ஒரு காலத்தில் ஒரு பிரதேசத்தை சங்கரய்யா என்கிற அரசன் ஆட்சி செய்துவந்தான். அவனுக்குக் கல்விஞானம் குறைவு. கேள்விஞானமும் குறைவு. உலக அனுபவமும் குறைவு. அவனைப் புத்திசாலி என்றும் சொல்லமுடியாது. அசடன் என்று தீர்மானமாகத் தள்ளிவைக்கவும் முடியாது. மந்தபுத்தி கொண்டவன் என்று சொல்லலாம். அவனுடைய அப்பா அரசனாக இருந்தவன் என்பதாலும் அவன் மறைந்த பிறகு ஆட்சி புரிய வேறு ஆண்வாரிசு யாரும் இல்லை என்பதாலும் அரச சபையில் இருந்தவர்கள் அவனுக்குப் பட்டம் சூட்டி அரசனாக்கிவிட்டனர்.
அந்தச் சபையில் முத்தப்பா என்பவர் முக்கிய அமைச்சராக இருந்தார். கல்வி அனுபவமும் உலக அனுபவமும் கொண்டவர். மறைந்துபோன அரசனுக்குப் பிறகு சங்கரய்யாவை அரசனாக்கலாம் என்னும் ஆலோசனையைப் பிற அதிகாரிகளோடு கலந்து பேசி ஒரு முடிவெடுத்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. தொடக்கத்தில் பயிற்சி இல்லாவிட்டாலும் போகப்போக ஆட்சி தொடர்பான விவகாரங்களில் பழகிப்பழகி அவன் பயிற்சி பெற்று தேர்ச்சியடையக்கூடும் என அவர் நம்பியிருந்தார்.
சங்கரய்யா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஏறத்தாழ ஓராண்டு ஓடிவிட்டது. ஆயினும் சங்கரய்யாவால் எந்த விவகாரத்தையும் ஆழ்ந்து கற்க முடியவில்லை. அடிப்படையில் அவனுக்கு எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமே இல்லை. எப்போதும் விளையாட்டுப்பிள்ளை போல குறும்புப்பேச்சுகளிலும் அரட்டைக் கச்சேரிகளிலும் நேரத்தைச் செலவு செய்தான். சபையில் விவாதிக்கப்படுகிற எந்த வழக்கையும் முழுமையாகக் காது கொடுத்துக் கேட்கிற பொறுமையே அவனிடம் இருப்பதில்லை.
நாலைந்து சொற்களைச் சொல்லி முடிப்பதற்குள் ‘போதும் போதும் நிறுத்துங்க. என்கிட்ட வந்து ஏன் எல்லாப் புராணத்தையும் சொல்றீங்க. ஒவ்வொரு துறைக்கும் ஒரு அமைச்சர் இருக்காரு அல்லவா? போய் அவுங்ககிட்ட உங்க பிரச்சினையைச் சொல்லுங்க. அவுங்க அதைத் தீர்த்துவைப்பாங்க. அதுக்குத்தான அவுங்களுக்கு அரண்மனை சம்பளம் கொடுக்குது? போங்க போங்க’ என்று சத்தம் போட்டு அனுப்பிவைக்கத் தொடங்கினான்.
சங்கரய்யாவின் போக்கும் பேச்சும் முத்தப்பாவுக்கு பெருத்த ஏமாற்றமளித்தது. கடைசியில் ஆட்சி நிர்வாகத்தின் பாரத்தை அவரே சுமக்கவேண்டியதாயிற்று.
அரியாசனத்தில் ஒருபோதும் அரைமணி நேரம் கூட சங்கரய்யா முழுமையாக அமர்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்துவிடுவான். எவ்வளவு முக்கியமான விவாதம் நடைபெற்றாலும் அதை அவனால் ஈடுபாட்டோடு கேட்கும் சகிப்புத்தன்மையே கிடையாது. ‘ஐயோ, இது என்ன பேச்சு? மறிச்சி மறிச்சி பேசிட்டே போறீங்க? எனக்கு தலை வலிக்குது. நான் கெளம்பிப் போறேன்’ என்று வேகமாகச் சத்தம் போட்டபடி எழுந்துபோய்விடுவான். வேறு வழியில்லாமல் அந்த வழக்கை, அதனுடன் தொடர்புடைய யாராவது ஓர் அமைச்சரோ அல்லது முத்தப்பாவோ விசாரித்து தக்க முடிவை அறிவிக்கும் சூழல் ஏற்படும்.
அவசரமாக எழுந்துபோன சங்கரய்யா தன் அந்தப்புரத்தில் அவனுக்காகவே காத்திருக்கும் பிற நண்பர்களுடன் சேர்ந்து விளையாடத் தொடங்கிவிடுவான். அல்லது அரட்டைக் கச்சேரியில் இறங்கிவிடுவான். அதனால் அரண்மனையில் வேலை செய்யும் அமைச்சர் முதல் காவல்காரன் வரை அனைவருமே அந்த அரசனை ரகசியமாக ’அசட்டு ராஜா’ என்று அழைத்தனர்.
ஒருநாள் சங்கரய்யா அரியணையில் அமர்ந்திருந்தான். அப்போது ஒரு விவசாயி வந்தார்.
‘என்னப்பா உன் வழக்கு?’ என்று கேட்டான் சங்கரய்யா.
‘என் தொழுவத்துல கட்டி வச்சிருந்த பசுவும் கன்னும் காணாம போயிடுச்சிங்க ஐயா? யாரோ திருடிட்டு போயிட்டாங்க ஐயா. நீங்கதான் எப்படியாது கண்டுபிடிச்சி கொடுக்கணும் ஐயா’ என்று கண்ணீர் விட்டான்.
அதைக் கேட்டு சங்கரய்யாவுக்கு எரிச்சல் வந்துவிட்டது. ‘ஒரு திருடன் தொழுவத்துக்குள்ள பூந்து மாடுகளை ஓட்டிட்டு போற வரைக்கும் நீ என்ன செஞ்சிட்டிருந்த?’ என்று வேகமாகக் கேட்டேன்.
‘நேத்து வயல்காட்டுல வேலை அதிகமா இருந்திச்சி ஐயா. அதனால அசந்து தூங்கிட்டன். காலையில கண்முழிச்சி பார்க்கும்போதுதாங்க மாடும் கன்னும் இல்லைங்கறது தெரிஞ்சிது.’
‘எல்லாத்துக்கும் உன் அஜாக்கிரதைதான் காரணம். கொஞ்சமாச்சிம் பொறுப்பா இருக்கவேணாமா? இப்ப இங்க வந்து மாட்டக் காணோம், கன்னுக்குட்டியக் காணோம்னு சொன்னா, நாங்க என்ன செய்யமுடியும்? போய் நீயே தேடி கண்டுபிடிச்சிக்கோ, போ.’
வேகமாகச் சொல்லிவிட்டு சங்கரய்யா எழுந்துபோய்விட்டான். அவன் போன பிறகு அந்த விவசாயி முத்தப்பாவிடம் மீண்டும் முறையிட்டு அழுதான். அவனுடைய கலங்கிய கண்களைப் பார்த்ததுமே அவன் மீது முத்தப்பாவுக்கு இரக்கம் பிறந்தது.
மாட்டை ஓட்டிச் சென்றவன் திருடனாக இருந்தால், அவன் அதை விற்பதற்கு நிச்சயமாக சந்தைக்கு ஓட்டிவருவான் என்றும் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தால் அவனைப் பிடித்துவிடலாம் என்றும் அந்த விவசாயிக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினார் முத்தப்பா. அடுத்தநாள் முதல் சந்தையில் கண்காணிக்கும் வேலைக்காக இரு காவலர்களை அனுப்பி வைத்தார். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, மாட்டை அடையாளம் காட்டுவதற்குத் தோதாக அவர்களோடு விவசாயியையும் சந்தைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
அந்தத் திட்டத்துக்கு இரண்டே நாட்களில் பயன் கிடைத்தது. மாட்டைத் திருடியவன் மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்கு வந்த சமயத்தில் அங்கேயே நடமாடிக்கொண்டிருந்த விவசாயியை அடையாளம் கண்டுகொண்ட மாடு ஓட்டமாக ஓடிவந்து அவனுக்கு அருகில் நின்று தலையாட்டியது. அந்தத் திருட்டுக்கு வேறு சாட்சியே தேவைப்படவில்லை. மாட்டின் செய்கையே போதுமானதாக இருந்தது. காவலர்கள் அந்தத் திருடனைப் பிடித்து அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
இதேபோல அரசன் காதுகொடுத்துக் கேட்காமல் உதறிவிட்டுச் சென்ற ஏராளமான வழக்குகளை முத்தப்பா பொறுமையோடு விசாரித்து, அவற்றை நல்ல விதமாகத் தீர்த்துவைத்தார். அதனால் பொதுமக்கள் அனைவரும் முத்தப்பாவைப் போற்றிப் புகழ்ந்தனர்.
நாட்கள் செல்லச்செல்ல அரண்மனைக்குள்ளேயே முத்தப்பாவைப் புகழ்பவர்களின் எண்ணிக்கை பெருகியது. சில நேரங்களில் அரசனின் காதுபடவே பலரும் முத்தப்பாவைப் புகழ்ந்தனர்.
‘முத்தப்பா மாதிரி ஒரு மந்திரி இருக்கறதாலதான் இந்த அரசாங்கம் நடக்குது. இல்லைன்னா சூறாவளியில கப்பல் கவுந்துபோறமாதிரி எப்பவோ கவுந்து போயிருக்கும்.’
‘ஏதாவது ஒரு பிரதேசத்து ராஜா படையோடு வந்து இந்தப் பிரதேசத்தையே சூறையாடிட்டு போயிருந்தாலும் போயிருப்பான். முத்தப்பா மாதிரி ஒரு ஆளு இருக்கறதால இன்னும் இந்த பிரதேசத்துமேல ஒருத்தனும் கை வைக்காம இருக்கறானுங்க.’
‘நம்ம பிரதேசத்துக்கு ஒரு வருஷத்துல என்ன வருமானம், என்ன செலவுங்கற விஷயம் கூட இந்த அசட்டு ராஜவுக்குத் தெரியாது. எந்த நேரமும் சோம்பேறி கூட்டத்துக்கு நடுவுல உக்காந்து வெட்டிக்கதை பேசறதுலயே பொழுது போக்கனா, இந்த நாடு எப்படி உருப்படும்? என்னமோ நாம செஞ்ச புண்ணியம், முத்தப்பா மாதிரி ஒரு கண்ணியமான ஆளு நம்ம நாட்டுக்குக் கிடைச்சிருக்காரு. இல்லைன்னா, நம்ம கதை இந்நேரத்துக்குக் கந்தலா போயிருக்கும்.’
அவ்வப்போது இப்படி காதில் விழும் விஷயங்களயெல்லாம் ஆரம்பத்தில் சங்கரய்யா பொருட்படுத்தியதில்லை. என்னமோ சொல்கிறார்கள், சொல்லிக்கொண்டு போகட்டும் என இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவான்.
தன்னைச் சுற்றியிருக்கும் பத்து பதினைந்து நண்பர்களுக்கு நடுவே கதை, பேச்சு, பாட்டு, கிண்டல், கேலி, அரட்டை ஆகியவையே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அவனுக்கு அதுவே பெரிய சொர்க்கம் என்று தோன்றியது. முத்தப்பா போன்றவர்கள் எல்லோரும் தான் கொடுக்கும் சம்பளத்துக்கு வேலை செய்யக் கடமைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் செய்யும் வேலைகள் எல்லாம் அந்தச் சம்பளத்துக்காகத்தான் என்றும் மனசுக்குள் பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தான்.
அரண்மனைக்குள் உலவும் உரையாடல்களுக்கு சங்கரய்யா முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றபோதும் அவனுடைய நண்பர்கள் அந்த உரையாடல்களுக்கு கண்ணும் காதும் மூக்கும் வைத்து பெரிய கதையாக உருவாக்கி, அவன் மனத்தைக் கலைக்க முயற்சி செய்தனர். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதுபோல, மெல்ல மெல்ல சங்கரய்யாவின் மனம் கரைந்தது.
‘ஓ, என்னைவிட அந்தக் கிழவன் பெரிய ஆளா? நான் நெனச்சா, இப்பவே அந்தக் கிழவனை என்னால அரண்மனையைவிட்டு வெளியே அனுப்பிவைக்க முடியும், தெரியுமா?’ என்று ஒருநாள் ரோஷத்தோடு கூச்சலிட்டான். அவன் நெஞ்சில் எரிந்த நெருப்பை அவனுடைய நண்பர்கள் நன்றாகக் கிளறிக்கிளறி கொழுந்துவிட்டு எரியும்படி செய்தனர்.
‘அந்தக் கிழவன் திமிரு அடங்கறமாதிரி ஏதாவது செய்யணும்.’
‘யாரோ ஒருத்தனுக்கு திண்ணையில உக்கார இடம்கொடுத்தா, அடுத்த நாளு அந்த வீட்டுக்கே சொந்தக்காரன் மாதிரி நடந்துக்கனானாம். அந்தக் கதையா இருக்குது நம்ம கிழவன் கதை.’
‘எதுவா இருந்தாலும் முளையில கிள்ளி எறியறதுதான் நல்லது. மரம் மாதிரி வளர விட்ட பிறகு புடுங்கி போடறது கஷ்டம்.’
ஒவ்வொருவரும் எதைஎதையோ பேசிப் பேசி சங்கரய்யாவைத் தூண்டிவிட்டனர். அதையெல்லாம் கேட்கக் கேட்க அவனுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கோபம் தலைக்கேறியது. அன்றைய உரையாடல் முடியும் நேரத்தில் ‘இது எல்லாத்துக்கும் நான் சீக்கிரமாவே ஒரு முடிவு கட்டறன். நாளைக்கு காலையில சபை கூடும்போது என்ன நடக்கப்போவுதுன்னு வேடிக்கை பாருங்க. அந்தக் கிழவனை துண்டைக்காணோம் துணியைக் காணோம்னு இந்த அரண்மனையை விட்டே ஓடவைக்கறேன்’ என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னான்.
‘அப்படியே செய்யுங்க. அப்பதான் இந்த ஊருல அந்த ஆளு பேரு மறையும். உங்க பேரு நிக்கும்’ என்று பாராட்டினர் அவன் நண்பர்கள்.
ஒரு சிலர் தலையைச் சொரிந்தபடி ‘என்ன செய்யப் போறதா உத்தேசம்?’ என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அவசரமாகக் கேட்டனர்.
சங்கரய்யா அவர்களைப் பார்த்து விஷம் தோய்ந்த ஒரு சிரிப்பைச் சிரித்தான். ‘இப்ப சொல்ல மாட்டேன். நாளைக்கு சபைக்கு வந்து பாருங்க. உங்களுக்குத் தானா புரியும்’ என்று சொன்னான். உடனே ‘சரி சரி. அப்படியே ஆகட்டும்’ என்று அனைவரும் ஒரு அசட்டுச் சிரிப்போடு தலையாட்டினர்.
‘எப்படியாவது அந்த ஆளுடைய புராணத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவாங்க. அது போதும். எல்லாரும் உங்கள பத்தி பெருமையா பேசணும். அதுதான் எங்க விருப்பம்’ என்று பக்தி படர்ந்த குரலில் அவர்கள் சொன்னதும் சங்கரய்யாவுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.
‘சரி, அதை விட்டுத் தள்ளுங்க. வேற ஏதாவது கதை சொல்லுங்க’ என்று வழக்கமான அரட்டைக்கச்சேரியைத் தொடங்கினான் சங்கரய்யா. அவன் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக ஒருவன் ஏதோ ஒரு பொய்க்கதையை உண்மையான கதையைப்போல பிரம்மாண்டமாக விவரித்து சொல்லத் தொடங்கினான். அந்தக் கதையின் சுவாரசியத்தில் லயித்து அன்றைய பொழுதைப் போக்கினான் சங்கரய்யா.
அடுத்த நாள் அரண்மனையில் சபை கூடியது. முத்தப்பாவும் பிற அமைச்சர்களும் வந்து அமர்ந்தனர். பிற அதிகாரிகளும் சேவகர்களும் பின்வரிசையில் கூடியிருந்தனர். சங்கரய்யா தன் நண்பர்கள் புடைசூழ சபைக்கு வந்தான். சபையை நெருங்கியதும் நண்பர்கள் ஓரமாக ஒதுங்கி நிற்க, சங்கரய்யா மட்டும் வேகமாக நடந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்தான்.
அன்று மூன்று வழக்குகள் இருந்தன. வந்திருந்தவர்கள் அரசனைப் பார்த்து தன் வழக்கை முன்வைக்கத் தொடங்கியபோது கையை உயர்த்தி அவர்களைத் தடுத்தான் சங்கரய்யா. ‘எதுவா இருந்தாலும் அவருகிட்ட நேரிடையாவே சொல்லுங்க. அவரு ஒரு நல்ல முடிவைச் சொல்வாரு’ என்று முத்தப்பாவின் பக்கம் கையைக் காட்டினான். முத்தப்பா குழப்பத்துடன் சங்கரய்யாவின் முகத்தைப் பார்த்தார். ‘இன்றைக்கு என்ன ஆயிற்று இவருக்கு?’ என்று நினைத்துக் குழம்பினார் அவர். அவன் முகத்தைப் பார்த்து அவரால் எதையும் ஊகித்து அறியமுடியவில்லை. ஆராய்ச்சி செய்ய அது பொருத்தமான நேரமில்லை என்பதால், நேரிடையாகவே வழக்கு தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளத் தொடங்கினார்.
மூன்று விசாரணைகளும் முடிவதற்கு சிறிது நேரம் ஆனது. ஒரு வழக்கு அப்போதே ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த இரு வழக்குகளுக்கும் மேல்விசாரணைக்காக அரண்மனையிலிருந்து இரு அதிகாரிகளை வழக்குகளைக் கொண்டுவந்தவர்களோடு அனுப்பிவைத்தார்.
எல்லா வழக்குகளையும் முடித்துவிட்டு முத்தப்பா தன் இருக்கைக்குத் திரும்பி வந்து உட்கார்ந்தார். அப்போது சங்கரய்யா தொண்டையைச் செருமியபடி ‘எல்லாம் முடிஞ்சதா அமைச்சரே?’ என்று கேட்டான்.
‘முடிஞ்சது அரசே’ என்றார் முத்தப்பா.
‘எல்லா விசாரணையையும் நிதானமா, ரொம்ப கெட்டிக்காரத்தனமா விசாரிச்சி நல்லபடி தீர்த்துவைக்கறவருன்னு உங்களை இந்தப் பிரதேசமே பாராட்டிப் பேசுது. அது எல்லாம் எனக்குத் தெரிஞ்சிதான் இருக்குது. இப்ப நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கப் போறேன். வார்த்தையால இல்லை. சைகையால கேக்கப் போறேன். அதுக்கு நீங்க சரியான பதிலைச் சொல்லணும். சொல்ல முடியுமா?’ என்று கேட்டான்.
அரசனுடைய பேச்சின் தொடக்கமே முத்தப்பாவுக்கு உவப்பாக இல்லை. இது ஏதோ விபரீதமான புள்ளியை நோக்கி நகர்ந்துவிடுமோ என அவர் அஞ்சினார். எதுவாக இருந்தாலும் அமைதி காப்பதுதான் நல்லது என மனத்துக்குள் முடிவெடுத்துக்கொண்டார். அதனால் ‘கேளுங்க ராஜா. எனக்குத் தெரிஞ்ச பதிலைச் சொல்றேன்’ என்றேன்.
‘உங்களுக்குத் தெரிஞ்ச பதில் எனக்கு வேணாம் அமைச்சரே. எனக்குத் தெரிஞ்ச பதிலைச் சொல்லணும். அதுதான் முக்கியம்.’
சொல்லிவிட்டு சங்கரய்யா ஆரவாரத்தோடு சிரித்தான். அவன் சிரிப்பு நீண்ட நேரம் நீடித்தது. அவன் சிரிப்பதைப் பார்த்து சபையில் நிறைந்திருந்த அவனுடைய நண்பர்கள் முகங்களிலும் புன்னகை படர்ந்தது.
‘உங்க கேள்விக்கு உங்களுக்கே பதில் தெரியும்னா என்கிட்ட எதுக்கு அந்தக் கேள்வியைக் கேக்கணும்?’ என்று புரியாமல் கேட்டார் முத்தப்பா.
‘எதிர்க்கேள்வியெல்லாம் வேணாம் அமைச்சரே. என் கேள்விக்கு எனக்குத் தெரிஞ்ச பதிலைச் சொல்லணும். அதுதான் இங்க நிபந்தனை.’
அரசனை ஒரு கணம் மெளனமாக ஏறிட்டுப் பார்த்தார் முத்தப்பா. இத்தனை நாட்கள் இல்லாத வகையில் ஏதோ ஒரு பிசாசு இன்றைக்கு அவன் மனத்தில் குடியேறியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். அந்தப் பிசாசுதான் அவனைப் பிடித்து ஆட்டுகிறது என்பதையும் அது பலி வாங்காமல் அவனைவிட்டுப் போகாது என்பதையும் அவர் புரிந்துகொண்டார். இந்த இக்கட்டைச் சமாளிக்கும் ஆற்றலை இறைவன்தான் தனக்கு வழங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
‘என்ன நிபந்தனை?’ என்று அமைதியான குரலில் கேட்டார் முத்தப்பா.
‘எனக்குத் தெரிஞ்ச பதிலை நீங்க சொல்லணும். ஒருவேளை அந்தப் பதில் உங்களுக்குத் தெரியாம போனாலும் சரி, தப்பா சொன்னாலும் சரி, இந்த அமைச்சர் பதவியில நீங்க நீடிக்கமுடியாது. அதுதான் நிபந்தனை. அந்த நிமிஷமே நீங்க அரண்மனையைவிட்டு வெளியே போயிடணும். சரியா?’
முத்தப்பா அதைக் கேட்டு பேச்செழாமல் உறைந்து நின்றார்.
‘உங்களுக்காக ஒரு சலுகை. என் கேள்விக்கு நீங்களே நேரிடையா பதில் சொன்னாலும் சொல்லலாம். அல்லது பதில் தெரிஞ்ச வேற யாரையாவது அழைச்சி வந்து உங்க சார்பா பதில் சொல்லவும் வைக்கலாம். ஆனா, ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சிக்கணும். பதில் சொல்லப் போறது நீங்களா இருந்தாலும் சரி, அல்லது இன்னொரு ஆளா இருந்தாலும் சரி, பதில் சொல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உண்டு. சரியான பதிலைச் சொன்னா உங்க பதவி நிலைக்கும். நீங்க சேத்துவைச்ச பேரும் பெருமையும் நிலைக்கும். ஒருவேளை தப்பான பதிலைச் சொன்னா, நீங்க அரண்மனையை விட்டு வெளியேற வேண்டியதா இருக்கும். அதை மனசுல வச்சிக்குங்க.’
சங்கரய்யா என்றுமில்லாத வகையில் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான். அவனுடைய செய்கைக்குப் பின்னால் யாரோ ஒருவருடைய தந்திரம் செயல்படுகிறது என்பது முத்தப்பாவுக்குப் புரிந்தது. அதே சமயத்தில் அவனைப் பின்னாலிருந்து இயக்கும் சக்தி யார் என்பதைக் கண்டறிவதைவிட அப்போதைய பிரச்சினையிலிருந்து வெற்றிகரமாக வெளியேறுவது முக்கியம் என்று நினைத்தார் அவர்.
‘யோசிக்கறதுக்கு எனக்கு ஒருநாள் அவகாசம் வேணும். உங்க கேள்வியை நாளைக்கு ஒத்திவச்சிக்க முடியுமா?’ என்று கேட்டார் முத்தப்பா.
அந்த வேண்டுகோளை உடனடியாக ஏற்றுக்கொண்டான் சங்கரய்யா. ‘தாராளமா எடுத்துக்குங்க. நாளைக்கு இதே நேரத்துல இந்த சபைக்கு வந்து சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு இருக்கையைவிட்டு எழுந்து சென்றான். அவனுக்குப் பின்னாலேயே அவனுடைய நண்பர்கள் கூட்டம் ஓட்டமாக ஓடியது. அவர்கள் செல்லும் திசையிலிருந்து சிரிப்புச்சத்தமும் பேச்சுச்சத்தமும் கேட்டபடியே இருந்தன.
அரசன் எழுந்து சென்றதும், சபையில் இருந்த பல அமைச்சர்களும் அதிகாரிகளும் சேவகர்களும் முத்தப்பாவைச் சூழ்ந்துகொண்டனர். அவருக்கு ஆறுதல் சொன்னார்கள் சிலர்.
‘இது என்ன பைத்தியக்காரத்தனமா இருக்குது அமைச்சரே? நீங்க எதுக்கு இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கிட்டீங்க?’ என்று சலிப்புடன் கேட்டனர் சிலர். ‘இந்த மாதிரி அசட்டு ஆசாமிகிட்ட வேலை செய்யறதைவிட, எங்கயாச்சிம் விறகுவெட்டியாவது நாம பொழைக்கலாம்’ என்றார்கள் சிலர். ‘அவருக்கு சொந்தபுத்தியும் கிடையாது. சொல்புத்தியும் கிடையாது. எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி யாருடைய பேச்சையோ கேட்டு ஆடறாரு’ என்று எரிச்சலுடன் சொன்னார்கள் சிலர்.
இரு கைகளையும் உயரே தூக்கி அனைவரையும் அமைதிப்படுத்தினார் முத்தப்பா.
‘நீங்க எல்லோரும் என் மேல இருக்கற நல்லெண்ணத்தால இப்படியெல்லாம் சொல்றீங்கன்னு எனக்குப் புரியுது. ஒரு விஷயம் சொல்றேன். நல்லா கேட்டுக்குங்க. நாங்க இந்த அரண்மனையை விட்டு போகறது ரொம்ப சுலபம். நம்ம அறிவுக்குத் தகுந்த வேலையை வெளியே போய் தேடிக்கமுடியும்ங்கறடும் உண்மைதான். ஆனா நாம இந்த சபையில உக்கார்ந்து வேலை செய்யறது நம்ம நலனுக்காக மட்டும் கிடையாது. இந்த ராஜ்ஜியத்துல இருக்கிற மக்களுடைய நலனுக்காகவும்தான் நாம இங்க இருக்கறோம். நாம இங்கேர்ந்து போயிட்டா அவுங்களுக்கு யாரு நல்லது செய்வாங்க? நல்லா யோசிச்சி பாருங்க. இந்த மாதிரி ஒரு அசட்டு ராஜா நமக்குன்னு வாய்ச்சிருக்கிற சமயத்துல நாம எல்லாரும் இங்க இருக்கறதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்.’
‘அப்ப, இந்த நிபந்தனை?’ என்று ஒருவர் கேட்டார்.
‘இன்னைக்கு ஒருநாள் அவகாசம் இருக்குதே. அதுக்குள்ள ஒரு நல்ல வழி பொறக்கும். கவலைப்படாதீங்க. நான் போய் வரேன்.’
அனைவரிடமிருந்தும் விடைபெற்றுச் சென்றார் முத்தப்பா.
எல்லோருக்கும் தைரியமூட்டும் வகையில் ஒரு வேகத்தில் ஏதோ சொல்லிவிட்டாரே தவிர, அரசனின் கேள்வியை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்பதை நினைத்து அவருக்கு உள்ளூர சற்றே அச்சமாகவே இருந்தது. யோசனையில் மூழ்கியபடியே வீடு வரைக்கும் நடந்தே சென்றார் முத்தப்பா.
முத்தப்பாவின் வாடிய முகத்தைப் பார்த்துவிட்டு ‘என்னப்பா சங்கதி? ஏன் உங்க முகம் இப்படி இருளடைஞ்ச மாதிரி இருக்குது?’ என்று கேட்டாள் அவருடைய மகள் சுப்பக்கா.
‘ஒன்னுமில்லைம்மா, ஏதோ சோர்வா இருக்குது’ என்று மகளுக்குச் சொல்லிவிட்டு கூடத்திலேயே போட்டிருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தார் முத்தப்பா. அருகிலிருந்த கைவிசிறியை எடுத்து தனக்குத்தானே விசிறியபடி யோசனைக்குள் மூழ்கினார்.
மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்டு அப்பாவின் மனத்தை நோகடிக்கக்கூடாது என நினைத்துவிட்டு வேலையைப் பார்க்கச் சென்றாள் சுப்பக்கா.
சாயங்காலம் வரைக்கும் சாய்வுநாற்காலியைவிட்டு தன் அப்பா எழுந்திருக்காமல் யோசனையிலேயே மூழ்கியிருப்பதைப் பார்த்த பிறகு சுப்பக்காவின் மனம் கலங்கத் தொடங்கியது.
‘அப்பா’ என்று அழைத்தாள். அப்போதே அவள் குரல் உடைந்திருந்தது. நாலைந்து முறை அழைத்த பிறகே அந்த அழைப்பை முத்தப்பா உணர்ந்தார். ‘என்னம்மா?’ என்று மகளின் பக்கம் திரும்பினார். மகளின் கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்ததும் அவருக்கும் கலக்கம் ஏற்பட்டது.
‘என்னப்பா விஷயம்? வாயைத் திறந்து சொல்லுங்கப்பா. எந்தப் பிரச்சினையானாலும் மனசைத் திறந்து பேசினாத்தான புரியும்? உள்ளுக்குள்ளயே வச்சி புழுங்கிகிட்டு இருந்தா, தீர்வு கிடைச்சிடுமா?’ என்று கேட்டாள் சுப்பக்கா.
‘சொல்றம்மா, சொல்றேன். உன்கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லப்போறேன்?’ என்று சொல்லிவிட்டு காலையில் சபையில் நடந்த செய்திகளையெல்லாம் விவரித்தார் முத்தப்பா.
‘இதுக்கு போய் இப்படி கவலைப்படலாமாப்பா? எனக்குத் தெரிஞ்ச ஒரு சுலபமான வழியை நான் சொல்றேன். அதும்படி செய்ங்கப்பா’ என்றாள் சுப்பக்கா.
குறிப்பிடும்படியான அளவுக்கு கல்வி ஞானமோ, அனுபவ ஞானம் இல்லாத தன் மகளுக்கு இந்தப் பெரிய பிரச்சினைக்கு எப்படி தீர்வு தெரியும் என்று யோசனையில் மூழ்கினார் முத்தப்பா. ‘என்ன சொல்றம்மா சுப்பக்கா? சுலபமான வழி இருக்குதா? நான் காலையிலிருந்து நினைச்சி நினைச்சி குழம்பனதுதான் மிச்சம். எனக்கு ஒன்னுமே விளங்கலை. நீ என்னமோ சுலபம்னு சொல்ற? எப்படிம்மா சுலபம்? சொல்லும்மா’ என்று மகளிடம் கேட்டார்.
‘நீங்க முதல்ல கவலையை விடுங்கப்பா. நிம்மதியா சாப்ட்டுட்டு தூங்குங்க. நாளைய பொழுது நல்லபடியா விடியும்’ என்றாள் சுப்பக்கா.
‘என்ன வழி? அதைச் சொல்லும்மா. தெரிஞ்சாதான நிம்மதியா தூங்கமுடியும்.’
‘ராஜா என்ன சொன்னார்னு நல்லா யோசிச்சி பாருங்கப்பா. அவரு கேக்கப் போற கேள்விக்கு நீங்க நேரிடையா பதில் சொல்லலாம். அல்லது நீங்க அழைச்சிட்டு போற ஆள் பதில் சொல்லலாம்னு சொன்னாரு இல்லையா?’
‘ஆமாம்’
‘நீங்க பதில் சொல்லாதீங்க. நீங்க பதில் சொல்ல ஆரம்பிச்சாதான் குழப்பிக்குவீங்க. உங்களுக்குப் பதிலா வேற ஒரு ஆளு பதில் சொல்வாருன்னு அவரை அழைச்சிம் போயி அவரு முன்னால நிறுத்துங்க.’
‘முன்னபின்ன ராஜாவையோ சபையையோ பார்க்க பார்க்காத ஒரு ஆளு ராஜா கேக்கிற கேள்விக்கு எப்படிம்மா பதில் சொல்வாரு?’
‘சொல்வாருப்பா. அந்த மாதிரியான ஆளா பார்த்து கூப்ட்டுட்டு போங்க. எல்லாம் சரியா அமையும்.’
‘அது எப்படி? தெளிவா சொல்றதுக்குப் பதிலா குழப்பறியேம்மா?’
‘அப்பா, நான் ஒரு விஷயம் சொல்றேன். நல்லா கேட்டுக்குங்க. கல்வி ஞானம், விஷய ஞானம், அனுபவ ஞானம்னு எல்லா ஞானமும் உங்களுக்கு இருக்கறதால, இந்த உலகத்துல எல்லோருமே அந்த மாதிரி ஞானம் உள்ளவங்கன்னு நீங்க நினைச்சிட்டீங்க. அது ரொம்ப தப்பு. முக்கால் பங்கு ஆளுங்க சாதாரணமான ஆளுங்க. உண்மையச் சொன்னா ராஜா மாதிரி அசடுங்கதான் இங்க அதிகம்.’
‘அதனால…’
‘ஒரு அசடுடைய கேள்வி, உங்களுக்குப் புரியறதைவிட இன்னொரு அசடுக்கு ரொம்ப சுலபமா புரியும். அசட்டுக் கேள்விக்கு அசட்டுப் பதிலை அழகா சொல்ல முடியும். நான் சொல்றத நம்புங்கப்பா.’
‘அப்படியா சொல்ற?’
‘ஆமாம்பா. அதுதான் யதார்த்தம். நீங்க தைரியமா இருங்க.’
‘அப்ப நான் என்ன செய்யணும்னு சொல்ற?’
‘நாளைக்கு காலையில ராஜா மாதிரி ஒரு அசடனைக் கண்டுபுடிச்சி அழைச்சிட்டு போய் ராஜா முன்னால நிறுத்துங்க.’
‘அசடன்னு சொன்னா, யாரை அழைச்சிட்டு போய் நிறுத்தறது? அவன் அசடன்தான்னு எப்படி கண்டுபுடிக்கறது?’
‘இப்ப நீங்களே அசடுமாதிரி யோசிக்கிறீங்க. அந்த மாதிரி யோசிக்கறதை முதல்ல நிறுத்துங்கப்பா.’
சுப்பக்கா வாய்விட்டு சிரித்தாள். முத்தப்பா மெளனமானார். அவர் முகத்தைப் பார்த்தபடியே சுப்பக்கா சில கணங்கள் அமைதியில் மூழ்கியிருந்தாள்.
முத்தப்பா அவள் கண்களையே பார்த்தபடி இருந்தார். நீண்ட நேர மெளனத்துக்குப் பிறகு அவள் கண்களில் ஒரு வெளிச்சம் படர்வதைப் பார்த்தார்.
‘அப்பா, நம்ம ஊரு ஏரிக்கரையில சிவப்பான்னு ஒரு பெரியவர் தினமும் ஆடு மேய்ச்சிட்டிருப்பாரே, நீங்க பார்த்திருக்கீங்களா?’ என்று கேட்டாள் சுப்பக்கா.
திடீரென தொடர்பில்லாத விஷயங்களைப் பேசுவதைப்போல மகள் பேசுவதைப் பார்த்து அவர் ஒரு கணம் குழம்பினார். திகைத்தவராக ‘சுப்பக்கா, நீ என்ன சொல்ற? எனக்கு எதுவும் புரியலையே. நாம பேசிட்டிருக்கிற விஷயம் என்ன, நீ பேசற விஷயம் என்ன?’ என்று கேட்டார்.
‘அப்பா, நான் தெளிவாதான் கேக்கறேன். உங்களுக்கு ஏரிக்கரையில ஆடு மேய்க்கிற சிவப்பாவைத் தெரியுமா, தெரியாதா?’
‘தெரியும்மா. ஒவ்வொரு நாளும் நான் போவும்போது எனக்கு அவரு வணக்கம் சொல்வாரு.’
‘ஆ, அவரேதான். நாளைக்கு சபைக்கு போவும்போது அவரையும் உங்க கூட அழைச்சிகிட்டு போங்க.’
‘அவரு எதுக்கும்மா?’
‘அப்பா, ராஜாவுடைய கேள்விக்கு உங்களுக்கு வேண்டப்பட்ட ஒரு ஆள் பதில் சொன்னாலும் பரவாயில்லைன்னு ராஜாவே சொல்லியிருக்கறதால நம்ம சிவப்பாவை அழைச்சிகிட்டு போய், எனக்குப் பதிலா இவரு பதில் சொல்வாருன்னு நிறுத்துங்க.’
‘என்னம்மா சொல்ற நீ? அவர் எப்படிம்மா ராஜா கேக்கிற கேள்விக்குப் பதில் சொல்வாரு?’
‘அதெல்லாம் அவரு சமாளிப்பாருப்பா. நீங்க நிம்மதியா அழைச்சிகிட்டு போங்க. ஒரு அசடு கேக்கிற கேள்வி இன்னொரு அசடுக்கு ரொம்ப சுலபமா புரியும். நீங்க நிம்மதியா இருங்க.’
சுப்பக்காவின் திட்டம் அப்போதுதான் முத்தப்பாவுக்குத் தெளிவாகப் புரிந்தது. ‘நீ சொல்றதுலாம் சரி. அதும்படி எல்லாம் நல்லபடி நடந்தா சந்தோஷம்தான்’ என்று சிரித்தார். நீண்ட நேரத்துக்குப் பிறகு அப்போதுதான் அவர் முகம் முதன்முதலாக மலர்ந்தது.
‘ஒருவேளை நடக்காம போனாலும் நல்லதுதான்’ என்று சிரித்தாள் சுப்பக்கா.
‘என்னம்மா நீ புதிர் போட்டு பேசற?’
‘புதிர் இல்லைப்பா. உண்மையைத்தான் சொல்றேன். ராஜா நெனச்ச பதிலை சிவப்பா சொல்லாம போனா, என்ன நடக்கும்? உங்களை ஊரைவிட்டு வெளியேத்துவாங்க. அவ்வளவுதான? இந்த ஊரோடு இருக்கற தொப்புள்கொடி உறவு இன்னையோடு முடிவுக்கு வந்துடிச்சின்னு கெளம்பி போயிட்டே இருக்கலாம்.’
‘என்னம்மா, இவ்வளவு சுலபமா சொல்லிட்ட?’
‘ஆமாம்பா. நாலு எழுத்து படிக்கத் தெரிஞ்சவங்களுக்கு உலகத்துல எல்லா ஊரும் நல்ல ஊருதான். ஒரு பறவைக்கு உலகத்துல இருக்கற எல்லா மரங்களின் பழங்களும் சொந்தம்னு நீங்கதானப்பா சொல்லிக் கொடுத்தீங்க. மறந்துட்டீங்களா?’
முத்தப்பா புன்னகைத்தபடி தலையசைத்துக்கொண்டார். ‘எது நடந்தாலும் எல்லாத்துக்கும் தயாரா இருக்கறமாதிரி நீ தைரியமா பேசற. சரி, நானும் தைரியமா இருக்கேன். நடக்கறது நடக்கட்டும். அந்த ஆண்டவன் விட்ட வழி எப்படியோ, அப்படியே நடக்கட்டும்.’
இப்படியே இருவரும் நீண்ட நேரம் உரையாடியபடி பொழுதுபோக்கிவிட்டு, இரவு உணவை முடித்துக்கொண்டு உறங்குவதற்குச் சென்றுவிட்டனர்.
அடுத்த நாள் காலையில் எழுந்த போது முத்தப்பாவின் மனம் உற்சாகமாக இருந்தது. நேற்று அரண்மனையிலிருந்து திரும்பியபோது இருந்த சோர்வு முற்றிலுமாக மறைந்துவிட்டது. குளியல், பூசை, உணவு எல்லாவற்றையும் முடித்துவிட்டு சுப்பக்காவிடம் விடைபெற்றுக்கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டார்.
‘சொன்னது ஞாபகம் இருக்கட்டும்பா. போறபோது ஏரிக்கரை வழியா போங்க. சிவப்பாவை கையோடு கூப்பிட்டுகிட்டு போங்க.’
சுப்பக்கா நினைவுபடுத்தினாள். முத்தப்பா சிரித்துக்கொண்டார். ‘நீ சொன்னது எல்லாமே ஞாபகம் இருக்குதும்மா. அதும்படியே செய்யறேன்’ என்று மனத்துக்குள் ஏதோ ஒரு சுலோகத்தின் வரியை முணுமுணுத்தபடி நடந்து சென்றார்.
ஏரிக்கரையில் அரசமரத்தடியில் சிவப்பா உட்கார்ந்தபடி வெற்றிலையை மென்றுகொண்டிருந்தார். அவரைச் சுற்றி பச்சைப்பசேலென அடர்த்தியாக வளர்ந்திருந்த புல்வெளியில் ஆடுகள் மேய்ந்தபடி இருந்தன. அங்கிருந்து கூப்பிடு தொலைவில் அவருடைய குடிசை இருந்தது.
ஏரிக்கரையை நெருங்கியதும் கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் வகையில் பசுமை சூழ்ந்த அந்தப் பிரதேசத்தை ஒருமுறை நிதானமாகச் சுற்றிப் பார்த்தார். அதற்குள் அரசமரத்தடியில் உட்கார்ந்திருந்த சிவப்பா அவரைப் பார்த்துவிட்டு ‘வணக்கங்க ஐயா, வணக்கம். இவ்ளோ தூரம் வந்திருக்கீங்களே, என்ன ஐயா விசேஷம்?’ என்று கேட்டபடி நெருங்கி வந்தார்.
முத்தப்பா அவரைப் பார்த்து புன்னகைத்தபடி வணக்கம் சொன்னார். பிறகு அவருடைய நலத்தையும் அவருடைய குடும்பத்தினரின் நலத்தையும் ஆடுகளின் நலத்தையும் விசாரித்துத் தெரிந்துகொண்டார். பிறகு மெதுவாக ‘உன்னைத்தான் தேடி வந்தேன் சிவப்பா, நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்றார்.
‘என்ன செய்யணும் சொல்லுங்கய்யா, உடனே செய்யறேன்.’
‘ஒன்னுமில்லை. இன்னைக்கு ஒரு நாள் என் கூட நீ அரண்மனைக்கு வரணும்.’
‘அரண்மனைக்கா? நானா? என்னய்யா சொல்றீங்க நீங்க?’ என்று புரியாமல் குழம்பினான்.
‘பயப்படவேணாம். பெரிய பிரச்சினை எதுவும் கிடையாது’ என்று தொடங்கி முதல்நாள் தனக்கும் ராஜாவுக்கும் நடைபெற்ற உரையாடலைப்பற்றியும் அவன் விதித்த நிபந்தனையைப் பற்றியும் சிவப்பாவுக்குப் புரியும்படி எளிமையாக விளக்கினார்.
‘படிப்பறிவு இல்லாத ஆளு நான். ராஜா கேக்கற கேள்விக்கு என்னால என்ன பதில் சொல்லமுடியும் ஐயா?’ என்று அச்சத்தை வெளிப்படுத்தினான் சிவப்பா.
‘பயப்படாத சிவப்பா. அவர் உன்கிட்ட ஒரு வார்த்தை கூட வாயைத் திறந்து பேசப் போறதில்லை. சைகையாலதான் என்னமோ கேக்கப் போறாரு. நீயும் வாயைத் திறந்து எந்தப் பதிலையும் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. நீயும் உனக்குத் தெரிஞ்ச பதிலை சைகையாலயே சொல்லு. அதோடு நாம திரும்பி வந்துடலாம்’ என்று சிவப்பாவை ஆசுவாசப்படுத்தினார் முத்தப்பா.
சிவப்பா சில கணங்கள் யோசனையில் மூழ்கினான். ‘நிச்சயமா அவ்ளோதான? அதுக்குப் பிறகு ஒன்னும் கேக்கமாட்டாரு இல்லையா?’ என்று தயக்கத்தோடு கேட்டான்.
‘நிச்சயமா கேக்கமாட்டாரு. அது உறுதி’ என்றார் முத்தப்பா.
அதைக் கேட்டதும் சிவப்பாவின் முகம் மலர்ந்தது. ‘அப்ப நான் தயார் ஐயா. வாங்க போவலாம்’ என்று புறப்பட்டார். ‘துணி எதுவும் மாத்திக்கவேணாமா?’ என்று கேட்டார் முத்தப்பா. ‘அதெல்லாம் இருக்கப்பட்டவங்க செய்யற வேலை. என்னை மாதிரி இல்லாதப்பட்டவங்க புதுத்துணிக்கு எங்க போவாங்க?’ என்று பதில் சொன்னபடி, பக்கத்திலேயே இருந்த குடிசையை நோக்கி ‘த, புள்ள’ என்று வேகமாகக் குரல் கொடுத்தான். சில கணங்களிலேயே சிவப்பாவின் மனைவி குடிசையிலிருந்து வெளிப்பட்டாள். ‘ஆடுங்க மேல கொஞ்சம் கண்ணு இருக்கட்டும் புள்ள. கொஞ்ச நேரம் ஐயா கூட அரண்மனைக்கு போயிட்டு வரேன்’ என்று அவளிடம் சத்தமாகச் சொல்லிவிட்டு முத்தப்பாவோடு புறப்பட்டான்.
முத்தப்பாவும் சிவப்பாவும் அரண்மனைக்குச் சென்று சபையில் காத்திருந்தனர். சிவப்பாவுக்கு அரண்மனையில் எல்லாமே புதுமையானதாகவும் அதிசயமானதாகவும் இருந்தது. நின்று நின்று சுற்றிப் பார்த்தபடி நடந்தான். அவனுக்கு ஒரே சமயத்தில் திகைப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
முத்தப்பாவுக்கும் அரசனுக்கும் நிகழவிருக்கிற கேள்வி பதில்களைக் கேட்கும் ஆவலோடு சபையில் பலர் கூடியிருந்தனர். எல்லா நேரங்களிலும் அரசனைச் சுற்றி வம்பு பேசி அரட்டையடித்தபடி பேசியலையும் இளைஞர்கள் கூட்டம் சபையில் நிறைந்திருந்தது. அமைச்சர் முத்தப்பாவின் ஆட்டம் அன்றோடு ஒரு முடிவுக்கு வரப் போகிறது என நினைத்து ஆழ்மனத்தில் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள் அவர்கள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அரசன் சபைக்கு வந்தான். நடுநாயகமாக நின்று எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தான். அவன் அமர்ந்த பிறகு அனைவரும் அமர்ந்தனர்.
‘என்ன அமைச்சரே ஆரம்பிக்கலாமா?’ என்று கேட்டான் சங்கரய்யா.
‘தாராளமா ஆரம்பிக்கலாம். நீங்க கேக்கற கேள்விக்கு எனக்குப் பதிலா இந்த சிவப்பா பதில் சொல்வான்’ என்று சிவப்பாவை அரசனுக்கு அறிமுகப்படுத்தினார். சிவப்பா எழுந்து நின்று கைகுவித்து வணங்கினான்.
‘சரி’ என்றபடி சிவப்பாவையே சில கணங்கள் உற்றுப் பார்த்தான் சங்கரய்யா. அவன் கேட்கப் போகும் கேள்வியை எதிர்பார்த்தபடி சிவப்பாவும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
சங்கரய்யா மெளனமாக தன் வலது கையின் ஒரு விரலை உயர்த்திக் காட்டினான்.
அதைப் பார்த்ததுமே சிவப்பா எல்லோருடைய பார்வையிலும் விழும்படி தன் வலது கையை உயர்த்தி இரு விரல்களை விரித்துக் காட்டினான்.
அடுத்து சங்கரய்யா வலது கையை தன் முகத்துக்கு எதிரில் கொண்டுவந்து ஆட்காட்டி விரலை நீட்டி ஒரு வட்டமாக ஒரு சுற்று சுற்றிக் காட்டி நிறுத்தினான்.
அதைப் பார்த்ததுமே சிவப்பா தன் வலது கையை சங்கரய்யா செய்ததைப்போலவே தன் முகத்துக்கு எதிரில் கொண்டுவந்து விரல்களையெல்லாம் மூடிக் குவித்து இருபுறங்களிலும் வளைத்து வளைத்து இருமுறை அசைத்துக் காட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
முத்தப்பாவுக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. வேகமாக வெளியேறும் சிவப்பாவை அவரால் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. ஆயினும் தன் குழப்பத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமைதியாக நின்றிருந்தார். அதே சமயத்தில் எந்த விதமான ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கும் சங்கரய்யாவின் கோலமும் அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. அங்கு நிலவிய அமைதியைக் கொண்டு அவரால் எதையும் புரிந்துகொள்ளமுடியவில்லை.
சில கணங்களுக்குப் பிறகு தொண்டையைச் செருமியபடி சங்கரய்யாவைப் பார்த்து ‘உங்க கேள்விகளுக்கு நீங்க நினைச்ச பதில்களை சிவப்பா சரியா சொன்னானா?’ என்று உரையாடலைத் தொடங்கினார்.
சங்கரய்யா வழக்கத்தைவிட பணிவான குரலில் ‘ஆமாம். என் மனசுல இருந்ததை அப்படியே சொல்லிட்டாரு உங்க ஆளு’ என்றான்.
முத்தப்பாவுக்கு அந்தப் பதில் ஒருபக்கம் ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் அவர்களுக்கிடையே மெளனமாக நிகழ்ந்த உரையாடலின் பொருளைப் புரிந்துகொள்ள முடியாமல் குழப்பமாகவும் இருந்தது. அதை வெளிப்படையாகக் கேட்கவும் அவருக்குத் தயக்கமாக இருந்தது. அதனால் ‘நீங்க கேட்ட கேள்வி என்ன, சிவப்பா சொன்ன பதில் என்னன்னு இந்த சபையில இருக்கறவங்க எல்லாருக்கும் புரியறமாதிரி நீங்களே சொன்னா நல்லாயிருக்கும்’ என்று சங்கரய்யாவிடம் கேட்டுக்கொண்டார்.
‘உலகத்துல ஒரே ஒரு கடவுள்தான் இருக்கறாங்கன்னு சொல்றாங்களே, அது உண்மையான்னு நான் ஒரு விரலைக் காட்டிக் கேட்டேன். அதுக்கு அந்த சிவப்பா ஒரு கடவுள் கிடையாது, சூரியன், சந்திரன்னு ரெண்டு கடவுள் இருக்காங்கன்னு சொன்னாரு. அதுக்கு அடையாளமாத்தான் ரெண்டு விரலைக் காட்டினாரு’ என்றான் சங்கரய்யா.
அந்த விளக்கத்தைக் கேட்க முத்தப்பாவுக்கு சுவாரசியமாக இருந்தது. ஆர்வத்தோடு ‘அப்புறம்?’ என்று கேட்டார்.
‘நான் கையைச் சுத்தி ஆகாயத்தைக் காட்டி அதைப்பத்தி என்ன நினைக்கறேன்னு கேட்டேன். அதுக்கெல்லாம் பெரிசா எந்த முக்கியத்துவமும் கிடையாதுன்னு கையை உதறிக் காட்டி புரியவச்சிட்டாரு’ என்று மலர்ந்த முகத்துடன் சொன்னான்.
அச்சூழலில் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று புரியாமல் அமைதியாக அவனையே பார்த்தபடி நின்றார் முத்தப்பா.
‘நான் கேட்ட ரெண்டு கேள்விக்கும் என் மனசுல நான் நெனச்சிவச்சிருந்த பதிலையே அவரு சொல்லிட்டாரு. எனக்கு ரொம்ப திருப்தி. நீங்க அழச்சிட்டு வந்த ஆளே இந்த அளவுக்குப் புத்திசாலியா இருந்தா, நீங்க எவ்வளவு பெரிய புத்திசாலியா இருப்பீங்கன்னு எனக்குப் புரிஞ்சிட்டுது. என் கூட அரட்டை அடிக்கிற பசங்களுடைய பேச்சக் கேட்டு தேவையில்லாம நான் உங்களுக்குத் தொந்தரவு கொடுத்திட்டேன். நீங்க அதையெல்லாம் பெரிசா நினைச்சிக்க வேணாம். வழக்கம்போல நீங்க உங்க வேலையை இந்த அரண்மனையில தொடர்ந்து செய்யலாம். உங்களை நம்பி இந்த அரண்மனை வேலையை ஒப்படைக்கிறதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. இனிமேல உங்க வழியிலயோ, விசாரணையிலயோ நான் எப்பவும் குறுக்குல வரமாட்டேன்.’
எழுந்து நின்று முத்தப்பாவைப் பார்த்து வணங்கிவிட்டு சபையைவிட்டு வேகமாக வெளியேறினான். உடனே அவனைச் சுற்றியிருந்த அரட்டைக்காரர்கள் கூட்டமும் அவனோடு வெளியேறியது.
அதைத் தொடர்ந்து வழக்கம்போல சபை தொடர்ந்தது. கணக்குவழக்குகள் விசாரிக்கப்பட்டன. புகார் கொடுக்க வந்தவர்களின் குறைகளும் விசாரிக்கப்பட்டன.
மாலை வேளையில் தன் வீட்டுக்குத் திரும்பும் வழியில் முத்தப்பா ஏரிக்கரைக்குச் சென்று சிவப்பாவைச் சந்தித்தார். அப்போதும் சிவப்பா அதே அரசமரத்தடியில் உட்கார்ந்திருந்தார். ‘என்ன சிவப்பா, சொல்லாம கொள்ளாம வேகமா சபையைவிட்டு கெளம்பிவந்துட்ட?’ என்று அவரிடம் உரையாடலைத் தொடங்கினார் முத்தப்பா.
‘ராஜா கேட்ட கேள்விகளுக்கு எனக்குத் தெரிஞ்ச பதிலைச் சொல்லி முடிச்சாச்சி. அதுக்கு மேல பேசறதுக்கு என்ன இருக்குது ஐயா? இங்க இருந்தாலும் ஆடு மேய்ப்பேன். அங்க நின்னு என்ன வேலை செய்யறது சொல்லுங்க?’ என்று இயல்பாகச் சொன்னான் சிவப்பா.
‘அது சரி சிவப்பா. ராஜா உங்கிட்ட என்ன கேள்வி கேட்டாரு? நீ என்ன பதில் சொன்ன? எனக்கு ஒன்னும் புரியலையே, கொஞ்சம் விளக்கமா சொல்லு’ என்றார் முத்தப்பா.
‘எனக்குப் பதிலா இந்த சிவப்பா பதில் சொல்வான்னு நீங்க சொல்லிட்டு உக்காந்துட்டிங்க. ராஜா என்ன கேக்கப் போறாரோன்னு நானும் ஒரு குறுகுறுப்போடு நின்னுட்டிருந்தேன். திடீர்னு அவரு ஒரு விரலைக் காட்டி ம், என்ன சொல்றேங்கற மாதிரி என்னை விறைப்பா பார்த்தாரு. அதைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆடு வேணும், கொடுக்கறியான்னு கேக்கறாருபோலன்னு நான் புரிஞ்சிகிட்டேன். ஒரு ஆட்டுக்காரன்கிட்ட ஆட்டைத் தவிர கொடுக்கறதுக்கு வேற என்ன இருக்குது? ஒரு ஆடு என்ன, ஒரு ராஜா கேக்கறதால ரெண்டு ஆடாவே தரேன்னு நான் ரெண்டு விரலை பதிலுக்குக் காட்டினேன். அதோடு அவரு சந்தோஷப்பட்டு அனுப்பிவைப்பாருன்னு நான் நெனச்சேன். ஆனா அவரு கையாலயே ஒரு வட்டம் போட்டு உன்கிட்ட இருக்கற மொத்த ஆடுங்களையும் எனக்குக் கொடுக்கறியான்னு கேட்டுட்டாரு. அதைப் பார்த்ததும் எனக்கு ஒரே கோவம் வந்திடுச்சி. உனக்கு ரெண்டு ஆடும் கிடையாது, ஒரு ஆடும் கிடையாது, போ போன்னு கையை உதறிக் காட்டிட்டு வந்துட்டேன். நீங்க ஒரு பெரிய மனுஷன்தான? இந்த நாட்டுக்கு மந்திரிதான? நீங்களே சொல்லுங்க, நான் செஞ்சது சரியா, தப்பா?’ என்று கேட்டான்.
முத்தப்பாவுக்கு உள்ளூர சிரிப்பு பொங்கியது. ஆனாலும் அதை வெளிப்படுத்தாமல் சிவப்பாவைப் பார்த்து ‘சரி, ரொம்ப சரி சிவப்பா. நீ செஞ்சதுதான் சரி’ என்றார்.
‘அந்த ராஜா என்கிட்ட அப்படி கேக்கலாமா? அது தப்புதான?’
‘ஆமாம். தப்புதான். பெரிய தப்பு.’
‘யாரா இருந்தாலும் அப்படியெல்லாம் மனசுக்கு வந்தமாதிரி கேக்கக்கூடாதுன்னு அவருகிட்ட ஒரு வார்த்தை சொல்லி வையுங்க.’
‘சரி சிவப்பா. நிச்சயமா சொல்லிவைக்கறேன்’
உரையாடலை முடித்துக்கொண்டு சிவப்பாவிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார் முத்தப்பா. ‘ஓர் அசடனுடைய அசட்டுக் கேள்விக்கு இன்னொரு அசடனாலதான் பொருத்தமான பதிலைச் சொல்ல முடியும்’ என்று சொன்ன சுப்பக்காவின் புத்திசாலித்தனத்தை நினைத்துக்கொண்டபோது, அவரை அறியாமலேயே அவர் முகத்தில் புன்னகை படர்ந்தது.
(தொடரும்)