Skip to content
Home » காலத்தின் குரல் #15 – செய் அல்லது செத்து மடி! – 2

காலத்தின் குரல் #15 – செய் அல்லது செத்து மடி! – 2

செய் அல்லது செத்து மடி

முதல் பாகத்தை இங்கே வாசிக்கலாம்.

மோசடி செய்யவும் இழிவுப்படுத்தவும் களத்தில் இறங்குபவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், ‘எதிரியைக்கூட நிந்திக்கக் கூடாது என இஸ்லாம் வலியுறுத்துகிறது. நபிகள் நாயகம் தன் எதிரிகளை அன்பால் அரவணைத்து, பெருந்தன்மையால் வென்றெடுத்தவர். நீங்கள் எல்லாம் அப்பேர்ப்பட்ட இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களா இல்லை வேறெதுவுமா? நீங்கள் உண்மையான முஸ்லிமாக இருந்தும், என் விசுவாத்தை பகிரங்கமாய் அம்பலப்படுத்திய பின்னர் நம்ப மறுக்கலாமா? உற்ற நண்பனாய் இருந்து, நம் நலத்தைப் பாதுகாத்த ஒருவனை அநியாயமாய் இழந்துவிட்டோமே என்று ஒருநாள் நீங்கள் நிச்சயம் வருத்தப்படுவீர்கள்.’

நான் எவ்வளவு தூரம் முறையிடுகிறேனோ, எவ்வளவுக்கு எவ்வளவு மௌலானாவைப் பற்றி பேசுகிறேனோ, அவ்வளவு துரிதமாய் என்னை இழிவுப்படுத்தும் பிரசாரம் வளர்ச்சி பெறுவதை காண்கிறேன். இந்த இழிவுரைகள் எல்லாம் எனக்கு தோட்டாக்கள் போல. ஒருவேளை நான் இதனால் இறந்துகூடப் போகலாம். ஆனால் என்னை காயப்படுத்த முடியாது. என்னை இழிவுபடுத்துபவர்களுக்கு இதனால் என்ன ஆதாயம்? அவர்களால் இஸ்லாத்துக்குதான் இழுக்கு. இஸ்லாமின் அப்பழுக்கற்ற தன்மைக்கு, தயவு செய்து அவப்பெயர் சேர்ப்பதை அடியோடு விடுங்கள் என்று மன்றாடிக் கேட்கிறேன்.

இந்தத் துஷ்பிரயோகங்களுக்கு எல்லாம் மௌலானா சாகேப் மிக மோசமாய் இலக்காவது ஏன் என்று தெரியுமா? ஏனென்றால் அவர் தன் நட்பின் அழுத்தத்தை என் மீது செலுத்த மறுக்கிறார். தனக்குப் பொய் என்று தெரிந்த ஒன்றை தன் நண்பனிடம் உண்மை என சொல்லி வற்புறுத்துவது நட்பின் தவறான பிரயோகம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.

காயித்-இ-ஆசாமிடம் (முகமது அலி ஜின்னா) நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ‘தனி பாகிஸ்தான் வேண்டுவதில் எது உண்மை, எது நியாயம் என்பது உங்களுக்கே தெரியும். தேவை சரியானதாய் இருந்தால், அது உங்களுக்கு வழங்கப்படும். ஆனால் ஒருவன் பொய் பிரசாரம் செய்து, அதனைப் பிறர் மீது திணித்தால் அதற்கான பலனை நெடுநாட்கள் அனுபவிக்க முடியாது. கடவுள் அதிலிருந்து விலகி, பொய்ப் பிரசாரங்கள் செய்வதை வெறுக்கிறார்.’

காயித்-இ- ஆசாம் கசப்பான செய்திகளைச் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாய் சொல்கிறார்.‌ ஆனால் இது அவர் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த உதவாது. நானும் அதேபோல் ஒன்று சொல்கிறேன்: ‘என்னை முசல்மான்களின் நண்பணாகக் கருதும்போது, அவர்களுக்கு மனம் ஒவ்வாத செய்தியாய் இருந்தாலும் என் மனதில்பட்ட சில விஷயங்களைச் சொல்லலாம் அல்லவா? என் ஆழ்மன அபிப்பிராயங்களை அவர்களிடம் இருந்து எப்படி மறைக்க முடியும்? கேட்பவர்களுக்கு கசப்பாய் இருந்தாலும், தன் மனதில் பட்டவற்றை அப்பட்டமாய் சொன்ன காயித்-இ-ஆசாம் அவர்களைப் பாராட்டுகிறேன்.

ஆனால் அவரை நேருக்கு நேர் பார்க்காத முசல்மான்கள் இங்கிருக்கிறார்கள். அவர்கள் ஏன் நிந்திக்கப்பட வேண்டும்? கோடிக்கணக்கான முசல்மான்கள் உங்கள்பின் வந்தால், உங்களைச் சுற்றியிருக்கும் சில வழிகெட்டுப்போன முசல்மான்களை புறக்கணிக்க முடியாதா? கோடிக்கணக்கான மக்களை தன்வயப்படுத்தி இருக்கும் ஒருவர் பெரும்பான்மை சமூகத்தைப் பற்றியோ அல்லது சிறுபான்மையினர் பெரும்பான்மையிரால் மூழ்கடிக்கப்படுவார்கள் என்றோ ஏன் பயப்பட வேண்டும்?

அரேபியர்களுக்கும் முசல்மான்களுக்கும் மத்தியில் நபிகள் எவ்வாறு பணி செய்தார்? தனக்கு பெரும்பான்மை கிடைத்தால்தான் இஸ்லாத்தைப் பரப்புவேன் என்று சூளுரை செய்தாரா? இஸ்லாமின் நன்மைக்காக நான் சொல்வதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்பிக்கை இல்லாவிட்டாலும், கொள்கைகளுக்கு மாறாக நடந்தாலும், காங்கிரஸ் ஒரு விஷயத்தை ஏற்க வேண்டும் என்று சொல்வதில் நியாயமோ தர்மமோ கிடையாது.

ஒருமுறை ராஜாஜி அவர்கள், ‘எனக்கு தனி பாகிஸ்தானில் நம்பிக்கை கிடையாது. ஆனால் முசல்மான்கள் விரும்புகிறார்கள். திரு. ஜின்னா அவர்களும் விரும்புகிறார். சுலபத்தில் இது ஆவேசமான கோரிக்கையாகி விட்டது. நாம் ஏன் அவர்களுக்கு தற்காலிகமாய் ‘சரி’ என்று சொல்லக் கூடாது? சில காலம் கடந்த பின்னர் இதே ஜின்னா அவர்கள், தனி பாகிஸ்தானின் தேவையின்மையைப் புரிந்துக்கொண்டு கோரிக்கையை விட்டுவிடுவார்’ என்று சொன்னார்.

உடனே நான், ‘பொய்யான ஒன்றை உண்மையென ஒப்புக்கொள்வது சரியில்லை. மேலும் நேரம் வரும்போது கொடுத்த தீர்மானத்தை நிறைவேற்றச் சொல்லி அழுத்தம் வராது என்பதற்கு என்ன ஆதாரம்? நியாயமான கோரிக்கை என்றால், கேட்ட மறுகணமே ஒப்புதல் தந்திருப்பேன். ஜின்னா சாகேப்பைச் சமாதானம் செய்யும் பொருட்டு போலியாக ஒப்புக்கொள்ள முடியாது. அவரை சமாதானம் செய்து, மேற்கொண்டு என்ன செய்கிறார் என தெரிந்துகொள்ள ஆவலிருந்த பல நண்பர்கள், என் ஒப்புதலுக்காக வேண்டினார்கள். ஆனால் நான் பொய்யாக ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டேன். ஆயிரம் இருந்தாலும், இதை என்னால் செய்ய முடியாது’ என்று சொல்லிவிட்டேன்.

இதில் காங்கிரஸுக்கு அனுமதி இல்லை என்றாலும், அதன் முடிவைச் செயல்படுத்த தார்மீக உரிமை இருக்கிறது. நேர்மையான ஜனநாயகம் ஒன்றே அகிம்சையின் வெளிப்பாடாய் இருக்குமென்று காங்கிரஸ் திடமாய் நம்புகிறது. உலக விவகாரங்களில் வன்முறையைப் பிடுங்கி எறிந்து, ஒருங்கிணைந்த உலகக் கூட்டமைப்பை உருவாக்க அகிம்சை ஒன்றே வழி. இது உண்மை என்றால் இந்து முஸ்லிம் விவகாரத்திற்கும் வன்முறையால் தீர்வு கிடையாது.

இந்துக்கள் முசல்மான்களைக் கொடுமைப்படுத்தினால், எந்த முகத்தை வைத்துக்கொண்டு சமத்துவ உலகக் கூட்டமைப்பை உருவாக்குவார்கள்? இந்த ஒரு காரணத்திற்காகத்தான் அமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும் வெல்வதைப்போல அராஜகத்தால் அந்நியப் படையெடுப்பை வெளியே விரட்டுவதில் எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்கிறேன். பாரபட்சமற்ற ஒரு சர்வதேச நீதிமன்றத்திடம் அனைத்து வேறுபாடுகளையும் சமர்ப்பித்து, அதன் முடிவுக்குக் கட்டுப்பட காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.

இத்தனை நியாயமான நடைமுறையையும் ஒப்புக்கொள்ள மறுத்தால், உறைக்குள் இருக்கும் வாளை வீசி வன்முறையைத்தான் கையாள வேண்டும். முடியாத ஒன்றை நான் எப்படி ஒப்புக் கொள்வேன்? உயிரோட்டத்தை காண விழைவது, உயிரைக் கேட்பதற்கு சமமாகாதா? இது போருக்கான குரல்.

இத்தகைய சகோதர யுத்தங்களைக் காங்கிரஸ் ஒருபோதும் விரும்பாது. டாக்டர் மூஞ்சே, திருவாளர் சாவர்க்கர் போன்ற இந்துக்கள் வேண்டுமானால் வாள் வீசி சண்டை செய்வதில் நம்பிக்கை கொண்டவர்களாய் இருக்கலாம். அதன் மூலம் முசல்மான்களை இந்துக்களின் ஆதிக்கத்தின் கீழ் வைக்க அவர்கள் முற்படலாம். நான் அவர்கள் கட்சி அல்ல. அவர்களைப் பிரதிநிதிப்படுத்துவும் அல்ல.

நான் காங்கிரஸின் பிரதிநிதி. தங்க முட்டையிடும் காங்கிரஸ் எனும் வாத்தை நீங்கள் அழிக்கப் பார்க்கிறீர்கள். நீங்கள் காங்கிரஸை நம்பவில்லை என்றால், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நிரந்தரமான சண்டைகள் இருக்கும் என்றும், இந்தத் தேசம் போரினால் ரத்தக் களேபரமாய் காட்சியளிக்கும் என்றும் உறுதியாய் நம்பலாம். அப்படிப்பட்ட போர்தான் உங்களின் இறுதி முடிவாய் இருந்தால், அதை காண நான் உயிரோடு இருக்க மாட்டேன்.

இதை முன்னிறுத்திதான், ‘பாகிஸ்தான் பற்றி உங்கள் அபிப்பிராயம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும், உங்கள் பார்வையில் சரியெனத் தெரிந்தாலும், நீதிக்கும் சமத்துவத்துக்கும் மீறிய எதுவாய் இருந்தாலும் போர்க்களத்தில் வாள்முனையில்தான் வென்றெடுக்க வேண்டும்’ என ஜின்னா சாகேபிடம் சொன்னேன்.

என் மனதிலிருந்து அள்ளிக் கொட்ட வேண்டிய விஷயங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. அதில் தலையாய ஒன்றைத்தான் நான் இப்போது பகிர்ந்தேன். வாழ்வா சாவா என்ற போராட்டம் அது.‌ இந்து முஸ்லிம் ஒற்றுமையில் ஓட்டை விழாமல் ஒருமித்தக் கருத்துணர்வு ஏற்பட வேண்டுமானால், நாமிருவரும் தேசத்தை அச்சுறுத்தும் அயல்நாட்டு ஆதிக்கத்திற்கு எதிராய் ஒன்றுதிரள வேண்டும்.

இந்தியாவின் ஒரு பகுதியாய் இருக்கப்போகும் பாகிஸ்தானுக்கு, இந்தச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொள்ளவதில் எந்தவிதமான ஆட்சேபனை இருக்க முடியும்? ஆகவே இந்துக்களும் முசல்மான்களும் சுதந்திரம் வேண்டி ஒன்றிணைய வேண்டும். போர் நெடுநாட்களுக்கு நீளும் என்று ஜின்னா சாகிப் நினைக்கிறார். நான் அதை விரும்பவில்லை. இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் நீண்டால், சீனாவை நம்மால் எப்படிக் காப்பாற்ற முடியும்?

ஆகவே நான் இப்போதே சுதந்திரம் பெற வேண்டுகிறேன். இந்த நாள், இந்த இரவுப் பொழுதில், விடிவதற்கு முன்பே நாம் சுதந்திரம் அடைய வேண்டும். மக்கள் ஒன்றிணையும் வரை சுதந்திரத்திற்காகக் காத்திருக்க முடியாது. அதற்கு மேற்பட்ட தியாகங்கள் செய்ய நாம் தயாராய் இருக்க வேண்டும். முழு மூச்சுடன் சுதந்திரம் பெற காங்கிரஸ் முயல வேண்டும், இல்லையென்றால் அந்த முயற்சியில் அழிந்துபோக வேண்டும். காங்கிரஸ் பெற விரும்பும் சுதந்திரம் காங்கிரஸாருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாற்பது கோடி இந்தியர்களுக்கும். காங்கிரஸார் இறுதிவரை தேசப்பணியல் தங்களை பணிவாய் ஐக்கியப் படுத்திக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் பேரரசிடம் இருந்து பிரிட்டிஷார் கைப்பற்றிய ஆட்சியை, மீண்டும் அவர்களிடமே பிரிட்டிஷார் ஒப்படைக்க விரும்பினால் தான் அதை முன்வந்து ஏற்பதாக க்யொத் – இ – ஆசாம் சொல்கிறார். எப்படியிருந்தாலும் அது முஸ்லிம் பேரரசாகத்தான் விளங்கும். முஸ்லிம் ராஜ்ஜியம் அமையவோ முஸ்லிம் ஆதிக்கம் அடையவோ நானும் மௌலானா சாகேப்பும் போராடவில்லை. நேர்மையான ஜனநாயக முறையில் முஸ்லிம், இந்து, கிறிஸ்துவர், பார்சி, யூதர் என சகலரும் சந்தோஷமாய் வாழ நாங்கள் விரும்புகிறோம். முஸ்லிம் ராஜ்ஜியம் தவிர்க்க முடியாதது என்றால், நாங்கள் எப்படி அதற்கு ஒப்புதல் தர முடியும்? ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் ஆதிக்கம் செலுத்த நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும்?

இந்த நாட்டில் உள்ள லட்சக்கணக்கான முசல்மான்களுக்கு இந்து மதம்தான் தாய் மதம். அவர்கள் இந்துவாக இருந்து மதம் மாறியவர்கள். பின் எப்படி வேறொரு நாடு அவர்களுக்கு தாய்நாடாக விளங்க முடியும்? சில ஆண்டுகளுக்கு முன் என் மூத்தப் புதல்வன் இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவினான். இப்போது அவன் தாய்நாடு போர்பந்தரா பஞ்சாபா? நான் முசல்மான்களைக் கேட்கிறேன்: ‘இந்தியா உங்கள் தாய்நாடு இல்லை என்றால், வேறு எது உங்கள் தாய்நாடு? இஸ்லாத்திற்கு மாறிய என் புதல்வனை வேறு எந்த நாட்டிற்கு நீங்கள் அனுப்பப் பார்க்கிறீர்கள்?’

இஸ்லாத்திற்கு மாறிய பின்னர், அவனது தாயார் ஒரு கடிதம் எழுதினார். இஸ்லாம் விட்டொழிக்கச் சொன்ன மதுப்பழக்கத்தை விட்டுவிட்டானா என்ற கேள்வி அதன் சாரம். அவனது மதமாற்றத்தில் மகிழ்ச்சி கொண்டிருந்த அவள், ‘அவன் குடிப்பதை போலவே, இஸ்லாத்திற்கு மாறியதையும் நான் பொருட்படுத்தவில்லை. மதம் மாறிய பிறகும் பக்திமானாகிய நீங்கள் அவன் குடிப்பதை சகித்துக் கொள்வீர்களா? குடித்துவிட்டு ரகளை செய்யும் அளவு மோசமாகி விட்டான். நீங்கள் அவனை மனிதனாக மாற்றினால், அதுதான் மதமாற்றத்தின் வெற்றி. ஒரு முசல்மானைப் போல மதுவையும் பெண்ணையும் கைவிடவேண்டும். அந்த மனமாற்றம் ஏற்படவில்லை என்றால் மதமாற்றத்தால் என்ன பயன்? மீண்டும் அவனோடு ஒத்துழையாமை தொடங்கவேண்டும்’ என்று எழுதினாள்.

இங்கு வசிக்கும் எல்லா முசல்மான்களுக்கும் இந்தியா தாய்நாடு என்பதில் எவ்விதச் சந்தேகமும் கிடையாது. ஒவ்வொரு முசல்மானும் இந்திய சுதந்திரத்திற்காகப் போராட வேண்டும். காங்கிரஸ் குறிப்பிட்ட ஒரு சமூகத்தையோ சாதியையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்தியா முழுமையும் காங்கிரஸின் உருவமையாக இருக்கிறது. முசல்மான்கள் தானாக முன்வந்து காங்கிரஸைக் கைப்பற்றலாம். எண்ணிலடங்காத முசல்மான்கள் காங்கிரஸில் இணைந்து அதன் முக்கிய முடிவுகளை மடைமாற்றலாம்.

காங்கிரஸ் இந்துக்களின் சார்பாகப் போராடவில்லை. இந்தியா முழுமைக்கும், அதன் சிறுபான்மையினருக்கும் சேர்த்துப் போராடுகிறது. ஒரு முசல்மானை காங்கிரஸ்காரர் கொன்றுவிட்டார் என்ற செய்தி எனக்கு தீராத ரணத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ்காரர்கள் இனிவரும் புரட்சியில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவார்கள். அவர்கள் செய்யும் தியாகத்தில் இதுவும் ஒன்று.

இந்துவோ முசல்மானோ, இஸ்லாத்திற்கு சேவை செய்ய எல்லோரும் கடமைப்பட்டிருக்கிறார்கள். பரஸ்பர நம்பிக்கைதான் நம்மை தேசிய அளவிலான மாபெரும் போராட்டத்திற்கு வழிநடத்திச் செல்லும். முஸ்லிம் லீக்கும் ஆங்கிலேயர்களும் நம்மை எதிர்க்கும்போது, அளவில்லாத பெரும் தியாகங்களைச் செய்ய நாம் ஆயத்தமாக வேண்டும் என்று முன்னரே சொல்லியிருந்தேன்.

சர் ஃபிரெட்ரிக் பக்கல் வெளியிட்ட ரகசிய சுற்றறிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அது ஒரு தற்கொலை பிரமாணம். காங்கிரஸுக்கு ஆதரவாய் போராட வந்த சின்னச் சின்ன இயக்கங்களைச் சட்டவிரோதமாக செயல்பட அந்த அறிக்கை தூண்டுகிறது. நேர்மையற்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை ஒரு கை பார்க்க வேண்டும். ஆனால் நமது பாதை சீரானது. கண்ணை மூடிக்கொண்டும் பயணிக்கலாம். சத்தியாக்கிரகத்தின் அழகே அதுதான்.

சத்தியாகிரகத்தில் பொய் புரட்டுகளுக்கு இடமில்லை. பொய்யும் வழுவும்தான் இன்று உலகை ஆட்டிப்படைக்கின்றன. இத்தகைய சூழலில் ஆதரவற்ற சாட்சியாய் என்னால் தனித்து நிற்க முடியாது. என்னைப்போல் இந்தியாவில் குறுக்கு வெட்டாய் பயணம் செய்தவர்கள் யாரேனும் உண்டா? குரலற்ற லட்சக்கணக்கான மக்களின் நண்பனாய், பிரதிநிதியாய் என்னை அடையாளப்படுத்துகிறேன்.

வழுவும் வன்முறையும் தாண்டவம் ஆடும் இந்தப் பேரரசை நல்ல முறையில் மீட்டுக்கொணர்ந்து, மக்கள் கண்ணில் ஒளிரும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக வேண்டும். இந்தப் பேரரசு எத்தனைப் பூதாகரமான திட்டங்களைத் தீட்டினாலும் நாம் அவற்றிலிருந்து விடுபடவேண்டும். இத்தனை முக்கியமான கணத்தில் அமைதியாக இருந்து, புதருக்குள் ஒளிந்துகொள்வது முறையானதா? ஜப்பானியர்களைக் கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லட்டுமா?

உலகமே பெருங்கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது, கடவுள் கொடுத்த அரிய பொக்கிஷத்தை நான் பயன்படுத்தாமல் போனால், என்னை அவர் மீண்டும் அழைத்துக்கொள்வார். சூழ்நிலை வேறுமாதிரி இருந்தால் நான் உங்களைக் காத்திருக்கச் சொல்லலாம். ஆனால் இப்போது பொறுக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம். காங்கிரஸுக்கு இதைவிட்டால் வேறு வழி இல்லை.

எப்படியிருந்தாலும் உண்மையான போராட்டம் இந்தக் கணத்தில் தொடங்கப்போவது இல்லை. அனைவரும் உங்கள் சம்மதத்தை என்னிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். நான் இனி வைஸ்ராயிடம் சென்று, காங்கிரஸின் தீர்மானத்தை அவரிடம் சொல்லி ஒப்புதல் வாங்க வேண்டும். இந்த நடைமுறைகள் சுமார் இரண்டு மூன்று வாரங்கள் நீடிக்கலாம். ஆனால் அதற்கு இடைப்பட்ட காலத்தில் என்ன செய்வது? எல்லோரும் பங்கேற்கும்படியான திட்டமொன்றை எப்படி ஒருங்கிணைப்பது?

கைராட்டைதான் என் கண்ணில்படும் முதல் ஆயுதமாய் இருக்கும் என்பதை நீங்கள் எல்லோரும் தெரிந்திருப்பீர்கள். இதைத்தான் நான் மௌலானாவிடம் சொன்னேன். அயல்நாட்டுச் சந்தையில் இதற்கிருக்கும் முக்கியத்துவத்தை பின்னர் அவர் புரிந்துகொண்டார்.

இடைப்பட்ட நாட்களில் ‘பதினான்கு அடுக்கு ஆக்கப்பூர்வ திட்டங்களை’ நீங்கள் மேற்கொள்ளலாம். அதற்கு மேலும் என்ன செய்வது? நான் சொல்கிறேன். இந்தக் கணத்திலிருந்து நீங்கள் எல்லோரும் சுதந்திர மனிதனாக உணரவேண்டும். ஏகாதிபத்திய பூட்ஸுக்குக் கட்டுப்படாதவராய் சுதந்திர மனிதராய் வாழ வேண்டும்.

நான் ஒன்றும் போலியாக வாழ கற்றுத் தரவில்லை. சுதந்திரத்தின் அடிப்படையே இதுதான். தன்னைச் சுதந்திர மனிதனாய் உணரும்போதுதான், அவன் கட்டிவைக்கப்பட்ட அடிமைச் சங்கிலி தகர்த்தெறியப்படுகிறது. பின்னர் தன் எஜமானிடம் சென்று : ‘இந்தக் கணம் முதல் நான் உங்களுக்கு அடிமையாய் இருந்தேன். இனி இல்லை. விருப்பப்பட்டால் என்னைக் கொன்று விடுங்கள். இல்லையென்றால் நீங்களாகவே என்னை அடிமை நிலையிலிருந்து விடுவித்து விடுங்கள். அதற்குமேல் நான் ஒன்றும் கேட்கவில்லை. என்னுடைய உழைப்பினால் நானே உணவும் உடையும் ஏற்பாடு செய்துகொள்ள முடிந்தாலும், நீங்கள் எனக்கு உணவும் உடையும் வழங்கினீர்கள். கடவுளுக்கு மாற்றாய் உங்களையே சார்ந்து வாழ்ந்து வந்தேன். ஆனால் இப்போது கடவுள் என்னை சுதந்திரம் நோக்கி நகர ஆயத்தப்படுத்திவிட்டார். இன்றுமுதல் நான் ஒரு சுதந்திர மனிதன். இனி உங்கள் தயவு எனக்குத் தேவையில்லை’ என்று சொல்வான்.‌

வைஸ்ராயிடம் அமைச்சரவை வேண்டும் என்று பேரம் பேசப் போவதில்லை. நான் இப்போது பூரண சுதந்திரம் கேட்கப்போகிறேன். அவர் ஒருவேளை உப்பு வரியை ஒழிக்கிறேன், மது விலக்கை அமல்படுத்துகிறேன் என்பார். ஆனால் நான், ‘பூரண சுதந்திரத்தைக் காட்டிலும் வேறு எதுவும் வேண்டாம்’ என மறுக்கப் போகிறேன்.

நான் உங்களுக்கு ஒரு சிறிய மந்திரத்தைச் சொல்லித் தருகிறேன். அதை இருதயத்தில் ஊன்றி வைத்து, ஒவ்வொரு மூச்சிலும் வெளிப்படுத்துங்கள். ‘செய் அல்லது செத்து மடி’ என்பதுதான் அந்த மந்திரம். இந்தியாவைச் சுதந்திரமடைய வைக்கும் போராட்டத்தில் வென்று காட்ட வேண்டும் இல்லையென்றால் செத்து மடிய வேண்டும். அதைவிட்டுவிட்டு இந்தியா அடிமைப்படுவதைப் பார்க்க உயிரோடு இருக்கக் கூடாது. காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த பெண்களும் ஆண்களும் இந்தியா அடிமைப்படுவதை காணச் சகிக்காமல் இந்தப் போராட்டத்தில் முழு மூச்சாய் கலந்து கொள்ள வேண்டும். அதுவே உங்கள் கொள்கையாய் இருக்கவேண்டும். சிறைத்தண்டனைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

அரசு என்னை விடுவித்துவிட்டால், அதிக கைதிகளைப் பராமரிக்கும்படி நான் அவர்களுக்குச் சிரமம் தர மாட்டேன். இனி ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் சுதந்திரம் அடையவே பிறப்பெடுத்தாற்போல் அதற்கே அர்பணித்துக் கொண்டு உழைக்க வேண்டும். உண்பதும் வாழ்வதும் அதற்கே என்று இறுதிமூச்சு வரை போராடி, தேவைப்பட்டால் இறக்கவும் தயாராக வேண்டும்.

கடவுள் சாட்சியாய் உங்கள் மனசாட்சிக்கு உட்பட்டு சத்தியம் செய்யுங்கள். உயிர் துறக்க நினைக்கிறவன், வாழ்வில் அர்த்தம் பெறுகிறான். பற்றுகோடாய் வாழ விரும்புபவன், வாழ்வைத் தொலைக்கிறான். சுதந்திரம் கோழைகளுக்கோ பலகீனமாவர்களுக்கோ அல்ல, எதிர்த்துப் போராடுபவர்களுக்கு.

அடுத்ததாக, பத்திரிகையாளர்களுக்குச் சில வார்த்தைகள். தேசிய அளவிலான இந்தப் போராட்டத்திற்கு, இதுகாறும் நீங்கள் அளித்த உதவிக்கு நன்றி. உங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் பற்றி நான் அறிவேன். ஆனால் அதை இப்போது நீங்கள் உதறித் தள்ள வேண்டும். தனி மனிதனைச் சுதந்திரம் நோக்கி அழைத்துச் செல்வதில் பத்திரிகையின் பங்கு இன்றியமையாதது என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்ல முன்மாதிரியாய் நீங்கள் திகழ வேண்டும்.

அரசால் ஒடுக்கமுடியாத பேனாவை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். அரசால் சூறையாடக் கூடிய அச்சுக்கூடம் முதலிய பெரும்பணப் பொருட்களும் உங்களிடம் இருக்கிறது. நான் இதை அறியாமல் இல்லை. இதுகுறித்த பயம் உங்களைத் தொற்றிக் கொண்டிருக்கிறது. தானாகச் சென்று அரசிடம் ஒப்படைக்கச் செல்லி நான் வழிகாட்டவில்லை. எனது அச்சக்கூடம் சூறையாடப்பட்டாலும் பேனா முனைக்கு ஓய்வு கிடையாது.

கடந்தகாலத்தில் எனது அச்சுக்கூடமும் இந்த நிலைக்குப் போய் திரும்பி வந்திருக்கிறது. ஆனால் நான் அந்த அளவுக்கு தியாகம் செய்ய உந்தவில்லை. இந்தியா சுதந்திரம் அடையும் வரை பேனாவுக்கு ஓய்வுதர மாட்டேன் என உறுதியளித்தால் போதும். சர் ஃபிரெட்ரிக் பக்கல் தரும் செய்திக்குறிப்புகளில் உப்பு அளவும் உண்மையில்லை. ஆகவே அதை வெளியிட மாட்டோம் என மறுப்புத் தெரிவிக்க வேண்டும். காங்கிரஸோடுதான் இருக்கிறோம் என மனதார ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வீர்களானால், உண்மையான சண்டை தொடங்கும் முன்னரே சமூகத்தில் பெரும் அளவு மாற்றம் கொண்டுவரலாம்.

இங்கு வந்திருக்கும் மன்னர்களிடம் ஒரு சிறிய விஷயம் கேட்க விரும்புகிறேன். நான் மன்னர்களின் நன்மையைப் பாதுகாப்பவன். எனது தாத்தா தனது சொந்த நாட்டு மன்னரைத் தவிர, வேறு எவருக்கும் தனது வலக்கையால் வணக்கம் செலுத்த மாட்டேன் எனச் சொன்னவர். ஆனால் இதை அவர் தன் எஜமானிடம் சொல்லவில்லை. சொல்லியிருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அத்தகைய எஜமானன் கூட, எனது தாத்தாவின் மனசாட்சிக்கு எதிராய் நடக்கும்படி ஆணையிட முடியாது.

நான் சிற்றரசுகளின் உப்பைத் தின்று வளர்ந்தவன். அதற்கு துரோகம் செய்ய மாட்டேன். நான் உயிர் விடுவதற்குள், ஏதாவது வேலை செய்ய சிற்றரசுகள் தயாராக வேண்டும் என விசுவாசமிக்க வேலைக்காரனாய் சொல்லிக் கொள்கிறேன். அப்படியென்றால்தான் சுதந்திர இந்தியாவில் உங்களுக்கு மரியாதைக்குரிய இடம் கிடைக்கும்.

ஜவாஹர்லால் நேருவின் சுதந்திர இந்தியா திட்டத்தில், விஷேசமான மனிதர்களுக்குச் சிறப்புத் திட்டங்கள் எதுவும் கிடையாது. அனைத்து உடைமைகளும் அரசுக்கு உரியது என நேரு அறிவித்துவிடுவார். திட்டமிட்ட பொருளாதாரத்தை அவர் விரும்புகிறார். இந்தியாவை மறுகட்டமைப்பு செய்ய ஆசைப்படுகிறார். அவர் பறக்க விரும்புகிறார், எனக்கு அதில் ஆசை இல்லை.

நான் கனவு காணும் இந்தியாவில் மன்னர்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் சிறப்பு இடங்கள் உண்டு. பதவி துறந்தாலும் தொடர்ந்து சலுகைகள் பெறலாம். சொத்துப் பண்டங்களைத் துறந்துவிட்டு, அதற்குப் பாதுகாவலராய் பொறுப்பேற்றுக் கொள்ளலாம். மக்கள் கூட்டத்தில் நான் கடவுளைக் காண்கிறேன்.

மன்னர்கள் தங்கள் மக்களிடம் சென்று, ‘இனி நீங்கள்தான் மாகாணத் தலைவர்கள். நாங்கள் உங்கள் அடிமைகள்’ எனச் சொல்ல வேண்டும். மக்களுக்கு அடிமையாய் சேவகம் செய்து, அவர்களால் முடிந்த உதவியை ஆற்றி வரலாம் என நான் மன்னர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.‌ பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கம் மன்னர்களிடம் இருந்து பெறப்பட்டது. ஆனால் மன்னர்கள், தன் சொந்த மக்களிடம் இருந்து அதிகாரத்தைப் பெற ஆசைப்பட வேண்டும். சிறுபிள்ளைத்தனமான இன்ப காரியங்களில் ஈடுபட விரும்பினால், மக்களின் வேலையாளாய் இருந்து அதனைச் செய்ய முற்படலாம்.

மன்னர்கள் ஏழையாய் வாழ்வதை நான் விரும்பவில்லை. நான் ஒன்று கேட்கிறேன். ‘நீங்கள் சதா காலமும் அடிமையாய் இருக்க ஆசைப்படுகிறீர்களா? இல்லை வெள்ளைக்காரர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு, சொந்த மக்களிடம் இறையாண்மை மிக்க ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க விரும்புகிறீர்களா?’

‘மக்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள்.‌ பேரரசே நடுங்கிப் போகும் இந்த மாபெரும் பனிமலையை எதிர்த்து நம்மால் என்ன செய்ய முடியும்? ஒன்று மூழ்க வேண்டும், இல்லையென்றால் அவர்களோடு சேர்ந்து நீந்த வேண்டும்.’ என்னை நம்புங்கள். நான் சொல்வது எந்தவிதத்திலும் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல. மன்னர்களை வற்புறுத்தும்படி இதுவரை எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. மக்களும் தங்களை மன்னராட்சிக்கு உட்பட்ட மாகாணத்தின் அங்கமாய், இந்திய தேசத்தின் அங்கமாய் உணர்கிறார்கள். மன்னராட்சியை ஏற்பதோடு, தேசத்திற்கு இழுக்கு வந்தால் உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். சொன்ன சொல்லிலிருந்து அவர்கள் துளியும் மாறமாட்டார்கள்.

நம்மால் எதையும் மறைத்துச் செய்ய முடியாது. இது ஒரு வெளிப்படையான போராட்டம். இதில் ரகசியம் என்பதே பெரும்பாவம். சுதந்திர மனிதன் ரகசிய இயக்கத்தில் செயல்பட மாட்டான். நீங்கள் சுதந்திரம் அடைந்தால், உங்களுக்கென்று வழிகாட்ட ஒரு சி.ஐ.டி. இருப்பார். ஆனால் இதற்கு நேர்மையாகப் போராடி, எடுத்த முயற்சியில் பின்வாங்காமல் நெஞ்சுக்கு நேராக குண்டடிப்பட்டு சாகத் தயாராக வேண்டும்.

அரசு ஊழியர்களுக்குச் சில விஷயங்கள் சொல்கிறேன். அவர்கள் விரும்பினால் பதவி துறக்காமலேயே எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தலாம். மறைந்த நீதிபதி ரனடே அவர்கள், தனது பதவியை ராஜினாமா செய்யாமாலேயே காங்கிரஸ் சார்பை வெளிப்படுத்தினார். தான் ஒரு நீதிபதியாய் இருந்தாலும் காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொள்வேன் என்றும், அது எந்தவகையிலும் நீதிமன்றத்தில் நீதி தவறிய தீர்ப்பு வழங்க அனுமதிக்காது என்றும் ரனடே ஆங்கிலேயரிடம் சொன்னார். காங்கிரஸ் கூட்டங்களில் சமூகச் சீர்திருத்த மாநாட்டை அவர் ஒருங்கிணைத்தார். சர் ஃபிரெட்ரிக் பக்கல் வெளியிட்ட ரகசிய சுற்றறிக்கைக்கு எதிராக, ரனடே கையாண்ட அதே உத்தியைக் கைப்பற்றுங்கள் என எல்லா அரசு ஊழியர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

என்னால் இப்போது இவ்வளவுதான் சொல்ல முடிகிறது.‌ இனி நான் வைஸ்ராய்க்கு எழுதுகிறேன். அவர் ஒப்புக்கொண்டபின் நான் அதை பொதுவெளியில் உங்கள் பார்வைக்குப் பிரசுரிக்கிறேன். நீங்கள் எல்லோரும் அதைப் படித்துப் பாருங்கள். ‘எங்களுக்கு ரகசிய சுற்றறிக்கைகள் வருகின்றன. நான் என்ன செய்வது?’ என்று ஒரு நீதிபதி என்னிடம் கேட்டார். ‘நான் உங்கள் நிலைமையில் இருந்தால், கண்டுகொள்ளாமல் ஒதுங்கிவிடுவேன்’ என்று சொன்னேன்.

‘நான் உங்கள் ரகசிய அறிக்கையைப் பார்த்தேன். என்ன இருந்தாலும் என் நிலைப்பாடு காங்கிரஸோடு இருக்கிறது. என் வயிற்றுப்பாட்டுக்காக அரசாங்கத்திற்கு உழைத்தாலும், இந்த ரகசிய அறிக்கைகளை நான் பின்பற்றப் போவதில்லை’ என வெளிப்படையாகச் சொல்லுங்கள் என்று சொன்னேன்.

இந்தக் கூட்டத்தில் பட்டாளத்து வீரர்களும் நிறைந்திருக்கிறீர்கள். நான் உங்களை இப்போதே ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள் என சொல்ல மாட்டேன். ‘ஜவாஹர்லால், மௌலானா உட்பட நாங்கள் எல்லோரும் உங்கள் பக்கம் இருக்கிறோம். அரசின் கொடுமைகளால் நாங்கள் சோர்வுற்று இருக்கிறோம்’ எனப் புரிந்து கொள்ளுங்கள்.‌

அரசாங்கத்தை நோக்கி ‘மனதளவில் நாங்கள் காங்கிரஸோடு இருக்கிறோம். நீங்கள் சம்பளம் தரும்வரை எங்கள் பதவியை நாங்கள் ராஜினாமா செய்யப்போவதில்லை. உங்கள் கட்டளைகளை மதிப்போம். ஆனால் சொந்த நாட்டு மக்களை சுடுவதென்றால், எங்களால் முடியாது’ என்று சொல்லுங்கள்.

இதைச் செய்ய நம்பிக்கை அற்றவர்களுக்கு இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை. அவர்கள் தம் இஷ்டப்படி நடக்கட்டும். ஆனால் இதை நீங்கள் செய்ய முனைந்தால், ஒட்டுமொத்த சமூகத்திலும் இதன் விளைவை உணரலாம். அரசு ஒருவேளை குண்டுமழை பொழியலாம். ஆனால் பூமியில் உள்ள எந்த சக்தியாலும் இனி உங்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்க முடியாது.

கொஞ்ச நேரம் போராட்டத்தில் தலையைக் காட்டிவிட்டு, மீண்டும் படிப்பதற்கு சென்றுவிடுவார்கள் என்றால் மாணவர்களை நான் அழைக்கமாட்டேன். இந்தப் போராட்டத்தை மனதிலிறுத்திய காலந்தொட்டே, மாணவர்கள் தங்கள் பேராசிரியரிடம், ‘நாங்கள் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள். நீங்கள் காங்கிரஸ்காரரா இல்லை அரசுப் பிரதிநிதியா? நீங்கள் காங்கிரஸ்காரராய் இருந்தால், பதவியில் இருந்து விலக வேண்டாம். பதவியில் இருந்தே எங்களுக்கு படிப்புச் சொல்லிக்கொடுத்து, சுதந்திரத்திற்கு போராடவும் வழிநடுத்துங்கள்’ என சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

உலகெங்கிலும் நடந்த எல்லாப் போராட்டங்களிலும் மாணவர்களின் பங்கே பெரும்பாண்மையாய் இருந்திருக்கிறது. போராட்டத்திற்கு தயாராகும் அந்தச் சிறிய காலவெளியில், சமூகத்தை மாற்றும் சிறு சிறு பணிகளில் ஈடுபடுங்கள். அடுத்தக் கட்டத்திற்கு ஏற்றபடி களத்தை பண்படுத்துங்கள்.

நான் இன்னும் ஏராளமான விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். மனம் இறுகிப் போய் கிடக்கிறது. ஆனால் ஏற்கெனவே நிறைய நேரத்தை எடுத்துக்கொண்டேன். இன்னும் ஆங்கிலத்தில் சொல்லவேண்டிய விஷயங்கள் கொஞ்சம் இருக்கின்றன.‌ நேரம் தாழ்ந்த வேளையிலும் நான் பேசுவதைப் பொறுமையாய் கவனித்த எல்லோருக்கும் நன்றி கூறுகிறேன்.

இதுதான் உண்மையான வீரர்கள் செய்யும் செயல். கடந்த 22 வருடங்களாக நான் எனது பேனாவையும் பேச்சையும் அடக்கிவைத்துக் கொண்டு ஆற்றலை சேமித்து வருகிறேன். தேவையில்லாமல் ஆற்றல் செலவு செய்பவன் உண்மையான பிரம்மசாரி அல்ல.

ஆனால் ஓர் உன்னதமான பிரம்மச்சாரியாக நான் எனது ஆற்றலை இத்தனை ஆண்டுகளாய் சேமித்து வைத்திருக்கிறேன். என் மனதில் சேகரமானதை பிரித்துக் கொட்டும் நாள் இன்று வாய்த்திருக்கிறது. உங்கள் பொறுமையைச் சோதிக்கும் என்றாலும், நான் இதை செய்தே தீரவேண்டும். இப்படி செய்வதால் எனக்கு வருத்தம் கிடையாது. உங்களிடம் என் செய்தியை சேர்ப்பித்ததன் மூலம், இந்தியா முழுமைக்கும் நான் இதை கொண்டுசேர்த்திருக்கிறேன்.

0

 

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து வருகிறார். மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்டவர். இதுவரை இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளார். வரலாறும் இலக்கியமும் இவருடைய விருப்பத்துக்குரிய துறைகள்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *