுவை வணங்குகிறேன். பசுவைப் படைத்தவரும் என்னைப் படைத்தவரும் ஒருவர்தான். என் உயிரை ஈடாக வைத்தாவது, பசுவதையைத் தடுக்க நான் ஆசைப்படுகிறேன்.

என் தனிப்பட்ட வாழ்வில் எத்தனையோ முரண்பாடுகளும் கருத்தாக்கங்களும் இருந்தாலும், நான் அந்த இயக்கத்தில் வாக்குவாதம் செய்யாமல் சேர்ந்து கொண்டேன். எனது அருகாமையில் உள்ள சகோதரன் சோகத்தில் துடிக்கிறான், அவன் கண்ணீரைத் துடைப்பதில் எனக்கும் அக்கறை இருக்கிறது என்பதைச் சொல்ல கிலாபத் இயக்கத்தை நான் பயன்படுத்தினேன். ஒருவேளை அலி சகோதரர்கள் இன்று உயிரோடு இருந்திருந்தால், இந்தக் கூற்றுக்கு சாட்சியம் அளிக்க வந்திருப்பார்கள்.

பசுவதையைத் தடுக்கும் பொறுப்பு என்மீது விதிக்கப்படவில்லை என்று பலர் துணைக்கு நிற்பார்கள். கிலாபத் இயக்கத்தைப் போல, பசுவதைப் பற்றிய சிந்தனைகளும் தனி மனிதரின் சுய விருப்பு – வெறுப்புக்கு ஆட்பட்டது. ஒரு நேர்மையான மனிதனாய், உண்மையான சகோதரனாய், விசுவாசம் மிக்க நண்பனாய் முசல்மான்களின் குரலாய் ஒலிக்க காலம் என்னை நிலைநிறுத்தியது.

அப்போதெல்லாம் இரவு உணவு வேளையில் இந்துக்களை நான் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறேன். நல்லவேளையாய் அதற்கு அவர்கள் இப்போது நன்றாகப் பழகிவிட்டார்கள்.

‘என்னை ஒரு நாள் மோசமாகக் குற்றம் சாட்டுவார்கள் என்ற பயத்திலேயே உங்களோடு உணவு உண்பதை நான் தவிர்த்துவிடுகிறேன்’ என்று மௌலானா பாரி என்னிடம் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு அவரோடு தங்கும் சூழல் ஏற்பட்டால், பிரத்தியேகமாக ஒரு பிராமண சமையல்காரரைப் பணிக்கு அமர்த்தி தனியாக உணவு ஏற்பாடு செய்துவிடுவார்.

அவர் தங்கியிருக்கும் ‘ஃபிராங்கி மஹால்’ கட்டடம் பழைய பாணியில் போதுமான வசதிகளோடு அமைந்திருந்தது. ஆனாலும் அவர் எல்லா கஷ்டங்களையும் மகிழ்ச்சியுடன் தாங்கிக்கொண்டு, என்னால் அவரை விரட்ட முடியாது என்று தீர்மானமாய் மறுத்துவிட்டார்.

ஒருவருக்கு ஒருவர் மாற்றாரின் சமய நம்பிக்கைகளை மதித்துப் போற்றினர். யார் மனத்திலும் கள்ளம் இல்லை. இந்தக் கண்ணியமும் மகோன்னதமும் இப்போது எங்கே போயின? குவாத்-ஐ-ஆசாம் ஜின்னா உட்பட எல்லா முசல்மான்களிடமும் நான் ஒன்றைக் கேட்கவேண்டும். இப்பேர்பட்ட மகிழ்ச்சிகரமான நாட்களில் யார் இன்று முட்டுக்கட்டை போட்டது? ஒருகாலத்தில் ஜின்னாவும் காங்கிரஸ்காரராய் இருந்தவர்தான். அவரே காங்கிரஸ் மீது கோபப்படுகிறார் என்றால், சந்தேகம் எனும் புற்றுநோய் அவர் உடல் முழுதும் பரவியிருக்கிறது. கடவுள் அவரை ஆசீர்வதிப்பாராக.

நான் இறந்தபிறகு அவர் உண்மையை உணர்ந்து கொண்டால், முசல்மான்களை நான் ஓரங்கட்டவில்லை என்றும் அவர்கள் ஏமாற்றப்படவில்லை என்றும் ஜின்னா புரிந்துகொள்வார். ஒருவேளை நான் அவர்களை துன்புறுத்தி, நயவஞ்சகமாய் ஏமாற்றியிருந்தால்?

எனது வாழ்க்கையை அவர்கள் வசம் ஒப்படைக்கிறேன். தங்கள் விருப்பப்படி அவர்கள் எனக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இதுவரை என்னை நிறைய பேர் தாக்கியிருக்கிறார்கள். ஆனால் கடவுள் புண்ணியத்தில் நன்றாக இருக்கிறேன். தாக்கியவர்களும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். ஓர் அயோக்கியனை அழிப்பதாய்ச் சொல்லி யாராவது என்னைச் சுட்டுக் கொல்ல முயன்றால் இறந்துபோவது காந்தி அல்ல, எனது உருவத்தில் அவருக்கு தோன்றிய அயோக்கியன்தான்.

இரண்டாம் பாகத்தை இங்கே வாசிக்கலாம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *